Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 2

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 2

மருதாம்பா வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விட மாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிப்பட்டுப் பட்டினி கிடந்து நோயும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்ட போதும் அவள் விம்மி எழவுமில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவுமில்லை. வாழ்க்கை என்பதே பசியோடும், வேற அடிப்படைத் தேவைகளோடும், உடலுழைப்போடும் ஏற்படும் இடைவிடாத போராட்டம், அதற்காகவே தான் மனித பந்தங்கள்; பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையிலேயே கிளைக்கும் நெருக்கடிகளும் வாய்ப்புகளும் தான் அவளைப் போன்றோருக்கு வாழ்க்கையின் போக்கையே அமைக்கின்றன என்று தெரிந்தவள் அவள்.

தெப்பத்தில் ஒதுக்கப்பெறும் கடல் நீரைப் போல் அவர்கள் தங்கள் உடலுழைப்பை யாருக்காகவோ குவிக்கின்றனர். கடல் நீர் தனது சாரத்தைப் பாத்திகளில் மணிகளாக ஈந்துவிட்டு நஞ்சோடையாக (நஞ்சோடை – உப்பை வாரிய பின் எஞ்சிய நீர் வெளிச்செல்லும் ஓடை) வெளியேறும் போது யாரோ அதைக் கவனிக்கிறார்கள்! எங்கேனும் தறிகெட்டு ஓடி மணலோடையில் போய்ச் சேரும். அல்லது எங்கேனும் காட்டிலே போய்த் தேங்கி முடியும். அவர்களுடைய உரமும் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சியிலேயே பாத்திக் காடுகளிலும், தட்டு மேடுகளிலும் உருகிக் கரைகின்றன. பின்னர் யாருக்கும் எதற்கும் பயன்படாத நஞ்சோடை நீர் போல் ஒதுக்கப்படுகின்றனர். கண்ணுசாமியினால் அந்தக் குடும்பத்தைத் தாங்கும் முயற்சியில் இனி எதுவும் செய்ய முடியாது. மருதாம்பா அந்த ஞாயிற்றுக்கிழமையிலேயே அவனுடைய மகனையும் மகளையும் அழைத்து வருவதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை என்று நிச்சயம் செய்துவிட்டாள்.

பெரியகடை வீதியில் மிட்டாய்க் கடையில் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் சேவும் வாங்கிக் கொள்கிறாள். பொரிகடலை, பழம் எல்லாவற்றையும் ஒரு பைக்குள் வைத்துக் கொண்டு சிவந்தகனியுடன் திருச்செந்தூர் பஸ் போகும் மூலையில் வந்து நிற்கிறாள். சிவந்தகனியின் மனைவி தாய்வீட்டில் பிள்ளை பெற்றிருக்கிறாள். அவளுக்குச் சிறுகாயல்தான் ஊர். அதனால் தான் அவனுடன் கிளம்பி இருக்கிறாள். மச்சான் என்று கண்ணுசாமி மனைவியின் தமையனாரைக் கொண்டாடியதில்லை என்றாலும் அவர் மீது அவனுக்குப் பெருமதிப்பு உண்டு. அவர் வழியே தனி. கொஞ்சம் படிப்பு, உலக அநுபவம், அரசியலில் ஈடுபாடு எல்லாம் உடையவர். அவரும் சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அது மிகவும் கௌரவத்தைக் கொடுக்கக் கூடியதோர் அனுபவமாக அவர் பெருமையைக் கூட்டியிருக்கிறது.

மருதாம்பா, அவரைக் கண்ணுசாமி சிறைக்குச் சென்ற காலத்தில் அவர் வந்த போது பார்த்திருக்கிறாள். முதல் மனைவி செவந்தியை அவர் தான் வந்து கூட்டிச் சென்றார். செவந்தியை அவருக்குத் தங்கை என்றே மதிப்பிட முடியாது. மகள் என்று சொல்லலாம். அந்நாளிலே முடி நரைத்துச் சுருக்கங்கள் விழுந்து ஐம்பது வயசு மதிக்கத் தோற்றமளித்தார். செவந்தி இறந்து போன போது நல்லகண்ணு சிறையில் தான் இருந்தான். அப்போது சிவந்தகனி அங்கு பெண் கட்டியிருக்கவில்லை. வெகுநாட்கள் சென்ற பின்னரே அந்தச் செய்தி தெரிய வந்தது. பிறகு ஒரு நாள் அவர் பொன்னாச்சியையும் பையனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருப்பிடம் தேடி வந்ததாக அவளுக்குச் சேதிதான் தெரிந்தது. அந்நாள் புருஷன் பெண்சாதி இருவரும் இரவில் இரட்டை கூலி வருகிறதென்று உப்பு வாரச் சென்றிருந்தனர். பொன்னாச்சி வயசுக்கு வந்து நீராட்டு விழா எதுவும் கொண்டாடிக் கடிதம் வரவில்லை. ஆனால் சிவந்தகனியின் பெண்சாதி மாரியம்மா பெண் வயசுக்கு வந்துவிட்ட விவரம் தெரிவித்திருக்கிறாள்.

மணப்பாடு செல்லும் பஸ் வருகிறது. அது பதினைந்து நிமிடங்களில் அவர்களைக் கொண்டு வந்து மாதாகோயிலின் முன் இறக்கி விடுகிறது. பரதவர் குடியிருக்கும் ஊர் அது. ஞாயிற்றுக்கிழமையாதலால் மாதாகோயிலில் பூசை நடந்து கொண்டிருக்கிறது. வெயில் சுள்ளென்று விழுகிறது. பஸ் நிறுத்தத்தில், மொந்தன் பழக்குலை, கடலை மிட்டாய், பீடிக்கட்டு, சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட கடை ஒன்றும், புரூ காப்பி பொம்மை ஒட்டியதோர் விளம்பரத்துடன் சாக்குப்படுதா தொங்கும் டீக்கடை ஒன்றும் இருக்கின்றன. மண்ணில், உச்சி எண்ணெய் பளபளக்கச் சிறுவர் சிலர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அரையில் மட்டும் ஒரு சேலைத் துண்டைச் சுற்றிக் கொண்டு வெற்றுடம்புடன் கூடிய ஒரு சிறுமி தன் இளம் இடுப்பில் மார்புக் கூடு பின்னித் தெரியும் ஒரு பிஞ்சுக் குழந்தையைச் சுமந்தவளாக பஸ்ஸிலிருந்து இறங்கிய அவர்களை வேடிக்கைப் பார்க்கிறாள். மாதா கோயிலைச் சுற்றியிருந்த தெருக்கள் பரதவர் குடியிருப்பு என்று துலங்குகிறது. வெயிலில் கிடக்கும் வலைகளும், கருவாட்டு மீன்களைக் காவல் காத்தபடி குந்தியிருந்து பேசும் பெண்களும் அவர்கள் செல்லுவதைப் பார்க்கின்றனர்.

பரதவர் குடியிருப்பைக் கடந்தால் பசுஞ்சோலைகளாகத் தென்னை, முருங்கை, ஆமணக்கு என்று மரங்களும் இடையே காரைக்கட்டு வீடுகளும் வருகின்றன. தென்னங்கிடுகுகளால் ஆன வேலிகளும், நித்திய மல்லிகைப் பூங்கொடியும் மஞ்சள் குங்கும வாயில் நிலைகளும் அந்த வீடுகளுக்குரியவர்கள் பொருளாதார நிலையில் சற்றே மேம்பட்டவர்கள் என்று உணர்த்துகின்றன. மாகாளியம்மன் கோயில் அங்கே நிலை பெற்றிருக்கிறது.

அப்பால் பன ஓலைக் கூரை வீடுகள் தெரிகின்றன. சுரைக்கொடி படர்ந்த கூரைகள், மண் சுவர்கள், குலுகுலுவென்று மணலில் விளையாடும் குழந்தைக் கூட்டம், கோழிகள்… மண்ணில் நிழல் கண்ட இடங்களில் குந்தி ஈருருவிக் கொண்டோ வம்பளந்து கொண்டோ இருக்கும் பெண்கள்…

“அதா ஒரு புள்ள ஒரல்ல குத்திக்கிட்டிருக்குப் பாரு. அந்த வூடுதா. எனக்கு இன்னும் மேக்கே ஒரு கல்லுப் போல போவணும். நா அஞ்சு மணி பஸ்ஸுக்குச் சரியா வாரேன். நீ கடத்தெருவில் வந்து நில்லு…” என்று கூறி சிவந்தகனி அவளைப் பையும் கையுமாக அங்கேயே விட்டுவிட்டுப் போகிறான்.

உரலில் கம்பு ‘துவைத்து’க் கொண்டிருக்கும் பொன்னாச்சி தங்களை நோக்கி வரும் பெண்பிள்ளை யாரோ என்று கூர்ந்து நோக்குகிறாள். அவளுடைய மாமி அப்போது அடுத்த வீட்டுக்காரியுடன் அவள் இறைத்த தீனியை அயல் வீட்டுக் கோழி வந்து பொறுக்கித் தின்று விடுவது கண்டு இரைந்து கொண்டிருக்கிறாள்.

“சவங்க… இங்கெ வந்து அம்புட்டியும் தின்னு தீக்கு. அவவ கோளிய அடுத்தூட்டுக்கு வெரட்டிக் கொளுக்கவய்க்கிறாளுவ…” என்று மாமி இரைகையில், எட்டு வயசுள்ள குமரவேலு சிரித்துக் கொண்டு, “யம்மா, அந்தக் கறுப்பு கோளிய நாம ஒரு நா விருந்து வச்சிடுவம்…” என்று கூறுகிறான்.

“வாப்பீங்கலே! முளியத் தோண்டிப் போடுவ!” என்று அடுத்த வீட்டுச் சாக்குப்படுதாவுக்குள்ளிருந்து ஆக்ரோஷமான குரலுடன், அந்த வீட்டுக்குரியவள் வெளிப்படுகிறாள்.

இருபுறங்களிலும் நெருப்புப் பொறிகள் சீறும் நேரத்தில் மருதாம்பா போய்ச் சேருகிறாள்.

பொன்னாச்சியை மருதாம்பா பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்கிறாள். மாநிறம் தான். அப்பனைப் போல் அகன்ற நெற்றி. வட்டமான கண்கள், முடி சுருண்டு அலையலையாக இருக்கிறது.

குமரவேலு திரும்பிப் பார்க்கிறான். மூலையில் ஏழாங்காயாடிக் கொண்டிருக்கும் வள்ளியும் குஞ்சரியும் எழுந்து வந்து பார்க்கின்றனர். மாமியும் உற்றுப் பார்த்து, தன் கட்டைக் குரலால், “யாரு?” என்று கேட்டு விழிகளை உயர்த்துகிறாள்.

மருதாம்பா இடுப்பிலிருந்த பையைக் கீழே இறக்குகையில் அதில் பழமும் பனையோலைப் பெட்டியும் இருப்பது தெரிகின்றன. புன்னகை இதழ்களில் மலருகின்றன.

“மயினி, என்னத் தெரியலியா? இது பொன்னாச்சிதான? நா, சின்னாச்சிதா வந்திருக்கிற. அவிய ஒடம்பு வாசியில்லாம இருக்காவ. சோலியெடுக்கவும் முடியல. நெதமும் பிள்ளையளப் பார்க்கணும் கூட்டிட்டு வா, கூட்டிட்டு வாண்டு சொல்லிட்டே இருக்காவ…”

மாமி முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயமாகப் பார்க்கிறாள். அந்தத் தெருவே இந்த அதிசயத்தைக் கண்டு மலைக்கிறது.

“ஆரு?… இவதா செவந்திக்குச் சக்களத்தியா?” என்று ஈருருவிக் கொண்டிருந்த கிழவி வந்து அவளை உற்றுப் பார்க்கிறாள்.

“அப்பெ வந்திருக்கிறானோ?”

“இல்ல…” என்று மருதாம்பா தலையசைக்கிறாள்.

மாமி சிதம்பர வடிவு கோழியைக் கூடையைப் போட்டு மூடிவிட்டு “உள்ளே வாரும்” என்றழைத்துச் செல்கிறாள். தட்டி கட்டிய திண்ணையை அடுத்த உள் வீட்டில் கம்போ கேழ்வரகோ புடைத்த தவிடு பரந்திருக்கிறது.

துணிகள், அழுக்காகத் தொங்கும் கொடி. சுவரிலும் கிறுக்கல்களும் சுண்ணாம்புத் தீற்றலும் சிவந்தச் சாந்துக் கையின் தீற்றலும் நிறைந்திருக்கின்றன. ஐந்து வயசு மதிக்கக் கூடிய பையன் ஒருவன் காகிதத்தைச் சுருட்டி சோப்பைக் கரைத்துப் பின் தாழ்வரையில் ஏதோ முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

சிதம்பர வடிவு ஓடிப்போய் அவன் முதுகில் இரண்டு வைக்கிறாள். அவன் கையிலிருந்து ஒரு நீல சோப்புத் துண்டை மீட்கிறாள்.

“கரியாப் போற பய, சோப்பைக் கரைக்கிறதே வேல!” என்று பின்னும் ஓர் அறை வைக்க, அவன் வாயைப் பிளந்து கொண்டு இயன்ற மட்டும் குரலெடுக்கிறான்.

“இங்க வால…” என்று மருதாம்பா அழைப்பது கண்டு அவன் திறந்த வாயை மூடியும் மூடாமலும் திகைத்தவாறே அவளுடைய கையிலிருக்கும் பழத்தால் ஈர்க்கப்பட்டு வருகிறான். மிட்டாய்ப் பெட்டி, கடலை எல்லாம் வெளியாகின்றன.

“பொன்னாச்சி மாமா ஊரில இல்ல. திர்நேலி போயிருக்கா. மாப்ளக்கி என்ன ஒடம்பு?”

“போன வருஷம் நீர்க்கோவ வந்து காலு நீட்ட முடியாம இருந்தாவ. அப்பமே பாதி நா சோலி எடுக்க முடியாமதா இருந்தாவ. பொறவு என்னேய? ரொம்பவும் மனத்தாவப் படுறாவ. நா எந்த மொவத்த வச்சிட்டுப் போவமின்னு. நாம போவம்னாலும் கேக்கல. அல்ல நீரு செவந்தனியக் கூட்டிட்டுப் போய் வாரும்னாலும் எப்பிடிப் போவமின்னு தாவப்படுறாவ. பிள்ளியளப் பாக்கணுமின்னும் மனசு அடிக்கி. அந்த பிள்ளியளுக்கும் அப்பச்சி வந்து பாத்தாரா கொண்டாராண்டு மனசில இருக்காதா? நேத்து நா சோலியெடுத்திட்டு வாரயில, பிள்ளயளப் பாக்கணுமின்னு கெடந்து கரயிறா. நாயித்துக்கெளம, கூட்டிட்டு வாரமின்னு வந்தே…”

பொன்னாச்சியின் உள்ளம் பௌர்ணமைக் கடலாக எழும்புகிறது. மாமி என்ன சொல்வாளோ என்று பார்க்கிறாள்.

“ஒங்க மக்கள நீங்க கூட்டிட்டுப் போகத்தா வந்திருக்கிய. ஆனா, அவிய ஊருல இல்லாதப்ப கூட்டிட்டுப் போறதுன்னா எப்பிடின்னு பாக்கேன்…”

மருதாம்பா உள்ளே வந்த குமரவேலு, வள்ளி, குஞ்சரி எல்லோருக்கும் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயையும் சேவையும் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பெட்டியை அப்படியே சாமி கையில் கொடுக்கிறாள்.

பொன்னாச்சி உரலில் துவைத்துக் கொண்டிருந்த கம்புக் குருணையை வட்டச்சுளகில் வாரிக் கொண்டு வந்து வைக்கிறாள். உள்ளே தாழ்வரை அடுப்பில் பானையில் நீர் கொதிக்கிறது.

மாமி பொன்னாச்சியை அழைத்து, “கடையிலே போயி கருப்பட்டியும் காப்பித் தூளும் வாங்கிட்டு வா, அப்பச்சி வந்ததும் காசு தாரன்னு சொல்லு” என்று அனுப்புகிறாள்.

பதினெட்டைக் கடந்துவிட்ட பொன்னாச்சிக்குச் சிறு குழந்தையாகி விட்டாற் போலிருக்கிறது. மாமி ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து பொழுது போகும் வரையிலும் அவளுக்கும் தம்பிக்கும் அவர்களைத் தவிர யாருமில்லை என்று குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறாள். தங்கள் குடும்பத்துக்கே வருவாய் போதாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் நாத்தி மக்கள் இருவருக்கும் சோறோ, கஞ்சியோ பங்கு வைக்க வேண்டியிருக்கிறது; அவர்களை வைத்துக் கொண்டிருப்பது தேவையில்லாதது என்பது அவள் கருத்து.

பொன்னாச்சி எத்தனை நாட்கள் பட்டினியுடன் கண்ணீர் வடித்திருக்கிறாள்! மாகாளியம்மனை அவள் வேண்டாத நாளில்லை. வீட்டுக்குத் தண்ணீர் கொண்டு வருவதும், குத்துவதும், தீட்டுவதும், பெருக்குவதும், மெழுகுவதும், ஆக்குவதும், கழுவுவதும் அவள்தான். மாமி யாரையேனும் எப்போதும் ஏசிக் கொண்டிருப்பாள். நிரந்தரமாக அதற்கு உரியவர்கள் காலஞ்சென்ற நாத்தி, அவள் கண்காணாக் கணவன், பாரமாகிவிட்ட மக்கள், பிறகு, பிறரிடம் நிரந்தரக் கூலிக்குப் போகமாட்டேன் என்று தன் பட்டாளத்தைக் கட்டிக் கொண்டு மூட்டை உப்பு முக்கால் ரூபாய்க்கேனும் போகுமோ என்று அவதியுறும் அசட்டுப் புருசனை ஏசுவாள். மாமாவுக்குத் திருச்செந்தூர் வேலனிடம் அளப்பரிய பக்தி உண்டு. எனவே ஐந்து மக்களுக்கும் அவன் பெயரையே வைத்திருக்கிறார். பெரியவன் சக்திவேல் திருநெல்வேலியில், கல்லூரியில் இரண்டாண்டுகளாகப் படிக்கிறான். இரண்டாவது குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது. அடுத்து வள்ளி; அவளுக்குப் பன்னிரண்டு வயசாகிறது. இன்னும் வயசுக்கு வரவில்லை. பிறகு குஞ்சரி, குமரவேல், அடுத்தவன், ஞானவேல் கடைக்குட்டி. மாமி தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் அவனைப் பெற்றதும் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்து கொண்டு விட்டாள். அதனால் உடலுழைக்கக் கூடாது என்ற கருத்தில் வீட்டுப் பணிகள் ஏதும் செய்ய மாட்டாள்.

கடைவாயிலில் மூன்றாம் வீட்டு இசக்கி குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

“ஆரு வந்திருக்கிறாவ?” என்று விசாரிக்கிறான்.

“என்னக்க சின்னாச்சி. அப்பச்சி ரெண்டாந்தாரம் கெட்டல? அவ, என்னையும் தம்பியையும் கூட்டியாரச் சொல்லி அனுப்பியிருக்கா.” பொன்னாச்சிக்கு முகத்தில் பெருமை பொங்குகிறது.

“நீங்க போகப் போறியளா? தூத்துக்குடிக்கா?”

ஒரு புதுமையுமில்லாத இந்தக் கிராமத்தை விட்டு நீங்கள் தூத்துக்குடிப் பட்டணத்துக்குப் போகப் போகிறீர்களா என்ற வியப்பில் இசக்கி கண்களை அகல விரிக்கிறாள்.

“பொறவு இங்க இனி என்ன சோலி? அப்பச்சிக்கு ஒடம்பு முடியலியா, அப்ப நாம போயிப் பாக்கண்டா?”

“மாமி அனுப்பிச்சிக் குடுப்பாவளா?”

“குடுக்காம? குடுத்துத்தானே ஆவணும். நாங்க போயிடுவோம். பச்சையப்பய எங்கேன்னு தெரியல. எங்க போனா? நீ பாத்தியா?”

“அதா, அந்தால ஜேம்சு கூடப் போனா…”

‘பரவப் பிள்ளியகூடப் போய்த் தொலையிறா. குடியப் பழகிக் குடுத்திடுவா. போட்டும் தூத்துக்குடிக்குப் போயிட்டா அங்ஙன இந்தச் சல்லிய மெல்லாம் இல்ல…’ என்று எண்ணிக் கொண்டு கடைக்காரரிடம் காபித்தூளும் கருப்பட்டியும் மாமி கூறியபடி கடனுக்குக் கேட்கிறாள்.

கடைக்காரன் கடனுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. அவள் நேராக முன்சீஃப் ஐயா வீட்டுச் சந்து வழிச் சென்று பின் முற்றத்தில் வந்து நிற்கிறாள்.

“ஆச்சி…?” என்று அவள் குரல் கொடுக்கையில் சந்து வழியாக உப்புப் பெட்டியும் கையுமாக வரும் தங்கபாண்டி “ஆரு? பொன்னாச்சியா…?” என்று கண்களை அகல விரிக்கிறான். அவள் தள்ளி நிற்கிறாள்.

“ஆச்சி இல்லையே? ஆறுமுவனேரி போயிருக்காவ. காலமே சொல்லிட்டுப் போனாவ…” என்று கொட்டிலில் உள்ள திண்ணையில் உப்புப் பெட்டியை அவள் வைக்கிறாள்.

“ஆச்சிக்கு இப்ப என்ன…?”

ஒரு விஷமச் சிரிப்பை நெளிய விட்டவாறு அவளை ஏற இறங்க அவன் பார்க்கிறான்.

வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் தங்க பாண்டி தன் பட்டாளத்து உப்பை எல்லாம் சேகரித்துக் கொண்டு சென்று மூட்டைக்காரர்களுக்கு விற்பான். உள்ளூரிலும் சிறு வியாபாரம் செய்வான்.

பொன்னாச்சிக்கு அவனிடம் சொல்லவும் விருப்பமில்லை. சொல்லாமல் வெறுங்கையுடன் திரும்பவும் மனமில்லை.

“மாமா திர்நேலி போயிருக்கியா, வீட்ட சின்னாச்சி வந்திருக்காவ. மாமி மாமா வந்ததும் தரதாச் சொல்லி கடயில கருப்பட்டியும் காபித்தூளும் வாங்கியாரச் சொன்னா. அரருவாத் துட்டு வேணும்…”

தங்கபாண்டி ஒரு உல்லாசப் பார்வையுடன் தனது இடுப்பிலிருந்து ஒரு ரூபாய்த் தாளை எடுத்து அவள் விரலைத் தீண்டியபடி வைக்கிறான்.

அந்தத் துட்டனை எரித்து விடுபவள் போல பார்த்து விட்டு, கையை உதறினாற் போல் நோட்டை எடுத்துக் கொண்டு அவள் கடைக்கு விரைந்து வருகிறாள். அவன் அவளைக் காணும் போதெல்லாம் இப்படித்தான் சாடைகள் சைகைகள் செய்கிறான். சவம், இனி அவள் தான் இந்த ஊரில் இருக்கப் போவதில்லையே!

அவள் காபித் தூளும் கருப்பட்டியுமாக வீட்டை நெருங்குகையில், மாமி வந்தவளிடம் ஒரு பாட்டம் ‘ஆவலாதி’ பாடிக் கொண்டிருக்கிறாள்.

“அன்னாடக் கஞ்சிக்கே வாரதில்லே. போன வருசம் பாதி நாளும் ஏலேலோ கெளங்குதா அவிச்சிக் கஞ்சி குடிச்சோம். மாசம் ரெண்டு நட கெணறு செப்பம் செய்யாம ஏலாது.”

“லாரி வரப்பாதையில்லேண்ணா உப்புக்கு ஏது வெல? ஓடைக்கு மறுகரயில லாரி வரும். வண்டிக்கார உப்பள்ளிட்டுப் போயி அவங்கிட்ட விக்கியா. நமக்குக் குடுப்பது மூடைக்கி முக்கா ரூவாதா. மூடை மூணுக்கு வித்தாலும், அஞ்சுக்கு வித்தாலும் முக்கா ரூவாக்கி மேல நமக்கு ஒண்ணுமில்ல. நூறு நூறான சங்கத்து ஏக்கரில் இவியளப் போல நம்பாட்டளமிண்ணு இந்தத் தொழிலக் கட்டிட்டுருப்பவ ஆருமில்ல. அவயவிய கன்டிராட்டு, அது இதுண்ணு, அங்கங்க பொழக்கப் போயிட்டாவ. இவிய என்னியோ கெனா கண்டிட்டு ஆனவாடும்படுறா. கண்டவனயும் கூட்டிட்டு வந்து பிளசர் வச்சடிச்சி அம்புட்டு ரூவாயும் செலவு பண்ணதுதா மிச்சம். எங்க ஆம்பிளக்கி ஒரு சூதுவாது தெரியாது.” மாமி மூச்சுவிடாமல் பொரிந்து தள்ளுகிறாள்.

பொன்னாச்சி கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு இறுத்துக் கருப்பட்டியும் சேர்த்து ‘கிளாசில்’ ஊற்றிக் கொண்டு வருகிறாள்.

“கையோடு கூட்டிட்டு வந்திடுண்ணுதா அனுப்பிச்சிருக்காவ. தலைப் பொண்ணு இத, இவளாட்டம இருக்கும். ‘பாஞ்சாலி’ன்னு பேரு. தண்ணி தூக்கியாரும்; வீட்டுக்கார ஆச்சிக்கு ஒத்தாசையா எனுமேஞ் செய்யும். சோறோ கஞ்சியோ போட்டு அவியளே வச்சிருக்காவ. ஒரு பையன் பள்ளிக்கொடம் போறா. பொன்னாச்சி தம்பிய எங்க காணம்? பச்சமுத்துன்னு பேரில்ல?”

“ஆமா எங்க பெரிய பையனுக்கும் அவனுக்கும் ஒரு வருசம் அஞ்சு மாதந்தா வித்தியாசம். இந்த மாதா கோயில் ஸ்கூல்ல படிச்சிட்டு திருச்செந்தூர் போயிப் படிச்சு பத்து பாசாயி, இப்ப காலேஜில படிய்க்கியா. இந்தப் பயலையும் படிபடின்னுதா முட்டிட்டாவ. படிப்பு ஏறலியே? பரவப் பயலுவளோடு கடக்கரயில் திரியுவா, இத வராம் பாரும்!”

பையன் பொன்னாச்சியைப் போல் அப்பன் சாயலாக இல்லை. சிவப்பாக, கழுத்து மட்டும் உயர்ந்து, கிள்ளி எடுக்கச் சதையில்லாமல், பின்னிய மார்க்கூடுடன் விளங்குகிறான். பதினைந்து பதினாறு வயதுப் பையனாகவே மதிக்க இயலாது. குச்சிகுச்சியான முடி. அரையில் ஒரு கறுப்பு அரைச்சராய் மட்டுமே போட்டிருக்கிறான். மேனியில் ஒன்றுமில்லை.

மாமி அவன் கையில் ஒரு பழத்தையும் சிறிது மிட்டாயையும் எடுத்துக் கொடுக்கிறாள். “ஒங்க சின்னாச்சிலே, அப்பச்சி ஒன்னயும் அக்காளையும் தூத்தூடிக்கிக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காராம்…!” என்று தெரிவிக்கிறாள்.

பையன் எதுவுமே பேசாமல் மிட்டாயையும் பழத்தையும் அவசரமாக விழுங்குகிறான்.

“மீன் பரவப் பயலுவளோடு சேந்திட்டுப் போறானா? குடிக்கக் கத்துக்கிடுவானோண்ணு பயமாயிருக்கி. இங்ஙன அம்புட்டு ஆளுவளும் அதே. எங்க ஆம்பிள அந்த நாள்ள கள்ளுக்கடைக்குத் தீவச்சு செயிலுக்கும் போனாவ. இவனப் பத்தி எனக்கு இதே கவல. ஊரா புள்ள, நாம நாளக்கு ஆரும் என்னமேஞ் சொல்லுதாப்பல வச்சுக்கலாமா?”

“பின்ன இல்லியா மயினி? நீரு எம்புட்டு நா வச்சி சோறு போட்டாலும், அவ அப்பன் எம்புள்ளியண்டு தானே உருகா?”

மாமன் இல்லை என்பது வெறும் சாக்குதான் மாமிக்கு. அவர்களை அனுப்பிவிடுவதுதான் குறி என்று பொன்னாச்சி உணர்ந்து கொள்ளுகிறாள். சின்னாச்சியும அவர்களை அழைத்து போய்விட வேண்டும் என்ற தீவிரத்துடன் வந்திருப்பது கண்டு மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

மாமிதான் வந்தவளிடம் எப்படி நடக்கிறாள்! உண்மையில் மாமன் திடீரென்று எதிர்பாராமல் புறப்பட்டு வந்து விட்டால் அவர்கள் பயணத்தை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார். உண்மையில் வேலு தைப் பொங்கல் கழித்துத்தான் கல்லூரி விடுதிக்குச் சென்றிருந்தான். திடீரென்று முதல் நாள் கல்லூரியில் ஏதோ பையன்களிடையே சண்டை. வகுப்புக்கள் நடக்கவில்லை. போலீசு வந்ததென்று முன்சீஃப் வீட்டுக்குத் தெரிந்த ஆசிரியர் செய்தி அனுப்பி இருக்கிறார். உடனே மாமா ஓடியிருக்கிறார். மாமியிடம் வேலுவைக் குறித்து அவர் கத்த, மாமி அழ, இங்கும் ஓரே கலவரமாக இருந்தது. பணம் கூட யாரிடமோ கடன் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்.

“ஏலே, முடியில கொஞ்சம் எண்ணெய் தொட்டா என்ன?” என்று மாமி கரிசனத்துடன் கேட்டு, எண்ணெய் புரட்டச் சொல்கிறாள். பெட்டியிலிருக்கும் நல்ல சராயையும், சட்டையையும் எடுத்துக் கொடுத்து அவனை அணியச் சொல்கிறாள்.

“இவன் போயிட்டா எனக்குக் கையொடிஞ்ச மாருதியாயிரும். நா பெத்த பயலுவவுட இவம் மேலதா எனக்கு உசுரு. துலாவில பாத்திக்குத் தண்ணி எறய்ப்பா. எங்க ஆம்பிள அங்ஙன இங்ஙன போயிட்டேயிருப்பா. சுசய்ட்டின்னும் சங்கம்னும் அவியளுக்கு சோலி. உப்பு எறங்கியிருக்கு மாமின்னு வந்து சொல்லுவா. நானும் அவனுமே வாரி வய்ப்பம். ஒரு நா இரு பரவங்களோடு வள்ளத்திலேறிப் போயிருக்கா. நா காணாம தவிச்சிப் போனே. பொன்னாச்சியும் அப்படித்தே. அவ முடி சீவிச் சட போடலீன்னா எனக்கு ஒறக்கம் புடிக்காது…” என்றெல்லாம் மாமி அருமை பெருமைகளை வாரி விடுகிறாள்.

குத்தியக் கம்பைப் போட்டுக் கிண்டி இறக்கிவிட்டு, மாமி மீன் கண்டம் வாங்கி வந்து குழம்பு வைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு இது கனவா, நினைவா என்று புரியவில்லை. எல்லாம் சுரவேகத்தில் நடப்பது போலிருக்கிறது. என்றாலும் அன்பான மாமனுக்குத் தெரியாமல் சொல்லாமல் இத்தனை நாள் வளர்ந்த இடத்தை விட்டுப் போகலாமா?

“மாமா என்னமே நெனச்சுக்க மாட்டாவளா…”

“என்னேய பின்னே? அப்பச்சி ஒடம்பு சொகமில்லாம, கூட்டிட்டு வாரும்னு அனுப்பிச்சிக் கொடுத்திருக்கயில நாமும் போகண்டாமா? மாமா வந்தாச் சொல்ற. வந்து பாக்கச் சொல்றே. அவியவிய சொத்த அவியவிய கிட்ட ஒப்படய்க்கிறதுதான மொறை?”

இந்த நியாய வார்த்தைகளுக்கு மேல் பேச்சுக்கு இடமேது?

பொன்னாச்சியுடன் தானும் புறப்பட வேண்டும் என்று ஞானம் அழுகுறான். குஞ்சரி அவளுக்கு அம்மா வைத்துப் பின்னியிருக்கும் ரோஸ் நாடாவையும், அவள் உடுத்தியிருக்கும் ரோஸ் சேலையையும் தொட்டுப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

பொன்னாச்சி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள்கிறாள். தெருவே அவர்களை வழியனுப்புகிறது. முன்சீஃப் வீட்டு ஆச்சி இல்லை. கோயில்காரர் வீடு, கொல்லாசாரி வீட்டு ஆச்சி எல்லோரிடமும் பொன்னாச்சி சுருக்கமாக விடை பெற்றுக் கொள்கிறாள்.

மாகாளி அம்மன் கோயிலில் கும்பிட்டு வேண்டிக் கொள்கிறாள். மாலை வெயில் மஞ்சள் முலாம் பூசத் தொடங்குகிறது. சிவந்தகனி பஸ் நிறுத்தத்தில் ஏற்கெனவே வந்து நிற்கிறான். பொன்னாச்சியை அவன் வியப்புடன் பார்த்த வண்ணம், “இதுதா மவளா?” என்று கேட்கிறான்.

“ஆமா, அது பய்யன்…”

மருதாம்பா சொல்லி முடிக்கு முன் பஸ் ஒன்று வருகிறது. இசக்கி இப்போதும் இடுப்பில் தங்கச்சியுடன் நிற்கிறது. “பொன்னாச்சி அக்கா, தூத்தூடிக்கா போற?” என்று விழிகள் விரிய அவள் கேட்கையிலேயே அவர்கள் வண்டிக்குள் ஏறிக் கொள்கின்றனர். பொன்னாச்சி நின்ற வண்ணம் அவளுக்குக் கையை அசைக்கிறாள்.

பஸ் கிளம்பி விடுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45

அத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு! நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச்

கல்கியின் பார்த்திபன் கனவு – 18கல்கியின் பார்த்திபன் கனவு – 18

அத்தியாயம் 18 குந்தவியின் கலக்கம் “புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு; நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி” என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28

அத்தியாயம் 28 – சந்திப்பு      பஞ்சநதம் பிள்ளை ஜீவியவந்தராயிருந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய இருதயமாகிய கோட்டையை கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். அதில் முத்தையன் பிரவேசிப்பதற்கு அவள் இடங்கொடுக்கவில்லை. அவ்வாறு இடங்கொடுப்பது பாவம் என்று அவள் கருதினாள். ஆகவே, முத்தையனுடைய நினைவு