Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13

இரண்டாம் பாகம்

 

அத்தியாயம் – 3. வேங்கியில் நடந்த விஷமம்

 

     “சோழ அரியணையில் உங்களுடன் அமரக் காலம் வரும்; அது வரையில் காத்திருப்பேன்!” என்றாள் மதுராந்தகி.

“என் ஆணைகள் நிறைவேறி, அன்புக்குரிய உங்களோடு கல்யாணபுரத்தில் வாழ ஆயிரங்கோடி காலமானாலும் காத்திருப்பேன்!” என்றாள் வானவி.

ஆனால், சோழ-வேங்கி நாடுகளின் சரித்திரப் போக்கையே மாற்றி விடுவதாக ஆணைகளிட்ட அந்த இளமங்கையர் இருவரும் காத்திருந்தனரா? இல்லை; தங்கள் ஆணைகள் நிறைவேறும் காலம் தங்களை நோக்கி வரும் வரையில் அவர்கள் வாளா இருக்கவில்லை; அக்காலத்தைத் தங்களை நோக்கி இழுக்கும் பணியில் அவ்விருவரும் மறைமுகமாக அவ்வப்போது ஈடுபட்டுக் கொண்டுதான் இருந்தனர்.

ஆணையைப் பற்றிய வரையில் தனக்கு மகத்தான வெற்றி கிட்டி விட்டதாகவே கருதியிருந்தாள் வானவி. ஆம், குலோத்துங்கனுக்குச் சோழ அரியணை மட்டுமின்றி, வேங்கி அரியணையும் கிட்டாமல் செய்வதாகத் தானே அவள் ஆணையிட்டிருந்தாள்? அந்த ஆணைதான் இப்பொழுது முற்றிலும் நிறைவேறி விட்டதே? வேங்கி அரசுக்கட்டிலில் விசயாதித்தனை அமர்த்தி விட்டார்கள் சோழர்கள்; குலோத்துங்கனோ, ஒரு சாதாரணப் படைத் தலைவனாகச் சோழ நாட்டுக்கு ஊழியம் புரிந்து கொண்டிருந்தான். தன் ஆணை தனது முயற்சியால் நிறைவேறியது என்று அவள் பெருமைப் பட்டுக்கொள்ள முடியாதுதான். அதற்காக அவள் இரண்டாண்டு காலம் பாதாளச் சிறைவாசம் செய்ய வேண்டியிருந்தது என்பதும் மெய்யே. தவிர, எவனை அவள் காதலித்தாளோ, அவனுடன் ஈராண்டுகள் தனித்து வாழ்ந்திருந்த போதிலும், இப்போது அவனை மணக்க முடியாத நிலையைச் சோழ அரசியல் ஏற்படுத்தியிருந்ததையும் அவள் மறுக்க முடியாது. ஆயினும் இக்குறைபாடுகளையெல்லாம் ஈடு செய்யும் வகையில் தன் ஆணை நிறைவேறி விட்டதே என்று பெருமை அடைந்திருந்தாள் வானவி. மேலும், இப்பொழுது அவள் முன்பிருந்த சாதாரண வானவியா என்ன? சோழ நாட்டின் இளவரசி. முன்பு எத்தகைய அகந்தையுடன் மதுராந்தகி சோழகேரளன் அரண்மனையில் வாழ்ந்து வந்தாளோ, எத்தகைய அதிகாரங்களையும் சலுகைகளையும் பெற்றிருந்தாளோ, அவை அனைத்தையும் பெற்று, அவள் வாழ்ந்த அதே சோழகேரளன் அரண்மனையில் வாழ்ந்து வருபவள். (அவ்வப்போது அரசு செலுத்தும் மன்னரும் அவரது குடும்பத்தினரும் சோழகேரளன் அரண்மனையில் வாழ்வதென்றும், இதர அரச குடும்பத்தினர் அனைவரும் முடிகொண்ட சோழன் அரண்மனையில் வசிப்பதென்றும் சோழர்களிடையே ஒரு மரபு இருந்தது.) ‘திமிர் கொண்ட அந்த மதுராந்தகி இப்போது அந்தத் திமிரெல்லாம் கரைந்து, தனது செல்வாக்கையெல்லாம் இழந்து ஒரு சாதாரண அரச குடும்பத்துப் பெண்ணாக முடிகொண்ட சோழன் அரண்மனையின் ஒரு பகுதியில் ஒடுங்கி வாழ்கிறாள்’ என்று ஏளனத்துடன் எண்ணி அடிக்கடி தனக்குள்ளே நகைத்துக் கொள்வாள் வானவி.

இந்நிலையில்தான் அரண்மனையில் ஒருநாள் இச்சகோதரியரிடையே ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. சோழ மன்னராக முடிசூட்டப்பட்ட பின்னர், முதல் முதலாக வீரராசேந்திர தேவரின் பிறந்த நாள் அந்நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சோழகேரளன் அரண்மைனையில் அன்று ஒரே கோலாகலம். முடிகொண்ட சோழன் அரண்மனையில் வாழ்ந்த அரச குடும்பத்தினர் எல்லோரும் அன்று அங்கே கூடியிருந்தனர். காலையில் மாமன்னர் உட்பட அரசகுலத்து ஆண்-பெண்கள் அனைவரும் சோழேச்சுரன் ஆலயத்துக்குச் சென்று இறைவழிபாடு செய்து திரும்பினர். பின்னர் அந்தணர்கள் வேள்வித் தீ வளர்த்து மன்னர்பிரானுக்கு நீண்ட ஆயுளை அருளுமாறு எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டனர். இந்த வைதீகச் சடங்குகள் முடிவுற்ற பிறகு, அரண்மனையின் ஆட்சி மண்டபத்தில் மாமன்னரும், அவரது பட்டதரசி அருமொழிநங்கையும் இராசேந்திர சோழ மாவலி வாணராயன் அரியணையில் அமர்ந்திருக்க, அரசகுலத்து ஆண்-பெண்கள், அதிகாரிகள், இவ்விழாவுக்கெனவே வந்திருந்த குறுநில மன்னர்கள், மற்றும் முக்கியமான நகர மாந்தர் முதலானோர் தங்கள் தங்களுக்கெனப் போடப்பட்டிருந்த ஆசனங்களின் வீற்றிருந்தனர்.

ஆம்; அப்போது, நாட்டுக்கு உழைப்பவர்களுக்கு மன்னர் பரிசில் அளித்துப் பாராட்டும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. யார் யாருக்கு, என்ன பரிசு வழங்குவது என்பது முன்பே கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டிருந்த படியால், திருமந்திர ஓலைக்காரர் வானவன் பல்லவரையன் முறைப்படி ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைக்க, அவர்கள் எழுந்து வந்து மன்னரை வணங்கித் தங்களுக்குரிய பரிசிலைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். இவ்வரிசையில், அப்போது சோழநாட்டின் படைத் தலைவர்களில் ஒருவனாக விளங்கிய குலோத்துங்கனும் அழைக்கப்பட்டுப் பரிசு வழங்கப்பட்டான்.

குலோத்துங்கன் பரிசைப் பெற்றுத் திரும்பிக் கொண்டிருக்கையில், ஆட்சி மண்டபத்து உப்பரிகையில் அமர்ந்திருந்த வானவி அருகிலிருந்த மதுராந்தகியின் செவிகளில் படுமாறு ஏளனமாகச் சிரித்துவிட்டுத் தன் தோழி பங்கையற்கண்ணியிடம், “பார்த்தாயா பங்கையா, வேங்கி அரியணையிலும் சோழ அரியணையிலும் ஒருங்கே அமரப்போகிற வீர மகன். சோழ மன்னரின் ஆயிரம் படைத்தலைவர்களில் ஒருவனாக வந்து பரிசில் பிச்சை வாங்கிச் செல்வதை?” என்றாள்.

மதுராந்தகியின் உள்ளத்தை வேலாகத் தாக்கியது இந்தத் தூற்றல். ஆயினும் அப்போது அவள் ஒன்றும் கூறவில்லை. அன்று நடுப்பகல் உணவுக்குப் பிறகு வானவியின் விடுதிக்குச் சென்று, “காலையில் என்ன சொன்னாய், வானவி?” என்று கேட்டாள்.

“உன் ஆணையில் நீ தோற்றுவிட்டதையும், என் ஆணையில் நான் வெற்றி பெற்றுவிட்டதையும் சொன்னேன்!” என்றாள் வானவி.

“உன் ஆணையில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக்கொள். அது பற்றி எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால் என் ஆணையில் நான் தோற்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு இனியேனும் இப்படி ஏதேனும் பிதற்றலை வெளியிடாதே, சகோதரி.”

“என்ன? உன் ஆணை தோற்கவில்லையா?”

“ஆமாம்: அது தோற்கவில்லை.”

“தோற்கவில்லையானால், எங்கே உன் கணவனுக்கு வேங்கி அரியணையும் சோழ அரியணையும்?”

“கிட்டும் வானவி; விரைவில் கிட்டும். அது கிட்டும் வரையில், ஒரு தாற்காலீக அமைப்பை நம்பி உன் ஆணைக்கு வெற்றியும், என் ஆணைக்குத் தோல்வியும் கிட்டிவிட்டதாக நீ கருதினால், அது உன் மதியின்மையையே காட்டும்.”

வானவி எள்ளி நகைத்தாள்: “திறமையாகப் பேசுகிறாய் மதுராந்தகி. இப்படியே ஆயுள் உள்ள அளவும் ‘என் ஆணை வெற்றியடையப் போகிறது; வெற்றியடையப் போகிறது; இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு தாற்காலீக அமைப்பு’ என்று சொல்லியே தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஏமாற்றி விடலாம் என்று பார்க்காதே. எந்த ஆணைக்கும் ஒரு காலவரை உண்டு என்பதை அறிவாயா நீ?”

“உண்டு; அதை உணர்ந்து ஆணையிட்டபோதே நான் காலவரையறையையும் கூறியிருக்கிறேன். என் கணவருடன் ஒரு நாளேனும் சோழ அரியணையில் அமர்ந்து காட்டுகிறேன் என்று கூறியிருக்கவில்லையா? ‘காட்டுகிறேன்’ என்ற அந்தச் சொல்லின் முன்னே ‘வானவியாகிய உனக்கு,’ என்பது மறைந்து நிற்பதைத் தமிழ் கற்றுள்ள நீ அறிந்திருப்பாய். ஆதலால் நீ உயிரோடிருக்கும் வரையில் என் ஆணைக்குக் கால எல்லை உண்டு. அதுவரையில் வெற்றி உனக்குக் கிட்டிவிட்டதாக இறுமாப்பு அடைய உனக்கு உரிமையில்லை.

வானவிக்கும் மதுராந்தகியின் கூற்றிலிருந்த உண்மை விளங்காமல் இல்லை. ஆம், தாங்கள் இருவரின் ஆணைகளுக்குமே காலவரை தங்களது ஆயுட்காலந்தான் என்பது விளக்கப்பட்டதும், தன் வெற்றிக் களிப்புத் தரைமட்டமாகி விட்டதே என்று அவளுக்கு மதுராந்தகியின் மீது காரணமற்ற கோபம் வந்தது. ஆதலால் அவள் விவாதப் பொருளைவிட்டு வேறுவிதமாக மதுராந்தகியைத் தாக்கலானாள். “சீ! கேவலம் ஒரு படைத்தலைவனின் மனைவியான உனக்கு ஆளும் மன்னர் மகளின் உரிமை பற்றிப் பேச என்னடி அருகதை இருக்கிறது?” என்று சீறினாள்.

மதுராந்தகியும் கோபம் அடைந்தாள். “ஆளும் மன்னரின் மகள் என்ற பெருமையெல்லாம் ஒருத்தி ஒருவனின் மனைவியாகும் வரையில்தான் வானவி; அதை நீ நினைவில் வைத்துக் கொண்டிருந்தாயானால் இத்தனை அகந்தையுடன் பேச மாட்டாய்.”

“நான் இதுவரையில் யாருடைய மனைவியாகவும் ஆகவில்லை. அப்படி ஆகும் வரையில்…”

இப்பொழுது மதுராந்தகி நகைத்தாள்: “ஆம், மனைவியாகவில்லை; ஆசைநாயகியாக இரண்டாண்டு காலம் அவனுடன் தனித்து வாழ்ந்தாய்! மானம் இழந்தவளே! உனக்கு வாய் திறந்து பேசவும் நா எழுகிறதே?” என்று அருவருப்பைச் சிந்திவிட்டுத் திரும்பி நடந்தாள் அவள்.

காலையில் வானவியின் இழிந்துரையால் மதுராந்தகி எத்தனை துயரடைந்தாளோ அதற்கு இப்போது இரண்டத்தனை அடைந்தாள் வானவி. ஆம், சோழ அரசியல் சதுரங்கத்தில் அவளை ஒரு காயாக வைத்து விளையாடி விட்டார் காலஞ்சென்ற இராசேந்திர சோழ மன்னர். வானவியோ, விக்கிரமாதித்தனோ, பாதாளச் சிறையில் வாழ்ந்த காலையில் உடற் காதல் கொண்ட உன்மத்தர்களாகி விடவில்லை. இருந்தாலும் காதலர்களான இளம் ஆடவனும் பெண்ணும் பிறர் கண்களில் படாமல் தனித்து வாழ்ந்தார்கள் என்றால் உலகம் அவர்களை உடல் தொடர்பு கொள்ளாதவர்களாகக் கருதுமா? கருதாது என்பது தெரிந்திருந்தும், ‘சிறை மீண்டு வந்த தங்களுக்குத் திருமணத்தை நிகழ்த்தி வைக்காது, முறையான திருமணம் நடக்க வேண்டுமென்று தன் காதலனை நாட்டுக்கு விரட்டிவிட்டார் அந்தப் பாழாய்ப்போன பெரியப்பா. அவர் முறைபடி திருமணம் பேச வருவதற்குள் பெரியப்பா காலமாகி விட்டார். தன் தந்தையோ மகளின் வாழ்வு பாழாவதைக்கூடச் சிந்திக்காமல் மணம் பேச வந்தவரைப் பழித்துத் திருப்பியனுப்பி விட்டார். இவ்வளவும் நடந்திருக்கையில், இந்த மதுராந்தகி மட்டும் என்ன? நாடு முழுவதுமே தன்னைச் சற்று இழிவாகத்தானே கருதியிருக்கும்?’

இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றிய பிறகு வானவிக்கு, தான் மதுராந்தகியைவிட வாழ்க்கை நிலையில் பன்மடங்கு கீழே இருக்கிறோம் என்ற அவமான உணர்ச்சி மேலிட்டது. இத்தனை காலம் சும்மா இருந்தது போல் இனி இருக்கலாகாது; இந்தச் சோழ நாடு எப்படியேனும் நாசமாய்ப் போகட்டும்; நாம் நம் காதலருடன் இரகசியத் தொடர்பு கொண்டு, மெல்ல இங்கிருந்து நழுவிவிட வேண்டும் என்ற துணிவு பிறந்தது.

அக்காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டாரின் ஒற்றர்கள் மாறுவேடங்களில் திரிந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய நோக்கம், தங்கள் நாட்டுக்கு எதிராக இங்கே ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து அவை பற்றி உடனுக்குடனே தகவலனுப்புவது. இப்பணிக்காக அவர்கள் உயிராபத்தான செயல்களில் கூட ஈடுபடுவதுண்டு. பல்வேறு வேடங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று செய்திகளை அறிய முயலுவதுண்டு. அவ்வாறு ஒரு சமயம் குந்தள ஒற்றன் ஒருவன் சேரநாட்டுச் சல்லாத் துணி வர்த்தகனாக சோழகேரளன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். சல்லாத் துணி என்பது அக்காலத்தில் முதியோர் அணிய விரும்பாத மிக மென்மையான ஒருவகைத் துணி. ஆதலால் பட்டத்தரசியான அருமொழி நங்கை அவற்றில் நாட்டம் கொள்ளவில்லை. “உனக்கு ஏதேனும் பிடித்திருந்தால் வாங்கிக்கொள், மகளே,” என்று அவள் வானவியிடம் கூறிவிட்டு அந்தப்புரத்துக்குச் சென்றுவிட்டாள்.

வானவி தனக்கு விருப்பமான சில துணிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் விலைக்குரிய பொற்காசுகளை அந்த வர்த்தகனிடம் கொடுத்தாள். அதை அவன் கைநீட்டி வாங்கியபோது, வானவியின் கூரிய விழிகள், வர்த்தகனின் வலது புயத்தில் பச்சை குத்தப்பட்டிருந்த சில எழுத்துக்களைக் கண்டுவிட்டன. அவை தெலுங்கு மொழியில் இருக்கவே அவளுக்குச் சட்டென, ‘இவன் ஒருகால் குந்தள நாட்டு ஒற்றனாக இருப்பானோ?’ என்ற ஐயம் ஏற்பட்டது. எனவே, புறப்பட இருந்த அந்த வர்த்தகனை அவள் நிறுத்தி அவனிடம் பக்குவமாகப் பேச்சுக் கொடுத்தாள். வானவி தங்கள் இளவரசர் விக்கிரமாதித்தரின் காதலி என்பதை அந்த ஒற்றன் அறிவானாதலால், அங்கே தாங்கள் இருவரும் மட்டுமே இருக்கிறோம் என்ற மிதப்பில் தன்னைக் காட்டிக் கொண்டான். உடனே வானவிக்கு அவன் மூலம் காதலனுக்கு ஓர் ஓலை அனுப்பலாமென்ற நினைவு தோன்றியது. அவ்வாறே அன்று அவள் அவனைத் தன் விடுதிக்கு அழைத்துச் சென்று விக்கிரமாதித்தனுக்கு ஓலை எழுதிக் கொடுத்தனுப்பினாள். வந்தவன் குந்தள ஒற்றன் என்பதோ, அவனிடம் தான் ஓலை கொடுத்து அனுப்பியதோ யாருக்குமே தெரியாது என்றுதான் வானவி நினைத்திருந்தாள், ஆனால் அவற்றினையெல்லாம் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அவள் வேறுயாருமல்ல; மதுராந்தகிதான்!

சல்லாத் துணி வர்த்தகனின் வேடத்தில் வந்த குந்தள ஒற்றனிடம் வானவி ஓலை கொடுத்து அனுப்பியதைக் கண்ட பிறகு மதுராந்தகி என்ன செய்தாள்? அவள் அப்போது சோழகேரளன் அரண்மனைக்கு எதற்காக வந்தாள்? இவ்விவரங்களைத் தெரிந்து கொள்ளுமுன், நாம் இப்போது வேங்கி நாட்டின் நிலையச் சிறிது தெரிந்து கொள்வோம்.

கோதாவரி-கிருஷ்ணை ஆறுகளுக்கு உள்ளடங்கிய பிரதேசமே அன்று வேங்கி நாடாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் அதைத்தான் ஆந்திரநாடு என்றும் அழைத்தனர். பிரபல சீன யாத்ரீகர் யுவான் – சுவாங் அதனை *‘விங்கில நாடு’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கோதாவரி மாவட்டத்தில் எல்லூருக்கு வடக்கே வேகி என்றும், பெத்த வேகி என்றும் இன்று அழைக்கப்படும் கிராமந்தான் அன்று புகழ்பெற்ற வேங்கி நகராக விளங்கியது.

(*வாட்டர்ஸ் எழுதிய யுவான்சுவாங் நூல்-இரண்டாம் பாகம். பக்கம்-210)
(**Indian Antiquary Vol.XX-பக்கம் 95.)

கல்யாணபுரத்தில் ஆட்சி செலுத்தி வந்த மேலைச் சளுக்கர்களின் தாயாதியரே கீழைச் சளுக்கர்கள் என்று முன்பு நாம் கண்டிருக்கிறோம். இவர்கள் புத்தரின் வமிசத்தவர்கள் என்று செல்லூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. பல தலைமுறைகளுக்குப் பிறகு கீர்த்திவர்மன் என்ற சளுக்கிய மன்னருக்கு மகனாகப் பிறந்த குப்ஜ-விஷ்ணுவர்த்தனன் என்ற மன்னனே கீழைச் சளுக்கிய வமிசத்தைத் தோற்றுவித்தவன். கீழைச் சளுக்கிய நாடு நிறுவப்பட்ட ஆண்டு கி.பி. 626-16.

ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் கீழைச்சளுக்கிய மன்னர் குலத்துக்கும் சோழ மன்னர் குலத்துக்கும் இடையே மணவினைப் பிணைப்பு ஏற்பட்டது. கி.பி. 1013-14ல், சோழ நாட்டை இராசராச சோழதேவர் ஆண்டுவந்த போது, கீழைச் சளுக்கிய இளவரசர்களான சக்திவர்மன், விமலாதித்தன் என்பார், தெலுங்குச் சோழனான சடாசோட வீமன் என்பவனிடம் தங்கள் நாட்டை இழந்துவிட்டுச் சோழ மண்டலத்தில் அடைகலம் புகுந்தனர். அப்போது இராசராச சோழனின் புதல்வி குந்தவை அந்த இளவரசர்களில் ஒருவனான விமலாதித்தன்பால் காதல் கொண்டாள். அதை அறிந்த சோழதேவர் அவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்து, தெலுங்கு வீமனுடன் போரிட்டு அவனை வென்று கீழைச் சளுக்கிய நாட்டை இச்சகோதரர்களுக்கு மீட்டுக் கொடுத்தார். அது தொட்டு வேங்கி நாடு சோழ நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட நாடாகவே இலங்கி வந்தது. இந்தக் குந்தவைக்கும் விமலாதித்தனுக்கும் பிறந்தவர் தான் நமது குலோத்துங்கனின் தந்தை இராசராச நரேந்திரர் என்று நாம் முன்பே கண்டிருக்கிறோம்.

இராசராச நரேந்திரர் ஏறக்குறைய நாற்பதிரண்டு ஆண்டுகள் வேங்கியை ஆண்டார். விமாலாதித்தனுக்கு மாதவம்மா என்று மற்றொரு மனைவியும் இருந்தனள். அவளுக்குப் பிறந்தவனே விசயாதித்தன். இராசராச நரேந்திரர் வேங்கி மன்னராக முடிசூட்டப்பட்டது தொட்டே அவருக்கும் விசயாதித்தனுக்கும் வேங்கி அரியணை காரணமாகப் பகைமை ஏற்பட்டது. கி.பி.1030ல் விசயாதித்தன் வேங்கி நாட்டின் கீழைக் கோடியிலிருந்த சிறு பகுதி ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டு, அங்கே ஓர் அரசை நிறுவி, மேலைச் சளுக்கர்களின் உதவியுடன், வேங்கி முழுவதற்குமே மன்னனாகி விட இடைவிடாது முயன்று வந்தான். ஆனால் சோழர்களின் பக்கபலம் இருந்த வரையில் இராசராச நரேந்திரரை அரியணையிலிருந்து அசைக்க முடியவில்லை. இறுதியில் *கி.பி.1062-63ல், இராசராச நரேந்திரரின் மறைவுக்குப் பிறகு அந்தச் சோழர்களின் ஆணைப்படிதான் அவன் வேங்கி நாடு முழுவதற்கும் அரசனாக முடிந்தது.

(*விசயாதித்தன் வேங்கி மன்னனான காலத்தை 1060-61, 1061-62, 1062-63 என்று ஆதார நூல்கள் வெவ்வேறு விதமாகக் குறிப்பிடுகின்றன. இக்கதையைப் பற்றியவரை நான் 1062-63 என்றே எடுத்துக் கொண்டுள்ளேன்.)

1018-19ல், விமலாதித்தர் இறந்தபோது, விசயாதித்தன் இளங்கோப் பருவத்தில் இருந்ததாக ஆதார நூல்கள் கூறுகின்றன. அந்த இளங்கோப் பருவத்தைப் பதினாறு வயதுக்கு மேற்பட்ட பிராயம் என்று கொண்டால், 1062-63ல் வேங்கிமன்னனான போது விசயாதித்தனுக்கு அறுபது வயதுக்கு அதிகமாகவே ஆகியிருக்க வேண்டும். தான் முதுமை அடைந்துவிட்டதன் காரணமாகவோ தெரியாது, வாழ்நாளெல்லாம் ஏங்கி, முயற்சி செய்து அடையப்பெற்ற அரியணையில் அவன் முழுமையாக ஓராண்டுகூட அமர்ந்து ஆட்சி செலுத்தவில்லை. அதற்குள்ளாகவே, தன் மைந்தன் இரண்டாம் சக்திவர்மனுக்கு நாட்டை முடிசூட்டி வைத்து விட்டான்.

விசயாதித்தைன் இவ்வாறு செய்ததற்கு வேறோர் அந்தரங்கக் காரணமும் இருந்தது. அண்மைக்காலம் வரையில் அவனுக்கு இந்த அரியணையைக் கிட்டச் செய்யச் சோழர்களுடன் பல போர்களில் ஈடுபட்டுப் பலவிதக் கஷ்ட- நஷ்டங்களுக்கு உள்ளானவர்கள் குந்தளத்தார். ஆனால் விசயாதித்தனோ, சோழர்கள் அந்த அரியணையைத் தனக்குத் தருவதாகக் கூறியதும் குந்தளத்தாரை உதறிவிட்டுச் சோழர்களின் கீழ் ஒரு சிற்றரசனாக வேங்கியை ஆளத் துவங்கி விட்டான். இது குந்தளத்தாருக்கு கொதிப்பை ஏற்படுத்தும்; அவர்கள் விரைவில் வேங்கி மீது படையெடுத்து வருவார்கள் என்பதை விசயாதித்தன் எதிர்பார்த்தே இருந்தான். அவனுக்குத் தனது போராற்றல் மீது துளியளவும் நம்பிக்கை கிடையாது. அதோடு தன்னைவிட முதியோனான ஆகவமல்லன் மட்டுமின்றி, அவனுடைய மைந்தர்களாகிய சோமேசுவரன், விக்கிரமாதித்தன், சயசிம்மன் ஆகிய மூவருங்கூடப் போர்க் கலைத்துறையில் வல்ல ஆண் சிங்கங்கள் என்பதையும் அவன் அறிவான், ஆதலால் அவர்கள் திடீரென வேங்கி மீது படையெடுத்தால் சோழர்களின் உதவி வரும்வரையில் கூடத் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவன் எண்ணினான். வேங்கி நாடு குந்தளத்தார் கைக்குப் போய்விடாதவாறு, சோழப்படைகள் உதவிக்கு வரும் வரையில் போரை நீடிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவன் தன் மகன் சக்திவர்மன் ஒருவனே என்பதையும் விசயாதித்தன் உணர்ந்திருந்தான்.

ஆனால் மகனின் உதவி தந்தைக்குக் கிடைப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. நம் குலோத்துங்கனைப்போல் சக்திவர்மன் சிறுவயதிலிருந்தே கல்யாணபுரத்தில் தங்கிப் போர்க்கலை பயின்றவன். ஆதலால் குலோத்துங்கனுக்கு எவ்வாறு சோழ நாட்டிடம் பற்று ஏற்பட்டிருந்ததோ, அவ்வாறு சக்திவர்மனுக்கும் குந்தள நாட்டின் மீது குன்றாத பற்று ஏற்பட்டிருந்தது. சோழர்களின் கீழ் சிற்றரசனாக இருக்க இணங்கித் தன் தந்தை வேங்கியைப் பெற்றதை அவன் சிறிதும் ஒப்பவில்லை. என்னவோ தந்தையைப் பின்பற்றி வந்தானேயன்றி, குலோத்துங்கன் கிழானடிகளுக்கு ஆணையிட்டுக் கொடுத்தது போல், இவனும் குந்தள நாட்டுக்கு எதிராக வாளெடுக்க முடியாது என்று தன் தந்தையிடம் கூறி, எந்நிலையிலும் தன்னை அந்தத் துரோகச் செயலைச் செய்ய வற்புறுத்துவதில்லை என்ற வாக்குறுதியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட பிறகுதான் வேங்கிக்கு வந்தான்.

இதுதான் சிக்கல்; இதற்காகத்தான் விசயாதித்தன் திணறினான். ஆயினும் கடைசியில் அவன் இதற்கு ஒரு வழி கண்டான். அந்த வழிப்படித்தான், மகனை உடனே வேங்கி மன்னனாக்கினான். ‘ஆமாம், இனி நாடே அவனுடையதாகி விட்டது. அது பறிபோவதை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?’ என்று நினைத்தான் அந்த அசட்டுத் தந்தை.

ஆனால் சக்திவர்மன் வேங்கி அரசை ஏற்றுக்கொண்டதன் நோக்கமே வேறு. அவன் அதைக் குந்தளத்தாருக்கு அடங்கிய நாடாகச் செய்து விடவேண்டுமென்ற நோக்கத்துடனே ஏற்றுக் கொண்டான். எனவே, தனது முடிசூட்டு விழா முடிந்ததுமே அவன் குந்தள மன்னன் ஆகவமல்லனுக்கு ரகசிய செய்தி ஒன்று அனுப்பினான், “இனி வேங்கி, சோழ நாட்டின் பகுதியாக இருக்க முடியாது; இருக்கக் கூடாது. அது குந்தள நாட்டின் பகுதியாகத்தான் இருக்க வேண்டும். என்னை ஆளாக்கிவிட்ட நாட்டுக்கு அம்மட்டு நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் என் நாட்டை நானே உங்களிடம் ஒப்படைப்பதற்குக் குந்தகமாகச் சோழர்கள் இங்கே தங்களது சிறிய படை ஒன்றை நிறுத்தியுள்ளார்கள். வேங்கியின் சிறிய படையும் சோழப்படைக்கு அடங்கியதாகவே இருக்கிறது. ஆதலால் நீங்கள் வேங்கியின் மீது ஒரு திடீர்ப் படையெடுப்புச் செய்து அந்தச் சோழப்படையை அழித்துவிட்டு இந்நாட்டை உங்களதாக்கிக்கொள்ள வேண்டும்.”

இதுதான் சக்திவர்மன் அனுப்பிய செய்தியின் சாரம். இச்செய்தி கிடைத்ததுமே, குந்தள மன்னன் ஆகவமல்லன் செயற்படத் தொடங்கினான். ஆனால் கல்யாணபுரத்தில் அப்போது பெரும் அளவில் படைகள் இருக்கவில்லை. தலைநகரில் இருந்த படைகளையெல்லாம் ஆகவமல்லன் தன் மகன் விக்கிரமாதித்தன் சோழ நாட்டின் பகுதியான கங்கபாடியைக் கைப்பற்றிக்கொள்ள முயன்றபோது அதற்கு உதவுவதற்காக நுளம்பாடிக்கு அனுப்பியிருந்தான். நுளம்பாடிக்கு அருகில் வனவாசியில் இருந்த அவர்களது மாதாண்ட நாயகன் சாமுண்டராயனும் கங்கபாடிப் படையெடுப்புக்கு உதவுவதற்காகச் சென்றிருந்தான். எனவே ஆகவமல்லன் தானே நுளம்பாடிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்த படைகளையெல்லாம் சாமுண்டராயனின் தலைமையில் வேங்கிக்கு அனுப்பிவிட்டு வந்தான்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் மிக இரகசியமாகச் செய்யப்பட்டன. ஏனென்றால், இதற்குமுன் அவர்கள் வேங்கிப் படையெடுப்புச் செய்த போதெல்லாம் சோழ நாட்டிலிருந்து பெரும் படை உதவிக்கு வந்து அவர்களைத் தோல்வியுறச் செய்தது. இத்தடவையும் அம்மாதிரி நிகழக்கூடாடது என்றே ஆகவமல்லன் நேரில் வந்து படையெடுப்பு ஏற்பாடுகளைக் காதும் காதும் வைத்தாற்போல் செய்துவிட்டுப் போனான்.

ஆனால் இத்தடவையும் அவர்கள் முயற்சி விழலுக்கு இறைத்த நீராகத்தான் ஆயிற்று. இந்த ரகசியப் படையெடுப்புச் செய்தி உரிய காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தை எட்டிவிட்டது. ஆனால் அது சோழ ஒற்றர் மூலமோ அல்லது, வேங்கி ஒற்றர் வாயிலாகவோ எட்டவில்லை; ஆகவமல்லனின் அன்புக்கு உகந்த மகன் விக்கிரமாதித்தன் மூலந்தான் எட்டியது.

ஆம், அரசியலில் காதல் கலக்கும் போதெல்லாம், அது குடம் பாலில் துளி விடம் கலந்ததற்கு ஒப்பாகத்தான் ஆகிவிடுகிறது. அன்று முதல் இன்று வரையிலுள்ள சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு எண்ணற்ற சான்றுகளைக் காணலாம். சாமுண்டராயனை வேங்கிக்கு அனுப்பிவிட்டு ஆகவமல்லன் கல்யாணபுரத்துக்குத் திரும்பிய அன்றுதான், சோழநாட்டில் சுற்றிக்கொண்டிருந்த ஒற்றன் வானவியின் ஓலையுடன் விக்கிரமாதித்தனிடம் வந்து சேர்ந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 20மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 20

இரண்டாம் பாகம்   அத்தியாயம் – 10. கைக்கு எட்டியது        வீரராசேந்திரரின் தலைமையில் கூடல் சங்கமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழநாட்டின் பெரும்படை, இரண்டு நாள் பயணத்துக்குப் பின் ஒரு மாலையில் வழியில் இருந்த ஆறு ஒன்றன் கரையில் இரவுத் தங்கலுக்காகத்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 10மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 10

அத்தியாயம் – 10. ‘காலம் வரக் காத்திருப்பேன்!’        சோழதேவர் வேங்கி நாட்டிலிருந்து இரண்டாவதாக வந்த ஓலையைப் படித்துவிட்டு ஏதோ முணு முணுத்ததும், அருகில் அமர்ந்திருந்த இளையதேவர் வீரராசேந்திரர் எழுந்து அவரிடம் சென்று, “என்ன அண்ணா?” என்று வினவினார். “சூழ்ச்சி! குந்தளத்தானின்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 14மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 14

இரண்டாம் பாகம்   அத்தியாயம் – 4. குடம் பாலில் துளி விஷம்        மதுராந்தகி இயற்கையாகவே பேரழகு வாய்ந்தவள். இருந்தாலும், இயற்கை அழகு வாய்ந்தவர்களும் செயற்கைப் பொருள்கள் மூலம் தங்கள் அழகுக்கு அழகு செய்துகொள்ளாமல் இருப்பதில்லையே! குறிப்பாக, வண்ண வண்ண