Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10

    • ”யாரது, காந்தாவா?” என்று சோமு ஆச்சரியத்துடன் ஆவலுடன் கேட்டான். ஆமாம் என்று நான் கூறவில்லை. கூறுவானேன். அவருக்குத் தெரியவில்லையா என்ன? ”அடையாளமே தெரியவில்லையே” என்றார் சோமு. அவர்கூடத்தான் மாறியிருந்தார். யார் தான் மாறாமலிருக்கிறார்கள்? எது மாறாது இருக்கிறது. சம்பிரதாயப்படி? ஆகவே, அதற்கும் நான் பதில் ஏதும் சொல்லவில்லை. ”காந்தா, ஏன் பேசமாட்டேனென்கிறாய்” என்று கேட்டார் சோமு. பேச வேண்டுமாமே? நானே என்னிடம் பேச அவருக்கு அவ்வளவு ஆசையா? ஆசையை மட்டந்தட்ட வேண்டுமல்லவா? என் அளவு கடந்த ஆசையை அடியோடு அழித்தவர்தானே சோமு!

 

    • “உன்னைக் கண்டு நான் எவ்வளவு களிப்படைகிறேன். எவ்வளவு ஆவலோடு பேசுகிறேன். நீ என்னிடம் பேசவும் பிரியப்படவில்லையே. என்னைப் பார்க்க உனக்கு இஷ்டமில்லையா?’ என்று சோமு சற்றுச் சோகத்துடன் கேட்டார்.

 

    • சோகமா ! என் எதிரிலே தாரை தாரையாகக் கண்ணீர் விடட்டுமே எனக்கென்ன? என் கண்களைக் குளமாக்கிய கொடுமையை நான் மறந்தேனோ. ”சரி. இவ்வளவு வெறுப்புடன் இருக்கும் உன்னிடம் நான் ஏனம்மா பேச வேண்டும். ஏதோ பாலிய சினேகமாயிற்றே என்று பேசினேன். உனக்கு இப்போது புது அந்தஸ்து வந்து விட்டது. பழைய மனுஷ்யாள் பிடிக்கவில்லை போல் இருக்கிறது. நான் வருகிறேன்” என்று வாட்டத்துடன் சோமு கூறினான்.

 

    • போகாதே கண்ணே ! என்று அவர் கையைப் பிடித்து இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொள்வேனா என்ன, போகிறேன் என்றால், செய்யுங்கள் என்றுதானே சொல்வேன். அவர் ’வாட்டம்’ அவ்வளவு பெரிதா! நான் வாடிய வாட்டத்தை விடவா.. ?

 

    • நான் போய் வரட்டுமா? என்று மீண்டும் கேட்டார் சோமு.

 

    • ஸ்நானத்துக்கு வெந்நீர் தயாராயிற்று என்று அதே நேரத்தில் வேலையாள் சொன்னான். இதோ வருகிறேன் என்று அவனுக்குப் பதில் கூறிவிட்டு, செய்யுங்கள் என்று சோமுவுக்கும் பதில் கூறிவிட்டு, சோபாவை விட்டு எழுந்திருந்து உள்ளே போனேன். டைகர் என் கூடவே வந்துவிட்டது. சோமுவிடம் நான் நடந்து கொண்டது தவறு என்கிறீர்களா?

 

    • ஹலோ

 

    • யாரது?

 

    • நான்தான் சோமு

 

    • சரி.

 

    • இன்று மாலை தியேட்டருக்கு வருகிறீர்களா?

 

    • சொல்வதற்கில்லை.

 

    • சொல்லக்கூடாதா?

 

    • புறோகிறாம் தெரியாது.

 

    • காந்தா, இவ்வளவு கடுமையாக இருக்காதே என்னை நீ என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

 

    • என்னவென்று நினைத்துக் கொள்ள வேண்டும்?

 

    • என்னை சித்திரவதை செய்கிறாய்.

 

    • அப்படியா?

 

    • ஆமாம், ஆமாம். சரி; சரி.

 

    • டெலிபோனை வைத்துவிட்டேன்; சோமு பதைபதைத்துக் கொண்டிருப்பார் அந்தப் பக்கத்திலே. படட்டும், படட்டும். நான் சித்திரவதை செய்கிறேனாம். ஏன் செய்யக் கூடாது?

 

    • இது டெலிபோன் மூலம் சோமு என்னிடம் சரசமாடிக் கண்ட பலன்! சோமுவுக்கு என் போக்கு உள்ளே சுவாலையைக் கிளப்பிவிடுமல்லவா. கடைசியில் ஒரு நாள் வீட்டிற்கு வந்து வலியப் பேசத் தொடங்கினான்.

 

    • ‘காந்தா என்னைச் சற்று நம்பு. நான் முன்பு செய்தது தவறு. உன்னை நான் கொடுமைப்படுத்தினேன். அதை மறந்து விடு. இப்போது நான் மனமார நேசிக்கிறேன்.”

 

    • நேசியுங்களேன், அதில் என்ன தப்பு? யார் வேண்டாமென்றார்கள்?

 

    • இவ்வளவு வெறுப்பாக பேசாதே காந்தா. வேலால் புண்ணைக் குத்துவதுபோல் இருக்கிறது.

 

    • என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

 

    • என்ன செய்வதா? என்மீது அந்தக் கடுமையான பார்வையைச் செலுத்தாதே. பழைய காந்தாவாக இல்லையே நீ.

 

    • பழைய காந்தாவும், புதுக் காந்தாவும். இது என்ன பித்தம்?

 

    • பித்தந்தான், ஆனால் அதற்கு நீதான் காரணம்.

 

    • நானா?

 

    • ஆமாம், என்னை நீ இன்னமும் வாட்டாதே. நீ இனி இப்படியே நடந்து கொண்டால், நான் தற்கொலை செய்து கொள்வேன்; அந்தக் காலத்தில் நீயாக என்னை மணம் செய்து கொள்ள விரும்பிய போது, நான் முட்டாள் தனமாக மறத்துவிட்டேன். வாழ்வைப் பாழாக்கிக் கொண்டேன். உன்னை இங்கு கண்டது முதல் என் மனம் ஒரு நிலையில் இல்லை.

 

    • இது சகஜம். கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.

 

    • காதகீ, பாதகீ, போக்கிரி என்று கூறிக்கொண்டே சோமு கன்னத்தில் அடித்தார். நான் கோபித்தும் கொள்ளவில்லை, சிரித்தேன். அவருடைய மனதில் எரியும் வேதனையில் என் சிரிப்பு எண்ணெய் வார்த்தது போலிருந்தது. தலைகால் தெரியாமல் என் மீது மோகங்கொண்டு விட்டார். அவரது ஆசை நிறைவேறும் முன்னம்; அவர் எவ்வளவு பட வேண்டுமோ அவ்வளவும் பட்டுத்தான் ஆகவேண்டும். பழி வாங்காது விடக்கூடாது என்றுதான் எனக்குத் தோன்றிற்று. அந்த எண்ணம் எனக்கு உண்டானதில் ஆச்சரியமுண்டா?

 

    • ”அஷ்ட தரித்திரனுக்கு அதிர்ஷ்டம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல், கேவலம் சோற்றுக்கே வழியில்லாது இருந்தவள் ஜாதி ஆசாரத்தை விட்டு, குலத்தை கெடுத்துக் கொண்டு எவனுடனோ குலாவி வாழ்கிறாள். அவளுக்கு கர்வம் இல்லாமலா போகும்? ஆனால் இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்? மிராசுதாரின் சினேகிதம் போனால் லாட்டரி அடிக்கவேண்டியது தான். என்ன கர்வம் எவ்வளவு அலட்சியம் என்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி கடிதம் போட்டாளையா அந்தக் குட்டி. இப்போது அவள் செய்கிற பிகுவும் பேசுகிற பேச்சும் எப்படி இருக்கிறது தெரியுமா? அந்தக் கடிதம் கூட என்னிடம் இருக்கிறது” என்று சோமு கோபத்துடன் பங்களாத் தோட்டக்காரனிடம் கூறினாராம். அவனைச் சந்தித்து என்னைப் பற்றி விசாரித்து விட்டு பிறகு தமக்கிருக்கும் துக்கத்தை ஆற்றிக் கொள்ள ஆத்திரத்தோடு என்னைத் திட்டி இருக்கிறார். தோட்டக்காரன், ‘ஐயாéவிடம் சொல்லி விட வேண்டும் என்றான். நான் வேண்டாம் என்று தடுத்துவிட்டேன். என்னைச் சோமு வைத்து எனக்குக் கோபம் தரவில்லை. அந்தத் திட்டு சோமுவின் மனதிலே மூண்டுவிட்ட ஆசையிலே தோன்றியது அல்லவா?

 

    • நான் உதாசீனமாக நடத்த, நடத்த, அந்தத் தீ கொழுந்து விட்டு எரியத்தானே எரியும் தீ எரியும்போது வேதனை தாள மாட்டாது இப்படியெல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கச் சொல்லும். என்னை சோமு உதாசீனம் செய்தபோது என் துக்கத்தை தலையணையிலே நீராகப் பெருக்கித் தீர்த்துக் கொண்டேன். நான் பெண்பால், அவர் ஆண்பிள்ளை! ஆத்திரத்தைக் காட்டுகிறார். காட்டட்டுமே, அது எனது வெற்றியைத்தானே வெளிப்படுத்திற்று! சபாஷ் காந்தா, என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

 

    • # # #

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 15உள்ளம் குழையுதடி கிளியே – 15

வணக்கம் தோழமைகளே, சென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பகுதி உள்ளம் குழையுதடி கிளியே – 15 அன்புடன், தமிழ் மதுரா.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 44ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 44

44 – மனதை மாற்றிவிட்டாய் என்னதான் யோசித்தும் முயற்சித்தும் ஒன்றும் நடவாமல் போகவே கவலையில் அமர்ந்தே இருந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். முழிப்பு வந்து பார்த்த போது மணி 4.15 என இருந்தது. என்ன செய்வது என எண்ணிக்கொண்டே இருக்க 6 மணியளவில்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24

24 – மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரிக்கு வெற்றி புன்னகை ‘ஏன் இப்படி பேசுகிறீர்கள் என சண்டையிட்டாலும் சரி, அவர்களே மனதிற்குள் வைத்து புகைந்துகொண்டாலும் சரி, கல்யாணம் நிற்க வேண்டும் அதுதான் எண்ணம்’….. அனைவரும் அதிர்ச்சியாக திவியை இவள் என்ன சொல்றா என்ற