Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39

அத்தியாயம் 39 – திருப்பதி யாத்திரை

திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு உலகத்திலே நாம் எங்கும் கேட்டறியாத ஓர் அபூர்வமான சபலம் இருந்து வருகிறது. தம்மிடம் வரும் பக்தர்களின் தலையை மொட்டையடித்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு திருப்தி. வேறே எங்கேயாவது மொட்டையடித்துக் கொண்டு வந்தால் பிரயோஜனமில்லை. அவருடைய சந்நிதியிலேயே மொட்டையடித்துக் கொண்டு தலைமயிரையும் அவ்விடமே தான் அர்ப்பணம் செய்யவேண்டும். சாதாரணமாய்க் குழந்தைகளை அப்படிப் பார்ப்பதிலேதான் அவருக்கு அத்தியந்த ஆசை. ஆனால் சில சமயம் மீசை முளைத்த, தலை நரைத்த பெரியவர்களுங் கூட அங்கே போனதும் கடவுளுக்கு நாம் குழந்தைகள் தானே என்ற எண்ணத்திலே தலையை மொட்டையடித்துக் கொண்டு விடுகிறார்கள். “சாமியாவது, பூதமாவது? அப்படி ஒரு சாமி இருந்தால், அவர் தான் என்னை வணங்கட்டுமே? நான் ஏன் அவரை வணங்க வேண்டும்?” என்று பேசும் பகுத்தறிவுப் பெரியவர்கள் கூடத் திருப்பதிக்குப் போனதும் பகுத்தறிவெல்லாம் பறந்துபோகத் தலையை மழுங்கச் சிரைத்துக் கொண்டு விடுகிறார்கள். கூந்தல் வளரும் தைலங்கள் தடவி அருமையாக வளர்த்த அளகபாரத்தை எத்தனையோ ஸ்திரீகள் அங்கே பறிகொடுத்து விட்டு வருகிறார்கள்.

அந்த வருஷம் கல்யாணியின் தகப்பனார் திருச்சிற்றம்பலம் பிள்ளைக்குக் குடும்பத்துடனே திருப்பதி போய் வர வேணுமென்ற விருப்பம் ஏற்பட்டது. தலை மொட்டையடிப்பதற்கு அவருடைய இளைய தாரத்தின் குழந்தைகள் ஏராளமாய் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளுக்குக் குடும்பத்திலே வேண்டுதலும் இருந்தது. கல்யாணி அவ்வளவு பெரிய சொத்துக்காரியா யிருக்கும் போது, செலவுக்குப் பணத்துக்குத்தான் என்ன குறைவு? திருப்பதிக்குப் போய் வந்து, விமரிசையாகக் ‘கம்ப சேர்வை’ நடத்தி, கூத்துவைக்க வேணுமென்றும் அவர் முடிவு செய்திருந்தார். கல்யாணியிடம் இதைப் பிரஸ்தாபித்தபோது, அவள் ஆவலுடன் தானும் வருவதாகத் தெரிவித்தாள்.

கல்யாணி பூங்குளத்துக்கு வந்து மூன்று மாதம் ஆயிற்று. ஆரம்பத்தில் முத்தையனைச் சந்தித்துப் பேசியதன் பயனாக அவளுடைய உள்ளத்தில் சிறிது அமைதி ஏற்பட்டிருந்தது. நாளாக ஆக அந்த அமைதி குன்றி, பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. “முத்தையன் ஏன் இன்னும் வரவில்லை? அவன் எங்கே போனான்? என்ன செய்கிறான்?” என்று அவள் உள்ளம் ஒவ்வொரு கணமும் கேட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பார்க்க வேணுமென்ற தாபத்தினால் அவளுடைய தாபம் மிதமிஞ்சிப் போகாத வண்ணம் ஒருவாறு ஆறுதல் அளித்து வந்தது அந்த நதிக்கரைப் பிரதேசந்தான். இந்த இரண்டு மூன்று மாத காலமாகக் கல்யாணி பழையபடி கொள்ளிடக்கரை வனதேவதையாக விளங்கினாள். தினந்தவறினாலும் அவள் நதிக்குக் குளிக்கப் போவது தவறுவதில்லை. அப்படிப் போகிறவள் திரும்பி வீட்டுக்கு வர அவசரப்படுவதுமில்லை. நெடுநேரம் காடுகளில் சுற்றிக் கொண்டிருப்பாள். அவள் கன்னிப் பருவத்தில் பழம் பறித்துத் தின்ற நாவல் மரம், இலந்தை மரம் இருக்குமிடமெல்லாம் இப்போதும் தேடிச் செல்வாள்; கிளைகளை உலுக்குவாள். உதிர்ந்த பழங்களை ஓடிஓடிப் பொறுக்கிச் சேர்ப்பாள். அப்போது முத்தையனுடைய ஞாபகம் வந்து விடும். அப்படியே தரையில் உட்கார்ந்து பகற்கனவில் ஆழ்ந்து விடுவாள். ஐயோ! தன்னை மட்டும் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்த மயமாக இருந்திருக்கும்?

தினம் ஒரு தடவை பாழடைந்த கோவிலுக்குச் சென்று பார்ப்பாள். ஒவ்வொரு நாளும், “இன்றைக்கு வந்திருப்பானோ?” என்ற அடங்காத ஆவலுடனே செல்வாள். படபடவென்று அடித்துக் கொள்ளும் மார்பை அமுக்கிப் பிடித்துக் கொண்டு போய்ப் பார்ப்பாள். முத்தையன் வழக்கமாய் உட்காரும் மேடை வெறியதாயிருக்கக் கண்டதும் அவள் நெஞ்சு துணுக்கமடையும். ஒரு வேளை தன்னை அலைக்கழிப்பதற்காகப் பக்கத்தில் எங்கேயாவது ஒளிந்திருப்பானோ என்று கூட நாலா புறமும் தேடிப் பார்ப்பாள்.

ஏன் இன்னும் வரவில்லை? அபிராமியை ஒரு தடவை பார்த்து வரவேணுமென்றுதானே போனான்? பார்த்தானோ இல்லையோ? ஒரு வேளை அவள் அவனைப் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டாளோ? இருவருமாகக் கப்பலேறிப் போய் விட்டார்களோ?

சகிக்க முடியாத இந்த எண்ணம் தோன்றும் போது அவளுக்கு அபிராமியின் மீது கோபம் அசாத்தியமாக வரும். அந்தப் பாழும் அபிராமியினாலேதான் தன்னுடைய வாழ்க்கை பாழானதெல்லாம்! அவள் எதற்காக பிறந்தாள்? அவள் பிறக்கவேண்டியது அவசியமென்றால் தன்னை எதற்காகப் பகவான் படைக்கவேணும்?

இப்படி ஒவ்வொரு நாளும் கல்யாணிக்கு முடிவில்லாத ஒரு யுகமாகப் போய்க் கொண்டிருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்திலேதான் திருச்சிற்றம்பலம் பிள்ளை குடும்ப சகிதமாகத் திருப்பதி யாத்திரை கிளம்பினார். ஆடி பிறந்து நடவு ஆரம்பமாகிவிட்டால் அப்புறம் எங்கும் கிளம்ப முடியாதென்றும் யாத்திரை புறப்பட இது தான் சரியான தருணம் என்றும் அவர் எண்ணினார்.

நாளுக்கு நாள் உள்ளக் கிளர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்த கல்யாணிக்குத் தான் பூங்குளத்திலேயே இன்னும் இருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போல் தோன்றிற்று. யாத்திரை கிளம்பிச் சென்றால், பல இடங்களைப் பார்ப்பதில் சிறிது மனத்தைச் செலுத்தலாமல்லவா? ஒரு வேளை போகுமிடங்களில் ஏதாவது முத்தையனைப் பற்றிய செய்தி காதில் விழுந்தாலும் விழலாமல்லவா – இந்த எண்ணத்துடனே தான் கல்யாணியும் திருப்பதிக்குக் கிளம்பச் சித்தமானாள்.

குறிப்பிட்ட நல்ல நாளில் திருச்சிற்றம்பலம் பிள்ளையின் குடும்பம் திருப்பதிக்குப் பிரயாணமாயிற்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 42

அத்தியாயம் 42 – தண்டோரா ராயவரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பிரமாத அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னைப் பட்டணத்திலிருந்து சாட்ஷாத் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரையே வந்திருந்தார். இன்னும் ஜில்லா சூபரின்டென்டெண்டு துரையும், இரண்டு டிபுடி சூபரின்டென்டெண்டுகளும், அரைடஜன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸப்-இன்ஸ்பெக்டர்களும்,

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13

ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை – ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. சைக்கிளைப் பிடித்துக் கொண்டு

கல்கியின் பார்த்திபன் கனவு – 72கல்கியின் பார்த்திபன் கனவு – 72

அத்தியாயம் 72 தாயும் மகனும் “மகாராணி அகப்பட்டுவிட்டார்” என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து, “குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!” என்று