Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 16

கல்கியின் பார்த்திபன் கனவு – 16

அத்தியாயம் 16
கலைத் திருநாள்

மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர் களுடைய வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள். மறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகர வாசிகள் தத்தம் வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங் காலத்திலும் பொது இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள், கலா மண்டபங்கள், வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின. அன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன் கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சகர்களுக்குக் சன்மானம் அளித்தார்கள். கலைக் கூடங்களுக்கும், வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியர்களுக்குப் பொன்னும் புதுவஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால், மாமல்லபுர வாசிகளுடைய குதூகலத்தின் முழு அளவையும் மறுநாள் விஜய தசமியன்றுதான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அன்று திருவிழா நகருக்கு வெளியே நடந்தது. மாமல்ல புரத்துக்குத் தெற்கே நெடுந் தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி நின்ற சிறு குன்றுகளும், பாறைகளும் அன்று அற்புதமான தோற்றங்கொண்டு விளங்கின. பாறைகளின் சுவர்களிலெல்லாம் விதவிதமான வர்ண வேறுபாடுகளுடன் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருந்தன.

 

ஒரு விசாலமான பாறையிலே, நந்த கோகுலத்தில் பாலகோபாலன் செய்த லீலைகள், பூதனை சம்ஹாரத்திலிருந்து காளிங்க நர்த்தனம் வரையில் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன. தயிர் கடைந்து கொண்டிருந்த யசோதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெண்ணெய் வேண்டுமென்று கண்ணன் கெஞ்சிக் கொண்டிருந்த சித்திரத்தைப் பார்த்த வண்ணமே வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று தோன்றியது. இருபிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந் தவம் செய்த காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள் முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் வியப்பும் பக்தியும் காணப் படுகின்றன. இந்த ஒப்பற்ற சித்திரக் காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணைமூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப் பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான். இந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள் ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டுப் பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள் கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை அணிந்திருந்தார்கள்.

 

எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும் இருந்தது. ஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக் காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள் காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின் தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவரவர் களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும் நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன. இவ்விதம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாய்த் தோன்றியதாயினும் அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும் நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்தப் பெரிய அலைக்குக் காரணமாயிருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியுந்தான்.

 

நரசிம்மவர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல் வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பக்கத்தில் இருந்தாள். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள் மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின் வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக் கொண்டு போனார்கள். ஜனத் திரளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம் ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியிருந்தது. சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித் தெளித்தார்கள். “ஜய விஜயீ பவ!” என்றும், “தர்ம ராஜாதிராஜர் வாழ்க!” “திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க!” “நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க!” “மாமல்ல மன்னர் வாழ்க” என்றும் கோஷித்தார்கள். சக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ சிரத்தை யுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு வந்தார். இவ்விதம் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடைசியாக ஊர்வலம் துர்க்கை ஆலயத்தண்டை வந்து சேர்ந்தது. இந்தத் துர்க்கை ஆலயம் மகேந்திரவர்மனின் காலத்திலே குன்றில் குடைந்து நிர்மாணித்தது. திருப்பணி வேலை இடையில் தடைப்பட்டுப் பூர்த்தியாகாமல் இருந்தது. அன்று நடந்த கோலாகலமான விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் துர்க்கை ஆலயந்தான் நடுநாயகமாயிருந்தது.

 

அந்தப் பாறைக் கோயிலுக்கு எதிரே மிகவும் விஸ்தாரமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தால் அமாவாசையன்று நள்ளிரவில் துல்லியமான ஆகாயத்தைப் பார்க்கிறோமோ? என்ற பிரமை உண்டாகும். அவ்விதம் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்த எண்கோணப் பொட்டுக்கள் அமைந்த நீலப் பட்டாடையினால் மேல் விதானம் கட்டியிருந்தார்கள். பந்தலின் தூண்களில் விதவிதமான வர்ணப் பட்டாடைகளைச் சுற்றியிருந்தார்கள். பந்தலுக்கு மேலே வரிசையாகச் சிங்கக் கொடிகள் மாலைக் கடற்காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் விளிம்புகளில் இளந்தென்னங் குருத்துக்களினாலான தோரணங்கள் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் மத்தியில், தேவியின் சன்னதிக்கு எதிரே, சக்கரவர்த்திக்கும் அவருடைய புதல்விக்கும் இரண்டு அழகிய சிம்மாசனங்களும், அவற்றைச் சுற்றிலும் வரிசை வரிசையாகிய இன்னும் பல ஆசனங்களும் அமைக்கப் பட்டிருந்தன. புலிகேசியின் படையெடுப்பினால் தடைப்பட்டுப் போன சிற்பத் திருப்பணியை இந்தத் துர்க்கா தேவியின் கோயிலில் விஜயதசமி தினத்தில் மீண்டும் தொடங்குவதற்காக ஏற்பாடாகி இருந்தது. சக்கரவர்த்தி வருவதற்கு நெடுநேரத்திற்கு முன்னமேயே பந்தலில் மந்திரி மண்டலத்தாரும், மற்ற அதிகாரிகளும் வந்து அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் பந்தலுக்குள் வந்ததும் சபையினர் அனைவரும் எழுந்து நின்றதுடன், ஜய கோஷங்களும் வாழ்த்தொலிகளும் வாத்திய முழக்கங்களும் வானை அளாவி எழுந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 11கல்கியின் பார்த்திபன் கனவு – 11

பார்த்திபன் கனவு இரண்டாம் பாகம் அத்தியாயம் 11 சிவனடியார் பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கெண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த

கல்கியின் பார்த்திபன் கனவு – 64கல்கியின் பார்த்திபன் கனவு – 64

அத்தியாயம் 64 புதையல் கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான்.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 13கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 13

அத்தியாயம் 13 – பயம் அறியாப் பேதை      முத்தையனைப் போலீஸ் சேவகர்கள் வீதியில் சந்தித்து அழைத்துக் கொண்டு போனதை அச்சமயம் தற்செயலாக அந்தப் பக்கம் போக நேர்ந்த செங்கமலத்தாச்சி பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தச் செங்கமலத்தாச்சி, முத்தையன் குடியிருந்த அதே வீதியில், அவனுடைய