Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

    • அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது வண்டிக்காரனுக்கு அடிக்கடி கள் குடிக்கக் காசு கொடுத்து, அவனுடைய அந்தரங்கமான பிரியத்தை சம்பாதித்துக் கொண்டமையால், அவன் திவானுடைய வண்டியை ஏதோ ஒரு முகாந்திரத்தைச் சொல்லி, புதிய புதிய வீதிகளின் வழியாகவும் கடைத்தெருவின் வழியாகவும் ஒட்டிக் கொண்டு செல்லத் தொடங்கினான். நமது சமயற்காரன் தினம் தினம் புதிய புதிய மனிதரைக் கண்டுபிடித்து எராளமான தொகையை வசூலிக்கத் தொடங்கினான். அவ்வாறு பணத்தொகைகள் எளிதில் சேரச்சேர, அவனுடைய மூளை அபாரமான யூகங்களையும் தந்திரங் களையும் செய்யத் தொடங்கியது. அவனுக்குப் புதிய புதிய யோசனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவன் அந்த ஊர் அரண்மனைக்குள் சேவகர்களோடு சேவகனாய் நுழைந்து பழைய இரும்பு ச்ாமான்கள் கிடந்த ஒர் அறைக்குள் புகுந்து தேடிப் பார்த்து, துருப்பிடித்த பழைய காலத்து இரும்பு முத்திரை ஒன்று கிடந்ததைக் கண்டு, அதை எடுத்துக்கொண்டு வந்து அதற்கு எண்ணெய் போட்டுத் தேய்த்துப் பார்க்க, அதில் திவான் லொட படசிங் பகதூர் என்ற எழுத்துகள் காணப்பட்டன. அது அந்த சமஸ்தானத்தில் அதற்கு முன்னிருந்த ஒரு திவானினது முத்திரை என்று உணர்ந்து, அதைப் பளிச்சென்று சுத்திசெய்து அதற்கு ஒரு மரப்பிடி போட்டு எடுத்துக் கொண்டான். அதன் பிறகு அவனுக்கு இன்னொரு யோசனை தோன்றியது. தான் நேரில் ஒவ்வொரு மனிதரிடமும் போய்ப் பணம் வசூலிப்பது அபாயகரமான காரிய மாதலால், அப்படிச் செய்யாமல், அதற்கென்று பல குமாஸ்தாக்களை நியமித்து, அவர்களைக் கொண்டு ஒவ்வொருவரிடமும் சாசுவதமாகப் பண வசூல் செய்ய வேண்டு மென்றும், அப்படிச் செய்தால், தான் அதில் சம்பந்தப்பட்டிருப்பது திவான் முதலி யோருக்குத் தெரியாமலிருக்கும் என்றும், எவரும் விடுபட்டுப் போகாமல் எல்லோரிடத்திலும் பண வசூல் ஆகுமென்றும் அவன் நினைத்து, அதற்கிணங்க, பல குமாஸ்தாக்களை நியமித்து, ஒவ்வொர் இலாகாவுக்கு இரண்டு மூன்று குமாஸ்தாக்களாகஅமர்த்தி திவான் லொடபட சிங் பகதூர் முத்திரைபோட்ட இரசீதுப் புஸ்தகங்களை இலட்சக்கணக்கில் தயாரித்து அவர்களிடம் கொடுத்து ஒவ்வொருவரிடமும் பண வசூல் ஒழுங்காக நடத்தும் படி திட்டம் செய்தான். அந்த நகரத்திலிருந்த ஜனங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், இலை முதலிய சகலமான வஸ்துக்களும் வெளியூர்களிலிருந்தே அவ்விடத்திற்கு வர வேண்டும். ஆதலால், அவ்வாறு சாமான்கள் கொண்டுவரும் ஒவ் வொரு வண்டிக்கும், ஒவ்வொரு தலைக் கூடைக்கும், ஒவ்வொரு மாட்டுப் பொதிக்கும் இவ்வளவு வரிஎன்று விதித்துத் தமது குமாஸ்தாக்களைக் கொண்டு வசூலிக்க ஆரம்பித்தான். அதுவு மன்றி, அந்த ஊரிலுள்ள சகலமான உத்தியோகஸ்தர்களுக்கும் வருமான வரியும், தச்சர், கொல்லர், தட்டார், குயவர் முதலிய தொழிலாளிகளுக்கு எல்லாம் தொழில் வரியும், நிலம் வைத்திருப் பவர்களுக்கு திவான் சாயப் வரி என்ற புதுவரி ஒன்றும் ஏற்படுத்தி, அவைகளை எல்லாம் தினம் தினம் ஒழுங்காகத் தனது குமாஸ்தாக்கள் வசூலித்துக் கணக்கு வைக்கும்படி ஏற்பாடு செய்தான். அந்த ஊரிலுள்ள ஜனங்கள் எல்லோரும் புதிய திவான் நிரம்பவும் கண்டிப்பான மனிதர் என்றும் பரம துஷ்டரென்றும் நினைத்து அவரைப்பற்றிக் கனவிலும் அஞ்சி நடுநடுங்கி இருந்தவர்களாதலால், அவரே அத்தகைய புதிய வரிகளை ஏற்படுத்தி இருக்கின்றாரென்று நினைத்து அதைப்பற்றி எவ்வித ஆட்சேபனையும் கூறாமல் கொடுத்து வந்தார்கள். நமது சமயற்காரனை நாம் இனி திவான் லொடபட சிங் பகதூர் என்று குறிப்போம். அவருக்கு ஆயிரக் கணக்கிலும் இலக்ஷக்கணக்கிலும் பொருள் குவியத் தொடங்கியதானாலும், அவர் தமது சேவக ஆடைகளை விலக்காமலும், திவானினது வண்டிக் கதவைத் திறந்து மூடும் உத்தியோகத்தை விடாமலும் வெளிப் பார்வைக்கு ஒன்றையும் அறியாத பரம ஸாது போலவே இருந்து, உள்ளுற மகா மகா ஆச்சரியகரமான பெரும் பெரும் காரியங்களையும் ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்து எல்லோரையும் ஏமாற்றி வந்தார். அதுவுமன்றி அவர் இன்னொரு முக்கியமான ஏற்பாட்டையும் செய்யத் தொடங்கினார். திவானுக்கும் மகாராஜனுக்கும் அனுப்பப்படும் தபால்கள், மனுக்கள் முதலிய சகலமான கடிதங்களையும், அவர் முதலில்வாங்கி அதில் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை குத்தி உள்ளே அனுப்பத் தொடங்கினார். அதனை முதன் முதலில் பார்த்த திவான், அது யாரால் வைக்கப்பட்டதென்று தமது குமாஸ்தாவிடம் கேட்க, மகாராஜனால் நியமிக்கப்பட்ட ஒரு சேவகன் வாசலில் இருந்து அவ்வாறு முத்திரை போட்டு அனுப்புகிறானென்று கூற, அதைக் கேட்ட திவான், அது அரசனது கட்டளையாயிருக்க வேண்டுமென்றும், ஏதோ முக்கியமான கருத்தை வைத்துக் கொண்டு அவர் அப்படி உத்தரவு செய்திருக்க வேண்டுமென்றும் யூகித்துக்கொண்டு அந்த முத்திரையை பெறாமல் தன்னிடம் யாரும் எந்தக் காகிதத்தையும் கொண்டுவரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். அது போலவே, அரசனும், தன்னிடம் வரும் தபால்களில் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை இருந்ததைக் கண்டு, அது திவானினது உத்தரவினால் வைக்கப் படுகிறதென்றும், அவர் தமது இராஜாங்க நிர்வாகத்தை நிரம்பவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கிறவர் என்றும் நினைத்து அந்த முத்திரை இல்லாத காகிதம் எதுவும் தன்னிடம் வரக்கூடாது என்று ஆக்ஞை செய்தார். ஆகவே, அரசனிடமும், திவானிடமும் ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கில் சென்ற விண்ணப்பங் களும், மற்ற காகிதங்களும் திவான் லொடபட சிங் பகதூர் முத்திரை பெறுவதற்காக அவரது சுமுகத்தை எதிர்பார்க்கத் தொடங்கவே, தாம் வைக்கும் ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு காசு வரி என்று அவர் ஏற்படுத்தி, அதனால் ஒவ்வொரு நாளும் பொருள் திரட்ட ஆரம்பித்தார். பூலோக விந்தையென்ற அந்த ஊரிலுள்ள எல்லா மனிதரும் ஒருவர் பாக்கியில்லாமல் தமக்குப் பணம் செலுத்தும்படி தாம் செய்ய வேண்டுமென்பது அவரது கருத்தாதலாலும், தாம் அதுவரையில் செய்த ஏற்பாடுகளில் பலர் வரி கொடாமல் தப்பித்துக் கொண்டனராதலாலும், அவர் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த ஊரில் புதிதாகக் குழந்தை பிறந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வளவு வரி கொடுப்பது என்ற ஒரு புதிய உத்தரவு பிறப்பித்தார். அதை நிறைவேற்றி வைக்க ஏராளமான குமாஸ்தாக்களைக் கொண்ட ஒரு பெரிய இலாகாவை ஸ்தாபித்தார். அந்த இலாகாவும் திருப்திகரமாகவே வேலை செய்தது. ஆனால் அதிலும், அந்த ஊர் ஜனங்களில் சிலர்தப்பித்துக் கொண்டதாகத் தெரிந்தது. எப்படியெனில் சில மனிதர்கள் அந்த ஊரில் வந்து புதிதாகக் குடியேறினார்கள். அவர்கள் ஏற்கெனவே குழந்தைகளை வெளியூர்களில் பெற்றுக்கொண்டு வந்ததன்றி, அதற்குமேல், அந்த ஊரில் அவர்களுக்குக் குழந்தை பிறக்காத நிலைமையில் இருந்தமையால், அவர்களை அந்தக் குழந்தைவரி பாதிக்காது என்ற நினைவினால் நமது திவான் லொடபட சிங் பகதூர் இன்னொருவிதமான வரியை ஸ்தாபித்தார். பிறக்கும் மனிதரெல்லோரும் ஒருவர் தப்பாமல் இறப்பது நிச்சய மாதலால், ஒவ்வொரு பிணத்திற்கும் ஒவ்வொரு பணம் வரி யென்று நமது திவான் லொடபட சிங் பகதூர் திட்டம் செய்து, அதற்கென்று ஓர் இலாகாவையும் குமாஸ்தாக்களையும் ஏற்படுத்தி, சுடுகாட்டிற்குப் போகும் வழியில் ஒரு சுங்கன்சாவடி கட்டி வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்தார். அந்த இலாகாவும் திருப்திகர மாகவே வேலைசெய்து ஏராளான பணம் குவிய ஒரு சாதனமாக இருந்தது. மறுபடியும் நமது திவான் லொடபட சிங் பகதூர் சிந்தனை செய்யலானார். தான் மற்றவர்களுக்கு வரி விதிப்பது ஒரு சாமர்த்தியமல்ல என்றும், அந்த ஊர் மகாராஜனுக்கும், திவானுக்கும், வரி விதிக்கவேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டார். “அவர்களிருவருக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை, அவர்கள் சீக்கரத்தில் இறப்பதாகவும் தோன்றவில்லை. அவர்கள் இறந்தபின் வரி விதிப்பது, அவர்களுக்குப் படிப்பினை கற்றுக் கொடுப்பதாகாது. ஆதலால் அதற்கு என்னசெய்யலாம்’’என்று நமது திவான் லொடபட சிங் பகதூர் சில தினங்கள் வரையில் சிந்தனை செய்து ஒருவித முடிவிற்கு வந்தார். அந்த ஊரில் கங்கா தீர்த்தம் என்று பெயர் கொண்ட ஒரு குளமிருந்தது. அதிலிருந்து தண்ணிர் எடுத்துக்கொண்டு போய்த்தான் அந்த ஊரிலுள்ள சகலமான ஜனங்களும் சமையல் செய்து தண்ணீர் பருக வேண்டுமாதலால், அந்தக் குளத்திலிருந்து எடுத்துப் போகப்படும் ஒவ்வொரு குடம் தண்ணீருக்கும் ஜனங்கள் ஒவ்வொரு பிடி அரிசி அல்லது வேறே ஏதாவது தானியம் கொடுக்க வேண்டுமென்று அவர் உத்தரவு செய்து, அதற்கு ஓர் இலாகாவையும், ஆள் மாகாணங்களையும் நியமித்தார்; அந்தக் குளத்தில் திவான் வீட்டார் தண்ணீர் எடுத்தால் அது மகாராஜனுடைய உத்தரவு என்றும், மகாராஜனுடையஅரண்மனை வேலைக்காரர்கள் தண்ணிர் எடுத்தால், அது திவானுடைய உத்தரவு என்றும் தெரிவித்து, அவர்களிடம் அந்த வரியைக் கண்டிப்பாய் வசூலிக்கும்படி ஏற்பாடு செய்து விட்டார். அரசன், திவான், மற்ற உத்தியோகஸ்தர்கள் முதலிய எல்லோருடைய ஜாகையிலிருந்தும் வரும் குடங்களுடன் ஒவ்வொரு பிடி தானியம் வந்து சேர ஆரம்பித்தது. அது ஒவ்வொரு மாதத்திலும் மலைபோலக் குவியத்தொடங்கியது. இந்த வரி விதிக்கப்பட்டிருந்த விஷயம் முறையே அரசனுக்கும், திவானுக்கும் எட்டியதானாலும், அரசன், அது திவானுடைய உத்தரவென்றும், திவான், அது அரசனுடைய உத்தரவென்றும் நினைத்து, அதைப்பற்றி எவ் விதமான பிரஸ்தாபமும் செய்யாமல் இருந்து விட்டதன்றி, சர்க்கார் உத்தரவிற்கு எல்லோரும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதற்குத் தாமே உதாரணமாக நடந்து காட்டவேண்டுமென்று நினைத்து, அந்த உத்தரவின்படி ஒரு குடத்திற்கு ஒரு பிடி அரிசி கொடுத்துவிடும்படி தமது சமயல்காரருக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து விட்டார்கள். அந்த அரிசி மறுபடி அரண்மனைக்குத் தானே வரப்போகின்றதென்று நினைத்து, பரிசாரகர்கள் குடம் ஒன்றுக்கு இரண்டு பிடி அரிசி கொடுத்துவிட்டுப் போயினர். அதைக் கண்ட மற்ற ஜனங்களும் உற்சாகமும் குதூகலமும் அடைந்து தாங்களும் அது போலவே ஒன்றுக்கிரண்டு மடங்காய்த் தானிய வரி செலுத்தலாயினர்.

 

    • இவ்வாறு அந்த நகரத்தில் நமது திவான் லொடபட சிங் பகதூர் நூற்று முப்பது வகையான வரிகளும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இலாகாவும் ஸ்தாபித்து ஆயிரக்கணக்கில் குமாஸ்தாக்களையும் தாசில்தாரையும் நியமித்து வரி வசூல் செய்து கொண்டே போனார். அவ்வூரிலிருந்த மகாராஜன் திவான் முதல் தோட்டிவரையிலுள்ள சகலமான ஜனங்களையும் திவான் லொட பட சிங் பகதூரின் வரி ஒரு பின்னல் போல வளைத்துப் பின்னி அந்த வலைக்கு உட்படுத்தி விட்டது. எவரும் அதன் மூல காரணத்தை விசாரிக்காமலும், அதைப்பற்றி எவ்வித பிரஸ்தாபமும் செய்யாமலும் வரிகளைச் செலுத்தி வந்தனர். நமது திவான் லொடபட சிங் பகதூர் எப்போதும் போல பகல் வேளையில் திவானுடைய வண்டியில் உட்கார்ந்து போவதையும் கதவைத்திறந்து மூடுவதையும் விடாமல் செய்து கொண்டே இருந்தார். அவர் எத்தனை இலாகாக்களையும் ஆள் மாகாணங்களையும் எவ்விடத்தில் வைத்திருந்தார் என்பதும், எப்படி அவர்களை நிர்வகித்தார் என்பதும், அவர்களால் மாதம் ஒவ்வொன்றும் இலக்ஷம் இலக்ஷமாக வசூலிக்கப்பட்ட பணத்தை என்ன செய்தார் என்பதும் எவருக்கும் தெரியாதபடி அவர் நிரம்பவும் இரகஸியமாகவும் தந்திரமாகவும் சகலமான காரியங்களையும் நடத்தி வந்தார். அவ்வாறு பத்து வருஷ காலம் கழிந்தது. உண்மை யிலேயே மகா மேதாவியான அந்த ஊர்த் திவான் தமது பகிரங்க இராஜாங்கத்திற்குள் இன்னொரு பெரிய இரகஸிய ராஜாங்கம் அந்த ஊரில் இருந்து நடந்தேறி வந்ததையும், அதன் உத்தியோகஸ்தர்கள் தம்மிடத்தில்கூட வரி வசூல் செய்து வந்தார்கள் என் பதைப் பற்றியும் சொப்பனத்தில்கூட நினைக்காமல் இருந்து வந்தார். அந்த தேசத்து மகராஜன் அரண்மனைக்குள்ளேயே எப் போதும் அடைப்பட்டிருப்பதைப்பற்றி, ஒரு வாரத்திற்கு ஒரு முறையாகிலும் மாலை வேளையில் அரண்மனையை விட்டு வெளிப்பட்டு ஏதாகிலும் ஒரு திக்கில் நாலைந்து மயில் தூரம் நடந்துபோய் தேகத்திற்கு உழைப்புக் கொடுத்துத் திரும்பி வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். அவ்வாறு அவர் போய் வருகையில் மகாராஜன் என்பதை எவரும் கண்டு கொள்ளக் கூடாதென்ற எண்ணத்தினால், அந்தச் சமயத்தில் தம்முடைய சம்கி உடைகளை எல்லாம் அணியாமல் ஓர் ஏழை மனிதர்போல சாதாரண உடைகள் தரித்துக்கொண்டு வெளியில் போய் உலாவி கிராமவாசிகளோடு பேசிவிட்டுத் திரும்பி வருவது வழக்கம். அம்மாதிரி அவர் ஒரு நாள் மாலை வேளையில் தமது உடைகளை மாற்றிக்கொண்டு அரண்மனையை விட்டு வெளிப் பட்டு வயல்கள், தோட்டங்கள், காடுகள் முதலியவற்றிலுள்ள வேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டே வெகுதூரம் போய்த் திரும்பி வந்தார். வந்தவர் அவ்வூர்ச் சுடுகாட்டிற்குள் சமீபமாக இருந்த ஒரு பாதையை அடைந்தார். அவ்விடத்தில் ஒரு சுங்கன் சாவடி கட்டப்பட்டிருந்தது. அதில் இரண்டு சேவகர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில் இரசீதுப் புஸ்தகங்கள் காணப்பட்டன. அது அந்த ஊருக்குள் வரும் வண்டிகளுக்கு சுங்கம்வசூலிக்கும் இடமாக இருக்கலாமென்று அரசன் நினைத்துக் கொண்டு, யாரோ ஒரு சாதாரண வழிப்போக்கனைப் போல அந்தச் சேவகர்களிடத்தில் உலோகாபிராமமாய்ப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது அந்தப் பாதையின் வழியாகச் சில ஏழைக் குடியானவர்கள் சுடுகாட்டிற்குக் கொண்டுபோகும் பொருட்டு ஒரு பிரேதத்தைப் பாடையில் வைத்துத் தோளின்மீது தூக்கிக்கொண்டு, ‘’ஜேராம் ஜே ஜே ராம் சீதாபதே ராம் மாதா பிதாராம்!’’ என்று பலவாறு முறை வைத்துக் கூச்சலிட்டுக் கொண்டு வந்து சுங்கன் சாவடியைக் கடந்து அப்பால் செல்லயத்தனிக்க, அங்கிருந்த சேவகர்கள் இருவரும், “அடேய் நிறுத்துங்கள். எங்கே வரிப்பணம்? ஏது நீங்கள் ஒன்றையும் அறியாதவர்போல மெதுவாய் நழுவுகிறீர்கள்?’’என்று அதட்டிக்கொண்டு சாவடியை விட்டு எழுந்தோடி பிணத்தைக் தூக்கிக்கொண்டு போனவர்களுக்கு எதிரில் போய் நின்று, வழிமறித்து அவர்களை மிரட்ட ஆரம்பித்தனர்.

 

    பிணத்தை எடுத்துச் சென்றவர்கள் நடு நடுங்கி அப்படியே நின்று விட்டார்கள். அவர்களுக்குள் முக்கியஸ்தனாக இருந்த ஒருவன் துணிவாகப் பேசத்தொடங்கி, “ஐயா! இது அநாதைப் பிணம். ஊரிலுள்ள திருக்குளத்தின் பக்கத்தில் ஒரு பாழும் சாவடி இருக்கிறது. அதில் இந்த பிச்சைக்காரன் செத்துக் கிடந்தான். இவனுக்குச் சொந்தக்காரர் யாருமில்லை. இந்தப் பிணம் குளத்திற்குப் பக்கத்தில் இருந்ததாகையால், பெண் பிள்ளைகள் குளிப்பதற்குப் போகப் பயந்தார்கள்: அதுவுமன்றி, இந்தப் பிணம் அழுகிப்போய் நாற்றத்தைப் பரப்பினால் அங்கு வரும் ஏராளமான ஜனங்களுக்கு அது துன்பகரமாக இருப்பதோடு, வியாதியை உண்டாக்கும் என்று நினைத்து நாங்கள் பொதுஜன நன்மையைக் கருதி மூங்கில், கயிறு முதலிய சாமான்களை யாசகம் வாங்கிப் பாடை கட்டி, இந்தப் பிணத்தைச் சுடுகாட்டிற்குக் கெண்டுபோய் புதைக்கப் போகிறோம். எங்களிடம் பணமும் கிடையாது. நாங்கள் இந்தப் பிணத்திற்காக வரிசெலுத்தவும் கடமைப்பட்டவர்களன்று” என்றான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 1நிலவு ஒரு பெண்ணாகி – 1

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க? மறுபடியும் உங்களை சந்திக்க வந்துட்டேன். இந்தப் புதிய கதை ‘நிலவு ஒரு பெண்ணாகி’க்கு இங்கும், முகநூலிலும் மற்றும் என்னிடம் நேரடியாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வழக்கம் போல நான் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட விஷயங்களைக்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65

65 – மனதை மாற்றிவிட்டாய் ஆதித்ய ராஜா கீழே திவ்ய ஸ்ரீ என்ற பெயரை எழுதி பல திருத்தங்கள் செய்து இறுதியில் தியா – தயா என்று இருந்தது. ஆதி நீங்க கேட்ட மாதிரி நான் உங்க பேர்ல இருந்து உங்களுக்கு

கபாடபுரம் – 23கபாடபுரம் – 23

23. கொடுந்தீவுக் கொலைமறவர்   அப்போது தாங்கள் கரையிறங்கப் போகும் தீவு – கொடுந்தீவு என்பதையும், அங்கு வாழும் உலகத் தொடர்பில்லாத விநோதமான இனத்தைச் சேர்ந்த கொலை மறவர்கள், தங்களுடைய வழிபடு தெய்வமாகக் கருதும் ஒரு பாறைக்கு நரபலியிடும் வழக்கமுடையவர்கள் என்பதும்