Tamil Madhura தொடர்கள் ராணி மங்கம்மாள் – 8

ராணி மங்கம்மாள் – 8

8. பாதிரியார் வந்தார்

    • இரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம் சிக்கித் திகைத்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ணன். சிக்கல்கள் இப்போது மேலும் சிக்கலாயிருந்தன.

 

    • ஆத்திரத்தோடு படையெடுத்து வந்த தன்னை விருந்தினனாக்கி இராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை வந்தவன் போல மாற்றிக் காட்டி நாடகமாடிய அந்தச் சாமர்த்தியம் அவனை மருட்டியது. திகைத்து மிரளச் செய்தது.

 

    • மறுநாள் வைகறையில் ரங்ககிருஷ்ணனின் ராமேஸ்வர யாத்திரைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியிருந்தார் சேதுபதி. அவனாலேயே அதைத் தடுக்க முடியவில்லை; ராமேஸ்வர தரிசனத்தைப் புறக்கணிக்கவும் முடியவில்லை.

 

    • சேதுபதியின் விருந்துபசாரம் முடிந்ததும் உடன் வந்திருந்த படைத்தலைவர்களும் ரங்ககிருஷ்ணனும் மறுபடி சந்தித்துக் கொள்ள முடிந்தது. இரவில் அவர்கள் தங்கிய விருந்தினர் மாளிகையில் ஓரளவு தனிமையில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது.

 

    • அதுவரை தன் மனத்தில் ஆவலோடு அடக்கிக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை அப்போது தான் ரங்ககிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த படைத்தலைவர்களில் ஒருவனிடம் கேட்டான்.

 

    • “என்னைப் புகழ்ந்து சேதுபதியின் சபையில் பாடப்பட்ட அந்தப் பாட்டில் ஏதோ மோசம் இருப்பதாகச் சொன்னாயே அது என்ன?”

 

    • “சொல்கிறேன் அரசே! மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி எதுவும் மோசம் இருப்பது போல் தெரியாது. ஆனால் தமிழ் யாப்பு இலக்கண மரபு தெரிந்தவர்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.”

 

    • “எங்கே? எனக்குப் புரியும்படியாக அதை விளக்கிச் சொல். பார்க்கலாம்!”

 

    • “வெண்பாவில் ‘வகையுளி’ என்று ஒன்று உண்டு! நல்லெண்ணத்தோடு வாழ்த்திப் பாடுகிற பாடல்களில் அந்த வாழ்த்துக்கு உரியவரின் பெயரில் வகையுளி செய்து இரண்டு பிரிவாகப் பெயரைப் பிளக்கக்கூடாது.”

 

    • “பெயரைப் பிளந்தால்?”

 

    • “அப்படிப் பிளப்பது மிகவும் அமங்கலமானது. மரபும் ஆகாது!… முத்து வீரப்பர் என்ற தங்கள் பெயரைப் பிளந்து வகையுளி செய்து வாழ்த்தியிருக்கிறார்கள்.”

 

    • “புரிகிறது சந்தேகப்பட வேண்டிய காரியந்தான்” என்றான் ரங்ககிருஷ்ணன். மேலும் சில நாட்கள் இராமநாதபுரத்தில் சேதுபதியின் விருந்தினராகத் தங்கிய பின்னர் இராமேசுவர யாத்திரையையும் நிறைவு செய்து விட்டு முறைப்படித் திரும்பும் காலையில் மீண்டும் இராமநாதபுரம் வந்தபோது திரிசிரபுரத்திலிருந்து தூதன் வந்து காத்திருந்தான். வந்த தூதனிடம் இருந்து ரங்ககிருஷ்ணனுக்குப் பல விவரங்கள் தெரிந்தன.

 

    • தான் படைகளோடு புகுந்தபோது மறவர் சீமையிலிருந்த சூழ்நிலையை விவரித்துத் தாய்க்கு ரங்ககிருஷ்ணன் ஏற்கெனவே அனுப்பியிருந்த தகவல்களுக்கு அவளிடமிருந்து மறுமொழி இப்போது கிடைத்திருந்தது. “நிலைமையை மேலும் சிக்கலாக்க முயல வேண்டாம். போரிட ஏற்ற நிலைமையில்லாவிட்டால் பேசாமல் திரும்பி விடவும்” என்று மறுமொழி வந்திருந்தது. ரங்ககிருஷ்ணன் உள்ளடக்கிய ஆத்திரத்தோடும் படைகளோடும் வந்த வழியே திரும்ப நேர்ந்தது. வெற்றியா தோல்வியா என்று புரியாமலே போர் முடிந்திருந்தது.

 

    • முதலில் திரிசிரபுரத்திலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகம் திரும்பும் போதில்லை. பட்டமேற்று முடிசூடிக் கொண்டதும் தொடங்கிய கன்னிப்போரே இப்படிக் காரிய சித்தி அடையாததாகி விட்டதே என்று மனம் கலங்கியது. ரங்ககிருஷ்ணனின் இரண்டு குற்றச்சாட்டுகளையுமே சேதுபதி ஏற்கவில்லை… மறுக்கவுமில்லை. இலட்சியமும் செய்யவில்லை. அலட்சியமும் செய்யவில்லை.

 

    • குமாரப்ப பிள்ளையின் கொலையைப் பற்றி மிக எளிதாகத் தட்டிக் கழித்துப் பதில் சொல்லிவிட்டார் அவர். முதலில் ஜாடைமாடையாக பதில்கள் இருந்தாலும், பின்னால் தொடர்ந்து தங்கியிருந்த சில நாட்களிலும் அப்பேச்சு நிகழ்ந்த போது நேரடியாகவே ரங்ககிருஷ்ணனும் கேட்டான். நேரடியாகவே சேதுபதியும் பதில் சொல்லியிருந்தார். பதிலில் பணிவோ பயமோ இருக்கவில்லை.

 

    • “குமாரப்ப பிள்ளை நாயக்க சாம்ராஜ்யத்தின் கௌரவத் தூதராக இங்கு வந்திருந்தது உண்மைதான். அவரது சாவைத் தடுப்பது ஒன்றே சேதுநாட்டின் இலட்சியமில்லை. சேது நாட்டில் வாழ்ந்த போது அவர் கொல்லப்பட்டார் என்பதற்காக நானும் வருந்துகிறேன்.”

 

    • “வருந்தினால் மட்டும் போதாது! இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.”

 

    • “கூற்றுவனாகிய யமதர்மராஜன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களுக்கு எல்லாம் நான் எப்படிப் பதில் சொல்ல முடியும் சின்னநாயக்கரே!”

 

    • “குமாரப்ப பிள்ளையின் கொலைக்கும் சேது நாட்டு சுயாதீனம் கொண்டாடுவதற்கும் தொடர்ந்து சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன.”

 

    • “நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்கள் என்றெல்லாம் அநுமானம் செய்துபார்த்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை சின்னநாயக்கரே!” என்று அந்த உரையாடலை முடித்துவிட்டார் சேதுபதி. அவரது முடிவான பதிலே சுயாதீன உரிமையை நிரூபிக்கும் விதத்தில் தான் அமைந்திருந்தது. சம்பிரதாயப்படி இராமேஸ்வர யாத்திரை என்று வந்தால் அதில் பகைமைக்கோ சச்சரவு சண்டைகளுக்கோ இடமில்லை. சமய ரீதியான சம்பிரதாயமும் அரசியல் பகைமையும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை. ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்த நோக்கத்தை மறைத்து இராமேஸ்வரத்துக்குத் தீர்த்தயாத்திரை வந்திருப்பதாக மாற்றி நாடகமாடியதிலேயே ஒரு போரை நாசூக்காகத் தவிர்த்து விட்டார் சேதுபதி. அதே சமயத்தில் பயந்தோ, பதறியோ, தவிர்த்ததாகவும் காண்பித்துக் கொள்ளவில்லை. தன் தந்தையார் காலத்திலிருந்தே நாயக்க சாம்ராஜ்யத்துக்குப் பெரிய தலைவலியாக இருந்து வந்திருக்கும் கிழச்சிங்கத்தைத் தானும் அதன் குகைக்குள்ளே போய்ப் பார்த்து விட்டு ஒன்றும் செய்ய முடியாமலே திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தான் ரங்ககிருஷ்ணன். ஏமாற்றம், சிறிது விரக்தி, உள்ளூற மனவேதனை எல்லாவற்றோடும் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். இந்த விதமான துயர நிலைமைகளால் தலைநகரத்துக்குத் திரும்புகிற தொலைவு நீண்டு வளர்வது போலிருந்தது அவனுக்கு.

 

    • அவனும் அவனுடன் வந்திருந்த படைகளும் மறவர் சீமை எல்லையைக் கடந்து வெளியேறுவதற்குள்ளேயே இன்னும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தியும் பரவியிருப்பது தெரிந்தது.

 

    • ரங்ககிருஷ்ணன் போரிடும் நோக்கத்தோடு வந்து, முடியாது என்ற பயத்தோடு தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சேதுபதியே மறவர் சீமை முழுவதும் பரவும்படி ஒரு செவிவழித் தகவலை அவிழ்த்து விட்டிருந்தார். மறவர் சீமையின் மூலை முடுக்குகளிலெல்லாம் அச்செய்தி பரவியிருந்தது. படை திரும்புகிற வழியிலுள்ள பல சிற்றூர்களில் தானே மாறு வேடத்தில் சென்று அதைத் தன் செவிகளாலேயே ரங்ககிருஷ்ணன் கேட்க நேர்ந்திருந்தது. அதைக் கேட்டுக் கையாலாகாத வீண் கோபப் படுவதைத் தவிர அவன் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

 

    • மானாமதுரைக்கு அருகே நள்ளிரவில் ஒரு தெருக்கூத்து நாடகத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ஒட்டுக்கேட்டு இதை அவன் அறிய முடிந்திருந்தது.

 

    • அது இராமாயண தெருக்கூத்து. பல நாட்களாக அவ்வூரில் தொடர்ந்து நடந்து வந்த அந்தத் தெருக்கூத்தில் அன்று அசோகவனத்தில் திரிசடை முதலிய அரக்கியர் புடைசூழச் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையிடம் இராவணன் வந்து கெஞ்சும் பகுதி நடந்து கொண்டிருந்தது. கனமானத் தோலில் சொந்தத் தலையைத் தவிர மற்ற ஒன்பது தலைகளையும் எழுதிக் கட்டிக் கொண்டு இராவணன் சீதையிடம் அட்டகாசமாகச் சிரித்துப் பேசித் தன் வீரதீரப் பிரதாபங்களை அளந்தான். நடுநடுவே நாடகத்தின் சூத்திரதாரி குறுக்கிட்டு மறவர் நாட்டை ஆளும் சேதுபதியின் பெருமைகளைச் சொன்னான். அப்படிக் கூறும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் ‘ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்து தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாக’ ஒரு செய்தியும் தோற்பாவைக் கூத்தின் நடுவே கூறப்பட்டது. வேறு சில ஊர்களிலும் இதே தகவலை ரங்ககிருஷ்ணன் தன் செவிகளாலேயே கேள்விப்பட்டான். மிகவும் வேண்டிய படைத் தலைவர்களும் அறிந்து கொண்டு வந்து இதைத் தெரிவித்தனர்.

 

    • நாட்டின் தெருகூத்துகள், நாடகங்கள் மூலமாகக் கூட ஓர் அரசியல் தகவலை மக்கள் நம்பும்படியாகப் பரப்பும் சேதுபதியின் தந்திரம் அவனுக்குப் புரிந்தது. அதே சமயம் தெருக்கூத்து மூலமாகப் பரப்பப்படும் ஒன்றை அதிகாரப் பூர்வமான தகவலாக தான் கிளப்பிப் பிரச்சினையாக்கவும் முடியாது.

 

    • ‘சிக்கல் நிறைந்த எதிரி’ என்ற மிகமிகப் பொருத்தமான வார்த்தையால் சேதுபதியை வர்ணித்த இராயசம் அச்சையாவின் சொற்கள் அட்சர லட்சம் பெறக்கூடியவை என்பதை இப்போது ரங்ககிருஷ்ணன் பரிபூரணமாக உணர்ந்து அந்த மதியூகி, சேதுபதியை மிகமிகச் சரியான முறையில் எடை போட்டு நிறுத்தியிருப்பதைத் தன் மனத்திற்குள் பாராட்டிக் கொண்டான். பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதை என்று தாண்டவும் முடியாமல் அவனைத் திணற அடித்தார் சேதுபதி.

 

    • ஒரு திங்கள் காலம், படையெடுத்து இராமநாதபுரம் சென்றதிலும் படைகளை வழிநடத்திக் கொண்டு மறுபடி திரிசிரபுரம் திரும்பியதிலுமே கழிந்துவிட்டது. ரங்ககிருஷ்ணனின் பயன் தராத இந்தப் படையெடுப்பைப் பற்றித் தாய் மங்கம்மாளோ, இராயசம் அச்சையாவோ அவனிடம் சிறிதும் வருத்தப்படவில்லை என்றாலும் அவன் சற்றே மனம் தளர்ந்து போயிருந்தான்.

 

    • அவன் மனைவி சின்ன முத்தம்மாள் மட்டும் படையெடுப்பின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் திரும்பி வந்து தன் எதிரே முகமலர்ச்சியோடு ஆருயிர்க் கணவனாக அன்பு செலுத்தியதையே ஒரு வெற்றியாகக் கருதினாள். ரங்ககிருஷ்ணன் அவளைக் கேட்டான்.

 

    • “வெற்றி வாகை சூடி வராத நிலையில் கூட இவ்வளவு பிரியமாக வரவேற்கிறாயே? இன்னும் நான் வெற்றியோடு வந்திருந்தால் எப்படிச் சிறப்பான வரவேற்பு இருக்குமோ?”

 

    • “எனக்கு உங்களை விட எதுவும் முக்கியமில்லை! நீங்கள் தான் என் வெற்றி! நீண்ட பிரிவுக்குப் பின் மறுபடி உங்களைச் சந்திப்பதே என் வெற்றிதான்!”

 

    • “அரசர்களின் பட்டத்தரசிகள் அவர்களின் பிற வெற்றி தோல்விகளைப் பற்றியும் கவலைப்படத்தான் வேண்டும்.”

 

    • “என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் அரசர் என்பதை விட என் ஆருயிர்க் காதலர் கணவர் என்பது தான் முக்கியம்” என்று பதில் கூறிய படி ரங்ககிருஷ்ணனின் கழுத்தில் மணம் கமழும் மல்லிகை மாலையை அணிவித்துத் தோள்களில் சந்தனக் குழம்பைப் பூசினாள் சின்ன முத்தம்மாள். ஆறுதலாக அவன் கால்களை நீவி விட்டாள். சின்ன முத்தம்மாளின் இந்தப் பிரியம் அவனைக் கவலைகளிலிருந்து மீட்டது. மகிழ்ச்சியிலும், களிப்பிலும் ஆழ்த்தியது. படை நடத்தி மீண்ட களைப்பை எல்லாம் களைந்தது. மணவாழ்க்கையின் சுகங்களைத் தடுப்பது போல் குறுக்கிட்ட படையெடுப்பைச் சின்ன முத்தம்மாள் தன் உள்ளத்தில் அந்தரங்கமாகச் சபித்திருக்கலாம். இப்போது அந்தச் சாபம் நீங்கியது போல் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க முடிந்தது. மண வாழ்வின் இன்பங்களை முழுமையாக நுகர முடிந்தது.

 

    • ரங்ககிருஷ்ணன் மறவர் சீமையின் மேல் படையெடுத்துத் திரும்பி வந்த பின் சில மாதங்களுக்குத் திரிசிரபுரத்தில் எல்லாம் அமைதியாயிருந்தன. எந்த அரசியல் பிரச்சினையும் பெரிதாக உருவாகவில்லை. ஒருநாள் பிற்பகலில் ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும், இராயசம் அச்சையாவும் ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று தாய் அவனை நோக்கிக் கூறலானாள்.

 

    • “நாட்டை ஆள்வது என்ற பொறுப்புக்கு வந்து விட்டால் எல்லா மக்களையும் நம் குழந்தைகள் போல் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு என்று நடத்தக்கூடாது. பொறுப்பில் இருப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டு என்று தெரிந்து விட்டால் அப்புறம் மக்களே விருப்பு வெறுப்புகளைத் தூண்டுவார்கள். விருப்பு வெறுப்புகள் என்ற வலைகளை நம்மைச் சுற்றிலும் பின்னிவிடுவார்கள். நாம் அப்புறம் அந்த வலைகளுக்குள்ளிருந்து வெளியேற முடியாமலே போய்விடும்.”

 

    • திடீரென்று தன் தாய் ஏன் இதை இப்படிக் குறிப்பிடுகிறாள் என்று ரங்ககிருஷ்ணனுக்குப் புரியாமல் இருந்தது. அவன் இப்படி யோசித்துத் திகைத்துக் கொண்டிருக்கும் போதே இராயசம் அச்சையாவும் அந்த உரையாடலில் கலந்து கொண்டு,

 

    • “காய்தல், உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆய்தல் தான் அறிவுடையார் செயலாகும்! விருப்பு வெறுப்புகள் அப்படி ஆராயும் நற்பண்பைப் போக்கிவிடும்” என்றார். உடனே தன் தாயை நோக்கி, “எப்போது எதில் நான் விருப்பு வெறுப்புகளோடு செயல் பட்டிருக்கிறேன் என்று நீங்கள் என் குறையைச் சுட்டிக் காட்டினால் நான் என்னைத் திருத்திக் கொள்ள வசதியாயிருக்கும் அம்மா!” என்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • “நீ இதுவரை அப்படி எதுவும் செய்துவிட்டாய் என்று நாங்கள் சொல்ல வரவில்லை மகனே! இப்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அதில் நீ எப்படித் தீர்வு காண்கிறாய் என்பதை வைத்தே உன்னைப் புரிந்து கொள்ள முடியும்.”

 

    • “சொல்லுங்கள் அம்மா!” அவன் இப்படிக் கூறியதும் சற்றுத் தொலைவில் நின்ற அரண்மனைச் சேவகன் ஒருவனைக் கைதட்டி அருகே அழைத்து,

 

    • “நீ போய் வெளியே காத்திருக்கும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரை இங்கே அழைத்து வா அப்பா” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • சேவகன் சென்று உயர்ந்த தோற்றமுடைய வெள்ளை அங்கியணிந்த பாதிரியார் ஒருவரை மிகவும் மரியாதையாக உடன் அழைத்து வந்தான். அவரை வரவேற்று அமரச் செய்து விட்டு, “ரங்ககிருஷ்ணா! இவருடைய குறை என்னவென்று விசாரித்து உடனே அதைத் தீர்த்து வைப்பது உன் பொறுப்பு” என்று அவனிடம் தெரிவித்த பின் தாயும், இராயசம் அச்சையாவும் அங்கிருந்து பாதிரியாரிடமும் அவனிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார்கள்.

 

    ரங்ககிருஷ்ணன் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைக் கூர்ந்து கவனித்தான். அலைந்து திரிந்து களைத்த சோர்வு அவர் முகத்தில் தெரிந்தது. அவரது தூய வெள்ளை அங்கி கூட இரண்டோர் இடங்களில் கிழிந்திருந்தது. அவருடைய கண்களில் கலக்கமும் பயமும் பதற்றமும் தெரிந்தன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36

உனக்கென நான் 36 சுகு தனக்குள் ஒளிந்திருந்த கணினி திறமையால் இனையத்தில் சலித்தெடுத்துகொண்டிருந்தான் அந்த மர்ம பெண்ணை. அன்பரசிக்கோ அந்த காரின் வழியே சைகை செய்த நியிபகமும் ஜெனியின் மரணமும் கண்ணில் வந்து சென்றது. அந்த கையில் இருந்தது ஓர் மோதிரம்

சிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதிசிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதி

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் இறுதிப் பகுதி உங்களுக்காக. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380394830 key=key-Qck9yxArLYt7SRAxIVzv mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.