‘இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுகிறாள்‘ என குழப்பத்துடன் கைபேசியை கீழே வைத்தான் விஷ்ணு.
இரண்டு பெண்களின் மத்தியில் தன் மனது படும்பாட்டை எண்ணியவனின் மூளையில் ரத்தவோட்டம் வேகமாக பாய எண்ணங்கள் வலையாக பின்னின.
அவனது எண்ணங்களை அவனால் அடக்க முடியவில்லை என்பதே உண்மை. தன் நிலையை உணர்ந்தவன் ரம்யா தன் வாழ்விற்கு வந்தபிறகு நிறுத்திய வெள்ளை மாத்திரையை மீண்டும் அவளாலேயே எடுக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது.
மீண்டும் சரிந்தான் நித்திரையில்.
இந்தமுறை அவனது கனவுகள் அவனை துறத்தவில்லை அதற்கு பதிலாக கனவுகளும் நிஜமும் தந்த நினைவுகள் தொகுப்பாய் ஓடின.
யானையை வீழ்த்தி மரணத்தை எதிர்நோக்கியிருந்த வீரம், கவிதாவின் காதல், தன் உயிரான ரம்யாவின் அழகிய சிரிப்பு, கள்வன் என்றாலும் கருணையுள்ள பீட்டர்… பறக்கும் குதிரை மனிதன்… மங்கையர் கூட்த்தின் நடுவே ஓர் பூ புயல்… என அவனை புரட்டி எடுக்க அவன் மயக்கநிலையில் இருந்தான் என்பதே உண்மை.
கவிதாவோ இவனது கட்டளையில் அடங்கிப் போனவளாய் இதயத்தை பூட்டட முயற்சிசெய்தாள். ஆனால் அது இவனது நினைவுகளால் நிரம்பி வழிவதால் இவளால் முடியவில்லை. அதனால் அவளது தலையணைத் தோழன் ஈரத்தில் மிதந்தான்.
இந்த இரவு கண்ணீரின் சாரல் என உணர்ந்த கவிதாவின் பால்முகம் வாடியது விதியின் சதியல்ல… பணத்தால் எதையும் சாதிப்பவளுக்கு காதலின் முன் அது வெற்றுகாகிதமாய் நின்றது.
காப்பகத்தில் இருந்த ரம்யாவோ தன்னுள் இருக்கும் தன்னவனிடத்தில் தன்நிலையை கூறிகொண்டிருந்தாள்.
‘என்னால் உன்னிடம் எதையும் மறைக்க முடியாதுடா… இதை எப்படி மறைப்பேன்.. கண்டிப்பாக நான் நாளை உன்னிடம் கூறத்தான் போகிறேன்… நான் கெட்ட பெண்தான்… அப்படி இருந்தும் ஏன் என்னை காதலித்தாய்… உனக்கு தான் இது தெரியாதே அதனால் காதலித்திருக்கலாம்… தெரிந்திருந்தால் நிச்சயம் காதலித்திருக்கமாட்டாய்… நான் உன்னை பிரிந்தால் அடுத்த நொடி எனக்கு இந்த பூமி சொந்தமில்லை…. விஷ்ணு நீ வாழணும் சந்தோஷமாக….
என் இந்த நிலைக்கு பீட்டர் தான் காரணம் அதை எப்படி உன்னிடம் கூறுவேன்….’ என தன் மனதை தானே காயபடுத்திகொண்டிருந்தாள்.
இந்த இரவு நீண்ட இரவாக செல்ல, ஆதவனும் அடுத்து என்ன நடக்கபோகிறது என விழித்துகொள்ள, நகரத்தின் கறிக்கடைகளில் எஞ்சியிருந்த சேவல்கள் தன் வேலைகளை செவ்வனே செய்தன.
கொக்கரக்கோ கோ….
*************
முனியன் உடலின் வலிகள் சிறிது குறைந்தததால் எழுந்து நின்றான். சுற்றிலும் பார்த்தான். ஏதோ ஓர் உணர்வு ஏற்படவே மனிதர்கள் உள்ளனரா என சுற்றிலும் பார்த்தான்.
யாரும் இருப்பதாக தெரியவில்லை. சற்று ஏமாற்றம்தான் ஆனாலும் தன் மீது விழும் ஆதவனின் கைகளை ஏதோ தடுத்துகொண்டிருந்தது. அது என்ன என்று நிமிர்ந்து பார்க்க அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
ஒரு காலை உயர்த்திய குதிரை சிலை நிற்க அதன்மீது ஓர் இளைஞன் கையில் வாளை ஏந்தி நின்றாருந்தான்.
‘அடக் கடவுளே தீவில் சுத்தி சுத்தி கடைசியில் இங்கையே வந்துட்டோமே…’
விரக்தி உண்ரவு ஏற்பட்டாலும் அமானுஷ்ய சக்திகளின் விளையாட்டை பார்த்ததால் முனியனுக்கு பயம் ஏற்பட்டது. கடற்கரையை நோக்கி ஓடினான். அங்கு அவனது கட்டுமரம் இல்லை.
இருப்பதை விடுத்து பறப்பதற்கு ஆசைப்பட்ட கதையாய் அவன் இங்கு மாட்டிக் கொண்டான். சரி நீச்சல் அடித்தாவது தப்பிக்கலாம் என்றால் அதற்கும் உடலில் வலுவில்லை.
மீண்டும் ஒரு கட்டுமரத்தை கட்ட முடிவு செய்தான்.
‘டேய் முனியா உனக்கு சாவு உறுதியென்றால் முயற்சி செய்துவிட்டு சாவுடா… நீ கோளை இல்லை வீரமன்னர்கள் பரம்பரையில் பிறந்தவன்டா‘ என மனதைத் திடப்படுத்தி கொண்டு வேலையை துவங்கினான்.
அவனது வைரவாள் மின்னவே “இது எதுக்கு பயன்படபோகுது மனிதன் வந்தால் தேவைபடும் ஆனால் இங்க எல்லாமே பேயா இருக்கே” என கூறிவிட்டு வேலையைத் துவங்கினான்.
மனதில் பய உணர்ச்சிகள் கடல் அலை போலே திடீரென மேலோங்கியும் சிறிது நேரம் அடங்கியும் காணப்பட்டது. பயம் மேலோங்கும்போது
“அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்….. ஒரே மண்ணிலே…. வெற்றிவேண்டுமா போட்டுபாரடா எதிர்நீச்சல்….
சன்னிதியில் கட்டம் கட்டி வந்தோம் அப்பா ஐயப்பா…“
என அனைத்து பாட்டுகளையும் கலந்து பாடி மனதை தேற்றிகொண்டான். அது நீண்டநேரத்திற்கு பயன்தராது எனபதை அவன் அறியும் நேரம் வந்தது.
ஆம் அவனை ஏதோ ஓர் கண் கவனிப்பதாக உள்மனது கூறவே தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களுக்கும் அன்பளிப்பு தருவதாக வேண்டினான்.
கயிற்றை கட்டிகொண்டே பின்னால் திரும்பி பார்த்தவனுக்கு மிக அருகில் அந்த கரிய உருவம் அமர்ந்திருந்தது. தற்போதுதான் அதை தெளிவாக பார்த்தான்.
முழுவதும் எரிந்து போன உடலமைப்பு…. மனித உருவம்தான்..ஆனால் கண்களோ மற்ற பாகங்களோ இல்லை… அவை நெருப்பில் வெந்திருந்ததன என்பதே உண்மை…
இப்படி ஒரு உருவத்தை சில அடிகளில் பார்த்ததால் மூளை அவனை ஓட சொல்லிக் கட்டளையிட்டது ஆனால் அந்த கட்டளை கால்களை அடையவில்லை.
ஏற்கனவே சிறிது ஈரமாக இருந்தவனுக்கு மீண்டும் தான் ஈரமாவதை உணரமுடியவில்லை. பயத்தின் உச்சம் என்பது இதுதான்.
அதுவரை முனியனின் பின்னால் அமர்ந்திருந்த உருவம் எழுந்து நின்றது. அதை உணர்ந்த முனியன் மீண்டும் அதை பார்க்க முடியாமல் இதயத்தில் கைவைத்து அதன் இயக்கத்தை குறைக்க முயற்சி செய்தான்.
***************
வழக்கமான பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தான் விஷ்ணு. கருப்பன் உடல்நிலை இன்று நன்றாக இருந்தும் அவனுக்கு விடுப்பு கொடுத்து பேருந்தில் செல்ல முடிவெடுத்தான் விஷ்ணு. அதற்கு நேற்று நடந்த சம்பவங்கள்தான் காரணம் என்று இதயம் அறியாமல் இல்லை.
ரம்யாவைப் பார்க்கவேண்டும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் நேற்று கவிதாவிடம் அவன் நடந்த விதத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே இன்றைய இந்த முடிவுக்கான காரணம்.
ஒரு படிக்கும் பெண்ணின் மனதை கலங்கபடுத்தியதற்கான குற்ற உணர்வு விஷ்ணுவின் மனதில் இருந்தது. இது கன்டிப்பாக காதல் உணர்வு இல்லை என விஷ்ணு நன்கு அறிவான்.
கவிதா அறிவும் திறமையும் அஞ்சாமையும் நிறைந்தத ஒரு மின்னல்.. அவளை சரியான பாதையில் அழைத்துசென்று சாதனைகள் புரியவைக்கவேண்டும் என்ற அக்கறை விஷ்ணுவிற்கு அதிகம். ஆனால் காதல் என்பது திவ்யாவின்மீது மட்டும்தான். ஆனால் அவள் மனதில் என்ன உள்ளது என்பது விஷ்ணு இன்று தெரிந்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தான்.
பேருந்தை எதிர்பார்த்திருந்தான்… ஆனால் ஒரு கார் அந்த நிறுத்த்தை கடந்து செல்ல அதனுள் அமர்ந்திருந்த கவிதா முகத்தை திருப்பிகொண்டாள்.
அந்த செய்கை “நீ யார் என் வாழ்கையில்” என்பது போல இருந்தது விஷ்ணுவிற்கு.
‘கவிதா கொஞ்சம் ப்ராக்டிகல் கேர்ள்…. அதனால் அவள் சீக்கிரமே இந்த காதலில் இருந்து வெளியே வந்ததுவிட்டாள்.. இது காதல் அல்ல ஈர்ப்பு எனவும் உணர்ந்துவிட்டாள்.. இனி கவிதாவின் வாழ்வில் விஷ்ணு இல்லை‘ என நினைத்த நேரம் பேருந்து மிகுந்த கூட்டத்துடன் வந்தது.
மாற்றுபாதையில் சாலை சீரமைப்பு நடப்பதே இதற்கு காரணம்.
அதில் ஏறிய விஷ்ணுவின் கண்கள் ரம்யாவை தேடின. அவனுக்கு கிடைத்தது ஏமாற்றமே அவள் இன்று வரவில்லை. அவர்கள் எப்பொழுதும் அமர்ந்து கொஞ்சிகொள்ளும் இருக்கை இன்று துக்கமாக இருந்தது.
மிகுந்த காதல் வலியுடன் அலுவலகத்தை நோக்கி நடந்ததான். அங்கு கையொப்பமிடும் ஏட்டில் திவ்யா என்ற பெயரை பார்த்தான்.
அலுவலகத்தில் சிலநாட்களில் வேலைகள் அதிகம் இருப்பின் இது மாதிரி சிலர் முன்னதாகவே வருவது வழக்கம்.. அது மட்டுமல்ல இப்பொழுது இவர்களது கம்பெனி வெளிநாட்டு புராஜக்ட் ஒன்று செய்து கொண்டிருக்கிறது. அந்த அணியில் இரண்டு காதல் புறாக்களும் உள்ளனர்.
இது ஒரு காரணமாக இருந்தாலும் சீக்கிரம் வருவதற்கு வேறோரு காரணமும் உள்ளது அது காதலர்களின் ரகசியம்…
இப்படி ஒரு நாள்அதிகாலை அலுவலகத்தில் இருந்த இருவரும்…
“ஏன்டி நீ சத்தியமா மெக்கானிக்கலா?!”
“ஆமாங்க அதில் என்ன சந்தேகம்” – ரம்யா
“இல்ல பொண்ணுங்க பொதுவா இந்த டிபார்ட்மெண்ட் எடுக்க மாட்டாங்க அதான் கேட்டேன்“
“பொண்ணுங்க எல்லா இடத்திலையும் கால் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க” – முறைத்தாள் ரம்யா.
“நான் தெரியாம கேட்டுட்டேன் தாயே அதுக்கு ஏன் உன் நீலக் கண்ணை உருட்டி பயப்பட வைக்குற” என தலையின் மேல் கையை கூப்பி வணங்கினான்.
அவனது செய்கையை பார்த்து சிரித்து விட்டாள் ரம்யா.
“அப்பாடா சிரிச்சுட்டாள்…. இப்ப கோபம் போயிருச்சா என் செல்லம்“
மீண்டும் கோபமாக முகத்தை வைக்க முயன்று கொண்டு “இன்னும் போகலை“
ஊடலில் சமாதானம் செய்ய முயலும் காதலனின் இனபம் அலாதியானது தான்.
இந்த பொய் கோபத்திற்குக் காரணம் முந்தையநாள் அவன் இவளிடம் கேட்ட முத்தம் தான்… அவனுடன் சிறிது விளையாட நினைத்தவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இன்று இருக்கிறான்.
“என் தங்கம் கோபத்திலையும் அழகாதான் இருக்காள்” என கன்னத்தை கிள்ளினான்.
முகத்தை திருப்பிகொண்டாள். அந்த பக்கமாக அவன் செல்ல மீண்டும் இந்தபக்கம் திரும்பி லேசாக சிரித்தாள். ஆனால் அங்கிருந்த கண்ணாடி காட்டி கொடுக்கவே விஷ்ணுவும் லேசாக சிரித்தான்.
ஆனால் அவள் அருகில் அமர்ந்தவன் அவளது கையை பிடித்தான். அவளுக்கு காதல் பெருக்கெடுத்தாலும் கோபமாக காட்டிகொள்ள நினைத்து திரும்பாமல் இருந்தாள்.
அவன் அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவளது விரலில் ஓர் வெள்ளி மோதிரத்தை அணிந்துவிட்டான். அதை அறிந்த அவள் திரும்ப..
“என்ன தங்கம் பாக்குற இப்ப நமக்கு நிச்சயம் ஆகிருச்சு” என நக்கலாக சிரித்தான்.
அவள் அவனது அன்பை நினைக்கும்போது கண்ணீர் சுரந்தது. இவள் மனம் மிகவும் மென்மையானது என்பதை அறிந்திருந்த விஷ்ணு..
“ஏன் அழற?!”
“…..” பதில் இல்லை
ஊடலை வளர்க்க விரும்பியவன்..
“சே இந்த பொண்ணு அழுதுகிட்டே இருக்குப்பா…”
அழுகை நிற்பதாக தெரியவில்லை
“ம்ம். .. என்க்கு அழுகாச்சி பொண்டாட்டி வேணாம்… நீ அந்த மோதிரத்தை கொடு நான் வேற பொண்ணை பார்த்துக்கிறேன்…” என கூற வெயிலுடன் மழை போல் கண்ணீருடன் சிறிது பொய் ஊடலும் கலந்துகொள்ள இவனது தோளில் தன் மென்மையான கையால் குத்தினாள்.
அப்படியே கட்டியணைத்தவள் “வேற பொண்ணை பார்த்து போயிடுவியா… நான் உன்னை கொண்ணுடுவேன் ” என மிரட்டினார் செல்லமாக…
அவளத அன்பில் அடிமையான விஷ்ணு அவளது நெற்றியில் முத்தமிட்டான். இரண்டு கண்களும் அன்பை பறிமாறின.
‘என்ன ஒரு நீல விழிகள்… கோபமடைந்தால் சுட்டெரிக்கிறது… அன்பில் அன்னையாகிறது… சோகத்தில் கடலாகிறது… ‘ என பார்க்க அவளோ ‘இந்த உயிர் எல்லாம் உனக்குத்தான் என் காதல் வானில் நீ மட்டுமே பறவையாக நான் உன்னுடன் பயனிப்பேன்‘ என நினைத்தாள் அவர்களது இருக்கம் கூடியது.
தன் இரு கைகளாலும் அவளது கன்னங்களை தாங்கி பிடித்தான் அவளோ சிறைப்பட்டு நின்றாள். மூச்சுக் காற்றுகள் பகிரப்பட்டன. இரண்டு சுவாசமும் இனைந்தது. ஊடலின் இறுதியாக காதல் மலர்ந்து இதழ்கள் நெருங்கின.
இருவரது கண்களிலும் இமைகள் தன் வேலையை செய்ய இமைகள் மூடின.
இந்த நெருக்கம் உடலையும் உள்ளத்தையும் இணைத்தன. இதழ்ரேகைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிகொண்டன.
இருவரது காதலும் மற்றவரால் உறிஞ்சப்பட்டது. இரணடு இதயமும் சுவாசித்தால் இனைந்தன. இதழ்பரிமாற்றம் இரண்டு நிமிடம் நீடிக்கவே இருவரும் விலகினர்.
வெளியே இருந்த வந்த அறை திறக்கும் சத்தம் அதற்கு காரணம்…. அலுவலக நண்பர்கள் உள்ளே நுழைய ரம்யா தனது கணினி முன் அமர்ந்து கொண்டாள். விஷ்ணோவோ அவளருகில் இருந்த சில காகிதங்களை எடுத்துகொண்டு கிளம்பினான்.
அவனது அறைக்கு சென்று அமர்ந்தவன் கண்ணாடி வழியே இவளை பார்க்க இருவரும் லேசாக புன்னகைத்துகொண்டனர். இரண்டு இதழ்களும் ஸ்பரிசம்கொண்டதால் புன்னகையின் அர்த்தம் புரிந்தது.
இந்த நினைவுகள் விஷ்ணுவிற்கு வரவை ரெஜிஸ்டரில் கையொப்பமிட்டு உள்ளே நுழைந்தான்.
அங்கு பீட்டரின் அறையில் இருந்து வந்தவள் தனது கன்னத்தை துடைத்துகொண்டாள். அதில் எச்சில் ஈரம் இருந்ததை கவனித்தான் விஷ்ணு. அவளோ எதுவும் பேசாமல் கணினி முன் அமர்ந்தாள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.... விஷ்ணுவும் மௌனமாக சென்று தனது இருக்கையில் அமர்ந்தான்.
ரம்யாவின் மனதில்….
‘இன்று விஷ்ணுவிடம் பீட்டரின் காதலை பற்றி கூறியே ஆகவேண்டும்…. அவன் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை‘ என நினைத்துகொண்டே பீட்டரின் அறைக்கு சென்றாள்.
“சார் மே ஐ கம் இன்” அங்கு யாரும் இல்லை.
கதவை திறந்து உள்ளே செல்ல அதன் மறைவில் ஒளிந்திருந்த பீட்டர் இவளை வளைத்து பிடித்தான். அந்த வேகத்தில் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவனைத் தள்ளிவிட்டவள் அப்படியே உறைந்து நின்றாள்
“திவ்யா நான் உன்னை விரும்புறேன்… உன்னை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது” என பீட்டர் கூற..
அவன் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை பார்த்தவள் லேசாக சிரித்துகொண்டு “சார் இது அந்த ரிப்போர்ட்” என கொடுத்தாள்.
“நீ என்னை விரும்புறியா இல்லையா” என பீட்டர் கேட்க…
வெட்கத்தை முகத்தில் காட்டி தலைகுணிந்தாள் “எனக்கு கொஞ்சம் டைம் வேணும் பீட்டர்” என கதவை திறந்து வெளியே வர எதிரில் விஷ்ணு நின்றிருந்தான்.
உடனே கன்னத்தில் இருந்த முத்தத்தை துடைத்துகொண்டு தனது இருக்கையில் அமர்ந்தாள்.
விஷ்ணுவும் அமைதியாக சென்று அமர்ந்துகொண்டான் ஆனால் அவன் மனம் அமைதியடையவில்லை…
*************
முனியன் பின்னால் இருந்த உருவம் எழுந்து வந்து அவனது தோளில் கைவைத்தது.
பயத்தில் அட்ரீனலின் கடலே உருவாகி இருக்க…
“முனியா…” அதன் குரல் இவனுக்கு கேட்டது.
“…” எந்த பதிலும் கூறாமல் கண்ணை மூடி திறந்தான் … இப்போது அது இவன் முன்னே அமர்ந்திருந்தது.
“முனியா நீ என்னை பார்த்து பயப்படவேண்டாம்… நான் உனது நண்பனே“
“என்ன?!” என உளறினான்.
“ஆம் நான் உனக்கு கடமைப்பட்டுள்ளேன்…”
“எனக்கு புரியவில்லை“
“நான் ஒரு கடமை தவறிய வீரன்… அந்த கடமையை நீதான் முடித்துவைக்கவேண்டும்… அப்புறம்தான் நான் சாந்தியடைவேன்“
“அது என்ன கடமை…நான் செய்கிறேன்” அது நண்பன் என்று கூறியதற்காக ஒப்புக்கொண்டான்.
“காலம் இந்த கேள்விக்கு பதில் தரும் முனியா… நான் வருகிறேன்” என காற்றில் கலந்து மறைந்தது அந்த உருவம்.
முனியன் மனதில் பயம் என்னும் மேகம் மறைந்து குழப்பம் எனும் வானம் தென்பட துவங்கியது.
*********
அலுவலக இடைவேளை நேரம் வட்டமேஜையின் முன் சோர்வாக அமர்ந்திருந்தான் விஷ்ணு.
அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் ரம்யா…. இல்லை இப்பொழுது அவள் திவ்யா.
விஷ்ணு எழுந்து சென்று வேறு மேஜையில் அமர அவளும் பின்தொடர்ந்தாள்.
அவன் நகர்ந்து அமர்ந்தான்.
“ஏன் விஷ்ணு தள்ளி தள்ளி போற“
“ம்ம் எல்லாம் என் தலைவிதி“
“ஏண்டா என்ன ஆச்சு“
“நீ தாண்டி காரணம்“
“நானா நான் என்ன செஞ்சேன்” கண்ணீர் வெளிவந்தது அவளுக்கு.
“இப்படி நீலிக் கண்ணீர் வடிக்காதடி… உண்மையை சொல்லு நீ யாரை காதலிக்குற“
“உன்னைத்தான்டா“
“இல்லை நீ பீட்டரைதான் காதலிக்குற….. எனக்கு காலையில் நடந்துது தெரியும் திவ்யா“
“ஏன்டா திவ்யான்னு கூப்பிடுற“
“உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலை திவ்யா இங்க இருந்து போயிரு…”
Minivan story great…..I’m following