Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 18

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 18

நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத பறவையினங்கள், ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில் கீதமிசைக்கின்றன. அவற்றுக்குச் சோற்றுக் கவலை, தொழிற் கவலை, கல்யாணக் கவலை, பிள்ளை குட்டிக் கவலை எதுவுமே இல்லை. அந்தந்த நேரத்து இயற்கை உந்துதலுக்கேற்ப வாழ்கின்றன. ஒரு பறவை பட்டினி கிடந்து செத்ததாகத் தெரியவில்லை. மனிதன் அறிவு பெற்றிருக்கிறான். ஒருவன் மற்றவனை அமுக்கி வாழ்வதே அறிவு பெற்றதன் பயனாக இருக்கிறது. இந்த இடைவிடாத போராட்டம் தான் எல்லா நிலைகளிலும் என்று நினைத்துக் கொண்டு அருணாசலம் நடக்கிறார்.

அவர் சற்று முன் தான் தூத்துக்குடியிலிருந்து வரும் முதல் காலை பஸ்ஸில் வந்து இறங்கினார். நேராக வீட்டுக்குள் செல்லாமல் அளத்துக்கு நடக்கிறார். முதல்நாள் மாலையில் சென்றிருந்தவர், இரவே திரும்பியிருக்கலாம். ஆனால், கூட்டத்தில் உட்கார்ந்து விட்டார். பொழுது சென்றது தெரியவில்லை. பொன்னாச்சிக்காக அந்தப் பையனைக் கண்டு வரத்தான் அவர் சென்றிருந்தார். அவன் வீட்டுப் பக்கமே மண் திடலில் எல்லோரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கங்காணிமார், பெண்கள், கூலிக்காரர்கள் எல்லோருமே இருந்தார்கள். தொழிற்சங்கத்துத் தன்பாண்டியனும் இருந்தான்.
“தொழிலாளிகளை ஒண்ணு சேக்கறதுன்னா ‘மம்முட்டி, கடப்பாரை, தடி இதுங்களை வச்சிட்டு வேலைக்கிப் போனா கை வேறு கால் வேறக்கிடுவம்’னு பயமுறுத்தித்தான் ஆகணும்னா, அந்த அடிப்படையே சரியில்லை” என்று பேசிக் கொண்டிருந்த இளைஞன் தான் ராமசாமி என்று தெரிந்து கொண்ட போது மனதுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

“தொழிலாளிகள் தங்கள் நிலைமைகளள உணர்ந்து ஒண்ணு சேரணும்!” என்றூ அவன் கூறிய போது ஒருவன் நையாண்டி செய்தான்.

“கொக்கு தலையில் வெண்ணெய வச்சுப் பிடிக்கிற கதை தா அது. இப்ப தொழிலாளியெல்லாம் உணராமயா இருக்காவ? உணந்துதா அணு அணுவாச் செத்திட்டிருக்கம்!”

“அது சரி, இங்கே ஒரு பேச்சுக்குச் சொல்லுற குடி தண்ணி இங்கே இல்ல. எத்தினி காலமாவோ எல்லாப் பொண்டுவளும் பாத்திக் காட்டுல உழச்சிட்டு வந்து மைல் கணக்கா தவ தண்ணிக்கும் நடக்கா. இது ஒரு மனு எளுதிச் சம்பந்தப்பட்டவங்க கிட்டக் குடுக்கணுமின்னோ எல்லோரும் சேந்து கூட்டாக் கூச்சல் போட்டுக் கேட்கணுமின்னோ ஆரு வழி செஞ்சிருக்கா? நமக்குப் பிரச்சினை ஒண்ணா, ரெண்டா? வெளி உலகமெல்லாம் திட்டம் அது இதுன்னு எத்தினியோ வருது. எது வந்தாலும் நம்ம வாய்க்கும் எட்டுறதில்ல. இந்தப் பிள்ளங்களுக்குப் படிக்கணுமின்னாலும் வசதியில்ல. நானும் ஒண்ணேகா ரூவாக் கூலிக்கு உப்புக் கொட்டடிக்குத் தாம் போன. அதே படிக்க வசதி இருந்தா வேற விதமா முன்னுக்கு வந்திருக்கலாம். நம்ம உலகம் உப்பு உப்புன்னு முடிஞ்சி போவு. கரிப்பிலியே இந்தத் தொழிலாளி அழுந்திப் போறா. இதுக்கு ஒரு நல்ல காலம் வரணுமின்னா நாம முன்னேறணும்னு நினைச்சு ஒண்ணு சேந்துதா ஆகணும்…”

அந்தச் சொற்கள் அவரது உள்ளத்தில் இன்னமும் எதிரொலிக்கின்றன. பொன்னாச்சியை அவனுக்குத்தான் கட்டவேண்டுமென்று அவர் முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தாயை அவரால் முதல் நாள் பார்த்துப் பேச முடியவில்லை. பையனை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் பேசினார்.

தங்கபாண்டி ஓடை கடந்து வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறான். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு அவர் நிற்கிறார்.

“நேத்து நீரு எங்க போயிருந்தீரு மாமா?” என்று கேட்ட வண்ணம் அவன் வண்டியை விட்டிறங்கி வருகிறான்.

“நேத்து நீ உப்பெடுக்க வந்தியா?”

“நா வரல மாமா. தீர்வ கட்டலன்னு முனுசீப்பு ஆளுவ உப்பள்ள வாராவன்னாவ. ஆச்சி புருவருத்திட்டிருந்தா…”

அவர் திடுக்கிட்டுப் போகிறார். அவர் வீட்டில் ஆச்சியைப் பார்க்கவில்லை. சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அறைச்சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.

அவர் உடனே பரபரப்பாக அளத்தை நோக்கி விரைகிறார்.

முனிசீப்பு அவ்வளவுக்குக் கடுமை காட்டி விடுவாரோ?

யாரும் வந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்… அவர் வரப்பில் வாரி ஒதுக்கிய உப்பு அப்படியே தானிருக்கிறது. தீர்வை கட்டவில்லை. இரண்டாண்டுத் தீர்வை பாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லை. வரும் ஆண்டுடன் குத்தகையும் புதுப்பிக்க வேண்டும். இருநூறு ஏக்கர் கூட்டுறவு உற்பத்தி நிலம் என்று பேர் வைத்துக் கொண்டு பத்து ஏக்கர் கூட உற்பத்தி செய்யவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்து விடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்த அச்சம் வேறு ஒரு புறம் அவருள் கருமையைத் தோற்றுவிக்காமல் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேல், அப்படியெல்லாம் நடக்காது என்ற ஓர் தைரியம் அவருக்கு எப்போதும் இருக்கிறது.

தங்கபாண்டியிடம் கோபம் வருகிறது.

“ஏன்ல பொய் சொன்ன?”

“நா ஆச்சி சொன்னதைக் கேட்டுச் சொன்ன, அப்ப இன்னிக்கு வாராவளா இருக்கும்…”

“அவெ உப்ப அள்ளி ஒனக்குக் கொள்ள வெலக்கிக் குடுப்பான்னுதான் சிரிக்கே?”

முன் மண்டையில் முத்தாக வேர்வை அரும்புகிறது அவருக்கு.

“கோவிச்சுக்காதிய மாமா. வண்டி கொண்டாரட்டுமா உப்பள்ளிப் போகட்டுமா?”

“எலே… இங்கி வாலே… ஒங்கிட்ட ஒரு ஒதவி வேணும்.”

அருணாசலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முன் மண்டையைத் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.

“சொல்லு மாமா!”

“ஒரு அந்நூறு ரூவா வேணும்ல. வட்டுக் கடனாக் குடுத்தாலும் சரி…”

அவனுடைய கண்களில் ஒளிக்கதிர்கள் மின்னுகின்றன.

“இப்ப மொடயா மாமா? வட்டுக் கடன் வாங்கித் தீர்வை கட்டவா போறிய?”

“வேற மொடயும் இருக்குலே. ஒங்கிட்ட இருக்குமா?”

“அண்ணாச்சிட்டத்தா கேக்கணும். எப்படியும் இந்தப் புரட்டாசிக்குள்ள மழக் காலம் வருமுன்ன கலியாணம் கெட்டி வய்க்கணும்னு மயினியும் சொல்லிட்டிருக்கா. பொண்ணு ரெண்டு மூனு பாத்து வச்சிருக்கா, ஆனா எனக்குப் பிடித்தமில்ல…”

“புடிச்ச பொண்ணாப் பாத்துக் கெட்டு, ஒனக்குப் பொண்ணா இல்ல?”

“ஒங்கிட்டச் சொல்றதுக்கென்ன மாமா? பொன்னாச்சிப் புள்ளயத்தா மனசில இட்டமாயிருக்கு…”

“ஒங்கிட்டப் பணம் இருந்தாக் குடு. இல்லேன்னா வேற தாவுலன்னாலும் ஏற்பாடு பண்ணித்தாலே. ஊரூரு பஸ் சார்ச்சி குடுத்திட்டுப் போயி அவனவங்கிட்டத் தீர்வை பிரிக்க வேண்டியிருக்கு. ஒரு பய கண்ணுல அம்புடறதில்ல. வேலை செய்யிறா, நல்ல துணி போடுறா, பொஞ்சாதிப் புள்ளய கூட்டிட்டுச் சினிமாவுக்குப் போறா. இதுக்குத் தீர்வை ரெண்டு ரூபா குடுக்கணும்னா இப்ப கையில பைசா இல்லைன்றா, இது கூட்டுறவா? கமிட்டிக்கார, பேர் போட்டுக்கதா கமிட்டிக்காரன்னு நினய்க்கா…” என்று வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார் அருணாசலம்.

“பாக்கேன் மாமா, எங்கிட்ட இருந்தா அட்டியில்ல. ஒங்கக்குக் குடுக்க என்ன மாமா? ஆனா வட்டிதா முக்கா வட்டி ஆவுமேன்னு பாக்கேன். தவற தாவுல தா வாங்கணும்…”

“வட்டிக்குச் சோம்பினா முடியுமா? தொழிலாளி நிலைமை வட்டிக்கு வாங்கறாப்பலதான இருக்கு? வங்கில கடன் கொடுக்காங்க. தொழிலாளிய நம்பி எவன் ஷூர்ட்டி போடுறா?”

அருணாசலம் அவனுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு தான் அவனுக்கு நம்பிக்கை கொடுப்பது போல் நடிக்கிறார். அவனை ஏமாற்றுவதற்குக் கஷ்டமாகத் தானிருக்கிறது.

ஆனால் பொன்னாச்சி ராமசாமிக்கே உரியவள் என்று அவர் தீர்மானித்து விட்டார். தங்கபாண்டியனைப் போல் பலரைக் காண முடியும். அவன் துட்டுச் சேர்ப்பான். பெண்ணைக் கட்டுவான். நகை நட்டுப் போட்டு இரண்டு நாள் கொஞ்சி விட்டு மூன்றாம் நாள் அடித்து அதிகாரம் செய்வான். குடிப்பான், நகையை வாங்கி அடகு வைப்பான். இங்கே பாலம் வந்தால் இவன் தொழில் படுத்துவிடும். (‘பாலமாவது வருவதாவது’ என்று அவரைப் போன்றவர்கள் அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்கலாகாது!)

ஆனால் ராமசாமியோ, ஆயிரத்தில் ஒரு பையன். மாசச் சம்பளம், அவனுக்கென்று அவர்கள் காட்டிய ‘தயாளம்’ எல்லாவற்றையும் பொது இலட்சியத்துக்காக உதறி விட்டு வந்திருக்கிறான். தலைவன் என்று சொல்லிக் கொண்டு வரும் ஆட்களிடம் இல்லாத நேர்மை இவனுக்கு இருக்கிறது. அவன் தலைவனாக வருவான். அவனுக்குப் பெண்ணைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்வது அவருக்குப் பலம். பொன்னாச்சி அவனிடம் இட்டமாக இருக்கிறாள். அவன் தான் சிறந்தவன். அதற்காக இவனை ஏமாற்றலாம்…

“ஏல… ஆச்சியிட்ட மூச்சி விட்டிராத… பத்திரம்!” என்று எச்சரித்து வைக்கிறார்.

அவன் சிரித்துக் கொள்கிறான். “பொன்னாச்சிய எப்ப மாமா கூட்டிட்டு வாரிய? மானோம்புக்குக் கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கல அந்த வுள்ள?”

“கூட்டிட்டு வாரணுந்தா. ஒனக்குத் தெரியாதா தங்கபாண்டி. வந்தா ஒரு சீலை எடுத்து நல்லது பொல்லாது செய்யணும். இங்க என்ன இருக்கு? இந்தப் பய்யன் படிச்சு முடிச்சு வாரங் காட்டியும் குறுக்கு முறிஞ்சிடும் போல இருக்கு. ஏதோ அப்பன், சின்னத்தா என்னிக்கிருந்தாலும் தாயோடு பிள்ளையோடு போக வேண்டியது தான?…”

“…அது சரி. பொன்னாச்சி எங்கிட்டச் சொல்லிட்டுத் தா பஸ் ஏறிப் போச்சு…”

அவன் மீசையைத் திருகிக் கொண்டு சிரித்துக் கொள்கிறான்.

“அப்பிடியா?” என்று அவர் வியந்தாற் போல் கேட்கிறார்.

“ஆமா… பணம் எப்ப வேண்டும் மாமா?”

“நாளைய கொண்டாந்தாலும் சரி, நா நோட்டு எழுதிக் குடுக்கே.”

“அதுக்கென்ன மாமா, ஒங்க பணம் எங்க போவு?”

அவன் ஆசை நம்பிக்கையுடன் வண்டிக்குச் சென்று ஏறிக் கொண்டு போகிறான்.

ஐநூறு ரூபாய் கைக்கு வந்ததும், அந்தத் தாலியை மூட்டு விட வேண்டும். ஒரு சேலை, இரண்டொரு பண்டங்கள், வேட்டி எல்லாம் வாங்கி, திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கல்யாணம்… கல்யாணம். அவர் தொழியைத் திறந்து விட்டு, கிணற்றில் நீரிறைக்கத் தொடங்குகிறார்.

ஆச்சி குளிக்க அவ்வளவு காலையில் சென்றிருக்க மாட்டாள். முன்சீஃப் வீட்டுக்குச் சென்றிருப்பாளோ?

பசி கிண்டுகிறது.

குழந்தைகள் அவர் வந்துவிட்டதைச் சொல்லியிருப்பார்கள். உப்பை வாரிப் போட வேண்டும். அவள் வருவாளோ? சற்றே ஆசுவாசமாகச் சார்ப்பு நிழலில் அமர்ந்து கொள்கிறார். அவள் தலையில் வட்டி, இடுப்பில் மண்குடம் சகிதமாக வருவது தெரிகிறது. சோறு கொண்டு வந்திருப்பாள்…

அவள் அருகே வந்ததும் நல்ல நீர்க் குடத்தை வாங்கி வைக்கிறார். தலைச்சுமையையும் இறக்கியதும் அவள் சேலை மடிப்பிலிருந்து ஒரு பழுப்பு நிறக் கடித உறையை எடுத்து அவரிடம் கொடுக்கிறாள். ‘துணைச் செயலாளர்’ கூட்டுறவு உப்புத் தொழிலாளர் உற்பத்தி விற்பனைச் சங்கம் என்று போட்டு மேலிடத்திலிருந்து வந்திருக்கும் கடிதம்.

“தீர்வை கட்டச் சொல்லி வந்திருக்கிற நோட்டீசுதான? இத மூட்ட கட்டிக்கிட்டு வந்தியாக்கும்!”

“எனக்கு என்னெளவு தெரியும்? வள்ளிப் பொண்ணை வுட்டுப் படிக்கச் சொன்ன. நேத்து முன்சீஃப் வீட்டு ஆச்சி சொன்னாவ. லீசைக் கான்சல் பண்ணிடுவாகன்னு. என்னவோ பாட்டரி வர போவுதா? அவிய பாலங்கீலம் போட்டுக்குவாகளாம்! என்ன எளுதியிருக்குன்னு எனக்கென்ன எளவு தெரியும்?”

அவருக்குக் கை நடுங்குகிறது. கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது. “கண்ணாடி கொண்டாந்தியா?”

“கொண்டாந்திருக்கே!” என்று பனநார்ப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்கிறாள்.

அவர் கைகளைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியை மாட்டிக் கொண்டு கடிதத்தைப் பிரிக்கிறார். அருணாசலத்துக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் கூட்டுறவுச் சங்க கடிதங்கள் தமிழில் வருகின்றன. அவர்களுடைய நிலக் குத்தகை இருபது ஆண்டுகள் முடிந்து விடுவதாலும், மூன்று தீர்வைகள் கட்டியிராததாலும், நிலக் குத்தகை இனி புதுப்பிக்கப்படுவதற்கில்லை என்றும் கடிதம் தெரிவிக்கிறது.

முன்பே அந்த அதிகாரி “இருநூறு ஏகராவில் பத்தே ஏகராக்கூட நீங்கள் உப்பு விளைவிக்கவில்லை. இது எப்படிக் கூட்டுறவுச் சங்கம் நன்றாக நடப்பதாகக் கொள்ள முடியும்?” என்று கேட்டார்.

நிலம் பட்டா செய்யும் போது எல்லோரும் வந்தார்கள். இப்போது…

அவருடைய கண்களிலிருந்து கரிப்பு மணிகள் உதிருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13

ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை – ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. சைக்கிளைப் பிடித்துக் கொண்டு

கல்கியின் பார்த்திபன் கனவு – 11கல்கியின் பார்த்திபன் கனவு – 11

பார்த்திபன் கனவு இரண்டாம் பாகம் அத்தியாயம் 11 சிவனடியார் பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கெண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த

கல்கியின் பார்த்திபன் கனவு – 64கல்கியின் பார்த்திபன் கனவு – 64

அத்தியாயம் 64 புதையல் கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான்.