Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 14

கல்கியின் பார்த்திபன் கனவு – 14

அத்தியாயம் நான்கு
மாமல்லபுரம்

கடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோலகல்லோலமாயிருந்தது. வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங் குருத்துக்களினாலும் சிங்க உருவந் தாங்கிய கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. தெரு வீதிகளில் சித்திர விசித்திரமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. தேர்கள், யானைகள், குதிரைகள், கோபுரங்கள், பலவித விருட்சங்கள், பூஞ்செடிகள் – இவை போலெல்லாம் போட்ட கோலங்கள் கண்ணுக்கு விருந்தாயிருந்தன. அதிகாலையிலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் பட்டுப் பட்டாடைகளினாலும், பசும் பொன் ஆபரணங்களினாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு தெருவீதிகளிலும் திண்ணைகளிலும் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எங்கே பார்த்தாலும் பேரிகை முழக்கம், மற்றும் மங்கள வாத்தியங்களின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த ஒலிகளுக்கிடையில் ” சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து கிளம்பி விட்டாராம்!” “பாதி வழி வந்தாகி விட்டதாம்!” “சக்கரவர்த்தியின் கோமகள் குந்தவி தேவியும் வருகிறாராம்!” என்றெல்லாம் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் கலகல சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. மாமல்லபுரம் வாசிகள் அத்தனை அதிக உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்று உற்சவம் கொண்டாடியதின் காரணம் என்னவென்றால், அந்நகருக்கு அன்று மாமல்ல நரசிம்மவர்ம சக்கரவர்த்தி விஜயம் செய்வதாக இருந்தது தான். சக்கரவர்த்தி விஜயம் செய்து, ஏழெட்டு வருஷங் களுக்கு முன்னால் நின்றுபோன சிற்பப் பணியை மறுபடியும் ஆரம்பித்து வைப்பார் என்றும் அறிவிக்கப் பட்டி ருந்தது.

 

சக்கரவர்த்தியுடன் கூட அவருடைய செல்வக் குமாரி குந்தவி தேவியும் வரப்போவதாகத் தெரிந்திருந்தபடியால் மாமல்லபுர வாசிகள் எல்லையற்ற குதூகலத்துடன் அந்த நாளைத் திருநாளாகக் கொண்டாடினார்கள். அந்தக் காலத்தில், காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் புகழ் எண்டிசையிலும் பரவியிருந்தது. பாரத நாடெங்கும் அவருடைய கீர்த்தி வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தது. தெற்கே காவேரியாற்றங்கரையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதிக்கரை வரையில் பல்லவர்களின் சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தப் பிரதேசத் திலுள்ள ஜனங்கள் எல்லாரும் நரசிம்மவர்மரிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தார்கள். அறிவிலும் வீரத்திலும் தயாள குணத்திலும் நடுக் கண்ட நீதி வழங்குவதிலும், குடிகளின் நலங்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பதிலும், சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலிய கலைகளை வளர்ப்பதிலும் நரசிம்மவர்மர் மிகச் சிறந்து விளங்கியது பற்றி அவருடைய பிரஜைகள் மிக்க பெருமை கொண்டிருந்தார்கள். வடக்கே நர்மதை நதி வரையில் படையெடுத்துச் சென்று பொல்லாத புலிகேசியைப் போரில் கொன்று, வாதாபி நகரையும் தீக்கிரையாக்கி விட்டு வந்ததன் பின்னர், மாமல்ல சக்கரவர்த்தியைப் பற்றி அவருடைய குடிகள் கொண்டிருந்த பெருமை பன்மடங்கு பெருகியிருந்தன.

 

“தட்சிண தேசத்தில் நரசிம்மவர்மரைப் போல் ஒரு சக்கரவர்த்தி இதுவரையில் தோன்றியதுமில்லை; இனிமேல் தோன்றப் போவதுமில்லை! என்று அந்தக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள். முன்னூறு வருஷத்துக்குப் பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகாசக்கரவர்த்திகள் தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க முடியாதல்லவா? இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம் பக்தி விசுவாசம் கொண்டிருந்தவர்களாயினும், மாமல்லபுரம் வாசிகளுக்குச் சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு ஏற்பட் டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப் பெயரும் புகழும் அளித்தவர் அவரே யல்லவா? மகேந்திரவர்ம சக்கரவர்த் தியின் காலத்தில், நரசிம்மவர்மர் இளம் பருவத்தினராயிருந்தபோது, ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற மல்லர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு ‘மகாமல்லன்’ என்ற பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால் அளிக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக் கடற்கரைப் பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று. “அப்பா! இந்தப் பட்டினத் துக்கு உங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்?” என்று கோமகள் குந்தவி தேவி, தந்தை நரசிம்மவர்மரைப் பார்த்துக் கேட்டாள். இருவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை மீது அம்பாரியில் வீற்றிருந்தார்கள்.

 

அந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும் வாளும் தாங்கிய போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும் பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன. எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில் முரசுகளைச் சுமந்து கொண்டு சென்றன. சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள் அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம் அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது. அம்பாரியின் மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவர் அருமைப் புதல்வியையும் ஏக காலத்தில் பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும் அருகருகே பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போவார்கள். இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற ஆபரணங்களிலும் பதிந்த நவரத்தினங்களின் காந்தி பார்ப்பவர்களின் கண்களைக் கூசச் செய்தன. பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான தோற்றமுடையவராகயிருந்தார். வலிமையும் திறமையுங் கொண்ட அவருடைய திருமேனியில் மென்மையும் சௌந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை ததும்பிய அவருடைய முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர யுத்தங்களில் கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன. கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு உருக்கொண்டவள் போலிருந்தாள்.பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும் ஓவியக்காரர்களும் குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்டதென்பதை ஒப்புக் கொண்டார்கள். “கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை. தேவி தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள் உணர்விழந்து மெய்ம்மறந்து போய் விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே? சித்திரம் வரைவதெங்கே?” என்றார்கள். “எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்வதற்கென்றே பிரம்மன் குந்தவி தேவியைப் படைத்திருக்க வேண்டும்!” என்று அவர்கள் சொன்னார்கள். “அப்பா! இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்” என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி. “அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்” என்றார் சக்கரவர்த்தி. “இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா” என்றாள் குந்தவி. “நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா! குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம்! சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படி யெல்லாம் செய்யக்கூடாது!” என்றார் சக்கரவர்த்தி. “எதற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால், யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை இல்லை?” என்று சிரித்துக் கொண்டே குந்தவி கேட்டாள்.

 

“ஆமாம், ஆமாம்! அப்படி நீ இருந்தால் ‘காஞ்சி சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை மேலிருந்து குதித்தாளாம்” என்ற செய்தி உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத் தாறு தேசத்து இராஜ குமாரர்களில் யாரும் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள்! அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்.” “ஜனகர் தந்திரம் செய்தாரா? என்ன தந்திரம் அப்பா?” என்று குந்தவி கேட்டாள். “அது தெரியாதா உனக்கு? சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு நாள் வில்லைத் தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கலியாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். கடைசியில் சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா? விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார்! இராமன் அந்த வில்லை விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்து விட்டது! உடனே ஜனகர், “ஐயையோ! எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்து விட்டாயே! ஒன்று ஒடிந்த வில்லைச் சேர்த்துக் கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக் கலியாணம் பண்ணிக் கொள்” என்றார்.

 

இராமன் வேறு வழியில்லாமல் சீதையைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று!” “குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, “அப்பா! நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லுவது புதிய இராமாயணமாயிருக்கிறதே!” என்றாள். சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், “ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா! நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை” என்று சொன்னாள். சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, “அது என்ன சமாசாரம்? கலியாணம் உன்னை என்ன பண்ணிற்று? அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம்? என்று கேட்டார். அப்போது குந்தவி “கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே வேண்டும்? உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்” என்றாள். அப்படி யா சமாசாரம் குந்தவி? இன்னொரு தடவை சொல்லு” என்றார் சக்கரவர்த்தி. “அதெல்லாம் ஒரு தடவைக் குமேல் சொல்ல மாட்டேன் அப்பா! நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே! ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள்?” “ஓ ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! இந்த வாயாடிப் பெண்ணைக் கட்டிக் கொண்டு எந்த இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ? யார் தலையில் அவ்விதமிருக்கிறதோ? அவனை நீதான் காப்பாற்றியருள வேண்டும்” என்று சொல்லியபடி சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை அண்ணாந்து நோக்கினார்.

 

“உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை நிறுத்துகிறீர்களா, இல்லையா? இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால், அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கலியாணம் செய்து கொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்” என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே குதிப்பது போல் பாசாங்கு செய்தாள். “வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே!” என்று கூறி பல்லவ சக்கரவர்த்தி யானைப்பாகனைக் கூப்பிட்டு யானையை நிறுத்தச் சொன்னார். யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள். சக்கரவர்த்தி குதிரையும் பல்லக்கும் கொண்டு வரும்படி சமிக்ஞை காட்டினார். அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, “நீங்கள் நேரே போய் நகர் வாசலருகில் நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்து கொள்கிறோம்” என்றார். பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகப் போகத் தொடங்கினார். இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத் தொடர்ந்து சென்றது. சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச் செய்வது சர்வ சகஜமாய்ப் போயிருந்தபடியால், அவரைத் தொடர்ந்து வந்த பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல் இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 64கல்கியின் பார்த்திபன் கனவு – 64

அத்தியாயம் 64 புதையல் கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான்.

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 20திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 20

அவர்கள் செல்லுமுன் போலீசு விசாரணை போன்ற சடங்குகளெல்லாம் முடிந்துவிட்டது. சடலத்தைக் கிடங்கிலிருந்து தான் எடுத்து வருகின்றனர். மருதாம்பாளின் முகம் என்று அடையாளமே தெரியவில்லை. முடியெல்லாம் பிய்ந்து குதறப்பட்டிருக்கிறது. மாமிக்கு முடி வெண்மையும் கருமையுமாக இருக்கும். சின்னம்மாவுக்குக் கருமை மாறாத முடி –

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 52கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 52

அத்தியாயம் 52 – பொழுது புலர்ந்தது முத்தையன் கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததும், சர்வோத்தம சாஸ்திரி தாமே நேரில் போய்க் கல்யாணியை அழைத்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டார். வேறு யாராவது போனால் கலவரப்படுத்தி விடுவார்கள் என்றும், ஒரு