மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37

37

சுஜியின் சம்மதம் கிடைத்த உடனே அனைவரும் அன்று மாலையே திருப்பதி கிளம்பினர். மறுநாள் காலை ஏழுமலையானின் சந்நிதியில் சுஜாதாவைத் தனது மனைவியாக இணைத்துக் கொண்டான் மாதவன்.

மாதவனின் சார்பில் அவனது பெற்றோரும், கேசவனும், சுஜியின் சார்பில் சுந்தரம், விக்கி, கமலம், மூர்த்தி மேலும் சிலரும் மட்டும் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். கேசவனின் மனைவியும் அவர்கள் தங்கையும் ஒரு முக்கியமான வேலையால் வர முடியவில்லை என்று சொன்னான் மாதவன். அது பற்றி சுஜியும் அதிகம் விசாரிக்க முடியவில்லை. அவளுக்கு மறுநாள் காலை ஊருக்குக் கிளம்பும் பரபரப்புடன் இந்த திடீர் திருமண பரபரப்பும் சேர்ந்துக் கொண்டது. அவளைப் பொறுத்தவரை அவள் விரும்பும் அனைவரும் கலந்து கொண்டதால் சந்தோஷமாகவே இருந்தாள். மினி வர முடியாதது அவளை உறுத்தினாலும் அதனைப் பற்றி மேலும் சிந்திக்க முடியாத அளவுக்கு அனைவருக்கும் வேலைகள் இருந்தன.

வெண் பட்டு வேட்டி, சட்டை சர சரக்க கம்பீரமாக நடந்து வந்த மாதவனைக் கண்டதும் அசந்து விட்டாள் சுஜி. இவனா தன் கணவன்? இவனுக்கு தான் தகுதி தானா? மாதவனின்மேல் அவளுக்கு மிகுந்த கோபம் இருந்தது நிஜம். ஆனால் அவன் தவறைச் சரி செய்ய எடுத்த முயற்சி அவன் மேல் இப்போது மரியாதையைத் தந்து இருந்தது. இனிமேல் தான் நினைத்தாலும் அவன் மேல் தனக்கு கோவம் வராது என்பது புரிந்தது. அருகே வந்த மாதவன் மெதுவாக சுஜியின் காதருகே குனிந்து,

“இந்த குங்கும கலர் சேலை உனக்கு ரொம்ப பொருத்தம் சுஜி. உன் நிறத்தை இன்னும் தூக்கிக் காட்டுது. எனக்கு வேஷ்டி நல்லா இருக்கா?” என்றான்.

இல்லை என்று பொருள் வருமாறு தலையை ஆட்டி அவனைத் திகைக்க வைத்தவள், சற்று இடைவெளி விட்டு, “ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என்று கூறி மேலும் திகைக்க வைத்தாள்.

“இதப் பாருடா, என் பொண்டாட்டிக்கு ஜோக் கூட அடிக்க வருது. உன் வாயால முதல் முதல்ல என்னைப் பத்தி வர பாசிடிவ் விஷயம் இதுதான் சுஜி” என்றான் மகிழ்வோடு.

விக்கி இருந்த அந்த அடுக்குமாடி குடி இருப்புக்கு வந்தவுடன், கமலம் ஆலம் சுற்றி வரவேற்க, மாதவனின் தாயார் சுஜியை வலது காலை எடுத்து வைத்து உள்ளே வரச் சொன்னாள். விக்கியோட வீட்டுக்குத் தானே வந்திருக்கோம். மதுரைல மாதவன் வீட்டுக்காப் போனோம் என்று மனதில் கேள்வி இருந்தாலும் பெரியவர்கள் சொல்கிறார்களே என்று நினைத்துக் கொண்டு சுஜி வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.

மறுநாள் ஊருக்குக் கிளம்ப இருப்பதால் மணமக்களுக்குத் தனிமை தரும் பொருட்டு அனைவரும் அருகில் இருந்த விடுதியில் அறை எடுத்து தங்க ஏற்பாடு செய்தான் கேசவன்.

“நானும், உங்க மாமாவும், அனிதாவக் கல்யாணம் பண்ணி வைக்க எவ்வளவோ முயற்சி செஞ்சோம். ஆனா மாது சம்மதிக்கவேயில்லை. உன்னை மனசுல வச்சுட்டுத்தான் வேண்டாம்னு சொல்லி இருப்பான் போலிருக்கு. அதுசரி கடவுள் போட்ட முடிச்ச மாத்த நம்மால எப்படி முடியும்? அந்த துரை உங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனதுக்கு அப்பறம் கோச்சுட்டுப் போனவன் ரெண்டு வருஷமாச்சு வீட்டுக்கு வர”

எந்தத் தாய்க்கும் தனது மகன் வாழ்வு மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே முதல் ஆசை. மெளனமாக அமர்ந்திருந்த தனது இளைய மருமகளின் மனதில் உள்ள நெருஞ்சி முள்ளை தன்னால் முடிந்த அளவு வலிக்காமல் எடுப்பது எப்படி என்று யோசித்தார். ஒரு வேலை தனது மகனை அந்த முள் காயப்படுத்தி விட்டால். ஆகையால் தனது மருமகளிடம் உண்மையை சொல்லிவிடும் எண்ணத்தில்,

“அனிதாவப் பத்தி உன் மனசுல சந்தேகம் இருக்கலாம் சுஜி. அனிதா மாதுவக் கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப் பட்டா. அஞ்சு வருஷமா மாதுவக் காதலிக்குறேன்னு சொன்னா. அவங்க அப்பாவும் வற்புறுத்துனாரு. அதுனாலதான் அவ பழக்க வழக்கம் நம்ம வீட்டுக்குக் கொஞ்சம் சரிபட்டு வரலன்னாலும், நானும் உங்க மாமாவும் சரின்னு சொன்னோம். தடபுடலா நிச்சயம் பண்ணாரு அவ அப்பா. மாதுவோட பாட்டி மறைவுனால கல்யாணம் கொஞ்சம் தள்ளிப் போச்சு. கல்யாணம் தள்ளிப் போனாலும், உன் விஷயத்தால எங்க மேல கோச்சுட்டுப் போன மாதவன எப்படியாவது சம்மதிக்க வச்சுடலாம்னு நெனச்சோம். அனிதாவோட அப்பா வேற, மாது உடனே கல்யாணம் பண்ணிக்கலென்ன என்னோட பங்க பிரிச்சுக் கொடுன்னு மிரட்ட ஆரம்பிச்சாரு. சொல்லப் போனா எங்கள மிரட்டுறதுக்காக பிரிச்சும் வாங்கிட்டுப் போயிட்டாரு. இதுக்கு நடுவுல அமெரிக்கா போன அனிதா அங்க வேற ஒருத்தன் மேல காதல்ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறா.

அவளால எங்கப் பையன் கோச்சுட்டு போய் இருக்கான். இவ எப்படி ஆறே மாசத்துல மனச மாத்திட்டு, கல்யாணம் பண்ணிக்குற அளவு போனான்னு தெரியல. இந்த மாதிரி ஸ்திரமான மனசு இல்லாததாலதான் அனிதாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க அவங்க அப்பா முயற்சி செஞ்சாருன்னு எங்களுக்குத் தெரிய வந்தது. உங்க மாமாவுக்கு மனசு விட்டுப் போச்சு. வேற இடத்துல அனிதா கல்யாணம் பண்ணிக்கவும், ஊருல வேற எல்லாரும் வியாபாரம் நஷ்டம் போல இருக்குன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச நாள் முன்னாடி, அனிதா கல்யாணத்துக்கு அப்பறம், அவளோட அப்பா மறுபடியும் சேந்துக்கலாம்னு சொன்னாரு. மாதுவும், கேசவனும் மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் இந்த மாதிரி கடை வைக்கலாம்னு யோசனை பண்ணி அதையும் செஞ்சுட்டாங்க.

உங்க மாமாவுக்கு மனசு உறுத்தல் கள்ளம் கபடம் இல்லாத குழந்தைங்க என்னோட தங்கச்சி படுத்தின பாட்ட நான் கண்டுக்கவே இல்ல. அந்த பொண்ண ஒரு பாழும் கிணத்துல தள்ளி விட நெனச்சது தான் என் பையன் கல்யாணம் இப்படி நின்னு போச்சு போல இருக்குன்னு ஒரே வருத்தம். அதுனால தான் மாது உன்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டப்ப உடனே சம்மதம் சொல்லிட்டார்.”

மாதவனின் தாயார் பேசிக் கொண்டே அவளுக்கு அலங்காரம் பண்ணிவிட, சுஜாதாவுக்கு நடந்த விஷயம் ஓரளவு புரிந்தது. மாதவன் தனக்காக சண்டை போட்டது அவள் மனதுக்கு இதம் அளித்தது. மருமகளின் முகத்தில் தெளிவைக் கண்ட மாமியாருக்கும் சந்தோஷம்.

எளிமையான அலங்காரத்தை முடித்து விட்டு, அனைவரும் கிளம்ப, மாதவனும் அவர்களை அவர்கள் விடுதிக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.

வீட்டிற்கு வந்த மாதவன், சுஜியினைத் தேடிச் செல்ல, ஜன்னலின் வழியே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சுஜி. மனதிலோ நாளை விமானம் ஏறினால் எப்போது மறுபடியும் மாதவனைப் பார்க்கப் போகிறோமோ என்ற கவலை ஓடிக்கொண்டே இருந்தது.

மாதவன் வாங்கித் தந்திருந்த டிசைனர் சேலை அவள் உடலைத் தழுவி இருந்தது. பிங்க் நிறத்தில் பச்சை கல் வேலைப்பாடு செய்யப் பட்டிருந்த சேலையில் சுஜியே ஒரு பெரிய தாமரை பூவைப் போல இருந்தாள். சற்று மெல்லிய அந்தப் புடவை சுஜியின் வடிவை எழிலுற எடுத்துக் காட்டியது. இவ்வளவு நாள் சிறு பெண்ணாகத் தோன்றிய சுஜி, சேலை கட்டியதும் எப்படி இவ்வளவு அழகான யுவதியானாள் என்ற ஆச்சிரியம் அவனுக்கு. பெண்கள் தான் ஒவ்வொரு வயதிலும் வித்யாசமான அழகாக இருக்கிறார்கள் என்ற வியப்பு தோன்றியது. அப்போதுதான் முதன் முறையாகப் பார்ப்பது போல் அவளை அணுஅணுவாகப் பார்த்து ரசித்தான் மாதவன். நெற்றியில் சற்று பெரிய குங்குமப் பொட்டு. அதன் மேல் கீற்றாக சந்தானம். திருமணத்திற்காக காலையில் மஞ்சள் தேய்த்து இருந்ததாலோ என்னவோ பொன்னிறத்தில் மின்னியது முகம். இயற்கையிலே சிவந்த உதடுகள் மெலிதாக லிப்ஸ்டிக் போட்டு இருந்ததால், இதென்ன ஆப்பிள் சிவப்பில் உள்ள ஆரஞ்சு சுளைகளா என்று தோன்றும்படி இருந்தது. கழுத்திலே காலையில் அவன் கட்டிய மாங்கல்யம் சந்தேகப் படாதே மாதவா… இவ இனிமே சத்தியமா உனக்குத்தான் என்று உறுதி கூறியது. அவள் தலையில் ஒரு கூடை மல்லிகை சூட்டி இருந்தார் கமலம். அவள் அனுப்பிய பூ வாசம் மாதவனின் மனதில் மாயம் செய்ய ஆரம்பித்தது.

மனது குறுகுறுக்க சட்டென்று திரும்பினாள் சுஜி. அங்கே தன்னை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மாதவனைக் கண்டதும் முகம் நாணத்தால் சிவந்தாள். மாதவனின் கண் போன திசையை பார்த்த சுஜி சட்டென்று சேலையை எடுத்து இடுப்பினை மறைக்க, அவள் கண்டு கொண்டதைப் பார்த்த மாதவன் சற்று வெட்கத்துடன்,

“இல்ல சுஜி முகம் மஞ்ச கலர்ல இருக்கே, உன் உண்மையான நிறமே அதுதானான்னு பார்த்தேன்”

இன்னும் சுஜி நம்பாததை உணர்ந்தவன், “நாளைக்கு ஊருக்கு நீ கிளம்பணுமே. மஞ்ச கலர்ல இருந்தவுடனே மஞ்சக் காமால எதுவுமா இருக்குமோன்னு நினைச்சு பயந்துட்டேன். இப்ப உறுதி ஆயிடுச்சு உன் முகத்துல மஞ்சள் போட்டுருக்கன்னு”

இன்னமும் நம்பாமல் சுஜி பார்க்க, “கவலைப் படாதே சுஜி, உன்னை ஒண்ணும் முழுங்கிட மாட்டேன். சுஜி நம்ம கல்யாணம் முடிஞ்சதும் உனக்குத் தரணும்னு நினைச்சேன்.

சுஜிக்கு அவன் கொடுத்தது அவள் கட்டியிருந்த புடவைக்குப் பொருத்தமான அழகான பெண்டேன்ட் மற்றும் மோதிரம். ரூபியில் செய்த அவை அந்த அறையின் ட்யூப் லைட் வெளிச்சத்தில் மின்னின.

“பிடிச்சுருக்கா சுஜி?”

“ரொம்ப நல்லா இருக்கு. இது ரூபி தானே?” சற்று சந்தேகத்துடனேயே கேட்டாள்.

“ரூபி மாதிரி”

“அப்படினா?”

“பகலிலே எமரால்ட், இரவிலே ரூபி”

“சுத்தமா புரியல”

“இது அலெக்சாண்டரைட்னு ஒரு கல். காலைல சூரிய வெளிச்சத்துல மரகத கல் மாதிரி பச்சை நிறத்துல இருக்கும். அதுவே ராத்திரி விளக்கு வெளிச்சத்துல ரூபி மாதிரி இளம் சிவப்பு நிறத்துல மாறிடும்”

கழுத்தில் மாதவன் முன்பு போட்ட செயினை கழட்டி அதில் புதிதாக வாங்கி வந்த பெண்டேன்ட்டையும் கோர்த்தபடியே பேசினாள் சுஜி, “காலைல பார்க்கலாம் நீங்க சொல்லுறது எவ்வளவு உண்மைன்னு”

பக்கத்தில் வந்த மாதவன், அவளது கையில் இருந்த சங்கிலியையும், மோதிரத்தையும் வாங்கினான்.

“சுஜி நான் இதை போட்டு விடட்டுமா?”

“ம்ம்ம்…”

மெதுவாக அவளது விரலில் மோதிரம் போட்டவன், அப்படியே அவளது சங்கு கழுத்தில் தன்னுடைய செயினையும் மாட்டி விட்டான். “அதிர்ஷ்டக்கார செயின்” என்று முணுமுணுத்தவன், அவளது காதருகே மெதுவாக குனிந்து, “இத கழட்டாம போட்டுருந்ததுக்கு தேங்க்ஸ் சுஜி” என்றான். மெதுவாக இடையினை வளைத்து, பின்பு முத்தமிட ஆரம்பித்தான். சுஜியின் நெற்றி, கண்கள், மூக்கு, கன்னம் என்று தொடங்கிய முத்தம் இதழ்களில் வந்து சிறைபட்டது.

அவனிடம் பேச நிறையா விஷயம் இருப்பது நினைவுக்கு வர, சற்று விலகியவள்,

“மது”

“ம்ம்ம்…”

“உங்ககிட்ட நிறைய பேசணுமே”

“நாளைக்குப் பேசலாம் சுஜி”

“நாளைக்கு நான் ஊருக்குப் போய்டுவேன்”

“போன்ல கூட பேசலாம். ஆனா நம்ம லைப் முதன் முதல்ல நம்ம வீட்லதான் ஆரம்பிக்கணும்னு நெனைக்கிறேன்”

கலகலவென சிரித்த சுஜி, “அப்ப நம்ம எப்ப மதுரைக்குப் போறது?”

“ஹ..ஹ…ஹ…” இப்போது சிரிப்பது மாதவனின் முறை. “பைத்தியம் அப்ப இது யாரு வீடுன்னு நெனைச்ச?”

“அப்ப இது விக்கி வாடகைக்கு இருக்குற வீடு இல்லையா?”

“ச்ச… சொந்த மச்சினனுக்குப் போய் யாராவது வாடகைக்கு விடுவாங்களா?”

“அப்ப அவன் வேல பாக்குறது?”

“எஸ் மேடம். நான் வேல பாக்குற கம்பனிலதான். நான் படிச்ச காலேஜ்ல இருந்து கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட்”

“இது எதுவுமே எனக்கு விக்கி சொல்லல. பாருங்க அவன என்ன பண்ணுறேன்னு”

“விக்கிய காலைல கவனிச்சுக்கலாம். இப்ப என்ன கவனி”

“இல்ல மது”

“ப்ளீஸ் சுஜி நாளைக்குக் காலைல நீ ஊருக்குப் போய்டுவ. நான் பாவம் இல்ல. என்னைப் பார்த்தா உனக்குப் பாவமா தெரியலையா?”

கெஞ்சுவது போல் கேட்ட மாதவனின் வார்த்தைகளில் உருகிப் போனாள் சுஜி.

பரோலில் வந்த சுஜியின் இதழ்களை இரக்கமில்லாமல் மறுபடியும் மாதவன் தன் இதழ் சிறையில் அடைத்துவிட்டான்.

வார்த்தைகள் உறைந்து போக, மெய் தன்னிலை மறக்க, உயிர்கள் அங்கே கூடு விட்டு கூடு பாய்ந்தது. கள்ளத்தனமாய் மின்னலின் உதவியோடு ஜன்னலின் இடைவெளி வழியே எட்டிப் பார்க்க முயன்ற நிலவை மழை திரைசீலையாய் மாறி, இடியாக கர்ஜித்து அடக்கிக் கொண்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – final partநிலவு ஒரு பெண்ணாகி – final part

வணக்கம் பிரெண்ட்ஸ், ‘நிலவு ஒரு பெண்ணாகி’ எனது பத்தாவது கதை. இதை ஆன்மீகம் கலந்து எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த அதே நேரத்தில் அதை எப்படி கதையாய்த் தருவது என்ற சந்தேகம் பலமாய் இருந்தது. கடவுளின் அருளால் என்  முயற்சி

உள்ளம் குழையுதடி கிளியே – 10உள்ளம் குழையுதடி கிளியே – 10

ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது.  அவரும் அவள் உண்ணும் போது