யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 02

கனவு – 02

 

வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவை பற்றிக் கவலைப்படாது தனது வேலையைச் செவ்வனே செய்வது இந்த வயிறு ஒன்று தான். தன் சோகத்தில் மூழ்கியிருந்த சஞ்சயனின் வயிறும் தன் கடமையைச் செவ்வனே செய்ய எண்ணி ராகம் பாடியது. அது பாடிய முராரியின் ஓலம் தாங்க முடியாது தனது இருக்கையில் கொழுவியிருந்த குளிரங்கியை எடுத்து அணிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளை நோக்கிச் சென்றான்.

 

இரவு பதினொரு மணி காட்டியது கைக்கடிகாரம். இப்போது எந்த உணவகம் திறந்திருக்கும் என்று எண்ணமிட்டவாறே அந்த மலைப் பாதையில் மெதுவாய் வண்டியைச் செலுத்தினான். சுல்தான் ஃபாய் கடை திறந்திருக்கும் என்ற ஞாபகம் வரத் தன் வீட்டருகே இருந்த அந்த சிறு கொத்துப் பரோட்டா உணவகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்.

 

“நல்ல காலம் இப்ப வந்தீங்க தம்பி… கடையைப் பூட்டுவம் என்று நினைச்சன். இன்னைக்கு யாவாரம் பெருசா இல்ல… நானே ஃபோன் பண்ணி வாறீயளோன்னு கேப்பம் என்று இருந்தன்…”

 

ஃபாய் கூறியவாறே அவனுக்கு உணவை எடுத்து வைத்தார். இவன் வீட்டுக்கு அருகே இருந்தமையால் சஞ்சயன் அடிக்கடி இரவு உணவை முடித்துக் கொள்வது இங்கே தான். கூடுதலான நாட்கள் இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் கடை திறந்திருப்பதால் சஞ்சயனுக்கும் இதுவே வசதியாகிப் போய் விட்டது.

 

அவனது மென்மையான சுபாவமும் இலகுவில் எல்லோரோடும் பொருந்திப் போகும் தன்மையும் ஃபாயையும் அவனையும் இந்த மூன்று மாத காலத்தில் இறுக்கமாய்ப் பிணைத்திருந்தது.

 

அவன் சாப்பிடவும் ஏற்கனவே கடையைச் சுத்தம் செய்திருந்தமையால் வேலை எதுவுமில்லாமல் இருந்த சுல்தான் ஃபாய் அவன் முன்னே வந்து அமர்ந்தார்.

 

“என்ன தம்பி… முகம் சரியாக வாடிப் போய்க் கிடக்கு… வேலை ரொம்ப அதிகமோ…? இல்லை வீட்டு யோசினை வந்திட்டுதோ… இதுக்குத்தான் தம்பி… காலகாலத்தில கலியாணத்தைக் கட்டிப் போடோணும். வேலை முடிச்சு வீட்டுக்குப் போனா… கதவு திறந்து விட்டு, வா என்று கூப்பிட ஒரு மனுசர் இருக்க வேணுமெல்லோ தம்பி… என்ன நான் சொல்லுறது ஞாயம் தானே…”

 

அவர் சொல்லவும் விரக்தியாகச் சிரித்து விட்டுத் தொடர்ந்து உண்ண ஆரம்பித்தான் சஞ்சயன். அவன் கூட உண்மையில் சில நேரங்களில் இவ்வாறு நினைத்ததுண்டு. ஒரு திருமணம் செய்து கொண்டால் என்ன என்று.

 

தனிமை என்பது மிகவும் கொடுமையான ஒன்று. அதுவும் அலுத்துக் களைத்திருக்கும் நேரத்திலோ, ஒரு சுகவீனமடையும் நேரத்திலோ இன்னொருவர் துணையையும் ஆறுதலையும் மனம் மிகவும் எதிர்பார்க்கும். அந்த நேரங்களில் வாய்க்கும் தனிமை மிகக் கொடியது.

 

வேலை முடித்துத் தானே திறப்புப் போட்டு வீட்டைத் திறந்து சென்றால் அங்கே வீடு இருளடைந்து போயிருக்கும். மின் விளக்குகளைத் தடவிப் போட்டு விட்டுப் பார்த்தால் அங்கே நிலவும் நிசப்தம் மனதைப் பிசையும். உடனடியாக வானொலியையோ, தொலைக்காட்சியையோ உயிர்ப்பித்து விட்டு, அன்றைய அலுப்புத் தீர வெந்நீரில் ஒரு குளியல் போட்டு விட்டு வர மனம் கொஞ்சம் சமனப்பட்டு விடும். அந்த வீட்டின் தனிமையும் பழகிப் போய் விடும்.

 

சிறிது நேரம் தொலைக்காட்சியில் எதையாவது பார்த்து விட்டுப் படுக்கையில் வீழ்ந்தால், சில நேரங்களில் விட்டத்தைப் பார்த்தவாறு மனம் பழைய யோசனைகளில் ஆழ்ந்து விடும். சில நேரங்களில் களைப்பில் யாரோ அடித்துப் போட்டது போல் படுத்த உடனேயே தூங்கி விடுவான்.

 

பல தடவைகள் சஞ்சயன் திருமணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறான். ஏன் தமக்கை பார்த்து ஒழுங்கு செய்து ஒரு பெண்ணைக் கூடப் பார்த்துப் பேசியிருக்கிறான்.

 

ஆனால் அன்றைக்கே அவனுக்குக் கடைசியும் முதலுமாய்த் தெரிந்து விட்டது. அவளை வரித்த மனதில் வேறொருத்திக்கு இடமில்லை என்று. இனித்தான் யாரை மணந்தாலும் அது ஒப்புக்குச் சப்பான போலியானதொரு வாழ்வேயன்றி அங்கு உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியும் இடம் பெறப் போவதில்லை என்று. அப்படியொரு வாழ்க்கைக்கு இந்தத் தனிமையே மேல் என்று முடிவெடுத்தவன், அதன் பிறகு திருமணத்தைப் பற்றி எண்ணுவதில்லை.

 

தனது தனிமையைப் போக்குவதற்காய் ஒரு திருமணத்தைச் செய்து, பிள்ளைகளைப் பெற்று, மனைவியென்று வருபவளின் நிம்மதியைக் கெடுத்து பிள்ளைகளோடு ஒட்டாத ஒரு போலியான வாழ்வை வாழும் பாவத்தைச் செய்ய அவன் தயாராக இல்லை. அன்று கைவிட்ட எண்ணம் தான். இன்றுவரை தனிமையே தனிப் பெருந்துணையாய் அவன் காலம் நகர்கிறது.

 

சுல்தான் ஃபாயோ, வேறு யாருமோ ஏதாவது சொன்னாலும் ஒரு சிறு புன்முறுவலோடு அமைதியாக இருந்து விடுவான். இப்போதும் அவ்வாறே சிரித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்துப் பணத்தைச் செலுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று நேராய்ப் படுக்கையில் வீழ்ந்தான்.

 

மூடிய கண்களுக்குள் வைஷாலி வந்து நின்றாள். அவளைப் பார்த்து ஏழெட்டு வருடங்களுக்கு மேல் என்று எண்ணியவனிடமிருந்து நீளமாய் ஒரு பெரு மூச்சு வெளிப்பட்டது. எவ்வளவு மகிழ்ச்சியான காலமது என்று சிந்தனை வயப்பட்டவன் முகத்தில் ஒரு மலர்ச்சி பரவியது.

 

‘வைஷாலி நிறையவே மாறி விட்டாள் என்ன?’ என்று மனசுக்குள் எண்ணியவன் அவளின் இந்த தோற்ற வித்தியாசத்தை எடை போட்டான்.

 

அப்போதெல்லாம் கொஞ்சம் குண்டாக அம்முலு பேபி ரகம் தான் அவள். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ‘எந்தக் கடையில் அரிசி வாங்கிறாய்?’ என்று கேலி பேசுவார்கள். இடையைத் தாண்டி நீண்டிருக்கும் அவள் கூந்தலுக்கே ரசிகர்கள் ஏராளம். இரட்டைப் பின்னலிட்டுக் கீழே ரிபன் கட்டியிருப்பாள். மலர்ந்த கண்களும் சிரித்த முகமும் அவளுக்கு. எப்போதும் புருவத்தின் மத்தியில் ஒரு கறுத்தப் பொட்டும் அதன் மேலே ஒற்றை விரலால் ஒரு விபூதிக் கீறொன்றும் இருக்கும்.

 

இன்று பார்த்த வைஷாலி முற்றிலும் வேறு என்று தான் சொல்ல வேண்டும். தோள் அளவில் வெட்டியிருந்த அவள் முடியும், மெலிந்த தோற்றமும் அவளை வேறு யாரோ போலத்தான் காட்டியது. அவள் நெற்றியில் இருக்கும் விபூதியும் பொட்டும் கூட இல்லை.

 

தமிழ் முறைப்படி சேலை அணிந்திருந்தாலும் அவள் அணிந்திருந்த பற்றிக் சேலை பெரும்பாலும் சிங்களவர்கள் அணிவது. இந்தக் கோலத்தில் அவளைக் காணும் யாரும் அவள் வைஷாலி என்று நம்புவது கடினமே.

 

ஆனால் சஞ்சயனுக்குத் தான் அவளை மூன்று வயதிலிருந்தே தெரியுமே. அதனால் அவளின் தோற்றத்தில் என்ன மாற்றமிருந்தும் அவன் இலகுவாக அடையாளம் கண்டுகொண்டான்.

 

‘இவள் ஏன் இங்கே வேலை செய்கிறாள்? யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ தானே இருக்கிறாள் என்று நினைத்தேன்… நான் கதைச்சிருக்கலாம். ஏன் தெரியாத மாதிரி வந்தேன்’

 

என்று தன்னையே கடிந்து கொண்டவன், நகையைத் திரும்ப எடுக்கச் செல்லும் போது அவள் கூடப் பேசுவது என்று முடிவெடுத்து விட்டு அப்படியே தூங்கி விட்டான்.

 

# # # # #

 

கைப்பேசியில் அலாரம் அடித்து நேரம் மாலை ஐந்து ஐம்பது என்று அறிவித்தது. எவ்வளவு வேலையிருந்தாலும் வைஷாலி ஆறு மணிக்கு மேல் அலுவலகத்தில் இருக்க மாட்டாள். வைஷாலி வீட்டுக்குப் புறப்படுவதை வைத்தே மற்றவர்கள் மாலை ஆறு மணி என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அவள் இந்த விடயத்தில் கவனமாகவும் மிகக் கச்சிதமாகவும் இருந்தாள்.

 

அவள் என்னதான் எல்லோருடனும் நன்றாகப் பழகினாலும் அவளிடம் யாராலும் ஒரு கட்டத்திற்கு மேல் நெருங்க முடியாது. முகத்துக்கு நேரே பேசி விடுவதும், பிடிக்காத விடயத்தை நேராக மறுத்து விடுவதும் அவளது அடிப்படைக் குணம். அதனால்தான் என்னவோ எல்லோரும் அவளோடு அளவாகத்தான் பழகினார்கள்.

 

தனியாக இந்த ஊருக்கு வாழ வந்த புதிதிலேயே வைஷாலி தனக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டாள். அவளைச் சுற்றி அவளே எழுப்பிக் கொண்ட வேலியொன்று அவளை இன்று வரை பாதுகாப்பாகவே வைத்திருந்தது.

 

அவள் அதிர்ஷ்டம், அந்த ஊரும் மிகவும் அருமையான இடம் என்று தான் சொல்ல வேண்டும். இலங்கையில் தேயிலை விளைச்சலுக்குப் பேர் போன இடம் அது. தேயிலைத் தோட்டங்களோடு அழகுக்கு குறைச்சலாகவா இருக்கப் போகிறது?

 

ஏற்ற இறக்கங்களோடு வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையும், அதிலே முதுகில் கூடையோடு வெற்றிலை, புகையிலை அதக்கிய வாயோடு பேசிச் சிரித்துக் கொண்டு செல்லும் கொழுந்து கொய்யும் பெண்களும் அத்தனை அழகு. பச்சைப் பசேலென்று கண் முன்னே பரந்து விரிந்து கிடக்கும் அழகைக் கண்டதும் மனக் கவலைகள் எல்லாம் பறந்தோடிப் போய் விடும் என்பது மிகையல்ல.

 

வைஷாலி தனது சொந்தப் பிரச்சினைகளிலிருந்து இவ்வளவு தூரம் மீண்டெழுந்ததில் தலவாக்கலைப் பிரதேசத்தின் அழகும் சுத்தமும் கூடப் பிரதான பங்கு வகித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

வங்கியிலிருந்து இருபது நிமிடங்கள் நடந்தால் வைஷாலி வசிக்கும் வீடு. பேருந்து, முச்சக்கர வண்டி வசதி இருந்தாலும் இவள் ஏதும் அவசரமான வேலைகள் இல்லை என்றால் நடந்து தான் வீட்டுக்குச் செல்வாள்.

 

மாலை மயங்கி மலைகளின் பின்னே கதிரவன் ஓடி ஒளியும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, காலையில் பச்சைக் கம்பளம் விரித்தது போன்றிருந்த மலைப்பகுதிகள் எல்லாம் இப்போது கரும் போர்வை போர்த்த ஆரம்பிக்கும். இவளுக்கு எப்போதும் இரவு சூழும் காட்சியை ரசிப்பதில் ஒரு அலாதிப் பிரியம்.

 

இந்த கரிய இரவைக் கண்டு நாமொன்றும் கலங்கித் தவித்து விடுவதில்லையே. இரவுக்குப் பின் விடியப் போகும் பகல் பொழுதை நம்பிக்கையோடு எதிர் நோக்கித்தானே ராத்திரியில் தூங்கச் செல்கிறோம். வாழ்க்கையில் பிரச்சினைகளும் இந்த இரவைப் போலத்தான். நாம் தான் விடியும் என்ற நம்பிக்கையின்றி, விடியலுக்காய் பொறுமையாய்க் காத்திராது இரவுக்குள்ளேயே தட்டுத் தடுமாறித் துழாவிக் கொண்டிருப்பது.

 

அன்றும் வழக்கம் போல ஆறு மணிக்கே வங்கியை விட்டுப் புறப்பட்டு இயற்கையை ரசித்தவாறே வீட்டையடைந்தாள் வைஷாலி. அன்றைய தினத்தின் அதிக வேலை உடலை அசதியாக்க ஒரு வெந்நீர்க் குளியலைப் போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்று புட்டவிக்க ஆரம்பித்தாள்.

 

இவள் இருப்பது இரண்டு படுக்கையறைகளோடு கூடிய சிறு தனி வீடோன்று. இவளும் அதுல்யாவும் தான் ஒன்றாகத் தங்கியிருந்தனர். அதுல்யா இன்னமும் வேலை முடித்து வந்திருக்கவில்லை. வைத்தியர் என்றால் சும்மாவா… நேரம் கெட்ட நேரமெல்லாம் வேலைக்கு ஓட வேண்டியிருக்கும். அவள் வீட்டுக்கு வரும் நேரம் கண்டு கொள்ள வேண்டியது தான்.

 

வைஷாலி எப்போதும் அதுல்யாவுக்கும் சேர்த்தே தான் இரவுணவு சமைப்பது. அவள் வராவிட்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அடுத்த நாள் பயன்படுத்திக் கொள்வாள். இன்றும் புட்டும் அவித்து கத்தரிக்காய் பிரட்டலும் வைத்தவள், ஒரு முட்டையையும் பொரித்து வைத்து விட்டு வரவேற்பறைக்கு வந்து மடிக்கணணியை உயிர்ப்பித்தாள்.

 

வைஷாலி சின்ன வயதிலிருந்தே கதைப் புத்தகப் பிரியை. பாடப் புத்தகங்கள் படிக்கிறாளோ இல்லையோ, கதைப்புத்தகம் வாசிக்காமல் தூங்கப் போக மாட்டாள். இப்போது பல இணையத் தளங்களில் பல எழுத்தாளர்கள் எழுதுவது இவளுக்கு பெரும் வரப்பிரசாதமாகப் போய் விட்டது.

 

வேலை முடித்து வந்து கணணியை உயிர்ப்பித்தாள் என்றால் அனைத்து இணையத்தளங்களுக்கும் ஒரு சுற்றுச் சென்று யார், யார் அன்று பதிவிட்டிருந்தார்களோ அவர்கள் பதிவுகள் முழுவதும் வாசித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வாள்.

 

ஷாலினி என்ற பெயரில் தான் அவள் எல்லோருக்கும் கமெண்ட் செய்வது. ஒரு முக நூல் கணக்கும் ஷாலினி என்ற பெயரில் வைத்திருக்கிறாள். எங்கே சொந்தப் பெயரில் இவள் முகப்புத்தகத்தில் கமெண்ட்ஸ் போட, அதைப் பார்க்கும் இவள் சொந்த பந்தங்கள் இவளைக் கழுவியூற்ற, ஏன் இந்த தேவையற்ற தலைவலியென்று தான் அவள் புனைபெயரில் வாசகியாக இருப்பது. இந்த முகப்புத்தகத்தில் நட்பு வட்டத்தில் இருப்பது எழுத்தாளர்களும் வாசக நண்பர்களும் மட்டுமே. முகமறியாது விட்டாலும் அன்பாய்ப் பேசும் கூட்டமிது.

 

இன்றைய இணைய உலகில் அனைத்து செய்திகளும் இந்த முகப் புத்தகத்தில் தானே உடனுக்குடன் தெரிய வருகிறது. அவ்வாறிருக்க எழுத்துலகம் மட்டும் இதற்கென்ன விதிவிலக்கா?

 

முகப்புத்தகத்திற்குச் சென்றால் தெரிந்து விடும். அன்றைக்கு யார் யார் கதை பதிவிட்டிருக்கிறார்கள் என்று. அங்கே கதை விவாதங்களுக்கென்று பல்வேறு குழுக்கள் வேறு. அங்கே அவ்வப்போது நடக்கும் சில சலசலப்புகள் கூட சுவாரஸ்யமானவையே.

 

அமேசான் கின்டிலிலும் தனக்கொரு கணக்கைத் தொடங்கியவளுக்கு வேலை முடித்து வீடு வந்தால் கதைகள் தான் உலகம். இன்னார் இன்னார் என்று வேற்றுமை பாராது அனைத்து எழுத்தாளர்களது கதைகளையும் வாசித்து விடுவாள்.

 

அதுல்யா கூட இவளைப் பார்த்து வியப்பாய்க் கேட்பாள்,

 

“எப்படி வைஷூ… எல்லாக் கதையையும் ஞாபகம் வைத்திருக்கிறாய்? ஒரு நாளைக்கு ஏழெட்டு கதைக்குக் குறையாமல் வேறு வேறு கதைகளிலிருந்து ஒவ்வொரு அத்தியாயம் வாசிக்கிறாய். அது குழப்பமாக இருக்காதா? நானென்றால் இந்த ஹீரோயின் அந்த ஹீரோ என்று குழப்பியடித்து விடுவேன்…”

 

“ஹா… ஹா… வாசிக்கும் போது அந்தக் குழப்பமெல்லாம் வராது அதுல்யா…”

 

இவளும் புன்னகையோடே பதிலளிப்பாள்.

 

இன்றும் முகப்புத்தகத்திற்குச் சென்றவள், ஒரு கதை பற்றி அங்கு காரசாரமாக நடந்து கொண்டிருந்த விவாதத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். கைப்பேசி சிணுங்கவும் தான் சுயநிலைக்கு வந்தவள் எடுத்துப் பார்த்தாள்.

 

அவசரகேஸ் ஒன்று வந்து விட்டதால் இரவு வைத்தியசாலையிலேயே தங்குவதாக அதுல்யாதான் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தாள். இவளும் சரியென்று பதிலளித்து விட்டு நேரத்தைப் பார்க்க இரவு ஒன்பது மணி காட்டியது சுவர்க்கடிகாரம். மடிக்கணணியை அணைத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள்.

 

புட்டையும் கறியையும் மைக்ரோவேவ் அவனில் சூடாக்கிச் சாப்பிட்டவள் பாத்திரங்களைக் கழுவி, சமையலறையைச் சுத்தம் செய்து விட்டுத் தனது படுக்கையில் வீழ்ந்தாள். உடல் அலுத்திருந்தும் தூக்கம் வர மாட்டேன் என்றது.

 

கைப்பேசியை எடுத்து கின்டிலை திறந்தவள் அதிலே ஒரு கதையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். அவள் துரதிர்ஷ்டம், அந்தக் கதையோ ரொம்ப இழுவையாக இருந்தது. அதை வாசித்து தன்னைக் கொடுமைப் படுத்திக் கொள்ள விரும்பாதவள் கைப்பேசியியை அருகே வைத்து விட்டுக் கண்களை மூடித் தூங்க முயன்றாள்.

 

திடீரென மூடிய கண்களிடையே சஞ்சயன் வந்து நின்றான். ‘அட ஆளே மாறி விட்டானே… படிக்கும் போது எவ்வளவு ஒல்லியாக இருப்பான்… தாடியும் ஆளும்… அடையாளமே கண்டுபிடிக்க முடியலையே… நான் இவன் எங்கேயோ வெளி நாட்டில இருக்கிறான் என்று நினைக்க, ஐயா இங்க தான் இருக்கிறார் போல… அது சரி… எதுக்கு என்னை அடையாளம் தெரிந்தும் தெரியாத மாதிரி போனான்… நகை எடுக்க வரும் போது என்ன செய்யிறான் பாப்பம்…’

 

என்று எண்ணமிட்டுக் கொண்டே நித்ராதேவியின் வசமானாள்.

 

பேசிக் கொள்வார்களா இருவரும்?

 

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 02”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சித்ராங்கதா – 17சித்ராங்கதா – 17

Chitrangathaa – 17 வணக்கம் பிரெண்ட்ஸ், சரயுவுக்கும் ஜிஷ்ணுவுக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. உங்களது கமெண்ட்ஸ் படித்தேன். உங்களது எண்ணங்களைத் தெரிவித்து நீங்கள் அனுப்பிய முகநூல் மெசேஜ் மற்றும் பர்சனல் மெயில்களுக்கு ஓராயிரம் நன்றி. இந்தக் கதையில் நீங்கள் காட்டும்

ராணி மங்கம்மாள் – 6ராணி மங்கம்மாள் – 6

6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி  ரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20

“நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக்