மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 26

26

றுநாள் மாதவன் வந்தபோது அவனது கையில் ஒரு பெரிய அட்டை டப்பா. அதனுள் பெரிய கோகோ பட்டர் பாட்டில்கள். ஆளுக்கு ஒன்று என்று தந்தவன், கண்டிப்பாக எல்லோரும் இரவு கைகளில் தடவிக் கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டான். சுஜிக்கு அதைத்தவிர ஒரு களிம்பும் கூட கொடுத்தான். எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்று கேட்டதற்கு நீ என்னைக்குமே எனக்கு ஸ்பெஷல் தான் சுஜி என்று வம்பிழுத்தான்.

உணவு வகைகளின் லிஸ்டை எடுத்துப் பார்த்த மாதவன், “ஏன் சுஜி பிரியாணினு ஒரு கோடு போட்டு வச்சுருக்க?”

“இல்ல என்ன பிரியாணி செய்யுறதுன்னு தெரியல? அதுதான்”.

“என்ன சிக்கன் பிரியாணியா இல்ல மட்டன் பிரியாணியான்னு யோசிக்கணுமா?”

“இல்ல ஹைதராபாதியா? கல்கட்டவா? தலப்பாகட்டா? ஆம்புரா? இல்ல வேற எதாவதான்னு”

“இவ்வளவு வெரைட்டியா? ஆம்பூர், தலப்பாக்கட்டு தெரியும். மத்ததுல என்ன விசேஷம்?”

“குறிப்பா சொல்லணும்னா கல்கட்டா பிரியாணில மீட் மட்டும் இல்லாம நிறையா உருளை கிழங்கு சேர்ப்பாங்க. காரம் ரொம்ப கம்மி. ஹைதராபாதில புதினா எல்லாம் அரச்சு போட மாட்டாங்க. மசாலாவும் ரொம்ப கம்மி, அதுக்கு பதிலா உறைப்புக்குப் பச்சை மிளகா போடுவாங்க. கொஞ்சம் நெய்சாதம் மாதிரி பாக்குறப்ப தோணும். ஆனா சாப்பிட்டா காரம் இருக்கும்”.

“அது எப்படி மசாலா இல்லாம செய்ய முடியும்?”

“பிரியாணி மசாலா இல்லாம செஞ்ச ஒரு சாப்பாடுதான். கொஞ்சம் நீளமான விளக்கம்தான். பரவால்லையா?”

“காத்துகிட்டு இருக்கேன் ராஜகுமாரியே…” தலை குனிந்து குறுஞ்சிரிப்போடு அவன் சொன்னதைக் கவனிக்காத மாதிரி தொடர்ந்தாள்.

பிரியாணி என்பது அந்த காலத்தில் அரசர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முழுமையான உணவு. இப்போது இருப்பதை போல் அரைத்த மசாலாவும் எண்ணையும் சேர்த்து செய்யப்படுவது இல்லை. போர் புரியும் போது வீரர்களுக்கு சத்துள்ள உணவு தேவை. அவர்களின் உடம்பையும் அது கெடுக்கக்கூடாது. ஆனால் காய்கறியும் மற்ற அழுகும் பொருட்களையும் வைத்து பாதுகாத்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் ஆடுகளின் மேல் அரிசியையும், கோதுமையையும் மற்றும் எடை குறைவாக உள்ள பட்டை மற்றும் இலவங்கத்தையும் மூட்டையாக கட்டிக் கொண்டு செல்வார்கள். ஆட்டின் வாலில் உள்ள கொழுப்பை எடுத்து அதனுடன் அரிசியும் பட்டை லவங்கம் மற்றும் ஆட்டிறைச்சியையும் கலந்து தணல் மேல் வைத்து விடுவார்கள். அது மெதுவாக வெந்து விடும். இதுவே பின் பல மாற்றங்களை அடைந்து தற்போது நாம் சாப்பிடும் பிரியாணி ஆயிற்று.

பிரியாணிக்கு பயன் படுத்த முடியாத ஆட்டிறைச்சியை கோதுமையுடன் கலந்து இரவு குளிர் காய வைத்திருக்கும் தணலின் மேல் வைத்து விடுவார்கள். காலையில் அவை அனைத்தும் கலந்து சாப்பிடும் பதத்தில் இருக்கும். அதுதான் காலை உணவு
இதனை மாதவனுக்கு விளக்கினாள் சுஜி.

“நீ சொல்லுறத பார்த்தா பிரியாணில பெரிய ரிசெர்ஜ்ஜே செய்யலாம் போல இருக்கே. நீங்க என்ன செய்ய பிளான் போட்டுட்டு இருக்கீங்க?”

“சாகுலோட அப்பா பிரியாணி எக்ஸ்பெர்ட். வழக்கமா அந்த காலத்து அரச குடும்பங்களுக்கும், ஜமிந்தாருக்கும் அவங்க செய்யுற ஸ்பெஷல் பிரியாணி. கொஞ்சம் கஷ்டம் அதுதான்”.

“அரசர்கள் சாப்பிட்ட பிரியாணியை எம் மதுரை மண்ணின் மைந்தர்கள் சாப்பிடக்கூடாதா என்ன? நீ சொல்லு சாகுல்” என மாதவன் அழைக்க,

சாகுல் மகிழ்ச்சியுடன் சொல்ல ஆரம்பித்தான். “சார் முட்டை வேக வைச்சுக்கணும். அப்பறம் அதுல கொஞ்சம், குங்குமப்பூவும், எண்ணையும் கலந்து மெதுவா கலக்கணும். முட்டை புல்லா இளம் சிவப்பு நிறம் ஆயிடும். அப்பறம் முழுகாடை, முழுகோழி, சுத்தம் பண்ண முழு ஆடு எல்லாத்தையும் மசாலா தடவி ஊறவிடணும். ஒவ்வொண்ணுத்துக்கும் தனித்தனி மசாலா அரைக்கணும். அப்பறம் காடையத் தனியா, கோழியத் தனியா முழுசா பெரிய எண்ணை சட்டில போட்டு பொறிச்சுக்கணும். முட்டைய எடுத்து பொரிச்ச காடையோட வயத்துப் பாகத்துல வச்சுட்டு, அந்த காடைய கோழியோட வயத்துல வைக்கணும். அப்பறம் அந்த கோழிய மசாலா தடவுன ஆட்டோட வயத்துல வைக்கணும். அப்பறம் ஆட்டை அப்படியே பெரிய பாத்துரத்துல வச்சு காத்து புகாம இறுக்கமா மூடி மூணு மணி நேரம் தணல்ல வைக்கணும். இதுக்கு நடுவுல பாசுமதி அரிசிய நல்லா ஊறவச்சுட்டு நெய்யுல கலந்த குங்குமப்பூவோட, உப்பு, பட்டை, லவங்கம் எல்லாம் தேவையான அளவு போட்டு, தண்ணி ஊத்தாம தம் போட்டு வேக வைக்கணும். அப்பறம் சாதத்தையும், கறியையும் கலந்து பரிமாற வேண்டியது தான்”.

சாகுல் முடிக்கும் வரை அங்கு ஒரே அமைதி. “என்ன அவ்வளவுதானா? ரொம்ப ஈசியா இருக்கே. இதுல ஒரு ஸ்டெப் தப்பானா என்ன ஆகும்?”

“பிரியாணியா இருக்காது சார். வேற எதாவதா ஆயிடும்”.

“சரி இந்த வாரம் சண்டே இங்கே செஞ்சு பார்க்கலாம். நல்லா வந்தாலும் ரிஸ்க் எடுக்க முடியாது. உங்க அப்பா அன்னைக்கு வந்து ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேளு. அப்படி அவர் வர சம்மதிச்சா இந்த பிரியாணியே இருக்கட்டும். என்ன சொல்லுற சுஜி?” என்றான்.

அவனது கிண்டலை நினைவில் வைத்துக் கொண்டு, “அப்படியே ஆகட்டும் மன்னா” என்றாள் சுஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 8சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 8

பாகம்- 8   “கண் என்னும் கூட்டில் என்னை சிறை வைத்துவிட்டு பொய் என்று சிரிக்கிறாய்! நீ சிரிப்பதில் சிக்கிவிட்டதடி என் இதயம்… சிறையிலிருந்து வெளியில் வர வழியிருந்தும்! மனமின்றி தவித்து கொண்டிருக்கிறேன் நீ என்னை விடுவித்துப் பாரேன் உன் கண்

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08

அதைக் கேட்ட மகாராஜன் வெகுநேரம் வரையில் ஆழ்ந்து யோசனை செய்தபின் பேசத்தொடங்கி, “இதற்குமுன் இருந்த சிப்பந்திகள் தமது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நான் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, மகா மேதாவியும் சட்ட நிபுணருமான இந்த மனிதரை வரவழைத்து திவானாக நியமித்து,

மேற்கே செல்லும் விமானங்கள் – 2மேற்கே செல்லும் விமானங்கள் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் முதல் பதிவு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இன்மையால் தப்பு செய்யாதவர்களை நல்லவர்கள் என்று சொல்லிவிட