மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32

32

தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள் நாகரத்தினம். பிசுனாறிப் பையன் இருவதஞ்சாயிரம் தான் வச்சுருக்கான். கூட ஒரு பத்தாயிரம் வச்சு இருக்கக் கூடாது. எப்படியும் கல்யாணத்துக்குள்ள துரை கிட்ட இருந்து ஒரு லட்சமாவது தேத்தீடனும் என்று நினைத்துக் கொண்டாள். இந்த ஒரு லட்சம் அவளுக்கு அச்சாரம்தான். இந்த கல்யாணம் முடிந்தவுடன் அவளுக்கு எவ்வளவோ நன்மைகள் வரப் போகிறது. தன்னைக் கேட்காமல் எப்படி சுஜிக்கு திருமணம் நிச்சயம் செய்யலாம் என்று சுந்தரம் சண்டை போடுவாரே? எப்படி சமாளிப்பது என்ற யோசனையுடன் சுற்றிக் கொண்டிருந்தாள்.

சுஜியின் துன்பத்தை அங்கு ஆற்றுவாரோ தேற்றுவாரோ இல்லை. தன் தந்தைக்கு இந்த நிகழ்ச்சியைப் பற்றி தெரியுமா தெரியாதா என்று கூட அந்தப் பேதைப் பெண்ணுக்குத் தெரியவில்லை. நடந்ததைத் தட்டி கேட்கும் உரிமை உள்ள சுந்தரமும் விக்கியும் சென்னையில் அடையார் ஆனந்த பவனில் சுஜிக்குப் பிடித்த குலாப் ஜாமூனை வாங்கிக் கொண்டிருந்தனர். சுஜிக்கு அந்த திருமணத்தில் சம்மதமில்லை என்பதைக் கண்டுகொண்டனர் அங்குள்ள பெண்கள். பின்னே சிட்டுக் குருவியைப் போல சுற்றி வந்த பெண், திருமணம் என்று சொன்னதும் திகைத்து, பின் மூலையில் அடைந்து விட்டதைப் தங்களது இரண்டு கண்களால் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள். தெரிந்தும், பொண்ணுக்கு வெட்கம் என்று பூசி மெழுகிக் கொண்டிருந்தனர்.

டந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டது சுஜி மட்டுமல்ல, மாதவனும் தான். கொலுசு விஷயத்தில் நடந்த தப்பிற்காக மிகவும் வருத்தம் கொண்டிருந்தான் மாதவன். இதில் பெரும் பங்கு அனிதாவுக்கு என்றாலும், அவள் தன் அத்தையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் அவர்கள் வீட்டுக்குக் கூட்டி வந்தது அவன்தானே. அனிதாவின் குணத்தைப் பற்றியும், நாகரத்தினம் அத்தையினைப் பற்றியும் நன்கு தெரிந்த நானே அவர்களைப் பேச விட்டிருக்கக் கூடாது. சுஜி வீட்டுக்கு வந்து விட்டாளா, இல்லை அந்த ராகேஷுடன் இன்னும் சுற்றிக் கொண்டு இருக்கிறாளா என்று பார்க்கும் ஆர்வம். கடைசியில் எல்லாம் தப்பாகப் போய் விட்டதே.

இன்று காலை அம்மாவும் அப்பாவும் ஏதோ விசேஷத்துக்குப் போகப் போகிறோம், அத்தை வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லியதும், சுஜியின் கோபம் இந்நேரம் சற்று தணிந்து இருக்கும். எப்படியாவது மன்னிப்பு கேட்டு விடலாம் என்று எண்ணி, தானே வண்டி ஓட்டி வருகிறேன் என்று அடம் பிடித்து வந்தது என்ன? இப்பொழுது நடப்பது என்ன? சுஜிக்கு இவர்கள் பூ வைத்து பரிசம் போடப் போவது தெரியுமா? பளிச்சென பாவாடை தாவணியுடன் மாடியிலேயே நின்று கொண்டு இருந்தாளே யாரையோ எதிர்பார்ப்பது போல. அம்மா அப்பாவைப் பார்த்து சிரித்தவள், தான் சிரித்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாளே. ஆனால் திருமணம் என்றதும் அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி பொய் இல்லை. அவளுக்கு இந்த கல்யாண ஏற்பாடு பற்றி தெரியுமா? கண்டிப்பாக தெரிந்திருக்காது. விஷயம் தெரிந்து இருந்தால் துரையைப் பார்த்து அங்கிள் என்று அழைத்து இருப்பாளா? ஏன் மாமா, விக்கி யாருமே இல்லை. அத்தையே தட்டினை வாங்கிக் கொண்டார்? அப்படியானால் சுஜி மட்டுமின்றி மற்றவர்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா? கடவுளே அப்படி மட்டும் இருந்தால் ஏற்கனவே என் மேல் கோபமாக இருக்கும் சுஜி, கூட வந்ததால் இந்த மாப்பிள்ளையையும் நான் தான் பார்த்தேன் என்று நினைப்பாளே. இதென்ன கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பியது போல இருக்கிறதே.

இந்த துரையைப் போய் சுஜிக்கு கல்யாணம்… ச்சே நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லையே. அவளால் எப்படி இதனைத் தாங்க முடியும். இந்தக் கல்யாணத்தை எப்படி நான் தடுத்து நிறுத்தப் போகிறேன். அப்பாவிடம் இப்போது சொல்ல முடியாது. அப்பா மட்டுமின்றி இங்கிருக்கும் அனைவரும் அவளது கல்யாணம் பற்றி உனக்கு என்ன வந்தது என்று கேள்வி கேட்பாரே? நீ யார் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல? உனக்கும் அவளுக்கும் அப்படி என்ன உறவு என்று இங்கிருப்பவர்கள் கேட்க எவ்வளவு நேரமாகும்? அது மேலும் சுஜிக்கு பாதகம் தான். துரைப்பாண்டியிடமே சொல்லலாமா? கிராமத்தில் சண்டியராய் சுற்றிக் கொண்டிருக்கும் இவன் தான் சொன்னால் புரிந்துக் கொள்வானா?

முதல் வேலையாக இங்கு நடந்தது எதற்கும் தான் காரணமில்லை, தனக்கே இங்கு வந்ததும் தான் பூ வைக்கும் விஷயம் தெரியும் என்று சுஜிக்குத் தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டும் அல்லாமல் நன்றாகப் படிக்கும் அவளுக்கு தன்னாலான உதவியைச் செய்ய வேண்டும். இவ்வாறு யோசித்து முடிவுக்கு வந்தான் மாதவன்.

ந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டிருந்த மாதவன் யாரும் இல்லை என்று நிச்சயம் செய்த பின், மெதுவாக சுஜி இருந்த அறைக்கு செல்ல முயன்றான். அவனைப் போல ஒரு திருட்டுப் பூனையும் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்ததை அவன் அறியவில்லை. மாதவனை ஒரே காலடியில் தாண்டிக் கொண்டு அறையின் உள்ளே நுழைந்த துரைப்பாண்டி, சுஜியிடம் வழிய ஆரம்பித்தான்.

தன்னை விட பாதி வயதில் உள்ள ஒரு பெண்ணை மணக்கப் போகிறோமே என்ற எண்ணம் கிஞ்சித்துமில்லை அவனுக்கு. மாறாக இந்த வயதில் அப்சரசைப் போன்ற ஒரு பெண் தனக்கு மனைவியா என்று வாயில் ஈ போவது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அறையின் உள்ளே வந்தவன், இருந்த ஒரே கட்டிலில் சுஜி தலை குனிந்து அமர்ந்து இருப்பதைப் பார்த்தான். தரை பூராவும், அவர்கள் கொண்டு வந்த சீர் தட்டு இடத்தை அடைத்திருக்க, சுஜியின் அருகே அவனால் நெருங்க முடியவில்லை. உட்கார வேறு இடமில்லாததால் நின்று கொண்டே இளித்தவாறே பேச ஆரம்பித்தான்.

“சுசாத்தா, உன்ன மாதிரி ஒரு சிவத்த புள்ளயத் தான் கட்டிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆச. முதல்ல கட்டிகிட்டவ கூட கறுப்பிதான். ஆனா ஊட்டு வேல நல்லா செய்வா. தேனாட்டம் கருவாட்டுக் குழம்பு வைப்பா. என்னடி பொட்டப் புள்ளயா பெத்துட்டு இருக்கியே, ஆம்பளப் புள்ள பெக்க வக்கில்லன்னு ஒரு நா நல்லா திட்டுனதுக்கு வெசத்த குடுச்சுட்டா. அது போகட்டும் கழுத, அவ உயிரோட இருந்து இருந்தாலும் ரெண்டாம் கல்யாணம் பண்ணி இருப்பேன். பின்னே, நம்ம கோடங்கி சொல்லி புட்டான். எனக்கு ரெண்டந்தாரத்துத் தான் ஆம்பள புள்ள பொறக்குமாம். அதனால என்ன பண்ணுற, கல்யாணம் ஆனா பத்தாம் மாசமே என் பேர் சொல்ல ஒரு ஆம்பளப் புள்ளைய பெத்துக் கொடுக்குற. என்ன?”

அவனின் இந்த உளறலைக் கேட்க வேண்டிய தலை விதிக்கு உள்ளாக்கிய தெய்வத்தை நொந்தபடியே தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள் சுஜி. அதனை வெட்கம் என்று அர்த்தம் பண்ணி ஆனந்தப் பட்டுக் கொண்டான் துரை. அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மாதவன் நறநறவென பல்லைக் கடித்தான். அவன் கையில் அகப்பட்டுக் கொண்ட ஒரு டம்ளரை காபியோடு வேகமாக தூக்கி எறிய, சத்தம் கேட்டு வந்தவர்களிடம் பூனை தட்டி விட்டது என்று சொல்லி சமாளித்தான். அனைவரும் வந்து விடவே, துரைப்பாண்டியும் அந்த இடத்தைக் காலி பண்ண வேண்டியதாயிற்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தையல் இன்ச் டேப்பை உபயோகித்து அளவெடுக்கும் முறை – 8தையல் இன்ச் டேப்பை உபயோகித்து அளவெடுக்கும் முறை – 8

Premium WordPress Themes DownloadFree Download WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload WordPress Themes Freeudemy course download freedownload karbonn firmwareDownload WordPress Themes Freefree online course

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46

உனக்கென நான் 46 கடிகார முள்ளோ தன் விளையாட்டை துவங்கிவிட்டது. அந்த ஆதவனும் இந்த காதலை பார்த்து ரசிக்க சில தினங்கள் வந்துபோய்விட்டான். அன்பரசியோ ஆசையாக அந்த நாட்காட்டியை தன் மென்கரங்களால் கிழித்தாள். இரவில் தன்னவனுடன் பேசிகலைத்ததாள்.மன்னிக்கவும் அவன் மட்டும்தான் பேசினான்.