அத்தியாயம் 44
சிதறிய இரத்தினங்கள்
விக்கிரமன் காட்டு வழிக்குள் புகுந்து கண்ணுக்கு மறைந்ததும் ஒற்றர் தலைவன் மீண்டும் அந்தச் சிற்ப வீட்டுக்குள் புகுந்தான். மார்பில் இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிய வண்ணமாகச் சற்று நேரம் அங்கிருந்த தெய்வீகச் சிலைகளை பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது அவனுடைய கண்களில் நீர் ததும்பிற்று. பிறகு, அங்கு வந்த கிழவியைப் பார்த்து, “அம்மா! இந்தப் பிள்ளை மறுபடியும் ஒருவேளை இங்கு வந்தானானால் அவனுக்குத் தங்குவதற்கு இடங்கொடு; ஆனால் என்னுடைய இரகசியத்தை மட்டும் உடைத்து விடாதே! மறுபடியும் ஐந்தாறு நாளில் நான் வருகிறேன்” என்றான். “அப்படியே சுவாமி” என்றாள் கிழவி. பிறகு ஒற்றர் தலைவன் அந்தச் சிற்ப மண்டபத்தின் பின்புறம் சென்றான். அங்கே விக்கிரமன் ஏறிச் சென்றது போலவே தத்ரூபமாய் இன்னொரு குதிரை இருந்தது. அதன்மேல் வெகு லாவகமாக ஏறி உட்கார்ந்து அவ்வீரன் கிளம்பினான். விக்கிரமன் போன வழியாக அவன் போகாமல் முதல் நாள் இரவு வந்த காட்டுக்கொடி வழியில் புகுந்து சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் வழிப்பறிக்கு ஆளான இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
ஒற்றர் தலைவன் அவ்விடத்தை நெருங்கி அங்குமிங்கும் உற்றுப் பார்த்தான். அவனுடைய முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. உற்றுப் பார்க்கப் பார்க்க அவனுடைய அதிசயம் அதிகமாயிற்று. ஆச்சரியத்துக்குக் காரணம் என்னவென்றால் முதல்நாள் இரவு இரத்தின வியாபாரியின் வாளுக்கும், தன்னுடைய வாளுக்கும் இரையாகி விழுந்தவர்களின் உடல்கள் அங்கே காணப்படவில்லை! அவ்விடத்தில் மிகவும் அருவருப்பான, கோரக்காட்சி ஒன்றை ஒற்றர் தலைவன் எதிர்பார்த்தான். இரவில் காட்டுமிருகங்கள் இரை தேடி அங்கு வந்திருக்குமென்றும், அவை இரை உண்ட பிறகு மிகுந்த எலும்புக் கூடுகள் சகிக்க முடியாத காட்சியாக இருக்குமென்றும் அவன் எண்ணினான். ஆனால் அங்கே அப்படியொன்றும் காணப்படவில்லை. காட்டு மிருகங்கள் எலும்பைக்கூட விழுங்கியிருக்குமா? அல்லது உடல்களை அப்படியே இழுத்துக் கொண்டு போயிருக்குமா? அப்படிப் போயிருந்தால், அந்த ஆட்களின் துணிமணிகள் வாட்கள் எல்லாம் எங்கே? – “நாம் போன பிறகு இங்கே யாரோ வந்திருக்கிறார்கள்! என்னமோ நடந்திருக்கிறது!” என்று ஒற்றர் தலைவன் எண்ணினான்.
உடனே அவன் குதிரையிலிருந்து குதித்து இன்னும் கவனமாக அங்குமிங்கும் உற்றுப் பார்க்கத் தொடங்கினான். சட்டென்று ஒரு பொருள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அவனுடைய முகத்தில் அப்போது வியப்பு மட்டுமல்லாமல், கேள்விக்குறியும் தோன்றியது. அந்தப் பொருள் என்னவெனில், ஒரு மண்டை ஓடுதான்! நேற்று அங்கு இறந்து விழுந்தவர்களின் மண்டை ஓடாக அது இருக்க முடியாது. அது மிகப் பழமையான மண்டை ஓடு. “நேற்று நாம் போன பிறகு இங்கு வந்தவன் கபாலிகனாயிருக்க வேண்டும். அவன் கழுத்தில் போட்டிருந்த மண்டை ஓட்டு மாலையிலிருந்து தான் இது விழுந்திருக்க வேண்டும். அவனோ, அவர்களோதான், இங்கே செத்து விழுந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்!” என்று ஒற்றர் தலைவன் எண்ணமிட்டான்.
இன்னும் அவ்விடத்தில் அவன் சுற்றுமுற்றும் பார்த்த போது ஓரிடத்தில் இரத்தினங்கள் கொஞ்சம் சிதறிக் கீழே கிடப்பதைக் கண்டான். குள்ளன் இரத்தின மூட்டைகளைக் கீழே போட்ட போது, ஒரு மூட்டை அவிழ்ந்து போய்ச் சிதறி இருக்கவேண்டும். அந்த இரத்தினங்களைத் திரட்டி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி ஒற்றர் தலைவன் குனிந்தான். அந்தச் சமயத்தில் கொஞ்ச தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது! சத்தத்திலிருந்து நாலைந்து குதிரைகளாவது வருகின்றன என்று தோன்றியது. ஒற்றர் தலைவன் உடனே விரைந்து குதிரைமேல் ஏறி அதைச் செலுத்திக் கொண்டு பக்கத்திலிருந்த காட்டுக்குள் புகுந்தான். குதிரையைக் கொஞ்ச தூரத்தில் விட்டு விட்டுத் தான் மட்டும் இறங்கி வந்து சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தடியில் நன்கு மறைந்து கொண்டான். அவன் மறைவிலிருந்த போதிலும், பாதை அங்கிருந்து நன்றாகத் தெரிந்தது.
அந்த இடத்துக்கு வந்ததும் குதிரைகள் சடேரென்று நிறுத்தப்பட்டன. ஆறு குதிரைகள் மேல் ஆறு வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தலைவனாகத் தோன்றியவன் மீது ஒற்றர் தலைவனின் பார்வை விழுந்ததும், அவனுடைய புருவங்கள் நெரிந்து ரொம்பவும் மேலே போயின. அவன் முகத்தில் அப்போது வியப்பு, அருவருப்பு, கோபம் எல்லாம் கலந்து காணப்பட்டன. அந்தத் தலைவன் வேறு யாருமில்லை; மாரப்ப பூபதிதான். வேகமாக வந்து கொண்டிருந்த குதிரையைச் சடேரென்று முதலில் நிறுத்தியவனும் மாரப்ப பூபதிதான். அவன் நிறுத்தியதைப் பார்த்துத்தான் மற்றவர்கள் சடேர், சடேரென்று தத்தம் குதிரைகளை நிறுத்தினார்கள். மாரப்ப பூபதி கீழே இறங்கினான். சற்று முன்னால் ஒற்றர் தலைவன் உற்றுப் பார்த்ததைப் போலவே அவனும் அங்குமிங்கும் பார்த்தான். முதலில் மண்டை ஓடுதான் அவனுடைய கவனத்தையும் கவர்ந்தது.
பிறகு, முதல் நாள் இரவு நடந்த வாட் போரின் அறிகுறிகளைக் கவனித்தான். ஆங்காங்கு இரத்தக் கறை இருந்ததையும் பார்த்தான். உடல்கள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் அடையாளங்களும் தெரிந்தன. இரத்தினங்கள் அவனுடைய கண்களில் பட்டதும் அவற்றை ஆவலுடன் கைகளில் திரட்டி எடுத்துக் கொண்டான். அந்த இரத்தினங்களைப் பார்த்தபடியே கலகலவென்று சிரித்தான். தன்னுடன் வந்த மற்றவர்களைப் பார்த்து, “பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று” என்றான். இன்னும் சிறிது நேரம் அவனும் மற்றவர்களும் ஏதோ பேசிக் கொண்டு நின்றார்கள். பிறகு, மாரப்ப பூபதி குதிரை மேல் ஏறினான். எல்லாக் குதிரைகளும் நாலுகால் பாய்ச்சலில் புறப்பட்டன.
மாரப்பனும் அவனுடைய ஆட்களும் போன பிறகு, ஒற்றர் தலைவன் தன் குதிரை இருந்த இடம் சென்று அதன் மேல் ஏறிக்கொண்டு, நேற்றிரவு தான் வந்த வழியிலே திரும்பிச் செல்லத் தொடங்கினான். குதிரை அக்காட்டுப் பாதையின் வளைவு ஒன்றைத் தாண்டியதும் உடம்பைச் சிலிர்த்தது. ஒற்றர் தலைவன் குதிரையை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தான். கொஞ்சதூரத்தில் காணப்பட்ட ஒரு சிறு பாறைக்குப் பின்புறத்தில் கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டான். காட்டுப் பாதையில் கிடந்த உடல்கள் என்னவாயின என்னும் மர்மம் வெளியாயிற்று. தானும் இரத்தின வியாபாரியும் போன பிறகு அங்கு வந்தவர்கள் அவ்வுடல்களை அப்புறப்படுத்தி இந்தப் பாறை மறைவில் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் யாராக இருக்கும்?
அவ்விடத்தில் அதிக நேரம் நிற்காமல் ஒற்றர் தலைவன் மேலே குதிரையை விட்டுக் கொண்டு சென்றான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும் இராஜபாட்டையை அவன் அணுகினான். அவ்விடத்தில் அதே சமயத்தில் மாமல்லபுரத்திலிருந்து இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. பரிவாரங்களுக்கு மத்தியில் குந்தவி தேவியின் பல்லக்கும் வந்தது. பல்லக்கின் பக்கத்தில் ஒரு கம்பீரமான வெண்புரவி மீது நரசிம்ம சக்கரவர்த்தியின் புதல்வன் மகேந்திரன் வீற்றிருந்தான். இதையெல்லாம் தூரத்திலேயே கவனித்துக் கொண்ட ஒற்றர் தலைவன், அவ்விடத்தில், குதிரையைச் சற்று வேகமாகவே தட்டிவிட்டான். இராஜ பரிவாரங்களையோ பரிவாரங்களுக்கு மத்தியில் வந்தவர்களையோ சற்றும் பொருட்படுத்தாதவனாய் அவர்களுக்குச் சற்று முன்னதாகவே, இராஜபாட்டையில் சந்திப்பைக் கடந்து காஞ்சியை நோக்கிச் சென்றான்.