யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05

கனவு – 05

 

ஒலித்துக் கொண்டிருந்த தொலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. ஒரு தடவை முழுதாக ஒலித்து ஓய்ந்ததன் பின்னர் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்கவும் எடுத்துப் பார்த்தாள். சஞ்சயன் தான்.

 

“முரளியின் நம்பரை அனுப்பு”

 

என்று வந்திருந்தது. சிறிது நேரம் சிந்தித்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவனுக்குப் பதில் அனுப்பினாள்.

 

“நாளைக்கு லஞ்ச்சுக்கு வா… வீட்டு அட்ரஸ்….”

 

அவனும் பார்த்து விட்டு சரி என்று அனுப்பி இருந்தான்.

 

அன்றிரவு தூக்கம் தொலைத்துக் காலையில் எழுந்து அருகிலிருந்த காய்கறிகள் விற்கும் கடைக்குச் சென்றவள் புதிதாய் வந்திருந்த மரக்கறிகளை வாங்கி வந்து சமையலை ஆரம்பித்து விட்டாள். மலையகப் பகுதியில் புத்தம் புதிதாய் பச்சையாய் விளைந்த காய்கறிகளுக்குக் குறைவேது?

 

வேலை முடித்து வந்து அதுல்யா இவளுக்கு உதவி செய்ய முனைய, வைஷாலி தடுத்து விட்டு அவளைச் சென்று சிறிது நேரம் தூங்கி எழச் சொல்லி விட்டுத் தானே முழுச் சமையலையும் முடித்தாள்.

 

மணி பன்னிரண்டு அடிக்கவும் கையிலே பெரிய பூங் கொத்தோடு வந்தவனை மகிழ்ச்சியாகவே வரவேற்றாள் வைஷாலி.

 

மலர்ந்த முகத்தோடு அவளிடம் பூங் கொத்தைக் கொடுத்தவன் விழிகள் முரளிதரனைத் தேடியது. அது புரிந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது அவனை உள்ளே வருமாறு அழைத்து வரவேற்பறையில் அமருமாறு பணித்தாள்.

 

அங்கிருந்த அதுல்யாவும் அவனை வரவேற்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் வாய் விட்டே கேட்டு விட்டான் சஞ்சயன்.

 

“வைஷூ…! முரளி எங்கே? நேற்று நீ நம்பரும் அனுப்பேல்ல…”

 

“முரளி கனடாவில… போய் ஐந்து வருசத்துக்கும் மேல… உனக்கு அது கூடத் தெரியாதாடா?”

 

“உண்மையாவோ… சத்தியமாத் தெரியாது வைஷூ… நான் யாரோடயும் கதைக்கிறேல்ல தானே… நீ ஏன் நேற்றே அதைச் சொல்லேல்ல. முரளி இங்க இல்லை என்று தெரிஞ்சிருந்தால் நான் வந்திருக்க மாட்டன் வைஷூ… ஸொரிடி… நான் போய்ட்டு வாறன்… நாங்க வெளில எங்கேயாவது மீட் பண்ணுவோம்…”

 

கூறிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தவனை முறைத்தாள் வைஷாலி.

 

“அவ்வளவு நல்லவனாடா நீ… ஓவரா ஸீன் போடாமல் முதல்ல உட்காரு… உனக்கெல்லாம் அவ்வளவு ஸீன் இல்லை நண்பா…”

 

அவள் கூறவும் தயக்கத்துடன் அமர்ந்தான் சஞ்சயன். வரும்போது இருந்த இயல்பு நிலையை இழந்து அவன் கொஞ்சம் அவஸ்தையோடே அமர்ந்திருந்தான். மனதிலோ ஏகப்பட்ட குழப்பங்களும் கேள்விகளும். இவள் ஏன் கனடா போகாமல் இங்கே தனியாக இருக்கிறாள் என்று.

 

தானே தயாரித்த ஆப்பிள் பழச்சாற்றை அவனிடமும் அதுல்யாவிடமும் கொடுத்து விட்டுத் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு ஸோபாவில் அமர்ந்தாள் வைஷாலி.

 

சஞ்சயனின் குழப்பம் நிறைந்த முகத்தை ஏறிட்டவள், அவனின் கேள்விகள் புரிந்தும் முடிந்தவரை அவற்றை ஒதுக்கவே முனைந்தாள். மூவரும் பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சாப்பிட ஆயத்தமானார்கள்.

 

உருளைக் கிழங்கும் தக்காளிப் பழமும் போட்டுக் குழம்பு, கத்தரிக்காயும் கடலையும் போட்டுப் பிரட்டல் கறி, பூசணிக்காயும் மரவள்ளிக் கிழங்கும் போட்டு ஒரு வெள்ளைக் கறி, கீரை, வாழைக்காய் சம்பல், பயிற்றைங்காய்ப் பிரட்டல், பப்படம், மோர் மிளகாய் பொரியல், வடை, பாயாசம் என்று ஒரு விருந்தே தயாரித்திருந்தாள் வைஷாலி.

 

அதுல்யாவே வியப்போடு சாப்பாட்டு மேசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேசையில் வந்தமர்ந்தவனுக்கு முன்னால் ஒரு வாழை இலையைக் கொண்டு வந்து வைத்தாள் வைஷாலி. அதைக் கண்ட சஞ்சயன்,

 

“சூப்பர் வைஷூ… வாழையிலை இருக்கு என்றால் கீழேயே இருந்து சாப்பிடுவம். எவ்வளவு நாளாச்சு… இப்பிடி எங்கட ஊர்ச் சமையலைப் பார்த்து. வடை பாயாசம் வேற செய்திருக்கிறாய்… நிலத்தில இருந்து சாப்பிட்டால்தான் வாழையிலைக்கு மரியாதை…”

 

கூறியவன் அத்தோடு நில்லாமல் வரவேற்பறையில் ஸோபாவுக்கு முன்னால் இருந்த சிறிய ரீப்போவை எடுத்து ஒதுக்கமாக வைத்து இடம் ஏற்படுத்தி விட்டு உணவிருந்த பாத்திரங்களைக் கீழே நிலத்தில் கொண்டு சென்று வைத்தான். அதுல்யாவும் வைஷாலியும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

 

எல்லா உணவுப் பொருட்களையும் கீழே வைத்ததும் மூவரும் உணவுப் பாத்திரங்களைச் சுற்றியமர்ந்து வாழையிலையை தங்களுக்கு முன்னால் வைத்து ஆளாளுக்கு உதவி செய்து பரிமாறியபடி உண்ண ஆரம்பித்தனர். இரண்டு வாய் வைத்து விட்டு கலங்கிய கண்களை மெதுவாய் உள்ளிழுத்தான் சஞ்சயன்.

 

வைஷாலி குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, சஞ்சயன் எதிரே அமர்ந்திருந்த அதுல்யா இதைக் கவனித்து விட்டாள்.

 

“என்னாச்சு சஞ்சயன்? உறைப்பாக இருக்கா?”

 

அவள் அவ்வாறு கேட்டதைப் பார்த்து வைஷாலியும் நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

 

“உறைப்பெல்லாம் அளவாகத் தான் இருக்கு. நான் இப்பிடிச் சாப்பிட்டு வருசக் கணக்காச்சுத் தெரியுமா? அதுவும் வைஷூ கையால சாப்பிடுவன் என்று கனவிலும் நினைச்சுப் பாக்கேல.”

 

கொஞ்சம் குரல் கமற அவன் கூறவும் வைஷாலிக்கும் கேலி பேசத் தோன்றாமல் அவனை அமைதியாகவே பார்த்திருந்தாள்.

 

அதுல்யா தான் சூழ்நிலையின் கனத்தைக் குறைக்க பொதுவாகப் பேச ஆரம்பிக்க மூவரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே  உண்டனர். சோறு, கறி சாப்பிட்டு முடித்ததும் அதே இலையில் சஞ்சயன் பாயாசத்தை விட்டுக் கைகளால் அள்ளிக் குடிக்கவும் அவனையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அதுல்யா.

 

“ஏன் சஞ்சயன் இப்படிக் குடிக்கிறியள்? டிஸ்ல ஸ்பூன் போட்டுக் குடிக்கலாமே.”

 

“இப்பிடிக் குடிக்கிற ருசியே தனி அதுல்யா…”

 

என்றவன் தனது கருமமே கண்ணாய்ப் பாயாசத்தை ஒரு வழி பார்க்க, அதுல்யாவும் அவனைப் போல சிறிது பாயாசத்தை இலையில் விட்டு ருசித்துப் பார்த்தாள். அந்த சுவை பிடித்து விடவே அப்படியே சுவைக்கலானாள்.

 

மூவரும் சேர்ந்து உண்ட இடத்தை ஒதுக்கி சுத்தம் செய்து விட்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தார்கள்.

 

“ரொம்ப தாங்ஸ் வைஷூ… ஒரு கல்யாணச் சாப்பாடே சாப்பிட்டது போல இருக்கு… மூக்கு முட்டச் சாப்பிடுறது என்ன என்று எனக்கு இப்பத்தான் புரியுது…”

 

என்றவாறு வயிற்றைத் தடவினான்.

 

“ரொம்ப அவசரப்பட்டு நன்றி சொல்லாதீங்க சஞ்சயன். புறூட் சலாட் இன்னும் பிரிட்ஜில் இருக்கு. உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாமே… வைஷூ சொன்னா…”

 

அதுல்யா குறுக்கிடவும், சஞ்சயன் வியப்பும் மகிழ்ச்சியுமாக வைஷாலியை ஏறிட்டான்.

 

“உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா வைஷூ?”

 

“எனக்கு கொஞ்சம் கூடத் தராமல் போட்டுக் கட்டுவியே… எப்பிடி மறக்கும்?”

 

“ஓகே… ஓகே… அதுல்யாவுக்கு முன்னால மானத்தை வாங்காமல் ஒரு பத்து நிமிசம் கழிச்சுக் கொண்டு வா…”

 

என்று சிரித்தவன்,  வைஷாலியிடம் வண்ணக் காகிதம் சுற்றப்பட்ட ஒரு பொதியைக் கொடுத்தான். நன்றி சொல்லி வாங்கியவள் சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு வாங்கிப் பார்த்தாள்.

 

உள்ளே ஒரு போட்டோ பிரேம் இருந்தது. என்ன போட்டோ என்று ஆவலோடு எடுத்துப் பார்த்தவளின் முகம் அடுத்த நொடியே அவ்வளவு நேரமாக இருந்த மகிழ்ச்சிக்கு எதிர்மாறாய்க் கறுத்துச் சுருங்கியது.

 

மூன்றாம் தரம் படிக்கும் போது முரளிதரனும் அவளும் ஜோடியாக நடித்திருந்த பாடலின் ஒரு காட்சியின் புகைப்படம் அது. அந்தப் பாடலில் சஞ்சயனும் நடித்திருந்த படியால் அவனிடம் இந்தப் புகைப்படம் இருந்திருக்கிறது. சஞ்சயன், வைஷாலியையும் முரளியையும் மட்டும் பெரிதாக்கி அந்த போட்டோ பிரேமில் போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

 

சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பாள் என்று நினைத்திருக்க, முகம் கறுத்தவளைப் பார்த்ததும் என்னவோ சரியில்லை என்று மட்டும் சஞ்சயனுக்குப் புரிந்தது. வைஷாலி உடனேயே தனது முகபாவத்தை மாற்றிக் கொண்டு புறூட் சலாட் எடுப்பதற்காகச் சமையலறைக்குச் சென்றாள்.

 

சஞ்சயனைச் சந்தித்து இந்த இரண்டு மணி நேரங்களில் அதுல்யாவுக்கு அவனில் நல்லதொரு அபிப்பிராயம் வந்திருந்தது. இவன் மூலமாவது தோழியின் வாழ்வில் ஒரு விடியல் வரட்டும் என்று எண்ணினாலும் வைஷாலியின் அனுமதியின்றி அவளைப் பற்றிச் சொல்லத் தயங்கினாள்.

 

புறூட் சலாட்டுடன் வந்தவளைக் கேள்வியாய் நோக்கினான் சஞ்சயன். வைஷாலி அப்போதும் அமைதியாக இருக்கவும்,

 

“வைஷூ… முரளிக்கும் உனக்கும் என்னாச்சு? உன்ர விசயத்தை நான் வேற யாரையும் விசாரிச்சு அறிய விரும்பேல்ல. நீ விரும்பினால் சொல்லு…”

 

ஒரு பெருமூச்சோடு புறூட் சலாட் கிண்ணத்தை அளைந்தவள்,

 

“நாங்க பிரிஞ்சு அஞ்சு வருசமாகுது. முரளி இப்ப வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டதாக அறிஞ்சன்.”

 

கேட்டவன் அதிர்ந்தே போனான். எப்படி இது சாத்தியம்? வைஷாலி முரளியை எவ்வளவு காதலித்தாள் என்று அவனை விட வேறு யாருக்குத் தெரிந்து விடும்? ஒன்றா… இரண்டா… எத்தனை வருடக் காதல் இது… மூன்றாம் வகுப்பில் முரளியைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டவள், அந்த ஆசையில் இருந்து கொஞ்சம் கூடப் பின்வாங்காது நின்று சாதித்தாளே… அப்படியிருக்க இந்தப் பிரிவு எப்படி நடந்தது?

 

அதிர்ச்சியில் கையிலிருந்த கரண்டியைத் தவற விட்டான். அவனின் அதிர்ச்சியைப் புரிந்து கொண்ட அதுல்யா இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி கீழே விழுந்த கரண்டியைக் கழுவும் பாவனையில் அதை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

 

“என்னாச்சு வைஷூ…?”

 

சஞ்சயனின் கம்மிய குரலில் இவள் உடைந்தே போனாள். எவ்வளவு தடுக்க முனைந்தும் இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் அருவியாய் ஊற்றெடுத்தது.

 

அவளை எப்படி ஆறுதல் படுத்துவது, என்ன சொல்லித் தேற்றுவதென்று தெரியாமல் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான் சஞ்சயன். சத்தமின்றி விசித்தவள்,

 

“ப்ளீஸ் எதுவும் கேட்காதை சஞ்சு…”

 

சொன்னவள் அடக்க மாட்டாது வந்த விம்மலை அடக்க முனைந்த படி குளியலறைக்கு விரைந்தாள்.

 

வைஷாலி எழுந்து செல்வதைப் பார்த்தபடியே அதுல்யா வந்து அமர்ந்தாள். சஞ்சயன் விறைத்துப் போய் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவள் மனமும் அந்த இரு உள்ளங்களுக்காகவும் வருந்தியது.

 

“கவலைப் படாதீங்கோ சஞ்சயன். வைஷூ இப்ப நல்லாத் தான் இருக்கிறா. அவ அழுது நான் பார்த்ததே இல்லை. அழுது ஆகப் போகிறது என்ன என்று தான் சொல்லுவா. இன்றைக்கு உங்களைப் பார்த்ததும் அவளுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து கொன்றோல் பண்ண முடியாமப் போச்சுப் போல… அவளே பிறகு சந்தர்ப்பம் அமையும் போது உங்களுக்கு எல்லாம் சொல்லுவா என்று நினைக்கிறேன். நீங்க அது வரை முரளி பற்றிக் கதைக்காமல் இருக்கிறது நல்லம்…”

 

வாய் பேசக் கூட வார்த்தை வராமல் சரியெனத் தலையசைத்தான் அந்த ஆருயிர் நண்பன்.

 

எவ்வளவு நேரம் தான் குளியலறையில் தஞ்சம் அடைவது என்று எண்ணியவளாய் குளிந்த நீரால் முகத்தை அடித்துக் கழுவித் துடைத்து விட்டு வரவேற்பறைக்குச் சென்றாள்.

 

அதற்குள் அங்கே தொலைக்காட்சியைப் போட்டு விட்டு இன்றைய திரைப்படங்கள் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர் அதுல்யாவும் சஞ்சயனும். இவளும் எதுவுமே நடக்காதது போல அவர்களோடு அமைதியாக இணைந்து கொண்டாள்.

 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சஞ்சயன் இருவரிடமும் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றான். செல்லும் போது மறக்காமல் வைஷாலி மேசையில் வைத்திருந்த அந்த சிறு வயது போட்டோ பிரேமையும் தன்னோடு எடுத்துச் சென்று விட்டான்.

 

வேறு எங்கும் வெளியே சுற்றத் தோன்றாமல் நேராக வீட்டுக்கு சென்றவன் எண்ணம் முழுவதும் வைஷாலியையும் முரளிதரனையும் சுற்றித் தான் வந்தது. வைஷாலியும் சஞ்சயன் கிளறி விட்ட பழைய ஞாபகங்களைத் தான் மீட்டிப் பார்த்து இன்னும் மனதை ரணப்படுத்திக் கொண்டிருந்தாள்.

 

அவள் காயங்கள் ஆறுமா?

 

7 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05”

    1. கண்ணு வைச்சிடாதீங்க. நாங்க ஆரம்பத்தில எப்பவுமே இப்படித்தானே. போகப் போகத்தானே விளையாட்டு காட்டுறது. ரொம்ப நன்றி சகோதரி

Leave a Reply to யாழ் சத்யா Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46

46 – மனதை மாற்றிவிட்டாய் யாரிடமும் எதுவும் கூறாமல் மீண்டும் அமைதியாக அறைக்கு வந்து அமர்ந்தாள். ஆதியும் அவளை தொந்தரவு செய்யவில்லை. மதிய வேளை தாண்டியும் அவள் அதே இடத்தில இருக்க ஆதி அவளிடம் வந்து சாப்பிட சொல்லி தட்டை நீட்டினான்.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02

உனக்கென நான் – 2 “அட கழுத வெளிய வா…” என செல்லமாக திட்டிய தன் தந்தை “நீ யாருன்னு தெரியலைல அதான் பயந்துபோய் நிக்குறா… இதுக்குதான்டா சொல்றது அடிக்கடி வந்துட்டு போகனும்னு” என தன் தோழரை கடிந்து கொண்டார் அன்பரசியின்