Tamil Madhura கதை மதுரம் 2019,வாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 5

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 5

பாகம் ஐந்து  

“லல்லும்மா, பசிக்குதுடா. லஞ்சுக்கு என்ன இருக்கு சாப்பிட?”, பாகுபலி 2.0 பார்த்து முடித்துவிட்டு வயிற்றில் தொடங்கி இருந்த கடாமுடா சப்தம் மதிய உணவை நினைவு படுத்த (தமன்னாவையும் அனுஷ்காவையும் பார்த்து இத்தனை நேரம் தன்னிலை மறந்ததினால் பசி கூட தெரியவில்லை) மெல்ல தர்மபத்தினியை அழைத்தான்.

ஏற்கனவே அரை டஜன் நான்கதாய், நான்கைந்து கரண்டி பைனாப்பிள் கேசரி, ஏழெட்டு சாக்லேட் குக்கீஸ் என்று கலந்துகட்டி அடித்திருந்தால் லலிதாவிற்கு வயிறு (நம்மூர் அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன் இருப்பது போல) கும்மென்று இருந்தது.

அதனால் நக்கலாக, “அதோ இருக்கு அடுப்பு, இதோ இருக்கு பாத்திரம், அங்க இருக்கு கரண்டி. எது வேணுமோ சமைச்சு சாப்பிட்டுக்கோங்க”, என்று சொல்லிவிட்டு திரும்பி நின்று கொண்டாள். அத்தனை கோவமாக்கும்!

“அடிப்பாவி, எப்படித்தான் பிளான் பண்ணுவியோ”, என்று மனதுக்குள் அவளை வறுத்தாலும் வாய் விட்டு சொல்லி இன்னும் அவளை கோபப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து “சர்த்தான் போடி” என்று திட்டிக் கொண்டே தட்டி முட்டி தனக்கு வேண்டியதை செய்து எடுத்துக் கொண்டு நகர்ந்தான். அதுவும் நல்லதாக போயிற்று! அதனால் தான் இத்தனை பேரும் திடீரென தங்கள் வீட்டுக்கு வரும் ரகசியம் விளங்கியது.

ஏனென்றால் அவன் சமைத்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்த இரண்டு தோழியர் வந்து சகதர்மிணியோடு பேசுவது காதில் விழுந்தது. இவ்வளவு நேரம் அப்பிராணியாக சினிமா பார்த்துக் கொண்டிருந்ததில் வீட்டில் நடக்கும் ரகலையை பற்றி ஒன்றும் அறியவில்லை நம்ம ஆளு.

காலையில் நடந்த யுத்தத்தை, (உண்மையில் உரசல் தான் ஆனால் அப்படியே சொல்லிவிட முடியாதே), சில பல சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் பின்னணி இசை எல்லாம் சேர்த்து முழு நீள வண்ண திரைப்படமாக நண்பிகளுக்கு லலிதா முன்னுரை முகவுரை கொடுக்க, ரமேஷ் அங்கேயே கொத்துபரோட்டா போடப் பட்டான்.

“எனக்கு நல்லா தெரியும், இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்”, என்று தொடங்கி லலிதாவிற்கு தூப தீபம் போட்டாள் ஒருத்தி.

“சே…. எல்லாரையும் அப்படி சொல்லாதப்பா, நல்லவர்களும் இருக்கத்தான் செய்யறாங்க”, ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவது போல பேசினாலும், நல்லவர்களும் இருக்காங்க – ஆனால், லலிதாவின் கணவன் அப்படிப்பட்ட நல்லவர்களில் சேர்த்தியில்லை, என்று பொருள் வருவது போல பேசி முன்னவளின் தூப தீபத்தை நன்றாக விசிறி விட்டு கொழுந்துவிட்டெரியச் செய்தாள் அடுத்தவள்.

இரண்டு பேருக்கும் தலையை ஆட்டியபடி முகத்தை ஒன்றரை முழத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டு, “அதுனால தான் என்ன செய்யறதுன்னு உங்ககிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். எனக்கு ஒரு மாசத்துக்குள் பத்து கிலோ வெயிட் குறைக்கணும். எப்படின்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்!”, என்று கெஞ்சினாள் லலிதா.

மெளனமாக இந்தப் பக்கம் கவனத்தை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த ரமேஷுக்கு நல்ல கூட்டிச் சுவராக பார்த்து முட்டிக் கொள்ளவேண்டும் போல இருந்தது.

நல்லவேளை இதுவரை யார் யாரிடம் கேட்டாள் அதற்கு அவர்கள் என்னென்ன சொன்னார்கள் என்ற விவரத்தை சொல்லவில்லை. ஏனெனில், ஷாலினி மற்றும் நித்யா இருவருமே லலிதா கேட்டு முடித்ததும்  அவர்களது ஐடியாக்களை அள்ளித் தெளித்தார்கள்.

நித்யா: சும்மா வெயிட் லாஸ்ன்னு பொத்தாம் பொதுவா சொல்லாத. வெயிட் குறைக்கிறதை விட முக்கியமானது உடம்பில fat குறைக்கிறது, மஸில் கையின் அதாவது தசையை உறுதியா ஆக்குறது. பிட்னெஸ்’ஐ கூட்டுறது. பிட்னெஸ் அதிகம் ஆனாலே ஹெல்தியா ஆகிடுவ. அதை தான் நீ இப்போ கவனமா பாக்கணும்.

லலிதா: ஆமாம் மாலதி கூட ஜிம் சேர சொல்லி சொன்னா…..

நித்யா: ஜிம் போனாலும் அங்க போயி கார்டியோ, வெய்ட்ஸ் ரெண்டும் சரியான விகிதத்துல செய்யணும். அப்போ தான் fat லாஸ், மஸில் கையின் ரெண்டும் கிடைக்கும்.

லலிதா: என்னது? நீ என்னென்னவோ புதுசா சொல்லற?

நித்யா: கார்டியோ, வெயிட்ஸ் அதெல்லாம் கேள்விப் பட்டதில்லையா?

ஷாலினி: லலிதா, சும்மா வள வளன்னு பேசிட்டு இருக்காதே. எக்ஸர்சைஸ் இருபது பெர்சென்ட் அப்படின்னா டயட் எண்பது பெர்சென்ட். அட்கின்ஸ் டயட், சவுத் பீச் டயட், கீட்டோ டயட், மெடிட்டரேனியன் டயட், பேலியோ   டயட், இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் அப்படின்னு நிறைய வகை இருக்கு!

இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சா தானாகேவே வெயிட்டும் குறைஞ்சிடும்

ஒரு பக்கம் பந்து அடித்ததும், டக் டக்ன்னு அடுத்தப்பக்கம் போய் பிறகு முதல் பக்கம் வருமே அதைப்போல லலிதாவும் இவர்கள் இருவருமே சொல்வதை மாறி மாறி தலையை திருப்பினபடி கேட்டுக்கொண்டிருந்தாள்.

லலிதா: கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் ரெண்டு பேரும். ஏன் பல்லிடுக்குல மாட்டின பிரஷ் மாதிரி பாடாப்படுத்தறீங்களே! நான் இப்படியே இருந்துக்கறேன். போங்கப்பா…..

ஷாலினி: உடனே சலிச்சிக்கறியே, இப்போ டுக்கன் டயட் அப்படின்னு சொன்னா ப்ரோடீன் அதிகமா கார்ப்ஸ், fat ரெண்டையும் குறைச்சு சாப்பிடணும். ப்ரோடீன் நூறு கலோரி மற்றது ஆயிரம் கலோரி சாப்பிடணும்.

லலிதா: ஒரு வேளைக்கா? ஆயிரம் கலோரிக்கு ரெண்டு மசால் தோசை, ஒரு மசால் வடை, ரெண்டு கப் சாம்பார், ஒரு கப் சட்னி, ஒரு மைசூர் பாக் வருமா?

ஷாலினி: அந்த மைசூர் பாக்’கை கட் பண்ணிடு. மேலும், ஆயிரம் காலோரின்னு சொன்னது ஒரு நாளைக்கு. தவிர, வடை சாப்பிட முடியாது, எண்ணெய்ல பொறிச்சது. தோசையும் முடியாது. மசால் தோசை முடியவே முடியாது, கார்ப்ஸ் அதிகம்.

லலிதா: இது வேலைக்கு ஆகாது. வேற சொல்லு.

ஷாலினி: இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங். இது சாப்பிடறதை குறைக்கிறது கிடையாது. சாப்பிடற நேரத்தை குறைக்கிறது.

லலிதா: அப்படின்னா?

ஷாலினி: இருபத்திநாலு மணிநேரத்துல பதினெட்டு மணி நேரம் சாப்பிட முடியாது. மீதம் இருக்கிற ஆறு மணிநேரத்துக்குள்ள என்ன வேணா சாப்பிடலாம். சோ, இப்போ முதல் நாள் எட்டு மணிக்கு ராத்திரி டின்னர் சாப்பிட்டால் அதிலிருந்து பதினெட்டு மணிநேரம் அதாவது மறுநாள் மதியம் ரெண்டு மணிக்கு தான் சாப்பிடலாம். என்ன வேணா சாப்பிடலாம். மதியம் ரெண்டு மணியில இருந்து ராத்திரி எட்டு மணிக்குள்ள சாப்பிட்டுக்கணும். அதுக்கு பிறகு ஒண்ணும் சாப்பிடமுடியாது.

லலிதா: …………….. வாய் ‘ஓ’ என்று திறந்தபடி திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசனை பார்த்து திகைத்த ஹேமநாத பாகவதரை போல ஆடாது அடங்காது அமர்ந்திருந்தாள்.

நித்யா: இந்த பிரச்சினையெல்லாம் எதுக்குன்னு தான் பிட்னெஸ் ப்ரோக்ராம்மில் சேருன்னு சொல்றேன்.

மானசீகமாக தலைக்கு மேலே கையை தூக்கி “ரெண்டு பேரும் ஆளை விடுங்க தாயி”, நம்மளால இதெல்லாம் ஆகாது என்று சொன்னாள் லலிதா.

சரியாக அப்போது தான் மீண்டும் flat வாசலில் காலிங் பெல் அடித்தது. தர்மபத்தினியின் பேச்சு தடைபடுவதற்கு முன்னால் ஓடிச்சென்று தாவி தட்டி கதவை திறந்தான் ரமேஷ். அதே தெருவில் மூன்று பிளாட் தள்ளி  இருக்கும் ரமேஷின் ஒன்று விட்ட பெரியப்பா பெண் நின்றிருந்தாள்.

கண்ணீரும் கம்பலையுமாக!

“அக்கா, என்னாச்சு?”

“ரமேஷ், நான் இப்போவே வெளியூருக்கு போகணும். என் மாமியாரை உன் வீட்டுல விட்டுட்டு போகட்டுமா? நீ கொஞ்சம் பார்த்துக்கோயேன். ரொம்ப அவசரம். உன்னைத்தான் மலை போல நம்பி வந்திருக்கேன்”

“அக்கா, நீ சொல்லறது எனக்கு தலையும் புரியலை, வாலும் புரியலை. முதல்ல உள்ள வா. ஏன் இப்படி தலையெல்லாம் கலைஞ்சு போயிருக்கு. உள்ள வா”

இந்த கணத்தில் பேச்சுக் குரல் கேட்டு நம் கதாநாயகி லல்லுவும் வேகமாக வாசலுக்கு விரைந்தாள். “அக்கா, உள்ள வாங்க, என்னங்க இது, வீட்டுக்கு வந்தவர்களை வாசலிலேயே நிக்க வெச்சு பேசிட்டு”, கையை பிடித்து உள்ளே இழுத்துவந்தபடி லைட்டாக ரமேஷை சதாய்த்தாள். கோபம் மறைந்து பேசவேண்டி வந்ததால் எங்காவது அவனுக்கு அப்படியே உச்சி குளிர்ந்துவிட்டால் என்ன செய்வது.

தோழிகள் இருவருமே கண்களால் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர்.

நேராக பெட்ரூமுக்கு அழைத்து சென்று பின்னாலே நூல் பிடித்தது போல தொடர்ந்து உள்ளே வந்த ரமேஷ் அறைக்குள் நுழைந்ததும் கதவை மூடி விட்டு, “அக்கா, என்ன ஆச்சு? என்ன விஷயம்?”, இதமாக கேட்ட லல்லுவின் கையை பிடித்துக் கொண்டு உடைந்து போய் அழுதாள் காயத்ரி என்கிற காயு.

“உங்க அத்தான் மங்களூர் போயிருந்தாரில்லையா? அங்க சைட்டுக்கு போயிட்டு ஹோட்டல்க்கு திரும்பிட்டு இருந்தப்போ, கார் ஓட்டிட்டு வரும்போது எதிரில் வந்த லாரியில் மோதி ஆக்சிடன்ட் ஆகிடுச்சாம். லாரிக்காரன் மேல தான் தப்பு போலருக்கு. எதுவா இருந்தா என்ன, இப்போ இவர் தானே ஹாஸ்பிடல்ல இருக்காரு. இப்போ தான் தகவல் சொன்னாங்க. நிறையவே அடி பட்டிருக்காம். கார் அப்பளம் மாதிரி நொறுங்கி போச்சு போல. பிழைச்சதே கஷ்டம்ன்னு சொல்லறாங்க. கேட்டதில்லை இருந்து எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. உடனே அங்க போகணும், அவரை பார்க்கணும்”, மேலே சொல்ல முடியாமல் கேவல் வர, வாயை பொத்திக் கொண்டு அழுதாள்.

ஆதரவாக முதுகை நீவி விட்டபடி, “அக்கா அழாதீங்க. நீங்க இப்போ தான் தைரியமா இருக்கணும். நீங்களே உடைஞ்சு போயி அழுதா என்ன ஆகிறது?”

சுதாரித்துக் கொண்டு கண்களை துடைத்துக் கொண்டவள், “நல்லவேளை பிள்ளைங்களுக்கு இப்போ ஸ்கூல் லீவு. அதுனால, அம்மா வீட்டுல விட்டுட்டு போகப்போறேன். என் மாமியார் இங்க இருக்காங்க இல்லையா? என் நாத்தனார் வெளியூருக்கு டூர் போயிருக்காங்க. இன்னும் பத்துநாள் கழிச்சு தான் திரும்ப வருவாங்க. அவங்க ஜாலியா இருக்கச்சே இந்த பிரச்சினையை சொல்லி அவங்களை களேபரபடுத்த வேண்டாமேன்னு பார்க்கறேன். அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு வந்தேன். அத்தையை உங்க வீட்டுல விட்டுட்டு போனா உங்களுக்கு ஓகேவா?”

“அடடா, அக்கா நீங்க இதை கேட்கணுமா? அத்தையை நீங்க இங்க விட்டுட்டு உடனே கிளம்புங்க, ஆனா தனியா போகவேண்டாம். இவர் சும்மாதானே இருக்கார். இவர் உங்களை கூட்டிட்டு போவார்”, இத்தனை நேரம் பெருமையாக பெண்டாட்டியை லுக்கு விட்டுக் கொண்டிருந்த ரமேஷ் அதிர்ந்து போயி, ‘அடிப்பாவி, ஆப்பு வெச்சிட்டியே ராசாத்தி’, என்று நினைத்துக் கொண்டான்.

“இல்ல, எனக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் போயிட்டிருக்கு….லீவு எடுக்கறது கஷ்டம்”, ஈனஸ்வரத்தில் முனகினவனை ஒரேயடியாக,

“இந்த ஆடி ஆவணி மேட்டர்லாம் எங்களுக்கும் தெரியும். ஒழுங்கா சொன்னதை செய்ங்க”, என்றால் மிரட்டலாக.

ஆனால் காயத்ரி, “இல்ல லல்லு, அண்ணன் வரணும்னெல்லாம் இல்ல. பிளைட் டிக்கட் வாங்கணும். நேரா போயி வாங்கிட்டால் அப்படியே போயிடுவேன்”,

“இரும்மா, பத்தே நிமிஷம், தயாராகி வர்றேன். நானும் ஏர்போர்ட் வரை வந்து உன்னை பத்திரமா பிளைட் ஏற்றி விட்டால் தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”, என்று தயாராகப் போனான்.

“தேங்க்ஸ் லல்லு, வயசானவங்க இல்லையா, அதான் அத்தை வீட்டுல தனியா இருக்கவேண்டாமேன்னு யோசிக்கறேன். எங்கம்மாக்கும் வயசாகிடுச்சு. பிள்ளைகளையும் பார்த்துட்டு பெரியவங்களையும் பார்க்கறது கஷ்டம். என் ரெண்டு பிள்ளைகளும் பார்க்கத்தான் அப்பாவி, ரகளை செய்ய ஆரம்பிச்சா பிசாசுங்க தான்”

“அக்கா, பிள்ளைங்களை அப்படில்லாம் சொல்லாதீங்க. தவிர, அத்தையை இங்க விட்டுட்டு போகிறதை பத்தி நீங்க  ஒண்ணும் கவலையே படாதீங்க. அவங்க உங்க வீட்டுல எப்படி இருக்காங்களோ அப்படியே இங்கயும் இருக்கலாம். உங்க நாத்தனார் கிட்ட உடனே சொல்லணும்னு அவசியம் இல்லை. இதுவும் உங்க பிறந்த வீடு மாதிரி தான் அக்கா. நீங்க வித்தியாசமா நினைக்காம இது எதையும் யோசிக்காம அத்தானை மட்டும் கவனிங்க”, இதமாக பேசி காயத்ரியின் கவலையை போக்க முயற்சித்தாள் லல்லு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 11சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 11

பாகம் 11 கண்டு கொண்ட காதல் நோயை சொல்லிவிடத்தான் துடிக்கிறேன்- கையெட்டும் தூரத்தில் நீ இல்லாதால் என நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்… காற்றின் உன் வாசத்திடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! ************************************************************************************************************************ கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் காதல் நோயை கண்டுபிடிச்சேன்! மெல்லிய குரலில் குமார்

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1

வணக்கம் தோழமைகளே, ‘கதை மதுர’த்தில் அடுத்த கதையாக வருவது எழுத்தாளர் வாணிப்ரியாவின் நகைச்சுவைப் புதினம் ‘குறுக்கு சிறுத்தவளே’. எழுத்தாளர் வாணிப்ரியா ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’, ‘அன்பிற்கும் அழகென்று பெயர்’ என்று காதல் கவிதை சொல்லும் இவர் இல்லற இம்சைகளை நகைச்சுவையாகவும் அடுக்குவார்.