பாகம்- 8
“கண் என்னும் கூட்டில்
என்னை சிறை வைத்துவிட்டு
பொய் என்று சிரிக்கிறாய்!
நீ சிரிப்பதில் சிக்கிவிட்டதடி என் இதயம்…
சிறையிலிருந்து வெளியில் வர வழியிருந்தும்!
மனமின்றி தவித்து கொண்டிருக்கிறேன்
நீ என்னை விடுவித்துப் பாரேன்
உன் கண் சிறையிலிருந்து தப்பி
உன் இதயக் கூட்டில் பதுங்கிவிடுவேன்
காற்றின் உன் வாசத்தில் மூழ்கிவிடுவேன்! ”
ஸ்ருதியின் போன் இசையெழுப்ப அவசரமாக அதை காதில் வைத்துக் கொண்டாள் ஸ்ருதி.
“என்ன உன் தோழி கூப்பிட்டாளா?” குமார் புன்னகை குரலில் கேட்டான்
“ம், கூப்பிட்டாள்”
“என்ன சொன்னாள்”
“உங்களைப் பற்றி பெருமையாகப் பேசினாள். தேங்க்ஸ் குமார்!”
“எதற்கு?”
“ஸ்வேதாவுடன் பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை”
“சில விசயங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அதில் ஒன்று உண்மையான நட்பு. யூ ஆர் கிப்டட். உனக்கு உண்மையான நட்பு அமைந்திருக்கிறது. அதற்கு நான் மரியாதை கொடுத்தேன் அவ்வளவு தான்”
“ஆனால், நீங்கள் அவளுடன் பேசியது, எனக்கு ஸ்பெசல் தான் குமார்!”
“ம்….” என்று புன்னகைத்தான் குமார்
“நாளைக்கு வி.ஓ.சி பார்க்கு போகலாமா?”
“சாய்ங்காலம் ஐந்து மணிக்கு வருகிறேன்!”
“ம், சரி. போனை வைக்கிறேன்”
“ம், சரி”
போனை ஸ்ருதி அணைப்பதற்கும், மோகன சுந்தரம் வரவேற்பறையிலிருந்து அவளை அழைப்பதற்கும் சரியாய் இருந்தது.
“ஸ்ருதி.. ஸ்ருதி..” மோகன சுந்தரம் அவளை அழைத்தார்.
“என்னப்பா?” என்று கேட்டபடி ஸ்ருதி வெளியே வந்தாள்
“வாடா இங்க வந்து உட்காரு”
‘இவர் போடுகின்ற பிட்டு சரியில்லை, இவ்வளவு பாசமாக கூப்பிடுகிறாரே!!’ ஸ்ருதி முணுமுணுத்தே கொண்டே வந்தாள்.
“என்னப்பா பாசம் பொங்கி வழியுது?” ஸ்ருதி கவனமான குரலில் கேட்டபடி வந்து அமர்ந்தாள்.
“இல்லைடா தங்கம்..”
“அப்பா நீ இப்படி திடீரென்று பாசத்தை ஊற்றினால் எனக்கு பயமாக இருக்கிறது இல்லையா? அதனால் எப்பவும் போலவே பேசுப்பா!”
“உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன்!” அவரும் பட்டென்று போட்டு உடைத்தார்
“என்ன?” ஸ்ருதி அதிர்ந்தாள்.“யாரை கேட்டு மாப்பிள்ளையை வரச் சொன்னீர்கள்?” கோபமாய் வினவினாள் ஸ்ருதி
“யாரை கேட்க வேண்டும்?”
“என்னை கேட்க வேண்டும்!” என்று தந்தையிடம் கோபப் பட்டவள், “என்னம்மா இது!” என்று லட்சுமியிடமும் பாய்ந்தாள் ஸ்ருதி.
எப்பொழுதும் பெண்ணிற்கு துணை நிற்கும் லட்சுமி இன்று அநியாயத்திற்கு தன் கணவனுக்கு சப்போர்ட் செய்தாள்
“என்ன டா அப்பா மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் என்று தானே சொன்னார், அதற்கு ஏன் இவ்வளவு குதிக்கிறாய்?”
“அம்மா, நீயாம்மா இப்படி பேசுகிறாய்? நீ கூட ஏன்ம்மா இப்படி சேம் சைட் கோல் போடுகிறாய். எப்பொழுது அப்பா பச்சை என்றால் நீ நீலம் என்று தானே சொல்வாய்! இன்றைக்கு என்று பார்த்து ஏன் இப்படி என்னை பழிவாங்குகிறாய்?”
“நல்ல இடம் டீ தங்கம்!”
“என்னம்மா என்னமோ நாலும் சென்ட் இடம் வாங்குவது போல பேசுகிறீர்கள்! என் வாழ்க்கைம்மா!”
“அதில் எங்களுக்கு இல்லாத அக்கறை, வேறு யாருக்கு இருக்கப் போகிறது?” லட்சுமி கறார் குரலில் கூறினார்
“அப்பா…”
“நாளை மறுநாள் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருகிறார்கள். மாப்பிள்ளையை பாரு பிறகு அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம்!” மோகன சுந்தரம் முடிவான குரலில் கூறிவிட்டு படுக்க சென்றார்.
********
மதியம் பன்னிரண்டு மணியளவில், வி.ஓ.சி பூங்காவின் அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவசரமாக உள்ளே சென்றான் குமார்.
அவன் தேடி சென்ற நபர், சாட்சாத் ஸ்ருதியே தான். எரிச்சலுடன் நகம் கடித்த படி அமர்ந்திருந்தாள்.
“எதுக்கு ஸ்ருதி வரச் சொன்னாய்?” கேள்வியுடன் அவள் முன்னே வந்து நின்ற குமாரை எரிச்சலுடன் பார்த்தாள் ஸ்ருதி.
“ஏன் கூப்பிட்டால் வரமாட்டீர்களா?” உட்கார்ந்து கொண்டே கடுப்படித்தாள் ஸ்ருதி.
அவள் அருகில் அமர்ந்தவன்,
“ஏய் 12 மணி மொட்டை வெயிலில் வி.ஓ.சி பார்க்கில் அமர்ந்து கொண்டு பேச வேண்டுமென்று எதாவது தலையெழுத்தா என்ன? வி.ஓ.சி பார்க் என் மாமனார் வீடு பாரு” ஸ்ருதியை கிண்டலடித்தான் குமார்
“சும்மா கடுப்பை கிளப்பாதீர்கள்” ஸ்ருதி வெறியானாள்
“ஏய் என்ன பிரச்சனை உனக்கு? சொன்னால் தானே தெரியும். நீ இப்படி எல்லாம் நடந்து கொள்ளமாட்டாயே?”
“நேற்று அப்பா என்னிடம் பேசினார்?”
“உன் அப்பா நேற்று மட்டும் தான் உன்னிடம் பேசினாரா என்ன? தினமும் தான் உன்னிடம் பேசுகிறார்?”
“வேண்டாம் குமார் இருக்கும் வெறிக்கு நான் உங்களை கொலைப் பண்ணிவிடுவேன்!”
“சரி, சரி விடு. என்ன விசயம் என்று சொல்?”
“என்னை பெண் பார்க்க வருகிறார்கள்”
“அட இதுக்கா இவ்வளவு டென்சனை கிளப்பினாய்” குமார் இயல்பாய் வினவினான்.
ஸ்ருதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டாள், எதையும் வெளிக்காட்டாமல் இருந்தாள்.
“இது பெண்கள் இருக்கும் வீட்டில் சாதாரணமாக நடக்கும் விசயம் தானே. இதற்கு ஏன் இவ்வளவு டென்சன் ஆகிறாய்?”
“எனக்கு இப்பொழுது திருமணத்தில் விருப்பமில்லை , குமார்” ஸ்ருதி முடிந்தவரை இயல்பானாய் அவனிடம் சொன்னாள்.
“ஓ!” சிறிது நேரம் ஆழ்ந்து அவளை பார்த்தான் குமார். பிறகு பேச ஆரமித்தான்.
“மாப்பிள்ளை உன்னை பார்க்க வரட்டும்?”
“ம்… வந்து” ஸ்ருதிக்கு மீண்டும் கோபம் வரப் பார்த்து.
“நீயும் மாப்பிள்ளையை பாரு!”
“பார்த்து?” கோபம் உச்சத்திற்கு சென்று இருந்தது.
“பார்த்துவிட்டு…”
“பார்த்துவிட்டு?” ஸ்ருதியின் குரலில் வெளிப்படையாக கோபம் தெரிந்தது.
உன் வாசமாவள்…..