6. கபாடத்தில் ஒரு களவு
- மதில் மேல் அந்த இடத்திற்கு வந்த பின்புதான் முடிநாகன் செய்த சமயோசிதமான யோசனையின் சிறப்பு இளையபாண்டியனுக்குப் புரிந்தது. முடிநாகனின் அனுபவ அறிவையும், கபாடபுரத்தின் கோட்டை மதிற்சுவர்களில் எங்கெங்கு எந்தெந்த நுணுக்கங்கள் அமைந்திருக்கின்றன என்பது பற்றி அவனுக்கிருந்த ஞாபகத்தையும் பெரிதும் வியந்தான் சாரகுமாரன். நூற்றுக்கணக்கான கடற்குறும்பர்கள் எதிர்த்து நின்றாலும் தாக்கி அழிப்பதற்கு வேண்டிய வசதிகள் அப்போது அந்த இடத்தில் இருந்தன. பாட்டனார் அந்த மதிலையும், கோட்டையையும் அமைத்திருக்கும் விதத்தையும் நுணுக்கத்தையும் இளையபாண்டியனான சாரகுமாரன் வியந்து கொண்டிருக்கும்போதே கீழே குனிந்து அமர்ந்த முடிநாகன் அந்த இடத்தில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த மாபெரும் மர உருளை ஒன்றைக் குறித்து, “இதோ பார்த்தீர்களா?” என்று வியப்பு நிறைந்த குரலில் கூறிக்கொண்டே சுட்டிக் காண்பித்தான். அந்த உருளையைப் பிணைத்திருந்த கயிறுகளைச் சுழற்றி முடிநாகன் வேகமாக அவற்றை இயக்கியபோது மிக விரைவாக அடுத்தடுத்துப் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
- இயந்திரப் பொறிகளால் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அந்த இடத்து மதிற்சுவரிலிருந்து அடுக்கடுக்காக அம்புகள் பாயத் தொடங்கியபோது கீழே முத்துப் பண்ட சாலையைக் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த கடற்கொலைஞர்கள் திகைத்துப் பதுங்கலாயினர். கூரிய முனையுடன் கூடிய அம்பு மழையிலிருந்து தப்புவதற்காகப் பண்டசாலையின் சுவரோடு சுவராக ஒண்டிக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
- வில்லெறி வியன்பொறி – கல்லிடு கூடை போன்ற பல்வகை இயந்திரப் பொறிகள் அந்த மதிலில் அங்கங்கே அமைக்கப்பட்டிருந்ததைத் தக்க சமயத்தில் நினைவூட்டியதற்காக முடிநாகனைப் பாராட்டினான் சாரகுமாரன். இந்தச் சமயோசிதமான காரியத்தினால் முத்துப் பண்டசாலை கொள்ளை போகாமல் காப்பாற்றிய அவர்கள் அதே சமயத்தில் தங்கள் குதிரைகளைக் கொள்ளைபோக விடும்படி நேர்ந்தது. மதிலிலிருந்து எதிர்பாராத தாக்குதலைக் கண்ட கொலைஞர்களில் சிலர் பின்பக்கமாகக் கடலில் நிறுத்தியிருந்த படகுகளில் ஏறித் தப்பினர். வேறு சிலர் வீதிவழியே ஓடிவந்த போது மதிற் சுவரருகே நிறுத்தப்பட்டிருந்த இவர்களுடைய குதிரைகளில் ஏறித் தப்பிவிட்டனர். முத்துப் பண்டசாலையைக் காப்பாற்றிய பெருமையோடு தங்கள் பரிகளை இழந்து நடந்தே அரண்மனைக்குத் திரும்பினார்கள் முடிநாகனும் சாரகுமாரனும்.
- மறுநாள் காலையில் விடிந்ததும் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் இளையபாண்டியனைச் சந்தித்த போது கேட்ட முதல் கேள்வி, “இரவில் நகருலா முடிந்த பின்பும் நெடுநேரம் நீ திரும்பிவரவில்லையே? உன்னுடைய பள்ளியறையில் கூட உன்னைக் காணமுடியவில்லை. அவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?” – என்பதுதான்.
- இளையபாண்டியனிடம் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, தேர்ப்பாகன் முடிநாகனும் அங்கு உடனிருந்ததனால் அவனே பாட்டனாருக்கு மறுமொழி கூறிவிட்டான். “இளைய பாண்டியர் நகர் பரிசோதனைக்குப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டார். மகேந்திரமலைக் குன்றுகளிலுள்ள இரத்தினாகரங்களையும் கடற்கரையோரத்துப் புறவீதியிலுள்ள முத்துப் பண்ட சாலைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினோம்” – என்று முடிநாகன் கூறியவுடனே, “குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் எவையேனும் உண்டா?” – என்று அவனையே மேலும் கேட்டார் பெரியவர்.
- முடிநாகன் உடனே முத்துப் பண்டசாலை நிகழ்ச்சியை விவரித்தான். அப்படி விவரித்துச் சொல்லும் போது தான் பாட்டனாரிடம் அதைப்பற்றிச் சொல்லுவதை இளைய பாண்டியர் விரும்புகிறாரா, விரும்பவில்லையா, என்பதை அறிய இடையிடையே அவருடைய முகபாவத்தையும் கவனித்துக் கொண்டான். அவன் எல்லாவற்றையும் கூறி முடித்ததும் முத்துப் பண்டசாலையிற் கொள்ளை போகாமல் காப்பாற்றியதற்காக அவர்களிருவரையும் மனமாரப் பாராட்டினார் வெண்தேர்ச் செழியர்.
- “இப்படிக் காரியங்கள்தான் அரச குடும்பத்தின் சிறப்பையும், குடிப்பெருமையையும் காப்பாற்றக் கூடியவை. ‘நாடு எங்கும் வாழ கேடு ஒன்றுமில்லை’ – என்று வசனமே சொல்வார்கள். நாடு எங்கும் கொலை களவு பொய் வஞ்சகமின்றிக் காப்பது நமது கடமை. கபாடபுரம் கோ நகராக அமைந்ததிலிருந்து ஒவ்வோர் நகரணி மங்கல நாளிலும் இந்தக் கடற்குறும்பர்கள் இப்படி ஏதாவது சிறிதாகவோ, பெரியதாகவோ கலகம் செய்யத் தவறுவதே இல்லை. இவர்களுக்கு ஒரு கண் நம் நகரத்து விலைமதிப்பற்ற முத்துப் பண்டசாலைகளின் மீதென்றால் இன்னொரு கண் நமது மாபெரும் கபாடங்களின் உச்சியில் பதித்துள்ள இரத்தினங்களின் மீது இருக்கிறது. அவுணர் வீதியிலுள்ள முரச மேடைக்கருகே இந்தக் கடற்குறும்பர்களுக்கு ஒற்றுச் சொல்லும் துரோகிகள் சிலரும் இருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். அந்தக் கயவர்கள் யாரென்றும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை…”
- “முயன்றால் அதையும் கண்டு பிடித்து விடலாம்” என்று பாட்டனாருக்குப் பயந்து கொண்டே அவருடைய முகத்தைப் பார்க்கத் தயங்கியவனாக முடிநாகனிடம் சொல்லுவதுபோல் கூறினான் சாரகுமாரன். அதைக் கேட்ட பாட்டனாரிடமிருந்து அவனுக்கு நீண்டதோர் அறிவுரையே கிடைத்தது.
- “கண்டுபிடிக்க முடியுமென்பதில் எனக்கும் ஐயமில்லை குழந்தாய்! ஆனால் இதில் சிறிது இராஜதந்திரமும் வேண்டியிருக்கிறது. இங்கிருக்கும் முரட்டு அவுணர்களில் பலர் புதிதாக இந்த நகரை அமைக்கும்போது நமது மாபெரும் கோட்டை மதில்களை உருவாக்கவும், அகழிகளை வெட்டவும், தேர்க் கோட்டம் சமைக்கவும் பணியாட்களாக வந்து பின் இங்கேயே தங்கிவிட்டவர்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து தங்கித் தங்கள் குடியிருப்பு வீதியையே இந்நகரின் புறத்தே அமைத்துக் கொண்டவர்கள். கோ நகருக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் இருக்கும் தீவுகளில் அங்கங்கே கூட்டம் கூட்டமாக வாழும் இந்த இராட்சசக் குழுவினர்களை முழுமையாகப் பகைத்துக் கொள்வதில் கேடு உண்டு. பகை நெஞ்சமுள்ள இவர்கள் கெடுதல்களை இப்படியே வளர விடுவதிலும் கேடு உண்டு. பிற்காலத்தில் இந்த நாட்டை ஆளும் பொறுப்பு உன் கைக்கு வரும்போது இவற்றை எல்லாம் பற்றி நீ இன்னும் மிக அதிகமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். பகைவர்களை விடக் கெட்டவர்கள் நண்பர்களைப் போல் திரியும் பகைவர்கள்தான்” – என்றார் அவனுடைய பாட்டனார்.
- அப்போது அவருடைய நரைத்த மீசையும் – சுருக்கம் விழுந்த முகமும் குழிந்த கண்களும் எத்தனைக்கெத்தனை முதுமையாகத் தளர்ந்து தோன்றினவோ அத்தனைக்கத்தனை அநுபவச்சாயலை நிறைத்துக் கொண்டனவாகவும் இளைய பாண்டியனின் கண்களுக்குத் தோன்றின. கபாடபுரம் என்னும் பொன்மயமான புதுக் கோ நகரை இத்தகையதொரு கம்பீரம் வாய்ந்த தலைநகரமாக உருவாக்கப் பாட்டனார் பட்ட சிரமங்களையும், துன்பங்களையும் பற்றிப் பிள்ளைப் பருவத்திலிருந்து கதை கதையாகக் கேள்விப்பட்டிருந்தான் அவன்.
- ஒருகணம் அந்த முடியவர் தன் பாட்டனார் என்ற உறவை மறந்து, கபாடபுரத்தை எண்ணத்தில் உருவாக்கிப் பின் இயல்பிலும் உருவாக்கியவர் என்ற வியப்புடன் ஏறிட்டுப் பார்த்த போது அந்தச் சாதனையைச் செய்தவரைப் பற்றிய ஞாபகம் மலைப்பூட்டுவதாயிருந்தது அவனுக்கு. அவரோ அவனிடம் மேலும் மேலும் உற்சாகமாகப் பல செய்திகளைக் கூறத் தொடங்கிவிட்டார்.
- “இந்த நகரத்தை உருவாக்கிய புதிதில் எத்தனை இரவுகள் எத்தனை விதமான கோலங்களில் உறக்கமின்றி நகர் பரிசோதனைக்காக நான் அலைந்திருக்கிறேன் தெரியுமா? திருடர்களும், காமுகர்களும்தான் எந்தக் காலத்தும் ஆட்சியின் எதிரிகள். இவர்கள் விழித்திருக்கும் நேரமோ இரவு. இவர்களைத் திருத்தக் காவல் வீரர்களையும் நீதியையுமே நம்பி இராமல் நானே சுற்றி அலைய விரும்புவேன் குழந்தாய்!”
- “மாபெரும் துறைமுகத்தில் தென்கடல் வழி வரும் பல நாட்டுக் கப்பல்களும் நின்று போவதால் இங்கு நாலா தேசத்து மக்களும் திரிகின்றனர். அவர்களை அறிவதும், உணர்வதும் அரசனுக்குப் பயன்படும் என்பதை நீயும் ஒப்புக் கொள்வாய்! அவிநயனாரும் சிகண்டியாரும், உனக்கு நூலறிவைக் கற்பிக்கலாம். உலகியலை நீயே கற்றுத்தான் அறிய வேண்டும். அநுபவம் மட்டும் தேடி அலைந்தே அடைய முடிந்தது. ‘இரவில் கால்கடுக்க நகர் சுற்றுவதா’ என்று தயங்கக் கூடாது. குறும்பர்களும், அவுணர்களுமாகத் திரியும் கடற்கொலைஞர்கள் ஒருவகையில் நமக்குப் பாதுகாப்பு. வேறொரு வகையில் அந்தரங்கமாக நமக்குப் பகை.”
- “மார்பின் மேல் விழுந்துவிட்ட பாம்பை வாளால் வெட்ட முடியாது. வெட்டினால் நம் மார்பிலும் வெட்டுப்படும். இந்தக் கடற்கொலைஞர்களின் பகையும் ஒருவிதத்தில் அப்படிப்பட்டது. இவர்களை ஒடுக்கும்போது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். அவர்கள் நம்மை அழிக்க விட்டுவிடக் கூடாது. அவர்களை அழிப்பதாக எண்ணி நாமே நம்மை அழித்துக் கொண்டு விடவும் கூடாது. நேற்று நீ முடிநாகனோடு நகர் பரிசோதனைக்குச் சென்றதை நான் மனமாரப் பாராட்டுகிறேன் குழந்தாய்! மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. போகப் போக நீயாகவே எல்லாம் தெரிந்து கொள்ள நேரிடும். உனக்கே எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் வரும்” என்றார் பெரிய பாண்டியர்.
- பாட்டனாரிடம் விடைபெற்றுச் சென்று அன்று பகலில் தாய் திலோத்தமையாருடன் நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தான் சாரகுமாரன். இசைத் துறையிற் பெருவல்லமை படைத்த அவன் தாய் அன்பாகவும் கனிவுடனும் அவனுடைய இசைத்திறமையைப் பரிசோதித்தாள். குருகுல வாசத்துச் செய்திகளைப் பற்றியும் அவனுடைய தாய் அவனிடம் ஆவலோடு ஒவ்வொன்றாகக் கேட்டாள். பிற்பகலில் முடிநாகனுடன் தேர்க்கோட்டத்திற்குப் போயிருந்தான் இளையபாண்டியன். தேர்க்கோட்டத்திலிருந்து முன்னிரவில் அரண்மனைக்குத் திரும்பிய பின்னர் முதல்நாள் போலவே, ‘நள்ளிரவில் இன்றும் நகர் பரிசோதனைக்குப் போகலாம்’ என்ற இளையபாண்டியனின் விருப்பத்திற்கு முடிநாகனும் இணங்கினான்.
- தொடர்ந்து ஒரே விதமாகப் போவதும், வருவதும் சந்தேகத்துக்கு இடம் தரும் என்பதினால் அன்றிரவு குதிரைகளில் செல்லாமல் நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். தேசாந்திரிகளாக யாத்திரை செல்லும் யாத்ரீகர்களைப் போன்ற கோலத்தில் புறப்பட்ட அவர்களிருவரும் கோட்டைக்கு வெளியே புறவீதிக்கு வந்து சுற்றினர். அவர்கள் புறவீதிக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் புறநகரையும் அகநகரையும் பிரிக்கும் கோட்டைக் கபாடங்களை அடைத்து விட்டனர். இரண்டு கபாடங்களிலுமாகச் சேர்த்து ஈராயிரம் வெண்கல மணிகளுக்கு மேல் உள்ள அந்தக் கபாடங்களை இழுத்தடைக்கும்போது கபாடபுர நகரின் சுற்றுப்புறத்தில் சில கல் தொலைவு வரை கணீர் கணீர் என்று மணிகளின் ஒலி எழுந்து கேட்பது வழக்கம். பல்லாயிரம் மணி நாக்குகள் கலீர் கலீரென்று ஒலித்துச் சிதறும் அந்த ஓசையைச் செவியுற்றுத் ‘தலைநகரில் கோட்டைக் கதவை அடைத்து விட்டார்கள்’ – என்று அக்கம்பக்கத்துச் சிற்றூர்களில் உள்ளவர்கள் பேசிக் கொள்வதுண்டு.
- அன்றும் நகர் பரிசோதனைக்காகப் புறநகருக்கு வெளியே வந்துவிட்டபின் இளையபாண்டியரும், முடிநாகனும், இந்த ஓசையைக் கேட்டே கபாடங்கள் அடைக்கப்படுவதை உணர்ந்தனர். முதல் கபாடத்தை அடைக்கும் மணியோசையைக் கேட்டே, வெளியே வந்திருந்தவர்களில் கோட்டைக்குள் காரியமுள்ளவர்கள் விரைந்து உள்ளே போய்விட முடியும். அதற்கு வாய்ப்பாகவே முதல் கபாடத்தை அடைப்பதற்கும் இரண்டாவது கபாடத்தை அடைப்பதற்கும் நடுவே அரை நாழிகைப்போது இடை நேரம் கொடுத்து வழக்கமாக அடைத்தனர்.
- முதல் நாள் தேருலாவின் காரணமாகக் கபாடங்கள் அடைக்கப்படவில்லை. நகரின் பெயரையே தங்கள் பெயராகக் கொண்டிருக்கும் அந்தக் புகழ் வாய்ந்த கபாடங்கள் ஆண்டின் நாட்களில் அடைக்கப்பெறாத ஒரே தினம் இந்த நகரணி மங்கல நாள் மட்டும் தான். கபாடங்களின் பல பகுதிகளில் விலையுயர்ந்த முத்துக்களும் உச்சியிலுள்ள குமிழ்களில் விலை மதிப்பு அற்ற பெரிய பெரிய சிவப்பு இரத்தினக்கற்களும் பதிக்கப் பெற்றிருந்தன. அவற்றைத் திருடும் நோக்குடனோ, பெயர்த்து எடுக்கும் ஆசையுடனோ எவராவது இந்தக் கபாடங்களில் ஏறினால் அப்படி ஏறும்போது உண்டாகிற மணிகளின் ஓசை அருகிலுள்ள காவல் வீரர்களையும் நகரையும் எழுப்பி விட்டுவிடும். மணிகள் கபாடங்களில் பொருத்தப்பட்டதன் அந்தரங்க நோக்கங்களில் இதுவும் ஒன்று.
- கோ நகரத்தின் அந்தத் தெய்வீகக் கபாடங்களின் மேல் செந்நெருப்புத் தகதகப்பதுபோல் தெரியும் அந்த இரத்தினங்கள் உலகில் வேறெந்த இரத்தினாகரங்களிலும் கிடைக்காதவையும் சிறப்பு மிக்கவையும் ஆகும். இளையபாண்டியனும் தேசாந்திரிகளின் கோலத்தோடு புறநகருக்கு வந்து அங்கிருந்த புன்னை மரங்களில் ஒன்றினடியில் போய் அமர்ந்தபோது கபாடங்கள் இரண்டையுமே அடைத்து முடித்திருந்தார்கள். புன்னை மரத்தடியில் அமர்ந்தவர்கள் அதிக நேரம் பேசிக் கொண்டேயிருந்து விட்டதனால் போது கழிந்தது தெரியவேயில்லை. மறுபடி அவர்கள் புன்னை மரத்தடியிலிருந்து எழுந்தபோது மேற்குத் திசையிலிருந்து – பொதிகள் போன்ற சில மூட்டைகளை சுமந்து கொண்டு நான்கு ஐந்து முரட்டு அவுணர்கள் கபாடங்களை நோக்கிச் செல்வதைக் கண்டு – மறைந்து நின்று கவனித்தனர். தற்செயலாகத் தென்பட்ட அந்தக் காட்சியை அவர்கள் சிரத்தையோடு கவனித்ததால் அன்றிரவு கபாடத்தில் நிகழ இருந்த களவு ஒன்று தடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அவர்களிருவரும் கவனிக்க நேராமலிருந்திருந்தால் குறைந்தபட்சம் கபாடத்திலிருந்து அன்றிரவு சில முத்துக்களாவது பெயர்த்துக் கொண்டு போகப்பட்டிருக்கும்.