Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 23

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 23

செங்கமலத்தாச்சி நிறையப் பன ஓலை சேகரித்து முன்னறை முழுவதும் அடைத்து இருக்கிறாள்.

சரசி அவள் உள்நோக்கைப் புரிந்து கொண்டு விட்டாற் போல் தோன்றும்படி வெடுக்கென்று கேட்கிறது. “ஆச்சி! அவியல்லாம் அளத்துக்குப் போகாம மொடங்கிட்டா, பொட்டி செலவிருக்குமா? ஆரு வாங்குவா?” அந்தச் சிறுமியை ஆச்சி உறுத்துப் பார்க்கிறாள்.

பதினைந்து ரூபாய்க்கு வாங்கி வந்து விட்டேன் என்று பெருமிதத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாளே? அட… இந்தப் பொடிசிக்குப் போன புத்தி எனக்குப் போகலியே? உப்பளத்து வேலை ஓய்ந்து விட்டால் ஓலைப் பொட்டிக்கு ஏது அவ்வளவு கிராக்கி? ஆனால் அளத்து வேலை அப்படி ஓய்ந்து விடுமா?… ஒன்றுமில்லாமல் ஓய்ந்து விடலாமா?…

“பொன்னாச்சி என்னேயா ட்டீ?”

கத்தியை எடுத்து ஓலையை வாகாக்கிக் கொண்டு ஆச்சி கேட்கிறாள்.

“கூட்டிட்டு வாரட்டுமா ஆச்சி?”

“கூப்பிடு…!”

சற்றைக்கெல்லாம் புதிய தாலி துலங்க, பளிச்சென்று முகத்தில் திருநீறும் குங்குமமுமாக, ஈரக்கூந்தல் முடிப்புடன் அவள் வருகிறாள்.

“சாமான மெல்லாம் வாங்கியிருக்கா… ட்டீ?”

அவள் தயங்கி நிற்கிறாள்.

“நாளக்கிலேந்து வேலயில்ல. தெரியுமில்ல?”

“தெரியும் ஆச்சி?”

“ராமசாமி ஆத்தாள இங்க கூட்டியாரன்னு சொன்னானா? அங்க வேற எதுக்கு வாடவை?”

“வார முன்னா…”

“சரி, பச்சையைக் கூட்டிட்டுப் போயி, அரிசியும் வெறவும் வாங்கி வச்சிக்க. பொறவு எப்பிடி இருக்குமோ?…”

அவள் தன் சுருக்குப் பையைத் திறந்து ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுக்கிறாள்.

இந்த ஆச்சி பத்துக் காசுக்கு ஒவ்வொரு சமயம் கணக்குப் பார்ப்பாள். செம்போ லோட்டாவோ கொண்டு வந்து வைத்து விட்டு முடைக்குப் பணம் பெற்றுச் செல்லும் கூலிக்காரரிடம் வட்டி முனை முறியாமல் வாங்கி விடுவாள். ஆச்சி இப்போது கொஞ்ச நாட்களாகப் பைசா கணக்கை விட்டு விட்டு இப்படி வந்தவருக்கெல்லாம் செலவழிக்கிறாள்.

பச்சையையும் பாஞ்சாலியையும் சாமானுக்கு அனுப்பிவிட்டு அவள் அடுப்பை மூட்டிப் பானையைக் கழுவி உலை போடுகிறாள். பொழுது உச்சிக்கு ஏறுகிறது. அவள் அரிசியைக் கழுவுகையில் “இங்க இருந்துக்க!” என்ற குரல் கேட்டு வெளியே வருகிறாள்.

மகன் தாயைக் கொண்டு வந்து அமர்த்துகிறான்.

வெள்ளம் தலைக்கு மேல் செல்வது போலும், தான் ஓட்டைப் படகில் தொத்திக் கொண்டிருப்பது போலும் பீதி நிறைந்த முகத்துடன் அந்த அம்மை அவளைப் பார்க்கிறாள்.

சில தட்டுமுட்டுக்கள், துணி மூட்டை, சைக்கிளில் வைத்துக் கட்டி வந்திருக்கிறான். முற்றத்தில் மரியானந்தம் சைக்கிளுடன் நிற்கிறான்.

“ஆச்சி…? நீங்க சொன்னாப்பில செஞ்சிட்ட…”

“பேச்சு வார்த்தை என்ன ஆச்சி?”

“தனபாண்டியன், அகுஸ்தின், செல்லையா எல்லா கட்சிக்காரரும் பேசுறாவ. பனஞ்சோல அளத்துள நடக்காதுன்னு சொல்றா. ஆச்சி, நாங் கேள்விப்பட்டது நிசமா?”

“என்ன கேள்விப்பட்ட?”

“ஒங்களப் பெரி கணக்கவுள்ள வந்து கூட்டிட்டுப் போனாவளாம். ஏ அவியள்ளாம் தூண்டிக் குடுக்கேன்னு கேட்டாவளாம்…”

“கேட்டாக. நா ஆரு அவியளத் தூண்டிக் குடுக்க? கும்பி காஞ்சு, குலை எரிஞ்சா தானே அதிகமா புகையிதுன்னே… ‘என்னடி அதிக்கிரமா பேசுத? மரியாதிய நடக்க’ண்ணா. நீ முதல்ல மரியாதிய நடண்ணே…”

“பெரிய முதலாளிட்டியா?”

ஆச்சி தலைநிமிராமல் “ஆமாம்” என்று தலையாட்டுகிறாள். “ஒடனே இந்த ஆண்டி என்னக் கூட்டிட்டு வெளீ ரூம்புல வந்து பயமுறுத்தினா. ‘நீ என்ன நினைச்சிட்டு அவியள இப்பிடிப் பேசின? அவிய வயசு காலத்துல ரொம்பக் கிலேசப்பட்டு ஒன்னப் பாத்துப் பேசணுமின்னு பெருந்தன்மையாக் கூட்டு விட்டா, நீ மட்டு மரியாதியில்லாம நடக்கே! அவவ நிலமய நினைச்சிப் பேசணும்’ன்னா. ‘எனக்குத் தெரியும். என்னேவிய? போலீசுல புடிச்சிக் குடுப்பிய. ஆள் வச்சி அடிப்பிய, அம்பிட்டுதான?’ன்ன. எனக்கு இனி என்ன பயமிருக்கி?”

“‘நீ அநாசியமாப் பேசுத. ஒனக்கு வூடு பணம் ஒதுக்கியிருக்கு. இப்ப வேணுன்னாலும் ஆயிரம் ஒதுக்கிறமுன்னா முதலாளி. பேசாம வாங்கிட்டு ஒதுங்கிப் போ. இந்தத் தலத்தெறிப்பு பயகளைச் சேத்துட்டு வம்புல எறங்காத, ஆமாம்…’ன்னு பயங்காட்டினா.”

“எனக்குப் பணம் வாணா. ஒங்க அந்தூராத்துமாவத் தொட்டுப் பாத்துப் பேசும். ஒங்கக்கு உப்பச் சுரண்டிக் குடுக்க ஒழக்கிற பொண்டுவளையும் ஆம்பிளகளையும் புள்ளகளயும் நீங்க குளிரும்படி வச்சிருக்கல. ஒங்ககிட்ட பணமிருக்கி, அந்த வலத்துல போலிசைக் கையில போட்டுக்குவிய, ஏ, சாமியையே கையில போட்டுக்குவிய; ஆனா நீங்க பண்ண பாவம் ஒங்கள சும்மா விட்டிராது’ன்னு சொல்லிவிட்டு மடமடன்னு எறங்கி வந்திட்ட…”

ராமசாமி வியப்பினால் சிலையாகி நிற்கிறான். அவன் கண்களில் முத்தொளி மின்னுகிறது.

“ஆச்சி! ஒங்களுக்கு நாங்க ரொம்ப ரொம்பக் கடமப் பட்டிருக்கிறம். ஒங்க ‘சப்போட்டு’தா எங்களுக்கு இப்ப தயிரியத்தையே குடுத்திருக்கு. என்ன வந்தாலும் ரெண்டில ஒண்ணுன்னு துணிஞ்சி நிக்கோம்…”

பொன்னாச்சி முற்றத்தில் நின்று சன்னல் வழியாக அவன் அவளைக் கூப்பிடுவதைப் பார்க்கிறாள். அவர்கள் சென்ற பின்னர், ஒரு கலியாண வீட்டின் பரபரப்போடு அவள் வீட்டுப் பணிகளில் இறங்குகிறாள். சோற்றை வடித்து முதலில் அவன் அன்னைக்கு வட்டிக்கிறாள்.

“கஞ்சியில் உப்பு போட்டுக் கொண்டாட்டி. இப்ப அது போதும்…” என்று கூறுகிறாள் முதியவள்.

பச்சை விறகு வாங்கி வருகிறான். பாஞ்சாலி பெட்டியில் சுமந்து வந்த அரிசியை அந்த அம்மை கொட்டிப் புடைத்துச் சீராக எடுத்து வைக்கிறாள். குழந்தைகள் அனைவரையும் குளிக்கச் செய்து துணி கசக்கி, சோறு போட்டுக் கடையெல்லாம் ஓய்ந்த போது வெயில் சுவரின் மேல் ஓடி விட்டது.

ராமசாமி வருகிறானோ என்று அவள் வாயிலில் எட்டி எட்டிப் பார்க்கிறாள்.

திமுதிமுவென்று சிவந்தகனியும் இன்னும் நாலைந்து பேரும் சில தடிகளை மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு வந்து நுழைகின்றனர்.

“இதெல்லா என்ன?”

ஒருவன் அரிவாள் வைத்திருக்கிறான்.

“யார்ல அது?…” என்று ஆச்சி வெளியே வருகிறாள்.

“நாங்கதா ஆச்சி… இதெல்லா இங்க வச்சிருக்கம்…”

“ராமசாமி வரானா?”

“இல்ல. ஆனா நாளேலேந்து வேலக்கி போவ இல்ல… மொத்த அளக்காரரும் வந்தது வரதுன்னிருக்கம். இதபாறம், பனஞ்சோல அளத்து டைவர் சோலை தெரியுமில்ல?”

பொன்னாச்சி திடுக்கிட்டுப் பார்க்கிறாள். ஆம். சோலை தான்! “பொன்னாச்சி! சொவமா? நானும் சேந்திருக்க. பனஞ்சோல அளத்துல எல்லாத் தொழிலாளியளும் சேர்ந்திருக்கா!”

“உசிரைக் குடுத்திட்டு நீருல முழுகிக் குழாமாட்டுவே. நாளக்கு, ஆறு ரூவா கூலின்னு சொல்லிட்டு ரெண்டு ரூவாக் கணக்கு சரக்குக்குன்னு புடிச்சிக்கிடுவா கணக்கவுள்ள. எனக்கு சொதந்தர நா, மே தினத்துக்குக் கூட லீவுள்ள. இதெல்லா ராமசாமி சொன்ன பொறவுதா தெரிஞ்சிச்சி. என்ன எம்புட்டு நாளா ஏமாத்திட்டிருக்காவ!”

பொன்னாச்சி சிலையாகிறாள்.
“அருவால்லாங் கொண்டிட்டு வந்தியளா? அல்லாம் இங்ஙனமும் இருக்கட்டும்! என்னக் கேக்காம ஆரும் தொடாதிய! பொறவு, வம்பு தும்பு ஒங்களால வந்ததுன்னா, அம்புட்டும் வீணாயிரும். அளத்து வாசல்ல நின்று ஆரும் சோலிக்குப் போவாம பாத்துக்கும்…”

ஒரு கட்டுக்குள் சீராக அடக்கி வைப்பது எவ்வளவு பெரிய செயல்? மாலை தேய்ந்து இருள் பரவுகிறது. மீண்டுமொரு முறை சோறுண்ண நேரம் வந்துவிட்டது. சுற்றிச் சுற்றி வந்த சிறுவர்களும் பச்சையும் திண்ணையில் படுத்ததும் உறங்கிப் போகின்றனர். கிழவி படியிலேயே உட்கார்ந்திருக்கிறாள்.

பொன்னாச்சிக்கு மனம் அலைபாய்கிறது.

“ஏட்டி? நீ சோறு தின்னிட்டுக் கதவைப் போட்டுட்டுப் படுடீ! அவெ வருவா, நாலிடம் போவா – வேலையவுட்டு நிக்கிறமின்னா லேசா? பணம் பிரிப்பா… போ! வந்தா கதவத் தட்டுவா, நா இங்ஙனதான இருக்க. ஒறங்க மாட்ட…”

பொன்னாச்சிக்குப் படுத்தால் உறக்கம் பிடித்தால் தானே?

வெகு நேரம் அதையும் இதையும் எண்ணி மனம் அலைபாய்கிறது. பிறகு எழுந்து சென்று பானைச் சோற்றில் நீரூற்றி வைக்கிறாள்.

“ஆச்சி, உள்ள வந்து ஒறங்குறியளா?”

அந்தத் தாய் மறுத்து வாயிற்படியிலேயே சுருண்டு கொள்கிறாள். முற்றத்தில் நின்று வானைப் பார்க்கையில், அங்கு கோடி கோடியாகச் சுடர்கள் இரைந்து கிடக்கின்றன.

மணி என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை. சொக்கு புருசன் எழுந்து உட்கார்ந்து இருமுகிறான். அவள் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள்.

உறக்கம் வந்தது தெரியவில்லை. தங்கபாண்டி மஞ்சள் மஞ்சளாகப் பழக்குலையும் கையில் பிடித்து வருவது போல் ஒரு கனவு. சின்னம்மா பழத்தைப் பிய்த்துச் சிரித்துக் கொண்டு அப்பச்சியிடம் கொடுக்கிறாள். நிசம் போலிருக்கிறது. சட்டென்று விழித்துக் கொள்கிறாள். எங்கோ கோழி கூவுகிறது. ஆளரவம் கேட்பது போலிருக்கிறது. அவள் கதவைத் திறக்கிறாள். இரண்டு வலிய கரங்கள் அவளை வளைக்கின்றன. “வுடும்… வுடும்… ஆச்சி, புள்ளயள்ளாம் முழிச்சிடுவாக…” என்று கிசுகிசுக்கிறாள் அவள்.

அவள் கதவை மெல்லத் தாழிடுகிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 16கல்கியின் பார்த்திபன் கனவு – 16

அத்தியாயம் 16 கலைத் திருநாள் மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர் களுடைய

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 9திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 9

    அன்று சனிக்கிழமை, கூலி நாள். கிழிந்து பிளந்துவிட்ட, பனஓலை மிதியடியைத் தூக்கி எறிந்துவிட்டு நஞ்சோடை நீரில் கால்களைக் கழுவிக் கொண்டு ரப்பர் செருப்பை மாட்டுக் கொண்டு பொன்னாச்சி கூலிக்கு நிற்கிறாள். அன்று தம்பி பச்சை வேலைக்கு வரவில்லை. அவனுக்கு

சாவியின் ஆப்பிள் பசி – 13சாவியின் ஆப்பிள் பசி – 13

சாமண்ணா சிறிது நேரம் பிரமித்து நின்றான். கோமளத்தின் அசைக்க முடியாத வாதங்கள் அவனுடைய அடித்தள நம்பிக்கையை அசைத்து விட்டன. கண்களில் அவனது அம்மா மின்னி மறைந்தாள். விசாலாட்சி என்று பெயர். ஒரு காலத்தில் விசாலமாக இருந்த அவள் கண்கள் வயது அறுபத்தைந்தை