Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 25

கல்கியின் பார்த்திபன் கனவு – 25

அத்தியாயம் 25


கடற் பிரயாணம்

இளவரசன் விக்கிரமனை ஏற்றிக் கொண்டு கிளம்பிய கப்பல் சீக்கிரத்திலேயே வேகம் அடைந்து கிழக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரக் காட்சிகளையும், கோவில் கோபுரங்களையும், மரங்களின் உச்சிகளும் மறைந்துவிட்டன. கரை ஓரத்தில் வெண்மையான நுரைகளுட னும் இரைச்சல்களுடனும் எழுந்து விழுந்து கொண்டிருந்த சிற்றலைகள் இப்போது காணப்படவில்லை. கடல் நீர் தூய நீல நிறமாயிருந்தது. அந்த நீல நிறப் பரப்பிலே பெரும் பள்ளங்களும் மேடுகளும் பெரு மூச்சு விட்டுக் கொண்டு மேலே எழும்பியும் கீழே விழுந்தும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. அதே சமயத்தில் துயரம் நிறைந்த ‘ஹோ’ என்ற இடைவிடாத புலம்பல் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. இவ்விதம் விக்கிரமன் வெளியே கண்ட காட்சியானது அவனுடைய உள்ளத்தின் நிலைமையைப் பிரதிபலிப்பதாயிருந்தது. கடலின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் எல்லையற்ற மோன அமைதியைப் போல் அவனுடைய இருதயத்தின் அடிவாரத்திலும் விவரிக்கவொண்ணாத பரிபூர்ண சாந்தி நிலவிற்று. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தின் மேற்பரப்பில் என்னவெல்லாமோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்து கொந்தளிப்பை உண்டாக்கின.

 

பார்த்திப மகாராஜா சோழ நாட்டின் மேன்மையைக் குறித்துத் தாம் கண்ட கனவுகளைப் பற்றிச் சொன்னதெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன. கடற்பிரயாணம் செய்ய வேண்டுமென்று இளம்பிராயத்திலிருந்து அவனுடைய மனத்தில் குடி கொண்டிருந்த ஆசையும் நினைவுக்கு வந்தது. அந்த ஆசைதான், அடடா என்ன வினோதமான முறையில் இன்று நிறைவேறுகிறது? புலிக்கொடி கம்பீரமாகப் பறக்கும் பெரிய பெரிய கப்பல்களில் சோழநாட்டு வீரர் படைகளுடன் பிரயாணம் செய்து கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களிலெல்லாம் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்ற மனோரதத்துக்கும், இன்று பல்லவர்களின் சிங்கக் கொடி பறக்கும் கப்பலில் கையும் காலும் சங்கிலியால் கட்டுண்டு தேசப் பிரஷ்டனாய்ப் பிரயாணம் செய்வதற்கும் எவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு தூரம்! இப்படி விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருந்த போதே கப்பலின் தலைவன் சில ஆட்களுடன் அங்கு வந்து விக்கிரமனைப் பிணித்திருந்த சங்கிலிகளை எடுக்கச் செய்தான். “இது ஏன்?” என்று விக்கிரமன் வினவ, “சக்கரவர்த்தியின் ஆணை?” என்றான் கப்பல் தலைவன். “என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று விக்கிரமன் கேட்டதற்கு, “இங்கிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்தில் நடுக்கடலிலே ஒரு தீவு இருக்கிறது.

 

அதன் அருகே தங்களை இறக்கி விட்டுவிட வேண்டுமென்று கட்டளை!” என்று மறுமொழி வந்தது, “அங்கே வசிப்பவர்கள் யார்?” என்று விக்கிரமன் மேலும் கேட்டான். “அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தீவுக்குப் போய்ச் சேரும் வரையில், இந்தப் கப்பலுக்குள்ளே தாங்கள் சுயேச்சையாக எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் தப்பிச் செல்வதற்கு மட்டும் பிரயத்தனம் செய்யக் கூடாது. செய்தால் மறுபடியும் தலையிடும்படி நேரும்” என்றான் கப்பல் தலைவன். விக்கிரமன் கப்பலுக்குள்ளே அங்குமிங்கும் சிறிது நேரம் அலைந்தான். மாலுமிகளுடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்ததில் ஒன்றும் பிரயோஜனம் ஏற்படவில்லை. அவர்கள் எல்லாரும் விக்கிரமன் சம்பந்தப்பட்டவரை ஊமைகளாகவேயிருந்தனர். பின்னர், கப்பல் மேல் தளத்தின் ஓரமாக அவன் வந்து, வானையும் கடலையும் நோக்கிய வண்ணம் முன்போலவே சிந்தனையில் ஆழ்ந்தான். அன்னை அருள்மொழியின் நினைவுதான் எல்லாவற்றிற்கும் முன்னால் நின்றது. அவர் இச்சமயம் என்ன செய்து கொண்டிருப்பார்? என்ன எண்ணிக் கொண்டிருப்பார்? தன்னுடைய முயற்சி நிஷ்பலனாய்ப் போனது பற்றி ஏமாற்றமடைந்திருப்பாரா? பல்லவ சக்கரவர்த்தியின் முன்னிலையிலே தான் சிறிதும் பணிந்து போகாமல் பேசிய வீர வார்த்தைகளைக் கேட்டுப் பெருமையடைந்திருப்பாரா? தன்னுடைய பிரிவைக் குறித்து வருத்தப்படுவாரா? எப்படியும் அவருக்கு ஆறுதல் கூறச் சிவனடியார் போயிருப்பாரல்லவா?

 

உடனே, சிவனடியாரின் ஞாபகம் வந்தது. கப்பல் கரையை விட்டுக் கிளம்பிய தருணத்தில் அந்தப் பெரியவர் எங்கிருந்தோ வந்து குதித்துத் தமது திருக்கரத்தை நீட்டி ஆசீர்வாதம் செய்தாரே? அவருக்குத்தான் நம்மிடத்தில் எவ்வளவு அன்பு! சிவனடியாரைப் பற்றி நினைக்கும்போதே மற்றோர் உருவம் விக்கிரமனுடைய மனக்கண் முன் தோன்றியது. அது ஒரு பெண்ணின் உருவம். முதல் நாள் காஞ்சிபுரத்து வீதியில் பார்த்த அந்தப் பெண் மறுநாள் மாமல்லபுரத்துக் கடற்கரைக்கு எப்படி வந்தாள்? அவள் யாராயிருக்கும்? ஆகா அவளுடைய கண்கள்தான் எவ்வளவு நீண்டு படர்ந்திருந்தன? அந்தக் கண்களிலே கண்ணீர் துளித்து நின்ற காரணம் என்ன? தன்னிடத்தில் உள்ள இரக்கத்தினாலா? முன்பின் தெரியாத அந்தப் பெண்ணுக்குத் தன்மேல் இரக்கம் உண்டாவானேன்? இல்லாவிட்டால் தன்னை எதற்காக அவ்வளவு கனிவுடன் பார்க்க வேண்டும்? இப்படி வெகு நேரம் அவளைப் பற்றியே எண்ணி கொண்டிருந்த விக்கிரமன், சூரியன் மறைந்து நாலுபுறமும் இருள் சூழ்ந்ததைக்கூடக் கவனிக்கவில்லை. தற்செயலாகக் கீழே கடலை நோக்கியபோது விண்மீன்கள் தண்ணீரில் பிரதிபலிப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அத்தனை நேரமும் முன்பின் தெரியாத அந்தப் பெண்ணைப் பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்ததை நினைத்துச் சிறிது வெட்கமடைந்தான்.

 

பிறகு பொன்னனையும், வள்ளியையும் பற்றி எண்ணினான். அவர்களுக்குத் தன் பேரில் எவ்வளவு பிரியம்? இந்த நேரமெல்லாம் அவர்கள் தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது ஒரு வேளை வள்ளியின் பாட்டனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன தைரியம்? சோழநாட்டு ஆண்மக்களெல்லாம் அவனைப் போன்ற வீரர்களாயிருக்கக் கூடாதா? இருட்டி ஒரு ஜாமம் ஆனபோது, நீலக் கடலைச் செம்பொற் கடலாகச் செய்துகொண்டு கீழ்வானத்தில் சந்திரன் உதயமானான். பூரண சந்திரனில்லை; முக்கால் சந்திரன் தான். பார்ப்பதற்கு ஒரு பெரிய பொற்கிண்ணம் கடலிலிருந்து வெளிக்கிளம்புவது போலிருந்தது. முன்னம் பாற்கடலைக் கடைந்தபோது இந்தச் சந்திரனாகிய பொற்கிண்ணத்திலேதான் அமுதம் வந்ததோ, என்னவோ? இன்றும் அப்பொற் கிண்ணத்திலிருந்த நிலவாகிய அமுதம் பொங்கிப் புவனமெல்லாம் பரவியதாகத் தோன்றியது. இந்த மோகனக் காட்சியை விக்கிரமன் பார்த்தான். கடலிலிருந்து எழும்பிய சந்திர பிம்பத்துடனேகூட அவனுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தப் பெண்ணின் முகமும் மறுபடி எழுந்தது.

 

இந்த உதயசந்திரனுடைய பொன்னிறந்தான் அவளுடைய முகத்தின் நிறமும்! “ஆகா! அது என்ன அழகான முகம்!” என்ற எண்ணம் அப்போது விக்கிரமனுக்கு முதன் முதலாகத் தோன்றியது. அந்தப் பொன் முகத்தின் அழகை அதைக் கவிந்திருந்த கருங்கூந்தல் எவ்வளவு நன்றாய் எடுத்துக் காட்டிற்று! ஆம்; நிகரில்லாத சௌந்தரியம் வாய்ந்தவள் அந்தப் பெண். சித்திரத்திலும் சிலையிலும் கூட அத்தகைய திவ்ய சௌந்தரியத்தைக் காண்பது அரிதுதான். அவள் யாராயிருக்கும்? பன்னிரண்டு தினங்கள் சென்றன. அடிக்கடி குந்தவியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த விக்கிரமனுக்கு இந்தப் பன்னிரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. பதின்மூன்றாம் நாள் பொழுது விடிந்தபோது சூரியோதயமான திசையில் விக்கிரமன் கண்ட காட்சி அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்தது. ஏனெனில் வழக்கம் போல் சூரியன் சமுத்திரத்திலிருந்து கிளம்பி ஜோதிப் பிழம்பாய் மேலே வருவதற்குப் பதிலாக, பச்சை மரங்களுக்குப் பின்னால் உதயமாகி மேலே ஒளிக்கிரணங்களைப் பரப்பினான். இந்த அபூர்வக் காட்சியைப் பார்த்துக் கொண்டு விக்கிரமன் நிற்கும்போதே கப்பல் தலைவன் அவனை நெருங்கி, ‘இளவரசே! அதோ தெரிகிறதே, அந்தத் தீவின் அருகில்தான் தங்களை விட்டுவிடும்படி எங்களுக்குக் கட்டளை. தங்களுக்கு நீந்தத் தெரியுமல்லவா?” என்றான்.

 

“கரைக்கு எவ்வளவு தூரத்தில் விடுவீர்கள்?” “ரொம்ப தூரத்தில் விடமாட்டோ ம் ஒத்தாசைக்கு ஒரு மரக்கட்டை போடுவோம்” “நான் இறங்க மாட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்?” “மரக்கட்டையில் கட்டி மிதக்க விட்டு விடும்படி கட்டளை, தங்களுடைய விருப்பம் என்ன?” “நானே இறங்கி விடுகிறேன்” என்றான் விக்கிரமன். அவ்வாறே கப்பல் இன்னும் சிறிது கரையை நெருங்கியதும், விக்கிரமனைக் கடலில் இறக்கிவிட்டு ஒரு மரக்கட்டையையும் போட்டார்கள். விக்கிரமன் அதைப் பிடித்துக் கொண்டு அதிக நேரம் நீந்தியும், சிறிது நேரம் அதன் மேல் உட்கார்ந்து மிதந்தும், கரையை நோக்கிச் சென்றான். கரையை நெருங்க, நெருங்க தூரத்தில் கப்பலிலிருந்து பார்த்தபோது எறும்புக் கூட்டம் மாதிரி காணப்பட்டது உண்மையில் மனிதர்கள் கூட்டமே என்று தெரிய வந்தது. அந்த மனிதர்கள் யார்? எதற்காகக் கடற்கரையில் வந்து கூடியிருக்கிறார்கள்? அவர்கள் என்ன பாஷை பேசுவார்கள்? சக்கரவர்த்தி தன்னை இந்தத் தீவில் விட்டு வரச் சொன்னதின் நோக்கம் என்ன? இப்படிப் பற்பல எண்ணங்கள் விக்கிரமனுடைய மனத்தில் அலை அலையாக எழுந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 33கல்கியின் பார்த்திபன் கனவு – 33

அத்தியாயம் 33 நள்ளிரவில் அன்றிரவு ஏறக்குறைய ஒன்றரை ஜாமம் ஆனபோது உறையூர் நகரில் நிசப்தம் குடிகொண்டது. வீதிமுனைகளில் கல் தூண்களின்மேல் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக மங்கி அணையத் தொடங்கின. உறையூருக்கும் ஸ்ரீஅரங்கத்துக்கும் இடையில் சென்ற காவேரி நதியின்மேல் காரிருள்

கல்கியின் ‘பரிசல் துறை’-2கல்கியின் ‘பரிசல் துறை’-2

2 சூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன. பரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி,

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06

அதைக்கேட்ட சேவகன் ஒருவன் ‘’அந்த நியாயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்த வழியாகச் சுடுகாட்டிற்கு யாராவதுபிணத்தை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு அவர்கள் ஒரு பணம் வரி செலுத்திவிட்டே போகவேண்டுமென்பது திவானுடைய கண்டிப்பான உத்தரவு. கொடாவிட்டால், பிணத்தைவிட எங்களுக்கு அதிகாரமில்லை. இது அநாதைப் பிணமென்று