அழகான மச்சம் கன்னகுழியில் சிறைபட்டிருக்க சிரித்துகொண்டே “மே ஐ கம் இன் சார்” என்ற தனது கனவு கன்னியைப் பார்த்துவிட்டான் விஷ்ணு.
அவனது அனுமதிக்காகக் காத்திருந்தாள் ஆனால் விஷ்ணுவோ ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மிதந்தான்.
“சார்” என குறுக்கிடவே
“கம் இன்” என நிறுத்தினான்.
கால் தரையில் படுகிறதா இல்லையா என அறியாத அளவிற்கு வந்து நின்றாள்.
“ம்ம் உட்காருங்க“
அமைதியாக அமர்ந்தவள் ஒரு கடிதத்தை நீட்ட அது பீட்டரின் ஒப்புதல் கடிதம்.
அதை வாங்கி மேம்புல் மேய்ந்தவன்
“ம்ம் ரம்யா நீங்க…”
இடைமறித்தவள் “சார் திவ்யா” என மெதுவாக கூறவே அப்போதுதான் அந்த கடிதத்தை ஒழுங்காக பார்த்தான்.
“ஓ சாரி உங்கள பார்த்ததும் அந்த பெயர் மைன்டல ரிஜிஸ்டர் ஆகிறுச்சு“
“இட்ஸ் ஓகே சார்” என வெளியே கூறியவள்
‘இவருக்கு எப்படி இந்த பெயர் தெரியும்‘ என நினைத்தாள்.
“ஓகே நீங்க 5 ம் நம்பர் கேபின்ல போய் வெயிட் பன்னுங்க” என அவளது ஃபைல்களை வாங்கககொண்டான்.
“ஓகே சார் தாங்யூ” என காற்றில் பறக்கும் பஞ்சுகள் போல மறைந்தாள்.
இவன் அமர்ந்திருக்கும் கண்ணாடி அறையிலிருந்து பார்த்தால் அவளது கேபின் மிக தொளிவாக தெரியும். எதர்ச்சையாக கூறினாலும் இந்த நடத்தையில் மூளையை விட இதயத்தின் பங்கு அதிகமாக இருந்தது.
தனது இருக்கையில் அமர்ந்தவள் கண்ணாடி வழியே இவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். கூடவே சில குழந்தைபருவ நினைவுகளும்…
“ஏங்க இப்படி போசறீங்க” என ரம்யாவின் தாய் பங்கஜத்தின் குரல் உயர
“நான் எடுத்த முடிவு சரியாத்தான் இருக்கும்” என ரம்யாவின் தந்தை சன்முகவேல் எதிர் தரப்பில் வாதாடினார்.
“இப்ப நம்ம பொண்ணுக்கு பெயர் மாத்தணும்னு என்ன அவசியம்!?”
“அடி போடி பைத்தியக்காரி… இவள் பிறந்த நேரத்தை வச்சு நியுமராலஜி பார்த்து செலக்ட் பண்ணிருக்கேன்“
“அவள் இப்ப மூன்றாவது படிக்குறா… இப்ப என்ன அவசியம் ரம்யாங்குற பெயர் நல்லாதானே இருக்கு“
“அதெல்லாம் முடியாதுடி நான் எங்க குடும்ப ஜோதிடர்கிட்ட கேட்டாச்சு அவர் திவ்யான்னு சொல்லியிருக்காரு இனிமே அந்த பெயர்தான்… நான் முடிவு பன்னிட்டேன்“
அந்த நேரம் அழகான சிறிய முகத்துடன் கன்னத்தில் குழிவிழுக சிரித்துகொண்டே ஓடிவந்தாள் ரம்யா.
பின்னாடியே அவளது தோழிகள் விரட்டிகொண்டு வர அனைவரும் சன்முகவேல் மடியில் வந்து மறைந்து கொண்டனர்.
“என்ன குட்டி வகளையாடுறீங்களா?”
“ஆமாம்பா யார் உங்கள் முதல்ல தொடுராங்கன்னு போட்டி நான்தான் ஜொயித்தேன்” என தந்தையை பார்த்து சிரித்தாள்.
“அப்டீங்களா குட்டி” என கண்ணத்தில் முத்தமிட்டார் சண்முகவேல்.
“நானும் ” என அவரின் கண்ணத்தில் முத்தமிட
“சரி உங்க பெயர் என்ன?”
“ரம்யா” என அனைத்து குழந்தைகளும் குரல் கொடுத்தனர்.
“இனிமே ரம்யா கிடையாது… திவ்யா சரியா” என கூற அனைத்து குழந்தைகளும் ஆட்டம் போட்டனர்.
ஆனால் ரம்யாவின் முகம் மட்டும் வாட்டம் கண்டது.
“எனக்கு இந்த பெயர் வேண்டாம்பா ரம்யாதான் நல்லா இருக்கு” என கெஞ்சினாள்.
அங்கு நடப்பதை பார்க்ககமுடியாமல் பங்கஜம் எழுந்து சமையலறைக்குள் சென்றுவிடவே இவளை திவ்யா என அரை மனதுடன் சம்மதிக்க வைத்துவிட்டார் சன்முகம்.
அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் இலவம் பஞ்சு போல சிதறி ஓடி தெருமுழுவதும் திவ்யா என பரப்பப்பட்டது.
ஆனால் அவளது நெருங்கிய தோழியான கீர்த்திக்கும் அவளது தாய்க்கும் இவள் இன்றுவரை ரம்யாதான்.
அதனாலேயே ரம்யா என்ற பெயர் காதில் விழுந்த உடன் இவளது இதயத்தில் பனிமலையை வைத்தது போல இருக்கும்.
ஆனால் இவளது சான்றிதழ்கள் இவளை திவ்யா என்றே பறைசாட்டின.
உள்ளேயிருந்த விஷ்ணுவை ஓரக்கண்ணால் பார்த்தவள் அவனிடத்தில் ஏதோ சக்தியும் ஈர்ப்பும் இருப்பதை உண்ரந்தாள்.
தன்னை ஒருவள் ரசிக்கிறாள் என்பதை உணர்ந்த விஷ்ணுவின் ஏழாம் அறிவு விழித்துகொள்ள அவன் அவளை பார்த்தான். ஆனால் அவளோ இயல்பான பெண்களுக்கே உரித்தான குணமாக தலையை குணிந்து கொண்டாள்.
இப்படியே இருவரும் காதல் கண்களை மேயவிட விதியின் விளையாட்டால் இருவரது கண்களும் சந்தித்தன.
அவளது நீல கண்கள் இவனது இதயத்தில் காதலெனும் நீலநிற விஷத்தை கண்கள் வழியே அனுப்பின. அவளோ இவனது பார்வையில் ஓர் தாய்மையுணர்வை உணர்ந்தாள்.
மூன்று வினாடிக்கு மேல் நீடிக்கவில்லை அந்த விழிமொழிகள் சிறு புண்ணகை பூக்க இருவரும் கணினியிடம் சரணடைந்தனர்.
விதையாக இருந்த காதல் இன்று துளிர்விட்டதை விஷ்ணு உணர்ந்தான்.
‘என்னடி ரம்யா ஆச்சு உனக்கு‘ என நினைத்து சிரித்தாள்.
******
“இந்தத் தீவின் மொத்தப் பரப்பளவே பத்து ஏக்கர் தாண்டாது இதில் யார் வந்து இந்த தங்க சிலையை வைத்திருப்பாங்க?” என தன்னிடமே கேட்டவனை பார்த்து அந்த சிலை சிரிப்பதை போல தோன்றியது.
“இரு உன்னை வெட்டி எடுத்து காசா மாத்திடுறேன்…. அப்புறம் எங்க சேரியிலையே நான்தான் பணக்காரன்” என அதை பார்த்து கூறி சிரித்தான்.
ஆனால் அவனது வயிற்றிலிருந்த அமிலம் தன் வீரியத்தை காட்டவே முதலில் பசியை அமர்த்துவோம் என நினைத்துகொண்டு ஒரு மரத்தில் ஏறினான்.
உயரத்தில் இருந்த தேங்காய்கள் அவனை வரவேற்றது. மரங்களில் மிக சுலபமாக ஏறும் திறமையுடையவன் என்பதால் சீக்கிரமாக அவனுக்கு இளநீரும் தேங்காய்களும் கிடைத்தது.
தாகத்தையும் பசியையும் சிறிது போக்கிகொண்டவன் அரசாங்க பானத்தையும் இறைச்சியையும் தவறவிடுவதாக வருந்தினான்.
சரி இந்த சிலையை கவனிக்கலாம் என நினைத்துகொண்டு அங்கு கிடைத்த கற்களால் உடைக்க முற்பட்டான்.
முயற்சி தோல்வியில் முடிந்தது…. அந்த சிலையோ ஏதோ யானையிடம் எறும்பு மோதுவதாக நினைப்பதை போல தனது புன்னகை மாறாமல் இருந்தது.
முயற்சி செய்து சோர்வாக அமர்ந்தவன் கண்களில் ஒரு முயல் ஓடும் காட்சி உட்புகுந்தது.
அதை துரத்திக்கொண்டு ஓடினான்.. தன் கையில் ஓர் பெரிய கல் இருப்பதை பார்த்தான். தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக வீசினான். அவனுக்கு வெற்றி அது முயலின் மூளையை பதம்பார்த்தது. ஆனால் நிலை தடுமாறி கீழே விழுந்து முள் புதருக்குள் உருன்டான்.
சற்று உயரம் தான் ஆனாலும் அங்கிருந்த கொடிகளை பிடித்து ஏறவே அவனது பாதத்தில் ஏதோ வெட்டியதை உணர்ந்தான்.
ரத்தம் கொட்டவே அதை தடவினான்… அங்கு கூர்மையான ஒரு வாள் கிடந்தது. அது பழங்காலத்து வாள் அதன் ஓரங்கள் வைர துகள்களாள் பதிப்பிக்கபட்டிருந்தது. அதனால் அதன் கூர்மை மாறாமல் இருந்தது.
அதையும் ஒரு கையால் எடுத்தவன் மேலே வீசினான். மெதுவாக மேலே ஏறி வந்து தனது காலில் மண்களை பூசி ரத்தத்தை நிறுத்தினான்.
வாளை எடுத்து தாறுமாறாக சுற்றிவிளையாடினான். அது அவனுக்கு கம்பீரமாக இருந்தது. பின் அந்த முயலை எடுத்துகொண்டு சிலையின் அருகில் வந்தான்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் நெருப்பு அவனருகில் இருந்தது. அதில் தனக்கு கிடைத்த இறைச்சியை தயார்செய்து உண்டான்.
வயிறு முழுமை பெற்றிருக்க சூரியனோ மேற்கு திசையில் தயாராக இருந்தது.
செவ்வானம் அழகாக காட்சியளிக்க அந்த சிலையின் அழகு மேலும் கூடியது.
தன்னிடம் இருந்த கத்தியை எடுத்தவன் சிலையை வைரத்தால் அறுக்க திட்டமிட்டு குதிரையின் வயிற்றில் குத்தினான்.
அது மிக சுலபமாக உள்ளே நுழைந்தது. தனக்கு இவ்வளவு ஆற்றலா என மீசையை தடவிக்கொண்டே கத்தியை வெளியே எடுக்க அந்த துளை வழியே கருப்பு நிற திரவம் கொட்டியது. அதன் துர்நாற்றம் அவனால் தாங்கவே முடியவில்லை. சற்றுமுன் தான் சாப்பிட்ட முயலும் வாய் வழியே துள்ளிக்குதித்து வந்து விழ அந்த இடத்திலேயே மயக்கமடைந்தான்.
சூரியன் தனது நேரம் முடிந்து நிலவை பணியமர்த்திச் சென்றது.
********
அன்று அதிக வேலையின் காரணமாக அலுவலகம் முடிய தாமதமானது. புதிதாக சேர்ந்த ரம்யா(திவ்யா)வும் பொறுமையாகவே கிளம்பினாள்.
அலுவலக தோழமைகள் அனைவரும் தங்களது இயந்திரத் தோழர்களுடன் வெவ்வேறு திசையில் பறக்க இருவர் மட்டும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
நிலவு ஓர் குடையாக மாறி அவர்களை பேச வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அவளோ பேருந்து வரும் திசையை பார்த்துகொண்டு நின்றாள். இவனோ அவளது கன்னத்தின் மச்சத்தை அவள் பார்க்காத வண்ணம் பார்த்துகொண்டிருந்தான்.
‘எப்படி என் பெயர் தெரியும் என கேட்டுவிடுவோமா!?…. இல்லை வேண்டாம் இவன் என்னை பார்த்த உடனேயே ஈர்த்து விட்டான்…. கொஞ்சம் அவனைப்பற்றி தெரியாதவரை விலகியே இருப்போம்… ஆனால் முடியவில்லையே” என மனதில் ஓர் நீயா நானாவே நிகழ்ந்துகொண்டிருந்தது.
‘டேய் விஷ்ணு இதுதான் சரியான நேரம் உன் கனவுதேவதைகிட்ட போய் பேசிடு…. சே அவளை பத்தி முழுசா தெரியாது… அதுவும் இல்லாம இவ்வளவு அழகா இருக்கிறாள்… கண்டிப்பா இவளுக்கு லவ்வர் இருப்பான்‘ என பட்டிமன்றம் நிகழ்த்தினான்.
அந்த சமயம் பேருந்து வரவே இருவரும் ஏறினர். திவ்யா ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். விஷ்ணு சுற்றிலும் பார்த்தான் எந்த இருக்கையிலும் இடமில்லை. அவளருகினில் தவிர…
பேருந்தில் பெண்கள் அருகில் ஆண் அமரக்கூடாது என்ற எழுதப்படாத விதியை மதித்து கொண்டு தலைக்குமேல் நீண்டிருந்த கம்பியை பிடித்து நின்றான்.
அவனது இந்த குணம் மேலும் அவளை ஈர்த்தது. அவனது தன்மையை ரசித்தாள்.
“சார் வாங்க இங்க உட்காந்துகோங்க“
“இல்ல ரம்யா பரவாயில்லை “
“சார்“என அவள் முகம் ஏங்க அதை தவறாக புரிந்தவன்.
“சாரி மறந்துட்டேன் திவ்யா“
என அழுத்தமாக கூறினான்.
“அது இல்லசார்… இங்க இடம் இருக்கு உட்காருங்க ஒன்னும் பிரச்சனை இல்லை” என அவனை அனுமதித்தாள்.
அவனோ இவள் மீது நிழல்கூட படாதவாறு அமர்ந்தான்… அவன் அமரவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அந்த செயலை பார்த்து ரசித்தாள்… ஆனால் அவளது நினைவில் ஓர்நாள் நடந்த ஓர் நிகழ்வு…
கல்லூரியிலிருந்து மிகுந்த கோபத்தில் வீட்டை நோக்கி பேருந்தில் ஏறவே அங்கு ஒரு பெண் அமர்ந்திருக்க அவளருகில் ஒரு ஆண் அமர்ந்திருந்தான்.
அந்த பெண் ஏதோ அசௌகரியத்தை உணர்ந்தது போல தோன்ற மிகவும் கோபத்தில் இருந்த திவயாவகற்கு கோபம் இயல்பான குணம்.
“ஹலோ சார்” எனறவளை நிமிர்ந்தவன்
“என்ன?” என்றான்.
“இது லேடிஸ் சீட் தெரியுமா இல்லையா“
“நல்லா தெரியும் இது நான் லவ் பன்ற பொண்ணு அதான் அவள் பக்கத்துல உட்காந்து இருக்கேன்” என நக்கலாக கூற அவளை பார்த்தாள் திவ்யா.
அவளோ என்னை காப்பாற்றுங்கள் என்பதை போல பார்க்கவே திவ்யா ரம்யாவாக மாறினாள்.
“டேய் எந்திரிடா“
“என்னடி ஓவரா பேசுற“
அந்த நொடி ஒரு அறை போதுமானதாக இருக்க அவன் எழுந்து கொண்டு அவளை முறைத்து கொண்டே இறங்கிசென்றான்.
அந்த நாளில் அப்படி இருந்ததவளா இன்று தனது அருகில் ஒருவனை அமர அனுமதித்திருக்கிறேன் என சிரித்து கொண்டாள்.
‘இவள் ஏன் சிரிக்கிறாள்‘ என அவன் குழம்பினான்.
“சார்” என அவள் அழைக்க
“விஷ்ணு அப்பபடின்னே கூப்பிடலாமே” என்றான்.
“சரிங்க விஷ்ணு நீங்க ஏன் என்னை ரம்யா அப்படின்னு கூப்பிட்டீங்க“
‘நீ என் கனவில் வந்த தேவதை; நீதானே என்னிடம் உனது பெயரை கூறினாய்…. இதை எப்படி உன்னிடம் கூறுவேன்… இல்லை உன் ஓவியங்களை தான் என்னால் காட்டமுடியுமா அப்படி காட்டினால் நீ என்ன செய்வாய்‘ என நினைத்தவன்..
“அது ஏன்னு தெரியவில்லை ரம்யா திடீர்னு தோனுச்சு அது அப்படியே மனதில் பதிந்துவிட்டது” என கையை பிசைந்தான்.
“எனக்கும் ரம்யானு கூப்பிட்டாத்தான் பிடிக்கும்”
“என்ன சொல்றீங்க?!!”
என அவன் கேட்க தனது நினைவுகளாய் இருந்த ரம்யா எனும் டைரியை விஷ்ணுவிடம் வாசித்து காட்டினாள்.
“ஓ சூப்பர்ங்க அப்ப நான் ரம்யான்னு கூப்பிடலாமா?”
‘இதுவரை என்னை அப்படி யாராவது அழைப்பார்களா என்று ஏங்கினேன் ஆனால் இனிமேல் நீ மட்டும்தான் அப்படி அழைக்க வேண்டும் வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை‘ என நினைத்து கொண்டு
“கண்டிப்பாக நீங்க அப்படியே அழைக்கலாம் விஷ்ணு” என அவள் இதழ்கள் மூடியநேரம் பேருந்து நின்றது. விஷ்ணுவை பிரிந்துவிட்டு சோகமாக புறப்பட்டது அந்த பேருந்து. அவளுக்கு துனையாக நிலவும் அவளுடனேயே சென்றது.
‘இது என்ன கனவா…. இல்லை உண்மைதான்… அது எப்படி சாத்தியம்… நான்தான் ஏற்கனவே கூறினேன் அல்லவா!’ என மனதுடன் கலந்துரையாடி கொண்டே வீட்டை அடைந்தான்.
உள்ளே நுழையும் முன் தனது தோழன் கருப்பன் வரவேற்க்க “இது தான் காலையில் நீ விடுமுறை எடுக்க காரணமா?” என இரண்டு சக்கர நண்பனிடம் பேச அதன் அருகில் ஒரு இருசக்கர தோழி இருப்பதை பார்த்தான்.
இது கவிதாவின் ஸ்கூட்டர்தான் ‘மணி ஏழு ஆகிறது இவள் என்ன செய்கிறாள் இங்கே.… யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்… அது சரி இன்று புதிதாக கேட்பதற்கு என்ன இருக்கிறது… அதான் எல்லாவற்றையும் அன்றே கூறிவிட்டாளே‘
அந்த நாள் விஷ்ணுவின் வாழ்வில் மறக்கமுடியாத ஓர் நாள் தான். அன்று விஷ்ணுவிற்கு உடல்நிலையில் அவனது வெள்ளையணுக்கலால் உதவிசெய்ய முடியவில்லை. சற்று வேகமாகவே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டவன் தனக்கு பழக்கபட்ட மருத்துவமனையில் சென்று மருத்துவரிடம் ஆலோசிக்க
“சார் நீங்க அதிகமா தூக்கமாத்திரை எடுத்துகிறீங்க“
“ஆமாம் சார் அதுதான் உங்களுக்கு தெரியுமே“
“அதுதான் விஷ்ணு இங்க ப்ராப்ளம்… முடிந்த அளவுக்கு குறைச்சுகோங்க… தினமும் பயன்படுத்தாம அந்த கனவு வந்தால் மட்டும் பயன்படுத்திகோங்க“
“ம்ம் சரிங்க டாக்டர்“
“அப்புறம் ஒரு விசயம் முடிஞ்ச அளவுக்கு அதை தவிர்க்குறது நல்லது… அதுமட்டுமில்ல என் ஃப்ரண்ட் இன்னும் மூன்று மாதத்தில் இந்தியா வர்ரதா சொன்னான். ஜேம்ஸ் நல்ல சைக்கார்டிஸ்ட் இப்ப இந்தமாதிரி கனவுகளை பத்தி ஆராய்ச்சி பன்னிகிட்டு இருக்கான்.. உங்களை பத்தியும் சொல்லிவச்சிருக்கேன்” என சிரித்துகொண்டிருந்தவரை பார்த்து சிரித்துகொண்டே கிளம்பியவன் மனதில் ‘என்னடா இது படிச்சிட்டு டாக்டர் ஆவாங்கன்னு பார்த்தா டாக்டர் ஆகிட்டுதான் படிக்குறாங்க நம்மைமாதிரி ஆட்களை வச்சு‘
அவன் முடிக்கும் நேரம் அந்த மருத்துவமனையின் மருந்தக வாசலில் நிற்க கிறுக்கல் நிறைந்த சீட்டை நீட்டினான். ‘அந்த கிறுக்கலுக்கு கீழே தன் கையெழுத்தை போட்டால் கூட அதற்கும் சில மருந்தை தருவார்கள் போல‘ என சிரிக்க ஒரு வெள்ளைபை நிரப்பப்பட்டு முன்னால் வைக்கபட்டவுடன் ஆயிரம் ரூபாய் முழுமையாக விழுங்கிகொண்டனர்.
வேறு வழியில்லை என வீட்டை அடைய அங்கு ஒரு ஸ்கூட்டர் நிற்க கதவு திறந்து இருந்தது.
“என்னடா திருடன் எதுவும் வந்துவிட்டானா?”
என நினைத்து கையில் அங்கு கிடந்த ஒரு கம்பியை எடுத்துக்கொண்டான். வாசலில் இருந்த திரையை விலக்கியவன் உள்ளே நுழைய அங்கிருந்த ஓவியத்தை ஒரு உருவம் ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தது. அதன் கையில் ஓர் கோட் இருந்தது.
“நீங்க இங்க என்ன பண்றீங்க” என விஷ்ணு கேட்க.
“இல்ல விஷ்ணு இந்த கோட்டை கொடுக்க வந்தேன்” ரம்மியமான குரல்.
‘இவளுக்கு என் பெயர் எப்படி? இவள் எப்படி உள்ளே வந்தாள்?’ என தோன்றினாலும் கேட்க மனமில்லை.
அவன் மனதை படித்தவளாய் “என்ன இப்படி பார்குறீங்க?!…. எப்படி உள்ளே வந்தேன் அப்படின்னு பாக்குறீங்களா?”
ஆம் என்பது போல் கண்களால் பார்த்தான்.
“நீங்க வேலை செய்யும் கம்பெனியோட முதலாளி பீட்டர் என் அண்ணன்தான்“
“என்ன அண்ணனா?!”
“சாக் ஆகாதீங்க தொழில்ரீதியா என் அப்பாவுக்கு பழக்கம் அதான் அப்படி சொன்னேன்“
“ஓ அப்படியா” மனம் முழுவதும் நிறையவில்லை.
“இவள் எப்படி உள்ளே வந்தாள்? அப்படின்னுதானே பாக்குறீங்க“
“இல்லையே” என சமாளித்தார்.
“இந்த வீட்டை பீட்டர் வாங்குனதுக்கு அப்பறம் இதோட ஒரு சாவி எங்ககிட்டதான் இருந்தது. அதை வச்சுத்தான் திறந்தேன்“
“சரிங்க இப்ப ஏன் வந்திருக்கீங்க“
“பின்ன ஒரு சூப்பர் ஹீரோ திடீர்னு வந்து காப்பாத்திட்டு மறைஞ்சுட்டாரு… ஆனால் அந்த ஹீரோ இந்த கோட்டை தவறவிட்டுட்டு என் மனதை திருடிகிட்டு போய்ட்டாரே… அதான் இதை கொடுத்துட்டு அவரோட மனதை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்“
விஷ்ணு குழப்பமாக பார்க்க
“ஐயோ சினிமா டயலாக் மாதிரி கொஞ்சம் ஓவரா பேசிட்டேனோ… ஐ லவ் யு மாமா” என அவள் கூற அவன் மனமோ ஓவியத்தை நாடி சென்றது. விழிகள் அதை காட்டிக்கொடுக்க.
“மாமா இங்க பாருங்க உங்களை பத்தி மொத்த விசயத்தையும் கலெக்ட் பன்னிட்டேன்… உங்க தைரியம் மட்டுமில்ல உங்க கேரக்டரும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…. நல்ல முடிவா சொல்லுங்க“
அதுவரை பொறுமை காத்த விஷ்ணு
“என்னை பற்றி என்ன தெரியும் உனக்கு? என்னுடைய புறதோற்றம் வேண்டுமானால் நீ அறிந்திருக்கலாம். என் மனதை நீ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை” என அந்த ஓவியத்தை பார்த்தான்.
“என்ன மாமா சுத்ததமிழ்ல்ல பேசற அது இருக்கட்டும் இந்த ஓவியம் எல்லாம் நீ வரைஞ்சதா?… ரொம்ப நல்லா இருக்கு… என்னையும் வரைந்து தருவியா” என பனி பொழியும் முகத்தை காட்டினாள்.
அவளது முகம் கோபம் என்னும் அனலில் பூக்களை பூக்க செய்ய “இது என் கனவு கன்னி அவளை தான் வரைந்து வைத்திருக்கிறேன் இவளை பார்ப்பேன் என மனது சொல்கிறது அதனால் உன்னை நேசிக்க முடியாது.. என் மனம் ஒருத்திக்குதான் சொந்தம்“
“அப்படியா யாருன்னே தெரியாத ஒரு பெண்ணை அதுவும் இருக்காளா இல்லையான்னு கூட தெரியலை அவளை லவ் பன்னுவ உன்னை காதலிப்பவளை ஏத்துக்கமாட்ட அதுதான் உன் முடிவா?!”
“உன்னைகூடதான் என்க்கு தெரியாது ஏன் உன் பெயர் கூட எனக்கு தெரியாதே” என தப்பிக்க நினைத்தான்.
கண்களின் ஓரத்தில் சிறிது நீர் அவளை அறியாமல் வரவே “என் பெயர் கவிதா… நான் கொஞ்சம் மார்டன் பொண்ணு எதையும் மனசுக்குள்ள வச்சுக்க மாட்டேன் உடனே போட்டு உடைச்சுடுவேன். கொஞ்சம்….. இல்லை நிறையாவே ப்ராக்டிகலா யோசிப்பேன் இது போதுமா“
முகத்தை திருப்பியவன் சுவரின் மீது இருகைகளையும் வைத்ததுகொண்டு ரம்யாவின் ஓவியத்தை பார்த்து கவிதாவை தவிர்க்க நினைத்தான்.
ஆனால் அது தோல்விதான். அவனின் வலப்பக்கம் வந்தவள் அவனது தோளில் கை வைத்து “சரி நான் ஒத்துகிறேன்… அவளை எப்பொழுது பார்ப்பாய் என நினைக்கிறாய்“
“தெரியலை… கூடிய விரைவில்“
அவனது அன்பை விட்டுக்கொடுக்க மனமில்லாதவள் “இப்படி சராசரியா பதில் சொல்லாமல் தீர்க்கமா சொல்லு“
விஷ்ணுவின் மனம் சட்டென மேலோங்க “இன்னும் மூன்று மாதத்திற்குள் பார்த்துவிடுவேன் போதுமா” என வார்த்தைகள் வந்து விழுந்தன.
“சரி அப்படி பார்க்கவில்லை எனில்?” என அவனது கண்களை பார்க்க…
“கன்டிப்பா பார்ப்பேன்“
“பாக்கலைன்னா?… சொல்லு மாமா“
எல்லா பக்கமும் அவள் அனைகட்டி விட்டதால் தன்னிடம் ஒரு பதில் தான் இருந்தது.
அவன் கூறும் முன்னே “அப்படி நடக்கலைன்னா என்னை ஏத்துகுவியா” என முடிக்க…
‘அதற்குள் அவள் வந்துவிடுவாள்‘ என நினைத்துகொண்டு “ம்ம்” என்பதை போல சைகை செய்தான்.
இதற்குமேல் ஏதாவது பேசினாள் என்றால் என்ன செய்வது என நினைத்தவன் “இப்படி சூரியன் இல்லாத நேரம் இங்க வந்திருக்கியே உங்க வீட்டுல எதுவும் தப்பா நினைச்சுக்க போறாங்க“
நக்கலாக புன்முறுவல் காட்டியவள் “மத்த பொண்ணுங்க மாதிரி என்னை நினைக்காதடா எங்க வீட்டுல எல்லா பர்மிசனும் வாங்கிட்டேன்.. இவ்வளவு என் உன்னை பற்றி டீடெய்ல் கொடுத்தது கூட என் அப்பாதான்“
என்னடா நடக்குது இங்க என நினைத்தவன் தலையில் கையை வைக்க…
“என்ன மாமா உடம்பு சரியில்லையா” என கன்னத்ததில் கை வைத்து பார்க்க உடல் தன்நிலையை மறைக்காமல் காட்டியது.
“டாக்டர் வர சொல்லவா?”
“இல்ல வேண்டாம் பாத்துட்டடுதான் வந்தேன்”
“ம்ம்…சாப்பிட என்ன இருக்கு” என கிச்சனில் நுழைய அங்கு தேய்க்கபடாத பாத்திரங்கள் பல்லைகாட்டவே…
சிறிது நேரம் தன் கைபேசியில் வித்தை காட்டியவள் சாதித்துவிட்டாள்…ஏதோ மாயம் நிகழ்ந்ததை போல அவளது வீட்டின் வேலைக்காரி ஒருவள் அறுசுவை உணவுடன் வந்து நிற்க பாத்திரங்களும் கழுவப்பட்டு அந்த வீடே அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றப்பட்டது.
ஆச்சரியத்திலும் பயத்திலும் இருந்த விஷ்ணு அவளை சமாதானபடுத்தி அனுப்ப மூன்று மணிநேரம் பிடித்தது.
அது அன்று அனால் இன்றோ கருப்பன் தன் புது தோழியான ஸ்கூட்டருடன் பேசிகொண்டிருக்க ‘நான் அவளை பார்த்துவிட்டேன் இன்று இவளை ஒரு வழிபார்த்துவிடலாம்‘ என உள்ளே நுழைந்தான்…