மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40

40

மினியும் விக்கியும் மாதவனிடம் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரிடமும் பேசிவிட்டு, கேசவனிடம் விடை பெற்றுக் கொண்டாள் சுஜி.

“எனக்கு கவலையா இருக்கு பெரியத்தான். அப்பாவுக்கு அந்த துரபாண்டியால எதுவும் ஆபத்து வராம பாத்துக்கோங்க.”

“கவலைப் படாதே சுஜாதா. துரப்பாண்டிக்கும் உனக்கும் நடக்குறதா இருந்த கல்யாணத்தைத் தடுத்து நிறுத்துன மாதிரி இதையும் நிறுத்திடுறேன்”.

கேள்வியுடன் பார்த்த சுஜியிடம், “நிஜம்மா தான்மா. உனக்கு நிச்சயம் பண்ணின அன்னைக்கு வீட்டுல சண்டை போட்டுட்டு மாதவன் மெட்ராசுக்கு கோச்சுட்டு வந்துட்டான்”

“சாரி பெரியத்தான் நான் கூட ஏதோ கோவத்துல…”

“நீ கேட்டதுல தப்பே இல்லம்மா. தப்பு பூராவும் எங்க அத்தை மேலதான். எங்க வீட்டுல யாராவது வந்து இப்படி பண்ணி இருந்தா பெரிய தகராறே வந்திருக்கும். அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கல்யாணத்த நிறுத்த முடியுமான்னு பார்க்கச் சொன்னாரு. நான் தான் என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவன் பழைய கேஸ்ல மூணு வருஷம் உள்ள இருக்குற மாதிரி செஞ்சேன். நல்லவேளை நீயும் போய் ஒரு பாதுகாப்பான காலேஜ்ல சேர்ந்துட்ட. நீ எங்கேயோ பத்திரமா இருக்கன்னு உங்க அப்பா சொன்னாரே தவிர எங்கேன்னு எங்களுக்கு சொல்லல”

“துரபாண்டி வீட்டுல, அவங்க பாவம் இல்லை அத்தான்”

“நீ வேற அவன் ஜெயில்ல இருந்தாத்தான் அவங்க எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க”

“இப்ப வெளிய வந்துட்டானே என்ன செய்யுறது பெரியத்தான்?”

“கவலைப்படாதே நான் இனிமே மதுரைல தான் இருப்பேன். உங்க அக்கா வேற மதுரைல புள்ளைங்க படிக்கணும்னு ஆசப்படுறா. அதுனால அப்பா நிலத்தைப் பார்த்துக்க கிராமத்துக்குப் போறாரு. அப்பறம் இந்த தடவை துரை போய் பெரிய தகராறு பண்ணி இருக்கான். எல்லாரும் அவன் மேல கோவமா இருக்கோம். இப்படியே அவன விட மாட்டோம். கண்டிப்பா இனிமே அவன அடக்கிடுவேன். நீ மாதவன் கூட சந்தோஷமா போயிட்டு வா”

மாதவனும், சுஜாதாவும் கண்ணீர் மல்க அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டனர். விமானம் கிளம்பியது மனதில் கவலையுடன் இருந்ததால் சுஜி பேசாமல் அமர்ந்திருந்தாள். களைப்பில் காலை உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் உறங்கி விட்டனர். சற்று நேரம் பொறுத்து சிங்கப்பூரில் இருந்து ஹால்ட் முடிந்து மறுபடியும் விமானம் ஏறினார்கள். இடையிடையே அத்து மீறி நடக்க முயன்ற மாதவனின் கைகளுக்கு தடா போட்ட சுஜாதா இறுக்கமாகவே இருந்தாள். மாதவனும் பெரிதாக ஒண்ணும் கண்டு கொள்ளவில்லை. கல்லூளிமங்கன் என்னன்னு கேக்குறானா பாரு என்று நினைத்துக் கொண்டாள் சுஜி.

அவளது மாதுவோ உன்னை எப்படி பேச வைக்குறேன் பாரு என்று எண்ணியபடி, பக்கத்தில் இருந்த அழகான பெண்ணிடம் கடலை போட ஆரம்பித்தான். கடுப்பான சுஜி அவனை அழைத்தாள்.

“என்ன அவகூட ஈன்னு இளிச்சுட்டுப் பேச்சு?”

“என்கிட்ட அவ ரொம்ப வருத்தப் பட்டுட்டு இருந்தா சுஜி”

“என்ன வருத்தம் அவளுக்கு?”

“பொண்ணு பார்க்க போகும் போது கண்ணாடிய மறந்து வச்சுட்டு போய்ட்டேனான்னு கேட்டு ரொம்ப வருத்தப்பட்டா”

அவனை முறைத்த சுஜி, “மினி உங்கள சுமாரான பிகர்ன்னு சொன்னது உங்களுக்கு மறந்துடுச்சு போல இருக்கு. மரியாதையா சொல்லுங்க”

“சரி அவ சொன்னத பாடுறேன் கேட்டுக்கோ. நான் சொன்னேன்.

ஆசப் பட்ட எல்லாத்தையும் கேட்க முடியல
பக்கத்து சீட்டு அத்த மகளைப் பாக்க முடியல

அதுக்கு அவ

ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு,
flight குள்ள குளுரடிச்சா whiskeyயப் போடு
சூடு கொஞ்சம் ஏறுச்சுன்னா சுதியிலப் பாடு
ஜோடிக்கு நான் பொண்ணிருக்கேன் டூயட்டு ஆடு”

“அப்படியா எனக்கு எப்படி கேட்டுச்சு தெரியுமா?

மாடி வீட்டு மச்சானுக்கொரு மாதிரியா ஆச
மதுரை வீரன் சாமி போல ஆட்டுக்கடா மீச
வயசு வந்த பொண்ணப் பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்குப் பூச”

“உனக்கும் இந்த சுராங்கனி பாட்டு தெரியுமா?” என்றவன் கலகலவென சிரித்துவிட்டு, “என் மீச என்ன ஆட்டுக்கடா மாதிரியா இருக்கு” என்றான்.

அடர்த்தியான கேசமும் அளவான அந்த மீசையும் குறும்பு கண்ணும் மையலைத் தூண்ட இமைகளைத் தாழ்த்தினாள் சுஜி. “போங்க மாதவன் உங்க மேல நான் கோவமா இருக்கேன்”

“என்ன கோவம்னு என்கிட்ட சொன்னாத்தானே சுஜி தெரியும்”

சுஜி பேசாமல் இருக்க, “சரி முதல்ல உன் கேள்வி எல்லாம் கேளு அப்பறம் உன் கோவத்துக்கான காரணத்தை சொல்லு”

“சரி” சுஜி சந்தோஷமாக தலையாட்டினாள். அப்பாவின் பத்திரம் விஷயமும், லெட்டர் விஷயமும் முக்கியம் என்றாலும், அவனிடம் கேட்பதற்கு தனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை என்று நினைத்தாள். அதைத்தவிர அவனைக் கேட்க அவளுக்கு கேள்விகளுக்கு பஞ்சமே இல்லை.

‘எதுல இருந்து ஆரம்பிக்கலாம்?’ சற்று சிந்தித்தவள், “சரி மினி சொன்னதுல இருந்து ஆரம்பிக்கிறேன். அது என்ன ஸ்வட்டர் கதை?”

“வேற ஒண்ணுமில்ல சுஜி நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப செமஸ்டர் லீவுக்கு வீட்டுக்கு வந்திருந்தேன். தினமும் காலைல உங்க வீட்டு வழியா தான் கராத்தே கிளாஸ் போவேன். ஒரு நாள் விடிய காலைல நீ கோலம் போட்டுட்டு இருந்ததப் பார்த்தேன். விக்கியோட சட்டைய குளுருக்குப் போட்டுட்டு இருந்தியா, எனக்கு கஷ்டமாப் போச்சு. அது காதலா, இல்ல வயசுனால வர ஈர்ப்பா, இல்ல உன் மேல சொந்தக்கார பொண்ணுன்னு பாசமா ஒண்ணும் தெரியாது. அதுதான் உன் மினிக்கு ஒரு ஸ்வட்டர் வாங்கி கொடுத்தேன்”

“ஹலோ, ஹலோ… ஸ்டாப். ஸ்டாப். எனக்கு குளுருரதுக்கு மினிக்கு ஏன் ஸ்வட்டர் வாங்கி குடுத்திங்க?”

“அது உன்னோட அளவுக்கு இல்ல வாங்கினேன். அப்பெல்லாம் நீ என் கூட பேசவே மாட்ட. இந்த ஸ்வட்டர மட்டும் அப்ப தந்துருந்தேன் உங்க அப்பாகிட்ட நான் பெல்ட் அடி வாங்கி இருப்பேன்னு நினைக்குறேன்.”

அந்த நாள் நியாபகம் வர, சுஜியைப் பார்த்தவன் நெற்றியில் ஒரு குட்டி முத்தமிட்டான். பின், “நான் ஒரு ஐடியா பண்ணேன். நீ அப்பெல்லாம் ரொம்ப ஒல்லியா இருப்ப. மினி குண்டா இருப்பா. அதுனால அந்த ஸ்வட்டர் மினிக்கு பத்தாம இருக்கும் அத கண்டிப்பா உனக்கு தந்துடுவான்னு நெனச்சேன். ஆனா மினியோட சொந்தக்கார பொண்ணு எடுத்துட்டுப் போயிடுச்சாம். எனக்கு ஒரே கோவம். நல்லா மினியத் திட்டி விட்டேன். அதுல இருந்து மினி நான் ஏதாவது தந்தா ஒழுங்கா வந்து உன்கிட்ட தந்திடுவா. அப்பத்தான் மினி நான் உன் மேல வச்ச காதல கண்டு பிடிச்சாளாம். எனக்கு அது காதலான்னே தெரியல. சொல்லி சொல்லி என்னைய கிண்டல் பண்ணுவா.”

“மினி தந்திருந்தாலும் அந்த ஸ்வட்டர போட்டுருக்க மாட்டேன்”

“ஏன் சுஜி, திருப்பாச்சி படத்துல வர விஜயோட தங்கச்சி மாதிரி உன் அண்ணன் சட்ட மேல அவ்வளவு ஆசையா?”

“இல்ல வீட்டுல நான் பாவாடை தாவணி தான கட்டுவேன். கோலம் போடுறப்ப சங்கடமா இருக்கும்னு கமலம் அத்தை யோசனைப்படி சட்டை போட்டுட்டுத் தான் கோலம் போடுவேன்”

சற்று யோசித்த மாதவன், “ஓ அப்படியா சங்கதி. ச்சே இது தெரியாம ஒரு ஸ்வட்டர உன்னால வேஸ்ட் பண்ணிட்டேன். அதுக்கு பனிஷ்மென்டா கலிபோர்னியா மாகாணத்திலே தினமும் காலைல எந்திருச்சு பாவாடை தாவணி கட்டிட்டு கோலம் போடுற.” கற்பனையில் மூழ்கியவன், “நமக்கு பார்த்துருக்குற வீட்டுல ஹார்ட்வுட் ஃப்ளோர் தானாம் என் பிரெண்ட் சொன்னான். அதுனால நீ நம்ம வீட்டு ஹால்லையே கோலம் போட்டாக் கூட எனக்குப் போதும்.”

நடக்காது என்ற நினைப்பில் சுஜியும், “நான் ரெடி. பாவாடை தாவணிக்கு எங்க போவிங்க?”

“நாங்கல்லாம் யாரு? கில்லாடிக்குக் கில்லாடில்ல. உங்க கமலம் அத்தை கிட்டே சொல்லி உன்னோட கத்திரிபூ, சிகப்பு, பச்சை, மஞ்சள், பாவாடை தாவணிய எல்லாம் சுட்டுட்டு வந்துட்டோமுல்ல”

“அந்த கன்றாவி வேற செஞ்சு வச்சிங்களா… அதுதான் அத்தை என்னைப் பார்த்து பாவாடை போதுமான்னு கேட்டாங்களா?”

“என்னதான் சொல்லு உனக்கு பாவாடை தாவணியும், அந்த ரெட்டை ஜடையும் தான் அழகு”

“மாதவன் அப்பறம் மினி என்னமோ சொன்னாளே. எனக்கு பிறந்தநாளைக்கு சுடிதார் வாங்கித் தந்திங்கன்னு. நிஜமாவா?”

ஆமாம் என்றவன், “உனக்கு நான் வாங்கித் தந்ததுலையே பிடிச்ச டிரஸ் என்னன்னு கூட எனக்குத் தெரியும். ஒரு ஆச்சிரியம் என்னன்னா எனக்கும் அந்த டிரஸ் தான் ரொம்ப பிடிச்சு, முதல் முதல்ல உன்னை என்னோட காதலியா நெனைச்சுட்டு வாங்கின டிரஸ். என்னன்னு சொல்லு பாக்கலாம்.”

“எது அந்த எல்லோ டிரஸ்”

சொன்ன எல்லாவற்றிற்கும் இல்லை என்று மாதவன் சொல்லவும், அலுத்துப் போய் நீங்களே சொல்லுங்க என்றாள் சுஜி.

“இப்ப நீ போட்டுருக்குற இந்த லாவெண்டர் சுடிதார் தான்… அதிதில பர்சனல் இன்டெர்வியூ அன்னைக்குக் காலைல நீ பத்திரமா வந்துட்டியான்னு பார்க்க வந்தேன். நீ போட்டிருந்த டிரஸ் கலர் எனக்குப் பிடிக்கல. அதுதான் வேற டிரஸ் வாங்கிட்டு போய் மூர்த்தி அங்கிள் கிட்ட கொடுத்து விட்டேன்.”

தான் போட்டிருந்த உடை அங்கே ரொம்பவும் சாதாரணமானது என்பதை சொல்லாமல், மறைத்து சொல்லும் மாதவனை நினைத்து சந்தோஷம் பொங்கியது சுஜிக்கு. திகைத்துப் போய் பார்த்த சுஜியின் கண்களின் மேல் மென்மையாக முத்தமிட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06

உனக்கென நான் 6 சாப்பாடு முடிந்தது. மலர் தான் வீட்டிற்கு செல்ல உத்தரவு வாங்கிகொண்டாள். பின் சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அன்பரசி மட்டும் மாணவர்களின் படைப்புகளை திருத்தும் பணியில் இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக பெரியவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சந்துரு. தன் கைபேசியில் வரும்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25

உனக்கென நான் 25 அதிகாலை எழுந்து கொண்ட சேவல்கள் அரிசியின் துயிலை தொந்தரவு செய்யவே “காலங்காத்தல கூவி எழுப்பிவிடுறீங்களா இருங்க இன்னைக்கு உங்கள்.” என மறதிற்குள்ளே அறிக்கை விடுத்துவிட்டு தன்மீது கிடந்த போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள். அதிகாலையில் உறக்கம் வராமல்

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04

சாந்தா எப்போதாவது சோமுவிடமிருந்து புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாள். புராணக் கதைகளே சோமு தருவார். ஒருநாள் எனக்கோர் யுக்தி தோன்றிற்று. கண்ணபிரான் மீது காதல் கொண்ட ருக்மணியின் மனோநிலை வர்ணிக்கப்பட்டிருந்த பாகத்தை சோமு தந்தனுப்பிய பாரதத்தில் நான் பென்சிலால் கோடிட்டு அனுப்பினேன்.