கபாடபுரம் – 10

10. பெரியவர் கட்டளை

 

    • பெரிய பாண்டியருடைய சாதுரியமான பேச்சுக்கு முன் குமாரபாண்டியனும் முடிநாகனும் திறனிழந்து நிற்க நேர்ந்தது. அவரோ மேலும் தொடர்ந்தார்.

 

    • “அழகை நிரூபிப்பதற்காக ஒரு காப்புக் கட்டிக் கொண்டது போல் கடவுள் சில பெண்களைப் படைப்பதும் உண்டு அல்லவா?”

 

    • முடிநாகனும், இளையபாண்டியனும் இதைச் செவியுற்றுத் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டாற்போலத் தலைகுனிந்தார்கள்.

 

    • “ஏன் இருவரும் தலை குனிகிறீர்கள்? உங்களைப் போன்றவர்கள் உருக்குலைவதற்காகப் பெண்களையும் உருவாக்கியிருக்கிறானே இறைவன்?” என்று மேலும் அவர் வினவியபோது தான் இதே சொற்களை இதே கடுமையான குரலில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் கேட்டது நினைவு வந்தது இளையபாண்டியனுக்கு.

 

    • பெரியவர் மாறுவேடத்தில் அங்கு வந்ததோடு அமையாமல் தனக்கும் முடிநாகனுக்கும் மிக அருகிலே நின்று இருவர் பேச்சையும் ஒட்டுக் கேட்டிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. விருப்பமானது, அறியும் திறனை மங்கச் செய்து விடுகிறது என்பதை இப்போது நன்றாக உணர்ந்தான் இளையபாண்டியன். கண்ணுக்கினியாளின் ஆடல் பாடல்களில் திளைத்த தனது விருப்பம் தனது அருகில் வந்து நின்ற முதியவரை உணரும் ஆற்றலை இழக்கச் செய்திருக்க வேண்டுமென்று இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் மேலும் தலைகுனிந்தான்.

 

    • “அரசகுமாரர்கள் தெருவில் திரியும் பொதுமக்கள் போல் தங்கள் விருப்பு வெறுப்புக்களைத் தெரிவிப்பதும் பேசித் திரிவதும் விந்தைதான். ‘எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம்’ என்பதை அருகிருக்கும் அமைச்சர்கள் கூட உணர்வதற்கோ கண்டுபிடிப்பதற்கோ அரிதாக வைத்துக் கொள்ளவேண்டுமென்று அரச இலட்சணம் பற்றி அரசியல் நூல்கள் கூறுகின்றன. நீயோ பரிசுக்குப் பாடும் பாண்மகளைப் படைத்த இறைவனை வியந்து உருகுகிறாய்.”

 

    • “தவறு என்னுடையதுதான். இளையபாண்டியரை அரண்மனைக்கு அழைத்து வராமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்குப் போவதற்குத் துணை நின்றிருக்கக் கூடாது” என்று முடிநாகன் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பயந்தபடி வெளியிடலானான். அதைக் கேட்டு அவன் மேற் சீறினார் பெரியவர்.

 

    • “நீ என்னிடம் கூறிய கூற்றுப்படி நீங்களிருவரும்தான் புன்னைத் தோட்டத்திற்கே போகவில்லையே? முதலில் பொய் கூறிவிட்டு அப்புறம் ஏன் தடுமாறுகிறாய்? சாதித்த பொய்க்கு ஏற்பப் பேசத்தெரிய வேண்டும். அல்லது பேசியதற்கு ஏற்பச் சாதிக்கத் தெரியவேண்டும். உங்களுக்கோ இரண்டு வகையிலுமே தேர்ச்சியில்லை” என்று வஞ்சப் புகழ்ச்சியில் இறங்கினார் பெரியவர். முடிநாகன் அவருக்கு மறுமொழி கூறும் சக்தி இழந்தான்.

 

    • “கடமையும், ஆண்மையுமே, அரச குடும்பத்தின் பெருநிதிகள். அவற்றை மறந்தோ, இழந்தோ உருகுவதும், நெகிழ்வதும் தலைமேலுள்ள பொறுப்புக்களைப் பாழாக்கிவிடும். இதை நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நகரத்தைப் பரிசோதிக்க நீங்கள் புறப்பட்டுச் சென்றால் உங்களைப் பரிசோதிக்க நான் பின் தொடர்ந்ததில் தவறென்ன?” – என்று பெரியவர் சிறிது கடுமை குறைந்து ஆறுதலாகப் பேசத் தொடங்கிய பின்பே இருவரும் தலை நிமிர்ந்தனர்.

 

    • “தவறு உன்னுடையதில்லை குழந்தாய்! அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அளவு மீறிய கலை உணர்வு ஆகாது! உன் தாய் வழிவந்த இசை ஞானமும், நம் புலவர் பெருமக்கள் கடமையைக் கற்பிப்பதை விட கலையை உனக்கு அதிகமாகக் கற்பித்திருப்பதுமே இதற்குக் காரணம். இசையும் கூத்தும் காமத்தின் இரு கதவுகள். அவற்றைக் கேட்கலாம். காணலாம். கதவுகளை உடைத்துக் கொண்டு புக முயலாதார் மிகவும் குறைவு. உன்னைக் காண நான் நாணப்படுகிறேன். இனி நீ இலக்கண இலக்கியங்களைக் கற்றதை விட அதிகமாக அரச தந்திரங்களையும், போர்த்துறை நுணுக்கங்களையும் கற்க வேண்டும். உன்னுடைய கல்வியில் விரைவாக ஒரு மாறுதல் வேண்டும். இல்லாவிட்டால் நீ ஆட்சிக்குப் பயன்படாதவனாகி விடுவாய்” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார் பெரியவர். முடிநாகன் ஏதோ பதில் கூறுவதற்கு முயன்றான். அவர் அவனைப் பேச விடவில்லை.

 

    • “இசையினால் விருப்பம் மிகுகிறது. விருப்பம் மிகுந்தால் கடமையுணர்வு குன்றுகிறது. கடமையுணர்வு குன்றினால் ஆசை பிறக்கும். ஆசையின் முடிவில் பொறுப்புக்கள் மறந்து போகும். அரச குடும்பத்துப் பிள்ளைகள் நல்ல விதை நெல்லைப் போன்றவர்கள். அவர்களிலிருந்து எவ்வளவோ கடமைகள் பயிராகி வளர வேண்டும். அவர்கள் சரிதத்தில் நிற்கக் கூடியவர்கள். சரிதம் அவர்களை ஒரு மூலையில் நிறுத்திவிட்டுப் போய்விடும்படி ஆகிவிடக்கூடாது” என்று கூறிவிட்டு மேலே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் பெரியவர். அவர்களிருவரும் தயங்கித் தயங்கி நடந்தபடியே சிந்தனையோடு பள்ளிமாடத்திற்குள் நுழைந்தனர். இருவருமே அன்றிரவு உறங்கவில்லை.

 

    • மறுநாள் காலையிலும் விடிந்ததும் விடியாததுமாக பெரியபாண்டியரே அவர்களை எதிர்கொண்டு முதல் நாளிரவு அரைகுறையாக விட்ட உரையாடலைத் தொடரத் தொடங்கிவிட்டார்.

 

    • “நேற்றிரவு புன்னைத் தோட்டத்திற்குச் செல்லுமுன் நீங்களிருவரும் ஏதோ அவுணர் வீதி முரசமேடைப் பக்கம் போயிருந்ததாகக் கூறினீர்களே. அந்த நிகழ்ச்சியைப் பற்றி எனக்குச் சிறிது தெளிவாகத் தெரிய வேண்டும்.”

 

    • இந்தக் கேள்விக்கு இளையபாண்டியனான சாரகுமாரன் மறுமொழி கூறத் தயங்கினான். அருகிலிருந்து முடிநாகன் சற்றே துணிவோடு விரிவாக மறுமொழி கூறலானான்.

 

    • “முரசமேடைக்குக் கீழே அவுணர்களின் இரகசிய படைக்கலச்சாலை ஒன்றிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது” – என்பதாக ஏதோ பெரிய அந்தரங்கத்தைக் கண்டுபிடித்துச் சொல்பவன் போல முடிநாகன் கூறியும் பெரியவர் அதைக் கேட்டுச் சிறிதும் அயரவில்லை.

 

    • “இருக்கலாம்; அப்புறம்?”

 

    • “அதன் மூலம்தான் இடையிடையே அவுணர்கள் கொலை, கொள்ளை, கலகங்களில், ஈடுபடவும் மறையவும், மீண்டும் வெளிவரவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுகின்றன.”

 

    • “ஒற்றன் வேறு; அரச குடும்பத்தினன் வேறு. ஒற்றன் அறிந்து கூறுவதைப் போன்ற சாதாரணப் புறச் செய்திகளை அறிவதற்கே அரச குடும்பத்து மதி நுட்பமும் பயன்பட்டால் அப்புறம் அந்த மதிநுட்பத்திற்கு ஒரு பயனுமில்லை. தோற்றம், அதன் பின்னுள்ள கருத்து, கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து – இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் – என்று எல்லாவற்றையும் தொகுத்துணரும் ஞானம் நமக்கு வேண்டும். உண்மையிலேயே உங்களுடைய தொகுத்துணரும் அறிவை நான் சோதனை செய்வதற்கு ஆசைப்படுகிறேன். இப்போது பரிசோதனைக்காக நான் சொல்லப் போகும் காரியத்தை நீங்கள் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள், எவ்வாறு அநுமானங்களைத் தொகுக்கப் போகிறீர்கள் என்பவற்றை எல்லாம் பார்த்த பின்பே உங்களுடைய அரசதந்திரத் திறமைப்பற்றி நான் கூறமுடியும்.”

 

    • “முரசமேடைப் பற்றியோ, அதிலுள்ள இரகசியங்களைப் பற்றியோ முதல்முதலாக இன்றுதான் நான் கேள்விப்படுகிறேன் என்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் உங்கள் பேதமையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்த முரசமேடையில் தொடங்கும் சுருங்கை வழி எங்கே போகிறது எங்கே முடிகிறதென்று நீங்கள் அறிந்துகொண்டால் என்னைவிட ஒரு வேளை உங்களுக்கு அதிக வியப்பு ஏற்படலாம்.”

 

    • “நான் வியக்கவில்லை என்பது பொருளல்ல. என்னுடைய வியப்புக்கும் காரணமிருக்கும். வியப்பின்மைக்கும் காரணமிருக்கும். அதைப் பின்னால் சொல்லுகிறேன். இன்றிரவே அவுணர்வீதி முரசமேடை பற்றி நீங்களே உங்கள் சொந்த அறிவுத்திறன் கொண்டும், சாம, தான, பேத, தண்ட, முயற்சிகள் கொண்டும் என்னென்ன தெரிந்துவர முடியுமோ, அவற்றைத் தெரிந்துவர உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன். இந்த முயற்சியில் உயிர்ப் பயம், பகை, குரோதம் எல்லாமே உண்டு. கரணம் தப்பினால் மரணம்தான்! ஆயினும் அரச தந்திரமுள்ளவனுக்குத் தூசு மாத்திரமே ஆகும் இது.”

 

    • “நாங்களிருவரும் இந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டு இன்றிரவே முயல்கிறோம். பெரியபாண்டியர் இந்தக் காரியத்தில் எங்களை ஈடுபடுத்துவதற்கு முழுமையாக நம்பலாம்” என்று முடிநாகனும் குமாரபாண்டியனும் ஒரே சுருதியில் இணைந்து ஒலிக்கும் குரலில் பெரிய பாண்டியருக்கு உறுதிமொழி கூறியும் அவர் அதற்காகப் பெரிதாக முகமலர்ந்து மகிழ்ச்சி காண்பித்து விடவில்லை.

 

    • “இதில் நீங்கள் காட்டும் தைரியத்தையும், ஆர்வத்தையும் பார்த்தே நான் அவசரப்பட்டு வியப்படைந்து விடுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. விளைவைக் கொண்டே என் முடிவுகள் எனக்குள் உருவாகும்…” என்று அழுத்தமாகக் கூறினார் பெரியபாண்டியர். அன்று பகலில் புலவர் பெருமக்களான அவிநயனாரும், சிகண்டியாரும் பெரியபாண்டியரைச் சந்திக்க வந்தபோது கூடச் சாரகுமாரனும், முடிநாகனும் உடனிருந்தனர். அப்போதும் பெரியவர் காலையிலிருந்த அதே மனநிலையில்தான் பேசினார்.

 

    • “புலவர்களே! பேரப்பிள்ளையாண்டானுக்கு அறிவிலும், கலையிலும், இலக்கியம், இலக்கணங்களிலும் ஞானமுண்டாக்குவதற்கு நீங்கள் படுகிற பாட்டைவிட அரசதந்திர ஞானத்தை மட்டும் உண்டாக்குவதற்கே நான் அதிகமாகப் பாடுபட வேண்டும் போலிருக்கிறதே? உங்களுக்காவது ஏடுகளும், சுவடிகளும், இலக்கண இலக்கிய நூல்களும் இருக்கின்றன. அவற்றை விவரித்துக் கற்பித்துவிடலாம். அரச தந்திரமோ நூல்கள் எவ்வளவு கூறினாலும் அதற்கப்புறமும், நிறைவடையாது மீதமிருக்கும் ஒரு துறை. மனிதனின் அறிவிலுள்ள நேரிய மாறுபட்ட எல்லா நுனிகளுக்குமேற்ற அத்தனை பேதங்களும் அரசதந்திரத்தில் உண்டு.”

 

    • “மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுவதில்லை. தங்கள் பேரப் பிள்ளையாண்டானுக்கு இவையெல்லாம் தானாகவே வரும்.”

 

    • “பழமொழி நன்றாக இருக்கிறது” என்று மட்டும் சுருக்கமாக மறுமொழி கூறிச் சிரித்தார் முதியபாண்டியர் வெண்தேர்ச்செழியர். பெரியவரின் இந்தப் பேச்சுக்களையும், செயல்களையும் பார்க்கப் பார்க்க இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும், இரவு எப்போது வரப்போகிறதென்று இருந்தது. இரவு வந்தால் நகர் பரிசோதனைக்குப் புறப்படலாம். நகர் பரிசோதனைக்குப் புறப்பட்டால் முரசமேடை இரகசியங்களை அறிந்து பெரியவரிடம் விவரித்தபின் அவர் வாயால் பாராட்டப்படலாம் என்ற ஆர்வமே அவர்களுக்கு அப்போது இருந்த விருப்பமாகும்.

 

    பெரியவருடைய கட்டளையை ஒப்புக்கொண்ட போதும், அதை நிறைவேற்றி நல்ல பெயரெடுக்க இரவை எதிர்பார்த்துக் காத்திருந்தபோதும் இந்த ஆவலே அவர்கள் இருவர் உள்ளத்தில் இருந்தது. தங்கள் திறமையிலும் ஒற்றறிதல் சூழ்ச்சியிலும் அவர்களுக்குப் பெரிதும் தன்னம்பிக்கை விளைந்திருந்தது. மிகக் குறைந்த வியப்புக்களையே அவர்கள் எதிர்பார்த்தனர். அவுணர்வீதி முரசமேடையைப் பொறுத்த மட்டும் தங்களுடைய முந்தையநாள் அநுமானங்களுக்கு மேல் புதிய உண்மைகள் எவற்றையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் அதைப்பற்றி எளிதாகவும், கவலையற்றும், அவர்கள் எண்ணமுடிந்தது. முடிநாகன் மட்டும் உள்ளூரச் சிறிது தயங்கினான். பெரியவர் காரணமின்றி ஒரு கட்டளையை இடமாட்டார் என்பது பலமுறை அவன் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். பிறர் எளிதாக நினைப்பதை அவர் மறுக்காமல் விடுவதில் கூட ஒரு சாமர்த்தியம் உண்டு. அவுணர்வீதி முரசமேடை பற்றி அவர் எளிதாக எண்ணித் தங்களுக்குக் கட்டளை இடுவதாகமட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. எனவேதான் அந்தரங்கமாக அவன் தயங்கினான். அந்தரங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இளையபாண்டியர் போல் அவனும் திடமாகவே புறத்தோற்றத்தில் அப்போது விளங்கினான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை 9கடவுள் அமைத்த மேடை 9

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு உங்களிடமிருந்து வந்த பின்னூட்டங்களைப் படித்தேன். கதையின் போக்கு உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. கருத்துக்களை ப்ளாகிலும், முகநூலிலும், தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இப்போது இன்றைய பதிவு. படித்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் கடவுள்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 26மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 26

26 மறுநாள் மாதவன் வந்தபோது அவனது கையில் ஒரு பெரிய அட்டை டப்பா. அதனுள் பெரிய கோகோ பட்டர் பாட்டில்கள். ஆளுக்கு ஒன்று என்று தந்தவன், கண்டிப்பாக எல்லோரும் இரவு கைகளில் தடவிக் கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டான். சுஜிக்கு

கபாடபுரம் – 30கபாடபுரம் – 30

30. அரங்கேற்றம்   பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய