கபாடபுரம் – 30

30. அரங்கேற்றம்

 

    • பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய பெருவிழா ஒன்று கோ நகரில் நிகழ இருப்பதைக் கேட்டுச் சங்கப் புலவர்களும், அறிஞர் பெருமக்களும் இரட்டை மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியை நகருக்கு முரசறிந்து தெரிவிக்கும் கடமையுள்ளவர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் ஏறி வீதிவீதியாகப் பரப்பினார்கள்.

 

    • “இளையபாண்டியர் சாரகுமாரருக்குப் புதிய இசையறிவிக்கும் பொருட்டுச் சிகண்டியாசிரியர் இயற்றியிருக்கும் இசைப் பேரிலக்கணம் அரங்கேற இருக்கிறது” என்ற செய்தி நாலா திசைகளிலும் நகரில் பரவியது. பாணர்கள் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திலும் செய்தி அறிவிக்கப்பெற்றுப் பரவியிருந்ததில் வியப்பில்லை. எல்லாப் பாணர்களுக்கும் மகிழ்ச்சியை விதைத்த இச்செய்தி ஒரே ஒருத்தியின் இதயத்தில் மட்டும் இனம்புரியாத கவலையை உண்டாக்கியது. பிறருக்கு விண்டுசொல்லி அவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள முடியாத வேதனையாயிருந்தது அது. விழா நிகழும் முன்பாகவே தானும் தன் பெற்றோரும் கபாடபுரத்தை விட்டுப் புறப்பட்டு விடலாமா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனால் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தை விட்டு மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்யும் வழக்கத்தையுடைய பாணர்கள் – எல்லோரும் சேர்ந்து புறப்பட்டாலொழியத் தனியே புறப்பட இயலாது. அப்படிப் புறப்படுவதனால் தனிவழிப் பயணத்தில் பல துன்பங்கள் வரும். எனவே நகரணி மங்கல விழாவுக்கு வந்து அப்படியே தொடர்ந்து தங்கிய எல்லாப் பாணர் கூட்டமும் மிகச் சில நாட்களில் நடைபெற இருக்கும் சிகண்டியாசிரியரின் இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்கும் இருந்து கண்ட பின்பே புறப்பட எண்ணினர்.

 

    • ‘இடத்தின் மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். மனிதர்கள்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம்’ என்று பெரியபாண்டியர் தன்னிடம் இரைந்துவிட்டுப் போனதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாள். பல காரணங்களால் அவள் மனத்தில் நிம்மதியில்லை. இந்நிலையில் இசையிலக்கண நூலரங்கேற்ற விழாவுக்கு இரண்டு நாளிருக்கும் போது ஒருநாள் அதிகாலையில் சாரகுமாரன் கடற்கரையில் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அப்போது வெகு ஆர்வத்தோடு தேடி வந்த அவனிடம் இனிதாக முகம் கொடுத்துப் பேசாமல் தயங்கி நின்றாள் கண்ணுக்கினியாள்.

 

    • “இருந்தாற் போலிருந்து புதிராகிவிடுவதும் பெண்களுக்கு ஓரியல்பு போலிருக்கிறது” என்று குத்தலாகப் பேச்சைத் தொடங்கினான் சாரகுமாரன். அதற்கும் அவளிடமிருந்து மறுமொழி இல்லை. வேறுபுறம் திரும்பித் தலைகுனிந்தபடி நின்றாள் கண்ணுக்கினியாள். அவளுடைய மனமாறுதலுக்கும், மௌனத்துக்கும் காரணமாக என்ன நிகழ்ந்திருக்க முடியுமென்பதை அவனால் அநுமானிக்க முடியவில்லை. சிகண்டியாசிரியருடன் பெரியபாண்டியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவளை மருட்டியதும் வெருட்டியதும் அவனுக்குத் தெரியாது.

 

    • “சிகண்டியாசிரியருடைய இசையிலக்கணமே உன்னை இலட்சியமாகக் கொண்டுதான் பிறந்திருக்கிறது! இப்படியெல்லாம் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் போது நீ துயரப்படுவதன் காரணம்தான் எனக்குப் புரியவில்லை கண்ணுக்கினியாள்!” என்று மறுபடியும் அவன் அவளை அணுகிக் கேட்டபோது அவள் விழிகளில் நீர் திரளுவதைக் கண்டான். வார்த்தைகளால் விளக்கப்படாத அந்த மோனமான சோகம் அவன் இதயத்தை அறுத்தது. அழுகைக்கிடையே ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூறினாள்:

 

    • “இலட்சணங்கள் பிறக்கும் அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.”

 

    • “இருக்கலாம்! ஆனால் நீ பேசுகின்ற ‘தொனி’யை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே?”

 

    • “இயல்புதானே? சொற்களைத்தான் விளங்கிக் கொள்ள முடியும். தொனிகளை உணரத்தான் முடியும்.”

 

    • இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் சிறிது நேரம் அமைதியாயிருந்த இளையபாண்டியன், “நல்லது! இனி நான் வந்த காரியத்தைச் சொல்லிவிட்டுப் புறப்படவேண்டியதுதான். இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்காக உன்னை அழைக்க வந்தேன். சிகண்டியாசிரியர் இலக்கண நூற்பாக்களை ஒவ்வொன்றாக அவையில் கூறி விளக்கியதும் அதற்கேற்ற முறையில் நானும் நீயும் இசைபாடி இலக்கணங்களுக்கு இலட்சியம் காட்ட வேண்டும்.”

 

    • “நீங்கள் அரசகுமாரர்! எதற்கும் எந்த இடத்திலும் இலட்சண இலட்சியங்கள் கூற முடியும். நாங்கள் நாடோடிப் பாண்குடி மக்கள். எங்களுடைய பெருமையும், புகழ்களும், வரையறுக்கப்பட்ட எல்லையோடு நின்றுவிடக் கூடியவை. நாங்கள் சிலவற்றை அடையமுடிந்து பலவற்றை அடைய முடியாமல் தவிக்கும் ஏழைகள்” என்று அவள் கூறியபோது அழுகையும், விம்மலும் குரலை அடைத்தன.

 

    • “உன் மனத்தை யாரோ வலிய முயன்று கெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நான் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாய். அரங்கேற்ற விழாவுக்கு வா! அங்கே சிகண்டியாசிரியர் என்னைக் கூப்பிட்டுப் பாட வேண்டும்போது மறுக்காமல் யாழுடன் வந்து பாடு…” என்று வேண்டிக் கொண்டு அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே புரவியேறிப் புறப்பட்டுவிட்டான் சாரகுமாரன்.

 

    • அவனுடைய புரவி இருந்த இடத்தைவிட்டு மறைந்த மறுகணமே அவள் கோவென்று கதறியழத் தொடங்கினாள். அவளுள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் வெடித்துக் கிளர்ந்தது போலாயின. கடலையும், மணற்பரப்பையும், புன்னை மரங்களையும் அவற்றொடு தன்னைச் சூழ்ந்துவிட்ட தனிமையையும் உணர்ந்தவள் போல் நெடுநேரம் குமுறிக் குமுறி அழுது தீர்த்தாள் அவள். கடற்கரைக்கும் மனிதனுடைய சோகத்துக்கும் உலகு தொடங்கிய நாள் முதல் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் போலிருக்கிறது! இல்லையானால் இரங்கலையும், சோகத்தையும் பேசும் நெய்தல் திணையை ஏன் கடற்கரையாக அமைத்திருக்கப் போகிறார்கள்? தன் உணர்ச்சியின் வேதனைகள் எல்லாம் தீரும் வரை அங்கிருந்து அழுத பின்பே புன்னைத் தோட்டத்திற்குத் திரும்ப முடிந்தது அவளால்.

 

    • முதல் முதலாக நகரணி மங்கல விழாவிற்கு வருகிற வழியில் சாரகுமாரனைச் சந்திக்க நேர்ந்தது முதல் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக நினைக்க முயன்றாள் அவள். அப்போது ‘கபாடபுரத்து முத்து வணிகன்’ என்று இளையபாண்டியன் தன்னைப் பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டது நினைவுக்கு வந்தது அவளுக்கு. அப்போதும் அதற்குப் பின்பு சந்திக்க நேர்ந்த வேளைகளிலும் இருவருக்குமிடையே நிகழ்ந்த அழகிய உரையாடல்களை எல்லாம் தொகுத்து நினைவு கூர்ந்தாள். தேருலாவின் போது உலாக்கோலத்திலே சாரகுமாரனின் எழிற்கோலத்தைக் கண்ட காட்சி இன்னும் அவள் மனக்கண்களில் அப்படியே இருந்தது.

 

    ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே வந்தவளுடைய நினைவு அறுந்து சோகம் மீண்டும் தொடங்குகிற இடமாக வாய்த்தது, முதியபாண்டியரும், சிகண்டியாசிரியரும், சேர்ந்து வந்து தன்னைச் சந்தித்த சந்திப்பை நினைவு கூறுவது. அந்தச் சந்திப்பை நினைவு கூறுதலே மற்ற எல்லா இனிய நினைவுகளையும் அழிப்பதாக இருந்தது. அவளுடைய இனிய அநுராக நினைவுகளை எல்லாம் மறக்கச் செய்யும் பேரிடியாக இருந்தது பெரியபாண்டியரின் வரவும், வந்து தன்னிடம் உரையாடிய கடுமையான உரையாடலும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 6KSM by Rosei Kajan – 6

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/1vNfS9u63PZ9eVwMF0aYZ1ABf8d-H6Ok-/preview” query=”” width=”640″ height=”480″ /] Free Download WordPress ThemesDownload Nulled WordPress ThemesDownload WordPress Themes FreePremium WordPress Themes Downloadudemy free downloaddownload huawei firmwareDownload WordPress

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 14’

சிலநாட்களில் உறவினர்கள் அனைவரும் சென்றுவிட, கர்ப்பகாலத்திலும் விடுப்பு எடுக்காமல் தன்னை தினமும் பார்க்க வரும் கல்பனாவை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் காதம்பரி. அண்ணனோ தனது சோகத்தை ஆற்றிக் கொள்ள காதலியின் வீட்டில் தங்கிவிட்டான்.   வேலைகாரி வேறு “பாப்பா ரெண்டு

வார்த்தை தவறிவிட்டாய் – 9வார்த்தை தவறிவிட்டாய் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், முதலில் உங்க எல்லாருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பலகார வாசனையும் பட்டாசு சத்தமுமாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள். இப்ப கதைக்கு வருவோம் உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி நன்றி. போன பகுதி பற்றிய ஆதங்கக் குரல் என் செவிக்கு எட்டியது.  இனி