Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12

இரண்டாம் பாகம்
அத்தியாயம் – 2. விடுதலையும், அதன் பின் வந்த விளைவும்!

 

     வானவியையும், குந்தள விக்கிரமாதித்தனையும் கங்கை கொண்ட சோழப்புரத்துப் பாதாளச் சிறையிலே பதுக்கி வைத்துக்கொண்டு காலமெனும் புள்ளினம் இருமுறை சிறகு உதிர்த்து விட்டது. வெளி உலக நிகழ்ச்சிகள் தெரியாமல், உண்பதும் உறங்குவதும், உல்லாசமாகப் பேசிச் சிரித்து விளையாடுவதுமாய் அக்காதலர்கள் அந்தப் பாதாள உலகிலே நாட்களைத் தள்ளினார்கள். வெளியே மதுராந்தகியும் குலோத்துங்கனும் மணவினையில் ஈடுபட்டு, அவர்களும் உவகையுடன்தான் காலம் தள்ளி வந்தார்கள். அன்றைய நிலையில் அவ்விரு பெண்களும் தங்கள் ஆணைகளை மறந்து விட்டவர்கள் போலவே காணப்பட்டார்கள். அரசியல் என்பதுதான் கொந்தளிக்கும் கடல் ஆயிற்றே… அதிலே எப்பொழுது எப்படிச் சூறாவளி தோன்றும் என்பதை யார் அறிவார்? இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சோழநாட்டின் அரசியலிலே அடுக்கு அடுக்காகச் சில நிகழ்ச்சிகள் நடந்தன. அவை இப்பெண்களின் உள்ளத்திலே உறங்கிக் கொண்டிருந்த ஆணை நினைவைத் தட்டி எழுப்பிவிட்டன.

அந்த நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாக அமைந்தது வேங்கி மன்னர் இராச நரேந்திரன் மறைவு. ஒரு தடவை தம்மை அணுக முயன்ற காலதேவனை விரட்டி அடித்துவிட்ட அவரை இத்தடவை அவன் பலமாகவே பற்றி இழுத்துச் சென்றுவிட்டான். எடுத்த எடுப்பிலே கடுமையான நோய்க்குள்ளான அவர் நான்கே நாட்களில் உலகிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டுவிட்டார்.

மதுராந்தகிக்கும் குலோத்துங்கனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து, மருமகனைச் சோழநாட்டின் சிறிய படை ஒன்றின் தலைவனாக்கிய உடனேயே சோழதேவர் விசயாதித்தனுக்கு ஓர் இரகசிய ஓலை அனுப்பினார். அவன் வேங்கி நாட்டைச் சோழ நாட்டுக்கு உட்பட்ட நாடாக ஆண்டுவர இணங்கினால் தமது மைதுனரின் மறைவுக்குப் பிறகு அவனையே அந்நாட்டின் மகிபனாக்குவதாக அவர் தமது திட்டத்தை அவ்வோலையில் விளக்கியிருந்தார். சோழதேவர் எதிர்பார்தவாரே விசயாதித்தன் உடனே அதற்கு இணக்கம் தெரிவித்து மறு ஓலை அனுப்பியிருந்தான். எனவே நரேந்திரருக்கு பிறகு அவனை வேங்கி அரசுக் கட்டிலில் அமர்த்தி விடுமாறு அந்நாட்டின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த சோழப் படைத் தலைவருக்கு இரகசியத் தாக்கீதும் சென்றிருந்தது. ஆதலால் இப்பொழுது நரேந்திர தேவர் காலமானதும், எவ்விதத் தொல்லையுமின்றி விசயாதித்தன் வேங்கி நாட்டில் முறையாகப் பட்டம் சூடிக் கொண்டான்.

ஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு குந்தள வேந்தன் ஆகவமல்லன் வாளா இருந்தானா என்றால், ‘ஆம்’ என்றே சரித்திரம் கூறும். ஆயினும் அவன் அப்படி வாளா இருந்ததற்கு இரண்டு முக்கியமான காரணம் – அவனுடைய கண்ணுக்குக் கண்ணான மகன் விக்கிரமாதித்தன் சோழர்களால் சிறைப்படுத்தப் பட்டிருந்தான். ‘வேங்கிக்கும், சோழ மண்டலத்துக்கும் இடையேயுள்ள அரசியல் பிணைப்பு குலையாதிருப்பதற்கு அவன் ஒரு பிணையாகச் சிறையிடப்பட்டிருக்கிறான். விசயாதித்தன் குந்தள உறவை முறித்துக் கொண்டு சோழர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவனாக வேங்கி அரியணையில் ஏறும் வரையில் அவனுக்கு விடுதலை கிடையாது’ என்ற வரையில் ஆகவமல்லனின் ஒற்றர்கள் அவனுக்குச் செய்தி கொணர்ந்திருந்தார்கள். ஆதலால் மகனின் விடுதலைக்காக வேங்கி நாடு மீண்டும் சோழர் பக்கமே சாய்வதை அவன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

இரண்டாவது காரணம் இன்னும் முக்கியமானது. முடக்காற்றுப் போர் குந்தளப்படை முழுவதையுமே விழுங்கி விட்டதால், முன்பே பொருளாதார நிலையில் சரிந்திருந்த ஆகவமல்லன் அந்நிலையைச் சீர் செய்த பிறகே புதுப்படை ஒன்றைத் திரட்ட முடியும் என்ற நிலையில் இருந்தான். தொடர்ந்து நடத்திய பல போர்களினால் நாட்டில் பஞ்சமும் வறட்சியும் மிகுந்து விட்டதால் குடிமக்களைக் கசக்கிப் பிழியவும் வழியில்லாமல் இருந்தது. ஆதலால் இன்னும் சில காலம் எந்த விதமான போரிலும் ஈடுபடாமல் இருந்தால்தான் நாட்டையே அழிவிலிருந்து மீட்க முடியும் என்பதை உணர்ந்து, தனது தாயாதிகளின் நாடு மீண்டும் சோழர்களின் கைக்கே போனபோது, அவன் உள்ளக் கொதிப்போடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சொன்ன சொல்லை நிறைவேற்றத் தவறாதவர்கள் சோழர்கள். அன்று வானவிக்கு அனுப்பிய ஓலைப்படி, விசயாதித்தன் தங்களுக்கு உட்பட்டவனாக வேங்கி அரசை ஏற்றுக் கொண்டதும், சோழதேவர் வானவியையும் விக்கிரமாதித்தனையும் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்து விட்டார். ஆனால் இங்கேயும் அவர் தமது அரசியல் தந்திரம் ஒன்றைக் கையாளாமல் இல்லை. இரண்டாண்டு காலம் காதலனுடன் தனித்து வாழ்ந்துவிட்ட வானவியை விடுதலைக்குப் பின்னர் அவர் அவனுக்கே மணமுடித்து வைத்துக் குந்தள நாட்டுக்கு அனுப்பிவிடவில்லை. “இதுகாறும் பகைவர்களாக இருந்த இரு அரச குடும்பத்தினரிடையே புது நட்பையும், புத்துறவையும் ஏற்படுத்த இருக்கும் திருமணம் இது. ஆதலால் இது முறைப்படித்தான் நடைபெற வேண்டும். கல்யாணபுரம் சேர்ந்து உன் தந்தையை எங்களுக்குத் திருமண ஓலை அனுப்பச்செய், என்று உரைத்து விக்கிரமாதித்தனை அனுப்பிவிட்டு வானவியை இரகசியக் கண்காணிப்புடன் சோழ நாட்டிலேயே நிறுத்திக்கொண்டார்.

பகைவர்கள் என்றென்றும் பகைவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த திருமணத்தின் மூலம் குந்தள நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே நட்புறவு நிலவுமானால் நிலவட்டுமே என்பது சோழதேவர் இப்படிச் செய்ததற்கு ஓர் அரசியல் காரணம். மற்றோர் அரசியல் காரணம், ஒருகால் ஆகவமல்லன் இன்னும் நம் பகைவனாகவே இருக்க விரும்பினால் திருமண ஓலை அனுப்ப மாட்டான். அதே சமயம் இரண்டு ஆண்டுகள் இனித்து வாழ்ந்த சுவை இளைஞனான விக்கிரமாதித்தனை அடிக்கடி வானவியை நாடி வரச் செய்யும். கவர்ச்சி நம்மிடம் இருந்தால் அவனை நம் கைப்பாவையாக ஆட்டி வைத்துக் கொண்டிருக்கலாம் என்பது அவர் கொண்டிருந்த கருத்து.

இறுதியில் சோழதேவரின் இரண்டாவது கருத்துத்தான் நிலைத்தது. விக்கிரமாதித்தன் விடுதலை பெற்றுத் தன் நாடு சேர்ந்து ஏறக்குறைய ஓராண்டு ஆகியும் அவனுக்குச் சோழ இளவரசி வானவியைத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டு ஆகவமல்லன் திருமண ஓலை அனுப்பவே இல்லை. ‘அனுப்பாவிடில் என்ன? அவன் மகனைத் தூண்டில் போட்டு இழுக்கும் கவர்ச்சிதான் நம்மிடம் இருக்கிறதே!’ என்று கவலையற்று இருந்தார் சோழதேவர். ஆனால்…?

மனிதர் திட்டங்கள் வகுக்கலாம்; அவற்றை நிறைவேற்ற முயற்சிகளும் செய்யலாம். ஆனால் அம்முயற்சிகளுக்கு வெற்றியையோ, தோல்வியையோ அளிப்பவன் இறைவன் அல்லவா? மானுடரின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் ஒரு நோக்கம் வெகுத்துக் கொண்டிருப்பானே, அதன்றோ இறுதியில் நடைபெறும்? அவ்வாறேதான் இங்கும் நடை பெற்றது. திடீரென்று ஒருநாள் சாவு சோழதேவரைக் கவ்விக்கொண்டு போய், அவர் என்ன நோக்கத்தோடு வானவியை விக்கிரமாதித்தனுக்கு மணமுடித்து வைக்காமல் இங்கே நிறுத்திக்கொண்டார் என்பதை எவருக்குமே தெரியாமற் செய்துவிட்டது!

சோழதேவரின் மறைவுக்குப் பின்னர், முன்பே இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருந்த வீரராசேந்திரர் மகுடாபிஷேகம் செய்து கொண்டார். அந்த முடிசூட்டு விழாவின் போது, விக்கிரமாதித்தன் ஏராளமான பரிசப் பொறுள்களுடனும், தன் தந்தை கைப்பட வரைந்த திருமண ஓலையுடனும் வானவியைப் ‘பெண் கேட்க’ அரசர்குரிய விருதுகளோடு வந்தான். அவன் இந்த ஓராண்டு காலமாக இங்கு வராதிருந்ததற்கும் காரணம் இருந்தது. முன்பே நாம் உரைத்தவாறு குந்தளநாடு அப்போது சீர்கெட்ட நிலையில் இருந்தது. தவிர, விக்கிரமாதித்தனின் மூத்த சகோதரனான (இரண்டாம்) சோமேசுவரன், தந்தை ஆகவமல்லருடன் சிறிது பிணக்குக் கொண்டு உள்நாட்டுக் கலகம் ஒன்றை ஏற்படுத்தும் அழிவுப் பாதையிலே சென்று கொண்டிருந்தான். அவற்றையெல்லம் ஒருவாறு சீர்செய்யுமுன் தன் திருமணத்தைப் பற்றி விக்கிரமாதித்தன் தந்தையிடம் எவ்வாறு உரைக்க முடியும்? நிலைமை அண்மையில்தான் ஒருவாறு சீர்திருந்தியது. சோமேசுவரன் அழிவுப் பாதையில் போகாமல் விலகி வந்தான். நாடும் ஓரளவு சுபிட்சம் பெற்றது. அதன் பிறகு தந்தையிடம் தன் காதலைப் பற்றிக்கூறி, அவருடைய திருமண ஓலையைப் பெற்றுக்கொண்டு சோழ நாட்டுக்கு வந்தான் விக்கிரமாதித்தன்.

ஆனால் இவையெல்லாம் வீரராசேந்திரருக்கு எவ்வாறு தெரியும்? அவருடைய மனப்போக்கே சற்று விநோதமானது. அவருக்குத் தமது மூத்த சகோதரர் கூறுவதுதான் தெய்வ வாக்கு; அவர் செய்வதுதான் நியாயமான செயல். இல்லாவிட்டால், இரண்டாண்டுகள் ஓர் ஆடவனுடன் தனியிடத்தில் வாழ்ந்துவிட்ட தமது மகளை அவனுக்கு மணமுடித்து வைத்து அனுப்பாமல் இங்கேயே நிறுத்தி வைத்துக் கொண்டதைக் கண்டு வாய் திறவாது இருந்திருப்பாரா? அப்பொழுது வீரராசேந்திரர் முடிவுறுத்திக்கொண்டது இதுதான்: ‘அரசியல் காரணங்களுக்காக வானவி விக்கிரமாதித்தனின் மனைவி ஆகக்கூடாது என்பது அண்ணாவின் எண்ணம்போலும்; அதனால் தான் அவர் இவர்களைப் பிரித்து வைத்துவிட்டார்!’

இத்தகையா கருத்துக் கொண்டிருந்ததால், ஆகவமல்லனின் திருமண ஓலையை வீரராசேந்திரர் ஏற்று கொள்ளவில்லை. “என் மகளை என் நாட்டின் பகைவரின் மகனுக்கு மணம் செய்து கொடேன்!” என்று முடிவாகக் கூறிவிட்டார். வானவியின் இறைஞ்சல்களையும், விக்கிரமாதித்தனின் வினயமான விளக்கங்களையும் அவர் கவனம் செய்யவே இல்லை. விக்கிரமாதித்தன் ஏமாற்றத்துடனும், அவமான உணர்ச்சியுடனும், உள்ளக் கொதிப்புடனும் வந்த வழியே திரும்பினான்.

அப்பொழுது விக்கிரமாதித்தன், சோழ நாட்டின் எல்லையைத் தொட்டவாறு இருந்த வனவாசி, நுளம்பாடி போன்ற குந்தள நாட்டின் பகுதிகள் சிலவற்றின் எல்லைக் காவலனாக ஆகவமல்லனால் நியமிக்கப் பட்டிருந்தான். இப்பகுதிகளை அடைந்த விக்கிரமாதித்தன் தனக்கு விளைவிக்கப்பட்ட அவமானத்தின் காரணமாக, தனக்கு அண்மையில் சோழநாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கங்கபாடி நாட்டைக் கைப்பற்றிக் கொள்ள முயன்றான். *இச்செய்தி அறிந்த வீரராசேநிதிரர் உடனே பெரும்படை ஒன்றுடன் அங்கே விரைந்து சென்று விக்கிரமாதித்தனை வென்று, அவனையும் அவனது படையையும் கங்கபாடிக் களத்திலிருந்து துங்கபத்திரை ஆற்றுக்கு அப்பால் துரத்திவிட்டுத் திரும்பினார்.

(*S.I.I.VOL.III, NO.20)

ஆனால் இது மேலைச் சளுக்கர்கள் மீண்டும் சோழர்களுக்குத் தொல்லை கொடுப்பதற்கு ஒரு துவக்கமாகவே ஆயிற்று. வீரராசேந்திரர் நாடு திரும்பிய ஒரு திங்கள் ஆகுமுன்பே, வேங்கியிலிருந்து திடுக்கிடும் செய்தி ஒன்று வந்தது:

“வேங்கி நாட்டைத் தங்கள் வசம் ஆக்கிக் கொள்வதற்கு மீண்டும் குந்தளத்தார் முயற்சி செய்யத் துவங்கியுள்ளனர்! வேங்கியை முற்றுகையிடும் பொருட்டு வனவாசியில் குந்தளத்தாரின் பிரதிநிதியாக இருந்த மாதண்ட நாயகன் சாமுண்டராயன் ஒரு பெரும் படையுடன் சென்று கொண்டிருக்கிறார்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 13

இரண்டாம் பாகம்   அத்தியாயம் – 3. வேங்கியில் நடந்த விஷமம்        “சோழ அரியணையில் உங்களுடன் அமரக் காலம் வரும்; அது வரையில் காத்திருப்பேன்!” என்றாள் மதுராந்தகி. “என் ஆணைகள் நிறைவேறி, அன்புக்குரிய உங்களோடு கல்யாணபுரத்தில் வாழ ஆயிரங்கோடி காலமானாலும்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 1மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 1

அத்தியாயம் – 1. வெற்றி வீரர்களுக்கு வரவேற்பு        அன்று கங்கை கொண்ட சோழபுரம் அல்லோல கல்லோலப்பட்டது. அதன் பல்வேறு பகுதிகளான *உட்கோட்டை, மளிகை மேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், கொல்லாபுரம், வீரசோழ நல்லூர், சுண்ணாம்புக்குழி, குருகை பாலப்பன் கோவில் ஆகியவை

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7

அத்தியாயம் – 7. மந்திராலோசனை        வேங்கியிலிருந்து வந்த தூதன் உடனே நாடு திரும்ப வேண்டுமென்று விடைபெற்றுச் சென்று விட்டான். எவ்வித அதிர்ச்சியும்மின்றி அச்செய்தியை அமைதியுடன் ஏற்று நின்ற குலோத்துங்கனுக்கும் சோழ தேவர் விடை கொடுத்து அனுப்பினார். அங்கு ஒரு தூணருகில்