Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 04

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 04

    • குழந்தை மிகுந்த வியப்போடு, “ஏன் சாமான்களை நீங்கள் தானே அனுப்பினிர்கள்? வேறே யார் நமக்கு இவ்வளவு சாமான்களை அனுப்பப்போகிறார்கள்!’’என்றது.

 

    • அதைக் கேட்ட சமயற்காரன் சகிக்க இயலாத பிரமிப்பும் வியப்பும் அடைந்து “என்ன! என்ன! நானா சாமான்களை அனுப்பினேன்! அப்படி யார் சொன்னது? சாமான்களை எல்லாம் யார் கொண்டு கொடுத்தது? எப்போது சாமான்கள் வந்தன?’’என்றுஆத்திரத்தோடு கேட்க, குழந்தை “என்ன அப்பா நீங்களே சாமான்களை அனுப்பிவிட்டு, ஒன்றையும் அறியாதவர்களைப் போலப் பேசுகிறீர்களே! யாரோ ஒருவர் சேவகனைப்போல உடை தரித்திருந்தார். இவர் இந்த ஊர்த் திவானுடைய வீட்டு வாசலில் இருக்கும் பாராக்காரராம். அவரும் அவருடைய சம்சாரமும் நேற்று இரவு சுமார் எட்டுமணி சமயத்தில் வந்தார்கள்; வரும்போது சுமார் நான்கு படி அளவுள்ள அரிசி, அதற்குத் தகுந்த பருப்பு, உப்பு, புளி, மிளகாய், தயிர், நெய், எண்ணெய், இலை, விறகு முதலிய சகலமான சாமான்களையும் கொணர்ந்து அவைகளை நீங்கள் கொடுத்ததாகவும், சமயல் செய்து சாப்பிடும்படி நீங்கள் சொல்லச் சொன்னதாகவும், நீங்கள் எங்கேயோ அவசரக் காரியமாய்ப் போயிருப்பதாகவும், அதைப் பார்த்துக்கொண்டு வருவீர்களென்றும் சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அதை நாங்கள் உண்மை என்றல்லவா எண்ணிக்கொண்டிருக் கிறோம்” என்றது. அந்த வரலாற்றைக் கேட்ட நமது சமயற்காரனுக்கு உடனே உண்மை விளங்கிவிட்டது. முதல்நாள் இரவில் தனக்கு 8 அணா இனாம் கொடுக்க எத்தனித்த சேவகனே தன் குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையை உணர்ந்து அவ்வாறு தந்திரமாக உதவி செய்து காப்பாற்றி இருக்கிறான் என்று நினைத்து “ஆகா மனிதர் இருந்தால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! ஜீவகாருண்யம் என்பது முக்கியமாய்க் கஷ்டங்களை அநுபவிப்பவரிடமே காணப்படுகிறது. பசியாகவும் பட்டினியாகவும் இருந்தவரே அவற்றின் கொடுமையை எளதில் உணர்ந்து இரக்கங் கொள்கிறார்கள்தாம் எவ்வித கஷ்டமும் துன்பமும் அநுபவியாமல் எப்போதும் செல்வத்திலும் சுகத்திலும் செல்வாக்கிலும் இருப்பவர் மற்ற எல்லோரும் அதே நிலைமையில் இருப்பதாக எண்ணிக் கொள்ளுகிறார்கள். அதுவுமன்றி, ஏழைகளின் தீனக்குரல் அவர்களுடைய மனசில் உண்மை என்றே படுகிறதில்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருந்து, மற்றவர்களுடைய பொருளை அபகரித்துத் தின்னவே பலவிதமான வேஷம் போடுகிறார்கள் என்றே எண்ணுகிறார்கள். என்னுடைய குடும்ப நிலைமையை நான் திவானிடத்திலும் வெளியிட்டேன்; அரசனிடத்திலும் வெளி யிட்டேன்; அந்த எளிய பாராக்காரனிடத்திலும் வெளியிட்டேன்.

 

    • யாருடைய மனசில் அந்த வார்த்தை உறைத்து உடனே பலனைத் தந்தது ஆகா! உண்மையில் இப்போது யாரைப் பெரிய மனிதரென்று சொல்வது? பணத்தினாலும் பதவியினாலும் செல்வாக்கினாலும் மற்ற இருவரும் பெரிய மனிதர்கள். இந்தப் பாராக்காரன் அன்றாடம் காய்ச்சும் பரம ஏழையாக இருந்தாலும், ஜீவகாருண்யம், அருள், பச்சாதாபம், சமயோசிதமான தானம், தருமம் முதலிய தெய்விகச் செல்வம் நிறைந்திருப்பதால், அவன் தெய்வாம்சம் நிரம்பப்பெற்ற மகா பெரிய மனிதன். ஆகா! இந்த மனிதனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! என்னுடைய மனசில் கொந்தளித்துப் பொங்கி எழும் நன்றி விசுவாசப் பெருக்கை நான் எப்படிக் காட்டப் போகிறேன்! நான் பிறருடைய பொருளை எவ்வித உழைப்புமின்றிப் பெறுவதில்லை என்ற உறுதியான வைராக்கியத்தை விரதமாகப் பூண்டிருக்கிறேன். ஆனாலும், எனக்குத் தெரியாமல், அந்த மனிதன் ஏராளமான சாமான்களைக் கொணர்ந்து கொடுத்து விட்டான். உண்மையை அறியாத குழந்தைகள் அவைகளை ஏற்றுக்கொண்டு சொற்ப பாகத்தையும் உபயோகப்படுத்திக் கொண்டன. மிகுதி இருப்பதை நான் எடுத்துக் கொண்டுபோய் அவனிடம் திருப்பிக் கொடுப்பது மரியாதை யாகாது. இருக்கட்டும். காலம் எப்படியும் வரும். அவன் கொடுத்த சாமான்களின் கிரயத்தைவிட நூறுமடங்கு அதிக தொகையை நான் அவனிடம் சேர்த்து விடுகிறேன்’’என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவனாய், உள்ளே சென்று ஸ்நானம் சாப்பாடு முதலிய காரியங்களை முடித்துக்கொண்டபின், தான் ஒரு காரியார்த்தமாக வெளியில் போய்வுட்டு வருவதாகத் தன் மனைவி மக்கள் முதலியோரிடம் கூறியபின் வீட்டைவிட்டு வெளியில் சென்று பல இடங்களிற்குப் போய் அலைந்து திரிந்து கடைசியாக அரண்மனைக்குச் சென்றான். அந்த அரண்மனையிலும், திவானின் மாளிகையிலும் சுமார் இருநூறு பாராக்காரர்கள் வேலை பார்த்து வந்தனராதலால், அவர் அவர்கள் எல்லோரும் தம்முடைய உத்தியோக உடுப்புகள், டாலி டவாலிகள், பட்டாக்கத்திகள் முதலி யவைகளை வைப்பதற்கு ஒரு பெருத்த விடுதி பிரத்யேகமாக ஏற்படுத்தப் பட்டிருந்தது. அந்த இடத்தில் சேவகர்கள் வருவதும் உடைகளைக் களைந்து வைப்பதும், அவைகளை அணிந்துகொள்வதுமாய் இருந்தனர். ஆதலால், அந்த இடத்தில் எப்போதும் ஜனக்கும்பல் அதிகமாகவே இருந்தது. நமது சமயற்காரன் மற்ற மனிதர்களோடு சேர்ந்து தானும் ஒரு பாராக்காரன் போல நடித்து அந்த உடுப்புச் சாலைக்குள் நுழைந்து, நிஜார் சட்டை, தலைப் பாகை இடுப்பு வார், பட்டாக்கத்தி, முதலியவற்றை எடுத்து அணிந்துகொண்டு, தத்ரூபம் பாராக்காரன் போல மாறி அங்கிருந்து புறப்பட்டு நேராக திவானுடைய கச்சேரிக்குப் போய்ச் சேர்ந்து, அவ்விடத்தில் காத்திருந்தான். அப்போது மாலை நேரமாகி விட்டது. ஆகையால் திவான் கச்சேரியைக் கலைத்துவிட்டுத் தனது சொந்த மாளிகைக்குப் போவதற்காக வெளியில் புறப்பட்டு வந்தார். அவருடைய பெட்டி வண்டி ஆயத்தமாக வந்து நின்று கொண்டிருந்தது. அந்த வண்டிக்குப் பக்கத்தில் நமது சமயற்காரன் போய்த் தயாராய் நின்றான். கச்சேரிக்குள்ளிருந்து திவான் வெளிப் பட்டு வண்டியண்டை வந்தவுடனே, சமயற்காரன் நிரம்பவும் பய பக்தி விநயத்தோடு வண்டியண்டை ஓடி, அதன் கதவைத் திறந்து அதைப் பிடித்துக்கொள்ள, திவான் வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார். உடனே நமது சமயற்காரன் மறுபடி கதவை மூடித் தாளிட்டுவிட்டு வண்டியின் பின் பக்கத்திலிருந்த பலகையின் மேல் உட்கார்ந்து கொள்ள, உடனே வண்டி புறப்பட்டுச் சென்று கால் நாழிகை நேரத்தில் திவானுடைய மாளிகையை அடைந்து அதன் வாசலில் நின்றது. உடனே நமது சமயற்காரன் கீழே இறங்கி ஓடிவந்து கதவைத் திறந்து பிடித்துக்கொள்ள, திவான் கீழே இறங்கித் தமது ஜாகைக்குள் போய்விட்டார். மறுநாளைய காலையில் திவான் கச்சேரிக்குப் புறப்படும் சமயத்திலும், அது போல நமது சமயற்காரன் பாராக்காரன் போல உடையணிந்து வந்து ஆஜராய் நின்று வண்டியின் கதவைத் திறந்து மூடிவிட்டு, வண்டியில் உட்கார்ந்து அவருடன் கச்சேரிக்குச் சென்று, மாலையில் அதுபோலவே, அவரைத் தமது மாளிகையில் கொண்டு வந்து விட்டுச் சென்றான். இவ்வாறு மூன்று தினங்கள் கழிந்தன. நமது சமயற்காரன் திவானுடைய பெட்டி வண்டியின் கதவைத் திறந்து மூடும் உத்தியோகத்தைத் தானே வகித்து ஒழுங்காகச் செய்து வந்தான். திவானுடைய வண்டிக் கதவைத் திறந்து மூடுவதற்காக மகாராஜன் அந்தப் பாராக்காரனை நியமித்திருக்க வேண்டும்என்று வண்டிக்காரன் எண்ணிக்கொண்டான். அவர்கள் இருவருக்கும் மூன்று தினங்களுக்குள் சிநேகம் ஏற்பட்டு முற்றிப்போய் விட்டது. திவான் தமது மனத்தைப் பெரிய பெரிய விஷயங்களிலும், ராஜ்ய நிர்வாகத்திலும், நீதிபரிபாலனத்திலும் செலுத்தி இருந்தாராதலால், அவர் அந்த அற்ப விஷயத்தை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அந்தப் பாராக்காரனை மகாராஜனே தமது உபயோகத்திற்காக அனுப்பி இருக்க வேண்டுமென்று, திவானும், வண்டிக்காரன் நினைத்தது போலவே, நினைத்துக்கொண்டு அதைப் பற்றி விசாரிக்காமலே இருந்து விட்டார்.

 

    • அவன் ஒவ்வொரு நாளும் திவானினது வண்டியில் போவதும், வருவதுமாய் இருந்ததைக் கண்ட, அந்த நகரத்தின் ஜனங்கள் எல்லோரும், திவானிடம் நெருங்கிப் பழகும்படியான ஏதோ முக்கியமான உத்தியோகம் அந்த மனிதனுக்குக் கிடைத்திருக்கிற தென்றும், அவனுக்குச் செல்வாக்கு அகிதமாக இருக்குமென்றும், எண்ணிக் கொண்டனர். திவானினது வண்டி அவரது கச்சேரிக்குப் போகும் வழியில் ஏராளமான பலவகைப்பட்ட கச்சேரிகளும் பெரிய பெரிய வர்த்தக ஸ்தலங்களும் இருந்தன. அவரது வண்டி போகும்போது பின்பக்கத்தில் உட்கார்ந்திருந்த நமது சமயற்காரன் முக்கியமான பல உத்தியோகஸ்தர்களையும் வியாபாரிகளையும் பார்க்கும் போதெல்லாம் அவர்களை நோக்கிக் கோபமாக தனது கைவிரலை ஆட்டி, “இருக்கட்டும்; உனக்குத் தகுந்த வழி செய்கிறேன்’ என்று சொல்லிக் கறுவுகிறவன் போலப் பல விதமான சைகைகளைச் செய்து கொண்டே போகத் தொடங்கினான். அதைக் கண்ட ஒவ்வொருவரும், “என்ன இது? ஒவ்வொரு வேளையிலும் இவன் நம்மைப் பார்த்து இப்படிக் கறுவிவிட்டுப் போகிறானே! நம் மீது திவானுக்கு ஏதாவது கோபம் பிறந்திருக்குமோ, இவன் திவானிடம் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருப்பானோ நமக்கு என்ன கெடுதல் நேருமோ தெரியவில்லையே’’ என்று நினைத்துக் கவலைக்கொண்டு பயந்து, அவன் தனியாய்ப் பாதசாரியாக எப்போது வருவானென்று ஆவலோடு எதிர் பார்த்திருந்து, அவனுடன் தனிமையில் பேசி, அவன் தம்மைக் கண்டு கறுவ வேண்டிய காரணமென்ன என்று விசாரிக்க, நமது சமயற்காரன் அவரவருக்குத் தகுந்தபடி தந்திரமாக மறுமொழி சொல்லத் தொடங்கினான். தன்னைக் கேட்ட மனிதர் ஏதாவது உத்தியோகம் வகிப்பவராயிருந்தால் அவரை நோக்கி “ஐயா! நீர் வேலை பார்ப்பது நிரம்பவும் அதிருப்திகரமாக இருப்பதாய் திவானுக்கு சங்கதி எட்டி இருக்கிறது. அதைப்பற்றி நேற்று இரவில்தான் பிரஸ்தாபம் செய்தார். அதனால்தான் நான் உம்மைக் கண்டவுடன் அந்த அதிருப்தியை உமக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஜாடை காட்டினேன். திவான் வெளிப் பார்வைக்குக் கண்டிப்பான மனிதராக இருக்கிறாரே யன்றி உண்மையில் நிரம்பவும் இரக்கமுள்ள மனிதர்தான். எல்லாம் நாம் நடந்து கொள்ளும் மாதிரியிலிருக்கிறது. அவரை வெகு சீக்கிரத்தில் சரிப்படுத்திவிடலாம்” என்றான்.

 

    • அதைக் கேட்ட அந்த உத்தியோகஸ்தர் ஒரு பெருத்த பணத் தொகையை இரகசியமாக அவனிடம் கொடுத்து, அதை திவானிடம் சேர்ப்பித்து அவருடைய அதிருப்தியையும் கோபத்தையும் சமாதானப்படுத்தும்படி வேண்டிக்கொள்ள, சமயற்காரன் அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டு போய்விட்டான். மறுநாள் அவன் அதே உத்தியோகஸ்தரைப் பார்க்கையில் சந்தோஷமாகப் புன்னகை செய்து தான் திவானை சரிப்படுத்திவிட்டதாகச் சைகை காட்டிவிட்டுச் சென்றான். மேலே குறிக்கப்பட்டபடி, அவனால் பயமுறுத்தப்பட்ட மனிதர் ஒரு வர்த்தகராக இருந்தால், அவரைப் பார்த்து “ஐயா! உமக்கு ஏராளமான இலாபம் வருகிறதென்றும், மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் வருமான வரி விதிக்க வேண்டும் என்றும் இரகசியமாய்க் கீழ் அதிகாரிகள் திவானுக்குள்ழுதியிருக்கிறார்கள். அதைப்பற்றி திவான் நேற்றுதான் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார். திவான் வெளிப் பார்வைக்கு நெருப்புப் போன்ற மனிதரானாலும், உள்ளுற நல்ல இளக்கமான மனம் உடையவர். அதுவுமின்றி, அவருக்குப் பணச்செலவு அதிகம். ஏதாவது தக்க தொகையாகக் கிடைக்கும்பட்சத்தில், அவர் வாங்கிக்கொள்வார். என்னை அவர் தம்முடைய சொந்தக் குழந்தைபோல பாவிக்கிறார். என் சொல்லை அவர் தட்டுகிறதே இல்லை’’ என்பான்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை – 14கடவுள் அமைத்த மேடை – 14

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. பலர் கதையை ஊகித்து சொல்லியிருந்தீர்கள். அது சரியா என்று இந்த பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள். டைவேர்ஸ் செய்வதற்கு இதெல்லாம் காரணமாக ஏற்க முடியுமா என்று கேட்டிருந்தீர்கள். மனித மனம் மெல்லிய உணர்வுகளைக்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08

உனக்கென நான் 8 “அவனை ஏன்டா அடிச்ச” என கேள்வியுடன் கையில் பிரம்புடன் நின்றாள் அன்பரசி. “லவ்வுக்காக மிஸ்” என்றான் சிறிதும் சலனமில்லாமல். இந்த காரணத்தை சிறிதும் எதிர்பார்த்திராத அன்பரசி புரியாமல் “என்ன?” என்றாள். “லவ்வு காதல் மிஸ். நீங்க பன்னதில்லியா?”