Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37

அத்தியாயம் 37 – கமலபதி

“கண் எல்லாவற்றையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய், காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும் போதும் மற்றயாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமானிய விஷயமானாலும், அவருடைய குரலில் விசேஷமான இனிமையிராவிட்டாலும், அவருடைய வார்த்தையைக் காது, தேவாமிருதத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும்போது வாய் குளறுகிறது; நாக்கு கொஞ்சுகிறாது; இதெல்லாம் அன்பின் அடையாளம். ஆனால் இவ்வன்பு எப்படிப் பிறக்கிறது என்றாலோ, அது தேவரகசியம் – மனிதரால் சொல்ல முடியாது” என்று லைலா மஜ்னூன் கதையாசிரியர் வ.வெ.சு. ஐயர் சொல்கிறார். காதலுக்கு மட்டுமன்றிச் சிநேகத்துக்கும் இது ஒருவாறு பொருந்துவதைக் காண்கிறோம். சில பேரை வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகிக்கொண்டிருந்தாலும் அவர்களுடன் நமக்கு அந்தரங்கச் சிநேகிதம் ஏற்படுவதில்லை. ஆனால் வேறு சிலரை முதல் தடவை பார்த்தவுடனேயே நமக்குப் பிடித்துப் போய் விடுகிறது. பிறகு அவர்களிடமுள்ள குறைகளையெல்லாம் நாம் அலட்சியம் செய்யத் தயாராகி விடுகிறோம். அவற்றுக்குச் சமாதானம் கண்டுபிடிக்கவும் முயல்கிறோம். ஒருவர் என்னதான் குரூபியாகட்டும் அவரை நமக்குப் பிடித்துப் போனால் “முகம் எப்படியிருந்தாலென்ன? குணத்தையல்லவா பார்க்கவேண்டும்? என்ன சாந்தம்! என்ன அடக்கம்!” என்று எண்ணி மகிழ்கிறோம். படிப்பில்லாத நிரக்ஷரகுக்ஷியாயிருக்கட்டும், அவரிடம் பிரியம் உண்டாகிவிட்டால், “படிப்பாவது, மண்ணாங்கட்டியாவது? படித்தவர்கள் பரம முட்டாள்களாயிருக்கிறார்கள். இவரிடம் தான் என்ன புத்திசாலித்தனம்? என்ன சாதுர்யமாய்ப் பேசுகிறார்?” என்றெல்லாம் எண்ணிச் சந்தோஷப்படுகிறோம்.

இப்படி உண்டாகும் சிநேகத்தின் இரகசியந்தான் என்ன? ஏன் சிலர் மட்டும் வெகு சீக்கிரத்தில் பிராண சிநேகிதர்களாகி விடுகிறார்கள்? அவர்களைப் பார்ப்பதிலும் ஏன் அவ்வளவு ஆவல் உண்டாகிறது. நமது அந்தரங்க மனோரதங்களையும், நம்பிக்கைகளையும் அவர்களிடம் சொல்லவேண்டுமென்று ஏன் தோன்றுகிறது? “பூர்வ ஜன்மத்துச் சொந்தம்” “விட்டகுறை தொட்டகுறை” என்றுதான் அதற்குக் காரணம் சொல்ல வேண்டியிருக்கிறது.

*****

முத்தையனுக்கும், கமலபதிக்கும் ஏற்பட்ட சிநேகத்தை வேறு விதமாய்ச் சொல்வதற்கில்லை. கமலபதி, மதுரை ஒரிஜினல் மீனாட்சி நாடகக் கம்பெனியின் பிரசித்த ஸ்திரீ பார்ட் நடிகன். முத்தையன் மோட்டார் விபத்திலிருந்து தப்பிச் சென்ற இரவு ஏறிய ரயில் வண்டியிலேதான் முதன் முதலாக அவனைச் சந்தித்தான். பார்த்தவுடனே ஒருவருக்கொருவர் பிடித்துப் போய்விட்டது. கமலபதியின் வற்புறுத்தலின் பேரிலேயே முத்தையனை நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள்.

சில தினங்களுக்குள் அவர்களுடைய நட்பு முதிர்ந்து இணைபிரியாத தோழர்கள் ஆயினர். முத்தையன் ஒரு நாள் தன்னுடைய கதையையெல்லாம் உள்ளது உள்ளபடி கமலபதியிடம் சொன்னான். கப்பல் ஏறிப் போய்விடுவதென்ற தீர்மானத்தையும், அதற்கு முன்னால் அபிராமியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையையும் தெரிவித்தான். கமலபதி அவனுக்கு உதவி செய்வதாக வாக்கு அளித்தான். அத்துடன் அந்த நாடகக் கம்பெனியே கூடிய சீக்கிரம் சிங்கப்பூருக்குப் போகப் போவதாகவும் அப்போது சேர்ந்தாற்போல் முத்தையன் போய்விடலாம் என்றும் கூறினான்.

பின்னர், கமலபதி சென்னையிலுள்ள பெண்களின் கல்வி ஸ்தாபனம் ஒவ்வொன்றிற்கும் போகத் தொடங்கினான். தனக்கு விதவையான தங்கை ஒருத்தி இருப்பதாகவும், அவளை ஏதாவது ஒரு பெண் கல்வி ஸ்தாபனத்தில் சேர்க்க வேண்டுமென்றும், அதற்காக விவரங்கள் தெரிந்து கொள்ள வந்ததாகவும் அவன் ஒவ்வோரிடத்திலும் கூறினான். அத்துடன், அம்மாதிரி பள்ளிக்கூடங்களில் நடக்கும் நாடகங்கள், கதம்பக் கச்சேரிகள் முதலியவற்றுக்கும் தவறாமல் போய் வந்தான். எல்லாமும் அபிராமியைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் தான் என்று சொல்ல வேண்டியதில்லை. கடைசியாக, சரஸ்வதி வித்யாலயத்தின் தலைவி, சகோதரி சாரதாமணி அம்மையுடன் அவன் பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக அபிராமி அங்கு வரவே, முகஜாடையிலிருந்து அவள் முத்தையன் தங்கையாய்த்தான் இருக்க வேண்டுமென்று அவன் ஊகம் செய்தான். சாரதாமணி அவளை “அபிராமி” என்று கூப்பிட்டதும் அவனுடைய சந்தேகம் முழுதும் நீங்கி விட்டது. மிகவும் குதூகலத்துடன் அன்று திரும்பிச் சென்று, “பலராம்! *உன்னுடைய தங்கையைக் கண்டு பிடித்து விட்டேன்” என்று உற்சாகமாய்க் கூறினான். அதைத் தொடர்ந்து மெதுவான குரலில் “என்னுடைய காதலியையும் கண்டுபிடித்தேன்” என்று சொன்னான்

[* முத்தையன் தன்னுடைய பெயரை மாற்றி “பலராம்” என்று கூறியிருந்தான். நாடக விளம்பரங்களில் அந்தப் பெயர் தான் அச்சிடப்பட்டிருந்தது. கமலபதிக்கு அவனுடைய சொந்தப் பெயர் தெரிந்த பிறகும், சந்தேகம் ஏற்படாதபடி “பலராம்” என்றே அழைத்து வந்தான்.]

முத்தையனுக்கு இருந்த பரபரப்பில் கமலபதி பின்னால் சொன்னதை அவன் கவனிக்கவில்லை.

*****

அபிராமியை முத்தையன் எப்படிப் பார்ப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். நேரே போய்ப் பார்த்தால், கட்டாயம் அபிராமி முத்தையனைக் கண்டதும், “அண்ணா!” என்று அலறிவிடுவாள். அபாயம் நேர்ந்து விடும். கமலபதி அவளை அழைத்து வரலாமென்றால், அது எப்படி முடியும்? அந்நியனாகிய அவனுடன் அபிராமியை அனுப்பி வைக்க வித்யாலயத்தின் தலைவி சம்மதிப்பாளா? அபிராமிதான் வருவாளா?

ஏதேதோ யோசனைகளெல்லாம் செய்தார்கள். யுக்தியெல்லாம் பண்ணினார்கள். ஒன்றும் சரியாய் வரவில்லை.

*****

முத்தையனுக்கு அபிராமி படிக்கும் பள்ளிக்கூடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டாவது வரவேண்டும் என்று ஆவல் இருந்தது. கமலபதி அதெல்லாம் கூடாது என்று தடுத்து வந்தான். முத்தையனுடைய ஆவல் மேலும் மேலும் வளர்ந்தது. ஒரு நாள் கமலபதிக்குக் கூடச் சொல்லாமல் வெளியே போனான்.

முத்தையன் அன்று திரும்பி வந்ததும், அவசரமாகக் கமலபதியை அழைத்துத் தனி இடத்துக்குச் சென்று “கமலபதி நான் அபிராமியைப் பார்த்து விட்டேன்” என்றான். அவனுடைய கண்களில் ஜலம் ததும்பிற்று.

“ஐயோ! என்ன காரியம் செய்தாய்? இப்படிப் பண்ணலாமா?” என்று கமலபதி கவலையுடன் கேட்டான்

“கமலபதி! நான் இன்றைக்கு அவளைப் பார்த்ததே நல்லதாய்ப் போயிற்று. இனிமேல் எனக்கு அத்தகைய சந்தர்ப்பம் கிடைக்குமோ, என்னமோ?” என்றான் முத்தையன்.

பிறகு, அவன் அன்று சாயங்காலம் நடந்ததையெல்லாம் விவரமாய்க் கூறினான். அபிராமியின் பள்ளிக்கூடத்தைத் தூரத்தில் இருந்து பார்த்து விட்டாவது வருகிறதென்றுதான் கமலபதியிடம் சொல்லிக் கொள்ளாமல் போனதாகவும், பள்ளிக்கூடத்து மதிற்சுவரைச் சுற்றி வருகையில்,

     “வேலனையே அழைப்பாய் விந்தைக் குயிலே”

என்ற பாட்டை அபிராமியின் குரலில் கேட்டுப் பிரமித்து நின்றதாகவும், மதில் சுவரின் மேலாக எட்டிப் பார்த்த போது, மருதாணிப்புதர்களுக்கு அப்புறத்தில் மரமல்லிகை மரத்தடியில் அபிராமியும் இன்னொரு பெண்ணும் இருந்ததாகவும், அப்பால் போக கால் எழாமல் தான் அங்கேயே நின்றதாகவும் கூறினான்.

“கமலபதி! என் மனம் இன்று தான் ஆறுதல் பெற்றது. அபிராமியை நான் பார்த்துவிட்டேன். அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும் அறிந்தேன். என்னை அவள் திருடன் என்று வெறுக்கவில்லை. என்னிடத்தில் அவளுடைய அன்பும் மாறவில்லை. இனிமேல் எனக்கு வேறு என்ன வேண்டும்…?”

“கல்யாணியைத் தவிர!” என்றான் கமலபதி.

முத்தையன் பெருமூச்சு விட்டான். “கமலபதி! நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும்” என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“ஒன்றாய்ப் போவானேன்? எத்தனை வேணுமானாலும் தருகிறேன்.”

“தயவு செய்து இப்போது விளையாட்டுப் பேச்சு வேண்டாம், கமலபதி! புராணங்களில் சொல்வார்களே, இடது கண் துடிக்கிறது, இடது தோள் துடிக்கிறாது என்றெல்லாம், அப்படியொன்றும் எனக்குத் துடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ விபரீதம் வரப்போகிறதென்று மட்டும் என் மனது சொல்கிறது. இதைக்கேள், அபிராமியும் அவள் தோழியும் பேசிக் கொண்டிருந்தார்கள் அல்லவா? நானும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேனல்லவா? அப்போது இன்னொரு பெண் வந்து, ‘அபிராமி உன்னைக் கூப்பிடுகிறார்கள்! யாரோ திருப்பரங்கோவிலிலிருந்து உன்னைப் பார்க்க மனுஷாள் வந்திருக்கிறார்களாம்’ என்றாள். உடனே அபிராமி எழுந்து போனாள். அதைக் கேட்டது முதல் என் மனத்தில் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருப்பரங்கோவில் மனுஷர்கள் இப்போது எதற்காக இங்கே வரவேணும்?”

கமலபதி சிரித்தான். “எத்தனையோ உற்பாதங்கள், அபசகுனங்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். இது எல்லாவற்றையும் தூக்கி அடிப்பதாயிருக்கிறது” என்றான்.

முத்தையன், “அது எப்படியாவது இருக்கட்டும். என்னுடைய பயம் பொய்யாய்ப் போனால் ரொம்ப நல்லது. ஒரு வேளை நிஜமானால், என்னைப் போலீஸார் பிடித்து விட்டால், அல்லது நான் இறந்து போனால், அபிராமியை நீதான் காப்பாற்ற வேணும். கமலபதி அவளுக்கு வேறு திக்கே கிடையாது. அப்படி காப்பாற்றுவதாக எனக்கு வாக்குறுதி கொடுப்பாயா?” என்று கேட்டான்.

அப்போது கமலபதி, “கடவுள் சாட்சியாய் அபிராமியை நான் காப்பாற்றுகிறேன், பலராம்! பாதிக் கல்யாணம் ஆகிவிட்டது – அவளைக் காப்பாற்ற எனக்குப் பூர்ண சம்மதம். என்னைக் காப்பாற்ற அவள் சம்மதிக்க வேண்டியதுதான் பாக்கி!” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 30கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 30

அத்தியாயம் 30 – வஸந்த காலம் மறு நாள் உச்சிப் போதில், ஜலம் வறண்ட ராஜன் வாய்க்காலின் மணலில், இருபுறமும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த புன்னை மரங்களின் நிழலில், முத்தையன் மேல் துணியை விரித்துக்கொண்டு படுத்திருந்தான். அப்போது இளவேனிற் காலம். சித்திரை பிறந்து

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- இறுதிப் பகுதிதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- இறுதிப் பகுதி

திங்கட்கிழமை காலையில் சாரி சாரியாக உப்பளக்காரர் தெருக்களில் செல்லவில்லை. கையில் அலுமினியத் தூக்குப் பாத்திரமும், பொங்கிப் பீளை சார்ந்த கண்களும் தலைக் கொட்டைச் சுருட்டுமாகப் பெண்களும் சிறுவர் சிறுமியரும், அடிமிதித்துச் சாலையின் பொடி யெழுப்பவில்லை. கோல்டன் புரம், கிரசன்ட் நகர், ஆகிய

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50

அத்தியாயம் 50 – நள்ளிரவு ராயவரம் தாலுகா கச்சேரியையடுத்துள்ள ஸப்-ஜெயிலுக்கு இரவு நேரத்தில் சாதாரணமாய் இரண்டு போலீஸ்காரர்கள் தான் பாரா கொடுப்பது வழக்கம். அவர்களே தான் தாலுகா கச்சேரி ‘டிரஷரி’க்கும் காவலர்கள். ஆனால் இன்றிரவு முப்பது போலீஸ்காரர்கள் காவல் புரிந்தார்கள். கச்சேரியை