Tamil Madhura தொடர்கள் ராணி மங்கம்மாள் – 25

ராணி மங்கம்மாள் – 25

25. பாவமும் பரிகாரங்களும்

    • அன்றொரு நாள் அரண்மனை நந்தவனத்தின் அதிகாலை இருளில் பணிப் பெண்கள் தங்களுக்குள் ஒட்டுப் பேசியதை இன்று வெளிப்படையாகவே தனக்கும் அச்சையாவுக்கும் முன்னால் விஜயரங்கன் பேசக் கண்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • முதலில் பணிப்பெண்கள் மத்தியில் முளைவிட்ட ஓர் அபவாதம் இப்போது தன் பேரன் வரை பரவியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள் அவள். பனைமரத்தின் கீழே நின்று ஒரு கலயத்தில் பசுவின் பாலைக் குடித்தாலும் உலகம் அதை நம்பாது என்பது மெல்லப் புரிந்தது. இராயசம் அச்சையா ஆஜானுபாகுவாகவும், அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது தான் காரணம் என்று தோன்றினாலும் மனம் அதை நினைத்துப் பார்க்கவே கூசியது. பேரன் விஜயரங்கன் அப்பாவி என்ற நினைப்பு மாறி அவனுக்குள்ளும் விஷம் இருப்பது புரியத் தொடங்கியது அவளுக்கு.

 

    • மிகவும் பெரிய பெரிய ராஜ தந்திரப் பிரச்சனைகளுக்குக் கூடப் பதறாமல் இருந்த ராணி மங்கம்மாள் இந்தச் சொந்த அபவாதத்துக்காகப் பதறிக் கலங்கினாள். அவள் மனம் சஞ்சலப்படத் தொடங்கியது. சொந்தப் பேரனே முளைத்து மூன்று இலைவிடாத சிறு வயதில் இப்படி அபவாதங்களையும் வதந்திகளையும் நம்பித் தன்னை எதிர்த்துக் கேட்கும்படி ஆகிவிட்டதே என்று வருந்தினாள். யாராவது அவனுடைய மனத்தை அப்படிக் கெடுத்திருப்பார்களோ? என்றுகூட எண்ணிக் கவலைப்பட்டாள்.

 

    • அப்படியே ஒருவர் தவறாகச் சொல்லிக் கொடுத்திருந்தாலும் சிறிதுகூட இங்கிதமும் நாசூக்கும் இல்லாமல் அவன் நடந்துகொண்டவிதம் அவளை ஆழமாகப் புண்படுத்திப் பாதித்திருந்தது. பேரன் விஜயரங்கன் இப்படி நடந்து கொண்டதைப் பார்த்து மதிப்பும் கௌரவமும் நிறைந்த அச்சையா தன்னைப் பற்றி என்ன எண்ணியிருப்பார் என்று நினைத்து மனம் குன்றிப் போயிருந்தாள் அவள்.

 

    • தான் எத்தனையோ பெரிய காரியங்களைச் செய்த போது தனக்கு வந்த புகழை விடச் செய்யாத தவறு ஒன்றிற்காக ஏற்படும் அபவாதம் பெரிதாக எழுவது கண்டு மனம் நலிந்தாள். தான் செய்தவற்றில் பெரிய காரியங்கள் எனத் தோன்றியவற்றை மீண்டும் அவள் நினைவு கூர்ந்தாள். பலவீனமான மனநிலையில் பழைய சாதனைகளை நினைத்து ஆறுதலடையும் மனநலிவு அப்போது அவளையும் விட்டபாடில்லை.

 

    • முன்பு கணவர் சொக்கநாத நாயக்கர் காலமாகி ரங்ககிருஷ்ணன் கைக்குழந்தையாக இருந்தபோது ஆட்சி அவள் பொறுப்பில் இருந்தது. அப்போது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை இன்று அவள் நினைத்தாள்.

 

    • வடக்கே சந்திரகிரியிலிருந்து வந்து திரிசிரபுரம் அரண்மனையில் தங்கியிருந்தவனும் மகாராணி மங்கம்மாளுக்கு இளைய சகோதரன் முறையுள்ளவனுமாகிய ஓர் அரச குடும்பத்து மனிதன் பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டான். அவன் செய்திருந்தது பழிபாவத்துக்கு அஞ்சாத படுபாதகமான செயல்.

 

    • அதற்காக மரண தண்டனையே வழங்கபட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றமும், நீதிவழங்கவேண்டி நீதிபதியும், குற்றவாளி ராணிக்கு உடன் பிறந்தான் முறையினன் ஆயிற்றே என்று தீர்ப்புக் கூறாமலே விட்டுவிட்டார்கள். குற்றவாளி தன் சகோதரன் முறையினன் என்பதற்காக ஏதாவது சலுகை காண்பிக்கிறார்களா என்பதை முதலில் இருந்தே ஒற்றர்கள் வைத்துக் கண்காணித்து வந்த ராணி மங்கம்மாள் துணிந்து தானே நீதி வழங்க முன் வந்தாள்.

 

    • ‘ராணிக்குச் சகோதரன் முறை என்பதனால்தான் குற்றவாளிக்குத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை’ என்று ஊரெல்லாம் வேறு பேச்சுக் கிளம்பிவிட்டது. ராணி மங்கம்மாள் தானே நீதிமன்றத்தைக் கூட்டினாள். “தங்கள் சகோதரனுக்கு எப்படி மரண தண்டனை அளிப்பது என்பதே எங்கள் தயக்கம் என்றுதான் நாங்கள் தீர்ப்புக் கூறவில்லை” என்று நியாயாதிபதிகள் அவளிடமே தயக்கத்தோடு கூறினார்கள். “வேண்டியவர்கள் வேண்டாதவர் என்றெல்லாம் பார்ப்பது நியாயத்திற்கு அழகில்லை. குற்றவாளிக்கு, அரசியாகிய நானே மரணதண்டனை விதிக்கிறேன்” என்று சிறிதும் கலங்காத குரலில் தீர்ப்பளித்தாள் ராணி மங்கம்மாள். அந்த நேர்மையைக் கண்ட அன்று நீதிபதிகள் வியந்தனர்.

 

    • அப்படி வியப்பைச் சம்பாதித்த தனது நேர்மைக்கா இன்று இப்படி ஓர் அபவாதம் என்றெண்ணும் போது அவள் கண்களில் நீர் சுரந்தது.

 

    • இன்னொரு முறை அவள் பழனி மலையிலுள்ள முருகப் பெருமாளை வணங்குவதற்குச் சென்றிருந்தாள். அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும்போது உரிய காவலர்கள், பரிவாரம் மெய்க்காப்பாளர்கள் எல்லாரும் உடனிருந்தும்கூட ஒரு சிறிய அசம்பாவிதம் நேர்ந்துவிட்டது.

 

    • ராணி தரிசனத்துக்காக மலைமேல் ஏறிக் கொண்டிருக்கும்போது தரிசனத்தை முடித்துவிட்டுப் பக்தி பரவசச் சிலிர்ப்போடு தன்னை மறந்த இலயிப்பில், மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் அவள்மேல் மோதிவிடுவது போல் மிக அருகே வந்துவிட்டான்.

 

    • மங்கம்மாளின் மெய்க்காப்பாளர்கள் அந்த வாலிபனைப் பிடித்துத் தண்டிக்க ஆயத்தமாகி விட்டார்கள். ராணியோ மெய்க்காப்பாளர்கள் அவ்விதம் அவனைத் தண்டித்து விடாமல் தடுத்ததுடன் மன்னித்து அனுப்பினாள்.

 

    • “இந்த இளைஞன் வேண்டுமென்று தவறு செய்யவில்லை. பக்திப் பரவசத்தில் இவன் தன்னை மறந்து கீழே இறங்கி வரும்போது எதிரே நான் வருவதைக் கவனிக்கத் தவறிவிட்டான். இறைவனாகிய முருகனுக்கு முன்னால் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமமான பக்தர்களே! இவனை இவன் வழியில் போகவிடுங்கள்” என்று கூறிப் பெருந்தன்மையோடு நடந்துகொண்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • அன்று அந்தப் பெருந்தன்மை நாடு முழுவதும் பரவிப் புகழாக மலர்ந்ததே, அது இன்று எங்கே போயிற்று?

 

    • முன்பொரு முறை கொள்ளிடத்தில் பெரிய வெள்ளம் வந்து சில கரையோரத்துச் சிற்றூர்களும், அவற்றின் கோயில்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தன்று மறுநாள் இரவு இங்கே அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவிலே திருமால் தோன்றி, ‘ராணி! நான் கொள்ளிடக்கரை மணலில் கேட்பாரற்று அநாதையாக ஒதுங்கிக் கிடக்கிறேன். என்னை வந்து காப்பாற்றுவாயாக’ என்பது போல் கட்டளையிட்டார். முதலில் வெள்ளத்தில் சீரழிந்த மக்களுக்கு உணவு, உடை, உறையுள் உதவிகள் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தாள். பின்பு தன் கனவில் வந்த இடத்தை அடையாளம் கண்டு தேடிச் சென்று விக்ரகங்களை எடுத்துக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்ததோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கரையோரத்துச் சிற்றூர்களையும் புனர் நிர்மாணம் செய்ய உடன் உத்தரவிட்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • அப்போது மக்கள் அவளைக் கொண்டாடி வாயார வாழ்த்தினார்களே, அந்த வாழ்த்து இப்போதும் இருக்கிறதா, இல்லை மங்கிப் போய்விட்டதா? தன் புகழும் பெருமையும் மங்குவதுபோல் அவளுக்குள் ஒரு பிரமை ஏற்பட்டது. எல்லாத் திசைகளிலும் தனக்கு எதிர்ப்பும் அபவாதமும், பெருகுவது போல் ஒரு நினைவு மனதில் மேலெழுந்தது. அவளால் அப்போது அப்படி நினைவுகள் எழுவதைத் தடுக்கவும் முடியவில்லை. பேரன் விஜயரங்கன் தன்மேல் பரிவுடன் இல்லாததோடு வெறுக்கிறான் என்பதும் புரிந்தது. அவனாகக் கெட்டுப் போனானா அல்லது அவன் மனத்தை யாராவது வலிந்து முயன்று கெடுத்தார்களா? என்பது அவளுக்குப் புரியவில்லை. அவள் மனம் அலை பாய்ந்தது. அமைதி இழந்தது. தன்னை வளர்த்து ஆளாக்கியவள் என்று பாட்டியாகிய ராணி மங்கம்மாளின் மேல் விசுவாசம் கொள்வதற்குப் பதில் ஆத்திரமும் எரிச்சலும் கொண்டிருந்தான் விஜயரங்கன். இந்த நிலையைக் கண்டு அவள் திகைத்தாள். மனம் தளர்ந்தாள்.

 

    • தான் செய்த எல்லா நல்ல செயல்களையும் புண்ணியங்களையும் நினைத்து மனம் குமுறினாள். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேதமின்றி நலங்களைப் புரிந்ததையும் வேண்டியபோதெல்லாம் விரைந்து சென்று உதவியதையும் எண்ணித் தனக்கா இப்படி அபவாதங்களும் விசுவாசத் துரோகங்களும் ஏற்படுகின்றன என்று மனமுறுகி அலமந்து போனாள்.

 

    • பேரனின் போக்கும் மற்ற நிகழ்ச்சிகளும் அவளை நடைப் பிணமாக்கியிருந்தன. ஒருநாள் பகலில் உணவுக்குப் பின்னர் அந்தப்புரத்தில் அரண்மனைப் பணிப் பெண்கள் சூழத் தாம்பூலம் தரிப்பதற்கு அமர்ந்தாள் ராணி மங்கம்மாள். மனம் வேறு எதையோ பற்றி நினைத்தபடி இருந்தது. உண்ணும்போது உணவிலும் மனம் செல்லவில்லை. கடனைக் கழிப்பது போல் உண்டு முடித்திருந்தாள். தாம்பூலம் தரிக்கும்போதும் அவளுடைய கைகள் ஏதோ இயங்கிச் செயல்பட்டனவேயன்றி மனம் அதில் இல்லை. அவள் விரும்பியிருந்தால் பணிப்பெண்களே பவ்யமாக அவளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால் அவள் அவர்கள் யாரையும் நாடாமல் தானே வெற்றிலை நரம்பு கிள்ளிச் சுண்ணாம்பு தடவி மடித்து உண்டு கொண்டிருந்தாள்.

 

    • திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பணிப்பெண் ராணி மங்கம்மாளை நோக்கி கூப்பாடு போட்டாள்.

 

    • “அம்மா! உங்களை அறியாமலே ஆகாத காரியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே! இடக் கையால் வெற்றிலை மடித்துப் போட்டுக் கொள்கிறீர்களே? எல்லாம் தெரிந்த உங்களுக்கு இதுகூடவா மறந்துவிட்டது? கேடுகாலம் வந்தால்தான் இடக்கையால் தாம்பூலம் போட நேரிடும் என்பார்கள்.”

 

    • தன் நினைவு வந்து தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்த்தபோதுதான் மங்கம்மாளுக்குப் பகீரென்றது. ஏதோ யோசனைப் போக்கில் தான் மாபெரும் தவறு செய்திருப்பது அவளுக்குப் புரிந்தது. கைத் தவறுதலாக நடந்திருந்தாலும் என்னவோ அபசகுனம் போல மனதில் உறைத்தது. அது நடக்கப் போகிற பெரிய அமங்கலம் ஒன்றின் சிறிய அமங்கல முன்னோடியாகவும் அது தோன்றியது. மனம் சஞ்சலம் அடைந்தது. கைதவறிக்கூட அமங்கலமான காரியத்தையோ பிழையான செயலையோ செய்துவிடாமல் விழிப்பாயிருக்கும் தானா இப்படி நடந்து கொண்டோம் என்றெண்ணிக் கூறினாள் அவள்.

 

    • இடக்கையால் தாம்பூலம் தரித்துக்கொள்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. சாஸ்திர விற்பன்னர்களும், அரண்மனை புரோகிதர்களும் உடனே வரவழைக்கப்பட்டார்கள். தான் செய்த தவற்றைக் கூறி, “அதற்கு என்ன பரிகாரம்?” என்று அவர்களைக் கேட்டாள் மங்கம்மாள்.

 

    • அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசி நூல்களையும் ஆராய்ந்து பார்த்தார்கள். ராணி மங்கம்மாள் அவர்களைப் பணிவாக வேண்டிக் கொண்டாள்.

 

    • “இந்தப் பாவத்திற்கு என்ன பரிகாரங்களை நீங்கள் கூறினாலும் செய்யத் தயாராயிருக்கிறேன்! உடனே சொல்லுங்கள்.”

 

    • அவர்கள் விவரிக்கத் தொடங்கினார்கள். “மகாராணீ! இதற்குப் பரிகாரமாக நீங்கள் எண்ணற்ற விதங்களில் பல தான தருமங்களைச் செய்ய வேண்டும். அன்னதானம், சாலைகள், சத்திரங்கள் அமைத்தல், சுமங்கலிகளுக்கு வஸ்திரதானமும் தீபதானமும் செய்தல், கோயில்களுக்கு மானியங்கள் அளித்தல் ஆகியவை அவசியம் செய்யப்பட வேண்டிய தான தருமங்களில் சில ஆகும்.”

 

    • “பெரியோர்களே! மிகவும் நன்றி! உங்கள் அறிவுரைப்படி இன்றுமுதல் ஏராளமான தான தர்மங்களைச் செய்ய உத்தரவிடுகிறேன்” என்று கூறி அவர்களுக்கு உரிய சன்மானங்களை அளித்து விடை கொடுத்து அனுப்பி வைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் அரண்மனையிலிருந்து தான தருமங்கள் தொடங்கிய போது பேரன் விஜயரங்கன் அதற்குக் குறுக்கே நின்று தடுத்தான்.

 

    • “பாட்டீ! ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைப்பதற்குள் அரண்மனைக் கருவூலத்தை வெற்றிடமாக்கி என்னை நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைக்கவேண்டுமென்று சதி செய்கிறீர்களா? உங்கள் பாவத்துக்கு அரண்மனைச் சொத்தா பிணை?” என்று கடுமையாக ராணி மங்கம்மாளை எதிர்த்து வினவினான் விஜயரங்கன்.

 

    • ராணி மங்கம்மாள் முதலில் அவனது எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. பற்பல அன்னசத்திரங்களைக் கட்டித்திறக்கும்படி உத்தரவிட்டிருந்தாள். ஏற்கெனவே மதுரையில் ஒரு பெரிய அன்ன சத்திரத்தைக் அவள் கட்டியிருந்தாள். புதிய சாலைகள் அமைக்கச் சொன்னாள். குதிரைகள், பசுக்கள், காளைகள் நீர் அருந்துவதற்கு வசதியாக சாலை ஓரங்களில் தண்ணீர்த் தொட்டிகளைத் திறக்கச் சொல்லி உத்தரவிட்டாள். பொது மக்களுக்காகக் குடிநீர் குளங்கள், ஊருணிகள், கிணறுகளைத் தோண்டச் செய்தாள். கோயில்களுக்கு மானியங்களை அளித்தாள். இன்னும் பற்பல தான தருமங்களை அயராமல் செய்தாள்.

 

    • இந்த தான தருமங்களுக்காக மக்கள் எல்லாரும் அவளைக் கொண்டாடினாலும் பேரன் மட்டும் விரோதியாகி விட்டான். ஆட்சியைத் தன்னிடம் ஒப்படைக்கப் பாட்டி தாமதப் படுத்துவதாகப் புரிந்து கொண்டு கலகம் செய்யவும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை அவன். அதற்காக அவனை யார் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்பதையும் ராணி மங்கம்மாளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனையிலேயே சில உட்பகைப் பேர்வழிகளும், கலகக்காரர்களும் அவனைத் தூண்டுவதாகத் தெரியவந்தது. அவர்களை மங்கம்மாளால் உடனடியாகக் கண்டுபிடித்துத் தண்டிக்கவும் முடியவில்லை. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு போல் பேரன் நடந்து கொள்ளத் தலைப்பட்டது அவளை மீளாக் கவலையில் வீழ்த்தியது. விஜயரங்க சொக்கநாதனுக்கு அந்த பால்ய வயதிலேயே தன்னைப் பற்றித் துர்ப்போதனை செய்கிறவர்கள் யார் யாரென்று அறிந்து அவர்களை உடன் முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி எடுத்துக் கொண்டாள் அவள்.

 

    • ஆனால் அம்முயற்சி பலிக்கவில்லை. அவர்கள் மிக இரகசியமாகச் செயல்பட்டார்கள். “இப்படியே இன்னும் சிறிது காலம் நீ கோட்டை விட்டுக் கொண்டிருந்தால் உனக்கு ஆட்சியைத் தராமலே உன் பாட்டி உன்னை ஏமாற்றிவிடுவாள்! தானதருமங்கள் செய்தே அரண்மனை கஜானாவையெல்லாம் காலியாக்கிவிடுவாள்” என்ற துர்ப்போதனை விஜயரங்கனுக்கு இடைவிடாது அளிக்கப்பட்டு வந்தது.

 

    அவன் அடிக்கடி பாட்டியிடம் வந்து சீறினான். எதிர்த்துப் பேசினான். தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டான். தனக்கு உடனே முடிசூட்டுமாறு வற்புறுத்தினான். வசைபாடினான். பாசத்துக்கும் ஆத்திரத்திற்கும் நடுவே சிக்கித் திணறினாள் ராணி மங்கம்மாள். அவளுடைய மனநிம்மதி இப்போது அறவே பறிபோய்விட்டது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’

பிற்பகல் நேரம், அலுவலகத்தில், களைப்பைப் போக்க கைகளை நெட்டி முறித்த காதம்பரி எழுந்து நின்று கைகால்களை வீசி சிறிய பயிற்சிகளை செய்தாள். மரத்திருந்த கால்களுக்கு சற்று உணர்வு வந்தார் போல இருந்தது. தன் அறை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரே

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10

”யாரது, காந்தாவா?” என்று சோமு ஆச்சரியத்துடன் ஆவலுடன் கேட்டான். ஆமாம் என்று நான் கூறவில்லை. கூறுவானேன். அவருக்குத் தெரியவில்லையா என்ன? ”அடையாளமே தெரியவில்லையே” என்றார் சோமு. அவர்கூடத்தான் மாறியிருந்தார். யார் தான் மாறாமலிருக்கிறார்கள்? எது மாறாது இருக்கிறது. சம்பிரதாயப்படி? ஆகவே, அதற்கும்