Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

  • அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின் கஷ்டத்துக்கு உதவுவதாகக் கூறி அம்மாவை ஏய்த்து வந்தான். இந்தத் தாராள தபால் சேவகன் உத்தியோகத்துக்குத் தக்க சம்பளம் தந்தும் வந்தேன். என்னிடம் பணமா இல்லை? பணம் என் பாதத்தை தொட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மிராசுதாரின் ”மோகனாங்கி” ஆன பிறகு பணமே எனக்குப் பரிவாரம். உல்லாச உலகில் நுழைந்தேன். என் ஏற்பாட்டின்படி சாந்தாவுக்கு சங்கீத வாத்தியார் அமர்த்தப்பட்டார். அம்மா தன் தம்பியின் கருணைப் பிரவாகம் இது என்று எண்ணினார்கள். சாந்தாவின் குரல் குயில் போன்றது. வெகு விரைவிலே நல்ல பாடகியானாள். என் செல்வாக்கை உபயோகித்தேன். ரேடியோவிலே சாந்தாவுக்கு மாதத்திலே நான்கு முறை ”சான்ஸ்” கிடைக்க ஆரம்பித்தது. குடும்பக் கஷ்டத்தைத் தீர்க்க சாந்தாவின் சங்கீதம் உதவிற்று. ஆனால் அந்த சங்கீதத்தை பயன்படும்படி செய்தவள் யார்? அம்மாவுக்கு அது தெரியாது. சாந்தாவுக்கு ஜாடைமாடையாகத் தெரியும்.

 

  • மண்டையை உருக்கும் வெயிலில் இருந்து விட்டு குளிர்ந்த சோலைக்குள் போய் உட்கார்ந்தால் எப்படி இருக்கும்? வாழ்க்கை எனக்கு அத்தகையதாயிற்று. உலகம் ஒரு நாள். ஒரு வாரம், ஒரு மாதம் ஏதோ உளறிற்று. அதுவும் என் எதிரில் அல்ல. பிறகு என்னைப் பற்றிப் பேசுவதையும் விட்டு விட்டது. நான் குடி புகுந்த குதூகலம் நிறைந்த புது உலகமோ என்னைக் கைலாகு கொடுத்து வரவேற்று அந்த உலகின் அழகைக் காணச் சொல்லிற்று. இவ்வுளவு இன்பம் இருக்க இவைகளை விட்டு வீண் காலந் தள்ளினேன். மிராசுதார் வாங்கின மோரிஸ் மைனர் காரில் டிரைவர் துரைசாமி 40 மைல் வேகத்தில் ஒட்ட மிராசுதார் என் தோள் மீது கையைப் போட்டபடி இன்று தாராச்சாங்கம் நாடகம் போகலாமா என்று கேட்கும்போது தான் ஆகட்டும், நாடகத்திலே உட்காரும்போது என் வைரத்தோடும் தொங்கட்டமும் ஒளிவிட சிவந்த என் அதரத்தைப் பிளந்து கொண்டு நகைப்பு ஒளி தரவும், அதைக் கண்டு “குஷி ஆட்கள்” கண்ணை என் பக்கம் திருப்பிப் பூசை செய்யும்போது தானாகட்டும், ’டே! ராமா , டீ, போட எவ்வளவு நேரம்’ என்று நான் அதட்ட, ‘வந்தேனம்மா’ என்று பணிந்து கூறிக்கொண்டு சமையல்காரன் வரும் போது தான் ஆகட்டும், இந்தப் புது மோஸ்தர் நிலக்கண்ணாடி பீரோ இந்த ஹாலிலே ரம்மியமாக இருக்கிறது என்று நண்பர்கள் புகழக் கேட்கும் போது தானாகட்டும். சுராஜ்மல் கம்பெனியார், புது மோஸ்தர் நகைகளை அனுப்பி வைக்கும் போது தானாகட்டும், நான் ஆனந்தம் அடையாமல் இருக்க முடியுமா? இவ்வளவுதானா! என் புன்சிரிப்புக்கு மிராசுதார் ஏங்கிக் கிடப்பார். எனக்குத் தலைவலி என்றால் அவருக்கு மன வலி. டாக்டர்கள் இரண்டு மூன்று பேர் வந்து விட வேண்டும். எனக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து பார்த்து குறிப்பறிந்து நடப்பதே அவருக்கு வேலை. அவர் மனம் மகிழ்ந்தால்தான் மனோகரமாக வாழ முடியும் என்று கருதினார். பெட்ரோல் போடாத மோட்டார் ஒடுமா? அது போல் குஷியில்லாத குட்டியைக் கொண்டு எப்படிக் காலந் தள்ளுவது? குட்டிக்கு குஷி பிறக்க வேண்டுமானால் என்ன வேண்டுமோ அதை வரவழைத்துத் தரத்தானே வேண்டும் என்று மிராசுதார் கூறுவார். அது நான் நுழைந்த புது உலகின் சட்டம். என் அழகுக்கு அவர் அடிமை. அந்த அழகு வளர வளர அவரது அடிமைத்தனம் வளரும். ஆகவே என் அழகை அதிகரிக்கச் செய்வதிலே எனக்கு அக்கரை பிறந்ததிலே ஆச்சரியம் என்ன? என்னுடைய ”பாஷன்” தான் ”மாடல்” ஆகிவிட்டது. ‘ஜாலி கர்ல்” என்பது எனக்குப் புது உலகம் தந்த பட்டம். ”லக்கிபெலோ” என்று மிராசுதாரைப் பாராட்டுவார்கள். எவ்வளவு வறுமையில் வாடினேனோ , அவ்வளவு செல்வத்தில் புரண்டேன்.

 

  • தரித்திர நாராயணியாக இருந்த நான் தங்களுக்குச் சுந்தரியானேன், விசாரம் பஞ்சாய்ப் பறந்தது. பொன் குடத்துக்கு பொட்டிட வேண்டுமா என்பார்கள் பழமொழி. ஆனால் பொன் குடம் மெருகு பூசாது இருந்தால் எப்படி இருக்கும்? வறுமையில் இருக்கும் போது அழகாகத்தான் காணப்பட்டேன். ஆனால் முகத்திலே ஒருவித சோகம். கண்களிலே பசிக்குறி காணப்பட்டு வந்தது. புது உலகில் கிடைத்த மெருகு என் அழகை அதிகரிக்கச் செய்தது. மேகத்தை விட்டு வெளியேறிய நிலவு எப்படி இருக்கிறது, வறுமையை விட்டு நீங்கி வெளி வந்த என் வசீகரமும் அப்படியே இருந்தது. என் புது வாழ்க்கையில் நான் வாழ்வின் மது பானத்தை மனங் கொண்ட மட்டும் பருகினேன். பரவசமானேன். எங்கள் அப்பாவை விரட்டிய மிராசுதாரர், என் விழியைத் தன் வழியாகக் கொண்டு என் பேச்சை வேதமாகக் கொண்டு என் மடியைத் தேவலோகம் எனப் புகன்று. என் சரசத்தை எதிர் நோக்கிக் கிடக்கும் போது, நானே பெருமையும் அடைந்ததுண்டு. பணம் என் கையிலே புரளும் போது பூரித்தேன். வசீகர வாழ்விலே வேகமாகப் புகுந்தேன். ஆழமாக நுழைந்தேன். ஆனந்த வல்லியானேன். உலகம் உயிரோடு என்னை முன்பு வாட்டிக்கொண்டிருந்தது. இப்போது? என் ஏவலாளியாயிற்று. இந்த நேரத்தில் என் அழகில் சொக்கி மிராசுதார் கிடக்கவும், மிராசுதாரருக்குக் கிடைத்தவள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று வேறு குட்டிக் குபேரர்கள் ஏங்கவும், ஆறு ஆண்டுகள் மூழ்கிக் கிடந்தேன். மிராசுதாரர் எனக்கு அலாவுதீன் தீபமானார். சோதிமயமான வாழ்வு வாழ்ந்தேன். ஊரார், அதாவது நான் முன்பு வசித்துக் கொண்டிருந்த உலகில் யார் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ தெரியாது. அதனை கவனிக்க எனக்கு நேரமில்லை. விதவிதமாகச் சிங்காரித்துக் கொள்ளவும், வகைவகையான களியாட்டங்களில் ஈடுபடவும், பல பல பக்தர்களுக்குத் தரிசனம் தரவும், பல பேர் தவமிருந்து வரம் பெறாது திகைக்கக் கண்டு நகைக்கவும்; நேரம் இருந்ததே தவிர, அந்த பழைய உலகைப் பற்றி எண்ண நேரமேது? என் உல்லாச வாழ்வு உச்ச நிலையில் இருக்கையில் ஓர் நாள். இந்த சமயத்தில் சோமு என்னைக் கண்டால் என்ன எண்ணுவான்? என்று ஒரு புதுமையான எண்ணம் தோன்றிற்று. அந்த எண்ணம் வளரவும் தொடங்கிற்று. சில நாட்கள் சென்றன. சோமு என்னைக் காணும் சம்பவம் நிகழ்ந்தது.

 

  • பசி கிடையாது! தூக்கம் கிடையாது! தூக்கம் வராது! நாரதரின் தம்பூரு, நந்தியின் மத்தளம், அரம்பை , ஊர்வசியின் நடனம், காமதேனு, கற்பக விருட்சம், தங்கக் கோபுரம், பவள மாளிகை, பச்சைப் புற்றறை, சிங்கார நந்தவனம், பாரிசாத மணம்; இன்னும் தேவலோகத்தை எப்படி எப்படியோ வர்ணிக்கிறார்கள். இவைகளைப் பெற நாம் ஏதோ புண்ணியக் காரியம் செய்யவேண்டும். செய்தால் இத்தகைய உலகத்திலே போய்ச் சுகமாக வாழலாம். கெட்ட காரியம் செய்தால் அக்கினிக் குண்டம் அகன்ற வாய்ப் பாம்பின் புற்று, நெருப்புச் சிலை, முள் பீப்பாய். செக்கு செந்தேள். ஈட்டி முனை, அரிவாள் நுனி, சம்மட்டி அடி, சக்கரம் என்று ஏதேதோ பயங்கரமான பொருள்கள் நிறைந்த நரகலோகத்தில் புகவேண்டும் என்று கூறுகிறார்கள். என்னைக் கேட்டால் சொல்வேன். பணம் படைத்தவர்கள், புராணப் புரட்டர்கள் என்றும் தேவலோகத்தை இங்கேயே அடைய முடியும். ஏழைகளுக்கு உலகம் நரக வேதனையைத்தான் தருகிறது. உதக மண்டல உச்சியிலே வெப்பத்தை நீக்கிக் கொள்ள நாங்கள் போனபோது. ”தேவலோகம்” எங்களை வரவேற்றது. நான் மகா கெட்டவள், விதவைக் கோலத்தை விட்டு விபசாரியானேன். ஆகவே ’நரகம்’ எனக்கு வரும் என்று புராணீகர்கள் கூறுவார்கள். ஆனால் தேவலோகத்தில் நான் இருப்பது அவர்களுக்குத் தெரியுமோ?

 

  • அழகிய பங்களா, அதை அடுத்துப் பூந்தோட்டம். அதிலே பல வர்ணப் பூக்கள், வானத்திலே மேகம் மோகன ரூபத்தில் உலாவிற்று . பனிநீர் தெளிப்பது போன்ற சிறு தூறல், பட்டு விரித்தது போன்ற பாதை . மேனகை, அரம்பையர் போன்ற மாதரின் சிரிப்பு. அருமையான சினிமா, ஆனந்தந் தரும் உண்டி வகைகள், ஆயாசத்தைப் போக்கும் கேளிக்கைகள், அடடா! உதக மண்டலத்தில் நான் கண்ட உல்லாசம், எனக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை புளகாங்கிதந்தான் இருந்தது. இவ்வளவு சுவை வாழ்க்கையிலே இருக்கிறது. வாழ்வது மாயம். மண்ணாவது திண்ணம் உலகமே மாயை என்று கூறும் பேர்வழிகளும் இருக்கிறார்கள். யாருக்கு உலகம் மாயை, பணம் படைத்தவர்களுக்கா? சுத்த பைத்தியக்காரத்தனமான பேச்சு. உலகம் அவர்களின் ஊஞ்சல் . அவர்கள் அதிலே சாய்ந்து கொண்டு ஆடிச் சல்லாபிக்கிறார்கள். அதைக் கண்டு இல்லாதவர்கள் எனக்கும் அங்கே இடங் கொடு என்று கேட்கத் தொடங்கினால் என்ன செய்வது என்று கிலி கொண்டு தந்திரமாக இந்த வேதாந்தத்தைப் போதித்து விட்டார்கள். சர்க்கரை டப்பியை குழந்தை எடுக்கப் போனால், வீட்டிலே சொல்லவில்லையா, ”அதைத் தொடாதே அது மருந்து” என்று குழந்தைகள் நம்பி விடவில்லையா? அது போல, ”உலகம் மாயை” என்ற பேச்சை விஷயத்தை உணராதவரையில் கேட்டு நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ காய்கிற சூரியனையும் நாங்கள் ஏய்த்து விட்டோம். பேப்பரிலே படித்தோம் 110 டிகிரி, 108 டிகிரி , ஆறு பேர் மண்டை வெடித்து விட்டது. என்று வெயில் கொடுமையின் செய்திகளை நாங்கள் சூரியனை அடங்கி ஒடுங்கி இருக்கும்படி செய்து விட்டோம். கொஞ்ச நேரம் வந்து உலவட்டுமா என்று எங்கள் அனுமதியைக் கேட்டுக் கொண்டு சூரியன் வந்து போவது போலத்தானே உதக மண்டலத்திலே இருந்தது. கண்ணுக்கும், கருத்துக்கும் இங்ஙனம் நாங்கள் விருந்து தந்து கொண்டு. வேடிக்கையாகக் காலந் தள்ளிக் கொண்டிருந்தோம்.

 

  • பாம்பாக வந்தாண்டி அவன்

 

  • படுக்கையிலே புரண்டாண்டி

 

  • வேம்பென்று வெறுத்தேண்டி

 

  • பின்னால் வேதனைப் பட்டேண்டி.

 

  • கண்மணன் செய்த கபடம்

 

  • என்னை மிக கலக்கிவிட்டதடி

 

  • சொர்ண நிறமான பாம்பு

 

  • சொகுசாக ஆடு தென்றான்

 

  • கண்ணாலே காண்போம் என்றேன்

 

  • அது என் கன்னிப்பழம் தின்றதே

 

  • என்று ‘அல்லி’ பாடினாள் என்பதாக என் வீட்டு வேலைக்காரப் பெண் எனக்கு பங்களாத் தோட்டத்திலே பாடி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் கூறிய கதையைக் கேட்டுக்கொண்டு நான் என் பிரியமுள்ள குச்சு நாய் டைகரின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது, யாரோ என்னைப் பார்க்க வந்திருப்பதாக வேலைக்காரன் வந்து அழைத்தான். மிராசுதார் மைசூர் ரேசுக்குப் போய் விட்டார். ஆகவே நானே வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். கூப்பிடுவது யார்? என்று தெரியவில்லையா என்று வேலைக்காரனைக் கேட்டேன் இல்லை என்றான். எப்படி இருக்கிறான்? எதற்குப் பார்க்க வேண்டுமாம்? என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனேன்.

 

  ஹாலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கக் கண்டேன். நேரே என் அறைக்குச் சென்று, அலங்காரம் ஏதாகிலும் குறைந்து விட்டதா என்று கண்ணாடியில் பார்த்துவிட்டு, ஹாலுக்கு வந்தேன். உட்கார்ந்திருத்த மனிதன் எழுந்து நின்றான். இருவரும் வாய்பிளக்க நின்றோம். என் எதிரில் நின்றவர் சோமு. எதிர்பாராத சந்திப்பு. ஒரே விநாடியில் என் மனதில் பல ஆண்டுகளாகப் படிந்திருந்த நினைவுகள் தோன்றி, என் உள்ளத்தை ஒரு விநாடியில் குலுக்கி விட்டன. நான் ஆச்சரியப்பட்டது போலவே சோமுவுக்கும் இருந்திருக்கும். சோமுவும் ஆச்சரியத்தால் அசைவற்று பேச்சற்று நின்றான். சோமு நான் அங்கு இருப்பதை அறிந்து வரவில்லை. நானும் வந்திருப்பது சோமு என்று எண்ண இடமே இல்லை. சோமு புதிதாக வந்துள்ள மோட்டார் தேவைப்படுமா? இல்லையானால் பழைய காருக்கு புது சாமான் தேவையா? என்று விசாரித்து வியாபாரம் செய்யவே அங்கு வந்தான் என பிறகு தெரிந்தது. மோட்டார் கம்பெனியின் ஏஜெண்ட் வேலையில் சோமு இருப்பது எனக்கு எப்படித் தெரியும்? பங்களாக்கள் தோறும் சென்று மோட்டார் வியாபாரத்துக்கு ஆர்டர் சேகரிக்கும் வழக்கப்படி எங்கள் பங்களாவுக்கு சோமு வந்தான். நல்ல கிராக்சி கிடைக்கும் என்று எண்ணித்தான் உள்ளே நுழைந்து இருப்பான் ஆமாம்! நல்ல கிராக்கியாகத்தான் கிடைத்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 9சாவியின் ஆப்பிள் பசி – 9

ஒரு வாரம் வரை கொலைக் கேஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்ஸ்பெக்டர் முனகாலா கூப்பிட்டு விடுவார் என்று சாமண்ணா தினமும் எதிர்பார்த்தான். யாரும் கூப்பிடவில்லை. வக்கீலிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை. அரிதாரம் பூசிக் கொள்ளாத நாட்கள் எல்லாம் அவனுக்கு அறவே

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28

அத்தியாயம் 28 – சந்திப்பு      பஞ்சநதம் பிள்ளை ஜீவியவந்தராயிருந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய இருதயமாகிய கோட்டையை கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். அதில் முத்தையன் பிரவேசிப்பதற்கு அவள் இடங்கொடுக்கவில்லை. அவ்வாறு இடங்கொடுப்பது பாவம் என்று அவள் கருதினாள். ஆகவே, முத்தையனுடைய நினைவு

கடவுள் அமைத்த மேடை – 12கடவுள் அமைத்த மேடை – 12

வணக்கம் பிரெண்ட்ஸ், கடவுள் அமைத்த மேடை போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. கதை எப்படி போகும் என்று சில கெஸ் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களது ஊகம் சரிதானா என்று இனி வரும் இரு பதிவுகளில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.