Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 08

கல்கியின் பார்த்திபன் கனவு – 08

அத்தியாயம் எட்டு
சித்திர மண்டபம்

உறையூர்த் தெற்கு ராஜவீதியிலிருந்த சித்திர மண்டபம் அந்தக் காலத்தில் தென்னாடெங்கும் புகழ் வாய்ந்திருந்தது. காஞ்சியிலுள்ள மகேந்திர சக்கரவர்த்தியின் பேர் பெற்ற சித்திர மண்டபம் கூட உறையூர்ச் சித்திர மண்ட பத்துக்கு நிகராகாது என்று ஜனங்கள் பேசுவது சகஜமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவும் இளவரசர் விக்கிரமனும் வெண் புரவிகளின் மீதேறி இந்தச் சித்திர மண்டபத்தின் வாசலை அடைந்த அதே சமயத்தில், அங்கே படகோட்டி பொன்னனும் வந்து சேர்ந்தான். இந்த அகாலவேளையில் மகாராஜாவைப் பார்க்க முடியுமோ என்னவோ என்ற கவலையுடன் வந்த பொன்னன் திடிரென்று மகாராஜாவைப் பார்த்ததும் இன்னது சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். “மகாராஜா…” என்னும்போதே அவனுக்கு நாக்குழறியது. அந்தக் குழறிய குரலைக்கேட்டு மகாராஜாவும் இளவரசரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். “பொன்னா! நீ எங்கே வந்தாய்?” என்றார் மகாராஜா. பொன்னனின் மௌனத்தைக் கண்டு ஒருவாறு அவன் வந்த காரணத்தை ஊகித்தவராய், குதிரை மீதிருந்து கீழிறங்கினார். இளவரசர் விக்கிரமனும் லாவகமாய்க் குதிரை மீதிருந்து குதித்தார். “பொன்னா! இந்தத் தீவர்த்தியை வாங்கிக் கொள்!” என்றார் மகாராஜா. அருகே தீவர்த்தி வைத்துக் கொண்டு நின்ற ஏவலாளனிடமிருந்து பொன்னன் தீவர்த்தியை வாங்கிக் கொண்டான். அந்த வேளையில் மகாராஜா எதற்காக சித்திர மண்டபத்துக்கு வந்திருக்கிறார் எதற்காகத் தன்னை தீவர்த்தியுடன் பின் தொடரச் சொல்லுகிறார் என்பதொன்றும் அவனுக்குப் புரியாவிட்டாலும், மகாராஜா தன்னைத் திரும்பிப் போகச் சொல்லாமல் தம்முடன் வரும்படி சொன்னதில் அளவிலாத குதூகலமுண்டாயிற்று.

 

மகாராஜாவும் இளவரசரும் முன் செல்ல; பொன்னன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சித்திர மண்டபத்துக்குள் புகுந்தான். அந்த சித்திர மண்டபத்துக்குள் முதல் முதலாகப் பிரவேசிக்கிறவர்களுக்கு “நமக்குள்ள இரண்டு கண் போதாது; இரண்டாயிரம் கண் இருந்தால் இங்கேயுள்ள சித்திரங்களை ஒருவாறு பார்த்துத் திருப்தியடையலாம்” என்று தோன்றும். அந்த விஸ்தாரமான மண்டபத்தின் விசாலமான சுவர்களில் விதவிதமான வர்ணங்களில் பலவகைச் சித்திரங்கள் தீட்டப் பெற்றிருந்தன. அந்த மண்டபத்தைத் தாங்கிய சிற்ப வேலைப்பாடுள்ள தூண்களிலும் சித்திரங்கள் காணப்பட்டன. மேல் விமானத்தின் உட்புறங்களையும் சித்திரங்கள் அலங்கரித்தன. ஒரு சுவரில் ததீசி முனிவரிடம் இந்திரன் வச்சிராயுதத்தைப் பெறுவது, இந்திரன் விருத்திராசுரனைச் சம்ஹரிப்பது, பிறகு இந்திரலோகம் வருவது, தேவர்களும் தேவமாதர்களும் இந்திரனை எதிர்கொண்டு வரவேற்பது. இந்திரனுடைய சபையில் தேவ மாதர்கள் நடனம் புரிவது முதலிய காட்சியைச் சித்திரித்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில், திருப்பாற்கடலில் மந்திரகிரியை மத்தாகவும் வாஸுகியைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று கடையும் பிரம்மாண்டமான காட்சியைச் சித்திரித்திருக்கிறது. அடுத்தாற்போல, பரமசிவனுடைய தவத்தைக் கலைப்பதற்குக் காமதேவன் மலர்க்கணை தொடுப்பது முதல் குமரப் பெருமான் ஜனனம் வரையிலும் உள்ள காட்சிகள் காணப்பட்டன. இந்த உருவங்கள் எல்லாம் கேவலம் உயிரற்ற சித்திரங்களாகத் தோன்றவில்லை. கால், கை, முகம் இவற்றின் சரியான அளவு எடுத்துச் சாமுத்திரிகாலட்சணத் துக்கு இணங்க எழுதப்பட்டிருக்கவுமில்லை.

 

ஆனாலும், அந்த உருவங்களின் ஒவ்வொரு அவயத்திலும், காணப்பட்ட நெளிவும் முகத்தில் பொலிந்த பாவமும், தத்ரூபமாய் அந்தத் தேவர்களின் முன்னால் நாம் நிற்கிறோமென்னும் மயக்கத்தை உண்டாக்கின. பிரதி மாதம் மூன்று தினங்கள் இந்தச் சித்திர மண்டபம் பிரஜைகள் எல்லோரும் பார்ப்பதற்கென்று திறந்து வைக்கப்படுவதுண்டு. அவ்வாறு திறந்திருந்த நாட்களில் பொன்னன் இரண்டு மூன்று தடவை இந்தச் சித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்தச் சித்திரங்கள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் கவரத்தான் செய்தன. ஆனாலும் இன்று அவற்றை நின்று பார்க்க முடியாதபடி மகாராஜாவும் இளவரசரும் முன்னால் விரைந்து போய்க் கொண் டிருந்தபடியால், பொன்னனும் அவர்களைப் பின்தொடர்ந்து விரைந்து சென்றான். சித்திர மண்டபத்தின் இரண்டு மூன்று கட்டுக்களையும் தாண்டிச் சென்று கடைசியாக, பூட்டிய கதவையுடைய ஒரு வாசற்படியண்டை மகாராஜா நின்றார். முன்னொரு தடவை பொன்னன் இதே இடத்தில் நின்று இந்த வாசற்படிக்கு உட்புறத்தில் என்ன இருக்குமோ என்று யோசித்திருக்கிறான். இந்தக் கதவைத் திறக்கக் கூடாதென்பது மகாராஜாவின் கட்டளை என்று காவலாளர்கள் அப்போது தெரிவித்ததுண்டு. மகாராஜா இப்போது அந்தக் கதவண்டை வந்து நின்று, தம் கையிலிருந்த சாவியினால் பூட்டைத் திறக்கத் தொடங்கியதும் பொன்னனுடைய ஆவல் அளவு கடந்ததாயிற்று. “இதனுள்ளே ஏதோ பெரிய அதிசயம் இருக்கிறது. அதை நாம் இப்போது பார்க்கப் போகிறோம்” என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. கதவு திறந்ததும், “பொன்னா! நீ முதலில் உள்ளே போ! தீவர்த்தியை நன்றாய்த் தூக்கிப் பிடி! சுவருக்கு ரொம்பச் சமீபமாய்க் கொண்டு போகாதே! தீவர்த்தி புகையினால் சித்திரங்கள் கெட்டுப் போகும்” என்றார் மகாராஜா.

 

பொன்னன் உள்ளே போய் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். அங்கிருந்த சுவர்களிலும் சித்திரங்கள்தான் தீட்டியிருந்தன. ஆனால் அவை என்ன சித்திரங்கள், எதைக் குறிப்பிடுகின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை. பொன்னனுக்குப் பின்னால், விக்கிரமனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பார்த்திப மகாராஜா அந்த இருள் சூழ்ந்த மண்டபத்துக் குள்ளே புகுந்தார். “குழந்தாய்! பூட்டி வைத்திருக்கும் இந்த மண்டபத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பல தடவை என்னைக் கேட்டிருக்கிறாயே! உனக்கு இன்னும் கொஞ்ச வயதான பிறகு இந்தச் சித்திரங்களைக் காட்ட வேணுமென்றிருந்தேன். ஆனால் இப்போதே காட்ட வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. விக்கிரமா! இந்த மண்டபத்தை நான் வேணுமென்றே இருளடைந்ததாய் வைத்திருந்தேன். இதற்குள்ளே என்னைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை. யாரும் இந்தச் சுவரிலுள்ள சித்திரங்களைப் பார்த்ததில்லை! பொன்னா தீவர்த்தியைத் தூக்கிப்பிடி!” என்றார் மகாராஜா. அவருடைய பேச்சில் கவனமாயிருந்த பொன்னன் சட்டென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். “அதோ, அந்த முதல் சித்திரத்தைப் பார்! குழந்தாய் அதில் என்ன தெரிகிறது?” என்று மகாராஜா கேட்டார். “யுத்தத்துக்கு படை கிளம்புகிறது. ஆஹா எவ்வளவு பெரிய சைன்யம்! எவ்வளவு யானைகள், எவ்வளவு தேர்கள்; குதிரைகள்; எவ்வளவு காலாட் படைகள்” என்று விக்கிரமன் வியப்புடன் கூறினான். பிறகு, சட்டென்று திரும்பித் தந்தையின் முகத்தைப் பார்த்து, “அப்பா…” என்று தயங்கினான். “என்ன விக்கிரமா! கேள்?” என்றார் மகாராஜா. “ஒன்றுமில்லை, அப்பா! இந்தச் சித்திரங்கள் யார் எழுதியவையென்று யோசித்தேன்” என்றான். விக்கிரமன். “நீ நினைத்தது சரிதான் குழந்தாய்! என் கையினால், நானே எழுதிய சித்திரங்கள்தாம் இவை. இந்தப் பன்னிரண்டு வருஷ காலமாய் இரவிலும், பகலிலும் தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் நான் கண்டு வந்த கனவுகளைத் தான் இங்கே எழுதியிருக்கிறேன்.

 

குழந்தாய்! நன்றாய்ப் பார்! யாருடைய சைன்யங்கள் இவை, தெரிகிறதா?” “ஆஹா! தெரிகிறது. முன்னால் புலிக்கொடி போகிறதல்லவா? சோழ ராஜ்யத்தின் படைகள்தான் இவை. ஆனால் அப்பா!…” என்று மறுபடியும் தயங்கினான் விக்கிரமன். “என்ன கேட்க வேணுமோ, கேள் விக்கிரமா?” “அவ்வளவு கம்பீரமாக நடந்துபோகும் அந்தப் பட்டத்து யானையின் மேல், யானைப்பாகன் மட்டுந் தானே இருக்கிறான் அம்பாரியில் யாரும் இல்லையே, அப்பா!” “நல்ல கேள்வி கேட்டாய்! வேண்டு மென்றேதான் அப்படி யானையின் மேல் யாரும் இல்லாமல் விட்டிருக்கிறேன். இந்தச் சோழ வம்சத்திலே எந்தத் தீரன் இம்மாதிரி பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு திக்விஜயம் செய்வதற்காகக் கிளம்பிப் போகிறானோ, அவனுடைய உருவத்தை அந்த யானையின் மேல் எழுதவேணும், குழந்தாய்! தற்சமயம் இந்தச் சோழராஜ்யம் ஒரு கையலகமுள்ள சிற்றரசாக இருக்கிறது. வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் மேற்கே சேரர்களும் இந்தச் சோழ நாட்டை நெருக்கிச் சிறைப்பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாடு எப்போதும் இப்படியிருந்ததில்லை. ஒரு காலத்தில் நம்முடைய வம்சம் மிக்க புகழ் வாய்ந்திருந்தது. விக்கிரமா! உன்னுடைய மூதாதைகளிலே கரிகால் வளவன் நெடுமுடிக் கிள்ளி முதலிய மாவீரர்கள் இருந்திருக்கிறார்கள். சோழர் என்ற பெயரைக் கேட்டதும் மாற்றரசர்கள் நடுங்கும் படியாக அவர்கள் வீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள். அப்போது பல்லவர் என்ற பெயரே இந்தத் தென்னாட்டில் இருந்த தில்லை. சோழ சாம்ராஜ்யம் வடக்கே வெகுதூரம் பரவியிருந்தது. அந்நாளில் பாண்டியர்களும் சேரர்களும் சோழ மன்னர் களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தார்கள். கடல்களுக்கு அப்பால் எத்தனையோ தூரத்திலுள்ள அரசர் களெல்லாம் சோழ சக்கரவர்த்திகளுக்குக் காணிக்கைகளுடன் தூதர்களை அனுப்பி வந்தார்கள்.இப்போது கடல்மல்லைத் துறைமுகம் பிரசித்தி பெற்றிருப்பது போல அந்நாளில் காவேரிப்பட்டினம் பெரிய துறைமுகமாயிருந்தது. காவேரிப்பட்டினத்திலிருந்து பெரிய கப்பல்கள் கிளம்பித் தூர தூர தேசங்களுக்கெல்லாம் சென்று பொன்னும் மணியும் கொண்டுவந்து, சோழ மன்னர்களின் பொக்கிஷத்தை நிரப்பி வந்தன. குழந்தாய்! மறுபடியும் இந்தச் சோழநாடு அம்மாதிரி மகோன்னத நிலை அடையவேண்டு மென்பது என் உள்ளத்தில் பொங்கும் ஆசை; நான் இரவிலும் பகலிலும் காணும் கனவு! அதோ, அந்தச் சித்திரத்தைப் பார்!” இவ்விதம் மகாராஜா ஆவேசம் கொண்டவர்போல் பேசிக் கொண்டு மேலும் மேலும் சித்திரங்களைக் காட்டிக் கொண்டே போனார். அடுத்த சித்திரத்தில், சோழ சைன்யம் ஒரு பெரிய நதியைக் கடக்கும் காட்சி காணப்பட்டது. பிறகு அப்படைகள் பெரியதோர் மலையில் ஏறிச் சென்றன. அப்பால் ஒரு பெரிய யுத்தக் காட்சி காணப்பட்டது. அதிலே சோழர் சைன்யம் வெற்றியடைந்த பிறகு மாற்றரசர்கள் காணிக்கைகளுடன் வந்து சரணாகதி செய்கிறார்கள். இம்மாதிரி பல நதிகளைக் தாண்டியும் பல மலைகளைக் கடந்தும் பல மன்னர்களை வென்றும் கடைசியில் சோழ சைனியம் இமய மலையை அடைகிறது. பர்வத ராஜாவான இமயத்தின் உச்சியில் சோழர்களின் புலிக்கொடி நாட்டப்படுகிறது. இதற்குப் பிறகு சோழ நாட்டின் தலைநகருக்குச் சைன்யம் திரும்பி வருவதும் நகர மாந்தர் அந்த வீரப்படையை எதிர் கொண்டழைப்பதுமான கோலாகலக் காட்சிகள். இன்னொரு பக்கத்தில் புலிக்கொடி பறக்கும் பெரிய பெரிய கப்பல்கள் துறைமுகங்களிலிருந்து கிளம்பும் காட்சியை அற்புதமாகச் சித்திரித்திருந்தது. அந்தக் கப்பல் கள் தூர தூர தேசங் களுக்குப் போய்ச் சேருகின்றன. அந்தந்தத் தேசங்களின் மன்னர்கள் பரிவாரங்களுடன் எதிர்கொண்டு வந்து சோழநாட்டின் தூதர்களை உபசரிக்கிறார்கள். கடல் சூழ்ந்த அந்நாடுகளில் சோழர்களின் புலிக்கொடி கம்பீரமாய்ப் பறக்கிறது; புலிக்கொடி பறக்கும் தேசங்களிலெல்லாம் பெரிய பெரிய கோயில்களும் கோபுரங்களும் வானை அளாவி எழுகின்றன. இத்தகைய அற்புதமான சித்திரங்களே அந்த மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 27சாவியின் ஆப்பிள் பசி – 27

அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந்தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஓடையில் முன்பெல்லாம் இருந்த ஒரு குதூகலமான உயிரோட்டம் இப்போது

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 33கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 33

அத்தியாயம் 33 – முத்தையன் எங்கே? முன் அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு மாதம் ஆகியிருக்கும். திருப்பரங்கோவிலில் ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி ஒரு நாள் மாலை மிகுந்த மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் வரும்போது, உள்ளே,      “போது

கல்கியின் பார்த்திபன் கனவு – 06கல்கியின் பார்த்திபன் கனவு – 06

அத்தியாயம் ஆறு போர் முரசு வீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு “தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து