Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்,Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 7,8,9

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 7,8,9

7

போன் பேசி முடித்திருந்த ராஜி அதற்குள் வந்துவிட அவர்கள் பேச்சு தடை பட்டது.

சுஜியின் அருகே வந்து அமர்ந்த ராஜி, “சுஜி நீ இஞ்ஜினீயரிங் அப்ளையாவது பண்ணி இருக்கலாமே?” என்றார்.

“இல்ல ஆன்ட்டி எனக்கு இஞ்ஜினீயரிங்ல இன்ட்ரெஸ்ட் இல்ல. B.Sc. முடிச்சிட்டு M.B.A படிக்கலாம்னு இருக்கேன்.”

தனது குடும்ப நிலைமை வெளியே சொல்லாமல் அழகாக பேசிய சுஜியை கனிவுடன் பார்த்தார் ராஜி. நீ எது படிச்சாலும் வாழ்கையில் நல்ல நிலைமைக்கு வந்து விடுவாய் சுஜி என்று மனதில் நினைத்துக்கொண்டார். பின் பேச்சை மாற்ற எண்ணி,

“இவ சேராட்டியும் பரவாயில்ல அப்பிளிகேஷனயாவது வீணாக்காம போடச் சொல்லும்மா. அங்கிள் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தது” என்றார்.

“சரி மினி ஒரு அப்பிளிகேஷன் மட்டும் போடு. அவன் இன்டெர்வியூ கூப்பிட்டா பார்த்துக்கலாம்”.

“போடி இன்டெர்வியூக்கு முன்னாடி என்ட்ரன்ஸ் எக்ஸாம், ப்ராக்டிகல் எக்ஸாம் எல்லாம் வைப்பானாம். நம்ம காலேஜ்ல சேருரத்துக்கு முன்னாடியே இந்த பாடு படுத்துறவன் காலேஜ் சேர்ந்தவுடன் எந்த பாடு படுத்துவான்…”

“பீஸ் எவ்வளவு இருக்கும் மினி?”

“என்ன ஒரு பதினஞ்சு, இருவதாயிரம் இருக்கும்னு நினைக்கிறன். ஹாஸ்டல் ஃபீஸ் ஐயும் சேர்த்தாலும் நுப்பதாயிரதுக்குள்ளதான் வரும்.”

“அவ்வளவா?…”

“பின்னே கவர்மென்ட் காலேஜா கம்மியா பீஸ் வாங்க. ஆனா அங்க வேலை செய்யுறதுக்கு சம்பளம் மாதிரி தருவாங்க போல இருக்கு. அதுவே பார்ட் டைம் ஜாப் மாதிரி நல்ல பணம்னு சொன்னாங்க”.

சற்று யோசித்த மினி, “ஐடியா! சுஜி வேணும்னா ஒண்ணு பண்ணு நீ இந்த அப்பிளிகேஷன் ஃபார்மை அனுப்பு. ஜாலியா என்ட்ரன்ஸ் எழுதிட்டு வா. நாளைக்குதான் லாஸ்ட் நாள் அப்ளை பண்ணுறதுக்கு. நீ ஃபில் பண்ணி வச்சுட்டு போ. அப்பாவ ஆபீஸ் போற வழில கொடுத்துட சொல்லுறேன்” என்றாள்.

“நான் வீட்டுல இப்ப அந்த வேலையைத்தான் செஞ்சுட்டு இருக்கேன். காலேஜ்ல போயும் அதே செய்யணுமா?”

“சும்மா போட்டு பாரு. சீட்டு கிடைக்குறது ரொம்ப கஷ்டம்னு சொல்லுறாங்க. அப்படியே கெடைச்சுட்டா வேணாம்னு சொல்லிட்டா போகுது” என்றாள்.

சரி என்று ஜாலியாக நேம் என்று இருந்த இடத்துக்கு நேராக சுஜாதா என்று தனது பெயரை எழுத ஆரம்பித்தாள் சுஜி. அவளுக்கு தனது தலை எழுத்தைத்தான் தான் எழுதிக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்தால் இன்னும் சற்று சிரத்தையுடன் எழுதி இருப்பாளோ?

8

சுந்தரம், பிள்ளைகளை அருகில் இருக்கும் ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து விட்டார். அது நகரிலே சற்று புகழ்பெற்ற பள்ளிக்கூடம். அதனால் அதில் படிக்க இடம் கிடைப்பது கடினம். அதே பள்ளியில் வாணியையும் கூட சேர்த்தார்கள். அங்கேதான் சுஜி தனது மற்றொரு எதிரியை முதலில் சந்தித்தாள்.

நாகரத்னத்தின் குணம் தெரிந்ததால், மெஸ்ஸில் இருந்து மதிய உணவு பள்ளிக்கு வந்து கொடுத்துவிடுவார். மாலை பள்ளி முடிந்து வரும் போது வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கும். வாணி பெரும்பாலும் தனது தாத்தா வீட்டிற்கே சென்று விடுவாள். அதுவே மூத்தவர்கள் இருவருக்கும் நிம்மதியும்கூட. விக்கி வரும்போது அப்பாவின் மெஸ்ஸில் இருந்து உணவு எடுத்து வந்துவிட, இருவரும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். பக்கத்துக்கு வீட்டுக் கமலமும், மூர்த்தியும் முடிந்தவரை உதவி செய்வார்கள். நன்றாக படிக்கும் பிள்ளைகள் இருவரையும் எல்லோருக்கும் பிடித்து இருந்தது, ஒருவனைத் தவிர.

பள்ளியில் சுஜி தினமும் மதியம் வந்து வாணி சாப்பிட்டு விட்டாளா என்று பார்த்து விட்டு போவாள். வாணி எதை பார்த்தாலும் வாயில் போட்டுக் கொள்வாள். இதனால் அடிக்கடி வயிறு வலியால் கஷ்டப்படுவாள். சுஜி பார்த்தால் அதனை வாயில் இருந்து எடுத்து விடுவாள். அன்றும் அப்படிதான் வாணி வாயில் என்னவோ போட்டு மென்று கொண்டு இருந்தாள்.

“வாணி வாயில என்ன?”

“சாக்லேட்கா”

அது அவள் வழக்கமாக சொல்லும் பொய்தான். எனவே ‘ஆ காட்டு’ என்றாள்.

“மாட்டேன் போ”

சற்று வலுகட்டாயமாக அவள் வாயில் இருந்ததை எடுத்தாள். சற்று சுவைத்து பார்த்தாள் அது சாக்லேட் தான்.

“யார் நீ? ஏன் சின்ன பிள்ளைகிட்ட வம்பிளுக்குற? சாக்லேட் வேணும்னா வாங்கி சாப்பிடுறது தானே” என்ற குரல் கேட்டு பயந்து நிமிர்ந்தாள்.

அங்கே நல்ல உயரமாக அதட்டியபடி ஒரு பையன் நின்று கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்தவுடன், “அத்தான்” என்று கூறியபடியே வாணி ஓடினாள்.

“நான் இவங்க அக்காதான்”.

“ஒ! அதுதான் சின்ன பிள்ளைக வாயில இருந்து எடுத்து சாப்பிடுறியா? இதோ பார் இனிமே இத மாதிரி நடந்து கிட்டா உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்கோ” என்று மிரட்டினான்.

பின்னர்தான் அவன் பேர் மாதவன் என்பதும், நாகரத்னத்தின் அண்ணன் மகன் என்பதும் தெரிந்தது. அதைவிட, தங்களை அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதும், கொடைக்கானலில் விடுதியில் தங்கிப் படித்து கொண்டு இருந்தவன், அந்த வருடம்தான் அவர்கள் பள்ளியில் வந்து சேர்ந்து இருந்தான்.

நாகரத்தினம் தனது கணவரைப் பற்றியும், அவரின் முதல் தாரத்தின் குழந்தைகளைப் பற்றியும், தான் வீட்டில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றியும் கூறி தனது அண்ணன் வீட்டினரிடம் அனுதாபம் சம்பாதித்து வைத்திருந்தாள். தன் அத்தையைத் துன்பப்படுத்துபவர்களைப் பார்க்கும் போதே எரிச்சலாய் வந்தது அவனுக்கு. அதைப் பல வகைகளில் காண்பிக்க ஆரம்பித்தான்.

நேரில் பார்க்கும் போது முறைப்பது, பின்னலைப் பிடித்து இழுப்பது. அடிப்பது போல கையைக் கொண்டு வருவது என்று முடிந்தவரை தொந்திரவு செய்தான். அதன்பின் அவனுக்குப் படிப்பில் கவனம் போகவே தப்பித்தாள் சுஜி. சுஜியும் வேறு பள்ளி மாறிவிடவே அந்த முரட்டுப் பையனைப் பற்றி ஏறக்குறைய மறந்தேவிட்டாள் எனலாம்.

9

ருடத்துக்கு மூன்று, நான்கு முறையாவது நாகரத்னத்தின் வீட்டில் ஏதாவது விழா, கல்யாணம் என்று அழைப்பு வரும். எல்லா நிகழ்ச்சிக்கும் புது பட்டுப்புடவை, தன் குழந்தைக்கு புது உடை, தங்கம் வெள்ளி சீர் என்று ஜமாய்த்து விடுவாள் நாகா. இதைத் தவிர நல்ல ஹோட்டலில் வாணியின் பிறந்தநாள் நிகழ்ச்சி வேறு நடக்கும். சிறு வயதில் இந்த நாட்களை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்கள் விக்கியும், சுஜியும். அங்கே போய் குழந்தைகளுடன் விளையாட்டு, பின் புது வகையான இனிப்புகள், உணவுகள் என்று சந்தோஷமாக இருக்கும். பின்னர் தான் தெரிந்தது தாங்கள் அங்கு செல்வது வேலைக்காரர்களாக என்று.

நாகரத்னத்தின் வீட்டில் நாகாவின் அம்மாவுக்கு அவளைப் போலவே குணம். வாணிக்கோ அவளது தாய் நாகரத்தினத்தின் குணம். ‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்பது அவர்களின் குடும்பத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை.

மாதவனின் தாய் தனது மாமியார் மற்றும் நாத்தனாரின் வழிக்கே வரமாட்டார். ஆனால் தாயில்லாமல் ரத்தினத்திடம் கஷ்டப்படும் விக்னேஷின் மேலும் சுஜாதாவின் மேலும் அவரது மனதில் ஒரு மெல்லிய பாசம் ஓடிக் கொண்டிருந்தது. அதனாலோ என்னவோ அவரது மாமியார், நாத்தனார் கண்ணில் படாதவாறு விக்கிக்கும் சுஜிக்கும் பலகாரங்கள் தருவார். நெருக்கமாய் தொடுத்த மல்லியை தனது மகளுக்கும், சுஜிக்கும் வித்யாசம் பார்க்காமல் சூட்டிவிடுவார். அதனாலேயே மாதவனை வெறுத்தாலும் கூட சுஜிக்கு அவன் தாயார் மரியாதைக்குரியவரே. மாதவனின் தந்தை எப்போதும் தனது நண்பர்களிடம் பேசியபடியே தான் பார்த்திருக்கின்றனர். அவருக்கு உறவினர்கள் வட்டத்தில் மரியாதை மிக அதிகம் என்பது சுஜிக்குத் தெரியும். அதுவே தனது சித்தியின் எரியும் திமிருக்கு எண்ணை என்பதையும் அறிவாள்.

ஒரு முறை நாகா தன் தோழியுடன் பேசுவதை கேட்க நேர்ந்தது சுஜிக்கு.

“ஏண்டி உன் மூத்தாள் பிள்ளைகளையும் கூட்டிட்டு அலையுற.”

“போடி இதுங்க வரதால பிள்ளையை பாத்துக்குற தொல்லை இல்ல. பாரு பம்பரம் மாதிரி வேல செய்யுதுங்க”.

அவள் சொல்லுவதை நிரூபிப்பதற்காக, “டேய் விக்கி இங்க வாடா. ஆன்ட்டியோட பாப்பா மூச்சா போச்சு பார். டிரஸ் மாத்தி விட்டுட்டு போய் ஜட்டிய தொவைச்சுக் காயப் போடு” என்றாள்.

“சரி சித்தி” என்று பார்த்துப் பத்து நிமிடங்களே ஆன அந்த பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே போனான் விக்கி.

ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்த சுஜிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அழுதுக் கொண்டே உள்ளே சமையல் அறையை நோக்கி ஓடிய சுசி யார் மீதோ மோதி விட்டாள்.

“சாரி தெரியாம” என்று சொல்லிக் கொண்டே அந்த உருவத்தைப் பார்க்க முயற்சி செய்தாள். கண்கள் பூராவும் நீருடன் இருந்ததால் அவளால் சரியாக பார்க்க முடியவில்லை. ஆதரவாக அவளது ஒரு கையை பற்றிக் கொண்ட அந்த உருவம், தன் கையில் இருந்த குளிர்பானத்தை அவள் கையில் கொடுத்தது. மடமடவென அந்தப் பானத்தைக் குடித்து முடித்தாள் சுஜி.

“சாரி” என்று குரல் கேட்டவுடன் நிமிர்ந்துப் பார்த்த சுஜி திகைத்தாள். மாதவன் அல்லவா இது. அவளது ஆச்சிரியம், அவளது முகத்தில் பிரதிபலிக்க. அவள் கண்ணைப் பார்த்த அவனது முகத்தில் இனம் தெரியாத மாற்றம் மற்றும் கனிவு.

அவள் கவனத்தைத் திசை திருப்ப எண்ணி, “சுஜி நீ நல்லா படம் வரைவியாமே மினி சொன்னா. என் ஃபிரெண்ட்க்கு பர்த்டே வருது. அதுக்கு, நீ மினிக்கு வரஞ்சு தந்தமாரியே ஒரு படம் வேணும். நீ, நான், விக்கி மூணுபேரும் வரையலாமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுறியா?”

சந்தோஷமாக தலையாட்டினாள் சுஜி.

ன்றிலிருந்து அவர்களே ஆச்சிரியப்படும்படி விக்கியிடமும், சுஜியிடமும் கனிவாக நடந்துக் கொண்டான் மாதவன். அவ்வப்போது படிக்க புத்தகங்களைத் தந்து உதவினான். இவன் கொஞ்சோண்டு நல்லவந்தான் போலிருக்கு என்று சுஜியும் தப்புக்கணக்கு போட்டு விட்டாள்.

அடுத்த முறை எங்கும் வரவில்லை என்று சொல்லி விட்டாள் சுஜி. விக்கியும் சுஜி கூடத் துணை இருப்பதாக சொல்லித் தட்டிக்கழித்து விட்டான்.

“சுஜி ஏன் வெளிய வரமாட்டேன்னு சொன்ன? நீ சொன்னது ஏதோ காரணத்துக்காகன்னு புரியுது ஆன என்னனு புரியல.”

விக்கியை நிமிர்ந்துப் பார்த்த சுஜி, “அண்ணா நம்ம இதுவரை சித்தி வீட்டுக்குப் போனபோது நல்ல டிரஸ் பண்ணிட்டு போய் இருக்கோமா? அங்க போய் அவங்க வீட்டுப் பிள்ளைங்க கிட்ட போய் விளையாடி இருக்கோமா? அவங்க வீட்டுக்குள்ள போனதுண்டா? அவங்க சமையல் அறையும், தோட்டத்தையும் தவிர வேறு எங்கும் போய் இருக்கோமா? யோசிச்சுபாரு உனக்கே புரியும்”.

விக்கி புரிந்ததின் அடையாளமாய் தலையாட்டினான். “நான் இனிமே எல்லாத்தையும் நல்லா கவனிக்கணும் சுஜி. இது மாதிரி அவமானம் இனிமே நமக்கு நடக்கக் கூடாது”.

பாவம் அவர்களுக்குத் தெரியாது நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’

அத்தியாயம் – 7   ரஞ்சனுக்கு உறக்கமே பிடிக்கவில்லை. கனவு நினைவு இரண்டிலும் நந்தனாவே நிறைந்திருந்தாள். மாதம் இருமுறை பெரியகுளம் வந்தது மறைந்து,  வாரம் இரண்டு  நாட்களாயிற்று. புதிதாக ஆரம்பித்த தொழிலுக்கு அது உதவியாகக் கூட இருந்தது. அவன் தாய் அகிலாண்டத்துக்கும்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33

33 விருந்தினர்கள் செல்லும் வரை தனது அழுகையை அடக்கிக் கொண்ட சுஜி, அவர்கள் காலை வீட்டை விட்டு வெளியே வைத்ததும் கத்த ஆரம்பித்தாள். “ஏன் சித்தி யாரைக் கேட்டு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணுறிங்க?” “யாரடி கேட்கணும்? இது

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

அத்தியாயம் – 22 ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு. அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து