Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 17

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 17

இரண்டாம் பாகம்
அத்தியாயம் – 7. யார் இந்தத் துறவி

 

     “என் அன்பே!” என்று வானவி தாவி வந்து அணைத்துக் கொண்ட துறவி யார் என்பதை வாசகர்கள் இதற்குள் ஊகித்திருப்பார்கள். வேறு யாராக இருக்க முடியும்? அவளுடைய உள்ளம் கவர்ந்த கள்வன் குந்தள விக்கிரமாதித்தன் தான்! இல்லையா?

ஆனால் இது என்ன? அந்தத் துறவி ஏன் அவளைப் பிடித்து அப்பால் தள்ளுகிறார்? அவருக்கு அவள் மீது கோபமா? அல்லது, பைத்தியக்காரியின் கோலத்தில் அவள் தன்னை அணைத்ததை அவர் விரும்பவில்லையா? ஆம், காதலன் தன் அணைப்பை உதறத் தனது இந்தக் கோலந்தான் காரணமாக இருக்க வேண்டுமென்று வானவி கூட ஊகித்து விட்டாள்!

அவள் நகைத்தாள். ஆனால் இந்த நகைப்பு, கடந்த சில திங்கள்களாக அவள் நகைத்து வந்த பைத்தியக்காரியின் நகைப்பல்ல. இது உள்ளத்தின் உவகையினால் பிறந்த நகைப்பு; ஊடலின் துவக்கச் சின்னமான நகைப்பு. நகைத்தவாறே அவள் பேசினாள்: “ஆம், அன்பே! என் கோலத்தைக் காண எனக்கே சகிக்கவில்லை. ஆயின் என் செய்வது? இந்தக் கோலம் பூண்டு இத்தனை ஆட்டம் ஆடியிராவிட்டால், உங்களை இங்கே காணக் கொடுத்து வைத்திருப்பேனா? அதிருக்கட்டும்; நீங்கள் மட்டும் என்ன? இப்போது மாறனின் தோற்றத்தை நிகர்ப்பதாகத்தான் நினைப்போ? ஐயோ! காணச்சகிக்க வில்லையே, இந்தத் தாடியும், மீசையும்! எங்கே, மதிவழியும் உங்கள் மலர் முகத்தை ஒருமுறை காணட்டும்,” என்று கொஞ்சிய அவள், சட்டென்று சிவபோதரின் தாடியைப் பற்றி இழுத்தாள்.

அது பொய்த்தாடிதானே? ஆதலால் அவள் கையோடு வந்து விட்டது. ஆனால், அந்தத் தாடிக்குள்ளே மறைந்திருந்தது யார்…?

“குலோத்துங்க அத்தான்!” என்று வீறிட்டாள் வானவி.

குலோத்துங்கன் நகைத்தான். வானவி சற்றுமுன் கொஞ்சலாக நகைத்தாளே, அதற்கு நேர் மாறான குரோத நகைப்பு இது!

அவன் நகைக்கத்தான் நகைப்பான். சோழநாட்டின் மாமன்னர் துவக்கம் மக்கள் ஈறாக யாவரையும் ஏமாற்றிவிட நினைத்தாள் இந்தப் பெண். இப்பொழுது அவன் அவளையே ஏமாற்றிவிட்டான். பின் அவனால் நகைக்காமல் இருக்க முடியுமா? நன்றாக நகைக்கட்டும்; நகைத்துக்கொண்டே இருக்கட்டும். இடையே, நாம் இவையெல்லாம் எப்படி நடந்தது என்பதைக் காண்போம்.

காதல் தோல்வி, வாழ்வில் மற்றெந்தத் தோல்வியையும் விடக் கடுமையானது; அதனால் மனமுடைந்து அறிவு பேதலித்துப் போவோரும் உண்டு என்று முன் அத்தியாயத்தில் படித்தோம். அதோடு வேறொன்றும் படித்தோம்- வானவிக்குப் பிடித்திருந்த பைத்தியம் அவளாகவே வரவழைத்துக் கொண்டது என்று! அப்படிச் சொல்லப்பட்டிருந்ததன் காரணம் இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

காதல் தோல்வி சிலரைப் பைத்தியத்தில் கொண்டு விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கோழை உள்ளம் படைத்த ஆண்-பெண்களைத்தான் அது எளிதாகப் பற்றிக்கொள்ளும். வானவியைப் போன்ற திடசித்தம் படைத்தவர்களைப் பற்றிவிடலாமென்று நினைத்த தானால், அந்தப் பைத்தியத்துக்கே பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.

ஆம், திடமான மனம் படைத்தவர்கள் அத்தனை எளிதில் பேதலிப்புக்கு உள்ளாகிவிட மாட்டார்கள். அவர்கள் இம்மாதிரி இக்கட்டான நிலையில் முன்னைவிடத் தீவிரமாகச் சிந்திப்பார்கள். மலைபோன்ற இக்கட்டாயினும் அதைப் பனிபோல் கரையச் செய்ய வழி காண்பார்கள். துணிச்சலுடன் செயற்படுத்த முனைவார்கள். வானவியும் அவ்வாறுதான் செய்தாள்.

இத்தடவையும் தனது காதலனின் நாடு சோழ நாட்டிடம் தோல்வியுற்றது அவளைப் பெரிய ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. தனக்கு விடிவு பிறக்கக் குந்தள நாட்டின் வெற்றியைத்தான் அவள் பெரிதும் நம்பியிருந்தாள். சாதாரண வெற்றிகூடப் போதாது; சோழர்களை அடிபணியச் செய்யும் வெற்றியாக அது இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அப்படிப்பட்ட வெற்றியைக் குந்தளத்தார் பெற்றால்தான், ‘என் காலடியில் வந்து வீழ்ந்து, “என் மகளை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உன் தந்தையைக் கெஞ்சச் செய்வேன்; அதுவரையில் பொறுத்திரு’ எனத் தன் காதலன் ஓர் ஓலையில் அறிவித்திருந்த மொழி மெய்யாக முடியும் என்று அவள் திடமாக நினைத்தாள். ஆனால் அவளுடைய காதலனின் நாட்டுக்கோ இத்தடவையும் வெறும் வெற்றிகூடக் கிடைக்கவில்லை.

அது மட்டுமா? அவளுடைய தந்தைகூட அவளைக் கடுமையாக எச்சரித்து விட்டார் – ‘இனி அந்த விக்கிரமாதித்தனை உள்ளத்தால் நினைத்தாலும் முன்பு ஈராண்டுகள் மட்டுமே உழன்ற பாதாளச் சிறையில் ஆயுள் உள்ள அளவும் தனிமையில் உழல நேரிடும்’ என்று.

ஆனால், இந்தப் பயமுறுத்தலுக்கு வானவி அஞ்சிவிடவில்லை. அல்லது, ‘இப்படித் தோல்வி மேல் தோல்வி அடைந்துவரும் குந்தளத்தார் இனி வெற்றி பெறுவது எப்போது? நாம் நம் காதலனை அடைவது எப்போது?’ என்று அவள் மனம் தளர்ந்துவிடவும் இல்லை. ஆனால் இதுவரையில் குந்தளத்தார் என்றாவது சோழநாட்டாரைப் போரில் முறியடிக்கக் கூடும் என்று நம்பியிருந்த அவள் இப்பொழுது அந்த நம்பிக்கை குன்றப் பெற்றாள். ஆதலால், காதலனை மணந்து அவரோடு நிரந்தரமாக வாழ, தானே வழி காணத்துணிந்தாள். அதற்கான வழியைப் பற்றி அவள் தீவரமாகச் சிந்தித்து வந்த போதுதான் அரண்மனையில் அந்நிகழ்ச்சி நடந்தது.

சோழ கேரளன் அரண்மனையில் வானவியின் தாய்க்குப் பணிப்பெண்ணாக இருந்தாள் தேமொழி என்ற இளம் பெண். அவளுடைய தந்தை வினயபாலத்தேவர் என்பார் சோழப் படைப்பகுதி ஒன்றின் தலைவர். நாட்டு மக்களிடையே நல்ல செல்வாக்கு உடையவர். அவருடைய ஒரே மகள் தேமொழி. அண்மையில் அவளை மற்றொரு படைத்தலைவரின் மைந்தனுக்கு மணமுடித்து வைக்கக் கூட அவர் முடிவு செய்திருந்தார். ஆனால், இத்திருமணம் முடிவு செய்யப்பட்ட சில நாட்களுக்கெல்லாம் தேமொழிக்குத் திடீரென அறிவு பேதலித்து விட்டது.

வினயபாலத்தேவர் கலங்கிப்போனார். என்னென்னவோ சிகிச்சைகள் எல்லாம் நடந்தன. ஒன்றிலும் அவளுடைய பைத்தியம் தெளியவில்லை. இறுதியில் உளக்கூர் அறிஞர்களை அவர் கலந்தாலோசித்தார். அவர்கள் தேமொழியின் வாழ்க்கை வரலாறு அனைத்தையும் கேட்டரறிந்து கொண்ட பின், அவளுக்கு அறிவு பேதலித்து விட்டதன் காரணத்தையும், அதற்குரிய சிகிச்சையையும் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். ஆம், அவள் சோழகேரளன் அரண்மனையில் பணியாற்றி வந்த வேங்கிலன் என்ற இளம் காளையைக் காதலித்து வந்தாள். ஆனால் அவன் தகுதியில் தாழ்ந்தவன். ஆதலால், அவனை அவளுக்கு மணமுடித்து வைக்க இயலாதெனக் கூறிவிட்டு, வினயபாலத்தேவர் தமது தகுதிக்கேற்ற மற்றொரு படைத்தலைவரின் மகனை அவளுக்கு மணாளனாகத் தேர்ந்தெடுத்தார். இந்தக் காதல் தோல்விதான் தேமொழியின் பைத்தியத்துக்குக் காரணமெனவும், அவள் விரும்புகிறவனையே மணம் செய்து வைத்தாலன்றி அவளுடைய பைத்தியம் அகலாதென்றும் உளவியல் வல்லுநர்கள் அறிவித்ததும், வேறு வழியின்றி அவ்வாறே செய்து வைத்தார் வினயபாலத்தேவர். தேமொழியின் பைத்தியமும் உடனே தெளிந்துவிட்டது.

இந்த நிகழ்ச்சி சட்டென்று வானவிக்கு வழி காட்டியது. நாமும் இதே வழியைக் கையாண்டால் என்னவென்று அவள் நினைத்தாள். அவளுடைய நினைவுக்கு உரமளிக்க அப்போது அவளுடைய அருமைத் தம்பி மதுராந்தகனும் தொண்டை மண்டலத்திலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.

மதுராந்தகனின் மனப்போக்கைப் பற்றி இங்கே நாம் சிறிது விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மாமன்னர் வீரராசேந்திர தேவர் தமது இளைய மைந்தன் கங்கை கொண்ட சோழனுக்கே இளவரசுப் பட்டம் கட்டி, தமக்குப் பின் அவனையே இந்நாட்டை ஆண்டுவரச் செய்ய வேண்டுமென்று கருதும் அளவுக்கு அவருடைய மூத்த மைந்தனான மதுராந்தகன் தந்தையை மதிக்காத தனயனாகத் தலையெடுத்திருந்தான். தம் கண்முன் அவன் நடத்திய அதமச் செயல்களைக் காணப் பொறுக்காமலே அவர் அவனை, ‘எங்கேனும் போய் எப்படியேனும் அழிந்து போகட்டும்’ என்று தொண்டை மண்டலத்துக்கு அனுப்பி விட்டிருந்தார். தந்தை தன்மீது கொண்டிருந்த கருத்தை மதுராந்தகனும் நன்கு அறிந்தே இருந்தான். ஆயினும் முறையாகத் தனக்குக் கிட்ட வேண்டிய சோழமாவலி வாணராயன் அரியணை தம்பிக்குப் போவதை அவன் விரும்பவில்லை. ஆதலால், அவன் இப்போது சோழ நாட்டுக்கு எதிராக எந்த விதமான சதி வேண்டுமானாலும் செய்து அரியணையைத் தான் அடைந்துவிட வேண்டுமென்று துணிந்திருந்தான்.

அவனுடைய இந்தக் கருத்துக்கு ஆதரவு தந்தாள் வானவி. தான் குந்தள விக்கிரமாதித்தனின் மனைவியாகி விட்டால், மதுராந்தகனையே சோழ அரியணையில் அமரச் செய்து விடுவதாக அவள் வாக்களித்திருந்தாள். எனவே, சகோதரி விக்கிரமாதித்தனை அடைய உதவுவது அவனுடைய கப்பாடாயிற்று. இந்நிலையில்தான் அந்தச் சகோதர-சகோதரியின் தொடர்பை உணர்ந்து, அதைத் தகர்த்தெறியும் பொருட்டும் மதுராந்தகனைத் தொண்டை மண்டலத்துக்கு அனுப்பிவிடத் துணிந்தார் சோழதேவர்.

ஆயினும், என்னதான் மாதண்ட நாயகனாக்கித் தலைநகரிலிருந்து தள்ளி விட்டிருந்தாலும், மாமன்னர் ஆண்டுக்கு ஒரு முறை மகனை நாட்டுக்கு அழைக்க வேண்டியே இருந்தது – அதாவது, அவருடைய பிறந்த நாள் விழாவின்போது, அப்போதுதான் சோழநாட்டின் பிரதிநிதிகளாகப் பல்வேறு மண்டலங்களில் நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அம்மண்டலத்தில் தண்டல் செய்த திரைப் பொருள்களுடன் மன்னரைக் காண வருவது வழக்கம். அவ்வாறு தான் இத்தடவை தொண்டை மண்டலத்திலிருந்து சோழத் தலைநகருக்கு வந்திருந்தான் மதுராந்தகன்.

மன்னரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அவன் தன் சகோதிரியைத் தனியே சந்தித்தான். வானவி விக்கிரமாதித்தனை அடைய தான் கண்ட வழியை அறிவித்தாள். மதுராந்தகனுக்கும் அது நல்ல வழியென்றே தோன்றியது. ஆயினும் அவன் ஐயம் ஒன்றை வெளியிட்டான். “நீ பைத்தியமாக நடிப்பதெல்லாம் சரிதான், அக்கா. மருத்துவர்கள் உனக்கு சிகிச்சை செய்து தோல்வியுற்ற பின், தந்தை உளவியல் வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்பார் என்பதும் எதிர்பார்க்கக் கூடியதே. அவர்களும் உன்னைக் குந்தள இளவரசருக்கு மணமுடித்து வைப்பது ஒன்றுதான் வழி என்று கூறுவார்களென்பதும் சாத்தியமானதே. ஆனால் அத்தனைக்குப் பிறகும் தந்தை அதற்கு இணங்கவில்லை யென்றால்…?” என்று அவன் வினவினான்.

“அவ்வளவு பரிவுகூட அப்பாவுக்கு என்பால் இல்லை என்பது வெளியானால், பைத்தியம் தானாகவே நீங்கிவிட்டது போல் நான் சரியாகிக் கொள்கிறேன். முயன்று பார்ப்பதில் தவறில்லையே?” என்றாள் வானவி.

இந்த அடிப்படையில்தான் வானவி பைத்தியமானாள். மருத்துவர்களை ஏமாற்றிவிட்டு உளவியல் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு வந்த வானவி, அவர்கள் தான் எதிர்பார்த்த கருத்தையே வெளியிட்டதும், தன் தந்தை மேலே என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருந்தாள். அரண்மனையிலுள்ள எல்லோரையுமே ஏமாற்றிக் கொண்டிருந்த காரணத்தால், தந்தையின் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்பதை எவரிடமும் அவளால் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தவிர, அவளுடைய பயங்கர நடிப்பால் சாதாரண சேடிப் பெண்கள் கூட அவளை நெருங்கப் பயந்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் யாரும் அருகில் இல்லாதபோது அவளை அடைத்திருந்த விடுதிக்கு சோழப் படை வீரன் ஒருவன் வந்து, ஓர் ஓலையை கம்பிக் கதவின் இடை வழியாக வீசி, “இது தொண்டை மண்டலத்திலிருந்து இளையதேவர் உங்களுக்கு அனுப்பியுள்ள ஓலை. படித்துவிட்டு அதில் எழுதியிருக்கிறவாறு நடந்து கொள்ளுங்கள்,” என்று கூறிவிட்டு விரைந்து சென்றான்.

வானவி அவ்வோலையைப் படித்தாள். அது மதுராந்தகன் அனுப்பியிருந்த ஓலைதான்: அதில் அவன் எழுதியிருந்தான்:

“சகோதரி, நான் ஐயமுற்றவாறே தந்தை முடிவு செய்துவிட்டார். என்ன நேரிட்டாலும் உன்னைப் பகை நாட்டானுக்கு மணம் செய்து கொடுப்பதில்லை என்று அவர், இங்கிருந்து மருத்துவர்களையும் மந்திரவாதிகளையும் அழைத்து வருமாறு எனக்கு ஓலை அனுப்பியுள்ளார். இந்த வாய்ப்பை நான் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறேன். இன்று நான் குந்தள இளவரசருக்கு ஓர் அவசர ஓலை அனுப்பியிருக்கிறேன். அதன்படி அவர் நேரே தொண்டை மண்டலத்துக்கு வருவார். இங்கே அவரை இமயத்திலிருந்து திரும்பியுள்ள துறவி என அறிமுகப்படுத்தி, துறவுக் கோலத்திலேயே அங்கு அழைத்து வருவேன். பின்னர் சிகிச்சை என்ற சாக்கில் நீங்கள் சில காலமாவது சந்தித்து அளவளாவலாம். இது ஒன்றுதான் இந்நிலையில் நான் உனக்கு செய்யக் கூடியது. ஆதலால், உன் இதயம் கவர்ந்த இமயத்துத் துறவி வரும்வரையில் நீ உன் பைத்திய வேடத்தைக் கலைத்துக் கொண்டு விடவேண்டாம்.

இவ்வாறு,
மதுராந்தகன்.”

இப்படி எல்லாம் அவர்கள் திட்டப்படியே நடந்தன. ஆனால் இதில் குலோத்துங்கன் எவ்வாறு வந்து குறுக்கிட்டான்? அது மற்றொரு சுவையான நிகழ்ச்சி.

வயதாலோ, ஆற்றலாலோ, அல்லது அநுபவாத்தாலோ எவரும் நுண்ணறிவு பெற்றுவிட முடியாது. எதையும் ஊடுருவி முன்னோட்டமிடும் அத்தன்மை மனிதருக்கு இயற்கையாக அமைவது. பிறப்பில் அத்தன்மை வாய்க்கப் பெறாதவர்கள் இறப்பு வரையில் அதைப் பெற முடியாது. சோழ அரச பரம்பரையிலே அத்தகைய நுண்ணறிவு படைத்தவர்களும் இருந்தார்கள்; இல்லாதவர்களும் இருந்தார்கள். இரண்டாம் இராசேந்திர சோழதேவர் மிகுந்த நுண்ணறிவு படைத்தவர். அதனைப் பயன்படுத்தி எந்தச் செயலையும் ஆய்ந்து நோக்கித்தான் அவர் முடிவு செய்வார். ஆனால் வீரராசேந்திரரோ நுண்ணறிவு வாய்க்கப் பெறாதவர். ஆதலால் அவர் செய்யும் முடிவுகள், ஆற்றல் அல்லது அநுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். இப்போது அவர் செய்த முடிவையே அலசிப் பார்ப்போமே?… தனக்கு அடங்காதவன் என்று கிட்டத்தட்ட நாடு கடத்தியது போல் வேறோரு மண்டலத்துக்கு அனுப்பிவிட்டிருந்த மகனிடம், ‘அவனுக்கு மிகவும் உகந்தவளாக விளங்கிய ஒருத்தியின் சிகிச்சை பொருட்டு முக்கியமான பணி ஒன்றை ஒப்படைக்கிறோமே; இதில் அவன் ஏதாவது சூது-வாது செய்ய மாட்டானா’ என்று அவர் சிந்தித்திருக்க வேண்டாமா? அதைச் சிந்திக்காமல் செயற்படத் தொடங்கியது ஒன்றே அவர் நுண்ணறிவு அற்றவர் என்பதற்குச் சான்றாகி விடவில்லையா?

ஆனால் மாமன்னர் நுண்ணறிவு வாய்க்கப் பெறாதவராக இருந்த போதிலும், சோழநாட்டின் தவப்பயனாக அங்கே மிகுந்த நுண்ணறிவு வாய்ந்தவன் வேறொருவன் இருந்தான். அவன் தான் நமது குலோத்துங்கன். வானவிக்கு மெய்யாகவே பைத்தியம் பிடித்திருக்கக்கூடுமா என்று முன்பே அவன் ஐயமுற்றான். அந்த ஐயம் காரணமாகவும், தனது நுண்ணறிவின் பயனாகவும், சோழதேவர் மகளின் சிகிச்சைக்குத் தொண்டை மண்டலத்திலிருந்து மருத்துவர்களையும், மந்திரவாதிகளையும் அழைத்து வருமாறு மதுராந்தகனுக்கு ஓலை விடுத்ததும் அவன் விழித்துக் கொண்டான். பாதுகாப்புப் படையின் தலைவனாக இருந்தமையால் தொண்டை மண்டலத்திலிருந்து யார் வந்தாலும் தன் அனுமதியின்றி கோட்டைக்குள்ளே விடவேண்டமென்று அவன் உடனே ஒரு கட்டளை பிறப்பித்தான்.

ஒரு திங்களுக்கு முன் ஒரு நாள் இரவு இரண்டாம் சாமத்தில் உட்கோட்டையின் கிழக்கு வாயில் காவலன் ஒருவன் குலோத்துங்கனிடம் வந்து, தொண்டை மண்டலத்திலிருந்து இளவல் மதுராந்தக தேவர் மாமன்னருக்கு அனுப்பியுள்ள ஓலை ஒன்றுடன் வீரன் ஒருவன் வந்துள்ளதாக அறிவித்தான். குலோத்துங்கன் உடனே கீழைக் கோட்டை வாயிலுக்கு சென்றான். “இப்போது இரண்டாம் சாமத்தின் பிற்பகுதி ஆகிவிட்டது. மன்னரவர்கள் துயில் கொண்டிருப்பார்கள். வீரனே, நீ என்னுடன் வந்து முடிகொண்ட சோழன் அரண்மனையில் இரவைக் கழித்துவிட்டு, காலையில் மன்னரைக் காணப் போகலாம்,” என்று அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

நள்ளிரவில் அந்த வீரன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது குலோத்துங்கன் அவன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவன் அறியாதவாறு அவன் உடைகளைப் பரிசோதித்தான். அவனுடைய மேலங்கிப் பையில் மாமன்னருக்குரிய ஓலை இருந்தது. அந்த ஓலையில்தான் மதுராந்தகன் சிவபோதத் துறவியாரைப் பற்றிக் குறிப்பிட்டு அவரை அழைத்துவர மன்னரின் கட்டளையைக் கோரியிருந்தான். உடனேயே குலோத்துங்கனின் நுண்ணறிவு வேலை செய்து, இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று ஊகித்து விட்டது. அவன் அவ்விரனின் உடைகளை இன்னும் நுணுக்கமாகப் பரிசோதித்தபோது, அருகில் கழற்றி வைக்கப்பட்டிருந்த அவனுடைய தலைப்பாகையில் ஓர் ஓலை நறுக்குச் செருகி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அதுதான் வானவிக்கு மதுராந்தகன் அனுப்பியிருந்த ஓலை. அதைப் படித்து, அவனும் வானவியும் திட்டமிட்டுச் செய்துவரும் சூழ்ச்சிகளை அறிந்தான் குலோத்துங்கன்.

அந்த ஓலையை அவன் அப்படியே மாமன்னரிடம் கொண்டுக் காட்டி எல்லாவற்றையும் அம்பலமாக்கியிருக்க முடியும். ஆனால் அவனுடைய நுண்ணறிவு அதற்கு இடமளிக்கவில்லை. ஏனென்றால் அது தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை அடியோடு துண்டித்து, மதுராந்தகனைச் சோழநாட்டின் நிரந்தரப் பகைவனாக்கிவிடும். குலோத்துங்கனின் பரந்த உள்ளம், சோழ அரச குடும்பத்துக்குள்ளே பகைமை ஏற்படச் செய்ய விரும்பவில்லை. மாமன்னர் அறியாதவாறு வானவிக்கும் மதுராந்தகனுக்கும் ஒரு பாடம் கற்பித்து அவர்களை நல்வழிப் படுத்தவே அவன் விரும்பினான். ஆதலால் அவன் அவ்வோலையை எடுத்த சுவடு தெரியாமல் தலைப்பாகையில் செருகி வைத்துவிட்டுச் சென்று விட்டான்.

இப்பொழுது, விக்கிரமாதித்தன் துறவி வேடத்தில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வரப்போகும் நாளை அவன் ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தான். அந்நாள் வந்தது. சிவபோதரை அரசாங்க மரியாதைகளுடன் வரவேற்க தலைநகர் தடபுடல் பட்டுக் கொண்டிருந்த அந்நேரத்தில், குலோத்துங்கன் சில படைவீரர்களுடன் நகர எல்லைக்கு விரைந்து சென்றான். வேடதாரி விக்கிரமாத்திதனும் மதுராந்தகனும், தனித்தனியே வெவ்வேறு இரதங்களில் வந்தது, குலோத்துங்கன் வகுத்திருந்த திட்டத்துக்கு வசதி செய்து கொடுத்தது. மன்னர் பிரான் சோழ கேரளன் அரண்மனை முகப்பில் சிவபோதத் துறவியாரை வரவேற்கப் பெரிய ஏற்பாடுகள் செய்திருந்தார். நகர எல்லையில் துறவியாரின் இரதத்தை நிறுத்தி வைத்துக்கொண்டு தமக்குத் தகவல் அனுப்புமாறும், தாம் அவரை வரவேற்கத் தயாராகக் காத்திருப்பதாகவும் குலோத்துங்கனுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

குலோத்துங்கன் இக்கட்டளையையும் தனது திட்டத்துக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டான். ஊர் எல்லையில் காத்திருந்த அவன், துறவியாரும் மதுராந்தகனும் ஏறி வந்த இரதங்கள் அங்கே வந்ததும், அவற்றை நிறுத்தினான். மதுராந்தகனிடம் சென்று, “மாமன்னர் தங்களை முன்னதாக வந்து துறவியாரின் வருகையைத் தமக்கு அறிவிக்கச் சொன்னார். துறவியாரை வரவேற்கப் பெரிய ஏற்பாடுகள் அரண்மனையின் முகப்பில் செய்யப்பட்டுள்ளன. சோழதேவரே அவரை நேரில் வரவேற்கப் போகின்றார். ஆகையால் துறவியாரின் இரதத்தை அரை நாழிகைப் பொழுது இங்கே நிறுத்திக் கொண்டு பின்னர் அரண்மனைக்கு அனுப்பப் பணிந்துள்ளார்,” என்றான்.

மதுராந்தகன் நகரை நோக்கிச் சென்றதும், குலோத்துங்கன் சில வீரர்களுடன் சிவபோதரின் இரதத்தில் ஏறி அவனைச் சிறை செய்து, அவனுடைய புனை வேடத்தைக் கலைக்கச்செய்து அப்பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அந்த வேடதாரியை இரகசியமாக சிறைச்சாலைக்குக் கொண்டுபோகப் பணித்துவிட்டு, அவனிடமிருந்து பறித்த புனைவேடப் பொருள்களைத் தான் அணிந்து கொண்டு சிவபோதராக உருமாறி இரதத்தில் அமர்ந்து கொண்டான். விக்கிரமாதித்தனும், குலோத்துங்கனும் ஏறக்குறைய ஒரே வயதும் ஒரே மாதிரியான உடல் அமைப்பும் பெற்றிருந்ததால், மதுராந்தகனால் கூட இந்த ஆள்மாற்றத்தைக் கண்டுகொள்ள முடியவில்லை.

குலோத்துங்கனின் நகைப்புத் தீர்ந்தது; அவன் உள்ளத்திலிருந்து வெடிப்புப் பிறந்தது. “வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு, இளவரசி. அற்ப உடலின்பத்துக்காக பல திங்கள் பைத்தியமாக நடிக்கவும், நாட்டின் பகைவனை மாறுவேடத்தில் வரவழைக்கவும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? காதலுக்காக நீங்கள் பிறந்த நாட்டையே காட்டிக் கொடுக்கத் தயங்க மாட்டீர்கள் என்று தங்கள் தந்தையார் கருதியிருப்பதில் தவறு என்ன இருக்கிறது?” என்று அவன் சினம் கனிய வினவினான்.

வானவி தலை குனிந்து நின்றாள். பாதாளச் சிறையில் ஆயுள் உள்ள அளவும் தனிமையில் வாட வேண்டிய பயங்கர நிலையை எண்ணி அவளது உள்ளம் கலங்கிக் கொண்டிருந்தது. அவள் வாய் திறக்க வழியின்றி கற்சிலையாக நின்றாள்.

குலோத்துங்கனே மீண்டும் பேசினான்: “நடந்தது நடந்துவிட்டது. இனியேனும் நல்லதனமாக நடப்பதாக வாக்குறுதி கொடுங்கள். உங்களுக்கும், அந்தக் கோழை விக்கிரமாதித்தனுக்கும் மாமன்னரிடம் இறைஞ்சி மன்னிப்புப் பெற்றுத் தருகிறேன்.”

ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? திமிர் பிடித்தவர்களை என்றாவது அடிபணியச் செய்ய முடியுமா? தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி இதுவரையில் தலைகுனிந்து நின்ற வானவி, ‘மன்னிப்பு’ என்ற சொல்லைக் கேட்டதும் வெகுண்டாள். “தேவையில்லை; எனக்காக யாரும் மன்னிப்புக் கோரத் தேவையில்லை. வருவதை எதிர்கொள்ள நானும் என் காதலரும் சித்தமாக இருக்கிறோம்!” என்றாள் அவள்.

குலோத்துங்கன் அவளுக்கு நன்மை செய்யவே விரும்பினான். இன்னுங் கூட அவளுடன் வாதாடி, நன்மை தீமைகளை எடுத்துரைத்து, நாட்டுக்குத் தீங்கு செய்யும் பணிகளில் இனி ஈடுபடுவதில்லை என வாக்குறுதி பெற்றுக்கொண்டு, மாமன்னரிடம் இந்த ஒருமுறை மட்டும் தனக்காக அவர்களை மன்னித்து விட மன்றாடத்தான் எண்ணினான். திறமைசாலியான அவன் மாமன்னரிடம் மகத்தான செல்வாக்குப் பெற்றிருக்கும் அவன் அதைச் சாதித்தும் இருப்பான். ஆனால் அதற்குள் அவனே எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டது.

அவனும், வானவியும் இருந்த விடுதியின் கதவு வேகமாகத் தட்டப்பட்டது. “குலோத்துங்கா! கதவை உடனே திற!” என்ற சிம்ம கர்ஜனை வெளியே கேட்டது.

குலோத்துங்கன் ஓடிச் சென்று கதவின் உட்தாழை நீக்கினான். கதவு படீரென்று திறந்தது. வெளியே மாமன்னர் வீரராசேந்திர தேவர் உருவிய வாளுடன் நின்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 19மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 19

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 9. ஊழ்வினையின் ஊடாடல்        குந்தள மன்னன் ஆகவமல்லனின் சூளுரை தாங்கிய போர்த் திருமுகத்துடன் அந்நாட்டுத் தூதன் கங்காகேத்தன் என்பான் கங்கைகொண்ட சோழபுரத்தை வந்தடைந்த அன்று, உள்நாட்டு நடவடிக்கைகளை அறியும் பொருட்டு வீரராசேந்திர தேவர் தற்செயலாக

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 2. விடுதலையும், அதன் பின் வந்த விளைவும்!        வானவியையும், குந்தள விக்கிரமாதித்தனையும் கங்கை கொண்ட சோழப்புரத்துப் பாதாளச் சிறையிலே பதுக்கி வைத்துக்கொண்டு காலமெனும் புள்ளினம் இருமுறை சிறகு உதிர்த்து விட்டது. வெளி உலக நிகழ்ச்சிகள்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 23மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 23

மூன்றாம் பாகம்   அத்தியாயம் – 1. இறுதி விருப்பம்        வீரராசேந்திரரின் மரணத்துக்கு மனநோய்தான் காரணமென்று கண்டோம். ஆனால் அந்த மனநோய்க்குக் காரணம், பல்லாண்டுகளாகத் தோற்றோடச் செய்துவந்த குந்தளத்தாரிடம் ஒரு சமரச உடன்படிக்கைக்கு வர நேர்ந்ததே என்ற ஏக்கம் மட்டுமன்று;