வணக்கம் வாசக நெஞ்சங்களே!
ஜெனிபர் அனு அவர்கள், “காதல் குறியீடு” எனும் சிறுகதை ஒன்றுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ஜெனிபர் அனுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.
காதல் குறியீடு
“சார்! நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டீங்களே” என்றான் ஶ்ரீ சற்று தயக்கத்துடன்.
“நீ என்ன சொல்லப்போறேன்னு புரியுது ஸ்ரீ… ஆனா இசபெல்லா அப்புடிபட்ட பொண்ணு இல்லைணு மனசு சொல்லுது. அதுனால நீயா எதுவும் குழப்பிக்காத” தன் முடிவில் அழுத்தமாக இருந்தான் ஜால்ஸ்.
“உங்க மனச விட என் மூளைக்கு சக்தி அதிகம் சார் இது உங்களுக்கு தெரியும்; அதனாலதான் உங்க அப்பா என்னை அவ்வளவு நாள் வேலைக்கு வச்சிருந்தாரு; ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கனும்னாகூட என்கிட்ட ஒரு வார்த்தை கேட்பாரு… இவ்வளவு ஏன் உங்க அம்மாவைக்கூட என்கிட்ட கேட்டுட்டுதான் செலக்ட் பண்ணாரு” என்று நீண்ட நாள் ரகசியத்தை தெரியாமல் கூறிவிட்டார் ஶ்ரீ. வயதாகிவிட்டது அல்லவா அதான் இந்த மாதிரி லூஸ்டாக். ஒருமுறை ஶ்ரீ கூறிய ஒரு வார்த்தையால் ஜால்ஸ் கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அவன் மறந்திருக்க வாய்பில்லை.
இருந்தாலும் தந்தையின் நெருங்கிய தோழன் என்பதால் இன்னும் வைத்திருக்கிறான். இசபெல்லா விஷயத்தில் குறுக்கே வந்தால் இந்தக் கருணை நீடிக்காது. தன் தாய் அப்பாவை பிரிந்து வேறு ஒருவருடன் வாழத் துவங்கி விட்டார். இதுவரை பலரையும் மாற்றி விட்டாள். இந்த கணினி யுகத்தில் இதெல்லாம் சாதாரணம். அப்படி ஒரு பெண்ணை நினைத்தே வாழ்ந்து இறந்தவர் ஜால்ஸ் தந்தை. அப்படி ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு பெண்ணை கட்டி வைத்துவிட்டு பெருமைவேறு படுகிறான் என்று நினைத்தாலும் வெளியே திட்டமுடியவில்லை. வயதிற்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா.
“சார் ஒருமுறைக்கு மூணு முறை நல்லா யோசிச்சுகோங்க” இது ஸ்ரீ.
“பெல்லாவை பத்தி பேசுறதா இருந்தா நீங்க இப்போவே வேலையவிட்டு போகலாம்” எரிச்சலடைந்தான். அவனது காதல் மயக்கத்தை உணர்ந்த ஶ்ரீ மூர்ச்சையானான்.
அந்த கார் அமைதியாக ஓடியது. இவனது நினைவுகளும் இசபெல்லாவை முதலில் சந்தித்த நாளை நோக்கி நகர்ந்தது. ஜால்ஸ் மிகவும் சோகமாக இருந்தான். அதற்கு காரணம் சிறிது நேரத்துக்கு முன் நடந்த அந்த பிரஷ் மீட்டிங். அந்த கல் பலகையின் மீது அமர்ந்திருந்தான். பல சத்தங்கள் அவனைச் சுற்றிக் கேட்டன.
“ஏன் சார் இன்வென்டரி கம்பெனியே இந்த புராஜட்ட கைவிரிச்சுட்டாங்க.அப்படி இருக்கும்போது உங்களால முடியும்னு நினைக்குறது முட்டாள்தனமா இல்லையா” கையில் மைக்குடன் ஒரு நிருபர்.
“எங்களால முடியும்ங்க நீங்க சொன்ன இன்வென்டரி கம்பெனி எங்க அப்பாகிட்ட இருந்து பிரிஞ்சதுதான்னு உங்களுக்கு நான் சொல்ல தேவை இருக்காது” அழுத்தமாகக் கூறினான்.
“அததான் சார் நாங்களும் சொல்றோம். உங்க அப்பா இருந்த வரை உங்க கம்பெனி நல்லா ரன் ஆச்சு. ஆனா உங்க கைக்கு வந்ததுக்கு அப்புறம் அதோட ஷேர் ரொம்ப குறைஞ்சுடுச்சுனு மக்கள் நினைக்குறாங்க” இன்னொரு பத்திரிக்கைகாரர். அவர்கள் கற்பனையையும் கலந்து கேள்விகள் இருந்தன.
ஜால்ஷ் நீண்ட நாட்களுக்கு அப்புறம் தன் தந்தை மறைவை ஈடுகட்டி ஒரு வழியாக இந்த கவர்மென்ட் டென்டரை பிடித்துள்ளான். இது ஒரு சிறிய மென்பொருள் கட்டமைப்பு கம்பெனி. விளையாட்டாக ஆரம்பிக்கபட்டது அவனது தந்தையால். ஆனால் சிறிது நாளில் பூதாகரமாக வளர்ந்து நிற்க ஜல்ஸின் தந்தை அவசர அவசரமாக இவனை பெற்று போட்டு உழைத்து களைத்து இறந்துவிட்டார். இப்போது ஆயிரம் வேலையாட்களின் வாழ்கை இவன் கையில்.
அதை மனதில் நிறுத்தி போராடினான். அதன் விளைவு அரசாங்கத்தின் ஒரு புராஜக்ட் கிடைத்துவிட்டது. மக்கள் ஏ.டி.எம் என்னும் வங்கி அட்டையைகூட தனக்குப் பதில் யாராவது சுமந்து வரமாட்டார்களா என ஏங்கும் காலம் இது. அதற்கு தீர்வுதான் ஜால்ஸ் இன்று கண்டுபிடித்திருந்தான். அது கட்டைவிரலை எடுத்து மெசினில் வைத்துவிட்டு தன் கண்ணை அந்த காமிராவில் காட்டினால் போதும். இந்த அவசர உலகிற்கு ஏற்ற கண்டுபிடிப்புதான். அனாலும் இந்த பிரஸ் நண்பர்கள் கொடுத்த பிரஸ்ஸரில் அவனது தன்னம்பிக்கை குறைந்திருந்தது. அதனால் சோகமாக அமர்ந்திருந்தான் அந்த கல்லில்.
அப்போதுதான் வந்தாள் அந்த தேவதை இசபெல்லா. “ஏங்க சோகமா இருக்கீங்க”
சற்று நிமிர்ந்து பார்த்தான். “அது உங்களுக்கு புரியாதுங்க”
அவனையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கும் அப்போது ஒரு ஆறுதல் தேவைபட்டது. அவள் அளனருகில் வந்து, “எந்த பிரச்சனையா இருந்தாலும் மைண்ட்ல வைக்காம ரிலாக்ஸா இருங்க”
அவ்வளவுதான் இருந்த மொத்த டென்சனையும் அவள்மீது கொட்டினான். “உன் வேலைய பாத்துகிட்டு போடி; என் பிரச்சனை உனக்கு வந்தாதான் தெரியும் சும்மா வந்துட்டா அட்வைஸ் பண்றதுக்கு” எரிந்து முடிய மனம் அமைதியானது அவனுக்கு.
ஆனால் அவளது கண்ணிலோ சோகம் நிறைந்தது. ஆனால் அழவில்லை. அதிலிருந்தே இவள் மிகவும் மோசமான பாதையை கடந்து வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது. அவளை பார்க்க பாவமாக இருக்கவே அவளருகில் வந்தமர்ந்தான்.
“சாரிங்க… நான் ரொம்ப கோவத்துல இருந்தேன். அதான் அப்படி பேசிட்டேன் மன்னிச்சிடுங்க” இது ஜால்ஸின் இயல்பான குணம். தன் மீது தவறு உள்ளது என்றால் உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான்.
“இல்லை பரவாயில்லை… விடுங்க… இதுவரைக்கும் எல்லாரும் என் உடம்பதான் காயப் படுத்துனாங்க…ஆனா நீங்க என் மனச ஹர்ட் பண்ணிட்டீங்க.” என்று சோகமாக கூறினாள். ஜால்ஸ் புரியாமல் விழித்தான்.
அவள் இயல்பு நிலைக்கு திரும்பி பெருமூச்சு விட்டாள். “எனக்கு அம்மா அப்பா கிடையாதுங்க நான் வளந்தது எல்லாம் ஒரு விபச்சாரம் பண்ற இடத்துலதாங்க. அப்போ நான் என்ன தொழில் பண்றேன்னு உங்களுக்கு சொல்ல தேவையில்லைனு நினைக்குறேன்.”
ஜால்ஸ்க்கு உள்ளே ஏதோ குற்ற உணர்வு, “ரொம்ப சாரிங்க… உங்கள நான் ஹர்ட் பண்ணிட்டேன்.” என்று அவளது வார்த்தைக்காக காத்திருந்தான்.
ஒரு கெட்ட பெண்ணிடம் கூட தயங்காமல் மன்னிப்பு கேட்கும் அவனது குணம் அவளுக்கு பிடித்திருந்தது. “என்ன விடுங்க… என் பொறப்பு அப்படி நீங்க ஏன் டல்லா இருந்தீங்க?” என்று அவள் கேட்க தன் மொத்த கதையையும் கூறினான்.
இருவருள்ளும் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படவே நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தனர். நேரம் எல்லை மீறியதை அவர்கள் உணரவில்லை. பின் அந்த கடிகார ஓசைதான் எடுத்துகூறியது.
அவளிடம் ஒரு பதட்டம் தெரிந்தது. “என்னங்க ஆச்சு?” என்றான் அன்பாக. அவளோ, “இல்லைங்க இன்னைக்கு நான் மூணு பேரு கூடயாவது இருந்து சம்பாதிச்சிருக்கணும். உங்ககூட பேசி நேரம் போனதே தெரியல; அந்த சிடுமூஞ்சிகிட்ட என்ன சொல்லபோறேனோ” என பதறவே.
“என்னாலதான இந்த பிரச்சனை… வேணும்னா இந்தாங்க இந்த காச வச்சுகோங்க” என்று கூறியவனிடம், “இந்த காசு வேணாம்ங்க” என்று கூறி நடந்தாள். அவளது குணத்தை பார்க்கும்போது, “இவளுக்கா இந்த நிலை; எவ்வளவு அழகா இருக்கா..”, “இன்னைக்கு இவதான் நமக்கு ட்ரீட்” என்ற இரண்டு எண்ணம் எழும். அதில் முதலாவது எண்ணம் எழுந்த முதலாமானவன் இவன் மட்டுமே. ஏனையோர் தன் ஆசையை இவளுள் ஏற்றிவிட்டுக் காசை வீசியெறிந்து மறைந்தவர் பலர்.
அவளிடம் பேசும்போது ஜால்ஸ் உணர்ந்த ஒரு விசயம் போராடு வெற்றிகிடைக்கும் என்பதுதான். ஏனென்றால் இங்கு பலருக்கு போராட களமே கிடைப்பதில்லை அதில் அவளும் ஒருத்தி.
“ஏங்க நாளைக்கு வருவீங்களா?”
“தெரியலைங்க ட்ரை பண்றேன்” என்று சென்றாள். ஆனாலும் இருவரும் இன்று வரை சந்திக்காத நாள் என்பது காலண்டரில் இல்லை.
இருவருள்ளும் காதல் இருந்தது. ஆனாலும்அவளோ தன் தொழிலை நினைத்து தயங்கி அவனிடம் கூறாமல் இருந்தாள். அவனோ, ‘நான் கெட்டுப் போனவடா என்னை நினைச்சு உன் வாழ்கைய கெடுத்துக்காத என்று சொன்னாலும் சமாதானப் படுத்திவிடலாம். ஆனா இந்த பொண்ணுங்க மனசுல ஒண்ணு வச்சுகிட்டு, என்ன மொத்தமா குத்தகைக்கு எடுக்கலாம்னு பாக்குறியா? அப்புடின்னு சொல்லிட்டா அவளை பாக்க முடியாமயே போயிடுமே’ எனப் பயந்தான்.
ஆனால் இன்று மிகப் பெரிய பிசினஸ் ஜாம்பவான். மொத்த அரசாங்கமும் இவனை நம்பித்தான் இயங்குகிறது. அப்படிபட்ட மனிதன் தன் காதலியிடம் காதலை சொல்ல தயங்கலாமா என்று மூளை கொடுத்த தைரியத்தில் தானியங்கி காரில் சென்று கொண்டிருக்கிறான் தனியாக.
அவளது கறுப்பு வாழ்கையை ஆதாரமாகக் கொண்டு இவனுடன், “அவள் வேண்டாம் சார்” என கூறிக் கொண்டிருக்கிறது. அந்த பழைய AI ஶ்ரீ எனும் சிரி. எல்லாம் இவன் தந்தை உருவாக்கியதுதான்.
அந்த இடமும் வந்தது. “சார் உங்க அப்பாவா இருந்திருந்தா நான் சொல்றத கேட்டுருப்பாரு” என்ற அந்த டப்பாவைப் பார்த்தவன்.
“ஒரு மெசின் பேச்ச கேட்க நான் முட்டாள் இல்லை” என இறங்கி கதவினை அடைத்தான். அந்த கார் அமைதியாக நகர்ந்தது.
அவளது வீட்டிற்கு வெளியே நின்று காலிங் பெல்லை அழுத்தினான். சோர்வாக படுத்திருந்தவள் அரைகுறை ஆடையுடன் வந்து கதவினைத் திறந்தாள்.
அவள் முன் மன்டியிட்டவன், அந்த வைர மோதிரத்தை திறந்து காட்டி “என்ன கல்யானம் பண்ணிக்கிறியா?”
அவளோ அமைதியாக முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் குற்ற உணர்வில் இருக்கிறாள் என்பதை இவனால் உணரமுடிந்தது.
அவள் இவனை, ‘வேண்டாம் நீயாவது நல்லா இருடா’ எனக் கூற வாயைத் திறந்தாள். இது அவன் எதிர்பார்த்ததுதான். அதற்குத் தயாராக வந்திருந்தான். உடனே தன்னவளின் இதழோடு இதழ் சேர்த்தான். அவளால் இவனை மீற முடியவில்லை. தன்னவனைக் கட்டிப் பிடித்தாள். அவனது கையோ தன்னவளின் இடையில் பதிந்திருந்தது.
அவளை அன்பாய் தீண்டிய முதல் ஆண் இவன். உள்ளம் மகிழ்ந்தவள் தன்னவனின் கண்களைப் பார்த்தாள். இருவரது விழிகற்றைகளும் ஒன்றை ஒன்று நேராய்ச் சந்தித்தன. அவனது இடை இறுக்கத்தில் அன்பை காட்டினான்.
“ஐ லவ் யூடா என்னை மன்னிச்சிடு” என உள்ளே இருந்த இசபெல்லா கூற அவன் கை வைத்திருந்த இடையில் நீல விளக்குகள் எரிந்தன. அவளது கண்களும் நீலமாக மாறி அவனது கருவிழியை ஸ்கேன் செய்தன.
அந்த ரோபோட் சரிந்து கீழே விழுந்தது. “இசபெல்லா இசபெல்லா என்ன ஆச்சு” பதறினான் ஜால்ஷ். அப்போது அவனது கைபேசியின் வழி வந்தது ஶ்ரீ.
“சார் மொத்த பேங்க் நெட்வொர்க்கையும் ஹேக் பண்ணிட்டாங்க… எல்லாரோட பணமும் ஏதோ ஒரு தீவிரவாதக் கும்பலுக்கு டிரான்ஸ்பர் ஆகுது சார்! என்னையும் ஹேக் பண்ண ட்ரை பண்றாங்க சார்…” என அவனது திரை கருப்பாக மாறியது.
அதற்கு முன் LOVE IS INJURIOUS TO WEALTH என்று திரையில் தோன்றியது.
-முற்றும்