யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 06

 

கனவு – 06

 

தனது வீட்டிற்கு வந்த சஞ்சயனுக்கு இத்தனை நாட்களாக இருந்த வலிக்கும் மேலாய் இருதயத்தை யாரோ ரம்பம் கொண்டு அறுப்பது போன்ற வலி.

 

‘உன்னை இந்தக் கோலத்தில் காணவா ஆசைப்பட்டேன் வைஷூ… முரளி மீது நாளுக்கு நாள் நீ கொண்ட காதல் எத்தனை தீவிரமானது என்று எனக்குத் தானே தெரியும். உன் காதலின் ஆழத்தை உன்னை விட அதிகம் உணர்ந்து கொண்டவன் நான் ஆயிற்றே.

 

என் காதல் தோற்ற போது கலங்கியதை விட இப்போது உன் காதல் தோற்றதை எண்ணித் தான் அதிகம் கலங்குகிறேனடி. இன்று உன்னை இப்படித் தனியாகப் பார்க்கும் போது தாங்க முடியவில்லையே.

 

வாரம் தவறாது அரசடி ஞான வைரவருக்கு நீ சென்று விளக்கேற்றியதெல்லாம் வீண் தானா? தச்சந்தோப்பு பிள்ளையாருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ கட்டிக் கொடுத்த மாலைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தானா?

 

இத்தனை நடந்த பிறகும் இந்தக் கடவுளை நம்புகிறாயே வைஷூ… நாள் தவறாது அனைத்துத் தெய்வங்களையும் நீ வணங்கியும் கூட எல்லோரும் சேர்ந்து உன் வாழ்க்கையைச் செப்பனிடாமல் போய் விட்டார்களேம்மா…

 

சின்னச் சின்ன விசயங்களில் கூட உன் முடிவுகளில் மிகத் தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கும் நீ உன் வாழ்க்கை விசயத்தில் எப்படிக் கோட்டை விட்டாய் வைஷூ…? இத்தனை இளம் வயதில் தனியாக இவ்வளவு வருடங்களாக எப்படி இந்த சமூகத்தைச் சமாளித்தாய்?

 

சின்ன வயதில் உன் கூடவே இருந்து உன் நலனைக் கவனித்த நான் உனக்கு உறுதுணையொன்று தேவைப்பட்ட போது உன்னை விட்டுத் தூரமாய் இருந்து விட்டேனே. இப்போது யாரோடும் தொடர்பில்லாமல் இருந்த என் மீது தான் கோபம் வருகிறது.’

 

வீட்டுக்கு வந்த நேரமிருந்து தனக்குள்ளேயே மறுகியவனின் எண்ணங்கள் வைஷாலியைச் சந்தித்த ஆரம்ப நாட்களை நோக்கி நகர்ந்தது.

 

பாடசாலையின் முதன் நாள் வெள்ளைச் சீருடையில், வெள்ளைக் காலுறை முழங்காலுக்குச் சற்றுக் கீழேயிருக்க, வெள்ளை நிறக் காலணியணிந்து, தலையில் நடுவுச்சி வகிடெடுத்து கறுத்த ரிபனால் பூ முடிச்சிட்ட இரு கீரைப் பிடிகளும், நெற்றியில் புருவ மத்தியில் இட்ட கறுப்புப் பொட்டுக்கு மேலே ஒற்றைக் கீற்றாய் திருநீற்றுப் பூச்சும் முதுகில் தொங்கிய தோள்ப்பையும் தோளுக்குக் குறுக்காய்த் தொங்கிய சிவப்பு நிற தண்ணீர்ப் போத்தலுமாய் தகப்பனின் துவிச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி அவர் கையைப் பிடித்துக் கொண்டு மருண்ட விழிகளோடு வந்து கொண்டிருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சயன்.

 

அவளைப் பார்க்க அவனுக்குத் தான் விளையாடும் தன் வீட்டு முயல் குட்டி தான் நினைவுக்கு வந்தது. உடனேயே முயல் குட்டி என்று அவளுக்குப் பட்டப் பெயரும் மனதுக்குள் சூட்டிக் கொண்டான். வகுப்பறையில் தந்தை கொண்டு வந்து விட்டுச் செல்ல சிறு பயத்துடன், எப்போதடா அழுவோம் என்றிருந்தவளின் அருகில் அமர்ந்து அவளோடு முதல் நாளே நட்பாகிக் கொண்டான்.

 

சஞ்சயனின் அப்பாவின் பெயரும் வைஷாலியின் பெயரும் ஒரே எழுத்தில் ஆரம்பிப்பதால் வகுப்பறைப் பதிவேட்டில் கூட இருவரது பெயரும் அடுத்தடுத்தே வரும். அதனால்  ஓரளவு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வைஷாலியும் அவனும் இணைந்தே செயற்படக் கூடியதாக இருந்தது.

 

அந்தச் சிறு வயதில் இருந்தே சஞ்சயனால் அவனுக்கும் வைஷாலிக்கும் இடையில் யாரும் வருவதைத் தாங்க முடிவதில்லை. வீட்டுப்பாடம் செய்து விட்டு அவர்களது பாடக்கொப்பிகளை அடுக்கி வைக்கும் போது கூட அவளதுக்கு அடுத்து இவனதை வைப்பான். இடையில் யாரும் வைத்து விட்டால் போதும். உடனே மாற்றி விடுவான். சில நேரங்களில் மற்றைய மாணவர்களோடு இந்த இடப் பிரச்சினைக்காகச் சண்டை போடுவதும் உண்டு.

 

சில நேரங்களில் வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் ஒழுங்கு மாற்றப்பட இவன் வைஷாலிக்குப் பக்கத்தில் அமர முடியாமல் தவித்துப் போவான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இவன் பரீட்சைக் காலத்தை ஆவலாய் எதிர்நோக்கியிருப்பான். மற்ற மாணவர்கள் பரீட்சை பற்றிய பயத்தில் இருக்க இவனோ வருகைப் பதிவேட்டு ஒழுங்கின்படி தன் அருகே இருக்கப் போகும் வைஷாலியைப் பார்த்துக் கொண்டிருக்கலாமே என்று புளகாங்கிதம் அடைவான்.

 

வைஷாலி என்றால் அவனுக்குப் பிடிக்கும். ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆறு வயதில் அவளைக் கண்ட நாள் முதலாய்ப் பிடிக்கும். காரணம் கேட்டால் இன்னதென்று சொல்லத் தெரியவில்லை.

 

இத்தனைக்கும் வைஷாலி ஒன்றும் கண்டதும் ஆளை மயக்கும் பேரழகியும் கிடையாது. வெள்ளைத் தோலும் கிடையாது. உயரம் கூடக் குறைவு எனலாம். வகுப்பறையில் உயரத்தின் படி விடும் போது அவள் முதலாவது வரிசையில் அமர வேண்டியிருக்கும். கொஞ்சம் ஒல்லிப்பிச்சான் வேறு. இருந்தாலும் ஏதோ ஒரு காந்த சக்தி அவளிடம் இருக்கத் தான் செய்தது. துறுதுறு செய்கைகளாலும் கலகல பேச்சாலும் கவர்ந்தாளோ என்னவோ?

 

குழந்தை மனது என்பது எதனையும் எதிர்பார்ப்பின்றி அன்பால் மட்டுமே அணுகும் வயதென்பதாலோ என்னவோ சஞ்சயனுக்கு வைஷாலியைப் பிடித்தது. அவளிடமிருந்து எதையும் எதிர்பார்க்காது அவளிற்குத் தனது அன்பை மட்டுமே பரிசாக வழங்கிக் கொண்டிருந்தான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவள் எதற்காகவும் அழக் கூடாது. அது ஒன்றே தான் அவன் நோக்கம், எண்ணம், குறிக்கோள். அவளுக்கு ஒன்றென்றால் துடித்துப் போய் விடுவான்.

 

மூன்றாம் வகுப்பில் பிரம்படி நடேசன் ஆசிரியர் இவளை விளாசித் தள்ளிய போது அவளை விட அதிகம் கண்ணீர் வடித்தது இவன் தான். அவள் விழுந்தெழும்பிக் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு மாறிய பின்னர் கூட வகுப்பறை கூட்டும் இவளது முறைக்கெல்லாம் தானே நேரத்தோடு வந்து கூட்டி விடுவான். அவளைக் குப்பை அள்ளுவதற்கு விடவே மாட்டான்.

 

இப்படி அவளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்தாலும் கூடச் சில நேரங்களில் இவனே அவளைக் கோபப் படுத்திப் பார்க்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு முறை வைஷாலி இவனது பென்சிலை மாறி எடுத்து விட்டாள். உடனே இவன்,

 

“வைஷூ…! எதுக்கு என்ர பென்சிலை எடுத்தனி? நான் படம் கீறவென்று வடிவாக் கூர் தீட்டி வைச்சிருந்தனான்.”

 

வைஷாலியின் கெட்ட குணம் ஒன்று கோபம். மூக்கு நுனியிலே கோபம் வரும் என்பார்களே அது போல. இப்போதும் அவ்வாறே கோபப்பட்டவள் எதுவும் பேசாது அவனை முறைத்துப் பார்த்து விட்டு அவனது பென்சிலை எடுத்து உடைக்க முயன்றாள்.

 

அவனது பென்சில் ஏற்கனவே பாதி தேய்ந்து இருந்த படியால் அவளால் அதைக் கையால் உடைக்க முடியவில்லை. வாயில் வைத்துச் சப்பித் துப்பி விட்டுத் தன்னுடைய புதிய பென்சிலை அழகாக கூர் சீவி அவனிடம் கொடுத்தாள்.

 

இது நடந்தது இரண்டாம் வகுப்பில். வைஷாலியின் கோபத்தை சஞ்சயன் அறிந்து கொண்டதும் இப்படித்தான். ஆனால் அவனுக்கு நாளடைவில் அவள் பழக்கவழக்கங்கள் அனைத்தும் அத்துப்படி. அவள் கோபம் எல்லாம் வெறும் இரண்டு நிமிடங்கள் தான். என்ன தான் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாலும் இவன் சென்று பேசியவுடன் எதுவுமே நடவாதது போல மிகச் சாதாரணமாகப் பேசுவாள்.

 

வைஷாலி மற்றவர்களோடு கோபப்படும் போதும் சரி, சண்டை போடும் போதும் சரி அவள் உணர்வுகள் புரிந்து அவளைச் சமனிலைப் படுத்துவது சஞ்சயன் தான்.

 

அவளும் இவனோடு அன்பாகத்தான் இருப்பாள். பாடசாலை இடைவேளையின் போது ஒரு நாள் கூட இவனை விட்டு விட்டு உணவுண்ண மாட்டாள். பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்வதும் இவன் கூடவே தான். சஞ்சயனின் வீட்டுக்குக் குறுக்கு வழியில் விரைவில் சென்று விடலாம் என்றாலும் இவள் கூட இன்னும் சிறிது நேரம் கூடக் கழிக்கலாமே என்ற ஆசையில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல, வைஷாலியை அவள் வீட்டில் விட்டு விட்டுத் தான் தன் வீட்டிற்குப் போவான்.

 

அதுவும் ஒரு விதத்தில் வைஷாலிக்குப் பாதுகாப்பாய் இருந்தது. ஒருநாள் இவர்கள் வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்த போது இவள் ஏதோ வாய் காட்டினாள் என்று கூடப் படிக்கும் குழப்படிக்கார பொடியன் ஒருவன் இவளைப் பென்சிலால் குத்துவதற்கு வந்தான். சஞ்சயன் தான் இடையில் புகுந்து அந்தக் குத்தைத் தனது கைகளில் தாங்கிக் கொண்டான். இப்போதும் வலது தோளிற்குச் சற்றுக் கீழே பொட்டாய் ஒரு சின்ன அடையாளம் காணப்படுகிறது. சஞ்சயன் மட்டும் தடுத்திராவிட்டால் அன்று வைஷாலியின் கண் ஒன்று போயிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

சஞ்சயன் அவளை முயல் குட்டி என்று தான் அழைப்பான். அவளும் அவன் பட்டப் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் மொத்துவாள். இவனும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொள்வான்.

 

சஞ்சயன் நன்றாகப் பாடுவான். இவளோ மூன்று வயதிலிருந்தே பரத நாட்டியம் கற்றுக் கொள்பவள். பாடசாலையின் அனைத்துக் கலை நிகழ்வுகளிலும் இருவரது நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக இடம் பெறும்.

 

சஞ்சயனிற்கு கொஞ்சம் மேடைக் கூச்சம் உண்டு. நிறைந்த சபை முன்னே பாடுவதற்குச் சிறிது பயமும் தயக்கமும். ஆனால் அந்த நிமிடங்களில் அவனைத் தைரியப்படுத்தி அனுப்புவது வைஷாலி தான். அவள் தனது நிகழ்ச்சி முடித்தோ, அல்லது அடுத்து வரப் போகும் தனது நிகழ்ச்சிக்காகவோ மேடைக்குப் பக்கத்து அறையில் காத்திருக்கும் போது இவனை ஆறுதல்படுத்தி மேடைக்கு அனுப்புவாள்.

 

தனது நிகழ்ச்சிக்காகச் செல்லும் போது இவனைப் பார்த்து சிறு தலையசைப்போடு புன் முறுவலுடன் செல்பவளை வியப்புடன் பார்ப்பான் இவன், எப்படித்தான் துளி பயமும் இல்லாமல் இவ்வாறு சிரித்துக் கொண்டே மேடைக்குச் செல்கிறாள் என்று.

 

முதலாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை இருவரும் இணை பிரியாத தோழர்கள் என்றால் மிகையாகாது.

 

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்த அந்தப் பள்ளியில் இருந்து வெளியேற வேண்டிய நாளும் வந்தது. பிரிவுத் துயரில் தவித்தனர் மாணவர்கள் அனைவரும். சஞ்சயன் தான் அழுது கரைந்தான் எனலாம்.

 

ஆறாம் வகுப்பிற்கு இருவரும் ஒரே பாடசாலைக்கும் டியூசனுக்கும் செல்வோம் என்று கூறிய வைஷாலி வழக்கம் போலத்தான் இருந்தாள். இவர்கள் விருப்பம் எல்லாம் என்ன அந்தளவு இலகுவில் ஈடேறி விடுமா என்ன?

 

சஞ்சயன் இவளுக்குக் கொடுத்த வாக்குக்கேற்ப நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்திற்குச் செல்ல, வைஷாலியின் வீட்டில் அவள் பேச்சு எடுபடவில்லை. பெண்கள் பாடசாலையான வட மத்திய மகளிர் கல்லூரிக்குத் தான் அனுப்பப்  பட்டாள். சஞ்சயனுக்கும் வைஷாலிக்குமான முதல் விலகல் விழுந்தது இங்கே தான்.

 

பழைய நினைவுகளில் ஊறிப் போயிருந்தவனை தொலைபேசி அழைத்த சத்தம் நடப்பிற்குக் கொண்டு வந்திருந்தது. ஜீன்ஸ் பொக்கட்டிலிருந்த கைத்தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான்.

 

“ஹலோ… மாமா… எப்படி சுகம்?”

 

என்ற மருமகனின் மழலைக் குரலில் கடந்த கால வலிகள் மறந்து தானும் சிறு பிள்ளையாகி அவனோடு செல்லம் கொஞ்ச ஆரம்பித்தான்.

 

இங்கே வைஷாலியும் தனது ஆரம்பப் பள்ளி நாட்களின் நினைவுகளில் தான் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

 

நினைவுகள் சுகம் சேர்க்குமா? இல்லை ரணமாக்குமா?4 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 06”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 34ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 34

உனக்கென நான் 34 அயல்நாட்டு நுழைவுசீட்டினான பாஸ்போர்ட் அவன் வைத்த இடத்தில் இல்லை. நிச்சயமாக தெரியும் அப்பாதான் அதை எடுத்துள்ளார். வேகமாக படியிலிருந்து கீழே இறங்கினான். சன்முகமோ ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் எதிரில் இருந்த மேஜையில் சந்துருவின் பாஸ்போர்ட் இருந்தது.