Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 19

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 19

இரண்டாம் பாகம்
அத்தியாயம் – 9. ஊழ்வினையின் ஊடாடல்

 

     குந்தள மன்னன் ஆகவமல்லனின் சூளுரை தாங்கிய போர்த் திருமுகத்துடன் அந்நாட்டுத் தூதன் கங்காகேத்தன் என்பான் கங்கைகொண்ட சோழபுரத்தை வந்தடைந்த அன்று, உள்நாட்டு நடவடிக்கைகளை அறியும் பொருட்டு வீரராசேந்திர தேவர் தற்செயலாக அரசவையைக் கூட்டியிருந்தார். நாட்டு மக்களின் நலத்தில் கண்ணும் கருத்தும் கொண்ட சோழ மன்னர்கள் பொருது கொண்டு போகாத காலங்களில், திங்களுக்கு ஒரு தடவை இம்மாதிரி அரசவையைக் கூட்டுவதுண்டு. அப்போது உள்நாட்டு அரசியல் பற்றிய எல்லா விவரங்களையும் அந்த அந்தப் பிரிவுக்குரிய தலைவர்கள் மன்னரிடம் அறிவிப்பார்கள். தேவையான இடங்களில் அவருடைய ஆலோசனைகளைக் கோருவார்கள். தங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பார்கள். திங்கள் தோறும் கூட்டப் பெறும் இக்கூட்டங்களில் பெரும்பாலும் உள்நாட்டு விஷயங்களே விவாதிக்கப்படுமாயினும், எந்த விஷயத்திலும் பலருடைய பலதரப்பட்ட கருத்துக்களை அறிந்து ஆய்ந்து செயல்படும் பண்புடைய சோழ மன்னர்கள், உள்நாட்டு அதிகாரிகள் மட்டுமின்றி இதர அரசியல் அதிகாரிகள், படைத்தலைவர்கள் போன்றோரையும் அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்க அழைப்பதுண்டு. அவ்வாறேதான் அன்றையக் கூட்டமும் கூட்டப்பட்டிருந்ததால், குந்தள தூதன் வந்த போது அரசவையில் சோழநாட்டின் படைத்தலைவர்கள், அரசியல் அதிகாரிகள், உடன் கூட்டத்து அதிகாரிகள், குறுநில மன்னர்களில் சிலர் ஆகியோர் கூடியிருந்தனர்.

கங்காகேத்தன் கொணர்ந்த ஓலையைப் படித்த சோழதேவர் வாய்விட்டு நகைத்தார். “அமைச்சர்களே! படைத்தலைவர்களே! குறுநில மன்னர்களே! இந்த வேடிக்கையைப் பார்த்தீர்களா? நாம் இப்போதுதான் அடித்துப் போட்டுவிட்டு வந்த குந்தள அரவம் மீண்டும் நெளிந்து, தலை தூக்கிச் சீறுகிறது!” என்று கூறிவிட்டு மீண்டும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தார்.

“ஆகவமல்லன் என்ற அந்த மண்ணுண்ணிப் பாம்பா?” என்று வியந்தார் அரசியல் அதிகாரிகளில் ஒருவரான இராசேந்திர மூவேந்த வேளான்.

“ஓலையில் என்ன செய்தி விடுத்திருக்கிறான் அரசே?” என்று வினவினார் திருமந்திர ஓலை வானவன் பல்லவரையன்.

“இதோ, நீங்களே அதனைப் படித்துப்பாருங்கள், அவையோருக்கும் படித்துக் காட்டுங்கள்,” என்று வீரராசேந்திரர் அவ்வோலையை அவரிடம் கொடுத்தார்.

பல்லவரையன் அதைப் படித்ததும் அவையிலே ஒரு கொதிப்பு உண்டாயிற்று. மற்றவர்களது கொதிப்பை விட உள்நாட்டுப் படைத் தலைவன் குலோத்துங்கனின் கொதிப்பு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அவன் தன்னையே மறந்து கத்தத் தொடங்கிவிட்டான்: “என்ன திமிர் அந்தச் செத்த பாம்புக்கு? *நான்கு முறை முதுகெலும்பை ஒடித்துங்கூட இன்னும் அவன் திமிர் ஒடுங்கவில்லையா? மன்னர் மன்னவா! இத்தடவை அந்த நச்சரவத்தை உருவின்றி நசுக்கிக் குழியிலிட்டுப் பொசுக்கி விட வேண்டும்!”

(*வீரராசேந்திரரின் ஆட்சிக் காலத்தில் சோழர்களுக்கும் குந்தளத்தாருக்கும் இடையே நிகழ்ந்த நான்காவது போர் கி.பி.1066-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிருஷ்ணை ஆற்றின் கரையிலோ, துங்கபத்திரை ஆற்றின் கரையிலோ நிகழ்ந்திருக்க வேண்டுமென்றும், அதிலும் குந்தளத்தார் பெரும் இழப்புக்குள்ளாகிச் சோழர்களிடம் தோற்றோடினாரென்றும் சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. நாம் நமது கதையுடன் நெருங்கிய தொடர்புடைய போர்களை மட்டுமே கண்டு செல்வதால், இப்போரை விட்டுவிட்டு அப்பால் வந்திருக்கிறோம்.)

குலோத்துங்கன் உரையை முடிக்கவில்லை; அதற்குள் அவையிலே கர்ச்சனை போன்ற நகைப்பொலி ஒன்று கேட்டது. மாமன்னர் வீரராசேந்திரர் அரியணையில் அமர்ந்திருக்கும் அவையிலே இத்தனை பெருங்குரலில் சிரிக்கச் சோழநாட்டில் பிறந்த எந்த ஆண்மகனுக்கும் துணிவு வந்திராது. ஆனால் இங்கே சிரித்தவன் சோழ நாட்டன் அல்லன். இவன் அயல் நாட்டான். ஆம், சூளோலை கொணர்ந்த தூதன் கங்காகேயன்தான் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.

சற்று முன் வீரராசேந்திரர் சிரித்த ஏளன நகைப்புக்கு எதிர் நகைப்பைச் சிந்துவதுபோல் அவன் நெடுநேரம் கோரமாகச் சிரித்தான். பிறகு தானே அடங்கிச் சொல்லலானான்: “அரசே! உங்கள் வாய் வீச்சைக்கேட்க நான் ஓலை கொண்டுவரவில்லை. வாள் வீச்சுக்குச் சவால் கொடுத்து வந்திருக்கிறேன். என்னை முன் நிறுத்தி எங்கள் மன்னரை இழிவாகப் பேசுவதை இனியும் என்னால் பொறுக்க முடியாது. எங்கள் மன்னரின் ஓலைக்கு மறுமொழி அளித்துவிட்டால் நான் போய்விடுவேன்; பிறகு நீங்களும் உங்கள் அதிகாரிகளும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரியுங்கள்; வாய்கிழியப் பேசுங்கள்; அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்!…”

அவன் தூதுவனாக வந்திராவிட்டால் அங்கேயே அவனுடைய தலையை உருளச் செய்திருப்பார்கள் சோழப் படைத்தலைவர்கள். அவர்கள் கைகள் என்னவோ, கங்காகேத்தனின் இறுமாப்பு நிறைந்த சொற்களைச் செவிமடுத்த கணத்தில், இடுப்பில் தொங்கிய வாளுறையை நோக்கித்தான் தாவின. ஆனால் அவன் தூது வந்திருப்பவன் என்ற நினைவு எழுந்ததால் அவர்கள் செயலிழந்து, மாமன்னர் என்ன பதிலிறுக்கப் போகிறார் என்பதை ஆவலுடன் கவனிக்கலாயினர்.

மன்னர் முகத்திலும் கடுஞ்சினத்தின் அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அவரும் அவன் தூதன் என்பதை எண்ணித் தமது சினத்தை அடக்கிக் கொண்டார். பிறகு அமைதியான குரலில் அவர் சொன்னார்: “தூதனே! சோழர் குலம் போருக்கு அஞ்சாக் குலம். அதிலும் சவால்ப் போர் என்றால் அவர்களுக்குச் சக்கரைப் பொங்கலுக்குச் சமம். போ, போய் உங்கள் மன்னரிடம், அவர் விரும்பிய அதே கூடல் சங்கமத்தில், அவர் விரும்பிய அதே அடுத்த திங்கள் ஆறாம் நாளில் அவருடைய நமனாகிய நாங்கள் அவரை எதிர்கொள்ளக் காத்திருப்போம் என்று சொல்!”

கங்காகேத்தன் மீண்டும் நகைக்கத் தொடங்கியபோது குலோத்துங்கனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. அவன் உடைவாளை உருவிக்கொண்டு தூதன் மீது பாய முயன்றபோது, “நில், குலோத்துங்கா!” என்று அவனை அமர்த்தினார் சோழதேவர். பிறகு அவர் கங்காகேத்தனை நோக்கி, “குந்தள தூதனே! ஓலைக்கு மறுமொழி கோரினாய்; தந்தோம். பின்னும் ஏன் இந்த நகைப்பு?” என்று வினவினார்.

“இத்தடவை யாருக்கு யார் நமனாகப் போகிறார்கள் என்பதை நினைத்த போது என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை, அரசே. என்னை மன்னித்துக்கொள்க,” என்றான் கங்காகேத்தன்.

“அதன் முடிவைக் கடந்த காலப் போர்கள் சொல்லும்; இப்போது நீங்கள் விரும்பியவாறு நிகழப்போகும் இந்த ஐந்தாவது சமரும் சான்று தரும். தூதனுக்கு அளித்த மரியாதையைக் காத்துக்கொண்டு நீ விரைவில் இங்கிருந்து செல்.”

“வணக்கம் அரசே!” என்று கூறிவிட்டு அவையிலிருந்து அகன்றான் கங்காகேத்தன்.

அவனுடைய விறைப்பான சொற்களையும், செருக்கு மிகுந்த நடையையும் கண்டு வியந்து நின்றனர் அவையிலுள்ளோர். தூதனின் தலை மறைந்ததும் குலோத்துங்கன் பேசலுற்றான்: “நல்லவேளை, மன்னர் மன்னவா! எங்கே நீங்களே இப்போரில் கலந்து கொள்வதாகக் கூறிவிடுவீர்களோ என்று பயந்தேன்?” என்றான் அவன்.

“நீ என்ன சொல்கிறாய் குலோத்துங்கா?” என்று கேட்டார் சோழதேவர்.

“நான்கு முறை உங்களிடம் மண் கவ்விய அந்த மகாவீரனை அடக்க ஐந்தாவது முறையும் நீங்கள் செல்வது உங்கள் வீரத்துக்கு இழுக்கு, அரசே. கட்டளையிடுங்கள்; அடியேன் ஒரு சிறு படையுடன் போய் அந்த அரை உயிர் அற்பப் பிராணியை அரைக்கணத்தில் அழித்துவிட்டு வருகிறேன்.”

வீரராசேந்திரருக்கும் இதே கருத்துத் தோன்றியிருக்க வேண்டும். அவர் குலோத்துங்கனுக்கு மறுமொழி கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டதும், மாமன்னரின் தலைமை அரசியல் அதிகாரியான சயசிங்க குலகால விழுப்பரையர், “அரசே, ஒரு வேண்டுகோள்,” என்று பணிவுடன் எழுந்து நின்றார்.

“சொல்லுங்கள் விழுப்பரையரே!”

“உள்நாட்டுப் படைத் தலைவர் குலோத்துங்கனின் வீரத்திலும் போர்த்திறனிலும் எனக்கு அளவற்ற உறுதிப்பாடு உண்டு. தாங்கள் கட்டளையிட்டால், அவர் அதை அப்படியே நிறைவேற்றி வெற்றியுடன் திரும்புவார் என்பதிலும் அடியேனுக்கு ஐயம் இல்லை. ஆயினும் குந்தளத்தாருக்குத் திடீரென இத்தனை துணிவும் ஆண்மையும் எப்படிப் பிறந்தன என்பதை நாம் சிறிது ஆய்ந்தறிந்த பின், இப்போரை யார் முன் நின்று நடத்துவது என்பதை முடிவு செய்வது நலமெனக் கருதுகிறேன்.”

“ஆம், மன்னர் மன்னவா! இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோவென நான் அஞ்சுகிறேன்,” என்றார் மற்றோர் அரசியல் அதிகாரியான இராசேந்திர மூவேந்தர் வேளான்.

“சூழ்ச்சியாம், சூழ்ச்சி!… அந்த அற்பப் பதர்கள் என்ன சூழ்ச்சி செய்துவிடப் போகிறார்கள்? அப்படியே செய்தாலும், அதனை உடைத்தெறிந்து நாட்டுக்கு வெற்றியுடன் திரும்புவேன்; கவலை சிறிதும் வேண்டாம், அரசியல் அதிகாரிகளே!” என்று உறுதியுடன் உரைத்தான் குலோத்துங்கன்.

“பொறு, குலோத்துங்கா!” என்று குறுக்கிட்டார் வீரராசேந்திரர். “அதிகாரிகள் கூறுவதில் பொருள் இருக்க வேண்டுமென்றே நானும் நினைக்கிறேன். வீரத்தால் வீழ்த்த முடியாத இந்த வீரராசேந்திரனைச் சூழ்ச்சியால் சுருட்டிவிட அவர்கள் இச்சூளோலையை அனுப்பியிருப்பதும் இயல்பே. இல்லாவிடில் நேற்றுவரை இல்லாத துணிவு இன்று அவர்களுக்கு எங்கிருந்து பிறந்தது?”

ஆம், அங்கு கூடியிருந்த பெரும்பாலோர் உள்ளமும் அப்போது அதே வினாவைத்தான் எழுப்பியிருந்தது-ஆகவமல்லனுக்கு இந்தத் துணிவு எங்கிருந்து பிறந்தது? எப்படிப் பிறந்தது? எதன் அடிப்படையில் பிறந்தது?

இந்த வினாக்களுக்கு விடை பகர்வதேபோல், அப்போது அங்கே ஒரு குரல் கேட்டது. “அடைக்கலம், சோழதேவா! அடியேன் உங்கள் அடைக்கலம்!”

யாவரின் கண்களும் குரல் வந்த திசையை நோக்கின. நெடும்பயணக் களைப்பால் உடல் சோர, ஆடையெல்லாம் அழுக்கேறியிருக்க, இருகைகளையும் தலைக்கு உயரே தூக்கி வணங்கியவாறு மாமன்னரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் வேங்கி மன்னனான விசயாதித்தன்.

அவன் நிலையைக் கண்டு மனம் கலங்கிய குலோத்துங்கன், சோழ தேவரை முந்திக்கொண்டு, “என்ன நேர்ந்தது சிறிய தந்தையே? உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று வினவினான்.

வீரராசேந்திரரின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்த விசயாதித்தன், “மன்னர் மன்னவா! வேங்கி பறிபோய் விட்டது, ஆகவமல்லனின் மைந்தன் விக்கிரமாதித்தன் திடீரென ஒரு பெரும்படையுடன் வந்து, சோழப் பாதுகாப்புப் படையையும், வேங்கிப் படையையும் வென்று, அரியணையைப் பறித்துக்கொண்டு என்னை அடித்துத் துரத்தி விட்டான்!” என்று கதறினார்.

“என்ன?” கூடியிருந்தோர் எழுப்பிய வியப்புக் குரலால் அவையே கிடுகிடுத்தது. இப்போது அவர்கள் எல்லோருக்கும் குந்தளத்தாருக்குத் திமிர் ஏறியிருந்ததன் காரணம் விளங்கிவிட்டது. அவர்கள் நெடுங்காலமாக கண்ணி வைத்திருந்த வேங்கிநாடு கைவசமாகி விட்டதல்லவா?

அவையில் எழுந்த ஆரவாரம் சிறிது அடங்கியதும் சோழதேவர் சிங்கமாகக் கர்ச்சித்தார்: “ஆ! அத்தனை வீரர்களாகி விட்டார்களா குந்தளத்தார்? பார்த்து விடுகிறேன் அவர்கள் வீரச் செருக்கை இத்தடவை!” என்று முகம் சிவக்கச் சிலிர்த்த அவர், குலோத்துங்கனிடம் “குலோத்துங்கா! உன் விருப்பப்படி உன்னையே கூடல் சங்கமத்துக்கு அனுப்பலாமோ என்று சற்றுமுன் நினைத்தேன். ஆனால் இனி அதைப்பற்றி நினைப்பதற்கில்லை. பல தலைமுறைகளாகச் சோழநாட்டின் பகுதியாக விளங்கி வந்த வேங்கி என் ஆட்சிக் காலத்தில் நம் பகைவர்கள் கைக்குப் போயிருக்கையில், அதை மீட்கும் பணியில் நான் நேரடியாக ஈடுபடாவிட்டால் இந்தச் சோழ அரியணைக்கே இழுக்கு, மருகா! சோழ நாடு அடுத்து ஈடுபடும் போரை நீயே முன்னின்று நடத்த வாய்ப்பளிக்கிறேன். இப்போது நமது படைத்தலைவர்களில் ஒருவனாக நீயும் புறப்படு!” என்று சொல்லி, “புறப்படுங்கள் படைத் தலைவர்களே! உங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இதோ ஓர் அரிய விருந்து வந்திருக்கிறது. உங்கள் படைகளைத் திரட்டிக்கொள்ளுங்கள், விரைவாக. நாளையன்று பகலில் சோழநாட்டின் பெரும் படை இந்த வீரராசேந்திரன் தலைமையில் கூடல் சங்கமத்தை நோக்கிச் செல்ல வேண்டும்!” என்று முடித்தார்.

குறிப்பிட்ட நாளன்று, தனது உள்நாட்டுப் பாதுகாப்புபடைத் தலைமைப் பொறுப்பை தன் உதவி படைத்தலைவர் விக்கிரம பராக்கிரம தேவரிடம் ஒப்படைத்துவிட்டு, போர்ப்படைப் பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கி, அப்படையை இதரப் படைகளுடன் சோழகேரளன் அரண்மனை முகப்புத் திடலில் அணிவகுத்து நிறுத்திவிட்டு, அத்தையரிடமும் மனைவியிடமும் விடைபெற வந்தான் குலோத்துங்கன். வயதில் மூத்தோர்களான அத்தையாரை வணங்கி ஆசி பெற்றுக்கொண்ட பின், அவன் மதுராந்தகியின் அந்தப்புரத்துக்கு வந்தான்.

அந்தப்புர வாயிலில் தான் மட்டுமின்றி, தனது மைந்தர்களான கங்கசோழனுடனும், மும்முடிச் சோழனுடனும் கணவன் வருகையை எதிர் நோக்கிக் காத்திருந்தாள் மதுராந்தகி. அன்றைய நாளை தன் வாழ்வையே மாற்றி அமைக்கப் போகிற நாளாகக் கருதி இருந்தாள் அவள். ஆம், ஏறக்குறைய மூன்றாண்டுகளாக அவள் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது. இடையே சோழர்கள் எத்தனையோ போர்களில் ஈடுபட்டனர். அவற்றில் சில போர்களில் குலோத்துங்கனும் கலந்து கொண்டு நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். ஆனால் மதுராந்தகிக்கு, அவளுடைய ஆணைக்கு, வெற்றி அளிப்பவையாக அவை அமையவில்லையே! அந்தப் போர்களில் ஒன்று கூட வேங்கி பொருட்டு நிகழ்ந்த போராக இருக்கவில்லையே! குந்தளத்தார் மீண்டும் வேங்கியை நோக்கிப் பாய வேண்டும்; அதன் நிமித்தம் சோழர்கள் அவர்களுடன் போரிடவேண்டும்; அப்போருக்குப் பின்னர் தனது சிறிய தந்தையின் மனக்கண் திறக்க வேண்டும். “இவ்வாறு நாம் அடிக்கடி வேங்கி பொருட்டுப் படை திரட்டிச் செல்ல வேண்டியிருப்பதன் காரணம், அங்கே கையாலாகாதவன் ஒருவன் ஆட்சி செலுத்துவதே ஆகும். இத்தொல்லை தீர வேண்டுமானால் குலோத்துங்கனையே வேங்கியை ஆண்டுவரச் செய்ய வேண்டும்,” என்று அவருக்குத் தோன்றினால் அல்லவா, அவள் தனது ஆணைக்குரிய வெற்றிப் படியில் முதலதைக் கடந்தவள் ஆவாள்? இப்படி எண்ணியிருந்த அவள், இடையே நிகழ்ந்த ஒவ்வொரு போரும் வேங்கிப் போராக இல்லாமல் வெறும் போராக இருப்பதைக் காணுந்தோறும், ‘குந்தளத்தார் அடியோடு செயலிழந்து போய்விட்டார்களோ? வேங்கிக்கு இனி நாம் ஏங்கிப் பயனில்லை என்று ஆய்ந்தோய்ந்து போய்விட்டார்களோ?’ என்றெல்லாம் கலங்கத் தொடங்கினாள்.

இவ்வாறு அவளை நெடுநாள் கலக்கிய பிறகு, இப்போது அவள் எதிர்பார்த்தே இராத வகையில், வேங்கியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு விசயாத்தித்தனையும் விரட்டி விட்டார்கள் என்ற செய்தி வந்தால் அவள் மகிழ்ச்சி அடைய மாட்டாளா? அதோடு, வேங்கியை மீட்க உடனடியாகப் போர் நிகழப் போகிறது. அதுவும் சாதாரணப் போரல்ல; ஒரு சவால்ப் போர். அதில் கலந்து கொள்ளும் முக்கியமான படைத் தலைவர்களுள் ஒருவராகத் தன் கணவரும் அழைக்கப் பட்டிருக்கிறார் என்றும் அறிந்தாளென்றால், தன் ஆணை நிறைவேறும் நாள் இனி அதிகத் தூரத்தில் இல்லை என்று அவள் களிப்படைய மாட்டாளா?

அந்தக் களிப்போடும், கணவர் மூன்றாண்டுகளுக்கு முன் தனக்கு அளித்துள்ள வாக்குறுதியை நினைவூட்டி அனுப்ப வேண்டும் என்றுந்தான் அவள் அப்போது தன் மைந்தர்களோடு காத்திருந்து, விடை பெற வரப்போகும் கணவனை எதிர்நோக்கியிருந்தாள்.

குலோத்துங்கன் வந்தான். பொருது கொண்டு செல்லும் கணவனுக்கு அளிக்க வேண்டிய வழியனுப்பு நடைமுறைகளை முறைப்படி செய்தாள் மதுராந்தகி. பிறகு ஒதுங்கி நின்று கொண்டிருந்த மைந்தர்கள் இருவரையும் அருகில் அழைத்து, “அப்பா போருக்குப் போகிறார், குழந்தைகளே! அவர் வெற்றியுடன் திரும்ப வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.” என்றாள் முகத்தில் ஒரு குறுநகையுடன்.

மூத்த மைந்தன் கங்கசோழனும், இப்போது மூன்று வயதைக் கடந்து விட்டிருந்த இளைய மைந்தன் மும்முடி சோழனும், தங்கள் மழலை மாறாக்குரலில், “சோழேச்சுரா! எங்கள் அப்பா நாட்டுக்கு வெற்றியும் எங்களுக்கு நாடும் கொண்டு திரும்பி வரட்டும்!” என்று ஒருசேரக் கூறியதும், குலோத்துங்கன் உள்ளம் மலரச் சிரித்தவாறு மனைவியைச் செல்லமாகக் கன்னத்தில் தட்டி, “குறும்புக்காரி! எத்தனை நாட்களாகப் பயிற்சி அளித்துக் குழந்தைகளை இப்படிச் சொல்லத் தயாரித்து வைத்தாய்?” என்றான் உவகையுடன்.

பிறகு அவன் தன் இரு செல்வங்களையும் இரு புஜங்களிலும் தூக்கிக் கொண்டு, “சோழேச்சுரன் அருள் பாலித்தால் அவ்வாறே செய்கிறேனடா என் கண்களே!” என்று கூறி அவர்களுக்கு முத்தமீந்து கீழே இறக்கிவிட்டான்.

பின்னர் அவன் சோழகேரளன் அரண்மனைக்குத் திரும்பிச் சென்ற போது மதுராந்தகி தன் கனவு நினைவாகப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லையென்று மீண்டும் ஒரு முறை இறுமாப்புடன் நினைத்துக் கொண்டாள். ஆனால் – ஊழ்வினை என்று ஒன்று இருக்கிறதே, அது நம் எண்ணங்கள் எல்லாவற்றையும் அப்படி அப்படியே நடக்க விட்டு விடுகின்றதா? சிலபோது, நாம் நினைத்தே இராத நிகழ்ச்சிகளை இடையே புகுத்தி நமது எண்ணங்களில் மண்ணடித்து விடுகிறதே? மதுராந்தகியின் எண்ணத்திலும் அவ்வாறு மண்ணடிக்கும் நிகழ்ச்சி ஒன்று இரண்டு நாட்களுக்குப் பின் நிகழ்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 28மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 28

மூன்றாம் பாகம்   அத்தியாயம் – 6. மையல் திரை      உலகத்திலே மனிதனின் அழிவுக்கு வித்தாக இருப்பவை பெண், பொன், மற்றும் மண் என்று நமது ஆன்றோர் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் கூற்று முற்றிலும் உண்மையே. ஆயின் எத்தகைய நிலையில்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 4மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 4

அத்தியாயம் – 4. காதல் ஓலை        மேற்சொன்ன நிகழ்ச்சிகள் அன்று மாலையில் நடந்தன. அதாவது, மதுராந்தகி தன் ஆணையை நிறைவேற்றுவதற்கான செயல் முறைகளில் அன்று மாலையில்தான் முதன் முதலாக ஈடுபட்டாள். ஆனால் மதுராந்தகியிலும் ஒரு படி மேலே போய் இரண்டு

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 11மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 11

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 1. பாதாளச் சிறையின் மர்மம்        முதலாம் இராசேந்திர சோழதேவர் வடக்கே கங்கை வரையிலுள்ள நாடுகளை வென்று, தோல்வியுற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் கொண்ட குடங்களை ஏற்றிக்கொணர்ந்து, அந்நீரால் சோழ நாட்டின் பண்டைத் தூய்மையைப்