Tamil Madhura Uncategorized ப்ரணாவின் ‘நாயகி’ – சிறுகதை

ப்ரணாவின் ‘நாயகி’ – சிறுகதை

வணக்கம் தோழமைகளே!

தனது சிறுகதை ‘நாயகி’ மூலம் நம் தளத்தின் வாசகர்களை சந்திக்க வந்திருக்கும்  எழுத்தாளர் ப்ரணாவை வரவேற்பதில் மகிழ்கிறோம்.

எழுத்தாளர் ப்ரணா பல புதினங்கள், கதைகள், கட்டுரைகள் வாயிலாக  நமது மனதைக் கொள்ளை கொண்டவர். இவரது ‘தீண்டும் இன்பம்’ புதினத்தைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. புங்களூர் என்ற ஒரு கிராமத்தையே  தமது எழுத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த கிராமத்து வாசனையை உணர வைக்கும். அதே போலவே இவரது சிறுகதை ஒவ்வொன்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாயகியைப் படியுங்கள், படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

நாயகி

c96a3931ரூர் போய் சேர எப்படியும் இன்னும் ஆறு மணி நேரம் ஆகும்.பேருந்தில் புத்தகத்தை திறந்து வைத்தால் தலை வலி மண்டையைப் பிளக்கும்.ஹெட் ஃபோன் போட்டு பாட்டு கேட்கும் பழக்கமும் கிடையாது.தூக்கமும் வராது.ம்.என்ன செய்யலாம்?எப்படி இந்த ஆறு மணி நேரத்தை ஓட்டுவது?கண்களால் பேருந்தை ஒரு சுத்து சுத்தி வந்தேன்.அவரவர் வேலை அவரவர்க்கு.சிலர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.சிலர் தேர்வு அறையில் உட்கார்ந்திருக்கும் மனோபாவத்துடன் அமர்ந்திருந்தார்கள்.சிலர் பேருந்தில் விற்றுக் கொண்டிருந்த நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.ஆனால் யாரும் என்னைப் போல் இப்படி பராக்கு பார்த்துக் கொண்டிருக்கவில்லை.லேசாக உதடு சுழித்து சிரித்துக் கொண்டேன்.ரத்த சிவப்பில் புடவை கட்டி என் அருகில் அமர்ந்திருந்த பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தேன்.பேச்சு கொடுத்துப் பார்க்கலாமா?.

சில பேரிடம் என்னதான் மாங்கு மாங்கென்று பேசினாலும் ஒரு வார்த்தை,ஒரு பதிலுக்கு மேல் ஒன்றும் வராது.அப்படி இருப்பவர்களிடம் அரை மணி நேரம் ஓட்டுவதே போதும் போதும் என்றாகி விடும்.இவள் எப்படி என்று தெரியவில்லையே?இருக்கட்டும்.பேருந்து புறப்பட்டதும் பார்த்துக் கொள்ளலாம்.என் முயற்சியைத் தற்காலிகமாய்த் தள்ளி வைத்தேன்.

டிரைவர் அவர் சீட்டில் வந்து அமர்ந்து ஹாரனை தொடர்ந்து அழுத்திக் கொண்டிருந்தார்.எனக்கு எரிச்சலாய் இருந்தது.என் காதுக்குள் வந்து அடிப்பது போல் இருந்தது.சிறிது நேரம் என் பொறுமையை சோதனை செய்த பின்புதான் ஹாரன் அடிப்பதை நிறுத்தினார் அவர்.

திடீரென,”ஆணென்ன பெண்னென்ன நீயென்ன நானென்ன” எனப் பாட்டு கேட்க,அது பக்கத்தில் அமர்ந்திருந்த சிவப்பு சேலை பெண்ணின் ரிங்க் டோன் என என் மூளைக்குப் புரிய ஒரு நொடிப் பிடித்தது.இப்படி ஒரு ரிங்க் டோனா என நான் வியந்து முடிப்பதற்குள் அவள் அந்த அழைப்பை ஏற்றுவிட்டாள்.அவள் ஹலோ சொல்ல, ஒரு நொடி என்னையும் அறியாமல் அவள் முகத்தை திரும்பி நன்றாகப் பார்த்தேன்.நான் அமர்ந்திருந்த இருக்கையின் ஜன்னலோர பெண்ணிற்கும் அந்த அதிர்ச்சி இருந்திருக்கும் போல, அவளும் என்னைப் போலவே சிவப்புப் புடவைக்கரியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

சட்டென என்னை உணர்ந்து நான் இயல்பானேன்.அவள் பேசி முடித்ததும்,ஜன்னலோர பெண் தன் இருக்கையிலிருந்து எழுந்தாள்.அவள் எதுவும் சொல்லு முன்னே,சிவப்பு சேலை,இடம் கொடுக்கும் பொருட்டு கால்களை சற்று உள்ளுக்குத் தள்ளிக் கொள்ள, நான் எழுந்துக் கொண்டேன்.எங்கள் இருக்கையிலிருந்து சென்றவள் டிரைவர் சீட்டுக்கு எதிரில் காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.நான் வசதியாய் என் இருக்கையில் அமர்ந்துக் கொண்டேன்.சிவப்பு சேலைக்காரி என் பக்கம் திரும்பி நீ போகல?’ என்பது போல் ஒரு பார்வைப் பார்க்க,நான் இல்லைஎன்பதாய் ஒரு புன்னைகையைப் பரிசளித்தேன்.புன்னகை ஒட்டுவார் ஒட்டிப் போல, அவளும் எனக்கு பதில் புன்னகை செய்தாள்.

வண்டி மெதுவாய் புறப்படத் துவங்க,திடீரென ஒரு ஆள் ஓடிவந்து வண்டியில் ஏறிக் கொண்டான்.ஏறியவன், சுற்றுமுற்றும் யாரையோ தேடி, பின், ட்ரைவர் சீட்டுக்கு எதிர் சீட்டுக்கு சென்றான்.எங்கள் இருக்கையிலிருந்து மாறி அந்த இருக்கையில் அமர்ந்த அந்தப் பெண்ணை நோக்கிதான் சென்றான்.அவனுடைய வேகம் எனக்கு சிறு சந்தேகத்தை எழுப்ப, அதை உறுதி செய்யும் வகையில், அவள் அருகில் சென்று அவள் தலை முடியை வேகமாக இழுத்தான்.

என்னடி,சொல்லிக்காம கொள்ளாம ஓடிவந்துட்டா,வுட்ருவாங்கனு நெனப்பா?நீ இப்ப அந்த செயின கழட்டி குடுக்கலை,உன்னை இங்கயே பொணமாக்கிடுவேன்”, பல தள்ளாடல்களுக்கிடையில் சொல்லி முடித்தான்.


கையை எடு முதல்ல.இது எங்கப்பா போட்டது.நீ குடிச்சு அழிக்க இதையும் நான் அவுத்து குடுக்கனுமா உனக்கு? அந்த பெண் முடிந்த மட்டும் அவன் கையை விலக்கப் போராடினாள்.பேருந்தில் யாரும் வாயே திறந்த பாடில்லை.எதாவ்து செய்ய வேண்டும் என்று தோன்றிய என் எண்ணத்தை, தனியாளாய் நான் மேற்கொள்ளும் இந்தப் பயணமும்,அதன் பொருட்டு எழுந்த பயமும் தள்ளி வைத்தன.நான் நகத்தை கடித்துக் கொண்டிருக்க, என் அருகில் இருந்த சிவப்பு சேலைக்காரி, எழுந்து சத்தம் போடத் துவங்கினாள்.

ஹலோ வீட்டுப் பிரச்சனைய வீட்ல வச்சுக்கங்க.பப்லிக்ல பொம்பளைய அடிச்சீங்கனா,போலீஸ கூப்டுவோம் ஜாக்கிரதை”
அவள் உரத்து சொல்ல, டிரைவருக்கும்,கண்டக்டருக்கும் கூட தைரியம் வந்து விட்டது.

யோவ்,முதல்ல பஸ்ஸ விட்டு இறங்கு.இதென்ன உன் வீடுனு நெனச்சியா?சண்டையெல்லாம் வீட்ல வச்சுக்கோஇறங்கு,இறங்கு. குடிச்சுட்டு வந்து நம்ம உயிர வாங்குறானுங்க”


டிரைவர் சத்தம் கொடுக்க, கண்டக்டர் மெதுவாய் அவனை வாசல் பக்கம் நகர்த்தினார்.இதைப் பார்த்த, பேருந்தில் இருந்த சிலருக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் தைரியம் வர ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள். உன்னை அப்பறம் கவனிச்சுக்கறேன்என்று அந்த பெண்ணை முறைத்துவிட்டு அவன் இறங்கிப் போய்விட்டான்.வண்டி மெல்ல நகரத் துவங்கியது.அந்த பெண் திரும்பி சிவப்பு சேலையை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு அமர்ந்தாள்.நன்றியாய் இருந்திருக்குமோ?

நான் சிவப்பு சேலைப் பக்கமாய் சற்று நகர்ந்து அமர்ந்துக் கொண்டேன்.

உங்க பேர்?”


நாயகி” கரகரப்புக் குரலில் சொன்னாள்.

நாயகி? வித்தியாசமான பேர்.அழகாவும் இருக்கு.இப்பதான் முதல் முறையா இப்படி ஒரு பேரே கேள்விப்படறேன்”,

என்னுடைய இயல்பான பேச்சை சற்றும் எதிர்பாராதவள் போல் ஒரு சிறு ஆச்சர்யத்தை முகத்தில் காட்டியவள், பின் குறும்பாய் கேட்டாள்.

“ஏன் பேர் மட்டும்தான் அழகா இருக்கா நாங்கெல்லாம் அழகா இல்லையா?”.

நல்ல வசதியாய் திரும்பி அவளைப் பார்த்தேன்.அடர் சிவப்பு நிற சில்க் காட்டனில் இருந்தாள்.எனக்குக் கூட இவ்வளவு நன்றாகப் புடைவை கட்டத் தெரியுமா எனத் தெரியவில்லை.அத்தனை ஒரு நேர்த்தி.கோதுமை நிறத்தில் இருந்தாள்.தலையை வாரி,மல்லிகை சூடி இருந்தாள்.முகத்தில் மெல்லியதாய் ஒப்பனை.மைல்டான ஈவா மணம் வந்து கொண்டிருந்தது அவளிடமிருந்து.முப்பதுகளின் இறுதியை தொட்டுக் கொண்டிருக்கலாம்.எதோ ஒருவித ஈர்ப்பு இருந்தது அவளிடம்.அது அவள் கண்களில் தெரிந்த நேர்மையாகக் கூட இருக்கலாம்.

ஹலோ,தூங்கிட்டீங்களா?”, அந்த ஒரு நிமிட இடைவெளியைப் பொறுக்கமுடியாதவளாய் என் மௌனம் கலைத்தாள்.


உங்களுக்கென்ன, உங்க பேர் மாதிரியே நீங்களும் அட்டகாசமா இருக்கீங்க”


அது சரி…இது எனக்கே எனக்குனு நானே வச்சுகிட்ட பேர் இல்லையா,அப்படிதான் இருக்கும்”, கண்களை சிமிட்டி சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

உள்ளுக்குள் ஏதோ மணி அடித்தது.இந்தப் பயணம் நிச்சயமாய் ஒரு புது அனுபவமாய் இருக்கப் போகிறது எனக்கு.ஒவ்வொரு பயணமுமே ஒரு அனுபவம்தானே.அதற்காகத்தானே பயணமே.சட்டென எழுந்த உந்துதலில்,அவளிடம் கேட்டேன்.

உங்க உண்மையான பேர் என்ன?அம்மா,அப்பா வச்ச பேர்”, கொஞ்சம் அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேனோ?எப்போதும் போல் இப்போதும் மனசு கடிந்தது.அவசர குடுக்கை!
என் புறம் திரும்பியவள், “மணிகண்டன்” என்றாள்.

நீங்க எப்ப இப்படி மாறுனீங்க?மீன்ஸ் நாயகியா” கேட்கலாமா கூடாதா என மனம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்க, நாக்கு வென்றுவிட்டது.பேருந்து இப்போது முழு வேகம் பிடித்திருந்தது.காற்று சில்லென முகத்தில் பட்டது.


நான் இந்த சாகசத்தைப் பண்ணி ஒரு பதினெட்டு வருஷம் இருக்கும்னு நினைக்கறேன்.”சிரித்தபடியே சொன்னாள்.


ஏன் மாறுனீங்க”,அடக்கமில்லாத நாக்கை மெல்லியதாய் கடித்தேன்.
ஒரு முழு நிமிடத்திற்கு அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.பேருந்தின் அத்தனை இரைச்சலையும் மீறி ஒரு துண்டு மௌனம் இறைந்துக் கிடந்தது எங்கள் இருவர் இடையில்.

சாரி, நான் எப்பவுமே கொஞ்சம் லொட லொட,தப்பா எடுத்துக்காதீங்க ..ப்லீஸ்”

அதெல்லாம் ஒன்னுமில்ல.ஈசியா கேட்டுட்டீங்க.ஆனா எப்படி உங்களுக்கு பதில் சொல்றதுனு யோசிக்கறேன்..ம்…சரி சொல்லுங்க..ஒரே ஒரு நாள் மட்டும், ஒரு ஆணா உங்கள இருக்க சொன்னா நீங்க எப்டி ஃபீல் பண்ணுவீங்க..பேசறதுல இருந்து,நடக்கறதுல இருந்து யோசிக்கறது வரை எல்லாமே ஆண் மாதிரி செய்யணும்.முடியுமா உங்களால?”

என்னுடைய கேள்விக்கு பதிலாய் வந்தது இன்னொரு கேள்வி.நான் சற்றும் எதிர்பார்க்காத கேள்வி.அவள் சொன்னது போல் ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தேன்.கற்பனையே சகிக்க முடியாததாய் இருந்தது.என் அகம் காட்டும் கண்ணாடி என்னை காட்டிக் கொடுத்துவிட்டது போல,அவளே கேட்டாள்.

முடியாதில்ல?”.நான் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் நிதானமாய்,ஆனால் வெகு தெளிவாய்,தேர்ந்த சொற்களால் பேச ஆரம்பித்தாள்.

அப்படி தான் இருந்துச்சு எனக்கும்.உடல் வேறு,மனசு வேறா இருந்துச்சு.ஒவ்வொரு குழந்தைக்கும் வரமா இருக்க வேண்டிய பதின் பருவம் எனக்குப் பெரிய இடியா இருந்துச்சு.எவ்வளவு குழப்பம்,எவ்வளவு கேலி,எவ்வளவு கிண்டல்.நிறையப் பார்த்தாச்சு”,அந்த நாட்களின் வலியை மீண்டும் உணர்வது போல் இருந்தது அவளது வார்த்தைகள்.

அந்த சின்ன வயசுல, என்னையே எனக்கு முழுசா புரியாத போது,மத்தவங்கள்ட்ட என் நிலைமைய என்னானு விளக்கறது?உடம்பால மட்டுமே ஆணா இருக்கவும், மனசால,எண்ணங்களால முழுசா ஒரு பொண்ணாவும் உணர வேண்டிய கொடுமை அது.எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கிடைச்ச சாபம்.என்ன பண்றது? சாபத்தோட இந்த பூமிக்கு வந்தாச்சு,வாழ்ந்துதான ஆகணும்?”.
முழுதாய் அவள் உணர்ந்து பேசியது எனக்கு வருத்தமாய் இருந்தது.அவளை இயல்பாக்க வேண்டி கேட்டேன்.

இப்ப என்ன பண்றீங்க?”

கேட்டதும் உற்சாகமாய் சொன்னாள்.

டான்ஸ் ஸ்கூல் வச்சு நடத்தறேன்.ஒரு ஐம்பது பேர் எங்கிட்ட படிக்கறாங்க.மாற்றுத்திறனாளி குழந்தைகள்,ஏழை குழந்தைகளுக்கெல்லாம் ஃப்ரீயா க்ளாஸ் எடுப்பேன்.எங்கிட்ட பரதம் கத்துகிட்ட நிறைய பேர் இப்ப ப்ரொஃபஷனல் டான்சரா இருக்காங்க” பெருமிதம் மிதந்தது அவள் கண்களில்.

அவள் பேச பேச எனக்கு பாலச்சந்தர் படக் கதாநாயகிகள் எல்லோரும் மனக் கண்ணில் வந்து போயினர்.

நீங்க டான்ஸ் டீச்சரா?சான்ஸே இல்லை.ஆச்சர்யமா இருக்கு.எப்படி டான்ஸ் கத்துகிட்டீங்க?”


இதுக்கு பதில் சொல்லனும்னா ஒரு குட்டி கதையே சொல்லனுமே பரவாலையா?”


கதை கேக்கறதுனா எனக்கு ரொம்ப இஷ்டம்”.நல்ல வாகாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டேன்.

ஒரு நாள்,ரெண்டு நாள்ல நடந்த ஆச்சர்யம் இல்ல இது.இதுக்குப் பின்னாடி ஏகப்பட்ட போராட்டங்கள் இருக்கு.எனக்கு திருச்சிதான் சொந்த ஊர்.என் கூட பிறந்தவங்க ரெண்டு பேர்.ஒரு அண்ணன்,ஒரு அக்கா.கடைக்குட்டி பையன்னா வீடு நம்மள எப்டி தாங்கும்?அப்படிதான் எங்க வீடும் என்னை கொண்டாடுச்சு.ஆனா வளர வளர எங்கிட்ட நிறைய மாற்றங்கள்.எங்க அப்பா,அண்ணன் மாதிரி இருக்கறதை விட, எங்க அம்மா,அக்கா மாதிரி இருக்கறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.புடவை கட்டி பாக்கறது,ஆட்டுக்கல்ல மாவாட்டி பாக்கறது,டீச்சர் விளையாட்டு விளையாடறதுனு எல்லாமே பெண் சார்ந்த விஷயங்களாதான் செஞ்சேன்.கொஞ்சம் கொஞ்சமா சுத்தி இருக்கவங்க என்னையும்,என் தோரணைகளில் தெரிஞ்ச வித்தியாசத்த கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நெளிஞ்சு,கொழஞ்சு நான் நிக்கறது,பேசறதெல்லாம் வீட்டை விட்டு வெளில போனா கேலியா மாறுச்சு.வீட்டுக்குள்ள கண்ணீரா மாறுச்சு.அப்பாகிட்ட இருந்து ஏகப்பட்ட அடி வாங்கியிருக்கேன்.இன்னும் கூட அந்த பெல்ட் தடம் என் முதுகுல இருக்கு.பொம்பள மாதிரி இருப்பியா,இருப்பியானுகேட்டு கேட்டு அடிச்சுருக்காரு.நான் வேணுனே பண்ணலப்பாநு அழுது தீத்திருக்கேன்.

அண்ணனுக்கும்,அக்காவுக்கும் கூட என் மேல ரொம்பவே கோபம்.என்னால அவங்களையும் மத்தவங்க கேலி பண்றத அவங்களால பொறுத்துக்க முடியலை.எங்கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.வீட்ல எனக்கான ஒரே ஆதரவான ஜீவன் என் அம்மாதான்.யார் எப்படி சொன்னாலும் என்னை விட்டுக் கொடுக்காம பேசுவாங்க.ஒரு தரம் கூட இந்த விஷயத்துக்காக என்னை அசிங்கமா பேசாத ஒரே மனுஷி அவங்கதான்.”

இத்தனை நேரம் அத்தனை திடமாக பேசிக் கொண்டிருந்தவள், அவள் அம்மாவைப் பற்றி பேசும்போது சற்றே நெகிழ்ந்து போய் இருந்தாள்.சற்றே எட்டிப் பார்த்த கண்ணீரை, தன் கைக்குட்டையால் லாவகமாய் துடைத்தாள்.இடைமறிக்க எனக்கு ஏனோ பிடிக்கவில்லை.அவளே பேச ஆரம்பித்தாள்.

“‘எல்லாரும் சொல்றாங்கள்ல, பின்னாடி உனக்குதான் கஷ்டம்.மாறிக்கோடா தம்பிநு கெஞ்சுவாங்க.அது எனக்கு அப்பாற்பட்ட விஷயம்னு அவங்களுக்குக் கூட புரியலை.ப்ச்.எங்கம்மா பி.யூ.சி முடிச்சவங்க.சமையல் புத்தகங்களோட சேத்து ஒரு டைரியும் வச்சு இருந்தாங்க.அதை தன் பெட்டிக்குள்ள ரொம்ப பாதுகாப்பா வச்சு இருப்பாங்க.தனியா உக்காந்துதான் எழுதுவாங்க.ரொம்ப நாளா அதை படிச்சுப் பாக்கணும்னு நெனச்சுட்டு இருந்த எனக்கு ஒரு நாள் அதுக்கான வாய்ப்பு கெடச்சது.யாருமே வீட்ல இல்லாத ஒரு மதிய நேரத்துல அதைப் படிச்சேன்.அந்த டைரி பக்கங்கள் முழுசுமே அவங்க என்னை பத்தி மட்டும்தான் எழுதி இருந்தாங்க.சின்னதுல நான் எப்டி இருந்தேன், என் நடவடிக்கைகள் எல்லாம் எப்படி கொஞ்சம் கொஞ்சமா மாறுச்சு அப்படினு ஒரு கதை மாதிரி எல்லாத்தையும் எழுதி வச்சுருந்தாங்க.அதோட கடைசி பக்கத்துல கவிதை மாதிரி ஒரு நாலு வரி எழுதிவச்சிருந்தாங்க.எழுத்து கூட மாறாம இன்னும் அந்த கவிதை என் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு”

ஒவ்வொரு வார்த்தையாய் அந்த கவிதையை சொல்லி முடித்தாள்.

ஆணோ பொண்ணோ
நீ என் குழந்தை
ரத்தமும் சதையும்
உணர்வுமுள்ள ஒரு உயிர்
நான் புரிந்துக் கொள்ளாத உன்னை
யார் புரிந்து கொள்வார்கள்

அவங்க மனசுல தோணுனத நாலு வரில எழுதி வச்சிருந்தாங்க.அதை படிச்சுட்டு, எங்கம்மாவ கட்டிகிட்டு அழனும் போல இருந்துச்சு எனக்கு.எங்க வீட்டை விட்டா வெளி உலகமே தெரியாதவங்க அவங்க.ஆனா அவங்களுக்குள்ள அத்தனை ஒரு புரிதலும்,முதிர்ச்சியும் இருந்துச்சு.”

முகம் பார்த்திறாத,என் கற்பனையில் உதித்திருந்த அவள் அம்மாவின் மீது சட்டென ஒரு மரியாதை எழுந்தது.

என் அம்மாவை கஷ்டப்படுத்த எனக்கு மனசு வரலை.அங்க இருந்தா யாராவது எதாவது சொல்லிட்டே இருப்பாங்க.அது என்னை விட என் அம்மாவை ரொம்ப காயப்படுத்தும்னு நெனச்சேன்.அந்த டைரி படிச்ச அன்னிக்கு நைட்டே வீட்டை விட்டு வெளில வந்துட்டேன்.வரும்போது அப்பாவோட பர்ஸ்ல இருந்து நூறு ரூபா எடுத்துட்டுதான் வந்தேன்.தைரியமா வீட்டை விட்டு வந்துட்டேனே ஒழிய, எங்க போறது,என்னை பண்றதுனு ஒண்ணும் புரியலை.இருந்தாலும் மனச தேத்திட்டு பஸ்ஸ்டேன்ட் வந்தேன்.தேனி போற பஸ் கண்ல பட்டுச்சு.எதையும் யோசிக்காம ஏறிட்டேன்.தேனில இறங்கி ஒரு நாலு நாள் சும்மாவே சுத்திட்டு இருந்தேன்.கைல காசு இருந்த வரைக்கும் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை.காசு தீந்ததுக்கப்பறம்தான் பசியோட கோர முகம் தெரிய ஆரம்பிச்சுச்சு.பட்டினி இருந்து பழக்கமே இல்லாததால ரொம்பவே சுணங்கிப் போய்ட்டேன்.ஒரு கோவில்ல பிரசாதம் குடுக்கறத பாத்துட்டு அதை வாங்கி சாப்பிட போனேன்.அப்பதான் ஜீயோட அறிமுகம் கெடச்சுது”

ஒரு சிறு இடைவெளிவிட்டு தொடர்ந்தாள்.

ஜீ பேரு ரவீந்தர்.யோகா குரு.சின்னதா ஒரு ஆஸ்ரமம் நடத்திட்டு இருந்தாரு.அங்க இருக்கற குழந்தைகளுக்கு யோகா சொல்லி கொடுப்பாரு.என்னை பாத்ததுமே என் பிரச்சனையைப் புரிஞ்சுகிட்டார்.அவரோட ஆஸ்ரமத்துக்கு என்னை அழைச்சுட்டுப் போனார்.எங்கம்மாவுக்கு அடுத்து எங்கிட்ட அனுசரணையா இருந்த இன்னொருத்தர நான் அப்பதான் முதல் முறையா பாத்தேன்.படிப்புதான் என் தலைவிதிய கொஞ்சமாவது மாத்தும்னு நான் உறுதியா இருந்தேன்.இதை அவர்கிட்டயும் சொன்னேன்.என்னோட ஆர்வத்தைப் பார்த்தவர்,என்னை ஸ்கூல்ல மறுபடியும் சேர்த்துவிட்டார்.வாத்தியாரும்,கூட படிக்கற பசங்களும் பண்ற கேலிகள்ல எத்தனையோ நாள் ஸ்கூலுக்கு போக மாட்டேனு அழுதுருக்கேன்.அவர்தான் ஆறுதல் சொல்லி,நம்பிக்கை கொடுப்பாரு.அலி,ஒம்போது,பொட்டைஇந்த மாதிரியான ஏகப்பட்ட அவமானங்களுக்கு இடையில ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணி ஸ்கூல் முடிச்சேன்.ஜீ எவ்வளவோ சொல்லியும் காலேஜ் போக மாட்டேனு சொல்லிட்டு,கரஸ்லயே பி.ஏ தமிழ் முடிச்சேன்.அதுக்கப்பறம் என்னால அங்க இருக்க முடியலை.நாளாக ஆக, பேண்ட்,ஷர்ட்,கிராப் ஹேர் ஸ்டைல் இது எல்லாத்தையும் என் மனசால ஏத்துக்க முடியலை.நான் வேற, என் உடல் வேறனு தோன ஆரம்பிச்சுடுச்சு.உள்ளுக்குள்ள ஒரு பெரிய போராட்டம்.எப்படா விட்டு விடுதலை ஆவோம்னு இருந்துச்சு.ஜீ கிட்ட இதைப் பத்தி பேச விரும்பலை.அவர் எனக்கு செஞ்ச உதவிகளுக்கு பதிலுக்கு எதுவும் செய்ய முடியாட்டியும்,இப்படி ஒரு பிரச்சனைய அவர்கிட்ட கொண்டு போக வேணானு நெனச்சேன்.ஒரு நாள் நைட், இரண்டாவது முறையா என் கூட்டைவிட்டு வெளிஏறிட்டேன்.”

சிலிகான் ஆப்ரேஷன் பத்திலாம் பேப்பர்ல படிச்சிருந்தேன்.இந்த முறை எங்க போறதுனு தடுமாற்றம் இல்லை.யோகா சொல்லி கொடுத்து சேத்து வச்சிருந்த பணத்துல மும்பை போய் இறங்கிட்டேன்.அப்ப அது பாம்பே.இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் ஒரு கஷ்டமே இல்லனு பொட்டுல அடிச்சமாதிரி சொன்னுச்சு மும்பை.இதுதான லைஃப்?புதுசா ஒரு பிரச்சனை வரும்போதுதான் நேத்து வரை நாம பிரச்சனைனு நெனச்சதெல்லாம் ஒன்னுமே இல்லைனு தெரியும்.ஆனாலும் கொஞ்ச நஞ்ச கஷ்டமில்ல நான் அனுபவிச்சது.”

சொல்லிவிட்டு நிறுத்தியவள், சட்டென கேட்டாள்.”ஆமா உங்க பேர் என்ன?நான் அதை கூட கேக்காம என் கதை எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்”

ஆமால்ல, நான் பேர் கூட இன்னும் சொல்லல.என் பேர் சத்யா.சென்னைல சாஃப்ட்வேர் இஞ்சினியரா வர்க் பண்றேன்”

நல்ல பேர்.இந்தப் பேரை கேட்டாலே எனக்கு கமல் சார்தான் நியாபகம் வர்றார்”.

நானும் நிறைய தடவை அந்த படம் பாத்துருக்கேன்.எனக்கு பிடிச்ச படங்கள்ல அதுவும் ஒண்ணு”

அவள் அப்படியா என்பது போல் ஒரு பாவனை செய்துவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.கண்டக்டர் எங்கள் அருகில் வர, நான் பர்ஸிலிருந்து பணம் எடுத்தேன்.

ஏப்பா,ஏய் எங்க போகனும்?” அவர் நாயகியைப் பார்த்துக் கூப்பிட்டார்.
நான் கோபமாய் அவரைப் பார்க்க,என்னை பார்த்து நக்கலாய் சிரித்தார் அவர்.தன் கைப்பையிலிருந்து பணம் எடுத்தவள், இதுவரை என்னிடம் பேசிக் கொண்டிருந்த நளினத்தை உதறி, ஆண் குரலில் சொன்னாள்.

உங்க வூட்டுக்குதான் போகணும்போலாமா?

நடத்துனர் ஒரு மாதிரியாய் சிரிக்க, “போக முடியாதில்ல?அப்ப திருச்சிக்கு ஒரு டிக்கட் குடு” அவர் எதுவும் பேசாமல்,டிக்கட் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

என்ன பாக்கறீங்க, இதெல்லாம் ரொம்பவே சாதாரணம்.கன்னத்தை கிள்ளறது,மார்ல கை வைக்கறது,பின்னாடி தட்டறதுனு வித விதமா செய்வாங்க.இப்பலாம் ரொம்பவே சகிப்புத்தன்மை வந்துடுச்சு.அய்யோ சாமி வுடுங்களேன் நாங்க பாட்டுக்கு இருந்துட்டு போறோம்னு சில சமயம் கத்தத் தோனும்.ஆனா முடியாது”.இயலாமையாய் சொன்னாள்.

சில நேரங்களில் ஆறுதல் சொல்லவென சரியான வார்த்தைகள் அமைவதில்லை.பேச்சை மாற்ற வேண்டி கேட்டேன்,

மும்பை போய்தான் டான்ஸ் கத்துகிட்டீங்களா?” என்னைப் பார்த்து மென் புன்னகை செய்தவள்.இல்லை என்று தலை ஆட்டினாள்.

மும்பை போய் டான்ஸ் கத்துக்கலை.பிச்சை எடுக்கதான் கத்துகிட்டேன்”,அதே புன்னகையுடன் தொடர்ந்தாள்.

நிஜம்தான் சத்யா.ஆணா இருந்து பெண்ணா மாறனுனா ரெண்டு வகைல மாறலாம்.டாக்டர்ட்ட போய் முறையா அறுவை சிகிச்சை செய்துக்கறது முதல் வகை.அப்படி இல்லைனா, அந்த காலத்துல மருத்துவச்சிங்களாம் வீட்லயே வந்து சுக பிரசவம் பண்ணிவிடுவாங்கள்ல, அந்த மாதிரி வயசான திருநங்கைங்களே சுயமா செஞ்சு விடறது.இது ரெண்டாவது வழி.முதல் வழில காசு கொஞ்சம் அதிகமாவே சிலவாகும்.ஆனா, உயிருக்கு கொஞ்சம் உத்தரவாதம் கொடுக்கலாம்.ரெண்டாவது வழில, செலவுனு பாத்தா ரொம்ப ரொம்ப கம்மி.ஆனா வந்தா மலை, போனா *** தான்.எனக்குக் கொஞ்ச நாள் இந்த பூமில வாழனுனு ஆசை இருந்துச்சு.யாருக்குதான் இருக்காது? இல்லயா?மனுஷங்கதான.அதனால என் ஆபரெஷனுக்கு பணம் சேக்க வழி தேட ஆரம்பிச்சேன்.அப்பலாம் திருநங்கைகள் சம்பாதிக்க ரெண்டே வழிதானு சொன்னாங்க, ஒண்ணு பிச்சை எடுக்கணும், ரெண்டு பாலியல் தொழில் செய்யனும்.நான் ரெண்டையுமே செஞ்சேன்.பணம் சேத்தேன்.ஒரு வழியா ஆப்பரேஷன் முடிஞ்சு நாயகியா மாறிட்டேன்.அவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணுன ஆப்பரேஷனால எத்தனையோ பிரச்சனைகள் வரதான் செய்யுது.வெய்ட் தூக்க முடியாது,கை கால்லாம் சீக்கிரமே தளர்ந்துடும்,எசகு பிசகா தடுமாறி கீழ விழுந்துட்டா அவ்வளவுதான், ஆப்பரேஷன் பண்ணி இருக்கறதால உயிர் கூட போக வாய்ப்பு இருக்கு.இது அத்தனையும் தாண்டிதான் நாங்க அதை செஞ்சுக்கறோம்.என் மனசு என்னை உணர்ற மாதிரியே என் உடலயும் ஒரு அளவாவது உணர வைக்க முடியற சந்தோஷம் இருக்கே,அது நான் படற இந்த கஷ்டங்களை விட ரொம்பப் பெருசு.”

கேட்க கேட்க வியப்பாய் இருந்தது எனக்கு.இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா.உடல் சோர்ந்து போகும் அந்த மூன்று நாட்களில் ஏண்டா பெண்ணாய் பிறந்தோம் என்று சலிப்பு வருமே, அது கூட இனிமேல் வராது எனத் தோன்றியது.மங்கையராய் பிறக்க,கண்டிப்பாய் மாதவம் செய்திருக்கதான் வேண்டும் போல.

உங்க கதை எல்லாம் கேக்கும்போது,நாங்கள்ளாம் ரொம்பவே கொடுத்து வச்சவங்கனு தோணுது நாயகி” மெல்லிய சிரிப்புடன் சொன்னாள்.”உண்மைதான், உங்கல போல நல்ல குடும்பத்துல பிறந்து,அக்கா,தங்கைகள்னு அன்பா,பாசமா வழ்ந்துட்டு,பின்னாடி பிச்சை எடுக்கறதும்,பாலியல் தொழில் செய்ய நேர்றதும்,மத்தவங்க கேலி,கிண்டல்களுக்கு ஆளாகறதும் மிகப் பெரிய கொடுமைதான்.எங்களுக்கு நேர்ந்த மிகப்பெரிய அநீதியும் கூட.”

ஆனா நான் அந்த கட்டதை எல்லாம் எப்பவோ தாண்டி வந்துட்டேன்.ஆபரேஷன் பண்ணதுமே மதுரைக்குப் போய் ஜீயதான் முதல்ல பாத்தேன்.அவருக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சிதான்.இருந்தாலும் ரொம்ப சீக்கரமே என்னைப் புரிஞ்சுகிட்டார்.அப்பறம் ஏகப்பட்ட தர்க்கங்களுக்கு அப்பறம் டான்ஸ்தான் என் உலகம்னு முடிவு பண்ணுனேன்.அவரே சிபாரிசு பண்ணி தெய்வனாயகம்னு ஒரு பரத கலைஞர்ட்ட என்னை சேத்து விட்டாரு.அப்படி இப்படினு மறுபடியும் ஏகப்பட்ட எதிர்ப்பு,தடையெல்லாம் தாண்டி அரங்கேற்றம்லாம் பண்ணுனேன்.க்ளாஸ் ஆரம்பிச்சப்ப, எங்கிட்ட சேரவே நிறைய பேர் யோசிச்சாங்க.இன்னும் சில பேர், குழந்தைங்கள சேக்க வந்துட்டு, என்னைப் பாத்த பின்னாடி, அப்பறம் வந்து பாக்கறேனு போய் இருக்காங்க.இந்த மாதிரி நிறைய நடந்திருக்கு.காலமும்,காட்சியும் மாறத்தானே வேணும்.எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா அமைஞ்சு வந்துச்சு.இப்பயும் எங்கிட்ட நிறைய ஏழைக் குழந்தைங்க ஃப்ரீய படிச்சுட்டுதான் இருக்காங்க.நான் இத்தனை கஷ்டப்பட்டது,சம்பாதிக்கறதுக்காக இல்ல, இந்த சமூகத்துல, ஒரு மனுஷியா,நேர்மையா வாழத்தான்.அது அமைஞ்ச திருப்தி எனக்கு இப்ப நிறைய இருக்கு”

அவள் சொல்வதை கேட்க எனக்கும் சந்தோஷமாக இருந்தது.மற்றவர் பொருட்டு வரும் சந்தோஷத்தின் சுகமே அலாதிதான்.பேருந்தின் வேகம் திடீரென குறைய,ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்தோம்.மேள தாளத்துடன் சவ ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது.ஒரே ஆட்டமும் கும்மாளமுமாய் இருந்த அந்த ஊர்வலம் பார்ப்பதற்கு கல்யாண ஊர்வலம் போலவே இருந்தது.முக்கால்வாசி சாலையை அடைத்துக் கொண்டு சென்றார்கள்.

யாரோ ஒரு திருநங்கை இறந்துட்டாங்க”


எப்படி சொல்றீங்க?”


நீங்க கவனிக்கலையா?அந்த ஊர்வலத்துல போற எல்லாருமே எங்கள மாதிரியானவங்கதான்.எங்களுக்கு இறப்புங்கறது ஒரு கொண்டாட்டம்.அதுதான் அத்தனை ஆட்டம்,பாட்டம் அங்க”


ஏன் அப்படி?”


ஏனா?(சின்னதாய் ஒரு சிரிப்புடன் தொடர்ந்தாள்) ஏன்னா, வாழ்றப்பதான் சந்தோஷமா வாழல, போகும்போதாவது சந்தோஷமா போகட்டுமேனுதான்.”


நாயகி…ஏன் இப்படி பேசுறீங்க?”


அதுதானே உண்மை சத்யா?இதுல பெரிய விஷயம் என்னானா,இறந்தவங்களுக்கான எல்லா ஈமை கடன்களையும் நாங்களேதான் செய்வோம்.அவங்க வீட்ல இருந்து யாராவது வந்தா, அவங்களுக்காக ஒரு பத்து நிமிஷம் ஒதுக்குவோம்.அவங்க செய்ய வேண்டியதை செஞ்சுக்கலாம்.அதுக்கப்பறம் அவங்களை அங்கிருந்து அனுப்பிடுவோம்.ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒரு திருநங்கை அம்மா,ஒரு திருநங்கை பொண்ணு இருப்பாங்க.அந்த திருநங்கை பொண்ணுதான் அவங்க அம்மாவுக்கு எல்லா காரியமும் செய்யனும்.இது எங்களோட ரூல்.எல்லாத்துக்கும் மேல,கடைசியா இப்படி ஒரு பொறப்பு இனிமே எடுப்பியானு விளக்கமாத்தால அடிச்சுதான் அனுப்பி வைப்போம்.இது எங்களோட முக்கியமான சடங்கு.போதும்டா சாமி இந்த ஒரு பொறப்பே…அதுக்குதான் இந்த அடி”
வெகு சாதரணமாய் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.எனக்குதான் கேட்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது.சிறிது நேரம் அமைதியாக இருந்தோம்.எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை.அவளாகவே கேட்டாள்.

கதை எப்படி?ரொம்பவே ட்ராஜடி இல்ல?”


உண்மைதான்.ஆனா நீங்க ரொம்பவே இயல்பா எடுத்துக்கறீங்க”


என்ன பண்றது சத்யா?இயல்பா இல்லாத நான், எல்லாத்தையும் இயல்பா எடுத்துக்க வேண்டி இருக்கு.எல்லாமே பழகிடுச்சு”

ரொம்ப நாள் பழகியவர்கள் போல் பேசிக் கொண்டே வந்தோம்.அவளிடம் கேட்பதற்கு எனக்கு கேள்விகள் முளைத்துக் கொண்டே இருந்தன.அவளும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தாள்.எப்பவாவது ஒருமுறை அவள் அம்மாவை பார்க்கத் திருச்சி போவாளாம்.அம்மாவைத் தவிர வேறு யாரும் அவளிடம் சரியாக பேசக் கூட மாட்டார்களாம்.இவளுக்கும் அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலை இல்லை.போகும்போதெல்லாம் அம்மாவுக்கு பிடித்தது எதாவது ஒன்றை தன் சம்பாத்தியத்திலிருந்து வாங்கிக் கொண்டு செல்வாளாம்.அதுதான் அவளுக்கு மிகப்பெரிய திருப்தி என்றாள்.இப்போதும் கூட தன் மும்பைத் தோழிகளிடம் தொடர்பில்தான் இருக்கிறாளாம்.அவர்கள்தான் அவளுக்கு மிகப்பெரிய சப்போர்ட் என்று சொன்னாள்.இன்னும் என்னனவோ சொல்லிக் கொண்டு வந்தாள்.நான் கேட்டுக் கொண்டு வந்தேன்.சிறிது நேர ஆசுவாசம் இருவருக்குமே தேவைப்பட்டது.கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தோம்.அவளது எண்ணை குறித்துக் கொள்வதற்காக, நான் கைபேசியை எடுக்க, என்னைப் பார்த்துக் கேட்டாள்.

சரி, என்னையே குறுக்கு விசாரணை பண்ணிட்டு வரீங்களே?உங்களை நான் ஒன்னு கேக்கவா?”


ஒன்னென்ன,ஆயிரம் கேளுங்க”


பொதுவா எங்களை மாதிரி ஆளுங்ககிட்ட யாரும் வந்து பேசவே யோசிப்பாங்க.எங்களை கண்டாலே பிடிக்காம மூஞ்சிய திருப்பிக்குவாங்க.நீங்க என்னடானா, எங்கிட்ட இவ்வளவு சகஜமா பேசுறீங்க?”


எனக்குக் கூடதான் பிடிக்காது…” சொல்லிவிட்டு நான் நிறுத்த, அவள் முகத்தில் சின்னதாய் ஒரு தவிப்பு.

எனக்குக் கூடத்தான் பிடிக்காது, பொய் சொல்றவங்களை,திருடறவங்களை,பாலியல் வன்புணர்வு பண்றவங்கள,பெண்கள் மேல ஆசிட் ஊத்தறவங்களை,அடுத்தவங்க பணத்தை சுரண்டரவங்களை,சுயநலமா சிந்திக்கறவங்களை, இன்னும் எத்தனையோ பேர..பட்,உங்களை ஏன் பிடிக்காம போகணும்?ம்?”

சொல்லிவிட்டு அவள் தோளில் கை வைத்தேன்.இரண்டாவது முறையாய் அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 10 (நிறைவுப் பகுதி)ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 10 (நிறைவுப் பகுதி)

தாலிச்சரட்டைக் கழற்றி எறிந்து, புருஷன் மனைவி பந்தத்தைத் துண்டித்தெறிவது எளிது என்று அபிராமி இப்போது நினைக்கிறாள். கழுத்துப் புருஷனையும் விடப் பந்தமுள்ளவன், இந்த வயிற்றுப் புருஷன். இவனை இரத்தத்தோடு சதையோடு ஊட்டி வளர்த்துத் தன்னுள் ஒரு பகுதியாக வைத்திருந்து பிய்த்து எறிவது

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28

28 அந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. மதுரா டிவி, வைகை டிவி முதலிவை போட்டி போட்டுக் கொண்டு அதைப் பற்றி பேச, பஹரிகா ஒரே நாளில் ஏகப்பட்ட பேரைச் சென்றடைந்தது. அதிதிக்கும் இது ஒரு நல்ல விளம்பரமாக இருந்தது என்றால்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39

39 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் அனைவரும் மகிழ்ச்சியோட விழிக்க ஆதியின் வீட்டிலே நிச்சயம் என்பதால் பரபரப்பாக அனைவரும் வேலை செய்துகொண்டு ஆதிக்காக காத்திருக்க ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அந்த சூழலை கண்டு முதலில் திகைக்க அவனின் கண் முன்னால்