Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18

இரண்டாம் பாகம்
அத்தியாயம் – 8. மீண்டும் பாதாளச் சிறை! மீண்டும் போர்!

 

     வீரராசேந்திரரின் உடலிலிருந்த உதிரமெல்லாம் முகத்துக்கு ஏறியிருந்தது. பெயருக்கேற்ப வீரக்களை ததும்பும் அந்த முகம் இபோது அனலென எரிந்தது. கதவு திறக்கப்பட்டதுதான் தாமதம்; “எங்கே அந்தத் துரோகி? மகளென்ற உருவிலே என் மானத்தைப் பறிக்க வந்துள்ள அந்த மாயாஜாலக்காரி எங்கே?” என்று அவர் உள்ளே பாய்ந்தார்.

மன்னரை அங்கே கண்டபோது குலோத்துங்கன் திகைப்படைந்தான். ‘நான் சிவபோத அடிகளாக வேடம் பூண்டதோ, விக்கிரமாதித்தனைக் கைது செய்து சிறைக்குக் கொண்டு போகப் பணிந்ததோ வீரராசேந்திரருக்குத் தெரியாதே? பின் எவ்வாறு அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார்? வானவியைத் துரோகி என்று குறிப்பிட்டார்?’ என்று குழம்பினான் அவன். பின்னர் அவர் அதை அறியும் வண்ணம் எதிர்பாராத நிகழ்ச்சி ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கணத்தில் ஊகித்தவனாகக் காரியத்தில் கண்ணானான். உள்ளே பாய்ந்து வந்த சோழதேவர் அக்கணமே வானவியின் தலையைத் துண்டித்துவிடுவார் போலிருந்ததால், அவன் சட்டென்று அவர் வழியை மறித்தவாறு முன் வந்து வணங்கிவிட்டு “மன்னரவர்கள் மன்னிக்க வேண்டும்; அடியேனின் வேண்டுகோளுக்குக் கணநேரம் செவி சாய்த்து அருளவேண்டும்,” என்றான் பணிவுடன்.

ஆனால் வீரராசேந்திரரின் சினம் கடுஞ்சினமாக இருந்தது. “வழியை விடு, குலோத்துங்கா. என் மதிப்பையும், இந்தச் சோழ அரச குடும்பத்தின் மதிப்பையும், மாபெரும் இந்நாட்டின் மதிப்பையும் மங்கச்செய்துவிட்ட இந்த மாசை என் கைகளாலேயே வெட்டிக் களைய வேண்டும்,” என்று இடிபோன்ற குரலில் கூவினார் அவர்.

“அரசே! காலைக் கவ்வும் அணியைக் கழற்றி எறிந்துவிடு என்பார்கள் ஆன்றோர்கள். உங்கள் காலனி, உங்களது காலைக் கடித்தால் அதனை கழற்றி வீசுவதை விட்டு, ‘மகளைக் கொன்ற மன்னன்’ என்ற கறையைச் சுமக்க நினைக்கிறீர்களே?”

“நீ என்ன சொல்கிறாய், குலோத்துங்கா?” என்று வீரராசேந்திரர் சிறிது சினம் தணிந்தவராய் வினவினார்.

“சீழை உள்ளே வைத்துக்கொண்டிருக்கு மட்டும் அது வேதனை தந்து கொண்டுதானிருக்கும். சோழ நாடு செய்த தீவினைப் பயனால் அதனைச் சீழாகச் சூழ்ந்து வேதனைப்படுத்தி வருகிறாள் தங்கள் மகள். நான் இப்போது புண்ணைக் கீறி விட்டுவிட்டேன். இனி இச்சீழைத் தயைசெய்து அவள் காதலனுடன் இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு நிம்மதியுடன் இருங்கள்.”

“என்ன சொன்னாய்? என் மகளைச் சோழ நாட்டின் நிரந்தரப் பகைவனுக்கு மனைவியாக்குவதா? அது ஒரு காலும் நடக்காது, குலோத்துங்கா!”

“மாமன்னர் அப்படிச் செய்ய மனம் கொண்டாலும் இனி அதைச் செய்ய முடியாது, சேனாதிபதி. தாங்கள் சிறை செய்யுமாறு பிடித்துக்கொடுத்த பகைநாட்டு இளவரசன் தன்னை நடத்தி வந்த வீரர்களைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டான்!” என்றார் அருகில் நின்ற உள்நாட்டுப் படைத்தளபதி காரானை விழுப்பரையர்.

“என்ன? பகைவன் தப்பி விட்டானா?” என்று வீரிட்டான் குலோத்துங்கன். இப்போது அவனுக்குத் தனது இரகசியச் செயல்கள் மாமன்னருக்கு எவ்வாறு எட்டியது என்பது விளங்கிவிட்டது.

அவனுடைய அலறலுக்கு மறுமொழியாக வந்தது அங்கே நின்று கொண்டிருந்த வானவியின் ஏளன நகைப்பு. “அவருடைய வீரத்தை இப்பொழுதாவது மாமன்னர் வீரராசேந்திர தேவர் அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்,” என்றும் அவள் கூவினாள்.

அவளுடைய சிரிப்பு அங்கு நின்றவர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கிளப்பிற்றென்றால், தொடர்ந்து அவள் வெளியிட்ட கூவல் அந்த நெருப்புக்கு நெய் வார்த்தது. மாமன்னர் மீண்டும் வாளை உயர்திக்கொண்டு அவளை நோக்கிக் கிளம்பினார்.

ஆனால், இப்போதும் குலோத்துங்கன் அவரைத் தடுத்தான். “மன்னர் மன்னவா! பெண்ணைக் கொன்ற பாவத்தை இந்தச் சோழநாடு சுமக்கக் கூடாது. உங்களை இறைஞ்சி அவர்களை இணைத்து வைத்து இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிட நினைத்தேன் நான். யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது. இருந்தாலும் பெண்பால் ஒருத்தியைக் கொல்வது தங்களது வீரத்துக்கு இழுக்காகும். இவளை, ஒன்று இந்நாட்டிலிருந்தே விரட்டி விடுங்கள்; அல்லது முன்போல் பாதாளச் சிறையில் உழலச்செய்யுங்கள்!” என்றான் அவன்.

“நாட்டிலிருந்து விரட்டவா? விரட்டி இவள் அந்தக் கோழையின் நாடு சென்று அவனுடன் களித்து வாழவா? மாட்டேன், குலோத்துங்கா; என் உயிர் உள்ள வரையில், நாட்டின் நலத்துக்காக அன்றி, அப்படி ஒரு செயலைச் செய்ய மாட்டேன். சற்று முன்தான் இந்தச் சதிக்கு உதவியதற்காக என் மகன் என்ற கொள்ளியைப் பாதாளச்சிறைக்கு அனுப்பினேன். இவளும் அவனுடன் அங்கே போகட்டும்! யாரங்கே? தளபதி விழுப்பரையராரே, இழுத்துச் செல்லுங்கள் இவளை!” என்று கூறிவிட்டு அங்கே நிற்கக்கூடப் பிடிக்காதவர்போல் திரும்பிச் சென்று விட்டார் சோழதேவர்.

இவ்வாறு வானவி காதலனுடன் களித்திருக்கக் கையாண்ட வழி அவளுக்குப் படுதோல்வியுடன் முடிந்தது. நுணலும் தன் வாயால் கெடும் என்றவாறு நாடாளும் மன்னரின் மகளாகச் சோழகேரளன் அரண்மனையில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த அவள், இப்போது வெளியுலகின் வாடையே வீசாத பாதாளச் சிறையில் மீண்டும் புகுந்தாள். தான் மட்டுமா புகுந்தாள்? முன்பு துணைக்குக் காதலனை இட்டுச் சென்றாள்; இப்பொழுது துணைக்கு உடன் பிறந்தவனை இழுத்துக் கொண்டு விட்டாள். ஆனால், இதற்காக அவளோ, மதுராந்தகனோ, சிறிதளவும் வருந்தவில்லை. காதலனை அடைய அவளும், இச்சோழநாட்டை அடைய அவனும் எத்தகைய கஷ்டங்களை வேண்டுமானாலும் மேற்கொள்ளச் சித்தமாக இருந்தனர்.

விதியும் அவர்களுக்கு உதவியது என்றே சொல்ல வேண்டும். இல்லாவிடில் சோழநாடு மீண்டும் (வீரராசேந்திரரின் ஆட்சியில் மூன்றாவது முறையாக) குந்தள நாட்டை நோக்கிப் போர்க்கொடி உயர்த்திச் செல்வானேன்?

ஆம்; பாதாளச் சிறையில் தள்ளப்பட்டிருந்தும், சிறிதும் அவமான உணர்ச்சி கொள்ளாமல், வானவியும் மதுராந்தகனும் அமைதி கொண்டுவிட்டனர். ஆயின் வீரராசேந்திரரால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவருடைய வீர உதிரம் இந்தச் சூழ்ச்சியால் கொதித்தது. குந்தளத்தாரை அடியோடு ஒழித்து, இத்தகைய மறைமுகச் சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தம்மால் அமைதி அடைய முடியாதென்று, அன்றே அரசவையைக் கூட்டி அவர் அறிவித்துவிட்டார். சோழப்படையினரோ எப்போதும் போர்த்தினவு எடுக்கும் தோள்களைப் படைத்தவர்களாயிற்றே! உடனே போர் தொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டு விட்டது. சோழதேவரின் போர்ச்சாத்து ஓலை ஒன்றுடன் தூதன் ஒருவன் கல்யாணபுரத்தை நோக்கி விரைந்தான்.

இப்போர் கி.பி.1064-ல் நடந்ததாகச் சரித்திர ஏடுகள் கூறுகின்றன. இதனை ‘கூடல் சங்கமத்துப் போர்’ என்று அவை அறிவிக்கின்றன. கிருஷ்ணை மற்றும் துங்கபத்திரை ஆறுகள் கூடும் இடமே கூடல் சங்கமம். வழக்கம்போல் கடலனைய படையுடன் வீரராசேந்திரர் இப்போரில் கலந்துகொண்டு, சோழப்படை அனைத்தையும் தாமே முன்நின்று நடத்தினார்.

சளுக்கியர்களும் இத்தடவை மாபெரும் படை ஒன்றுடன் வந்து வீரத்துடன் போரிட்டனர். வீரராசேந்திரரின் கல்வெட்டு ஒன்றே, குந்தளத்தாரின் படையை, “வடகடலென வகுத்த அத்தானையைக் கடகளிறென்றால் கலக்கி…” என்று குறிப்பிடுகிறது.

போர் மிகத் தீவிரமாக நடந்தது. ஆயினும் இறுதியில் வெற்றி என்னவோ சோழர்களுக்குத்தான். *இப்போரில் மேலைச் சளுக்கர்களின் மிக முக்கியமான தண்டநாயகர்கள் கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரையன், இரேச்சயன் ஆகியோர் கொல்லப்பட்டனர். படைத்தலைவனான மதுவணனும், மற்றும் விக்கிரமாதித்தன், சயசிங்கன், அவர்களது தந்தை ஆகவமல்லன் ஆகியோரும் இத்தடவையும் புறங்காட்டி ஓடினர்.

(*Ep.Ind.Vol.XXI No. 38)

இத்தடவையும் வீரராசேந்திரர் போர்வெறி மிகக் கொண்டார். பகைவரைப் புறங்காட்டி ஓட்டியதோடு நில்லாமல், அவர் அவர்களது பாசறையை முற்றுகையிட்டு ஆகவமல்லனின் மனைவியரையும், குந்தள நாட்டின் பட்டத்து யானையாகிய புட்கப்பிடியையும், அவர்களது வராகக் கொடியையும் கைப்பற்றினார்.

கூடல் சங்கமத்துப் போரில் கிட்டிய வெற்றிதான் வீரராசேந்திரர் தமது ஆட்சிக் காலத்தில் பெற்ற பெரும் வெற்றியாகும். இதுபற்றி அவரை, *“குந்தளத்தாரைக் கூடல் சங்கமத்து வென்ற கோனபயன்…” என்று கலிங்கத்துப் பரணியும், #“சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக்கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும்” என்று விக்கிரமசோழன் உலாவும், $”பாடவரிய பரணி பகட்டணிவீழ் கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்…” என்று இராசராச சோழன் உலாவும் வாழ்த்துகின்றன.

(*இராசபாரம்பரியம். பா-29.)
(# வரிகள் 42-44)
($ வரிகள் 49-50)

இவ்வாறு கரை கடந்த வெற்றியுடன் திரும்பிய வீரராசேந்திரர் இந்தப் போருடன் குந்தளத்தார் மீண்டும் தலையெடுக்க இயலாதவாறு ஒழிந்துவிட்டார்கள் என்று இரும்பூது எய்தித் தலைநகர் அடைந்ததும், இதுவரையில் எந்தச் சோழ மன்னரும் செய்து கொண்டிராத அளவு விமரிசையாக விசயாபிடேகம் செய்து கொண்டார்.

மாமன்னர் கருதியவாறு குந்தளத்தாருக்கு இது தலையெடுக்க முடியாத பெரிய தோல்விதான். வெறும் தோவியோடு நின்றிருந்தால் அவர்கள் மன அமைதி பெற்றிருப்பார்கள். ஆனால் வீரராசேந்திரரோ, அவர்கள் உள்ளத்தை முள்ளாகக் குத்தும் ஒரு பேரவமானத்தை நிகழ்த்திவிட்டு வந்திருந்தாரே? குந்தள அரியணையில் ஆகவமல்லனுடன் அமர்ந்திருக்க வேண்டிய பட்டத்தரசி உள்பட அவன் மனைவியர் அனைவரையும் சிறைப் பிடித்து வந்துவிட்டாரே? மன்னர், மனைவியரை இழந்துவிட்டு வாளா இருந்தாலும், அவர்கள் பெற்ற மக்கள் தங்கள் அன்னையர் பகையரசனிடம் சிறையிருப்பதையோ, அன்றி அவனுக்கு அடிமையாக உழைப்பதையோ விரும்புவார்களா? தங்களைப் பெற்ற வயிறு அங்கே பற்றி எரிந்து கொண்டிருக்கும் என்பதை அவர்கள் உணரவில்லையானால், அவர்களை மக்கள் என்பதைவிட மாக்கள் என்று சொல்வதல்லவா பொருந்தும்?

அந்த இளம் உதிரங்களின் கொதிப்பு, தோல்வியில் மூழ்கியிருந்த நாட்டு மக்களுக்கும், குந்தள மன்னன் ஆகவமல்லனுக்கும் உள்ளத்திலே நெருப்பூட்டியது. அதன் பயனாக கூடல் சங்கமத்துப் போர் முடிந்த சில திங்கள்களுக்குள்ளாகவே, குந்தளத் தூதன் ஒருவன் போர்ச் சவால் ஓலை ஒன்றுடன் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி விரைந்தான். “நீ உன் பெயருக்கேற்ப வீரம் பொருந்திய மன்னனாக இருந்தால், மீண்டும் அதே கூடல் சங்கமத்தில் இன்றைக்கு ஒரு திங்களுக்குள் எங்கள் படையைச் சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும்!” என்று சவால்விட்டது அந்த ஓலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5

அத்தியாயம் – 5. எதிர்பாராத நிகழ்ச்சி        சோழத் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் துயரில் ஆழ்ந்திருந்தது. காலையில் வெற்றிக் களிப்பு எதிரொலித்த அந்நகரில் மாலையில் அழுகை ஓலம் எதிரொலித்தது. காலையில் மகிழ்ச்சி தாண்டவ மாடிய சோழ மக்கள் முகத்தில் மாலையில்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 6மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 6

அத்தியாயம் – 6. தோல்வி மேல் தோல்வி        சோழகேரளன் அரண்மனைக்குப் பின்னால் அமைந்திருந்தது அந்த அழகிய பூங்கா. பல்வேறு நறுமண மலர்ச்செடிகளும், பழ மரங்களும், பூத்தும் காய்த்தும் குலுங்கின, இனிமையான தென்றல் இந்நறுமணங்களைச் சுற்றிலும் நெடுந்தூரத்துக்குப் பரப்பின. பூங்காவின் மையத்திலே

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 20மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 20

இரண்டாம் பாகம்   அத்தியாயம் – 10. கைக்கு எட்டியது        வீரராசேந்திரரின் தலைமையில் கூடல் சங்கமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழநாட்டின் பெரும்படை, இரண்டு நாள் பயணத்துக்குப் பின் ஒரு மாலையில் வழியில் இருந்த ஆறு ஒன்றன் கரையில் இரவுத் தங்கலுக்காகத்