Tamil Madhura தொடர்கள் ராணி மங்கம்மாள் – 21

ராணி மங்கம்மாள் – 21

21. இஸ்லாமியருக்கு உதவி 

    • தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஒடுக்குவதற்கு நரசப்பய்யா புறப்பட்டுச் சென்ற தினத்தன்று நல்ல நிமித்தம் என்று நினைக்கத் தக்க வேறொரு நிகழ்ச்சியும் திரிசிரபுரம் அரண்மனையில் நடைபெற்றது.

 

    • தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்ற ராணி மங்கம்மாளிடம் அரண்மனைச் சேவகன் ஒருவன் பவ்யமாக வந்து ஏதோ சொல்லும் குறிப்போடு வணங்கி நின்றான். தயங்கி நின்ற ராணி என்ன என்று வினவும் குறிப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குறிப்பறிந்து சொல்லலானான்.

 

    • “கிழிந்த ஆடையும் அழுக்கடைந்த தோற்றமுமாகப் பக்கிரி போல் தோற்றமளிக்கும் இஸ்லாமியர் ஒருவர் தங்களைக் காண வேண்டுமென்று வந்திருக்கிறார்.”

 

    • “என்னக் காரியமாகக் காண வேண்டுமாம்?”

 

    • “காரியம் என்னவென்று அவர் சொல்லவில்லை. தாங்கள் விரும்பினால் சந்திக்கலாம். இல்லாவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறோம்.”

 

    • “திருப்பி அனுப்ப வேண்டாம் உடனே வரச் சொல் பார்க்கலாம்! பாவம் அவருக்கு என்ன சிரமமோ?”

 

    • மிகவும் ஏழையாகவும் எளியவராகவும் தென்பட்ட அந்தப் பக்கிரியை அப்போதிருந்த போர் அவசரத்தில் ராணி மங்கம்மாள் சந்திக்க மாட்டாள் என்றுதான் அரண்மனைக் காவலர்கள் நினைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக அவள் உடனே அவரைச் சந்திக்க இணங்கியது ஆச்சரியத்தை அளித்தது. அந்தப் பக்கிரியை அழைத்து வந்து காவலர்கள் ராணியின் முன்னே நிறுத்தினார்கள்.

 

    • “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

 

    • “மகாராணீ! நீங்கள் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்பு சொல்லுகிறேன். உங்களுக்குக் கிடைக்க இருக்கும் கீர்த்தியையும் வெற்றியையும் இப்போது சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் போரில் நீங்கள் மகத்தான வெற்றி பெறப் போகிறீர்கள்.”

 

    • “உங்கள் ஆருடத்திற்கு நன்றி! இப்போது உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? உங்கள் கஷ்டம் என்னவானாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம்.”

 

    • “என் காரியத்துக்கு அவ்வளவு அவசரமில்லை மகாராணீ! உங்களுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்த பின்னர் வந்து மகிழ்ச்சியோடு என் கோரிக்கையைச் சொல்வேன்.”

 

    • “போரில் நான் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறீர்கள்! வாழ்த்துகிறவர்களை வெறுங்கையோடு அனுப்புவது இந்த அரண்மனை வழக்கமில்லை.”

 

    • “மன்னிக்க வேண்டும் மகாராணீ! எனக்கு வேண்டியதை எப்போது வந்து பெற்றுச் செல்ல வேணுமோ அப்போது கட்டாயம் தேடி வருவேன்.”

 

    • என்று கூறி வணங்கிவிட்டுப் பதிலையே எதிர்பாராமல் விருட்டென்று திரும்பிச் சென்றுவிட்டார் அந்தப் பக்கிரி.

 

    • ராணிக்கு இது பெரிய ஆச்சரியமாயிருந்தது. தேடி வந்து மின்னலைப்போல் எதிர் நின்று வாழ்த்திவிட்டு உடனே விரைந்து சென்றுவிட்ட அந்த மனிதர் ராணிக்கு ஒரு புதுமையாகத் தோன்றினார்.

 

    • வியப்புடன் உள்ளே சென்றாள் ராணி. இந்த இஸ்லாமியர் வந்தது, சொல்லியது, திரும்பியது எல்லாமே புதுமையாக இருந்தன.

 

    • திட்டமிட்டபடி தளபதி நரசப்பய்யா மிகவும் இரகசியமாகப் படைகளுடன் தஞ்சையை நோக்கி முன்னேறினார்.

 

    • கொள்ளிடத்தில் நீர்ப்பெருக்குக் குறைவாக இருந்த சமயத்தில் ஆழம் குறைவாக இருந்த இடம் பார்த்துப் படைகளுடன் ஆற்றைக் கடந்து அக்கரை சென்றிருந்தார் அவர்.

 

    • தளபதி நரசப்பய்யாவின் படைகள் தஞ்சை செல்வதை அறியாத தஞ்சைப் படைவீரர்கள் திரிசிரபுரத்தின் கரையோரக் கிராமங்களில் கொள்ளையடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள்.

 

    • நரசப்பய்யாவின் தலைமையில் சென்றிருக்கும் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சைப் பகுதியில் சூறையாடுகின்றனர் என்று தஞ்சை வீரர்களுக்குத் தகவல் எட்டியபோது, பதறிப் போனார்கள். பதற்றத்தில் ஊரைக்காக்க விரையும் எண்ணத்தோடு கொள்ளிடத்தில் மிகவும் ஆழமான இடத்திலே இறங்கி ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்கள்.

 

    • கெடுவான் – கேடு நினைப்பான் என்பதுபோல் அவர்கள் ஆற்றைக் கடக்கிற நேரத்தில் மேற்கே எங்கோ பெருமழை பெய்திருந்த காரணத்தினால் கொள்ளிடத்தில் வெள்ளம் வேறு வந்துவிட்டது. பெரிய பெரிய மரங்களை எல்லாம் வேருடன் அடித்துக் கொண்டு வருகிற அளவு வெள்ளம் பயங்கரமாயிருந்தது. காட்டாற்றில் சிக்கிக் கொண்ட தஞ்சை வீரர்கள் வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போகப் பட்டுவிட்டார்கள்.

 

    • படைகளும், குதிரைகளும், ஆயிதங்களும் திரிசிரபுரத்துக் கரையோரப் பகுதிகளில் கொள்ளையிட்ட பொருள்களும் ஆற்றோடு போய்விட்டன. மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள தஞ்சைப் படை வீரர்களே உயிர் பிழைத்துக் கரையேறினர். அவர்களும் அப்போதிருந்த நிலையில் எவரையும் எதிர்த்துப் போரிடுகிற வலிமையோடில்லை.

 

    • கரையேறிய தஞ்சைப் படைவீரர்களைத் தளபதி நரசப்பய்யா நிர்மூலமாக்கி விட்டார். எதிர்ப்பே இல்லாமல் மங்கம்மாளின் படைவீரர்கள் தஞ்சையையும் சுற்றுப்புறத்து ஊர்களையும் சூறையாடத் தொடங்கினார்கள். ஏறக்குறைய தஞ்சை நாடு ஸ்தம்பித்துப் போய்விட்டது.

 

    • தோல்வியிலும், விரக்தியிலும் மிகவும் ஆத்திரம் அடைந்த தஞ்சை மன்னன் இந்த விளைவுகளுக்கு எல்லாம் காரணம் தன் பிரதான அமைச்சன் பாலோஜி பண்டிதனே என்றிண்ணினான். அவனது யோசனைகளால் தான் இவ்வளவு கெடுதலும் ஏற்பட்டதென்று தோன்றவே ஷாஜியின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு பாலோஜிபண்டிதனின் எதிரிகள் வேறு இதற்குத் தூபம் போட்டனர். பாலோஜியை எப்படியும் தொலைத்தாக வேண்டுமென்று ஷாஜிக்கு யோசனை கூறினார்கள்.

 

    • அமைச்சன் பாலோஜி நிலைமையை அறிந்தான். தந்திரத்தால் தான் அரசன் மனத்தை மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தான். நேரே அரசன் ஷாஜியிடம் போய், “அரசே! கோபப்படாதீர்கள். தயவு செய்து எனக்கு மட்டும் ஒரு வார காலம் தவணை கொடுங்கள்! திரிசிரபுரத்து வீரர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட பகையைச் சரி செய்து எல்லாவற்றையும் சமாதானமாக முடித்துத் தருகிறேன்” என்று மன்றாடினான். ஷாஜியும் அதற்கு ஒருவாறு சம்மதித்தான்.

 

    • தஞ்சையில் நிலைமை இவ்வாறு இருக்கத் திரிசிரபுரம் நகரம் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தது. திருவிதாங்கூர் ரவிவர்மனின் கொட்டத்தை ஒடுக்கிவிட்டுத் திரும்பிய சுவட்டோடு தஞ்சையையும் வெற்றி கொண்டிருந்தார் நரசப்பய்யா.

 

    • படைகள் தஞ்சைக்குப் புறப்பட்டபோதே இந்த வெற்றியைப் பற்றி ஆரூடம் கூறிய இஸ்லாமியரை இப்போது நினைத்தாள் ராணி மங்கம்மாள். அப்போது வாயிற் காவலர்கள் வந்து கூறினார்கள்.

 

    • “அரண்மனை வாயிலில் யாரோ தங்களைக் காணத் தேடி வந்திருக்கிறார்! இப்போதுள்ள பரபரப்பில் தங்களைக் காண முடியாதென்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்பதில்லை! தாங்கள் ஏற்கனவே தஞ்சைப் போர் முடிந்ததும் அவரைச் சந்திப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறீர்களாம்.”

 

    • அந்தப் பக்கிரியாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்தாள் ராணி மங்கம்மாள். “அவருக்கு ஆயுள் நூறாண்டு” என்று மனத்துக்குள் அவரை வாழ்த்தினாள்.

 

    • “வந்திருப்பவரை இப்போதே உள்ளே அழைத்து வா!” என்று காவலருக்கு உத்தரவு இட்டாள். தேடி வந்திருப்பவர் மேல் ராணிக்கு இருந்த அக்கறை காவலருக்கே எதிர்பாராத ஆச்சரியத்தை உண்டாக்கியக்க வேண்டும். காவலர்கள் உடனே விரைந்தோடிச் சென்று அந்த இஸ்லாமியரை அழைத்து வந்தனர்.

 

    • அரண்மனைக்குள்ளே வந்ததும் ராணியை வணங்கினார் அவர். ராணி மங்கம்மாள் அவரைப் பிரியத்தோடும் மரியாதையோடும் வரவேற்றாள்.

 

    • “ஐயா! நீங்கள் கூறியபடி தஞ்சையில் எங்களுக்குப் பெருவெற்றி கிடைத்திருக்கிறது. முதலிலேயே நீங்கள் தான் நல்வாக்குக் கூறினீர்கள்! இதோ இந்தப் பரிசுப் பொருள்களை என் அன்பின் அடையாளமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.”

 

    • “நான் ஏழைதான். ஆனால் பரிசுகள் எதுவும் எனக்குத் தேவையில்லை மகாராணீ! என் வார்த்தைகள் பலித்து நீங்கள் வெற்றி பெற்றதில் நானடைந்திருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவே வந்தேன்.”

 

    • “பரிசுகள் வேண்டாம் என்கிறீர்! வேறு ஏதேனும் உதவியை நான் செய்ய முடியுமானால் சொல்லுங்கள். உடனே செய்கிறேன்.”

 

    • “எனக்குச் சொந்தமாக எதுவும் வேண்டாம் மகாராணீ! தெய்வபக்தி மிகுந்த மக்களுக்குப் பொதுவாக ஓர் உதவி நீங்கள் செய்ய வேண்டும். இன்று நிராதரவாகவும் ஏழையாகவும் ஆகிவிட்ட என்னிடம் பெனுகொண்டா நகரின் ‘தர்க்கா’ ஒன்றைக் கவனித்து நிர்வகிக்கும் பொறுப்பு இருக்கிறது. அடிக்கடி நடக்கும் போர்களால் தர்க்காவின் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. தர்க்காவுக்கென்று இருக்கும் பரம்பரைச் சொத்துகளிலிருந்தும் வருமானம் சரியாகக் கிடைக்கவில்லை.”

 

    • “நான் என்ன செய்யவேண்டுமோ சொல்லுங்கள்! உடனே செய்ய உத்தரவிடுகிறேன்.”

 

    • “அந்தத் தர்க்கா நிர்வாகமும் அதில் வழிபாடும் சரியாக நடைபெற உதவினால் இந்த ஏழையின் மனம் மகிழ்ச்சி அடையும் மகாராணீ!”

 

    • உடனே அதிகாரிகளை அழைத்துத் திரிசிரபுரத்துக்கு அருகிலுள்ள சில காவிரிக்கரை சிற்றூர்களை அந்தத் தர்க்காவுக்கு மானியமாக வழங்க உத்தரவிட்டாள் ராணி மங்கம்மாள்.

 

    • இஸ்லாமியத் துறவி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

 

    • “ஆண்டவன் உங்களுக்குப் பரந்த மனத்தைக் கொடுத்திருக்கிறான் அம்மா! நீங்கள் ஒரு குறையும் வராமல் நீடூழி வாழ வேண்டும்.”

 

    • “ஸ்ரீ ரங்கநாதன் மேல் எனக்கு எவ்வளவு பக்தி உண்டோ அவ்வளவு நல்லெண்ணமும் பக்தியும் என் ஆட்சியில் வாழும் எல்லாப் பிரிவு மக்கள் மேலும் உண்டு ஐயா!” என்றாள் ராணி மங்கம்மாள். பக்கிரி விடைபெற்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

 

    ராணி மங்கம்மாள் விரைந்து அரண்மனையின் உட்பகுதிக்குச் செல்ல இருந்தாள். அப்போது மீண்டும் வாயிற் காவலன் ஒருவன் அவளெதிரே தோன்றி, “காவிரிக்கரையில் வேளாண் தொழில் செய்து உழுதுண்டு வாழும் உழவர்கள் சிலர் தங்களைக் காண அவசரமாக வந்திருக்கிறார்கள் மகாராணீ!” என்று பவ்யமாக வணங்கியபடி தெரிவித்தான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 23உள்ளம் குழையுதடி கிளியே – 23

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தோழமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  இந்த பகுதியில் சரத் ஹிமாவின் மனநிலை பற்றி சொல்லியிருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. உள்ளம் குழையுதடி கிளியே – 23 அன்புடன்,

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50

50- மனதை மாற்றிவிட்டாய் அறைக்கு வந்த திவி ஆதிக்கு கால் செய்தாள். முதலில் இருந்த கோபத்தில் இவன் கட் பண்ணலாமா என யோசித்து இருந்தும் எதுவும் எமெர்கென்சியோ என அட்டென்ட் செய்ய திவி “பிஸியா இருக்கீங்களா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 22ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 22

22 – மனதை மாற்றிவிட்டாய் வண்டியில் செல்லும் போது இருவரும் அமைதியாக செல்ல ஆதி “என்ன பேசமாட்டேங்கிறா? கோபமா இருக்காளோ? பின்ன எத்தனை தடவ சாரி சொன்னா, கொஞ்சமாவது மதிச்சியா? எத்தனை கேள்வி கேட்டிட்டு காலைல இருந்து சுத்தி சுத்தி வந்தா.