Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 8

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 8

ராமசாமி வேலை முடிந்ததும் நேராகக் குடிசைக்குத் திரும்பமாட்டான். தலைத்துணியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு படிப்பகத்துக்குச் செல்வான். கந்தசாமியின் தேநீர்க்கடையில் தொழிலாளரைச் சந்தித்து நிலவரம் பேசுவான். ஒரு சராசரி உப்பளத் தொழிலாளியில் இருந்து அவன் மாறுபட்டவன்.

அவன் துவக்கப்பள்ளிக் கல்வி முடித்து ஆறாவதில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் தந்தையின் ஆதரவு குடும்பத்துக்கு இல்லாததாயிற்று. அவனுடைய தந்தை சாத்தப்பனுக்கு அவனுடைய அம்மாளுக்கே படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அளத்தில் வார்முதல் தொழிலாளியாக இருந்த அவர் தொழிலாளிகளைக் கூட்டிச் சங்கம் சேர்த்து, உரிமை கோரும் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னின்று உழைத்தவர். அந்நாளில் தொழிலாளர் தலைவராக இருந்த அங்கமுத்துவை அவர்களுடைய குடிசையில் அடிக்கடி பார்க்கலாம். சிவப்பு வண்ணத்தில் அச்சிட்ட துண்டு நோட்டீசுகளைச் சிதற விட்டுக் கொண்டு அவன் தந்தை சைக்கிளில் செல்வதை அவன் பார்த்திருக்கிறான். எழுத்துக் கூட்டி அதைப் படிக்க முனைந்திருக்கிறான்.
“தொழிலாளத் தோழர்களே, எழுச்சி பெறுங்கள்” என்ற வாசகங்கள் அன்றே அவனுக்குப் பாடமானவை. பிறகு தந்தையை ஒரு நாள் போலீசு பிடித்துச் சென்றதும், தங்கச்சியையும் அவனையும் அல் அயலில் விட்டு விட்டு அவன் அம்மா, கருப்பிணியாக இருந்த அம்மா, தூத்துக்குடிக்கும் வக்கீல் வீட்டுக்கும் அலைந்ததும் அவனுக்கு இன்னமும் மறக்கவில்லை. தங்கச்சி காய்ச்சல் வந்து இறந்து போயிற்று. அம்மா பிள்ளை பெற்று வெகுநாட்கள் படுக்கையிலிருந்தாள். பிறந்த குழந்தையும் இறந்து போயிற்று. சண்முகம் கங்காணி, அவனை அறைவைக் கொட்டடியில் ஒன்றே கால் ரூபாய் கூலிக்கு உப்புப்பொடி சுமக்கக் கொண்டு விட்டார். அந்தக் காலத்தில் அவர்கள் வீட்டுக்கு அவரைத் தவிர வேறு யாரும் வரமாட்டார்கள். பிறகு மூன்று வருடங்கள் சென்ற பிறகு ஒரு நாள் ராமசாமி தலைக்கொட்டையும் தானுமாகக் காலையில் வேலைக்குக் கிளம்புகையில் தாடி மீசையுடன் ஒரு ஆள் அவர்கள் வீடு தேடி வந்ததைக் கண்டான். அவர் அவனைச் சிறிது உற்றுப் பார்த்து விட்டுக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தார்.

அவனது நினைவில் இப்போதும் அவருடைய காய்த்துச் செதில் செதிலாகப் போயிருந்த உள்ளங்கை உறுத்திக் கொண்டிருக்கிறது.

அவரை அப்பா என்றே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அங்கமுத்துவுடன் வீட்டுக்குள் அப்பா எவ்வளவோ பேசி அவன் கேட்டிருக்கிறான். ஞாயிற்றுக் கிழமையானால் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளியாகத் தேடிச் செல்வார்கள். அவர் ஓய்ந்திருந்தே அவன் அதற்கு முன் கண்டிருக்கவில்லை. ஆனால், சிறையில் இருந்து வந்த பின் அவர் பேசியதாகவே அவனுக்கு நினைவில்லை. முழங்காலைக் கட்டிக் கொண்டு குடிசைக்குள் உட்கார்ந்திருந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, காலையில் அவர் படுத்த இடம் காலியாக இருந்தது. அக்கம் பக்கமெல்லாம் தேடினார்கள்.

சண்முகக் கங்காணி தான் அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆதரவாக இருந்த ஒரே மனிதர். தானுண்டு, தன் தொழிலுண்டு என்று இருப்பவர். அவன் தாயிடம், “தங்கச்சி, ஊர்க்குருவி பருந்தாவ எலுமா? நாம் ஊர்க் குருவியாலப் பெறந்திருக்கம். இப்படிக் குழந்தைகளையும் குடும்பத்தையும் வச்சிட்டு அவன் இந்த வம்புக்கெல்லாம் போலாமா?” என்பார். அப்பன் அந்த நல்ல நாட்களில் அவரைக் கண்டாலே ஏசுவாராம்.

“தொட நடுங்கிய. ஒங்களாலதா ஒத்துமையும் விழிப்புணர்ச்சியும் இல்லாத போகுது” என்பாராம். ஆனால் சண்முகக் கங்காணி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவர் தாம் தேடினார்.

அம்மா திருச்செந்தூர்ப் பக்கம் சோசியரிடம் போய்க் குறி கேட்டு வந்தாள். அவனையும் உடன் அழைத்துச் சென்றாள்.

கறுத்த முடித் தலையில் எண்ணெய் பளபளக்க குங்குமப் பொட்டும் கழுத்தில் பல வகை மணி மாலைகளுமாக அமர்ந்திருந்த சோதிடர், சோழிகளை வைத்துப் பார்த்து அப்பன் இன்னும் மூன்றே நாட்களில் திரும்பி விடுவார் என்றார். ‘ஒரு பெண் பிள்ளை மயக்கு; அவள் சூதுதான். வடக்கே போயிருக்கிறார். வந்தாக வேண்டும்’ என்று புருவங்களை நெறித்து, உதடுகளைக் குவித்து விவரங்கள் மொழிந்தார்.

அம்மா யாரோ பெண் பிள்ளையை நினைத்துக் கைகளை நெறித்துச் சாபமிட்டாள். திரும்பி வரும் போது… பச்சையம்மன் கோயில் நவராத்திரிச் சீர் பொங்கல் வைக்கப் பெண்களெல்லாரும் கூடியிருந்தார்கள். பாட்டுப் போட்டிருந்தார்கள். ராமசாமிக்கு அப்போதெல்லாம் சினிமாப் பாட்டென்றால் உயிர். அம்மா, கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்தி வைத்தாள். விழுந்து விழுந்து கும்பிட்டாள். நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

காலையில் அவன் ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சண்முகக் கங்காணியும் கணக்கப் பிள்ளையும் அவர்கள் குடிசைக்கு வரக் கண்டான். அம்மா பரபரத்துக் குடிசைக்குள்ளிருந்து வெளி வந்து பார்த்தாள்.

“மக்கா…!” என்ற கங்காணி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கடற்கரையில் அப்பச்சியின் உடல் ஒதுக்கப்பட்டிருந்தது. மீன்கள் கண்களைக் கொத்தியிருந்தன.

அவர் இறந்தபோது அவர்களுடன் இருந்து உண்மையாகக் கண்ணீர் வடித்தவர் சண்முகக் கங்காணி தாம்.

அப்பா திரும்பி வந்த பின் நன்றாக உடல் தேறிப் பழைய வலிமைகளைப் பெற்றிராது போனாலும், அன்பும் அரவணைப்புமாகச் சில நாட்களேனும் அவர் இருந்திருந்தால் அவருடைய இழப்பை ராமசாமியும் தாயும் அதிகமாக உணர்ந்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் அவர் திரும்பியதும், இறந்து போனதும் கனவில் நிகழ்ந்த சம்பவங்களாக நினைவில் ஆழமாகப் பதியாமல் போய்விட்டது. ராமசாமியின் வாழ்க்கையை அந்த நிகழ்ச்சி அப்போது பாதிக்கவில்லை.

சண்முகக் கங்காணிக்கு நீர்க்கோவை, வாதம் வந்து அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது. அவருடைய தம்பி மகன் ஒருவன் தூத்துக்குடிச் சந்தையில் கடை வைத்திருக்கிறான். அவனிடம் சென்று தங்கி வைத்தியம் செய்து கொள்ளப் போய்விட்டார். சண்முகக் கங்காணிக்கு மனைவி இல்லை. இரண்டே புதல்வியர்; அவர்களைக் கட்டிக் கொடுத்து அவர்கள் பாறை உடைத்து சல்லி எடுக்கும் குத்தகை வேலை செய்யும் கணவர்களுடன் வடக்கே சென்று விட்டனர். ஆனால், கங்காணி அளத்தை விட்டுச் செல்லு முன் அவனை உப்பு அறவைக் கொட்டடியிலிருந்து வெளியே உப்பு வாரும் பணிக்கு அமர்த்திச் சென்றார்.

“ஏலே, நீயுண்டு ஒஞ்சோலியுண்டுண்ணு நடந்துக்க. வேற எந்த சாரிப்பும் வேண்டா. ஒன்னப்ப வம்புதும்பு செய்யப் போயித்தா இந்த மட்டும் வந்ததெல்லா…” என்று அறிவுரை செய்து விட்டுப் போனார். அப்போது அவனுடைய இளம் மனதில், வாலிபம் கிளர்த்த முரட்டுத்தனம் முத்திரை பதிக்கவில்லை. வெளியாரின் பேச்சும் நடப்பும், தந்தை ஏதோ பயங்கரமான குற்றத்தைச் செய்ததால் சிறைக்குச் செல்ல வேண்டி வந்ததென்றும், அவரே தாம் தவறுக்கு வருந்தி, தனது ஆயுளை முடித்துக் கொண்டார் என்றும் அவன் கருதுமளவுக்கு அநுதாப ஈரமில்லாமலிருந்தன. தந்தை செய்த பயங்கரக் குற்றம் என்னவென்பதை அவன் வாலிபனாக வளர்ந்து வர, உப்பளத்தில் பெறும் அனுபவங்கள், வேலைச்சூழல் இவற்றின் வாயிலாகவே உணர்ந்து கொண்டிருக்கிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள் அவன் அளத்தில் பணியெடுத்த பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு ஆள் அவனைப் பார்த்து விட்டுச் சட்டென்று இறங்கினார்.

“நீ… யாருலே, பாத்தாப்பல இருக்கு?”

அவன் கூச்சத்துடன் அவரைப் பார்த்தான். கையில் தங்கப்பட்டை கடிகாரம் கட்டி இருந்தார். வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு, நடுத்தர வயசுக்காரராக இருந்தார்.

“…நீங்க யாரு…?”

“எம்பேரு தெரியுதா? தனபாண்டியன்னு…”

அவன் கேட்டிருக்கிறான். தொழிலாளர் சங்கத்தின் ஒரு தலைவராக அவருடைய பெயர் பிரபலமாகி கொண்டிருந்தது. ஒரு வேளை அப்பச்சியைத் தெரிந்திருக்குமோ?…

“நான் சாத்தப்பன் மகன்…”

“அதா, ஒங்கப்பா முகம் அப்படியே இருக்கு. வீட்டில அம்மா சுகமா? தங்கச்சியக் கட்டிக் குடுத்தாச்சா…”

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. “தங்கச்சி இல்ல… எறந்து போச்சு…”

“அடாடா…” என்றவர், அவன் தகப்பனார் தொழிலாளர் சங்கம் தழைக்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தார். உண்மையில் செல்வாக்குடன் அவர் தொழிலாளரை ஒன்று சேர்த்ததே முதலாளிக்குப் பிடிக்காமல், அவர் மீது சதிக்குற்றம் சுமத்திச் சிறையில் தள்ளினார்கள். இப்போது, உப்பளத் தொழிலாளரை மீண்டும் ஒன்று சேர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல சங்கத்தை அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்.

வாயிலில் சைக்கிளை வைத்துவிட்டுக் குனிந்து அவரும் குடிசைக்குள் வந்தார்.

“அம்மா! ஒங்களப் பாக்க ஒராள் வந்திருக்கு!”

அம்மா சிறு சிம்னி விளக்கைப் பொருத்தினாள்.

“அண்ணி, எப்படிப் போயிட்டிய? என்ன ஞாபகம் இருக்கா?…” என்று நெகிழ்ந்த குரலில் வினவினார்.

அம்மா சங்கடத்துடன், “இல்லாம என்ன…” என்று திடீர்த் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு கண்களை முன்றானையால் துடைத்துக் கொண்டாள்.

“தனபாண்டியம்மா. அவரு பெரிய தலைவர், எவ்வளவு பாடுபட்டார்? இந்தத் தொழிலாளிகள் ஒண்ணு சேரணும், அவர்களை அழுத்தும் முதலாளித்துவத்தைத் தட்டிக் கேட்க ஒரு நாக்கு வேணும்னு அவர் பாடுபட்டு உயிரையே பணயம் வச்சிட்டா. அண்ணி, நா இன்னிக்கு உயிரோட உங்க முன்ன வந்து நின்னு பேசுறேன்னா, அது அன்னிக்கு நீங்க காட்டின கருணையாலதான். போலீசு என்னைக் கண்ணி வச்சுத் தேடினப்ப, அடுப்பு வச்ச எடத்துல பலகை போட்டு துணியப் போட்டு என்னப் படுக்கச் சொல்லி அண்ணனும் நீங்களும் எடங்கொடுத்தீங்க, ஒங்க சோறும் உப்பும் தின்னு மூணு நாள் இருந்தேன். அதெல்லாம் எப்படி மறக்கும்?” என்று கண்ணீர் வடித்தார்.

அம்மா எங்கோ முகட்டைப் பார்த்தாள். “எனக்கு ரொம்ப விசனமான விசயம், சாத்தப்பன் தற்கொலை செஞ்சிட்டான், புத்திசாதினமில்லைன்னு சொல்லிக்கிறான்களே, இதுதான் புரியல. இதில ஏதோ மருமம் இருக்குன்னு படுது. நீங்க அன்னிக்கு என்ன நடந்ததுன்னு வெவரமாச் சொல்லணும். சும்மா விடக் கூடாது இதை…” என்றார் தனபாண்டியன்.

கடந்த ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இப்போது இதை இவர் ஆராய வந்திருப்பதன் நோக்கம் என்ன என்று ராமசாமி முதலில் திகைத்தான்.

“தொழிற்சங்கத்தை இப்ப பலப்படுத்தணும். இப்ப உப்பளத் தொழில் மின்னவிடவும் கஷ்டம். இந்தப் பனஞ்சோலை அளம் எவ்வளவு பெரிசாப் போச்சு? முன்ன அந்தக் காலத்துல துலாவச்சு அடிச்சா, அஞ்சு பாத்தி ஆறு பாத்தி ஒரு மனுஷன் வாருவான். இப்ப, மிசின் தண்ணியை எரச்சுக் கொடுத்து, அதே ஒரு ஆள் முப்பத்தஞ்சி பாத்தி வாருறான். கூலி அந்த அளவுக்கு உசந்திருக்கா?” என்று கெட்டித்துப் போன உப்பை உதைத்து உலுக்குவது போல் கேட்டார்.

கலகலவென்று அது குறைபாடுகளாக அப்போதுதான் ராமசாமிக்கு உறைத்தது.

அம்மா எதுவும் பேசாமலே நின்றிருந்தாள். பிறகு நாத்தழுதழுக்க, “ஒங்கள நான் ரொம்பவும் கேட்டுக்கறேன். பையன் ஏதோ வேலய்க்கிப் போயிட்டிருக்கா. அவனுக்கு ஒரு கல்யாணம் கட்டி குழந்தை குட்டி பிறந்து விளங்கணும். மொதலாளி மாரெல்லாம் முன்னப்போல இல்ல. இப்பல்லாம் அவிய காரில் வருவா; போவா. தொழில்காரங்க ஆம்பளயா, பொம்பளயான்னு கூடப் பாக்கிறவங்க இல்ல. போன வருசம் முச்சூடும் மழ இல்ல. உப்புக்கும் வெல இல்லதா. ஆனா இங்க தட்டில்லாம கூலி கொடுத்தாவ; வூடு மோடு போடணுன்னாலும் ஏதோ கல்யாணச் செலவுன்னாலும் பணம் குடுப்பா. ஒங்க கிட்டச் சொல்ற, ராமசாமிக்கு மாசச் சம்பளமாவே ஆக்கி வச்சிடறேன்னு கங்காணியாரே அப்பவே சொல்லிருக்கா…” என்றாள்.

அவர் சிறிது நேரம் வாயடைத்துப் போனாற் போல நின்றார்.

“நீங்க ரொம்பப் பயப்படுறிய. இதெல்லாம் சூழ்ச்சி. நியாயத்தை ஒருத்தன் கேட்கத் தலையெடுத்தால் அவனை மடக்கி விடுவார்கள். சாத்தப்பன் தற்கொலை செய்து கொண்டார் என்பது வெறும் கதை. அவரை அறிந்தவர் யாரும் நம்ப முடியாது. அவர் இறந்த பிறகு அந்தப் பொம்புள வந்தாளா?”

அம்மா தலையை வேகமாக ஆட்டினாள். “அவ வெவரமே பொறவு எவரும் பேசியதில்ல. ஆருக்கும் ஏதும் தெரியாது. அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. ஏதோ கேட்பார் பேச்சக் கேட்டு முதலாளிக்குத் துரோவம் செய்திட்டமேன்னு ஏக்கம் புடிச்சே பிரும்மமாப் போயி தன்னையே முடிச்சிட்டாவ. இதுக்கு ஆரை நோவ?… நீங்க எதுவும் பேசி இப்ப இந்தப் பையனுக்குத் தீம்பா எதுவும் வரவச்சிடாதீக… ஒங்களக் கும்புட்டுக்கிறேன்…”

அம்மா அன்று இவர் காலில் வீழ்ந்துதான் கும்பிடவில்லை.

தனபாண்டியன் அன்று அதற்கு மேல் பேசவில்லை.

ஆனால் அவர் சென்ற பின் அம்மா அவனிடம், “மக்கா, தெளிஞ்சு கெடக்கிற மனசை அவெ குட்டத் தண்ணியாக்கிடுவா. இப்பிடித்தே காயிதமும் அதும் இதும் கொண்டுப் போவாக, ராவோட ராவா மீட்டங்கி பேசும்பாவ, அங்கமுத்துன்ற அந்தாளு கூடதா இவ வருவா. இவயெல்லாம் வாரதுக்கு முன்ன, உங்கய்யா, அவர் சோலியுண்டு அவருண்டுண்ணுதா இருந்தா. இவல்லாம் விடமாட்டா. சொதந்தரம் வந்து ஆருக்கென்ன? முதலாளியளுக்குத்தா சொதந்தரம்பா… கடோசில என்ன ஆச்சி? இவியளத் தூண்டிட்டு உள்ள போக வச்சிட்டு, அவனுவ தப்பிட்டாக மக்கா. நீ இவியக் கூடச் சிநேகம் ஒண்ணும் வச்சுக்காத, வேண்டாம்.”

எலும்புகள் முட்ட, எண்ணெய்ப் பசைகன்றிச் சுக்காயி வறண்ட தோலில் கீறல்களுடன் அம்மா கெஞ்சிய போது ராமசாமி குழைந்து போனான். கடலலை மோத வருவது போலும், அவன் விவரமறியாக் குழந்தையாக எதிரிட நிற்பது போலும் அவள் அஞ்சி அவனைப் பற்றிக் கொள்ளப் பார்த்தாள்.

ராமசாமி அப்போது கேட்டான்.

“அந்தப் பொம்பிளன்னாரே அவரு. அது ஆரு அம்மா?” அம்மா அவனைத் திரும்பிப் பாராமலே பதிலளித்தாள். “அவ ஆரோ. நமக்கும் அவளுக்கும் ஒரு தொடிசுமில்ல. நீயாரும் பேசறதக் கேக்கண்டா. நமக்கு உள்ளது போதும். நல்ல பெண்ணா ஒனக்குக் கட்டி வய்க்கணும்…”

அம்மா அப்படித் தீர்த்துவிட்டாலும் அவனால் ஒதுங்கி விடுபட்டு விட முடியவில்லை. உப்பைக் கக்கி விட்டு வரும் நஞ்சோடை நீரும் கரிப்பாகத்தானே இருக்கிறது?

ராமசாமியிடம் சாடைமாடையாக அக்கமும் பக்கமும், தொழில் செய்யும் இடங்களிலும் ‘அந்தப் பொம்பிளை’யைப் பற்றிச் செவிகளில் போடத்தான் செய்தார்கள். ‘அந்தப் பொம்பிளை’, அவனுடைய தந்தையின் கையைப் பற்றி மனைவியாக வந்தவள். மிக அழகா இருப்பாள்.

அப்போது பெரிய முதலாளி சிறு வயசுக்காரர்… அவ்வளவு தான். அப்பாவின் முகத்தில் பிறகு அவள் விழிக்கவில்லை…

ராமசாமி படிப்பகத்தில் வந்து பத்திரிகைத்தாளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். படித்தது எதுவுமே மண்டையில் ஏறவில்லை.

பொன்னாச்சியின் முகமே வந்து கவிகிறது. அன்று தம்பி உடம்பு சரியில்லை என்று வேலைக்கு வரவில்லை. அவள் மட்டும் காத்திருந்தாள்.

அவளைத் தனியே கண்டதும் விழிகள் கலங்கித் துளிகள் உதிர்ந்தன. அவன் பதைத்துப் போனான்.

“ஏவுள்ள? என்ன?”

அவள் முந்தானையால் துடைத்துக் கொண்டு விம்மினாள்.

“அந்தக் கண்ட்ராக்டுச் சவம் என்னியக் கெருவச்சிட்டே இருக்கா. எனக்கு பயமாயிருக்கு… இன்னிக்கி…”

“இன்னிக்கு…?”

அவனுக்கு நெஞ்சு துடிக்க மறந்து போயிற்று.

“அவனைக் காலத் தூக்கி ஒதச்சிட்ட, ‘விரிசாப் போடி’ன்னு தொட்டுத் தொட்டுக் கிள்ளினா; பொக்குனு ஆத்திரத்தோட ஒதச்சிட்ட. ஆரும் பாக்கல. ஆனா என்னேய்வானோன்னு பயமாயிருக்கு…”

அவன் விழிகளைக் கொட்ட மறந்து போய் நின்றான்.

“ஏத்தா? ஒம்பேரென்னன்னு சொன்ன?”

அவளை வெட்கம் கவிந்து கொள்கிறது.

“என்ன சேஞ்ச?… சொல்லே…”

அவள் கதகதத்த பட்டுத்துண்டுக்குள் புதைந்தாற் போல் நிலத்தைப் பார்க்கிறாள்.

“ஒம் வாயால சொல்லுவுள்ள, காலத்தூக்கி அவன ஒதச்சே… சரிதானா? கால்ல ஓலச்செருப்புப் போட்டிருந்தல்ல?”

“ம்…” என்று தலையை ஆட்டுகிறாள் பொன்னாச்சி. “அது நா ஒதச்சப்ப அவமேல பட்டு கீளவுழுந்திற்று…”

“எங்காது குளுந்திருக்கு. எப்பிடி ஒதச்சன்னு காட்டுவியா பொன்னாச்சி…?”

அழுகை போய்ச் சிரிப்பு வருகிறது.

அது மலர்ப்பாதம். எலும்பு முண்டி நரம்பெடுத்து முழித்துப் பார்க்காத பாதம். உப்பு அவள் பாதங்களில் படிந்து மென்மையைக் குத்திக் கிளறினாலும், அவள் உயிர்த்துவமுள்ள மனிதப் பெண். உப்பு அவளைப் புழுவாக்க, முதுகெலும்பைத் தின்றுவிடவில்லை. அவள் வீறு கொண்டு ஒரு அசுரனை உதைத்தாள்!

அந்தக் காலைப் பற்றி முத்தமிட வேண்டும் போலிருந்தது ராமசாமிக்கு.

“அவெ கருவச்சிருக்க மாட்டா? அவெ அக்குரமத்துக்கு நா எடங்குடுக்கலன்னுதா ரொம்ப வருமங்காட்டறா…”

“அது சரி, நீ ஒதச்ச பெறவு அவ என்ன சேஞ்சா? மீசல மண்ணத் தட்டிட்டுப் போனானா?” என்று அவன் சிரித்தான்.

“நீங்க சிரிக்கிறிய, இவெ இப்படியிருக்காண்ணு, மொதலாளிக்குத் தெரியுமா! அவியக்கிட்ட சொன்னா என்ன?”

“பொன்னாச்சி, இப்பிடி அக்குருமமுன்னு மொதல்ல கொரல் குடுக்கறதே நீதான்! எல்லாரும் இவனுவ என்ன சேஞ்சாலும் எதுக்கத் தெரியாம அடங்கிப் போவா. பவருள்ளவ சேட்ட சேஞ்சா அது லாவம்னு அடங்கிப் போற பொண்டுவளத்தா இதுவரய்க்கும் நா கேள்விப் பட்டிருக்கே, பாத்துமிருக்கே. நீ… நீதா தயிரியமா எடுத்து சொல்ற. ஏ அழுற? சிரிக்கணும், நா ரொம்ப சந்தோசப் படுற, ஒனக்கு ஒண்ணும் வராது… நமக்கெல்லா நல்ல காலம் வரப்போவுது. அதுக்கித்தான் ஒனக்கு அந்தத் தைரியம் வந்திருக்கு…”

“அப்ப நா பயப்படாண்டாம்…”

“நிச்சயமா. நா இருக்க வுள்ள. ஒங்கிட்டச் சொல்ற, எனக்கு வீட்டுக்குப் போனாக்கூட ஒன் ஞாபகமாகவே இருக்கு. இத்தே பெரிய அளத்துல, நீ இருக்கிற பக்கமே நா சுத்திவாரன்னு கூட அவங்கண்டிட்ருப்பா. நீ பயப்படாதே நானிருக்க… எப்பவும்…”

ராமசாமி இந்த உரையாடலை நூறு முறைகள் உயிர்ப்பித்துப் பார்த்து மகிழ்ந்திருப்பான். இன்னும் அலுக்கவில்லை. சினிமாக் காட்சிகளுக்கு அவன் எப்போதேனும் செல்வதுண்டு. கதாநாயகியை வில்லன் துரத்தி இம்சை செய்வான். சரேலென்று கதாநாயகன் குதிரை மீதேறித் தாவி வந்து அவன் முன் குதிப்பான்; உறைவாளை உருவி, அந்தக் கொடியவனுடன் கத்திச் சண்டை செய்வான். அவன் தலை உருளும். கதாநாயகி ஆனந்த மிகுதியால் கதாநாயகனின் அருகில் வந்து மலர்ச் செண்டென அவன் மார்பில் முகம் பதிப்பாள்… ராமசாமி தானே அந்தக் கதாநாயகனாக மாறிப் போகிறான். நாச்சப்பனின் தலை உருண்டு கிடக்கிறது. பொன்னாச்சி… பொன்னாச்சி…

யாரோ அவன் கையிலிருக்கும் பத்திரிகையை உருவவே அவன் திடுக்கிட்டு நிமிருகிறான்.

தனக்குள்ளே நாணியவனாக, பிறகு சமாளித்துக் கொள்கிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45

அத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு! நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச்

கல்கியின் பார்த்திபன் கனவு – 70கல்கியின் பார்த்திபன் கனவு – 70

அத்தியாயம் 70 அமாவாசை முன்னிரவு அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது.

சாவியின் ஆப்பிள் பசி – 11சாவியின் ஆப்பிள் பசி – 11

 அன்று மாலை சூரியகுளம் மைதானத்தைப் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். மூன்று மாதங்களாய் வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தில் பன்றிக் குட்டிகள் உலவிக் கொண்டிருந்தன. இன்னொருபுறம் சாணத்தை மலைபோல் குவித்து, வறட்டி தட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்த இடம் ஒரு புதுமைச் சிலிர்ப்புடன்