ராவ் சாகிப் சட்டநாத உடையார் ராயவரம் தாலுகாவில் ஒரு பெரிய பிரமுகர், முனிசிபல் கௌன்சிலர், ஜில்லா போர்டு மெம்பர், தேவஸ்தான கமிட்டி பிரஸிடெண்ட் முதலிய பல பதவிகளைத் திறமையுடன் தாங்கிப் புகழ் பெற்றவர். இம்மாதிரிப் பொது ஸ்தாபனத் தேர்தல்களில் ஈடுபட்ட அநேகர் அந்தத் தாலுகாவில் வெகுவாகச் சொத்து நஷ்டமும் கஷ்டமும் அடைந்திருக்க, இவர் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வந்தார். இவருடைய செல்வமும் செல்வத்தைப் போல் செல்வாக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. இதற்குக் காரணம் அவர் பிறந்த வேளை என்றார்கள் சிலர் . “மகா கெட்டிக்கார மனுஷன், வாயைப் போல் கை; கையைப் போல வாய்” என்றார்கள் வேறு சிலர். “ஆசாமி திருடன்; ஸ்தல ஸ்தாபனங்களைக் கொள்ளையடித்தும், கோவில்களைச் சுரண்டியுமே இப்படிப் பணம் சேர்த்து விட்டான்” என்றனர் வேறு சிலர். இன்னும் பலர் பலவிதமாகச் சொன்னார்கள்.
அன்றைய தினம் உடையார், ராயவரம் டவுனை அடுத்துச் சாலை ஓரத்தில் பெரிய தோட்டத்தின் மத்தியில் கட்டியிருந்த தமது புதிய பங்களாவில் டிராயிங் ரூமில் உட்கார்ந்து தினசரி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உடையார் அவ்வளவு பிரபலமாகித் தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளக் காரணமாயிருந்த வழிகளில் இது ஒன்றாகும். அடிக்கடி அவர் பத்திரிகைகளுக்குக் காரசாரமான கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். சர்க்கார் விவசாய இலாகா கவனிக்க வேண்டிய காரியங்களிலிருந்து, சர்வதேச சங்கம் உலக யுத்தத்தைத் தடுப்பதற்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் வரையில் அவர் சகல விஷயங்களையும் பற்றிப் பிய்த்து வாங்கி எழுதும் சக்கையான கடிதங்கள் வாரம் இரண்டு தடவையாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும். அம்மாதிரியாக, அன்றைய தினம் அவர் எழுதி முடித்த கடிதத்தை இதோ கீழே படியுங்கள்.
“மகா-௱-௱-ஸ்ரீ…பத்திரிகாசிரியர் அவர்களுக்கு,
ஐயா!
இந்தக் கொள்ளிடக் கரை பிரதேசத்தில் முத்தையன் என்னும் துணிச்சலுள்ள திருடனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகியே வருகின்றன. சமீபத்தில் கோவிந்த நல்லூரில் நடந்த பிரபல விவாகத்தின் போது, அவன் செய்த சாகஸச் செயல்களினால் இந்தத் தாலுக்கா முழுவதும் கதிகலங்கிப் போயிருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொத்துக்கும் உயிருக்கும் எந்த நிமிஷத்தில் ஆபத்து வருமோ என்று சதா சர்வகாலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் முத்தையனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் என்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் விருந்தாளியாக வரப் போவதாகவும், வரவேற்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் எழுதியிருக்கிறான்.
திருடன் ஒருவனுக்கு இவ்வளவு தைரியமும் துணிச்சலும் ஏற்படுவதற்குக் காரண புருஷர்களாகயிருக்கும் இந்தத் தாலுகா போலீஸ்காரர்களின் சாமர்த்தியத்தை ஜனங்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள்! கூடிய சீக்கிரத்தில், அவர்கள் எல்லோருக்கும் தக்க ‘பிரமோஷன்’ கொடுக்க வேணுமாய் ஜனங்கள் கோருகிறார்கள்!
ராவ் சாகிப் கே.என்.சட்டநாத உடையார்”
உடையார் மேற்படி கடிதத்தை எழுதி முடித்து உறையில் போட்டுக் கொண்டிருக்கையில், ஒருவன் உள்ளே வந்து, “எஜமான்! அந்த ஆசாமி வந்திருக்கிறான்” என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, “வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே! தலைபோகிற காரியமானாலும் சரிதான்!” என்றார்.
அவன் போனவுடன் உள்ளே வந்தவன் வேறு யாரும் இல்லை; முத்தையன் தான். முகமூடித் திருடனாய் வராமல் சாதாரண முத்தையனாய் இப்போது வந்தான்.
வந்தவன், “குட்மார்னிங், சார்!” என்று சொல்லி விட்டு நின்றான்.
உடையார் அவனைச் சற்று நேரம் அதிசயத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். “அடே அப்பா! இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா!” என்றார்.
“உடையார்வாள்; கொஞ்சம் மரியாதையாகவே பேசி விட்டால் நல்லதில்லையா?” என்றான் முத்தையன்.
“அப்படியே யாகட்டும், ஸார்! உட்காருங்கள், ஸார்! தங்களை இங்கு விஜயம் செய்யச் சொன்னது எதற்காக என்று ஏதாவது தெரியுமா, ஸார்?” என்று ராவ் சாகிப் கேட்டார்.
“உங்கள் ஆள் எனக்கு அதெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கு ரொம்ப ஆவலாய் இருப்பதாய் மட்டும் தான் சொன்னான். ஆனால் காரியமில்லாமல் தாங்கள் அப்படியெல்லாம் ஆசைப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான் முத்தையன்.
உடையார் சற்று யோசனை செய்தார். அவனிடம் எப்படி விஷயத்தைப் பிரஸ்தாபிப்பது என்று அவர் தயங்குவது போல் காணப்பட்டது. அப்போது முத்தையன் அவரைத் தைரியப்படுத்துகிற பாவனையாக, “என்ன யோசிக்கிறீர்கள்? தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன?” என்றான்.
உடையார் திடுக்கிட்டு, “என்ன அப்படிச் சொல்கிறாய்?” என்றார்.
“ஆமாம்; அதைப் பற்றி என்ன? நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம்! பரவாயில்லை, சொல்லுங்கள்.”
“எல்லோரும் உன்னைப் பற்றிச் சொல்வது சரியாய்த் தானிருக்கிறது. வெகு வேடிக்கை மனுஷனாயிருக்கிறாய். இருக்கட்டும். உன்னைக் கூப்பிட்ட காரியத்தைச் சொல்கிறேன். என் சிநேகிதர் ஒருவருக்குப் புதுச்சேரியிலிருந்து இரகசியமாய்க் கொஞ்சம் சரக்குக் கொண்டு வரவேணுமாம். அதற்கு உன் ஒத்தாசை வேண்டுமென்கிறார். இதிலே எனக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது. உனக்குச் சம்மதமானால் சொல்லு. அபாயம் அதிகம்தான்; வரும்படியும் அதற்குத் தகுந்தபடி ஜாஸ்தி. என்ன சொல்கிறாய்?”
இதைக் கேட்ட முத்தையன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான். இடையிடையே உடையாரையும் பார்த்தான்.
உடையார் தம்முடைய ஆடை அலங்காரங்களில் அதிகக் கவலையுள்ளவர். அவற்றில் ஏதாவது கோளாறா என்ன என்று அவர் சுவரிலிருந்த நிலைக் கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொண்டார்.
முத்தையன், “அலங்காரமெல்லாம் சரியாய்த்தான் ஸார் இருக்கிறது. ஒன்றும் பிசகில்லை. நான் சிரிக்கிறது வேறு விஷயம். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால், இதே மாதிரி திருட்டு வேலைக்காக என்னை நீங்கள் கார் ஓட்டச் சொன்னீர்கள். நான் மாட்டேன் என்றேன். அதற்காக என்னை டிஸ்மிஸ் பண்ணி விட்டீர்கள். அப்போதும் இதே மாதிரிதான் ‘ஒரு சிநேகிதருக்காக, இதில் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை’ என்று சொன்னீர்கள். இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான்.
உடையார் குதித்து எழுந்தார். “அடே பாவிப் பயலே! நீ தானா!” என்றார். பிறகு அவர் நின்றபடியே கூறினார்.
“உன்னைக் கோவிந்த நல்லூர் கல்யாணத்தில் ஒரு நிமிஷம் பார்த்த போதே நீயாய்த்தான் இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்டேன். அதனால் தான் உன்னை எப்படியாவது கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். ஜில்லென்று மீசை வைத்துக் கொண்டு விட்டாயல்லவா! அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, ‘திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்’ என்று சொன்னாயே? இப்போது என்ன ஆயிற்று? பெரிய பக்காத் திருடனாய் ஆகிப் போனாய். என்னோடு இருந்திருந்தால் உனக்கு அபாயமே கிடையாது. இப்போது நித்யகண்டம் பூரணாயுசாயிருக்கிறாய். நான் சொல்கிறதைக் கேள். இப்போதாவது என்னோடு சேர்ந்துவிடு. நான் ஒரு விதத்திலே சூரனாயிருந்தால், நீ இன்னொரு விதத்திலே சூரன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தோமானால் உலகத்தையே விலைக்கு வாங்கிவிடலாம்; என்ன சொல்கிறாய்?” என்றார்.
“ஆமாம். அதெல்லாம் எனக்குத் தெரியும். இப்போது இப்படிச் சொல்வீர். சமயத்தில் கழுத்தை அறுத்து விடுவீர். என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு நீர் மேலே அழுக்குப் படாமல் தப்பித்துக் கொள்வீர். உத்தியோகஸ்தர்களுக்கோ உம்மைக் கண்டால் பயம். அவர்கள் யாராவது முறைத்தால், மேலே ஹோம் மெம்பர் வரையில் உம்முடைய கட்சி. எப்படியாவது தப்பித்துக் கொண்டு விடுவீர். நான் பலியாக வேண்டியதுதான். ஆனால் அதற்கெல்லாம் இப்போது நான் துணிந்த கட்டை. ஒரு தடவை பாண்டிச்சேரி போய் வந்தால் என்ன கொடுப்பீர்? சொல்லும் பார்க்கலாம்!”
“முழுசாய் ஒரு நோட்டு. ஆயிரம் ரூபாய் தருகிறேன்.”
“சீ; இதுதானா? நான் இப்போது வந்ததற்குப் பதிலாக உம்முடைய வீட்டிற்கே இராத்திரி வந்தேனானால் அடித்த அடியில் ஐயாயிரம் ரூபாய் கொண்டுபோய் விடுவேன்!”
இதைக் கேட்டதும் சட்டநாத உடையார் திடுக்கிட்டார்.
“தீட்டிய மரத்திலே கூர் பார்ப்பாய் போலிருக்கிறதே!” என்றார்.
“பயப்படவேண்டாம், உடையார்! அப்படியெல்லாம் செய்யமாட்டேன். திருடன் வீட்டில் திருடன் புகுவது தொழில் முறைக்கு விரோதமல்லவா? போகட்டும், நான் உமக்கு உதவி செய்கிறேன். உம்மால் எனக்கு ஒன்று ஆக வேண்டியதாயிருக்கிறது. உம் வேலையெல்லாம் முடிந்த பிறகு எனக்கு ஒரு மோட்டார் வண்டி நீர் கொடுக்க வேண்டும். நான் ஒரு தடவை சென்னைப் பட்டணம் போய் வர விரும்புகிறேன்” என்றான் முத்தையன்.
உடையார் சற்று நிதானித்து, “ஆகட்டும்; பார்க்கலாம்” என்றார்.