Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 8

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 8

அத்தியாயம் 8 – மணப்பந்தலில் அமளி

     தாமரை ஓடை கிராமத்தில் வீதியை அடைத்துக் கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. பந்தல் அலங்காரத்துக்கு மட்டும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்.

அந்தப் பெரிய பந்தல் இடங்கொள்ளாதபடி ஜனங்கள் நெருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பந்தலுக்கு வெளியே குடியானவர்களும், குடியானவ ஸ்திரீகளும் தெருவை அடைத்துக் கொண்டு நின்றார்கள்.

இரண்டு கோஷ்டி தங்க நாயனமும் இரண்டு கோஷ்டி வெள்ளி நாயனமும் சில சமயம் தனித்தனியாகவும் சில சமயம் சேர்ந்தும் ஊதிக் காதைத் துளைத்துக் கொண்டிருந்தன. தவுல்காரர்கள் தங்கள் கையில் பலங்கொண்ட மட்டும் அடித்து காது செவிடுபடச் செய்தார்கள். சில சமயம் பாண்டு வாத்தியங்களும் நடுவில் கிளம்பி அலறின.

பந்தலுக்குள்ளே, சந்தன மழையும், பன்னீர் மழையும், பூமாரியும் மாறி மாறிப் பொழிந்து கொண்டிருந்தன.

புரோகிதர் மந்திரங்களைப் பொழிந்தார்.

திருமாங்கல்ய தாரணம் செய்ய வேண்டிய சமயம் வந்தது.

“ஊது, ஊது” என்று புரோகிதர் கூவினார். உடனே ஏக காலத்தில் நாலு நாயனக்காரர்கள் வாயில் வைத்து வாத்தியத்தை எடுக்காமல் ஊதினார்கள்; நாலு தவுல்காரர்கள் அடிஅடியென்று அடித்தார்கள்.

மாப்பிள்ளை தாலியை எடுத்து மணப் பெண்ணின் கழுத்தில் கட்டினார்.

தாலி கட்டிய அடுத்த நிமிஷத்தில், ஸ்திரீகள் கோஷ்டியிலிருந்து, “ஐயோ! கல்யாணிக்கு என்ன!” என்று ஒரு குரல் எழுந்தது. அப்படிச் சொன்ன ஸ்திரீயின் வாயை இன்னொருத்தி பொத்தி “அசடே! அபசகுணம் போல் என்ன சொல்கிறாய்?” என்றாள்.

ஆனால் வாஸ்தவத்திலேயே கல்யாணிக்கு என்ன?

அவளுடைய கண்ணைக் கொண்டு போய் அப்படிச் சொருகுகிறதே! ஐயோ! அவளுடைய தலை அப்படிச் சாய்கிறதே!

“கொண்டு போங்கள்! உள்ளே கொண்டு போங்கள்!”

நாலு பேராகப் பிடித்து மெதுவாய் அவளை ஓர் அறைக்குள்ளே கொண்டு போனார்கள். பாயில் படுக்க வைத்தார்கள்.

“கல்யாணிக்கு என்ன?” “கல்யாணிக்கு என்ன?” என்ற கேள்வி எங்கும் பரவியிருந்தது. பந்தலிலும் வீட்டுக்குள்ளும் புருஷர்களிடையிலும் ஸ்திரீகளிடையிலும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“கிளம்பும் போது சகுனம் சரியாக ஆகவில்லை” என்றார்கள் சிலர்.

“இந்தப் பெண் தான் உச்சி வேளையிலே கொள்ளிடக் கரை அரச மரத்தடையிலே போய் நிற்குமே! எந்தப் பேயோ, பிசாசோ, என்ன கண்றாவியோ?” என்றார்கள் வேறு சிலர்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இராத்திரியிலிருந்து பெண் சாப்பிடவில்லையாம்! பசி மயக்கம்!” என்றார்கள் சிலர்.

கல்யாணி நினைவற்றுக் கிடந்தாள்.

டாக்டர் வந்து எல்லாரையும் விலகச் சொல்லிக் கொஞ்சம் காற்றோட்டம் உண்டு பண்ணினார்.

“ஒன்றும் அபாயமில்லை” என்று உறுதி சொல்லி, முகத்திலே கொஞ்சம் ஜலம் தெளித்து, மூக்கில் மருந்துப் புட்டியைக் காட்டினார்.

கல்யாணிக்கு ஸ்மரணை வரத் தொடங்கியது. அவளுடைய இதழ்கள் அசைந்தன. அவை ஏதோ முணு முணுத்தன.

அந்த முணுமுணுப்பு யார் காதிலும் விழவில்லை; விழுந்திருந்தாலும் அவர்களுக்குப் புரிந்திராது.

ஆமாம்; கல்யாணியின் இதழ்கள் முணுமுணுத்த வார்த்தைகள் இவைதான்: “வண்டி குடை சாய்ந்து விட்டது! வண்டி குடை சாய்ந்து விட்டது! வண்டி குடை சாய்ந்து விட்டது!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது

தனி வழி 7 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 7 – ஆர். சண்முகசுந்தரம்

7 மாஸ்டருக்கு அவளைக் கண்டதும் சிரிப்பு, கோபம், சந்தோஷம் எல்லாமே வந்துவிட்டது. உணர்ச்சிகள் புயலடித்தன அவர் பேச்சில். “எனக்குத் தெரியுமே, எங்கிட்ட கருப்பண்ணன் எங்கேன்னு கேக்க வருவேன்னு எதிர்பார்த்துக்கிட்டுத்தா இருந்தே. என்ன இருந்தாலும் உன் சின்ன மாப்பிள்ளையை – அந்தப் பொடிப்பயலை

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 12திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 12

செவந்தியாபுரம் தொழிலாளர் குடிகள், முப்பதாண்டுகளுக்கு முன்னர், ‘பனஞ்சோலை அளம்’ என்று இந்நாள் திக்கெட்டுமாக விரிந்து கரிப்பு மணிகளை விளைவிக்கும் சாம்ராஜ்யமாவதற்கு முன்பே உருவானவை. பெரிய முதலாளி வாலிபமாக இருந்த காலத்தில் சிறு அளக்காரராக அங்கு தொழில் செய்யப் புகுந்த போது, முதன்