Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 49

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 49

அத்தியாயம் 49 – பட்டணப் பிரவேசம்

அன்று ராயவரம் டவுனில் அல்லோல கல்லோலமாயிருந்தது. அந்தப் பட்டணத்தின் சரித்திரத்திலேயே அம்மாதிரியான காட்சிகளைக் கண்டதில்லையென்று எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருந்த சப்ஜட்ஜ் சத்தியநாதபிள்ளை கூட, “இந்த ராயவரம் இம்மாதிரிக் காட்சிகளை என்றைக்கும் பார்த்ததில்லை” என்று சத்தியம் செய்யத் தயாராயிருந்தார்.

அந்தப் பட்டணத்தில் வசித்த சகல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அன்று காலை முதல் தெரு வீதிகளிலேயே நின்றார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே விதமான பேச்சுதான். “முத்தையன் பிடிபட்டு விட்டானாம்! அவனை இங்கே கொண்டு வருகிறார்களாம்! ஆச்சு; சுங்கான் கேட் கிட்டத்தட்ட வந்தாச்சு! உடம்பிலே 32 குண்டு பாய்ந்திருக்காம்! அறுபது போலீஸ்காரர்கள் சூழ்ந்து பிடித்தார்களாம்! அவ்வளவு பேரையும் திமிறிக் கொண்டு போகப் பார்த்தானாம்! வீரன் என்றால், அவனல்லவா வீரன்!…”

இப்படிப் பலவிதமாய்ப் பேசியவர்கள் எல்லாரும் ஒரேயடியாக முத்தையனிடம் அனுதாபம் காட்டியது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம். அவனிடம் இருந்த கோபம் பயம் எல்லாம் போயே போய்விட்டன. அவனுடைய துணிச்சலையும், தீரத்தையும் பற்றிய வியப்பும், அவனுக்கு நேர்ந்த கதியைப் பற்றி இரக்கமுந்தான் மிஞ்சி நின்றன. உலகத்தில் ஒரு மனிதனுக்கு நேரக்கூடிய அதிர்ஷ்டங்களில் கஷ்டம் வருவதைப் போன்ற அதிர்ஷ்டம் வேறொன்றுமில்லை! அப்போதல்லவா அவனைச் சூழ்ந்திருப்பவர்களின் தயாள சுபாவம் நன்கு பிரகாசிக்கின்றது? அப்போதெல்லவா அவன் மற்றவர்களின் அன்புக்கும் அனுதாபத்துக்கும் பாத்திரமாகிறான்? அப்போதேயன்றோ அவனுடைய குறைகளையெல்லாம் ஜனங்கள் மறந்து, அவனுடைய குணங்களை மட்டும் நினைத்துப் பாராட்டுகிறார்கள்? இதைவிட ஒருவனுக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் வேறென்ன இருக்கிறது!

*****

நேரம் ஆக, ஆக, வீதிகளில் நின்ற ஜனங்களின் பரபரப்பு அதிகமாயிற்று. அவர்கள் பொறுமையிழந்தார்கள். இளம்பிள்ளைகள் வீதிகளில் குட்டிக்கரணம் அடித்தார்கள். கைக்குழந்தைகளுடன் வந்து நின்ற பெண்மணிகள் அகாரணமாய்ப் பிள்ளைகளை அடித்தார்கள். வேலையைப் போட்டுவிட்டு வந்த ஆண்பிள்ளைகளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. அந்தக் கோபமெல்லாம் போலீஸ்காரர்கள் மேல் சென்றது.

அன்று, ராயவரத்தில் இருந்த ஒவ்வொரு போலீஸ்காரனும் சிறிது மார்பைப் பார்த்துக் கொண்டுதான் நடந்தான். சென்ற இரண்டு வருஷமாய் மூன்று தாலுகாக்களுக்குப் பீதியளித்து வந்த பெயர்பெற்றத் திருடனைப் பிடித்த விட்டோ மென்ற பெருமையை ஒவ்வொரு போலீஸ்காரனும் நன்கு ருசி பார்த்து அனுபவித்தான். அன்று அவ்வூரில் போலீஸ்காரர்கள் நடந்த நடையே ஒரு ஜோராகத்தான் இருந்தது.

இது மற்ற ஜனங்களுக்குப் பொறுக்கவில்லை. ஒரு சவடால் பேர்வழி ஒரு போலீஸ்காரனிடம் அணுகி, “ஸார்! பீடி பற்ற வைக்க வேணும், ஒரு நெருப்புக்குச்சி இருந்தால் தருகிறீர்களா?” என்று கேட்டான். போலீஸ்காரன் அவனை முறைத்துப் பார்த்தான். கூட்டத்திலிருந்த ஒருவன், “அடே! போலீஸ் புலி முறைக்கிறதடா!” என்றான். “புலியைப் பார் புலியை! ஒரு திருடனைப் பிடிக்க நாற்பது புலிகள் வேண்டியிருந்தது” என்றான் இன்னொருவன். “புலியா, பூனையா? நன்றாய்ப் பாரடா” என்றான் மற்றொரு ஹாஸ்யப்பிரியன். “சிவப்புத் தலைப்பாவைத்தட்டி எறியுங்கடா!” என்றான் வேறொருவன். “அவன் தலையிலே இரண்டு மலைப்பிஞ்சை வீசுங்கடா” என்று இன்னொரு குரல் கேட்டது. இதே சமயத்தில் இரண்டு மலைப்பிஞ்சுகள் எங்கிருந்தோ வந்து விழுந்தன.

*****
அவ்வளவுதான்! துப்பாக்கிச் சத்தம் கேட்டதோ இல்லையோ, ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். குழந்தைகள் வீறிட்டன. ஸ்திரீகள் அலறினார்கள். ஆனால் பத்தே நிமிஷத்தில் அவ்வளவு கூட்டமும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது, முத்தையனுக்கு சிறிது உணர்வு வந்தது. அவன் உடனே, பக்கத்திலே கிடப்பதாக அவன் எண்ணிய ரிவால்வரை எடுக்கக்கையை நீட்டினான். ஆனால் கையை நீட்ட முடியவில்லையென்பதைக் கண்டான். கைகால் ஒன்றையும் அசைக்கமுடியாதபடி ஏதோ பாரத்தை வைத்து அமுக்கினாற் போல் இருந்தது. கண்ணைச் சிறிது திறந்து பார்த்தான். தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டியிருப்பதாகத் தெரிந்தது. “இது என்ன ஆச்சரியம்?” என்று அவன் எண்ணமிடுவதற்குள்ளே மறுபடியும் ஸ்மரணையிழந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 27கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 27

அத்தியாயம் 27 – பிள்ளைவாளின் பழி      கல்யாணியைப் பழி வாங்குவதற்குப் புலிப்பட்டி ரத்தினம் அநேக குருட்டு யோசனைகள் செய்துவிட்டுக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். தாமரை ஓடைப் பண்ணையின் நிலங்களைப் பலாத்காரமாய்த் தன் வசப்படுத்திக் கொண்டு விடுவதென்றும், கல்யாணியைக் கோர்ட்டுக்குப் போகும்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45

அத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு! நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச்

கல்கியின் பார்த்திபன் கனவு – 35கல்கியின் பார்த்திபன் கனவு – 35

அத்தியாயம் இருபத்தைந்து சமய சஞ்சீவி தன்னைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத பொன்னன், அரண்மனை தோட்டத்திற்குள் உற்சாகத்துடன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே அவன், “வள்ளி! அதோ அந்த மாமரத்தடியில் தான் மகாராஜாவும் மகாராணியும் சாயங்கால வேளையிலே உட்காருவது