மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 39

39

மாதவனின் இந்தச் செயலைக் கண்டு சுஜி விக்கித்துப் போய் நிற்க, மினியோ மாதவனைக் கண்டு கொள்ளவே இல்லை. அன்று வானிலையின் காரணமாக விமானம் கிளம்ப தாமதமாக மனது விட்டுப் பேச வாய்ப்பு கிடைத்தது. சுஜிக்கு மினியின் மனதில் ஒளிந்திருந்த உண்மையும் புரிந்தது.

சுஜி மினியைச் சமாதனப் படுத்தும் விதமாக, “தப்பா எடுத்துக்காத மினி. அவரு ஊருக்குப் போற டென்சன்ல இருக்காருன்னு நெனைக்கிறேன்”.

“உன்னோட அவரை அப்பறமா பார்க்கலாம். இப்ப நம்ம கொஞ்சம் பேசலாம். சுஜி என் மனசு பூரா உன்கிட்ட தான் இருந்தது. உனக்கு நல்லபடியா கல்யாணம் நடந்தது ரொம்ப சந்தோசம். இந்தா மீனாக்ஷி அம்மன் பிரசாதம். தாழம்பூ குங்குமம் கூட வாங்கிட்டு வந்திருக்கேன். ஊருக்கு எடுத்துட்டுப் போ.”

தோழிகள் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். நல்லசிவம் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை மினியிடம் சொல்லி ஆச்சிரியப் பட்டாள் சுஜி.

அதற்கு மினியின் பதிலோ வித்யாசமாக இருந்தது. “உங்க மாமனார் ரொம்ப விவரமானவருடி. அவருக்குப் பணத்தோட மருமக வந்தா ரொம்ப சந்தோஷம். பணத்தைப் பெருக்குற மாதிரி மருமக வந்தா அதைவிட சந்தோஷம்”

புரியாமல் விழிக்கும் தோழியிடம், “மக்கு பொண்ணே! உணவுத் திருவிழாவை வேற இடத்துல தந்தா எவ்வளவு செலவு தெரியுமா? உன்னோட முயற்சி, அதுல பாதி கூட செலவாகல. அதுலயே லட்சக்கணக்கா மிச்சம் பிடிச்சுருப்பாரு. அப்பறம் உன்னைப் படிக்க வைக்குறது. அவரோட மருமகளைப் படிக்க வைக்குறாரு. அது அவரோட வியாபாரத்துக்கு எவ்வளவு உதவி தெரியுமா? நீ வந்த உடனே உன் பொறுப்புல பேக்கிரி பொருள்களை பிராண்ட் நேம்ல விக்க ஆரம்பிப்பாரு. அதுக்கு எவ்வளவு டிமான்ட் தெரியுமா? அதுனால நீ என்னமோ நன்றி கடன் பட்ட மாதிரி பம்மி கிட்டு இருக்காதே. ஆனா உலகமே இப்படித்தான். அதுனால எல்லாத்துலையும் நெளிவு, சுளிவோட நடக்கப் பழகு. அவங்களுக்குத் தர வேண்டிய மரியாதை நீ குறைவில்லாம தருவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்.”

மாமனார் திருப்பதியில் இருந்து வரும்போது பேக்கிரி தொழில் பற்றி புட்டு புட்டு வைத்தது ஞாபகம் வர சுஜிக்கு முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது மாமனாரின் சாதுர்யத்தை நினைத்தும், அதனைக் கண்டுபிடித்த தனது தோழியின் சாமர்த்தியத்தை நினைத்தும்.

மாதவனின் அருகில் வந்த மினி அவன் காதைத் திருகினாள். பின் “மிஸ்டர். மாதவன் ஒரு திருக்குறள் கேள்விப் பட்டு இருக்கிங்களா?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.”

“அதெல்லாம் நாங்க நாலாப்பு தமிழ்லயே படிச்சுட்டோம். ஆனா நீ சரியான போக்கிரி. அதுதான் உன் மேல கோபம்”

“நானா! அது இப்பத்தான் உங்களுக்குத் தெரிஞ்சதா?”

“பின்ன மூணு வருஷமா என்ன லவ் பண்ணியாமே, முன்னாடியே சொல்லி இருந்தேன்னா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்? சரி வாரா வாரம் என்னையும் விக்கியையும் பார்க்க ஆசையா ஓடி வருவையே அப்பவாவது சொல்லி இருக்கலாம்ல?”

“என்ன வாரா வாரம் வருவாளா?” என்ற சுஜியின் குரல், “ஓ! சொல்லி இருந்தா என்ன செய்யுறதா உத்தேசம்?” என்ற மினியின் குரலில் அடங்கிப் போயிற்று.

“பேசாம பொண்ண மாத்தி இருப்பேன். நீயாவது வாய்ல தான் சண்ட போடுவ. உன் பிரெண்ட் என்ன கட்டய தூக்கிட்டு அடிக்க வரா” என்றான் சோகமாக. பின் குற்றம் சாட்டும் குரலில்,

“ஏன் மினி என்கிட்ட உன் அண்ணன் லவ் பண்ணுறத பத்தி சொல்லல.”

“ராகேஷும் நீங்களும் கொஞ்ச நாள் பேசாம இருந்திங்க. பேசி இருந்தா அவனே சொல்லி இருப்பான். கவலைப் படாதிங்க மாது இப்பத்தான் நம்ம எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோமே. ராகேஷ், அவன் லவ்வ கல்யாணம் முடியுற வரைக்கும் உங்க கிட்ட சொல்ல விரும்பல. ஏன் உங்க லவ்வப் பத்தி நான் உங்க மனைவி சுஜி கிட்டக் கூட சொன்னதில்ல. அதெல்லாம் அவங்கவங்க ரகசியம். ஒரு நல்ல தோழி ஒருத்தர் ரகசியத்த இன்னொருத்தர் கிட்ட அம்பலப் படுத்த மாட்டா. நான் உங்க லவ்க்கு எவ்வளவு உண்மையா இருந்தேனோ, அதே மாதிரி ராகேஷோட ரகசியத்தையும் காப்பாத்தினேன். அவ்வளவு தான். அதுதான் என் மேல கோபமா? அதுக்குத்தான் மூஞ்சியத் தூக்கி வச்சுகிட்டிங்களா மாது?”

“அதுக்காக இல்ல. உன் பிரெண்ட் உன் மேல எவ்வளவு பிரியம் வச்சு இருக்கா. ஆனா நீ அதுல பாதி வச்சிருந்தா கூட என்னைய லவ் பண்ணுறேன்னு சொல்லி இருப்பியா? அது உண்மையாகவே இருந்தாலும் கூட” என்று கண்ணடித்தபடியே வேடிக்கையாக சொன்னான் மாதவன்.

“ஓஹோ… அப்பறம்”

“நாங்க எல்லாரும் அவ்வளவு கெஞ்சியும் வந்து என்ன சொன்னான்னு தெரியுமா? உங்களுக்கு மினிதான் பொருத்தமா இருப்பா. அவளையே கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு வந்து என்கிட்ட கெஞ்சுறா.”

கண்கள் கலங்க சுஜியின் கைகளைப் பிடித்துக் கொண்ட மினி நிஜமாவா என்ற பொருள் வரும்படி தலையை ஆட்ட. நிஜம்தான் என்று மெதுவாக தலை அசைத்தாள் சுஜி.

“மண்டு, மண்டு. என்னதான் தோழி அப்படின்னு பிரியம் இருந்தாலும் வாழ்க்கையே தாரை வார்த்துக் குடுப்பியா? அந்த மாதிரி தப்ப இனி நீ செய்யாதே என்ன? இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டது போதாதா? இப்படி ஒரு இளிச்சவாய் கிடைச்சா கப்புன்னு பிடிச்சிக்குறத விட்டுட்டு. பெரிய தியாகி… என்னையக் கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாளாம். அப்பறம் நீ என்னடி செய்வ? எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடிட்டே போவியா?” சுஜியைக் கண்டித்தாள் யாமினி.

மினி திட்டுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டாள் சுஜி. அவர்கள் பேசுவதை ஆச்சிரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் மாதவன். சுஜாதா, யாமினி நட்பு நாகரத்தினம் போன்றவர்கள் வெடி வைத்து தகர்க்க முயன்றாலும் எப்படி இவ்வளவு நாளும் விரிசல் வராமல் இருந்தது என்று புரிந்தது. மினி ஒரு வார்த்தை சொன்னதும் சுஜி மறுக்காமல் கேட்டுக் கொண்டது அவள் மேல் இருக்கும் கண்மூடித் தனமான பாசத்தால் மட்டும் இல்லை, தன் தோழி தனக்கு நல்லது மட்டுமே செய்வாள் என்ற நம்பிக்கையால் தான் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டான் மாதவன்.

“மார்கழி குளுருக்கு ஸ்வெட்டர் வாங்கித் தரதும், உன்னோட எக்ஸாம் ரிசல்ட் தெரிய கால் கடுக்க என் கூடயே உட்கார்ந்து கடலை போடுறதும், உனக்கு பிறந்தநாள் வந்தா எனக்கு கால் வலிக்குற வரைக்கும் கடை கடையா கூட்டிட்டு போய் சுடிதார் எடுக்குறதும், பார்க்குக்கு ஒன்னய கூட்டிட்டு வரச் சொல்லி மரத்தடியில ஒளிஞ்சு நின்னு பாக்குறதுமா இருக்குற இந்த ஆளப் போய் யாருடி லவ் பண்ணுவா? இந்த சுமாரான பையனுக்கு நீ தான் போனா போகுதுன்னு வாழ்க்கை தந்திருக்க”

“என்னடி இது என் வீட்டுக்காரரைப் போய் சுமாரான பிகர்ன்னு சொல்லிட்ட. நீதானே அன்னைக்கு சூப்பர் ஆளுன்னு சொன்ன?”

“என்ன சொன்னேன் சொல்லு பார்க்கலாம்”

“என்னோட அண்ணனோட பிரெண்ட், சூப்பரா இருப்பாரு இதுக்கு மேல கேட்காதேன்னு சொன்ன”

“எப்பயாவது மாதவன நான் லவ் பண்ணுறேன்னு சொன்னேனா?”

“அப்பறம் ஏன் மாதவனுக்கும் அனிதாவுக்கும் கல்யாணம்னு சொன்னதும், த்ரிஷா இல்லன்ன திவ்யா. மாதவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு சொன்ன?”

“ஆமா மாதவன் ஒரு நல்ல சாய்ஸ்ச மிஸ் பண்ணிட்டான்னு கூடச் சொன்னேன் தான்”

“டப்பிங் படம் பாக்குற மாதிரி தலையே சுத்துதுடி. ப்ளீஸ் ஒழுங்கா சொல்லு.”

“இப்ப கேளு. ஷங்கர் படம் மாதிரி பளிச் பளிச்சுன்னு சொல்லுறேன். சூப்பரான பையன்னு நான் சொன்னதும் உனக்கு மனசுல யார் முகம் தோணுச்சு”

சற்று வெட்கத்துடன் சுஜி, “மாதவன் முகம்தான்” என்றாள். மாதவனுக்கோ சந்தோஷத்தில் விமானம் இல்லாமலே பறப்பது போன்ற உணர்வு.

“மாதவன்னு ஒரு தடவை கூட நான் சொல்லல. ஆனா நீயே மாதவன் பேர சொன்ன. எந்த ஒரு பொண்ணுக்கும் சூப்பரான ஆளா அவங்க விரும்புறவங்கதான் தோணுவாங்க. அப்பயே உனக்கு மாதவன்னா ஆழ் மனசுல ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சது. ஆனா உங்க ரெண்டு வீட்டையும் பத்தி தெரிஞ்சதால கிண்டல் எதாவது செஞ்சு உன் மனசுல ஆசைய நானே தூண்டி விட்டுறக் கூடாதுன்னு நினைச்சு அமைதியா இருந்தேன். அதுவும் ஒரு வகைல நல்லதா போச்சு. மாதவனுக்கும் அனிதாவுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆனதும் நீ அத பெருசா ஒண்ணும் நெனைக்கல”.

“அது சரி மாதவன் அப்ப மிஸ் பண்ணது”

“உன்ன மனசுல வச்சுட்டுத்தான் சொன்னேன். நிஜமாடி. அந்த அனிதாவக் கல்யாணம் பண்ணி இருந்தா தெரிஞ்சிருக்கும். இந்நேரம் மாது சாதுவா மாறி இருந்திருப்பார்.”

“சரி என்னவோ எக்ஸாம் ரிசல்ட்னு சொன்னியே”

“உன் தலை… அதிதி எக்ஸாம் ரிசல்ட் அன்னைக்கு என் கூட இருந்து கடலை போட்ட சுமாரான பிகர் இதுதாண்டி. நீ வர நேரத்துக்கு என் கிட்ட சூடா கடலை வாங்கித் தந்துட்டு போய்டுச்சு”

சுஜி நிஜமாவா என்று பார்க்க, மாதவன் அழகாகப் புன்னகைத்தான்.

“ஆனா இதுல முக்கியமான விஷயமே மாதுவுக்கே நீ தான் மனசுல இருக்கன்னு ரொம்ப நாளா தெரியாதது தான். இத மாதுவோட ப்ளாட்ல, மாது தன்னோட பொன்னான கையால போட்டு தந்த, கேவலமான டீயக் குடிச்சுகிட்டே, மாது கிட்டயே சொல்லி இருக்கேன்”

“அம்மா தாயே, இதப் பத்தி நானே என் பொண்டாட்டி கிட்ட விலாவரியா பேசிக்கிறேன்மா. விட்டுடு. ஹாஸ்டல் சாப்பாடு போர் அடிக்குது மாது, அதுதான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லிட்டு வந்த மொதோ நாளே, கட்டைய வச்சு உன் கால உடைச்சு இருக்கணும். தப்பு பண்ணிட்டேன். இப்ப என் டீய கேவலம்னு சொல்லுற”

“என் காலுல ஒரு கீறல் விழுந்து இருந்தாலும் ஆள் வச்சு வீட்டுலே அடிச்சு இருப்பேன். தெரியுமா?”

“நல்லா தெரியும். நீ ரௌடின்னும் தெரியும் உன் கையாள் யாருன்னும் தெரியும்”

இடையில் குறுக்கிட்ட சுஜி, “ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறிங்களா… சின்ன புள்ளங்க மாதிரி சண்ட போட்டுட்டு. ஏண்டி கண்டிப்பா நீ யாரையோ விரும்புற. அவர் என்ஜினியர்னு தெரியும். அது யாருன்னு சொல்லுடி ப்ளீஸ்”

அவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருந்த மினி கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

மாதவன் சுஜிக்கு உதவி செய்தான். “சுஜி நம்ம கல்யாணத்துக்கு முதல் நாள் மினிய எப்படி காண்டக்ட் பண்ணேன்னு நினைவிருக்கா?”

“யாரோட செல்லுலயோ பேசுனிங்க”

“உனக்கு மினி காண்டக்ட் நம்பர் தெரியுமா?”

தெரியாது என்று உதட்டைப் பிதுக்கினாள் சுஜி. “அப்பறம் யாருக்கு மினி எந்த நேரத்துல எங்க இருப்பா, யார் கூட பேசுனா மினி கிட்ட பேச முடியும்னு தெரிஞ்சது?”

சுஜி சிந்தித்தாள் அவள் முகமே பிரகாசமாய் மாறிவிட்டது.

கையில் காபி மெசினில் இருந்து எடுத்து வந்த காபியை மினியிடம் கொடுத்தான் விக்கி. “இந்தா மினி பஸ்ல வந்தது டயர்டா இருக்கும். குடி. நான் உனக்கு குடிக்கத் தண்ணி வாங்கிட்டு வரேன்”.

பக்கத்திலே நின்று மினி குடித்து முடித்ததும் குப்பையில் போட காபி கப்பை வாங்கிச் சென்றான்.

விக்கி செல்லும் வரை பேசாமல் இருந்த சுஜியால் தாங்க முடியவில்லை. “நிஜமாவாடி?”

சுஜியை முறைத்துக் கொண்டே சொன்னால் மினி, “ஏன் சுஜி விக்கியப் பார்த்தா உனக்கு சூப்பர் பையனா தெரியல?”

“ச்சி… அவன் என் அண்ணன்டி. அதுவும் அவன் இருக்குற இடமே தெரியாது. நீ இருந்தா அந்த இடம் அவ்வளவுதான். அதுனால உனக்கு இந்த மாதிரி எண்ணம் இருக்குன்னு தெரியல”

“ஆப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட். இது தெரியாதா சுஜி உனக்கு. மினி தான் பேசுறதுக்கு எல்லாம் தலையாட்ட ஒரு தஞ்சாவூர் பொம்மையைத் தேடுனா. அது மதுரைலே கிடைச்சுடுச்சு. அப்படிதானே மிஸ். யாமினி” என்று கிண்டல் செய்தான் மாதவன்.

“நீ மறச்சாலும் நான் கண்டுபிடிச்சுட்டேன் பார்த்தியா? நீ ஏன் இத முன்னாடியே என்கிட்ட சொல்லலன்னு தான் எனக்குக் கோவம்” என்றான் மறுபடியும்.

“பொய் சொல்லாதிங்க மாது நீங்க என் மேல கோவப்பட்டதுக்கு உண்மையான காரணம் பொறாமை. நம்ம காதலி, கனவுக்கன்னி நம்மள விட அவ பிரெண்ட் கிட்ட க்ளோசா இருக்குறான்னு ஒரு ஆத்திரம்”

“அம்மாடி நீ பேஷன் டெக்னாலஜி படிச்சியா இல்ல பிஸிகாலஜி படிச்சியா? மனசுல நெனச்சத புட்டு புட்டு வைக்குற. அப்பறம் எப்படி விக்கி மனசுல இருக்குறது உனக்குத் தெரியாம போச்சு?”

“நீங்க வேற மாது விக்கிக்கு ஒரே பயம். உங்க அத்தை வேற சண்டை போட்டுட்டு போயிட்டாங்களா… ஒருவழியா அந்த பயந்தாங்கோலி இப்பத்தான் ஆறு மாசத்துக்கு முன்னாடி தலையாட்டி இருக்கு” என்றாள் மினி சோகத்துடன். “மாதவன் சொன்னது மாதிரி ஒரு தலையாட்டி பொம்மை வேணும்னு தான் உங்க அண்ணனை லவ் பண்ணேன்னு நீயும் நெனக்குறியா சுஜி?”

“இல்ல மினி உண்மையா சொல்லட்டுமா… நீ விக்கிய லவ் பண்ணதுக்கு மொதோ காரணமே என்னோட அண்ணன் அதுனாலத்தான்”

மினியின் கண்கள் மின்னின. “ஆமா சுஜி உன் அண்ணனுக்கும் உன்ன மாதிரியே குணம். அப்பறம் எனக்குன்னே விக்னேஷ் ஏற்கனவே பொறந்ததனால கூட இருக்கலாம்”.

வர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே மாதவனையும் சுஜியையும் அருகே அழைத்த சுந்தரம், அவன் கையில் ஒரு கவரைத் தந்தார். “மன்னிச்சுக்கோங்க மாப்பிள்ளை கடைசி நேரத்துல தரத்துக்கு. இப்பத்தான் மினி மூலமா பத்திரம் வாங்கிட்டு வர முடிஞ்சது. அன்னைக்கு நான் உங்ககிட்ட கையெழுத்து கேட்டப்ப ஒரு வார்த்தை கூட ஏன்னு கேட்காம, படிச்சு கூடப் பார்க்காம வந்து போட்டிங்க. உங்க பெரிய மனசுக்கு இந்த ஏழை மாமனார் தர சின்ன அன்பளிப்பு இது. சுஜி சின்ன வயசா இருந்தப்ப பாத்திமா காலேஜ் பக்கத்துல ரெண்டு கிரௌண்ட் மனை வாங்கிப் போட்டது. கொஞ்சம் பிரச்சனை இருந்துச்சு அதை சரி பண்ணிட்டு நிலத்தை உங்க பேருக்கு மாத்தி இருக்கேன். மறுக்காம ஏத்துக்கிட்டு என்னை கௌரவப் படுத்துங்க”.

ஒரு வார்த்தை கூட மறுக்காமல், சுஜி இருந்த பக்கம் கூட திரும்பிப் பார்க்காமல், அதனை வாங்கிய மாதவன் தன் தந்தையிடம் கொடுத்தான்.

“அப்பா சீக்கிரமா இடத்தைப் போய் பார்த்துட்டு, நமக்கு ஏதாவது சரி பட்டு வருமான்னு பாருங்க… பஹரிகாவ இனிமே நீங்க பார்க்க வேண்டாம். நான் செய்ய வேண்டிய அடிப்படை வேலை எல்லாம் செஞ்சுட்டேன். கேசவன் எல்லாத்தையும் பார்த்துக்குவான். என்கூட படிச்ச ரெண்டு பேர் தியாகராஜால M.B.A முடிச்சு இருக்காங்க. அவங்கள வேலைக்கு போட்டிருக்கேன். அப்பப்ப விக்னேஷும் வந்து உதவி செய்வார்” என்று கூறியவன் மேலும் பக்கா வியாபாரியாகி பிசினெஸ் விஷயம் பற்றி பேச ஆரம்பித்து விட்டான்.

மாதவனின் செல்வ செழிப்பு சுஜி அறியாதது இல்லை. இந்த நிலம் அவர்கள் நினைத்தால் R.M.K.Vயில் ஒரு பட்டு சேலை வாங்குவது போல தான். ஆனால் இது தனது அப்பாவுக்கோ வாழ்நாள் சேமிப்பு. எவ்வளவோ வகையில் உதவி இருக்கும். ஒரு பேச்சுக்காகவாவது தன் தந்தையிடம் இடம் வேண்டாம் என்று சொல்வான் என்ற சுஜியின் நினைப்பு தவறி விட்டது. அதுமட்டுமின்றி தன்னைத் திரும்பிக் கூட பார்க்காமல் உரிமையாக பத்திரத்தை வாங்கியது அவளுக்கு சற்று முக வாட்டத்தைத் தந்தது.

இவன் என்ன ஒரு சமயம் சந்தோஷத்தில் என்னைத் தவிக்க வைக்கிறான், ஒரு சமயம் வருத்துகிறான். சரியாகச் சொன்னால் பகலில் சூரியனாகவும், இரவில் குளுமை தரும் நிலவாகவும் இருக்கிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 14கபாடபுரம் – 14

14. எளிமையும் அருமையும்   அந்த வைகறை வேளையில் புன்னைத் தோட்டத்தின் குளிர்ந்த சூழ்நிலையில் கண்ணுக்கினியாள் ஓர் அழகிய தேவதைபோற் காட்சியளித்தாள். அவளுக்கு இயற்கையாகவே நிரம்பியிருந்த பேரழகு போதாதென்றோ என்னவோ அவனைக் கண்டு நாணிய நாணம் அவள் அழகை இன்னும் சிறிது

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37

37 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இரவு விக்ரம்க்கு அழைத்து “டேய் வாசுகிட்ட சொல்லி கம்பெனி  எல்லா டீடைல்ஸ்சும் உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அவன் அனுப்பிச்சிருப்பான். நீ எனக்கு நாளைக்குள்ள செக் பண்ணிட்டு சொல்லு, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் இருக்கு. கணக்கு

உள்ளம் குழையுதடி கிளியே – 15உள்ளம் குழையுதடி கிளியே – 15

வணக்கம் தோழமைகளே, சென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பகுதி உள்ளம் குழையுதடி கிளியே – 15 அன்புடன், தமிழ் மதுரா.