மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 36

36

விக்னேஷ் தங்கியிருந்தது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடி இருப்பு. ஒரு சிறிய சமையல் அறை. தினமும் அவனும் அவன் நண்பனும் தாங்களே சமைத்துக் கொள்வதால் அதற்குத் தேவையான பொருட்களும் அங்கு இருந்தது. சிறிய படுக்கை அறையில் விக்னேஷ் தங்கி இருந்தான். வீட்டில் இருந்த பெரிய அறையில் தான் மாதவன் அமர்ந்திருந்தான். அந்த அறையின் ஒரு மூலையில் கணினி ஒன்று இருந்தது. அதன் எதிரே இருந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் மாதவன். அவன் அணிந்திருந்த நீல நிற காட்டன் சட்டை அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. கைகள் இரண்டையும் கோர்த்திருந்தான். கண்கள் மட்டும் கூர்மையாக கதவைத் தட்டி விட்டு அறையின் உள்ளே நுழைந்த சுஜியைப் பார்த்துக் கொண்டிருந்தன. பேபி பிங்கில் காப்பர் சல்பேட் நீல நிறத்தில் சிறிய சிறிய பூவேலைப்பாடு செய்த குர்த்தியும், காப்பர் சல்பேட் நீல நிற பாட்டியாலா பாண்ட்டும், காதில் சிறிய தொங்கட்டானும், இடது கையில் சிறிய வாட்சும் அணிந்திருந்தாள் சுஜி. அவளது துப்பட்டா கழுத்தினைச் சுற்றி மறைத்திருந்தது. கண்கள் பூராவும் குழப்பத்துடன் மாதவனை ஏறிட்டாள்.

விஷயம் அவள் வாயாலேயே வரட்டும் என்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன். தள்ளிப்போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரிந்த சுஜி விஷயத்துக்கு நேராக வந்தாள்.

“இந்தக் கல்யாண யோசனை எந்த அளவு சரிபட்டு வரும்னு எனக்குத் தெரியல.. உங்க குடும்பத்துக்கும், எங்க குடும்பத்துக்கும் அந்தஸ்து வித்யாசம் ரொம்ப அதிகம். அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்பறம் அவஸ்த்தைப் படக் கூடாது. துரைப்பாண்டி கிட்ட இருந்து தப்பிக்க வேற வழி யோசிப்போமே”

முதன் முறையாக வாயைத் திறந்தான், “வேறவழி தெரியாம தான் சுஜி இந்த வழிய யோசிச்சோம். எங்க ஒரு குடும்பத்துக்குத்தான் அவங்க பயப்படுவாங்க. என்னைய நீ கல்யாணம் பண்ணிட்டா தம்பி குடும்பம்னு உங்க வீட்டுல இருக்குற யாரையும் ஒண்ணும் செய்ய மாட்டான். அது கூட நாங்க கொடுத்துட்டு வர பணத்துக்காகத்தான். மத்த யாரா இருந்தாலும், கொலை செய்யக் கூட தயங்க மாட்டான். அவன் ஜெயில இருந்ததே ஒரு கொலை முயற்சிலதான்.”

ஏன் இப்படிப்பட்ட ஒருவனை தனக்குத் திருமணம் செய்ய அழைத்து வரவேண்டும். பின்தானும் இப்படி ஒரு குற்ற உணர்ச்சியில் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சுஜிக்கு.

அவளது எண்ண ஓட்டம் புரிந்த மாதவன், “இந்த சிக்கல் ஏற்பட்டது எங்க குடும்பத்தால தான் சுஜி. அதனால அத சரி பண்ணுற கடமை எங்களுக்குத்தான் உண்டு”.

தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிய சுஜியின் அருகே வந்தவன், அவளது கைகளைப் பற்றினான். மெதுவாக அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்களை உற்று நோக்கியவன்,

“நீ என்னென்னவோ காரணம் சொன்னாலும், அது எதுவும் நிஜம்னு எனக்குத் தோணல”

ஒரு நீண்ட பெருமூச்சினைவிட்டான். பின் கவலை தோய்ந்த குரலில் வினவினான். “என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கலையா சுஜி?”

கம்பீரமான முகம். அதில் கனிவும், காதலும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. எப்பொழுதும் குறும்பாய் அல்லது கோவமாய் அவளைப் பார்க்கும் கண்கள் இன்று காதலை யாசிக்கும் யாசகனாய் கவலை நோய் பீடித்து இருந்தது. காதல் நோயால் ஆண்களுக்குக் கூட பசலை வருமா? இவனை எப்படி தன்னால் வேண்டாம் என்று சொல்ல முடியும். இவனை எப்படி எனக்குப் பிடிக்காம இருக்கும்? எனக்குப் பிடிக்குறது மினிக்கும் பிடிக்குதே அதுதான் பிரச்சனையே. மனதுள் நினைத்தவள் அதனைச் சொல்ல மனமின்றி, “நான் மினிகிட்ட பேசிட்டு என் முடிவ சொல்லுறேனே. அவ ராகேஷ பார்க்கப் போய் இருக்கா”

மாதவனின் முகத்தில் வேதனை ஒரு கோடாக மின்னி மறைந்தது. அன்று ரேமுகியில் காதலர்தினத்துக்கு கார்டு வாங்கிய ராகேஷ் அவன் நினைவுக்கு வந்தான். ராகேஷ் ஒருவேளை தனக்கு முன்னரே சுஜியிடம் காதலைச் சொல்லிவிட்டானோ? இல்லை மினிக்குமே சுஜியைத் தன் அண்ணியாக்கிக் கொள்ள ஆசையா? கேள்விகளைத் தன்னுள்ளே முழுங்கியவன், “என்னைய கல்யாணம் பண்ணிக்க நீ மினிகிட்டயும், ராகேஷ்கிட்டயும் ஏன் சம்மதம் கேட்கணும்?”

அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த சுஜி, “மது, உங்கள மினி காதலிக்குறா. அவள நீங்க கல்யாணம் பண்ணிட்டா நல்லா இருக்கும். உங்களுக்கு என்னை விடவும் எல்லா விதத்திலயும் தகுதியானவ அவதான். அவளக் கல்யாணம் பண்ணிக்குறிங்களா?” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

“என்ன மினி என்னை லவ் பண்ணுறாளா? என்ன உளறல் இது?”

“இது ஒண்ணும் உளறல் இல்ல. நிஜம்தான். உங்கள அவ ரொம்ப நாளா லவ் பண்ணுறா. மூணு வருஷம் முன்னாடியே எனக்கு விஷயம் தெரியும்”

“சரி அவ என்னைய லவ் பண்ணா, ஏன் இந்த மூணு வருஷமா என்கிட்ட விஷயத்த சொல்லல? வெட்கம், பயம்னு கதை விடாதே. இதுல ஒண்ணு கூட உன் பிரெண்ட் கிட்ட கிடையாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”

“அதெல்லாம் இல்ல. நீங்க எங்க இருப்பிங்கன்னு அவளுக்குத் தெரியாம இருந்து இருக்கும்.”

“அவளுக்கா? நான் இருக்குற இடம் தெரியாதா?”

மேலும் ஏதோ சொல்ல வந்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவனாக சுஜியைப் பார்த்தான்.

“நீங்களும் உங்க அத்தையும் தான் அவங்க வீட்டக் கேவலப்படுத்திட்டிங்களே. அந்தக் கோவமா கூட இருக்கலாம்”

“இருக்கலாம், இருக்கலாம். ஆனா, நாம இப்ப நம்ம கல்யாணம் பத்தி பேசிட்டு இருக்கோம் சுஜி”

“நான் உங்கள கல்யாணம் பண்ணிக்குறது மினிக்குச் செய்யுற துரோகம் மாதிரி தோணுது. ஒருவேள நான் கேட்காம மினி வந்து நேரா கேட்டா அவள கல்யாணம் பண்ணிக்குவிங்களா?”

சற்று புதிராக அவளைப் பார்த்தவன், “அதைப் பத்தி அப்பறம் பார்க்கலாம் முதல்ல நம்ம கல்யாணம் பத்தி விஷயத்தை மினிகிட்ட போன்ல சொல்லு”

“இல்ல ராகேஷ் அவசரமா கூப்பிட்டதால அவ மொபைல மறந்து இங்கேயே வச்சுட்டு போய்ட்டா”.

“இதெல்லாம் பெரிய விஷயமா… மினி வீட்டுக்குப் பேசு”.

“மினி வீட்டுக்குப் போகல”.

“பின்னே”

“ராகேஷோட கல்யாணத்துக்குப் போய் இருக்கா.”

“என்னது ராகேஷுக்கு கல்யாணமா?”

மாதவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

“ஆமா. பொண்ணு பேரு சுஜிதா. ரெண்டு பெரும் ரொம்ப நாளா விரும்புறாங்க. சுஜிதா வீட்டுல மாப்பிள்ள பார்க்கவும், அவசரமா ரிஜிஸ்தர் மாரேஜ் பண்ணிக்கிட்டாங்க. அது விஷயமா தான் மினி ஊருக்குப் போயிருக்கா. அவங்க அப்பா கூட உங்க கடைல தான் மேனேஜரா வேல பாக்குறார்.”

சற்று நேரம் கண்மூடி உட்கார்ந்து இருந்தான் மாதவன். நூல்கண்டின் ஒரே ஒரு சிக்கலைத் தவிர மற்ற எல்லா சிக்கலும் விடுபடுவதை உணர்ந்தான். மிச்சம் இருக்கும் ஒரே பெரிய சிக்கலையும் சேதம் இல்லாமல் விடுவிக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்தது.

“வெளியே விக்கி இருந்தா கூப்பிடு”

விக்கி எதுக்கு இப்ப என்று நினைத்தபடியே அழைத்து வந்தாள் சுஜி.

“விக்கி, மினிகிட்ட நான் தனியா ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும். போன் போட்டுத் தா”

மாதவன் சொன்னவுடன் மிகவும் பவ்யத்துடன் விக்கி யாரிடமோ பேசி எப்படியோ மினியை அழைத்து, ஒரு சில வார்த்தை பேசியபின் மாதவனிடம் செல்லை தந்தான். பின் நாகரீகம் கருதி வெளியே சென்று விட்டான். விக்கியுடனேயே சுஜியும் வெளியே வந்துவிட, மிகச் சில நிமிடங்களில் அவளைத் திரும்ப அழைத்தான் மாதவன்.

“சுஜி, இப்ப பொண்ணு மாப்பிள்ளைய அழைச்சுட்டு மினியும் அவங்க அப்பா அம்மாவும் ராகேஷோட மாமனார் வீட்டுக்குப் போயிட்டு இருக்காங்க. அதனால ரொம்ப பேச முடியாது. சுருக்கமா பேசு” என்றபடி செல்லைத் தந்தான்.

மறுமுனையில் இருந்த மினி, “சுஜி அதிதில இருந்து வந்த இன்டெர்வியூ லெட்டெர உன்கிட்ட கொடுக்க வந்தப்ப, மாரியம்மன் கோவிலுல வச்சு உன் கிட்ட ஒன்னு சொன்னேன் நியாபகம் இருக்கா”

சுஜி மௌனமாயிருக்க, மினி தொடர்ந்தாள், “பின்னாடி எனக்கு வேணுங்கிறத நானே உன்கிட்ட கேட்டு வாங்கிக்குறேன், ஆனா அப்ப நீ அத மறுக்காம தரணும்னு சொன்னேன். சரியா?”

“சரிதான் மினி”

“இப்ப சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ. எனக்கு வேண்டியது இந்த கல்யாணத்துக்கு உன்னோட சம்மதம். செல்ல நான் வச்ச உடனே மாது கிட்ட சம்மதம் சொல்லுற. இப்ப வைக்குறேன். நாளைக்கு நான் உன்னை வழி அனுப்ப நேர்ல வரேன். அப்ப மத்தது எல்லாம் பேசிக்கலாம். உன் கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்”.

மினி செல்லை வைத்து விட்டாள். சுஜி அப்படியே நின்றுக் கொண்டு இருந்ததைப் பார்த்த மாதவன் வினவினான்.

“என்ன சுஜி?”

“இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்”.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’

“ச்சே… இதுவும் நல்லால்ல” அணிந்திருந்த சட்டையைக் கழற்றி விட்டெறிந்தான். தரையில் அனாமத்தாய் கிடந்த ஒரு டசன் சட்டைகளுக்கு நடுவில் அந்த சட்டையும் ஒளிந்துக் கொண்டது. எதற்கு இத்தனை பாடு… இன்று காதம்பரியை சந்திக்கப் போகிறான்.   ‘டேய் அடங்குடா…. பெங்களூர்லேருந்து வந்து

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65

65 – மனதை மாற்றிவிட்டாய் ஆதித்ய ராஜா கீழே திவ்ய ஸ்ரீ என்ற பெயரை எழுதி பல திருத்தங்கள் செய்து இறுதியில் தியா – தயா என்று இருந்தது. ஆதி நீங்க கேட்ட மாதிரி நான் உங்க பேர்ல இருந்து உங்களுக்கு

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 4காயத்திரியின் ‘தேன்மொழி’ – 4

பாகம் 4 கிஷோர் அன்றிரவு தேனுவிற்கு கால் செய்கிறான் …..அவள் இவன் மொபைல் கால் எதிர்பார்த்தவளாய் அட்டண்ட் செய்து”தயக்கத்துடன் ம்ம்ம் “என்கிறாள் . ஹே ஹனி என்ன ம்ம்ம் ஏதாவது பேசுமா எனக்கேட்கிறான்…..”சொல்லுங்க மாமு ” என இவள் பதில் தருகிறாள்….