Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 03

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 03

  • சமயற்காரன், “ஐயா! உங்களுக்கு அநேககோடி வந்தனங்கள். உங்கள் தயாள புத்திக்கு உங்களையும் உங்களுடைய பிள்ளை குட்டிகளையும் கடவுள் எப்பொழுதும் மங்களகரமாக வைக்கட்டும். நான் இப்போது வேலை செய்ய வகையற்றுத் திண்டாடுகிறேன். நான் இனி நியாயமான வழியில் சம்பாத்தியம் செய்ய எனக்கு ஏதாவது ஒரு துறை ஏற்படுமென்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எனக்கு மறுபடி பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தால், நான் அதை வைத்துக்கொண்டு கடன் வாங்கலாம். ஆகையால், எவ்வித நம்பிக்கையுமற்று இறக்கும் தருணத்தில் இருக்கும் நான் உங்களிடம் கடன் வாங்குவது நியாயமாகாது. ஆகையால், எனக்கு உங்களுடைய பணமே வேண்டாம். நாளைய தினம் பகல் வரையில் எங்களுடைய உயிர் இருந்தால், நான் மறுபடி இந்த திவானிடம் வந்து எழுத்து மூலமாகப் பிராது கொடுத்துப் பார்க்கிறேன். இவரிடம் நியாயம் கிடைக்குமானால், என்னிடத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட மூன்று ரூபாய் எனக்கு வரும். அதைக்கொண்டே நான் இனி என் ஆயிசுகால பரியந்தம் பிறருக்கு பார மாயில்லாமல் ஜீவனம் செய்துகொள்வேன்’’என்று கூறியவண்ணம் அவ்விடத்தை விட்டுச் சரேலென்று நடந்து மறைந்துபோனான்.

 

  • சன்மார்க்க முறையை எந்த சமயத்திலும் தான் கைவிடக் கூடாது என்கிற திடமான சித்தத்தோடு அவன் அவ்வாறு கூறி விட்டுச் சென்றானாயினும், அவனது மனநிலைமை அப்போது எவ்விதம் இருந்திருக்கும் என்பதை விவரிப்பதைவிட யூகித்துக் கொள்வதே எளிது. அவன் தனது கொள்கையைக் கடைப்பிடிப் பதில் மகா அபூர்வமான மனவுறுதி உடையவனாக இருந்தாலும், அவன் தனது பெண்சாதி குழந்தைகள் முதலியோரது விஷயத்தில் வாஞ்சையும் இரக்கமும் பச்சாதாபமும் அற்றவனாக இருக்க வில்லை. ஆகவே, தான் வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்பிப் போய் அவர்களது கோரமான அவஸ்தையைக் காண்பதை விட, மறுநாளைய பகலில் தனது வழக்கு முடிகிறவரையில் தான் தனது வீட்டிற்கே போகாமல் இருப்பது உசிதமான காரியமென்று அவன் நினைத்து, ஒரு தர்ம சத்திரத்தின் திண்ணையில் படுத்திருந்து இந்த இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலையில் எழுந்து, தனது ஸ்நானம் முதலிய கடமைகளை முடித்துக்கொண்டு சரியாக 11-மணிக்கு திவானுடைய கச்சேரியை அடைந்து, அவ்விடத்திலிருந்த ஒரு குமாஸ்தாவிடம் சென்று ஒரு காகிதம், எழுதுகோல் முதலியவற்றை வாங்கித் தன் கைப்படவே ஒரு பிராது எழுதி அதை திவானிடம் கொடுத்தான்.

 

  • அவர் அதை வாங்கி நிதானமாகப் படித்துப் பார்த்தபின் அவனை நோக்கி, “ஏனையா! நீர் நேற்று மாலையில் மிட்டாய் விற்றபோது சிலர் வந்து உம்மைச் சூழ்ந்து கொண்டு உம்மிடம் இருந்த மிட்டாய்த் துண்டுகளை மாதிரி பார்ப்பதாகச் சொல்லி உம்முடைய அநுமதியில்லாமல் அவர்களே எடுத்துத் தின்று விட்டதாகவும், கடைசியாக, அவர்களுள் ஒருவர் உம்முடைய தட்டிலிருந்த காசுகளையெல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிப் போனதாகவும், பிறகு மற்றவர்களும் போய்விட்டதாகவும் பிராதில் சொல்லி இருக்கிறீர். ஆனால், அப்படி நடந்தது நிஜந்தானா என்பதை ருஜுப்பிப்பதற்கு உம்மைத் தவிர வேறே சாட்சிகள் இன்னார் இன்னார் இருக்கிறார்கள் என்று நீர் எழுதவில்லையே!’’என்றார்.

 

  • சமயற்காரன் “எஜமானே அவர்கள் சுமார் இருபது மனிதர்கள் இருந்தார்கள். எல்லோரும் என்னைச் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். மற்ற கடைக்காரர்கள் எல்லோரும் பக்கத்தில் இல்லை; அவர்கள் என்னுடைய பொருளை அபகரித்துக்கொண்டு போன பிறகு நான் பக்கத்திலிருந்த சில கடைக்காரர்களிடம் போய் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் “அடடா! நாங்கள் கவனிக்க வில்லையே! யாரோஜனங்கள் வந்து பணம் கொடுத்து மிட்டாயி வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றல்லவா நாங்கள் நினைத்தோம். அவர்கள் யாரென்று கூட நாங்கள் கவனிக்கவில்லையே!” என்று சொல்லிவிட்டார்கள்; ஆகையால், என்னைத்தவிர இதற்கு வேறே சாட்சிகள் யாரும் இல்லை.” என்றான்.

 

  • அதைக்கேட்ட திவான் “என்ன ஐயா! உம்முடைய பிராது மகா விசித்திரமாக இருக்கிறதே! ஒருவர் தமக்கு மற்றவர் ஏதாவது கெடுதல் செய்துவிட்டதாகப் பிராது கொடுத்தால், எழுத்து மூலமான ஆதாரத்தைக் கொண்டோ, அல்லது, தக்க மனிதர்களின் சாட்சியத்தைக் கொண்டோ, அவர் தம்முடைய பிராது உண்மையானது என்று ஸ்தாபிக்க வேண்டுமென்றும், அப்படி ஸ்தாபித்தால் நியாயாதிபதி அதற்குத் தக்க பரிகாரம் செய்து கொடுக்க வேண்டுமென்றும் சட்டம் பரிஷ்காரமாகச் சொல்லுகிறது. அவர் மாத்திரம் சொல்வது போதுமானதல்ல, நீர் சொல்வது ஒருவேளை உண்மயாக இருக்கலாம். இருந்தாலும், அதை மாத்திரம் வைத்துக் கொண்டு நான் உமக்கு அநுகூலமாகத் தீர்ப்புச்செய்வது உசிதமாகாது. ஏனென்றால் இதுபோலவே, வேறு பலர் தமக்கு விரோதிகளாயிருப்பவர் மீது பொய்ப்பிராது கொண்டுவரத் துணி வார்கள். அதற்கெல்லாம் இடம் கொடாமல் சட்டம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆகையால் நான் சட்டப்படி உம்முடைய பிராதைத் தள்ளுவதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கில்லை’ என்றார்.

 

  • அதைக் கேட்ட சமயற்காரன் “ஐயா! தாங்கள் சொல்வது நியாயமே. ஆனாலும் இப்படி வலியவர்கள் பலர் கும்பலாக வந்து எளியவர்களிடமுள்ள சொத்துக்களை அபகரித்துக் கொண்டே போனால், எளியவர்களுக்கு சட்டத்தில் பாதுகாப்பு என்பதே கிடையாதா?’ என்றான். திவான், “அது வேறே சங்கதி; நகரத்தில் போலீஸார் முதலிய உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள்இம்மாதிரி அக்கிரமம் நடக்காமல் தடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களையும் மிஞ்சிக் குற்றம் செய்யாத ஒரு நிரபராதி அக்கிரமமாக தண்டனை அடைவதைக் காட்டிலும், குற்றம் செய்த நூறு மனிதர்கள் விடுதலை அடைவது உசிதமான விஷயம் என்பது சட்ட சம்மதமான கொள்கை; நீர் கொண்டுவந்திருப்பது உண்மையான பிராதுதான் என்பதை நான் இப்போது நிச்சயமாகக் கண்டு பிடிக்க ஏதுவில்லை. ஆகையால், உண்மையில் குற்றம் செய்த அந்த இருபது மனிதரும் தப்பிப் போவது ஒரு பொருட் டல்ல. இன்று நான் உமக்கு இடம் கொடுத்து உம்முடைய பேச்சையே வேதவாக்கியமாக எடுத்துக்கொண்டால், நாளைக்கு, இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு மனிதர், எவ்வித குற்றமும் செய்யாத இன்னொருவர்மீது பிராது கொடுப்பார்; சாட்சியம் இல்லையென்பார். அந்த வழக்கில் நான் அந்த நிரபராதியைத் தண்டிக்க நேருமல்லவா. ஆகையால் நீர் போய் தக்க சாட்சிகள் அழைத்துக்கொண்டு வரவேண்டும், அதுவுமன்றி, குற்றம் செய்தவர்கள் இன்னின்னார் என்ற தகவல்களையும் அறிந்துகொண்டு வரவேண்டும். ஆகையால் நான் உம்முடைய பிராதைத் தள்ளி விட்டேன். நீர் போகலாம்’ என்று கூறி வேறொரு வழக்கை எடுத்துக்கொண்டார். அவரது தீர்மானத்தைக் கேட்டு அளவற்ற ஏமாற்றமும், துயரமும், பதைபதைப்பும் கொண்ட நமது சமயற்காரன் அதற்கு மேல் தான் அவ்விடத்தில் நிற்பதிலும் அந்த திவானிடம் மறுபடி தனது வேண்டுகோளை வற்புறுத்திக் கூறுவ திலும் தனக்கு எவ்வித அநுகூலமும் உண்டாகாதென்று உணர்ந்து அவ்விடத்தை விட்டு வெளியிற் சென்றான். சென்றவன் தான் அதற்குமேல் எங்கே போவது, என்ன செய்வது, தன்னுடைய பெண்டு பிள்ளைகளின் துன்பத்தை எவ்விதம் களைவது என்பதை அறியாதவனாய்த் தயங்கிக் கலங்கி வாடித் துவண்டு வெகு நேரம் வரையில் நின்றபின், அவ்விடத்தை விட்டு, எவ்வித நோக்கமின்றி பைத்தியங் கொண்டவன்போல தெருவோடு செல்லத் தொடங் கினான். அவன் அவ்வாறு இரண்டொரு தெருக்களின் வழியாகச் சென்ற காலத்தில் அந்த ஊர் மகாராஜனது அரண்மனை அவ்விடத்தில் எதிர்ப்பட்டது. அதை அவன் பார்க்கவே அவனது மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. தனது விஷயத்தில் சில மனிதர்கள்பெருத்த அக்கிரமம் செய்துவிட்டது உண்மையாக இருந்தும், அதற்கு எவ்விதமான பரிகாரமும் இல்லாமல் போனதைக் குறித்துத் தான் அந்த ஊர் மகாராஜனிடமாகிலும் முறையிட்டுக்கொண்டு, தனது குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையைத் தெரிவித்துத் தனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவனது மனத்தில் தோன்றியது. உடனே அவன் அந்த அரண்மனை வாசலை அடைந்து, அவ்விடத்திலிருந்த பாராக்காரனைக் கண்டு, தான் ஓர் அவசர காரியமாக மகாராஜனைப் பார்க்கவேண்டுமென்று கூறி, தனக்கு அரசனது பேட்டி செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டான். பாராக்காரன், ‘’அப்பா! நம்முடைய ஊர் மகாராஜனை நம்மைப்போன்ற ஏழை மனிதர்கள் எல்லோரும் பார்ப்பது சாத்தியமான காரியமா? தக்க பிரபுக்கள் மாத்திரம் ஏதாவது முக்கியமான காரியமிருந்தால், தன்னைப் பார்க்க மகாராஜன் இணங்குவார். மற்றவர்கள் அவரைக் பார்க்க வேண்டுமானால் திவானுடைய அநுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தாலன்றி, உள்ளே விடக்கூடாதென்று கண்டிப்பான ஆக்கினை பிறந்திருக்கிறது. ஆகையால், நீ மகாராஜனைப் பார்க்க ஆசைப் படுவது பலியாத எண்ணம். அவசியம் பார்க்கத்தான் வேண்டு மென்றால், நீ உடனே திவானிடம் போய் மனுக்கொடுத்து அவருடைய உத்தரவைப் பெற்றுக் கொண்டு வா’’என்றான்.

 

  • அதைக் கேட்ட சமயற்காரன், தான் திவானிடம் போய், அநுமதி கேட்டால், அவர் கொடுக்க மறுத்துவிடுவார் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. ஆகையால், திவானிடம் தான் போவது. வீணான வேலையென்று தீர்மானித்ததன்றி, தான் சொல்லிக் கொள்ள வேண்டிய விஷயங்களை ஒரு காகிதத்தில் எழுதி, அதை அந்தப் பாராக்காரனிடம் கொடுத்து அரசனிடம் கொடுக்கச் செய்தான். அதைப் படித்துப் பார்த்த அரசன், திவான் செய்த தீர்மானமே நியாயமான தென்று அதன்மேல் எழுதியனுப்பி விட்டான்.

 

  • அதைப் படித்துப் பார்த்த நமது சமயற்காரன் மிகுந்த வியப்பும், கோபமும் அடைந்து “ஆகா! என்ன ராஜ்யம் இது என்ன அரசன்! என்ன நீதி கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டைவிடக் கடும் புலி வாழும் காடு நன்று என்று சொல்வது சரியாய்ப் போய்விட்டதே; இந்த ராஜ்யத்தில் மனிதருக்கு எவ்விதமான பாது காப்பும் இல்லையே; இன்னம் என்னைப் போல் உள்ள எத்தனை ஏழை ஜனங்கள் இவ்விதமான துன்பங்களையும் துயரங்களையும் அநுபவித்துக் கண்ணிர் விடுத்துக் கலங்குகிறார்களோ தெரிய வில்லையே! சாட்சிகள் இல்லாவிடில் நீதி இல்லையென்றால், நூற்றில் தொண்ணுறு குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்துக் கொள்வது நிச்சயம். திவானுடைய வேலையும் சுலபமானதே. முன் காலங்களில் மகாராஜன் மந்திரி முதலியோர் மாறு வேஷந் தரித்து அடிக்கடி வெளியில் போய் நகரத்தில் ஏதாவது அக்கிரமம் நடக்கிறதாவென்று பார்த்து விட்டு வருவதுண்டு. இப்போது அதெல்லாம் அடியோடு போய் விட்டது. எல்லாம் சட்டப்படியும், சாட்சிகள் சொல்லுகிறபடியும்தான் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கென்று ஒருவருக்குக் கெடுதல் செய்ய எத்தனிக்கும் துஷ்டர்கள் சாட்சிகள் இல்லாத சமயம் பார்த்துத் தம் கருத்தை நிறை வேற்றிக்கொள்ள மாட்டார்களா? ஒவ்வொரு மனிதனும் எங்கே போனாலும், என்ன செய்தாலும், தன்னோடுகூட இரண்டு மூன்று மனிதர்கள் சாட்சிக்கு அழைத்துக்கொண்டே போக வேண்டும் போலிருக்கிறது. இந்த மகாராஜன் திவான் முதலியவர்கள் எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட மேதாவிகள் என்று நினைத்துக்கொண்டு தம்முடைய புத்திப் போக்கின்படியே சகலமான காரியங்களையும் நடத்துகிறார்கள். என்னைப் போன்ற ஏழைகளின் சொல் அம்பலத்தில் ஏறுவதில்லை. நான் போய் இந்த அக்கிரமத்தைச் சொல்லப்போனால், ஏதோ காக்கை குருவி கத்துகிறதாக பாவிப்பார்களேயன்றி, அவர்களைப் போன்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் பேசுகிறதாக எண்ணமாட்டார்கள். இனி நான் என்ன செய்கிறது? என்னுடைய துன்பங்கூட எனக்கு அவ்வளவாக உறைக்கவில்லை. இவ்வளவு பெரிய ராஜ்யத்தில் என்னைப் போல எத்தனை ஆயிரம் எளியவர்கள் இவ்விதம் கலங்கிக் கேள்வி முறையின்றி வருந்தி உழல்கிறார்களோ தெரியவில்லையே! ஆகையால் நான் இதை இவ்வளவோடு விட்டு விடக்கூடாது. நான் ஏதாவது யுக்தி செய்து ஜனங்களின் குறைகளையும் இடர்களையும் களைய வேண்டும். இதனால் என்னுடைய உயிர் போவதனாலும் அது ஒரு பொருட்டல்ல” என்று பலவாறு எண்ணமிட்டுப் பலவித யுக்திகளையும்யோசனைகளையும் செய்து கொண்டவனாய்த் தனது வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான். அவ்விடத்தில் தன் ஜனங்கள் யாராவது இரண்டொருவர் அநேகமாய் இறந்துபோயிருப்பார்கள் என்றும், மற்றவர்கள் மகா கோரமான நிலைமையில் இருப்பார்கள் என்றும் எதிர்பார்த்து மிகுந்த கவலையும் கலக்கமும் கொண்டவனாய் அவன் தயங்கித் தயங்கி தனது வீட்டிற்குள் சென்று பார்க்க அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவ்விடத்தில் அவனது குழந்தைகள் சந்தோஷமாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுமார் 15-வயதுள்ள அவனது மூத்த பெண் ஏராளமான சாமான்களை வைத்து சமையல் செய்துகொண்டிருந்தாள். அவனது மனைவியும் கஞ்சி அருந்தித் தெளிவடைந்து சந்தோஷமாக இருந்தாள். அந்தக் காட்சி கனவுபோலத் தோன்றியது. தான் காண்பது மெய்யோ பொய்யோ என்று அவன் சிறிது நேரம் சந்தேகித்து ஸ்தம்பித்து நின்றான். குழந்தைகள் தகப்பனைக் கண்டவுடன் “அப்பா அப்பா!’’ என்று சந்தோஷ ஆரவாரம் செய்து, ஆசையும் ஆவலும் தோன்ற ஓடிவந்து அவன்மீது பாய்ந்து கட்டிக்கொண்டன, பெரிய குழந்தை யொன்று “அப்பா ஏன் நேற்று இராத்திரி முதல் நீங்கள் வீட்டிற்கு வரவில்லை? சமையல் செய்து வைத்துக்கொண்டு நாங்கள் உங்களுக்காக வெகு நேரம் காத்திருந்தோமே அக்காள் மறுபடி இப்போது சமையல்செய்து வைத்திருக்கிறாள். வாருங்கள் சாப்பாட்டுக்கு’’ என்று மிகுந்த வாஞ்சையோடு கூறி அவனைப் பிடித்திழுத்தது. அந்த வார்த்தைகளைக் கேட்ட நமது சமயற்காரன் தனது செவிகளையே நம்பாமல் பிரமித்துப்போய்த் தன்னோடு பேசிய குழந்தையை நோக்கி ‘’ஏனம்மா! நேற்று இரவிலும் இப்போதும் அக்காள் சமயல் செய்ததாகச் சொன்னாயே; சமயலுக்கு வேண்டிய சாமான்களெல்லாம் எங்கிருந்து வந்தன?’’ என்றான்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28

28 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் பற்றி அனைத்தும் கூற அதை கேட்ட அனைவரின் மனமும் கனக்க அமைதியாக இருந்தனர். அக்சரா பெருமூச்சுடன் “சரிங்க அங்கிள் நான் கிளம்பறேன்.” என அவள் சாதாரணமாக கூறினாள். அனைவரும் தங்களுக்குள் பார்த்துக்கொள்ள ஜெயேந்திரன்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37

37 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கோவிலில் பேசிக்கொண்டும், வேலை செய்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க ஆதியின் கண்கள் போனில் பேசிக்கொண்டே இருந்தாலும் திவியை சுற்றியே இருந்தது. சிறிது நேரம் சென்றதும் அம்மு “நகை எல்லாமே போட்டே இருக்கமுடிலமா” என்று புலம்ப மதி

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 27மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 27

27 நாகலாந்தில் உள்ள ஒரு உணவு வகையை சேர்க்கலாம் என்று யோசனை சொன்னான் மாதவன். “இல்ல மாதவன் எந்த அளவு மக்களுக்கு பிடிக்கும்னு எனக்குத் தெரியல”. “ஏன்?” “நாகலாந்து, அஸ்ஸாம் இந்த பக்கம் எல்லாம் மசாலாவே சேர்க்கமாட்டாங்க. விதவிதமான பச்சை மிளகா