Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 22

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 22

ஓடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக்கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்டதால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழைகளை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலைகளைக் கொய்து கொண்டு வருகிறான்.

மஞ்சள் பூச்சு படர்ந்த முகத்தில் திருநீறும் குங்குமமும் துலங்க, மொடமொடவென்று கோடிச் சேலையை உடுத்துக் கொண்டு பொன்னாச்சி சங்கமுகேசுவரர் சந்நிதியில் புது மணப் பெண்ணாக நிற்கிறாள். குஞ்சரியும், வள்ளியும், பாஞ்சாலியும், பச்சையும் அவளைப் பார்த்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வருகின்றனர். மூங்கில் துறையிலிருந்து குருக்கள் முன்னதாகவே அதிகாலையில் வந்து ஈசுவரனுக்கு அபிடேகம், ஆராதனை முடிக்கிறார். ஓர் புறம் அடுப்பு மூட்டி பொங்கலும் வைத்திருக்கிறார்.
முதல் நாள் காலையில் வேலுதான் சென்று பொன்னாச்சியையும் குழந்தைகளையும் கூட்டி வந்திருக்கிறான். திருமணம் என்று சொல்லாமலேயே அவர்களை அழைத்து வரச் செய்திருக்கிறார் அவர். ராமசாமி மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியுடனும் வெள்ளைச்சாமியுடனும் வந்தான்.

“அம்மாளைக் கூட்றிட்டு வான்னே?…” என்று மாமன் கேட்ட போது, அவன் சிரித்து மழுப்பி விட்டான். அவன் முரண்பாடாகத் தகராறு செய்வாளென்றும், திருமணம் முடித்துக் கூட்டிக் கொண்டு போனால் போதும் என்றும் மொழிந்தான். காலையில் நேராகக் கோயிலுக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, அவளுக்கு இருபத்தைந்து ரூபாயில் ஒரு சேலையும் ஏழு ரூபாயில் ஒரு ரவிக்கையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். இரவில் யார் யாரையோ பார்க்க வேண்டிய வேலை இருக்கிறதாம். “ஏழு மணிக்கு நாங்கூட்டியார…” என்று தனபாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டு சென்றிருக்கிறார். சிலுசிலுத்து ஓடும் ஓடையில் மாமன் முழுகி, வேறு வேட்டியணிந்து பட்டையாகத் திருநீறு அணிந்து தட்டத்தில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறார். வெண் சம்பங்கியும் அரளியும் ரோஜாவும் கட்டிய இரண்டு மாலைகள் – வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு பழம், இரண்டு தேங்காய் எல்லாவற்றுடன் அந்தப் புடவை ரவிக்கை, மாப்பிள்ளைக்கு அவர் வாங்கிவைத்த வேட்டி, துண்டு ஆகியவற்றையும் வைக்கிறார். பின்னர், பத்திரமாகக் கொண்டு வந்திருக்கும் அந்த மங்கிலியத்தை புதிய சரட்டில் கோத்து அதன் நடுவே வைக்கிறார். தங்கபாண்டியிடம் வட்டிக் கடன் பெற்று முதல் வேலையாக அதை மீட்டு விட்டார். உப்பின் வெப்பமும் உயிரற்ற வெண்மையும் கவிந்த வாழ்க்கையில் இந்த இளம் பருவம் உப்புக் காட்டில் ஓடி வரும் ஆற்றின் கால்களைப் போன்று குளிர்ச்சி பொருந்தியது. இந்தக் குளிர்ச்சி தரும் இனிமைகளே இவர்கள் வாழ்வில் பசுமைகளாகும். எனவே, கல்யாணத்தை இவர்கள் மிகப் பெரியதாக எதிர் நோக்கியிருக்கும் போராட்டத்துக்கு முன்பே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டார்.

இந்த இனிய சேதி பொன்னாச்சியைப் பூரிப்பிலாழ்த்தியிருக்கிறது. மாமியினால் அதிகாலை நேரத்தினால் நடந்து வர ஏலாது என்று கூறிவிட்டாள். ஆனால் பொன்னாச்சிக்கு அன்போடு முழுக்காட்டி, சடை கோதி, மலர் அலங்காரம் செய்திருக்கிறாள். அவள் மாப்பிள்ளையுடன் வரும் காலை நேரத்தில் இனிப்பும் பாயசமும், புட்டும் சமைத்து வைத்திருப்பாள்.

ஒரு சிறு கைமணியை அடித்து, குருக்கள் பூசைக்கு வானவரையும், தேவதைகளையும் அழைக்கிறார்.

கிழக்கே விண்மணி பொற்சுடராய்ப் பொங்கிச் சிரிக்கிறாள். வசந்தகாலத்து இன்பசாரலின் துளிகள் பசும்புல்லில் வீற்றிருக்கையில் ஒளிக்கதிரின் கால்பட்டுச் சிதறும் வண்ண மாலையாக உலகம் தோன்றுகிறது.

அருகிலுள்ள வேம்பின் உச்சியில் இரு பச்சைக்கிளிகள் கொஞ்சுகின்றன.

“அதா, கிளி! கிளி!…” என்று அந்தக் குழந்தைகள் கவடற்ற ஆனந்தத்தில் மூழ்கிக் கூச்சலிடுகின்றன.

உதயத்தின் செம்மை மாறி, ஒளிக்கற்றைகளில் வெம்மை ஏறுகிறது. மாமன், ஓடைக்கரையினூடே வரும் ஒற்றையடிப் பாதையில் வெண்மையாக ஆள் அசைந்து வருவது தெரிகிறதா என்று முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறார். வேலு அவர்களை எதிர் கொண்டு அழைப்பவனாக பாதி வழிக்கே ஓடிச் சென்று நிற்கப் போகிறான்.

அருணாசலத்துக்கு அடிமனதில் ஓர் அச்சம் உண்டு. ஏனெனில் தங்கபாண்டி அந்தப் பக்கமே நடமாடுபவன். அவன் பொன்னாச்சி தனக்குரியவளென்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான். அதனாலேயே அவர் கேட்டவுடன் பணமும் கொடுத்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்தால் ஏதேனும் இடையூறு செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவர் இந்தத் திருமணத்தையே இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் எல்லோரும் திருச்செந்தூர் சென்று மணமுடிப்பதென்றால், செலவு அதிகமாகும். அதற்கேற்ற தாராளம் கூட இப்போது இல்லை.

“நாங்க முன்னாடி மாப்பிள்ளையோடு வந்து காத்திருப்பம். நீங்கதா பொண்ணுக்குச் சிங்காரிச்சிக் கூட்டியார நேரமாவும்” என்று தனபாண்டியன் கூறினாரே? மணி எட்டாகிறது. இன்னும் வரவில்லை? எட்டு மணிக்கு அவர்கள் மணமுடித்துத் திரும்பி விட வேண்டும் என்றல்லவா திட்டம் போட்டிருக்கின்றனர்!

பொறுமையுடன் உச்சி விளிம்பில் நிற்பதைப் போன்று ஓர் பரபரப்பு அவரை அலைக்க, மேற்கே அவர் விழிகளைப் பதித்திருக்கையில், பின்புறமிருந்து குரல் கேட்கிறது.

“என்ன மாமா? என்ன விசேசம் இன்னிக்கு? கோயில்ல வந்து?… அட… பொன்னாச்சியா?… என்ன இன்னிக்கு?” என்று மண்டபத்தின் பக்கம் தங்கபாண்டியின் குரல் கேட்டு அவர் திடுக்கிட்டவராக வருகிறார். அவர் உமிழ் நீரை விழுங்கிக் கொள்கிறார். “எங்க வந்த நீ?”

“நா கிளித்தட்டு ஓடப்பக்கம் வரயில இங்க ஆளுவ தெரிஞ்சிச்சி, என்ன விசேசம்னு வந்த, அங்ஙன ஆர எதிர்பார்த்திட்டு நிக்கிறிய?”

“ஆரயுமில்ல, சக்திவேலு வந்திருக்கா. அவ பெறந்த நாளு அவாத்தா ஏதோ நேந்துக் கிட்டாப்பல… அவனுக்காவத்தா நிக்கே…”

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? தங்கபாண்டியன் கண்கள் கபடத்தை நிரப்பிக் கொண்டு பொன்னாச்சியின் மீது பதிகின்றன. பிறகு தட்டத்துக்கு மாறுகின்றன.

“கெளவா, பொய்ய ஏஞ் சொல்ற?” என்ற முணமுணப்புடன் அவர் மீது குரோதப் பார்வையை வீசுகிறான்.

“அதுக்கு ரெண்டுமால, புதுச்சீல, வேட்டி… ஒம்ம மவனுக்கு இவளக் கட்டி வைக்கப் போறியளா?”

“தங்கபாண்டீ! வாயத் தொறந்து வார்த்தய அநாவசியமா வுடாத. ஒஞ்சோலியப் பார்த்திட்டுப் போ!”

“என்ன சோலி? என்னவே சோலி? இப்ப ஏன் சோலி இதா. எனக்கு இப்ப பணம் வேணும்? என் ரூவாய வச்சிட்டு மறுவேலை பாரும்!”

“சரி, தார. நீ முதல்ல இந்த இடத்தில இப்ப ஏங்கிட்ட வம்புக்கு வராத. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. போல…”

அவர் அழாக் குறையாகக் கெஞ்சுகிறார்.

“அது சரி. எனக்கு இப்ப பணமொட. ஒங்ககிட்டக் கேக்கத்தா வந்த…” என்றவன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக்கென்று குனிந்து தட்டத்தில் வெற்றிலை பூமாலைகளுக்கிடையே புதிய மஞ்சட்சரட்டில் கோத்து வைத்திருந்த மங்கிலியத்தை எடுத்து விடுகிறான்.

அவர் பதறிப் போகிறார். “ஏல, குடுரா அதெ. கொரங்குப் பயலே? அத்த ஏண்டா எடுத்த?” அவன் பின் அவர் ஓடுகிறார்.

“நீரு என்னிய மோசஞ் செய்தீரல்ல? இந்தத் தாலிய இப்ப கெட்டி இவள இழுத்திட்டுப் போவ.”

பொன்னாச்சி அஞ்சிச் சந்நிதிச் சுவரோரம் ஒண்டிக் கொள்கிறாள்.

“சங்கமேசுவரா! இதுவும் ஒன்சோதனையா?” என்று கலங்கிய அவர் அவன் கையைப் பற்றி அவன் மடியில் கட்டிக் கொள்ளும் அந்த மங்கிலியத்தைக் கவர முயலுகிறார். ஆனால் அவன் அவரைத் தள்ளிவிட்டு ஓடியே போகிறான்.

பொன்னாச்சி இடி விழுந்த அதிர்ச்சியுடன் மாமனை எழுப்புகிறாள்.

பச்சை சக்திவேலுடன் போய்விட்டானா?

“அவ ஓடிட்டா… ஓடிட்டா!” என்று பாஞ்சாலி கத்துகிறாள்.

“பாவிப் பய, இதுக்கு அநுபவிப்பான். இவனுக்கு மண்ண வெட்டிப் போடுற…” என்று மாமன் குடி முழுகிப் போன ஆத்திரத்தில் கத்துகிறார்.

சக்திவேலும் பச்சையும் வருகின்றனர்.

“எங்கலே போயிட்டிய? அந்த மடப்பய தாலியத் தூக்கிட்டு ஓடிட்டானே? நான் ஒரு மட்டி. தாலிய மடிலல்ல வச்சிருக்கணும்!” என்று புலம்புகிறார்.

“நீங்க கடசீ நேரத்துல எடுத்து வச்சாப் போதுமே? யாரு அந்தப் பய…?” என்று விசாரிக்கிறார் குருக்கள்.

“என் கரும வினை? ஈசுவரன் ரொம்ப சோதிக்கிறார்!”

சக்திவேலுக்கு எதுவும் புரியவில்லை.

“யாரச் சொல்லுறியப்பா? அவங்கல்லாம் அங்க வாராங்க. எதோ பஸ்ஸில் வந்து இறங்கி வராப்பில…”

மாமனின் முகத்தில் ஈயாடவில்லை.

மணாளனை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்பதற்கு மாறாக அதிர்ச்சியுடன் கண்களில் நீர் கசிய, பொன்னாச்சி நிற்பதைக் கண்டு ராமசாமி திடுக்கிடுகிறான்.

“என்ன வுள்ள? என்ன நடந்திச்சி?”

“ஒண்ணில்ல, நீங்கல்லா வரக்காணமின்னுதா, கொஞ்சம் சடைவு…”

சங்கமுகேசுவரனுக்கு முன்பு சாத்திய ரோஜா மாலையைக் குருக்கள் மூலையில் போட்டிருக்கிறார். அதைப் பிரித்து எடுத்து, நூலை தனியே பிரித்து முறுக்கி மஞ்சட் தூளைப் பூசி விரைவில் மாமன் கொண்டு வருகிறார். அதில் பொன்னின் சின்னமில்லை; ராமசாமி ஏதோ நடந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்கிறான். எனினும் கேட்கவில்லை. அந்த மஞ்சட் கயிற்றை அவளுக்குப் பூமாலையுடன் அணிவித்து அவளை உரிமையாக்கிக் கொள்கிறான். குருக்கள் மணியடித்து மணமக்களுக்காக அருச்சனை செய்கிறார். பொங்கல் பிரசாதம் பெற்று மணமக்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகையில் அருணாசலத்தின் கண்களிலிருந்து நீரருவி பெருகுகிறது. புட்டும் பயற்றங் கஞ்சியும், பழமும் பப்படமுமாக மாமி அவர்களுக்குக் காலை விருந்தளிக்கிறாள்.

மாமியின் காலைக் கும்பிட்டுப் பணிகையில் புதிய தாலியை எடுத்துக் காட்டவில்லை. முனிசீஃப் வீட்டாச்சியை, இன்னும் தெரிந்தவர்களைக் கும்பிடுமுன் மாகாளியம்மன் கோயிலையும் வலம் வந்து பணிகின்றனர். பின்னர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி பஸ் ஏறுகின்றனர்.

தெரு முனையில் இவர்கள் வருவதை வாயிலிலிருந்தே சரசி பார்த்து விடுகிறாள். “அக்கா வந்திற்று… அக்கா… அல்லாம் வந்திட்டாவ…!” என்று உள்ளே ஓடுகிறாள். சொக்கு வருகிறாள்; பவுனு வருகிறாள். சொக்குவின் புருசன் கூட எழுந்து நிற்கிறான்.

செங்கமலத்தாச்சி எங்கே?

“ஆச்சியில்ல சரசு?”

“ஆச்சிய, அந்தப் பெரிய கணக்கவுள்ள ரிச்சாவில கூட்டிட்டுப் போனாவ!”

பொன்னாச்சி கேள்விக் குறியுடன் அவள் முகத்தைப் பார்க்கிறாள்.

“பெரி… முதலாளிக்கு ரொம்ப ஒடம்பு சாஸ்தியாயிருக்குன்னு கூட்டிப் போனா. படுத்த படுக்கையா இருக்காவளா…” என்று மெல்லிய குரலில் சாடையாகச் சேதி தெரிவிக்கிறாள் சொக்கு.

பொன்னாச்சி சட்டென்று நினைவு வந்தவளாகச் சொக்குவையும், அவள் புருசனையும் அடி தொட்டுப் பணிகிறாள்.

அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி; பவுனுவும் சொக்குவும் குலவையிட்டு வாழ்த்துகின்றனர். இலைகளில் இட்டிலியுடன் சீனியும் சட்னியும் வைத்து அவளுக்கும் ராமசாமிக்கும் உண்ணக் கொடுக்கிறாள் சொக்கு.

“நாங்க அங்கேயே உண்டாச்சு. இப்ப வாணாம்…” என்றால் அவள் விடுகிறாளா?

“இருக்கட்டும்… உண்டுக்கடீ… உங்கப்பா, ஆயி, சின்னம்மா, ஆருமே பாக்க இல்லாம போயிட்டாவ…” என்று கண் கலங்குகிறாள். சிவந்தகனி பழமும் கலரும் வாங்கிக் கொண்டு ஓடி வருகிறான். சிவந்தகனியின் பெண்சாதி அவள் புடவையைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறாள். குழந்தை பழத்துக்குக் கை நீட்டுவதை விலக்கிக் கொண்டு அவளுக்கு இலையில் பழத்தை வைக்கிறாள். சேவு பொட்டலத்தை அவிழ்த்து வைக்கிறாள். “அக்காவுக்கு ரொம்ப ஆசை… கலர் குடிச்சிக்கும் மாப்பிள! பொன்னாச்சி! கலர் குடிச்சிக்க…!” என்று சிவந்தகனி உபசரிக்கிறான்.

“என்னத்துக்கு இப்படிச் செலவு பண்ணுறிய?” என்று பொன்னாச்சி கடிந்து கொள்கிறாள். “சரசி! கிளாசெடுத்திட்டு வா!”

“இருக்கட்டும். கலியாணம் கட்டி வாரவங்களுக்கி ஒரு விருந்தாக்கிப் போட இல்லாத போயிட்டம். நீங்க ஆருக்கும் குடுக்க வாணா. நா அவியளுக்கு வேற வாங்கிக் குடுப்ப…”

இந்த அன்புப் பொழிவில் திளைத்த பின் ராமசாமி அவளைத் தன் குடிலுக்கு அழைத்துச் செல்கிறான். மாலை மயங்கும் அந்த நேரத்தில் வீடு திரும்பும் அனைவரும் அந்த மணமக்களைப் பார்த்து வியந்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கூந்தலில் தாழையும் மருவும் மணக்க, தன் மகனுடன் வந்து அடி தொட்டுப் பணியும் பெண்ணைக் கண்டு தாய் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. பிறகு அவன் முகத்தை அவள் கை தடவுகிறது.

“ஏ ராசா…!…”

கண்களில் ஒளி துளும்புகிறது.

“அம்மா, இவ தா ஒம் மருமவ… பொன்னாச்சி.”

தாய் அவளுடைய கழுத்திலுள்ள மஞ்சட் சரட்டைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். வெறும் மஞ்சள் சரடு. ஒரு குன்றிமணி பொன்னில்லை.

“இம்புட்டு நா வேல செஞ்சே! அளத்து மொதலாளி கலியாணத்துக்கு ஒண்ணுமே இல்லேன்னுட்டாவளா? ஒரு மிஞ்சி தங்கமில்ல.”

“அம்மா இவ பேரே பொன்னாச்சிதா! அம்புட்டும் தங்கம்!” அவனுடைய நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு ரசிக்கத்தானில்லை. பொன்னாசிக்கோ, பாயசத் துரும்பாய் நினைவுப் பிசிறுகள் நெஞ்சில் தைக்கின்றன.

இரவு, பாய் தலையணையை உள்ளே வைத்துவிட்டு, தாய், தனது துணி விரிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறாள். அந்தச் சோபன இரவில், பொன்னாச்சி கண்ணீர் தோய்ந்த பனி மலர் போல் விலகி நின்று அவனைப் பணிகிறாள்.

“என்னவுள்ள இது?”

“நீங்க பொறவு மனக்கிலேசப் படக்கூடாது. தாலியத் தங்கபாண்டி எடுத்திட்டுப் போனா. ஒங்கக்குத் தெரியும். அவெ தாலியத்தா கொண்டு போனா. என் ராச நா எப்படிச் சொல்லுவே ஒங்ககிட்ட.”

ராமசாமிக்கு இதையெல்லாம் கேட்கப் பொறுமையில்லை.

“நீ ஒண்ணுஞ் சொல்லாண்டா. சொல்லவுடமாட்ட…”

அவள் கை அவனைத் தடுத்து நிறுத்துகிறது. அவன் திகைத்துப் போகிறான்.

“நா அன்னியே ஒங்ககிட்டச் சொன்ன; அந்தக் கிழக்கில உதிப்பவஞ் சாட்சியா என் அந்தராத்மாவுல துளி அழுக்கு கெடயாது. ஆனா, பாத்திக்கட்டுச் சேறு எம்மேல பட்டிரிச்சு!…”

“அட, சே, இந்த நேரத்துல இத்தையெல்லாஞ் சொல்லிட்டு? அந்த நாச்சப்பமூஞ்சில அன்னைக்கே குடுத்தனே?”

“நாச்சப்ப இல்ல. அவனை நா சமாளிச்சிட்ட. அந்தச் சோலப் பய குடிச்சிட்டு தேரிக் காட்டு இருட்டில..” அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள்.

ஒரு கணம் பருக்கைக் கல் குத்திவிட்டாற் போன்று ராமசாமி திடுக்கிட்டுப் போகிறான். ஆனால் மறுகணம் அவன் வென்று விடுகிறான்.

பொன்னாச்சியின் கண்ணீர் கரிப்பில் உதடுகள் அழுந்துகின்றன.

“நீ பொன்னு… தங்கம். எந்தச் சேறும் ஒம் மேல ஒட்டாது. நீ தங்கம்…”

அந்தக் கரிப்பு ஈரேழு உலகங்களிலும் கிடைக்காத இனிமையாக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 01வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 01

திவான் லொடபட சிங் பகதூர் பூலோக விந்தை நமது சென்னை இராஜதானிக்கு வடக்கில் சுதேச அரசரால் ஆளப்பட்டு வரும் பெரிய சமஸ்தானம் ஒன்று இருக்கிறது. ஊரைச் சொன்னாலும் சொல்லலாம், பெயரை மாத்திரம் சொல்லல் ஆகாது என்பது விவேகிகளால் அநுபவபூர்வமாகக் கண்டு பிடிக்கப்

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணிகளாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றிலிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். சரேலென்று, “அப்பச்சி!